அசங்கனின் காவல் வாழ்க்கை முதல் நான்கு நாட்களும் பகல் முழுக்க படைகளின் நடுவே மரநிழலில் முகத்தின் மேல் மரவுரியை போட்டுக்கொண்டு துயில்வதும், அந்தி எழுந்ததும் ஆடையை உதறி அணிந்துகொண்டு வில்லையும் அம்புத்தூளியையும் வேலையும் எடுத்துக்கொண்டு காவல்மாடத்தில் இரவெல்லாம் அலையடித்துச் சுழலும் காற்றிலும் குளிரிலும் வெறித்து நடுங்கும் விண்மீன்களால் ஆன வான்வெளிக்குக் கீழே அமர்ந்திருப்பதுமாக சென்றது. முதல் சிலநாட்கள் பிறகாவலர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தான். பின்னர் சொல்லின்மையே அங்குள்ள இயல்பான நிலை என்று கண்டுகொண்டான்.
காவல்பணியினூடாக தனித்திருக்கையில் பேருருக்கொள்ளும் உள்ளத்தை ஆள்வதெப்படி என்று அவன் கற்றுக்கொண்டான். ஒன்றிலிருந்து ஒன்றென ஓடும் எண்ணங்களைக் கண்டு அஞ்சாமல், அவற்றை பொருளுணர முயலாமல் அவ்வண்ணமே விட்டு அமர்ந்திருப்பதே செய்யக்கூடுவது. விழிகளால் சூழலை துழாவவோ காட்சிகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தி பொருளென்றாக்கவோ முயலலாகாது. காண்பன, கேட்பன எதையும் சித்தத்திற்கு கொண்டுசெல்ல வேண்டியதில்லை. சித்தத்தை அதில் நிகழும் அலைகளாக தன் ஒழுக்கில் செல்லவிட்டு புலன்களை அதனுடன் தொடர்பற்ற தனியிருப்புகளாக அமைத்து அங்கிருப்பதொன்றே காவல்.
புலன்கள் சலிப்படைவதில்லை என்பதை அவன் உணர்ந்தான். உள்ளம் கொள்ளும் எந்த உணர்வுகளும் புலன்களுக்கில்லை. அவை வெறும் கருவிகள். நோக்கி நோக்கி சலிப்புற்றதென்றால் விழி எத்தனை பயனற்றதாகும் என்றெண்ணியபோது காவல்மாடத்தில் அமர்ந்து அவன் வானிருளை நோக்கி புன்னகைத்தான். வெறுமனே நோக்கி அமர்ந்திருப்பதனூடாக மிகச் சிறந்த காவல்பணியை ஆற்ற இயலுமென்பதை கற்றுக்கொண்டதுமே அவன் உள்ளம் அனைத்து அலைக்கழிப்புகளிலிருந்தும் விடுபட்டது. பின்னர் காட்டை நோக்கி கற்றுக்கொள்ளத் தொடங்கினான். இருளுக்கு விழி பழகியதும் காடு தெளிந்து அருகணையலாயிற்று. அடிமரங்களும் கிளைகளும் புடைப்புகொண்டு பட்டைவடுக்களும் கோடுகளும் தெளிய தெரியத்தொடங்கின. பின்னர் இலைநுனிகளும் காய்களும்கூட துலங்கின.
காடு அவனுடன் பேசத் தொடங்கியது. காட்டுக்குள் இரவில் செல்லும் விலங்குகளின் காலடிகளை செவிகள் பிரித்தறிந்தன. காற்று கடந்து செல்வதுபோல செல்லும் மான்கூட்டம். நரிகள் புதர்களுக்குள் நீரோடைபோல் செல்கின்றன. பெரும்பாறை ஒன்று மிக மெல்ல உருண்டு செல்வது போன்ற ஒலியுடன் யானைகள். கிளைகள் ஒடியும் ஓசை அருகே யானை நின்றிருக்கிறதென்பதன் தடம். மேலிருந்து பார்க்கையில் காட்டுத்தழைப்பு உலையும் தடமாகவே யானைத்திரள் செல்வதை பார்க்கமுடிந்தது. புலி முற்றிலும் ஓசையற்றது, காடு உளம் கரந்த எண்ணம்போல. ஆனால் மேலே பறவைகளும் குரங்குகளும் அதை அறிவித்து கூச்சலிடும்.
