வாசிப்பில் ஓர் அகழி

book-stalls1

இனிய ஜெயம் ,

அமிஷ் நாவல்கள் குறித்த வினாவுக்கு உங்களது பதில் வாசித்தேன் . அதில் ஒரு விளங்காத இடம் கிடந்தது உறுத்திக்கொண்டே இருக்கிறது . எந்த ஒரு பெஸ்ட் செல்லரும் தன்னளவில் ஒரு வாசிப்பு இயக்கத்தை உருவாக்குகிறது .அதன் படி பார்த்தால் உங்களது தேவை டான் ப்ரௌன்கள் கட்டுரையில் நீங்கள் சொன்னபடி, சேத்தன் பகத்தையும், டான் ப்ரௌனையும் ஒரு நூறு பேர் வாசிக்கும் நிலை இருந்தால்தான் அதிலிருந்து நுண்ணர்வு கொண்ட பத்து பேர் , ஓரான் பாமுக் , முரகாமி நோக்கி வருவார்கள் .

அதே சமயம் அமிஷ் நாவல்கள் மீதான பதிலில் நீங்கள் சொன்னது போல

//இந்த வாசகர்கள் அந்த வாசிப்பிலிருந்து இலக்கியவாசிப்புக்கு பெரும்பாலும் வருவதில்லை. ஏனென்றால் அந்த மேலோட்டமான வாசிப்புக்குப் பழகிவிடுகிறார்கள். அது மேலான வாசிப்பு என்னும் மனநிலையிலும் இருக்கிறார்கள். அதைக்கடந்துசெல்ல அவர்களுக்கு மிகப்பெரிய உடைப்பு ஒன்று தேவை. அது நிகழ்வதில்லை. கல்வித்துறையிலோ, சமூக வலைத்தளத்திலோ அதற்கான இயல்பான வாய்ப்புகள் இல்லை.
ஏனென்றால் இவர்கள் கல்வி, வேலை போன்ற நிலைகளில் நிலைபெற்றவர்கள் என்பதனால் தாங்கள் வெற்றிகரமானவர்கள், ஆகவே உயர் அறிவுத்திறன் கொண்டவர்கள் என நம்புகிறார்கள். ஆகவே அவர்களை விடமேலான அறிவுத்தளம் ஒன்று அவர்களை உடைக்க முடியாது. தங்கள் ஆணவத்தால் மிகமிகத்தீவிரமாக அதை எதிர்ப்பார்கள். தங்களுக்கு மேல்நிலையிலிருந்து ஒன்று சொல்லப்படுகையில் எள்ளல் நக்கல் வழியாக அதை எதிர்கொள்வார்கள். எள்ளலைப்போல ஒருவனை ஆணவத்தின் சிறையில் அடைத்துப்போடும் ஆற்றல்கொண்டது வேறில்லை.//

இதுவும் உண்மை .

எனில் ஒரு வாசகனாக இந்த நிலை எனக்கு பெரிதும் அச்சமூட்டுகிறது . இத்தனை பொழுது போக்கு வாசிப்பும் எவரையோ பணக்காரர் ஆக்குவதன்றி வேறு எதற்காகவும் இல்லையா ? பொழுது போக்கு வணிகசினிமா ,பொழுது போக்க சமூகநட்புவெளி ,தொலைக்காட்சி சீரியல்கள் போல , கேளிக்கை வாசிப்பும் , [ வாசிப்பு பயிற்சி வழியே தீவிர இலக்கியத்துக்கு வாசகனை கொண்டு சேர்க்கும் பாதையாக இல்லாமல் ] தடுப்பு சுவராக இருக்கிறதா ?

கடலூர் சீனு

NSP_2640a

அன்புள்ள சீனு

எனக்கே இந்தக் குழப்பம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. வழக்கமாக வணிக எழுத்துக்களின் வாசிப்பிலிருந்து நுண்ணுணர்வு கொண்டவர்கள் இலக்கியம் நோக்கி வந்தாகவேண்டும். இளமையில் ஒரு குறிப்பிட்ட காலம் தொடர்ந்து வாசிப்பவர்கள் அங்கே வந்துவிடுவது இயல்பானது. ஆனால் இப்போது அப்படி நிகழ்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே பதில்

’நமக்குத்தேவை டான் பிரவுன்கள் ’ என்னும் கட்டுரையில் நான் சொன்ன முக்கியமான விஷயத்தைல் இப்போதும் வலியுறுத்த விரும்புகிறேன். வணிகரீதியான எழுத்துக்கு சில அறிவுத்தளப் பயன்பாடுகள் உண்டு. அதன் வணிகப்பேரமைப்பு – விளம்பரம் காரணமாக அது பரவலாகப் போய்ச் சேர்கிறது. ஆகவே இளமையிலேயே அது வாசகர்களை கண்டடைகிறது. அந்த வாய்ப்பு இலக்கியத்திற்கு இல்லை.

