‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17

bowவிண்மீன்கள் விரிந்த வானின் கீழ் விளக்கொளிகளாக அரச ஊர்வலம் வருவது தெரிந்தது. சுடர்கொண்ட கொடிகள் நுடங்கின. மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் அணுகிவந்தன. தொலைவில் வெண்குடையின் கின்னரிகள் நலுங்கிச் சுழன்றன. நின்று கண்கூர்ந்து “வருவது யார்?” என்று கடோத்கஜன் கேட்டான். “தங்கள் பெரிய தந்தை, இந்திரப்பிரஸ்தத்தின் அரசர்” என்றான் அசங்கன். “அவரை மிக மெலிதாக நினைவுகூர்கிறேன்” என்று கடோத்கஜன் சொன்னான். “குழவிப்பருவத்தில் நான் அவரை கண்டதுண்டு… உடன் தந்தை வருகிறாரா?” என்றான். “ஆம் என்று எண்ணுகின்றேன்” என்றான் அசங்கன். “தந்தை வருகிறார்!” என்றபின் கடோத்கஜன் திரும்பி ஓங்கி உத்துங்கனின் தோளில் அறைந்து “தந்தை! தந்தையை பார்க்கத்தான் வந்தோம்! தந்தை வருகிறார்!” என்று கூச்சலிட்டான்.

உத்துங்கன் இரு கைகளையும் விரித்து “ஆம், வந்துகொண்டிருக்கிறார்!” என்றான். திரும்பி படையினரை நோக்கி “பீமசேனர் வருகிறார்! தந்தை வருகிறார்!” என்று கூவினான். படையினர் அனைவரும் இரு கைகளையும் தூக்கி உடலை அலையடிக்கச்செய்து பெருங்குரங்குகள்போல் ஓசையெழுப்பினர். அசங்கன் “இளவரசே, தங்கள் படையினரை சற்று அமைதியாக வரச்சொல்லுங்கள்” என்றான். “அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்!” என்றான் கடோத்கஜன். “அவர்கள் எந்த ஓசையையும் இட வேண்டியதில்லை. அவரைக் கண்டதும் முறைப்படி வாழ்த்தொலி மட்டுமே எழுப்பவேண்டும்” என்றான் அசங்கன். “வாழ்த்தொலியை இவ்வாறு எழுப்புவதுதான் எங்கள் பழக்கம்” என்றான் கடோத்கஜன். அசங்கன் ஏதோ சொல்ல விரும்பி பின்னர் அதை முற்றிலும் தவிர்த்தான். நிகழ்வது அதன் போக்கில் அமையட்டும் என்று தோன்றியது.

மங்கலத்தாலங்களுடன் பன்னிரு வீரர்கள் இரண்டு நிரைகளாக வந்தனர். அவர்கள் கடோத்கஜனின் முன்னால் வந்து தாலமுழிந்து தலைவணங்கி விலக அவர்களைத் தொடர்ந்து பறைகளும் கொம்புகளும் சங்குகளும் மணிகளும் இலைத்தாளங்களும் முழங்க ஐந்திசை பெருகிச்சூழ இசைச்சூதர் எழுவர் வந்தனர். இசைக்கேற்ப கடோத்கஜனின் உடலில் எழுந்த அசைவைக்கண்டு அசங்கன் அறியாது அவன் கைகளை பற்றினான். அசங்கனை நோக்கி “என்ன?” என்றான் கடோத்கஜன். திரும்பிப்பார்த்தபோது கடோத்கஜனின் படையிலிருந்த அனைவருமே மெல்ல நடனமிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு அசங்கன் ஒன்றுமில்லை என்று தலையசைத்தான்.