இத்தனை ஆயிரம்பேர் படைக்கலன்களுடன் இங்கு அமைந்திருக்கையிலும் காட்டுக்குள் மிக அருகே விலங்குகள் வந்து செல்கின்றன. விலங்குகளின் தன்னுணர்வுகளில் நுண்மையானது எல்லை வகுத்துக்கொள்வது. தன் எல்லை மட்டுமல்ல பிற எல்லைகளையும் வகுத்துக்கொள்கின்றன அவை. ஆயர் சிற்றூர்களில் சாலை ஓரங்களில் மேயும் எருமைகள் விரைந்து செல்லும் தேர்களுக்கு வெறும் பத்து விரற்கடை இடைவெளிவிட்டு செவியசைவின்றி பொருட்படுத்தாமல் நிற்பதை அவன் கண்டிருக்கிறான். மானுட உள்ளங்களையும் அவை அவ்வாறே கணித்து எல்லையிட்டிருக்கின்றன. இந்த எல்லைக்கு அப்பால் நீங்கள் என்று குறுங்காட்டின் எல்லையில் விழிசுடர காதுகூர்ந்து தலைதூக்கிய செந்நாய் சொன்னது.
காட்டை அறியத் தொடங்குந்தோறும் அங்கிருப்பது பேருவகை அளிப்பதாக மாறியது. முற்காலையில் முதல் பந்தம் காட்டுக்குள் எழுந்து ஒழுகி அணைவதை காண்பது கிளர்ச்சியூட்டியது. விண்ணிலிருந்து எரிமீன் வருவதைப்போல. ஒன்றன்பின் ஒன்றென்று பந்தங்கள் தொடர சிறு ஊற்று பெருகி ஓடையாவதைப்போல பந்தநிரை படைகளை நோக்கி வரும். கொள்முதலுக்கென அமைக்கப்பட்டிருந்த கணக்கர்களும் பணியாளர்களும் படைவிளிம்பு முழுக்க மரப்பீடங்களிட்டு அமர்ந்திருப்பார்கள். புற்கட்டுகளை தூக்கி எடை பார்த்து அப்பாலிருக்கும் குவியலை நோக்கி வீசிவிட்டு பணியாட்கள் கூவியறிவிக்க கணக்கர்கள் ஓலையில் குறித்துக்கொண்டு செம்பு நாணயங்களை விலையாக வழங்கினர். புல்மலைகள், பசுந்தழைக் குன்றுகள், விறகுமேடுகள். அவற்றை வண்டிகளிலேற்றி படைகளுக்குள் அமைந்த வெவ்வேறு பொருள்நிலைகளை நோக்கி கொண்டு சென்றது பிறிதொரு ஏவலர் படை.