வணிக எழுத்து மொழிவழி அறிதலை, மொழிவழி கேளிக்கையை பயிற்றுவிக்கிறது. ஆகவே ஒரு நூலைப் பொறுமையாக வாசிக்கும் பயிற்சியை வாசகன் அடைகிறான். அது இன்றைய சூழலில் முக்கியமானது. மொழியை கற்பனை வழியாக காட்சியாக, வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளும் உளப்பயிற்சியை இவ்வாசிப்பு அளிக்கிறது. வாசிப்பை ஒரு சமூக இயக்கமாக நிலைநிறுத்த வணிக எழுத்தால் இயலும். ஆகவே நமக்கு டான் பிரவுன்கள் தேவைதான்.

அப்படியென்றால் இந்தத் தடை எதனால்? நான் இரண்டு கோணங்களில் யோசிக்கிறேன். ஒன்று, நுகர்வோர் உளநிலை. எழுத்து – வாசிப்பை ஒருவகை நுகர்வோர் என அணுகுவது, நூலை நுகர்பொருளாக பார்ப்பது, எழுதுபவனை தனக்கு ஒரு சேவையை அல்லது உற்பத்திப்பொருளை அளிப்பவனாக நினைப்பது இன்றைய வழக்கமாக உள்ளது. எனக்கே நான் இன்னும் ‘நுகர்வோருக்கு அணுக்கமானவனாக’ இருக்கலாமே என வாரம் ஒரு கடிதம் வருகிறது.

நுகர்வுப் பண்பாட்டின் நெறிகள் சில உண்டு. அங்கே நுகர்வோரே முக்கியமானவர், முடிவுசெய்பவர். அவருடைய ரசனை, நம்பிக்கை, கருத்துநிலைக்கு ஏற்ப உற்பத்தி செய்து அவருக்கு உகந்த வகையில் கொண்டுசென்று சேர்ப்பது சேவையாளன் – உற்பத்தியாளனின் கடமை. அதற்குப் நிகராக அவன் லாபத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த உளநிலையே இலக்கியத்திற்கு எதிரானது. எந்நிலையிலும் இலக்கிய எழுத்தாளன் உற்பத்தியாளனோ, சேவையாளனோ அல்ல. அவனுக்கு வாசகனுக்குமான உறவு நுகர்வுப்பண்பாடு சார்ந்ததும் அல்ல. இலக்கியத்தில் வாசகமையச் சிந்தனைகள் , ஏற்புக்கோட்பாடுகள் பல வந்துகொண்டிருக்கின்றன. ஆசிரியன் முக்கியமல்ல பிரதியே மையம் என்ற கோணம் உள்ளது. ஆனால் எந்நிலையிலும் படைப்புக்கு முதன்மையான கூறு ஆசிரியனே. ஆசிரியனின் வெளிப்பாடே இலக்கிய ஆக்கம். அதிலிருந்து ஆசிரியனை விலக்கவே முடியாது.

ஆசிரியன் எழுதும்போது அங்கே வாசகன் இல்லை. அவன் எழுதுவது எழுத்தினூடாகத் தன்னைக் கண்டடைய. தன்னை ஒளித்து தன்னிலிருந்து வேறொன்றை எடுக்க. அது ஒரு முடிவிலா விளையாட்டு. ஒருநிலையிலும் புனைவெழுத்தின் ஆக்கத்தில் வாசகனின் ரசனைக்கோ , எதிர்பார்ப்புக்கோ இடமில்லை. தன்னை வாசிப்பவர்களின் அறிவுத்தகுதியோ ஏற்போ கூட எழுதுபவனுக்கு பொருட்டல்ல. எந்த இலக்கிய எழுத்தாளனும் தன் சமகாலச் சூழலுக்காக எழுதுவதில்லை.