சினியும் அவர்களுடன் சேர்ந்து தாளத்திற்கு உடலை அசைத்தபடி வந்தான். புருவத்தை நெரித்து உதட்டசைவால் ‘பேசாமல் வா’ என்று அவனுக்கு அசங்கன் ஆணையிட்டான். ஆனால் அவனைப் பார்த்து சிரித்தபடி மேலும் உடலை அசைக்கத் தொடங்கினான் சினி. பொறுமையிழந்து நோக்கை விலக்கிக்கொண்டான் அசங்கன். அவனைச் சூழ்ந்து அரக்கர்கள் அனைவரும் மெல்லிய நடமிட அவன் மட்டும் நேர்நடை கொண்டது மேலும் அமைதியின்மையை உருவாக்கியது. தன் உடலில் அந்த நடனம் கூடிவிடக்கூடாது என்பதற்காக உடலை இறுக்கிக்கொண்டான். கைகளை முறுக்கிப்பற்றியிருப்பதையும் பற்களைக் கடித்திருப்பதையும் சற்றுநேரம் கழித்தே உணர்ந்து எளிதாகி புன்னகையை முகத்தில் வரவழைத்துக்கொண்டான்.

யுதிஷ்டிரர் இரு கைகளையும் விரித்தபடி புன்னகை நிறைந்த முகத்துடன் முன்னால் வர அவருக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் வந்தனர். கடோத்கஜன் விரைந்து ஓடிச்சென்று முழங்கால் தரையில் அறைபட விழுந்து தன் தலையை அவர் கால்களில் வைத்து வணங்கினான். தலையையும் கைகளையும் மும்முறை மண்ணில் அறைந்தான். அவனுக்குப் பின்னால் சென்ற அத்தனை படைவீரர்களும் அதைப்போலவே நிலம்படிய விழுந்து வணங்கினர். யுதிஷ்டிரர் குனிந்து அவனை தூக்க முயல எடையால் அவனை அசைக்க முடியவில்லை. அவன் எழுந்து யுதிஷ்டிரரின் தலைக்குமேல் தன் தோள் விரிந்திருக்க “தந்தையே, நான் உங்கள் மைந்தன் கடோத்கஜன்!” என்றான்.

அவர் அவனை கைகளால் சுற்றித் தழுவி, அவன் நெஞ்சில் தலைசாய்த்துக்கொண்டார். நகுலனும் சகதேவனும் அவன் இரு கைகளையும் தொட்டார்கள். யுதிஷ்டிரர் மெல்ல விசும்பி அழுதார். அவன் அவரை குனிந்து நோக்கி “தந்தையே, என்ன இது? தந்தையே!” என்றான். நகுலனும் சகதேவனும்கூட விழிகசிந்திருந்தனர். யுதிஷ்டிரர் தன் முகத்தை துடைத்துக்கொண்டு பெருமூச்சுவிட்டார். கடோத்கஜன் “தந்தை எங்கே?” என்றான். யுதிஷ்டிரர் திரும்பிப்பார்த்தபோது பீமன் அவர்கள் நிரையின் பின்பகுதியில் தனியாக கைகளை மார்பில் கட்டிக்கொண்டு வேறேங்கோ நோக்கியவன்போல நின்றிருப்பதை கண்டார்.

கடோத்கஜன் ஓடிச்சென்று பீமனை அணுகி கால்களில் தலை வைத்தான். பீமன் குனிந்து அவன் தலையைத் தொட்டு வாழ்த்துச்சொல்லை முணுமுணுத்தான். கடோத்கஜன் எழுந்து சற்று நிலைகொள்ளாமல் நாற்புறமும் ததும்பிவிட்டு மீண்டும் ஓடிவந்து நகுலனையும் சகதேவனையும் நினைவுகூர்ந்து கால்தொட்டு வணங்கினான். அவர்கள் அவனை அள்ளி தூக்கி அணைத்துக்கொண்டார்கள். “இளையவன் விற்பயிற்சிக்கு சென்றிருக்கிறான். இல்லையேல் அவன் இத்தருணத்தை கொண்டாடியிருப்பான்” என்றார் யுதிஷ்டிரர்.