ஒன்றுடன் ஒன்று இணைந்து மாபெரும் கைவிடுபடைபோல இயங்கிக்கொண்டிருந்த படையைப் பார்த்தபடி அமர்ந்திருப்பது என்பது விந்தையான நிறைவை அளிப்பதாக இருந்தது. ஒன்று பிறிதொன்றுடன் சரியாகப் பொருந்துவதை பார்ப்பதுபோல் மானுட உள்ளத்திற்கு உவகை அளிப்பது பிறிதொன்றுமில்லை போலும். இவை அனைத்தும் இங்கு சிதறிப்பரந்து ஒன்றையொன்று எங்ஙனமேனும் பொருத்திக்கொள்கின்றன. அனைத்தையும் ஒன்றென தொகுத்துக்கொள்ள விழையும் ஒன்று உள்ளிருக்கிறது. அதுவே உள்ளமென்று உணர்கிறேன். ஒரு பொருள் பிறிதொன்றுடன் பொருந்துகையில் இங்குள்ள ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதே என அறிகிறேன். இவையனைத்தையும் ஒன்றென்றாக்கும் பெருநெறி ஒன்று உள்ளே இலங்குவதாகவும் எண்ணிக்கொள்கிறேன். அவன் கற்ற வேதமுடிபுச் செய்யுள் ஒன்று அப்போது நினைவிலெழுந்தது. ‘ஒன்றொன்றாய் தொட்டெண்ணி எண்ணும் பொருள் ஒடுங்குகையில் நின்றிடும் பரம்.’ அதை கற்றபோது வெறும் வரிகளாக, பொருளிலா அறிதலாக இருந்தது. அப்போது அவ்வரி வெடிப்புற்று திறந்துகொண்டது. ஆனால் தொடரும் வரிகள் நினைவிலெழவில்லை.
அவ்வெண்ணத்தை எண்ணி அவன் மீண்டும் புன்னகைத்தான். காவல்பணியில் அமர்ந்த நாள் முதல் தன் எண்ணங்கள் மேலும் மேலும் கூர்மைகொள்வதை அவன் உணர்ந்திருந்தான். கல்விச்சாலையிலோ அரண்மனையிலோ எங்கும் அவ்வாறு தன்னைத்தான் நோக்கி அவன் அமர்ந்திருந்ததே இல்லை. திருஷ்டத்யும்னனின் எண்ணமென்ன என்று அப்போதுதான் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. உள்ளூர நிலைகொள்ளாது கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கன்று ஒன்றை நுகம் பயில அனுப்பியிருக்கிறார். நுகம் அறிந்த காளை அமைதிகொண்டுவிடுகிறது. அளந்த காலடிகளும் கருதிய உடலசைவுகளுமாக நடக்கிறது. தன்னைப்போலவே தன் இளையோரும் மாறிவிட்டிருப்பதை அவன் உணர்ந்தான். அவர்களும் தேவையின்றி சொல்லெடுப்பதை, விளையாட்டுக்கு பூசலிடுவதை தவிர்க்கத் தொடங்கியிருந்தனர்.
அவர்களில் வந்த மாற்றத்தை காவலர்களும் உணர்ந்தனர். “காவலனாகிவிட்டீர், இளவரசே. ஒரு காவல்மாடத்தை ஆளத்தெரிந்தவன் நாட்டுக்கும் காவலனாக இயலும்” என்றார் சுவீரர். அசங்கன் புன்னகை புரிந்தான். “ததும்பாதிருப்பதே தலைவனுக்கு இயல்பு என்பார்கள். எங்கும் தேவைக்குமேல் ஒரு துளி உணர்வோ, சொல்லோ, செயலோ வெளிப்படலாகாது. அதை கற்க உகந்த இடம் காவல்மாடமே.” அவன் உளம்பணிய “ஆம் சுவீரரே, நான் தலைபணியும் ஆசிரியர்களில் தாங்களும் ஒருவர்” என்றான்.
ஒவ்வொரு நாளுமென போர் அணுகிக்கொண்டிருந்தபோது அவன் அதை நோக்கி உருவழிந்து மறுவுரு கொண்டு சென்றபடியே இருந்தான். போருக்கு முந்தைய அத்தனை உளநாடகங்களையும் கண்டான். போரே வரப்போவதில்லை என்று நம்பி போருக்கென விழைந்தனர். போர் வரக்கூடும் என அஞ்சி போர் வராதென்று சொல்லாடினர். நோக்க நோக்க பேருருக்கொண்டு அணுகும் மலை என போர் வந்தது. மறுநாள் போர் என்று அறிவிக்கப்பட்டபோது தன்னை போருக்குச் செல்ல திருஷ்டத்யும்னன் ஆணையிடக்கூடும் என எண்ணினான். ஆனால் அவனும் உடன்பிறந்தாரும் காவலிலேயே நீடிக்கவே படையோலை கூறியது.
