நமது விருந்தோம்பல்..
அன்புள்ள ஜெ
இவ்விரு செய்திகளையும் உங்கள் பார்வைக்குக் கொண்டுவருகிறேன். நீங்கள் இந்தியாவெங்கும் பயணம் செய்பவர். உங்கள் அனுபவம் என்ன? இந்த அமெரிக்கப் பயணி சொல்வது உண்மையா?
எஸ். நாகராஜ்
அன்புள்ள நாகராஜ்,
பல நண்பர்கள், குறிப்பாக வெளிநாடுவாழ் நண்பர்கள் இதைக் கேட்பதுண்டு. சில பெண்கள் தனிப்பட்ட முறையில் என்னைப்போல தனியாகப் பயணம்செய்யலாமா என்று ஆலோசனை கேட்பார்கள். நிரந்தரப் பயணி என்ற என் அனுபவத்தில் நான் இதற்கு மறுமொழி சொல்கிறேன்
அந்த அமெரிக்ப் பயணி சொல்வது முற்றிலும் உண்மை என்பதே வருந்தத் தக்க நிலவரம். பெண்களுக்கு டெல்லி மிக அபாயகரமான ஊர். மும்பை , அகமதாபாத் எல்லாம் பெருநகர்ப் பொறுக்கிகள் நிறைந்தவை. விடுதிகள் மற்றும் பொது இடங்கள் மறைமுகமாக அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. வட இந்தியாவின் எல்லா நகரங்களும் தனியாகச் செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பற்றவைதான். இங்கே சாதாரணமாகவே சுற்றுலாப்பயணிகளை தெருக்களில் இளைஞர்கள் கிண்டல் செய்வதை, சீண்டுவதைக் காணலாம். விதிவிலக்கு இமாச்சலப்பிரதேசம் மட்டுமே. பெருநகர்களி ஒப்புநோக்க கல்கத்தாவே பாதுகாப்பான நகரம் .
தென்னகநகரங்கள் பரவாயில்லை. ஆனால் பெங்களூர் ஹைதராபாத் சென்னை எல்லாமே பெண்கள் தனியாக பயணம் செய்யவும், தங்கவும் உகந்தவை அல்ல. இங்கே பொறுக்கிகள் என பெரிதாக சுட்டிக்காட்டமுடியாது. ஆனால் ஒரு பெண் தனித்துப் பயணம் செய்வதை அறிந்தால் பெரும்பாலான இளைஞர்கள் பொறுக்கிகளாக உருமாறிவிடுகிறார்கள். சென்னையை விட மகாபலிபுரம் போன்ற சுற்றுலா ஊர்கள் மிகமிக ஆபத்தானவை.
ஒரு மாநிலமாகப் பார்த்தால் ஒட்டுமொத்தக் கேரளமே பெண்களைச் சீண்டும் மனநிலை கொண்டது. அந்திக்குமேல் கேரளத்தின் அனைத்துப் பொதுவெளிகளும் குடிகாரர்களுக்குரியவை. தமிழகமும் அந்நிலையை நோக்கிச்செல்கிறது. தமிழகப்பகுதிகளில் மதுரை வட்டாரம் மிக மிக அபாயகரமானது.
என் நேரடி அனுபவங்களே நிறைய உள்ளன. மாதத்தில் முக்கால்வாசி நாட்கள் உயர்நிலை விடுதிகளில் தங்கியிருப்பவன் நான். படித்த, பணியாற்றும் இளைஞர்கள் கூட்டமாக வந்து தங்குவார்கள். மிதமிஞ்சிய குடி. குடித்தால் பொறுக்கித்தனமாக நடந்துகொள்ளவேண்டும் என்பது நம்மில் பெரும்பாலானவர்களின் எண்ணம். தனியாக அமர்ந்திருக்கும் பெண்களிடம் சென்று ஆபாசமாக நடந்துகொள்வார்கள்.பெண்கள் தங்கியிருக்கும் அறைக்கதவை கூட்டமாகச் சென்று தட்டி உதைத்துக் கூச்சலிடுவார்கள். அவர்கள் தேனிலவுக்கு வந்தவர்கள் என்றால் வெறிகொண்டுவிடுவார்கள். கிட்டத்தட்ட காமம் மிகுந்த நாய்களின் அதே நடத்தை
சென்ற ஆண்டு மகாபலிபுரத்தில் நான் தங்கியிருந்த உயர்விடுதியில் இது நடந்தது. நான் சென்று அவர்களிடம் சண்டையிட்டேன். எனக்கு உதவியாக சினிமாத்துறை இளைஞர் ஒருவரும் இருந்தமையால் அவர்களை துரத்த முடிந்தது. அந்த வெள்ளைக்காரப்பெண் அழுதுகொண்டிருந்தார். ஆனால் புகார் கொடுக்க தயாராக இல்லை. மறுநாளே கிளம்பிவிட்டார். மறுநாள் விடுதி உரிமையாளரிடம் புகார்சொன்னேன். “என்ன செய்வது? எல்லாருமே வசதியான விருந்தினர். இப்படி நடந்துகொண்டால் என்ன செய்வது?” என்றார்