எண்ணியிராப் பொழுதில் கடோத்கஜன் திரும்பி யுதிஷ்டிரரை இரு கைகளாலும் அள்ளி மேலே தூக்கி வீசி மீண்டும் பற்றிக்கொண்டான். அவர் பதறிப்போய் கூச்சலிட படைவீரர்கள் சிறிய அலையென அசைந்து முன்வர முயன்றனர். சகதேவன் கையசைவால் அவர்களை அகற்றினான். கடோத்கஜன் யுதிஷ்டிரரை நெஞ்சோடணைத்து உரக்க நகைத்தபடி சுற்றி வந்தான். அவர் தோள்களிலும் கன்னங்களிலும் முத்தமிட்டான். அவனுடைய படைவீரர்கள் “ஹோ! ஹோ! ஹோ!” என முழக்கமிட்டார்கள். யுதிஷ்டிரர் “மூடா! மூடா!” என கூச்சலிட்டு அவன் தலையை தன் கையால் அறைய அவன் தூக்கிவீசி பிடித்துக்கொண்டே இருந்தான்.

அசங்கன் தலையில் கைவைத்து உடல் நடுங்க நிலம் நோக்கி நின்றான். அவனைச் சூழ்ந்திருந்த கடோத்கஜனின் படைவீரர்கள் பெண்களைப்போல கைகளைத் தூக்கி குரவையோசையிட்டனர். வாயால் முழவுத்தாளமிட்டு அதற்கேற்ப உடலை அசைத்தனர். சினி அசங்கனின் ஆடையைத் தொட்டு இழுத்து “மூத்தவரே! மூத்தவரே!” என்றான். கைசுட்டி உரக்க நகைத்து “தூக்கிப்போட்டு பிடிக்கிறார். அரசரை மரப்பாவைபோல பிடிக்கிறார்!” என்றான். “விலகிச் செல், அறிவிலி!” என்று அசங்கன் பற்களைக் கடித்து மூச்சொலியால் அவனை அப்பால் துரத்தினான். அவன் கால்கள் நிலத்திலிருந்து வழுவின. ஓசைகள் மங்கலாக, காதுகள் மூளலோசை எழுப்பின. சூழ்ந்திருந்த விளக்குகளின் ஒளி விசைகொண்டு கரைந்து ஒற்றைச் செம்பரப்பாக அவனை சுற்றிச் சுழித்தது.

அசங்கன் பின்னர் விழிநிமிர்ந்து நோக்கியபோது யுதிஷ்டிரர் கண்ணீர்வர முகம் சிவந்து நகைத்துக்கொண்டிருப்பதை கண்டான். நகுலனும் சகதேவனும் சூழ்ந்திருந்த படைவீரர்கள் அனைவருமே உடல் ஓய நகைத்துக் களைத்திருந்தனர். அப்பால் பீமன் கைகளை மார்பில் கட்டியபடி உதடுகள் மெல்லிய புன்னகையில் விரிந்திருக்க கடோத்கஜனை பார்த்துக்கொண்டிருந்தான். யுதிஷ்டிரர் கடோத்கஜனிடம் “வருக, இங்கே உனக்கு இன்னுணவு இல்லையென்றாலும் நல்லுணவு உள்ளது. விருந்துண்டு அவைக்கு வருக!” என்றார். “நான் எப்போதும் ஊனுணவு மட்டுமே உண்பேன்…” என்றான் கடோத்கஜன். “நன்று, ஓய்வெடுத்துவிட்டு வருக!” என்றார் யுதிஷ்டிரர். “நான் ஓய்வே எடுப்பதில்லை” என்றான் கடோத்கஜன். “உன் படையினர் ஓய்வெடுக்கட்டும்” என்றார் யுதிஷ்டிரர். “அவர்களும் ஓய்வெடுக்கும் வழக்கமில்லை” என்றான் கடோத்கஜன்.