எழுத்து எழுத்தாளனிலிருந்து வெளிப்பட்ட பின்னர் அதை வாசகன் அடைகிறான். தன் கற்பனையினூடாக அப்புனைவை விரிக்கிறான். ஆசிரியனுடன் ஓர் உரையாடலில் ஈடுபடுகிறான். அது அப்புனைகதை உருவாக்கி அளிக்கும் ஆசிரியப் படிமம் மட்டுமே. எத்தனைக் கோட்பாட்டாளர்கள் என்னென்ன பேசினாலும் நூலாசிரியன் வாசகனுக்கு அவ்வாசிப்பின், விவாதத்தின் தருணத்தில் கற்பிப்பவனாகவே இருக்கிறான்.

அவ்வாறு இருக்கையில் மட்டுமே வாசிப்பு ஒரு அறிவுப்பரிமாற்றமாக, மெய்த்தேடலாக ஆகிறது. அந்த மதிப்பை வாசகன் ஆசிரியனுக்கு அளிக்கவில்லை என்றால் ஆசிரியன் மறைந்துவிடுகிறான். கூடவே நூலும் வாசிப்பும் பொருளிழந்துவிடுகிறது.எஞ்சியிருப்பது மொழியாலான ஒரு சடலம். அதைக் கூறுபோட்டு ஆராயலாம். கல்வித்துறைச் சழக்குகளுக்கோ ஆணவவெளிப்பாட்டுக்கோ உதவும். இலக்கியத்திற்கே உரிய கற்பனை சார்ந்த அறிதல்முறை, நுண்ணுணர்வுசார்ந்த அறிதல்முறை இல்லாமலாகிவிடும்.

நுகர்வுப்பண்பாட்டில் இருப்பது இதுவே. அங்கே ஆசிரியன் கற்பிப்பவன் அல்ல. அவன் வாசகனுக்கு சேவை செய்பவன், வாசகன் விரும்புவதை சமைத்தளிப்பவன். இன்றைய பெரும்பிரசுர நிறுவனங்கள் தங்கள் தொழிலை வேறு நுகர்பொருள் வணிகம் போலவே செய்கின்றன. வாசகர்களை நுகர்வாளர்களாகவே பயிற்றுவிக்கின்றன. அந்தப் பயிற்சியை உடைத்து வெளியே வந்து ஆசிரியனை கற்பிப்போனாக, நூலை ஒரு மெய்த்தேடல் வடிவமாகக் காணவேண்டியிருக்கிறது.

அதற்கு வாசகனின் ஆணவத்தை உடைக்கும் ஆற்றல்மிக்க வழிகாட்டிகள் தேவை. அல்லது வலுவான வாழ்க்கையனுபவங்கள் தேவை. இல்லையேல் அதே சுழற்சியில் உழலவேண்டியதுதான். நுகர்வுக்கே உரிய பல கொள்கை வரிகள் உள்ளன. ‘எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்று எப்படிச் சொல்லமுடியும்? எல்லா எழுத்தும் யாரோ ஒருவருக்கு நல்ல எழுத்துதான்’ என்பது அவற்றில் ஒன்று. அப்படி பல. இவ்வரிகள் இலக்கிய விழுமியங்களை உடைக்கின்றன. அவ்வாறாக இலக்கியம் என்பதையே உடைக்கின்றன. வாசிப்பை வெறும் கேளிக்கையாக மாற்றிவிடுகின்றன. இதைக் கடக்காமல் இலக்கியத்தை அடையவே முடியாது.

அடுத்த தடை என்பது நான் முன்னரே சொன்னதுபோல இன்றைய இணைய வலைத்தள வாய்ப்புகள். அனைவருமே எதையாவது எழுதலாம். எழுதுபவரெல்லாம் எழுத்தாளராகச் சொல்லிக்கொள்ளலாம். அந்த சூழல் மெல்ல மெல்ல எதையுமே தேடாத ஒரு தன்னிறைவு நிலையை, இறுகிய அறிவின்மையை உருவாக்கிவிடுகிறது.