உண்மையில் விடுதி பொறுப்பாளர்கள் எந்த உதவிக்கும் வரமாட்டார்கள். அதற்கான ஆள்பலமே இருக்காது. பெரும்பாலான ’ரிசார்ட்’ களில் இரவில் ஓரிரு ஊழியர்களே இருப்பார்கள். கேண்டீன் ஊழியர்கள் 11 மணிக்குச் சென்றுவிட்டால் கிட்டத்தட்ட ஒரு வளாகத்தில் குடிகாரர்களான சிலருடன் நீங்கள் தனித்துவிடப்படுவீர்கள். தமிழகத்தில் வீட்டை விட்டு வெளியே கூட்டமாக கிளம்பினாலே தரையில் கால்நிற்காத அளவுக்குக் குடித்து கூச்சலிட்டு ரகளை செய்யாத இளைஞர்கள் மிகமிகக் குறைவு. ஐடி ஊழியர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள் எல்லாருமே ஒரே வகையானவர்கள்தான். ஒருமுறை குற்றாலத்தில் குடித்துவிட்டு பெண்களைச் சீண்டிய நெல்லையைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் குழுவை காவல்துறை பிடித்து ஜட்டியுடன் நிற்கவைத்திருக்கிறது.
கேரள விடுதிகள் இன்னும் சிக்கல். அங்கே குடி ஒரு பொதுநோய் போல. குடித்தால் எந்த எல்லைக்கும் செல்பவர்கள். பெரும்பாலான விடுதிகள் வெளிநாட்டில் சம்பாதிப்பவர்களால் ஒரு முதலீடு என்னும் வகையில் கட்டி விடப்படுபவை. ஆங்கிலமோ மலையாளமோ தெரியாத நாலைந்து பிகாரி இளைஞர்கள் மொத்த ரிசார்ட்டுக்கும் பொறுப்பாக இருப்பார்கள். நட்சத்திர விடுதிகளில்கூட இரவு பதினொருமணிக்குமேல் எதன்பொருட்டும் நிர்வாகத்தினர் ஃபோனைஎடுக்க மாட்டார்கள்.
நான் இதுவரைச் சென்ற நாடுகளில் எங்கும் இந்த நிலை இல்லை. தென்னாப்ரிக்க நாடுகளில் இதைவிட மோசமான நிலை உண்டு என்றார்கள்.
இங்கு ஏன் இந்த நிலை? முதல் குற்றவாளி நீதிமன்றம்தான். ஒரு வெளிநாட்டுப்பயணி இங்கே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் அவர் புகார் செய்யவேண்டும். வழக்கு எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் நீதிமன்றம் செல்லவேண்டும். அங்கே வழக்கு விசாரணைக்கு வரவே ஓராண்டு ஆகலாம். அந்தப் பயணி விசாவை நீட்டித்து இங்கேயே எஞ்சிய ஆண்டு முழுக்க தங்கியிருக்கவேண்டும். அவர் விடுமுறைக்கு வந்திருக்கலாம். அங்கே வேலை இருக்கலாம். அதெல்லாம் நீதிமன்றத்துக்கு பொருட்டே அல்ல. வாய்தா வாய்தாதான்.
அவரை அவமதித்த ஓட்டல் அல்லது ரிசார்ட்டுக்கு இங்கே அரசியல் செல்வாக்கும் குண்டர் ஆதிக்கமும் உண்டு. மறுபக்கம் அவர் தன்னந்தனிமையாக நிற்கவேண்டும். பிரச்சினை வந்ததும் முன்னர் இங்கே வந்து பாதிக்கப்பட்ட பயணிகள் எவரிடமாவது ஆலோசனை கேட்பார்கள். புகார் செய்யாதே வாழ்க்கை அழிந்துவிடும், தப்பி ஓடு என்பதே பதிலாகக் கிடைக்கும். அதுவே நடைமுறை உண்மை.
இங்கே இருக்கும் காவல்துறை அடுத்த குற்றவாளி. பெரும்பாலும் அவர்கள் புகார்கொடுத்தவரை மிரட்டி அனுப்பவே முயல்வார்கள். ஏனென்றால் பாதிக்கப்பட்டவர் வெளியூர்க்காரர். குற்றவாளி உள்ளூரில் பணபலத்துடன் இருக்கும் நிறுவனம்.