யுதிஷ்டிரர் சலிப்புற்று “சரி, நான் ஓய்வெடுக்கவேண்டும்… அதன் பிறகு வா” என்றபின் அசங்கனை நோக்கி “அவைக்கு அழைத்து வருக!” என்றார். அவர் தன்னை நோக்கி பேசியது அசங்கனை நிலைபதறச் செய்தது. “ஆம், அரசே” என்றபோது குரல் வரவில்லை. “ஆணை” என்று தலைவணங்கவேண்டும் என அவன் எண்ணியபோது யுதிஷ்டிரர் திரும்பிக்கொண்டிருந்தார். அசங்கன் ஏமாற்றத்துடன் அதை இளையோர் பார்த்துவிட்டார்களா என்று பார்த்தான். அவர்களின் விழி கடோத்கஜனிலேயே இருந்தது. அசங்கன் தன் ஆடையை நீட்டி இழுத்து நிமிர்ந்து நின்றான். பொறுப்பு ஒன்று வந்துள்ளது. அதை திறம்படச் செய்தாகவேண்டும் என சொல்லிக்கொண்டான். அவனுக்கு அப்போது தன்னை இளையோர் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தொண்டையை கனைத்து “செல்வோம்” என்றான்.

bowகடோத்கஜனை பார்க்க பாண்டவப் படைவீரர்கள் முண்டியடித்தார்கள். அணிநிரைகள் கலைவதைக் கண்ட படைத்தலைவர்கள் கொம்புகளையும் முழவுகளையும் ஒலித்து அவர்களை நெறிப்படுத்தும் ஆணைகளை விடுத்தனர். யாரோ ஒருவன் “பேருருவர் வாழ்க! இளைய பாண்டவர் கடோத்கஜர் வாழ்க!” என கூவ மொத்த பாண்டவப் படையும் பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பத் தொடங்கியது. செவிகளை நிறைத்துச் சூழ்ந்த பேரொலி நடுவே கடோத்கஜன் சூழ நோக்கி தன்னை பார்த்து கையசைத்த அனைவரிடமும் சிரித்து வாழ்த்து சொல்லி நடந்தான். “இவர்கள் நம்மைக் கண்டு மகிழ்கிறார்கள், அரசே” என்றான் உத்துங்கன். “ஆம், நாம் இவர்களை மேலும் மகிழ்விப்போம்” என்றான் சகுண்டன்.

யானைத்தோல் கூடாரத்திற்குள் செல்ல கடோத்கஜன் மறுத்துவிட்டான். வெளியே சாலமரத்தடியில் கவிழ்த்திட்ட மரத்தொட்டிமேல் அமர்ந்தான். உத்துங்கனும் சகுண்டனும் அப்பால் நிலத்தில் கால்மடித்து குரங்குகள்போல அமர்ந்தனர். கடோத்கஜன் சுற்றிலும் நோக்கிவிட்டு “இத்தனை படைவீரர்கள், இவ்வளவு படைக்கலங்கள்… இருந்தும் நாம் ஏன் வெல்லவில்லை?” என்றான். “ஏனென்றால் அவர்கள் நம்மைவிட மிகுதி” என்றான் அசங்கன். “அனைவரும் சேர்ந்து போரிட்டால்…” என்றபின் கடோத்கஜன் “எத்தனைபேர் இறப்பார்கள்?” என்றான். “இரண்டு நாட்கள் நடந்த போரில் இங்கு வந்தவர்களில் பாதிப்பேர் மறைந்துவிட்டனர்” என்றான் அசங்கன். “பாதிப்பேர் என்றால்?” என அவன் வியப்பில் சுருங்கிய சிறிய விழிகளுடன் கேட்டான். “பல லட்சம்பேர்” என்றான் அசங்கன். “அவர்களை என்ன செய்தீர்கள்?” என்றான் கடோத்கஜன். “புதைத்தோம், எரித்தோம்” என்று அசங்கன் சொன்னான். அவனுக்கே ஒரு பொருளின்மை தோன்றலாயிற்று.