இன்று ஒரு கடிதம். ஒருவர் இணையத்தில் எவரோ எழுதியதை வெட்டி ஒட்டி ஐயம் கேட்டிருந்தார். காடு நாவலில் ‘மீன் விழுங்கிய பறவை எழுந்து பறக்க’ என ஒரு வரி வருகிறது. ‘மீன் விழுங்கிய பறவை எப்படி ஆசானே எழுந்து பறக்கும்? “மீனை” என்று சரியாக எழுதினால் என்ன கெட்டு போகும்?’என்று யாரோ அறிவுக்கொழுந்து சமூக வலைத்தளத்தில் சொல்ல இவர் அதை ஐயமாகக் கேட்டிருக்கிறார். நல்லவேளை அதைக் கேட்டுத்தெரிந்துகொள்ளவேண்டும் என்றாவது இவருக்குத் தோன்றுகிறது. இவருக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் அதை எழுதியவருக்கு தனக்குத் தெரியாமலிருக்கக்கூடும் என்ற ஐயம்கூட இல்லை. எவரிடமும் கேட்கவேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. நூலில் பார்க்கவும் முனையவில்லை. நேரடியாக நக்கல்.அந்த உளநிலை அக்கணமே ஆசிரியனைக் கொன்று வெற்றுச்சடலத்தை அளிக்கிறது. அதன்பின் இருப்பது பிண ஆராய்ச்சி.

அறிந்த எவரிடமேனும் கேட்டிருந்தால் எத்தனை விளக்கங்கள் கிடைத்திருக்கும். தமிழிலக்கணத்தின்படி அச்சொல்லாட்சி முற்றிலும் சரியானதே. ’தேன் உண்ட வண்டு’என்றால் வண்டை உண்ட தேன் என்று பொருள் இல்லை. மையுண்ட கண்கள் என்றால் மை கண்களை உண்டது என்று பொருள் இல்லை.அந்தத் தருணமே சொற்பொருளை உருவாக்குகிறது. எந்த மொழியிலும் சொற்தருணத்திலிருந்து விலக்கி சொற்பொருள் கொள்ள இயலாது.

ஐ விகுதி, செயப்பாட்டு வினை போன்றவை தமிழில் பிற்பாடு வந்தவஒதான். தமிழின் தொன்மையே அதற்கு மாறாத இலக்கணநெறிகள் அமைவதை தடுக்கிறது.செய்திக்கட்டுரைக்குரிய தெள்ளத்தெளிவான மொழிநடை இலக்கிய ஆக்கத்திற்குப் பொருந்தாது. அந்த இலக்கணத்தைக்கொண்டு படைப்புகளை அணுகவுமியலாது.

தமிழ் தொடர்ந்து உருமாறிக்கொண்டிருக்கிறது. சொற்கள் நடுவே இடைவெளி விடுவதென்பது சென்ற நூறாண்டுகளில் உருவானது. சொல் நடுவே இடைவெளிகள் விடுவது மேலும் மேலும் கூடிக்கொண்டே செல்கிறது. இச்சொல்லிடைவெளிகளே தமிழை ஒரு நவீனமொழியாக நிலைநிறுத்துகின்றன. இந்த மாற்றங்களினூடாக தமிழைப் புரிந்துகொள்வதற்கு உரைநடையில் தொடர்ந்து வாசித்துச் செல்லும் வழக்கம் தேவை. எட்டாம்வகுப்பு இலக்கணத்தை வைத்து நவீன இலக்கியவாசிப்பை நிகழ்த்தமுடியாது

இத்தனை விஷயமும் அந்த தன்னம்பிக்கையாளருக்குச் சொல்லவேண்டும். எனக்கு எழுதியவரிடம் எவரேனும் அந்த வலைத்தளச் சிந்தனையாளருக்கு அதைச் சொன்னார்களா என்று கேட்டேன். இல்லை என்றார். அங்கே அதற்கு வாய்ப்பே இல்லை. ஆகவே அந்த அறியாமை சில ஆண்டுகளிலேயே உடைக்கமுடியாத ஆணவமாக ஆகிவிடும். அதன்பின் இலக்கியம் அல்ல எந்தப் புதிய அறிவும் சாத்தியமல்ல. இதுவே இன்றைய நிலை

இத்தனைக்கும் அப்பால் இருப்பது ஒரு நம்பிக்கை, மானுடனின் அறிவுவேட்கையும் மெய்த்தேடலும் அழியாதது. அது குறையலாம், ஒழியாது. தனக்குரிய உள்ளங்களை அது கண்டடைந்தபடியேதான் இருக்கும்

ஜெ

முந்தைய கட்டுரைஅகம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-20