இவை அனைத்தையும் விட பெருங்குற்றவாளி இங்குள்ள பொதுமனநிலை. நாம் விருந்தினரை மதிப்பவர்களோ, மரியாதையானவர்களோ அல்ல. நான் இதுவரை சென்ற நாடுகளிலேயே மிகமிக மரியாதைக்குறைவாக பயணிகளை நடத்தும் நாடு இந்தியாதான். எல்லா நிலைகளிலும் ஈவிரக்கமில்லாமல் ஏமாற்றுபவர்களும் இங்குதான். வாகனம், உணவு, தங்குமிடம் எதிலுமே எவரையுமே முழுக்க நம்பமுடியாது.
நானே பலமுறை எழுதியிருக்கிறேன். விமானநிலையத்தின் முன்னரே பணம் கட்டிய டாக்ஸி பாதிவழியில் பயணியை இறக்கிவிட்டு டாலரில் பணம் கேட்டு மிரட்டுவதை நான் கண்டிருக்கிறேன். இணையத்தில் நட்சத்திர விடுதி என அறிவிப்பையும் படங்களையும் பதிவுசெய்துவிட்டு நேரில் சென்றால் நாலாந்தர விடுதி இருப்பதைக் கண்டிருக்கிறேன். அதைப்பற்றி முறையாக புகார் செய்தும் அந்த வலைத்தளம் எந்நடவடிக்கையும் எடுக்கவில்லை – அவ்விடுதி அப்படியே நீடிக்கிறது.
இதன் உச்சமே நம் சகபயணிகளின் பாலியல் வரட்சியின் பிரச்சினைகள். பெண்களை வெறிப்பது, தனியாக அகப்பட்டால் சீண்டுவது, தனியான பயணி என்றால் நேரடியாகவே தாக்குவது, குடித்துவிட்டு கும்பலாக வந்து சீண்டுவது என இவர்களின் நடத்தை மிகமிக இழிவானது. நட்சத்திர விடுதிகளே கூட விதிவிலக்கு அல்ல. இது ஒருவகை ஆண்மையாகவே கருதப்படுகிறது.
இந்நடத்தை பெரும்பாலும் தண்டிக்கப்படுவதே இல்லை. மிகக்கறாரான நடவடிக்கை மூலம் இதை முற்றாக ஒடுக்கலாம். சுற்றுலா வரும் பெண்கள் மீதான வன்முறைக்கு கன்யாகுமரி ஒரு மிகப்பெரிய மையம். குறிப்பாக கன்யாகுமரி அருகே உள்ள வட்டக்கோட்டை, சங்குத்துறை கடற்கரை போன்றவை. ஆனால் ஜாங்கிட் இங்கே காவல்துறை அதிகாரியாக இருந்தபோது கடும் நடவடிக்கைகள் வழியாக அந்தக் குற்றவாளிகளை ஒடுக்கினார். இன்றும் மீண்டும் பழைய நிலைதான்.
இந்தியா சுற்றுலாவுக்கு உகந்த மிகப்பெரிய நாடு. இந்தியாவின் சாமானிய அடித்தள மக்கள் நட்பானவர்கள்.ஆனால் எங்கும் குவிந்திருக்கும் குப்பைமலைகள், பொதுவெளியில் மலம் கழிக்கும் வழக்கம், சட்டம் ஒழுங்கு இல்லாத நிலை , பொதுவாக இங்குள்ள ஆண்களின் பாலியல் வரட்சி ஆகியவை மிகப்பெரிய இடர்கள். இதையும் மீறி இங்கே சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள் என்றால் அது விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து வருவதுதான். இன்னொருமுறை வருவேன் என்று சொன்ன சிலரையே நான் கண்டிருக்கிறேன்
இந்த விஷயத்திலேயே பாருங்கள், அந்த ஓட்டல்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டனவா? அந்த ஓட்டல் நிர்வாகிகளும் ஊழியர்களும் சிறையில் தள்ளப்பட்டு அது செய்தியாகியிருந்தால் அல்லவா ஏதேனும் பயன் இருக்கும்? இது ஒரு ரகசிய முணுமுணுப்பாகவே சென்றுவிடும். எவருக்கும் அக்கறை இல்லை. கோடிகள் செலவழித்து incredible India என கூச்சலிட்டாலே பயணிகள் வந்துவிடுவார்கள் என நம்புகிறார்கள்
ஜெ
கேரளக் குடிநிறுத்தம்
ஸ்பிடி சமவெளி, சென்னை – எத்தனை குளறுபடிகள், எத்தனைமோசடிகள்!