கடோத்கஜன் சில கணங்கள் கழித்து “இப்போர் எதற்கு?” என்றான். “நாட்டுக்காக” என்றான் அசங்கன். “நாடென்றால் நிலம் அல்லவா?” என்றான் கடோத்கஜன். “ஆம்” என்றான் அசங்கன். அவன் மேலே பேச விரும்பவில்லை. அச்சொல்லாடல் மேலும் பொருளின்மையை உருவாக்கி உயிர்கொண்டிருப்பதையே வீணென்று காட்டிவிடும் என அஞ்சினான். “நிலம் எதற்காக?” என்றான் கடோத்கஜன். “மானுடர் வாழ்வதற்காக. மானுடர் பேணும் தெய்வங்கள் பெருகுவதற்காக” என்றான் அசங்கன். “மானுடரைக் கொன்றழித்து மண்ணை வெல்வதில் என்ன பொருள்?” என்றான் கடோத்கஜன். உத்துங்கன் “ஆம், மண் வேண்டுமென்றால் பாரதவர்ஷத்தில் விரிந்துபரந்து கிடக்கிறதே” என்றான். சகுண்டன் “அவர்கள் அரசர்கள். அவர்களுக்கு இன்னொருவர் ஆளும் மண் மட்டுமே தேவைப்படும்” என்றான்.

அசங்கன் ஏனென்றறியாமல் சீற்றம்கொண்டான். “மண்ணுக்காக அல்ல. அறத்துக்காக. பாரதவர்ஷத்தை ஆளும் தொல்வேதங்களை வென்று அறத்திலமைந்த நாராயணவேதம் நிலைகொள்வதற்காக” என்றான். “ஆம், அவ்வாறு சொன்னார்கள்” என்றான் கடோத்கஜன். “ஆனால் அந்த வேதங்களே மானுடருக்காகத்தானே?” என்றான். “ஆம், ஆனால் அது நாளை வரவிருக்கும் தலைமுறைகளுக்காக. இன்று மானுடர் அதை உயிர்கொடுத்து நிலைநாட்டியாகவேண்டும்.” கடோத்கஜன் “இளையோனே, நீரில் முளைத்த செடி நீரின்றி அமையாது” என்றான். அசங்கன் உள்ளம் திடுக்கிட அவனை நோக்கினான். கடோத்கஜன் தலையை அசைத்து “ஆம், அவ்வாறே” என்றான்.

நெடுநேரம் கடந்து “குருதியில் அல்லாது அறம் நிலைகொள்ள முடியுமா?” என்றான் அசங்கன். கடோத்கஜன் “இயலவேண்டும். அவ்வாறொன்று எழவேண்டும்” என்றான். உத்துங்கன் “அது நம் மூதன்னையர் ஆண்ட நாட்களை போலிருக்கும்” என்றான். கடோத்கஜன் “நான் இன்று நம் அரசரை பார்த்தேன். எத்தனை ஆடைகள்… ஆடையே இல்லாத ஓர் அரசன் இருக்கலாகுமா என எண்ணினேன்” என்றான். குழப்பமும் கலக்கமுமாக முகம் சுளித்திருக்க “ஆடையே இல்லாத அரசர்கள். அவர்கள் போரிடமாட்டார்கள். எவரையும் தண்டிக்கமாட்டார்கள்…” என்றான். “நம் மூதன்னையர் அவர்களுக்கு காவலாக அமர்ந்திருப்பார்கள்” என்றான் உத்துங்கன்.

அசங்கன் மேலும் எரிச்சலடைந்தான். “நீங்கள் தொல்குடிகள் போரிடுவதே இல்லையா?” என்றான். கடோத்கஜன் “போரிடா விலங்குகள் எங்குள்ளன? ஆனால் குடி முற்றழியும் போர்கள் எங்களுக்குள் இல்லை” என்றான். அவனுடைய தோற்றம் எண்ணநுண்மை அற்றவன் என எவ்வாறு தனக்கு தோன்றச் செய்கிறது என அசங்கன் வியந்தான். பேருருவர்கள் அனைவருமே அந்த உளப்பதிவை உருவாக்குகிறார்கள். தன் எளிமையாலேயே நெடுந்தொலைவு செல்பவன் அவன் என்று அசங்கன் எண்ணினான். மேலும் பேச அவன் விரும்பவில்லை.

