பனிமனித வாங்க
பனிமனிதன் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ..
எந்த ஒரு நூலையும் நாம் தேர்ந்தெடுப்பதில்லை..ஒரு நூல்தான் நம்மை தேர்ந்தெடுக்கிறது என நம்புகிறேன்.
கடினமான நூல்கள் என்பதால் சிலவற்றை படிக்காமல் வைத்திருப்போர் உண்டு.
உங்களது பனி மனிதன் நாவல் , சிறுவர் நாவல் என சொல்லப்பட்டதால் , எளிதான நாவல் என்று நினைத்து இத்தனை நாள் படிக்கவில்லை.. நேற்றுதான் படித்தேன் .
உண்மையில் என்னைப் பொருத்தவரை இதுதான் அதை படிப்பதற்கு உகந்த காலம் என நினைத்துக்கொண்டேன்.
இதை சிறுவர் நாவல் என சொல்வது தவறு என நினைக்கிறேன்.
சிறுவர் கதை என்றால் மாயாஜாலம், ராஜா ராணி என்பது போன்ற பிம்பங்கள்தான் நம் மனதில் எழும்.
உண்மையில் சிறுவர்கள் நம்மை விடவும் அறிவுத்தேடல் மிக்கவர்கள்.. அவர்களுக்கு வழக்கமான நீதி போதனை கதைகள் சற்றும் பிடிப்பதில்லை.. ஆனால் சிறுவர் கதைகள் என அவைதான் அவர்களுக்கு கிடைக்கின்றன.
உண்மையில் அவர்களுக்கு தேவை , எளிய மொழியில் எழுதப்பட்ட பெரியவர்களுக்கான கதைதான்.
சிறிய சொற்றொடர்கள், 3000 வார்த்தைளுக்கு மிகாத கதை சொல்லல் ஆகியவற்றை சிறுவர் நூலுக்கான இலக்கணமாக வரையறுத்து , பெரியவர்களுக்கான விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள்.
உண்மையில் சிறுவர்கள் விரும்புவது இதைத்தான். இதைப் படிக்கையில் சிறுவர்களுக்கு ஏற்படும் உளக்கிளர்ச்சியையும் , மனச்சித்திரங்களையும் ஒரு போதும் அவர்களால் மறக்க முடியாது..
முட்டை நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதாக உடைந்து விடாது.. காரணம் அதன் வடிவம் என சின்ன வயதில் படித்தபோது அடைந்த ஆச்சர்யம் இன்னும் நினைவில் இருக்கிறது
அதுபோன்ற பல இயற்பியல் தகவல்களை கதையின் போக்கில் வெகு அழகாக சொல்லி இருக்கிறீர்கள்
ஏரிகளின் மீது பனிக்கட்டி உருவாவது ஒரு கவசம் போன்றது.. கீழ்ப்புற தண்ணீரை உரைந்து விடாமல் காக்கும்.. (இந்த பண்பினால்தான் உலகம் அழியாமல் இருக்கிறது..)
பனிப்பிரதேசங்களில் அமைக்கப்படும் இல்லங்களின் வடிவமைப்பு… ஒளியை தேக்கி வைத்துக்கொள்ளும் தன்மை , பனிப்புயல் காரணம் என அறிவியலை வெகு ஜாலியாக சொல்லி இருப்பது மிகவும் பிடித்து இருந்தது
மேல் மனம் , ஆழ்மனம் , அடி மனம் , மனமற்ற நிலை போன்றவை குறித்தெல்லாம் ஆயுள் முழுக்க கற்கலாம். அதற்கான அறிமுகத்தை இந்த நூல் மூலம் பெறும் குழந்தைகளை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிரமாண்டமான விந்தையான , அச்சம் தரும் தோற்றம் கொண்ட விலங்கு , மியாவ் என கத்துவது இயல்பான காமெடி.
ஒரே ஒரு குறை.. இதை சிறுவர்களுக்கான நூல் என பிராண்டிங் செய்திருப்பது தவறு.
இது பெரியவர்கள் படிக்க வேண்டிய நூல் ,. பெரியவர்கள் படித்தால் கண்டிப்பாக சிறுவர்களை படிக்க சொல்வார்கள்
அன்புடன்
பிச்சைக்காரன்
அன்புள்ள ஜெ
பனிமனிதன் நாவலை இப்போதுதான் என் குழந்தைகளுக்கு நாளுக்கு இரண்டு அத்தியாயங்களாக வாசித்துக் காட்டினேன். ஏராளமான வெளிநாட்டுச் சாகசக்கதைகளைக் குழந்தைகளுக்கு வாசித்துக்காட்டியிருக்கிறேன். அவற்றில் இல்லாத ஒரு சிவாரசியம் இதில் குழந்தைகளுக்கு இருந்தது. அதற்குக் காரணம் இதில் நம்முடைய நிலமும் மதமும் பேசப்பட்டிருப்பதுதான்.
முக்கியமாக கிம். இதேபோன்ற ஒரு சிறுவர்நாவலில் சிறுவர்கள் சாகசக்காரர்களாகவும் புதியல் வேட்டை ஆடுபவர்களாகவும்தான் வருவார்கள். கிம் ஒரு மெய்ஞானியாக வருகிறான். என் மகனுக்கு கிம் என்றாலே பரவசம்தான். ஒரு சிறுவன் லாமா ஆவதை இதேபோன்ற வயதில் விளையாட்டு வாழ்க்கையில் இருக்கும் குழந்தைகள் இப்படி விரும்புவார்கள் என்பதே ஆச்சரியமானதுதான்
எஸ்.ஜெயக்குமார்