போர் தொடங்கிய முதல் நாள் அவன் படைக்குப் பின்னால் காவல்மாடமொன்றின் உச்சியில் அமர்ந்திருந்தான். அன்றிரவு காவலுக்கு மேலே செல்லும்போதே உடல் பதறிக்கொண்டிருந்தது. நாளை நாளை என உள்ளம் அரற்றியது. ஆனால் பழகிய காட்டுத்தழை மணம்கொண்ட காற்றும் பழுத்து நிறையத் தொடங்கிய விண்மீன்களும் மெல்ல அவனை ஆற்றி அறிந்து பழகிய அவ்வூழ்கத்தில் அமைத்தன. புலரியின் முதல் போர்முரசு விம்மத் தொடங்கியபோது ஒரே கணத்தில் எல்லாவற்றையும் உணர்ந்தான். உடலுக்குள் அனைத்து நீர்மைகளும் கொந்தளிப்பு கொள்ள, விழிமங்க, செவிகள் அடைத்துக்கொள்ள, அடியிலா ஆழமொன்றில் விழுந்துகொண்டிருக்கும் உணர்வை அடைந்தான். பின்பு கைகள் நடுங்கி நெஞ்சு துடிக்க தன்னுணர்வு கொண்டான்.
பதறும் கால்களுடன் காவல்மாடத்தில் எழுந்து நின்று போருக்கு ஒருங்கி முகத்தொடு முகம் நின்ற படைப்பெருவெளியை நோக்கினான். போர்முரசு ஒலித்து கொம்புகள் தொடர்ந்து பின் அமைந்த அமைதிக்குப் பின் நடைமாறி “எழுக! எழுக!” என பெருமுரசம் ஒலித்தது. அவன் முன் இரு படைகளும் ஒன்றுக்கொன்று அறைந்துகொண்டு, ஒன்றுடன் ஒன்று கலந்து, ஒன்றை ஒன்று கவ்வி, ஒன்றுள் ஒன்று ஊடுருவின. கீழே அது பெருவிசையுடன், விரைவுடன் நிகழ மேலே மிக மெல்ல தழுவிக்கொள்வதுபோல தோற்றம் அளித்தது. காவலர்தலைவர் அவனை மெல்ல தொட்டபோது உடல் துள்ளினான். அவர் அவனிடம் “நிலைமீள்க! உங்கள் பணி முடிந்தது” என்றார். அவன் அங்கேயே இருக்க விரும்பினான். “நான் போரை…” என சொல்லத்தொடங்க அவர் “செல்க!” என குரல்மாறி கடுமை காட்டினார்.
நடுங்கும் உடலுடன் தன் கூடாரத்தை அடைந்தான். பின்னர் பகல் முழுக்க அவன் அறிந்ததெல்லாம் வெறும் அலைக்கொந்தளிப்பு மட்டுமே. ஓசைகள் காட்சியாயின. முரசுகளும் கொம்புகளும் எழுப்பிய முழக்கங்கள் ஒன்றாகக் கலந்து வானை அறைந்து எதிரொலியாக திரும்பிக்கொண்டிருந்தன. மழையோசையை கேட்டுக்கொண்டிருக்கையில் பெருகி அணைவது போலவும், நின்று அலைகொள்வது போலவும் செவி மயக்கேற்படுவது போலவே தோன்றியது. அந்த படைமுழக்கத்தை சொற்களாக மாற்றிக்கொள்ள உள்ளிருந்து ஒரு புலன் துடித்தது. “ஆம் அவ்வாறே! ஆம் அவ்வாறே! ஆம் அவ்வாறே!” என்று. “அல்ல! அல்ல! அல்ல!” என்று. பின் “எழுக! எழுக! எழுக!” என்று. நடைமாறி “வெல்க! வெல்க! வெல்க!” என்று. அல்லது “கொல்க! கொல்க! கொல்க!” என்றா? இறுதியில் எஞ்சியது “அல்ல! அல்ல! அல்ல! அல்ல! அல்ல!” எனும் ஓயா நுண்சொல் மட்டுமே.