“பாவம் தந்தை” என்றான் கடோத்கஜன். “ஏன்?” என்றான் அசங்கன். “அவரால் இப்போரில் ஈடுபட இயலாது” என்றான் கடோத்கஜன். “அது மெய்யல்ல. இப்போரில் நிகர்நிற்கவியலாத வீரர் அவரே. நேற்றைய போரில் அவர் வெறிகொண்ட யானையென எதிரிகளை சூறையாடினார்” என்றான் அசங்கன். கடோத்கஜன் “அதனால் அவர் போரில் உளமீடுபட்டிருக்கிறார் என்று பொருளா என்ன?” என்றான். “உள்ளத்தால் அகன்றிருப்பதனால்கூட அவ்வாறு போரிடலாம் அல்லவா?”

அசங்கன் அவன் முகத்தை நேர்கொண்டு நோக்கி “நீங்கள் போரில் உளமீடுபாடு கொண்டிருக்கிறீர்களா, மூத்தவரே?” என்றான். “இல்லை” என்றான் கடோத்கஜன். “நான் என் தந்தையின்பொருட்டே வந்தேன். அவருக்கு மைந்தர் துணைநின்றாக வேண்டும் என்பதனால். அவர் இல்லையென்றால் இத்திசைக்கே வந்திருக்கமாட்டேன்.” அசங்கன் “எப்போரிலும் ஈடுபட்டிருக்கமாட்டீர்களா?” என்றான். “பிறரை கொன்றமைவதல்ல என் வெற்றி” என்றான் கடோத்கஜன்.

“மூத்தவரே, நீங்கள் இப்போரில் பெரும்புகழ் அடையலாம். வெற்றிக்குப் பின் உங்கள் குடியும் நாடும் செல்வமும் சிறப்பும் அடையும்” என்றான் அசங்கன். “புகழா? அதிலென்ன இருக்கிறது? எங்கள் நடுகல்குன்றுகளில் மாவீரர் நிரைநிரையாக நின்றிருக்கிறார்கள். அவர்கள் எவருக்கும் தனிப் பெயர்கள் இல்லை” என்றான் கடோத்கஜன். “உங்கள் நாட்டுக்கு நலம் அமையுமென்றால்? உங்கள் குடி வாழும் என்றால்?” என்றான் அசங்கன்.

“ஆம், அது மெய். இனியும் காடுகளுக்குள் நாங்கள் வாழவியலாது. கானுறைவாழ்விலுள்ள எந்த இன்பமும் ஊர்திகழ் வாழ்வில் இல்லை. ஆனால் கானுறைவோர் இனி அவ்வண்ணம் நீடிக்கமுடியாது. அவர்கள் அழிக்கப்படுவார்கள். பெரும்புகழ்கொண்ட அசுரகுல வேந்தர்கள் அனைவரும் அழிந்தனர். நிஷாதரும் கிராதரும் அரக்கரும் அசுரரும் வெல்லப்படுகிறார்கள். எங்கள் குலம் வாழவேண்டும் என்றால் நாங்கள் நாடாகவேண்டும். படைகொள்ளவேண்டும். எங்கள் கருவூலங்களில் பொன் இருக்கவேண்டும்” என்று கடோத்கஜன் சொன்னான்.

பன்னிரு ஏவலர் நிரைவகுத்து பெரிய கடவங்களில் கொண்டுவந்து இறக்கி அகன்ற மரத்தாலங்களில் உணவு பரிமாறினர். சுட்ட மாட்டுத்தொடைகளும் முழுப் பன்றியும் தோலுடன் பொரிக்கப்பட்ட ஆடும். கடோத்கஜன் உணவைப் பார்த்ததும் அதுவரை இருந்த உணர்வுகள் அகல கைகளை தட்டிக்கொண்டு உரக்க நகைத்தான். உத்துங்கன் எழுந்து நின்று கைகளை நீட்டி “இங்கே இங்கே” என்று கூச்சலிட்டான். உணவை முன்னால் வைத்ததும் அவர்கள் கைகளை உரசிக்கொண்டு நாவால் வாயை துழாவினார்கள்.

கடோத்கஜன் “என் படைவீரர்கள் அனைவரும் உண்டுவிட்டார்களா?” என்று கேட்டான். அடுமனையாளன் “ஆமென்று எண்ணுகிறேன். நான் வரும்போது உணவு சென்றுகொண்டிருந்தது” என்றான். கடோத்கஜன் அசங்கனிடம் “சென்று நோக்கிவிட்டு வருக! அனைவரும் உணவில் கைவைத்துவிட்டிருக்கவேண்டும். ஒருவர்கூட உணவுக்காக காத்திருக்கக்கூடாது” என்றான். அசங்கன் எழுந்து விரைந்து அப்பால் சென்று மூன்று ஏவலரிடம் ஆணையிட்டு குதிரைகளில் அவர்களை அனுப்பிவிட்டு காத்து நின்றான். அவர்கள் மரப்பாதை பெருந்தாளமிட வந்திறங்கி “அனைவருக்கும் உணவு சென்றுவிட்டது, இளவரசே. உண்ணத்தொடங்கிவிட்டனர்” என்றனர்.

அசங்கன் அதை கடோத்கஜனிடம் வந்து சொன்னான். கடோத்கஜன் பிறரை பார்க்க அவர்கள் இருவரும் உணவை கையில் எடுத்த பின்னர் தான் மாட்டுத்தொடையை எடுத்துக்கொண்டான். அசங்கன் “இது உங்கள் குலவழக்கமா, மூத்தவரே?” என்றான். “ஆம், எங்கள் குடியில் குழவியர், பெண்டிர், முதியோர், வீரர், என அனைவரும் உணவுண்ட பின்னரே அரசன் உணவுண்ண வேண்டும். ஒருவர் பசித்திருக்க அரசன் உண்டாலும் அவ்வுணவு நஞ்சு. அதற்கு அவன் ஏழுமுறை கங்கையில் நீராடி பிழையீடு செய்யவேண்டும்” என்றான்.

அசங்கன் கடோத்கஜன் உண்ணுவதை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் இரு கைகளாலும் ஊன்தடியைப் பிடித்து சுழற்றிச் சுழற்றி கடித்து இழுத்தான். பெரிய துண்டுகளாக கிழித்து ஓசையுடன் மென்றான். ஏப்பம்விட்டபடி கள்ளை குடித்து புறங்கையால் துடைத்துக்கொண்டான். அவனுடைய அசைவுகளனைத்தும் குரங்குகளுக்குரியவை. சுவையை உணர்ந்தபோது புலிபோல உறுமியபடி தன் தோழரை நோக்கி சிரித்தான்.

“தாங்கள் இப்போது இடும்பவனத்தின் அரசர் அல்லவா?” என்றான் அசங்கன். “ஆம், பதினெட்டு அகவை நிறைந்ததும் என் காட்டுக்கு பொறுப்பேற்றேன். இப்போது அது காடல்ல. கங்கைக்கரை துறைமுகத்தில் இருந்து ஏழு வண்டிச்சாலைகளால் இடும்பவனம் இணைக்கப்பட்டுள்ளது. தெருக்களும் ஆலயங்களும் கல்விச்சாலைகளும் கொண்ட இடும்பவனம் இன்று ஒரு பேரூர். நூற்றெட்டு அந்தணர்குடிகள் உள்ளன. ஆயரும் உழவரும் வாழும் தெருக்கள் நாள்தோறும் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஊரைச்சுற்றி மரத்தாலான கோட்டை அமைத்துள்ளேன்” என்றான் கடோத்கஜன்.

“மரத்தாலா?” என்று அசங்கன் வியப்புடன் கேட்டான். “எளிதில் எதிரிகள் அதை எரித்துவிட முடியுமே?” கடோத்கஜன் “வாழும் மரங்களால் ஆன கோட்டை. சொல்லப்போனால் செறிந்த சிறுகாடொன்றால் ஆன கோட்டை. பன்னிரு அடுக்குச்சுற்றுகளாக பெருமரங்களை வளர்த்து முள்ளாலும் மூங்கிலாலும் இணைத்துக்கட்டி உருவாக்கப்பட்டது. அனைத்து மரங்களுக்கு மேலும் எங்கள் வீரர்கள் அமர்ந்திருக்கும் காவல்மாடங்கள் உண்டு” என்றான். அசங்கன் “ஆம், அவ்வாறு கதைகளில் கேட்டுள்ளேன்” என்றான். கடோத்கஜன் “இன்று பாரதவர்ஷத்தில் எந்த அரசும் எளிதில் என் நகரை வென்றுவிட இயலாது” என்றான்.

அந்தக் கோட்டையை தன் உளவிழிக்குள் விரித்துக்கொண்டு “அங்காடிகள் உள்ளனவா?” என்றான் அசங்கன். “ஆம், நாளங்காடி கோட்டைக்கு வெளியே அமைந்துள்ளது. கங்கைக்கரையில் இன்னொரு அங்காடி. கூலமும் படைக்கலங்களும் பிற கலங்களும் படகுகளில் வந்திறங்குகின்றன. தென்மேற்கே தேவபாலபுரத்திலிருந்தும் தென்கிழக்கே கலிங்கத்திலிருந்தும் வணிகர்கள் ஆண்டுக்கு எட்டுமுறை எங்கள் ஊருக்கு வருகிறார்கள். சிந்துவிலிருந்தும் கூர்ஜரத்திலிருந்தும் மலைப்பொருள் கொள்ளும் வணிகர்கள் ஒவ்வொரு வாரமும் வருகிறார்கள்” என்று கடோத்கஜன் சொன்னான். “அல்லங்காடி கோட்டைக்குள் உள்ளது. அருமணிகளும் பூண்களும் இன்னுணவுகளும் மதுவும் விற்கும் கடைகள் நிரைகொண்ட நாற்கை வடிவம் கொண்டது.”

கடோத்கஜன் விழிகள் விரிய கைகளைத் தூக்கி சொன்னான் “நகர் நடுவே அரசமாளிகை அமைந்துள்ளது.” அவன் கையில் பன்றித்தொடை வானிலென நின்றது. “மூன்றடுக்கு மாளிகை அது.” அசங்கன் “உங்கள் அரண்மனையா?” என்றான். “ஆம், ஆனால் மண்மானுடரின் அரண்மனைகளை போன்றது அல்ல” என்றான் கடோத்கஜன். “எங்கள் மாளிகையை அரக்கர் குடிகளுக்குரிய முறையிலே அமைத்துள்ளேன். எழுந்த பெரிய மரங்களுக்குமேல் மூங்கில் வேய்ந்து உருவாக்கப்பட்டது அது. நடந்து அதில் ஏறுவதைவிட மரங்களினூடாக பறந்து செல்வது எளிது. எங்கள் இடும்பநகரியில் அனைத்து மாளிகைகளும் மரங்களுக்கு மேலேயே அமைந்துள்ளன. தரை எங்கள் விலங்குகளுக்குரியது. யானைகளும் புரவிகளும் மாடுகளும் பன்றிகளும் அங்கு வாழ்கின்றன.”

“அயல்நிலத்தாரும் அவர்களுடன் வாழ்கிறார்கள்” என்றபின் கன்றுத்தொடையை மென்றான் உத்துங்கன். கடோத்கஜன் உரக்க நகைத்து “எந்நிலையிலும் எங்களை தலை தூக்கியே நோக்கும் நிலையிலிருப்பவர்கள் அவர்கள்” என்றான். “நீங்கள் நிலத்தில் நின்றாலும் பாரதவர்ஷத்தில் பெரும்பாலானவர்கள் உங்களை அண்ணாந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது, மூத்தவரே” என்றான் அசங்கன்.

முந்தைய கட்டுரைகுளிர்ப்பொழிவுகள்- 4
அடுத்த கட்டுரைபனிமனிதன் -கடிதங்கள்