அன்று அந்திக்குள் “அல்ல! அல்ல!” என்ற சொற்களாக மட்டுமே அவன் முழக்கத்தை கேட்டுக்கொண்டிருந்தான். அந்தி முரசு முழங்குவதற்குள்ளாகவே அவனுக்கு காவல்பணிக்கு அழைப்பு வந்தது. அவன் காவல்மாடத்தில் நின்று நோக்கியபோது அவன் உள்ளத்தால் உணர்ந்த ஓசைக்காட்சியுடன் இணையாது பொருளற்ற கொந்தளிப்பாக களம் தெரிந்தது. வெறித்து நோக்கிக்கொண்டு அவன் நின்றபோது அந்தி வீழ்வதை அறிவித்து முரசொலி எழுந்தது. ஒற்றைப் பெருங்காற்றில் பெருமழை நின்றுவிடுவதுபோல களம் ஓய்ந்தது. ஓசைக்குப் பழகிய செவி கீழே விழுந்த தாலமென ரீங்கரித்தது. விந்தையான பற்கூச்சம் ஒன்றை அடைந்து அவன் கண்மூடினான்.
பின்னர் மெல்ல உடல் தளர்த்தி தொலைவை நோக்கினான். படைகள் விரிந்து விரிந்து சிறுசிறு குழுக்களாக மாறி பின்வாங்கிக்கொண்டிருந்தன. உதிரும் சருகுகளை மேலிருந்து நோக்குவது போலிருந்தது. இரு படைகளுக்கும் நடுவே விரிசல்போல இடைவெளி தோன்றியது. நிலப்பிளவுபோல அது அகன்றது. பல்லாயிரவர் நிலம் படிந்து கிடந்த குருதிச் செருகளம் துலங்கலாயிற்று. மேலும் மேலுமென படைநடுவெளி அகன்று மனித உடல்களால் ஆன பரப்பாக மாறி விரிந்து கிடந்தது. இருபுறமிருந்தும் மருத்துவப் பணியாளர்களும் வண்டியோட்டிகளும் பலநூறு சிற்றோடைகள்போல் வழிந்து வந்து அந்தக் களத்தில் பரவினர்.
அவன் உளம் ஓய்ந்து வெற்றுவிழி என நோக்கிநின்றான். புழுத்த ஊன்பரப்புபோல தோன்றியது குருக்ஷேத்ரச் செருகளம். பல்லாயிரம் நெளிவுகள். மனித உடல் மண்ணில் விழுந்ததுமே புழுவென்றாகிவிடுகிறது. முன்பெப்போதோ புழுவென்றிருந்து அறியாத தெய்வ ஆணையொன்றால் எழுந்து நின்று மானுடனாகியது. புழுவென அதை வைத்திருந்த விசைகள் மீண்டும் எழுகின்றன. அவற்றின் தெய்வங்கள் இரக்கமின்றி கைவிடுகின்றன. என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்! இவ்வெண்ணங்களை இதற்கு முன் அடைந்ததே இல்லை. ஒருநாளில் ஒருவன் எத்தனை தொலைவு செல்லமுடியும்? ஆனால் இச்சிலநாட்களில் நான் அடைந்த வாழ்வு இதுவரை வாழ்ந்த நாளைவிட பலமடங்கு. ஒவ்வொரு கணமுமென முதிர்ந்துகொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் முதுமை அடையக்கூடும். இறப்பு இயல்பானதாக வந்தணையக்கூடும்.
இறப்பு எனும் சொல் அவனை மெய்ப்பு கொள்ளச்செய்தது. வியர்வை எழ உடல் நடுங்கியது. இறப்பு. பல்லாயிரவர் இறப்புக்கு நிகரல்ல என் இறப்பு. என் இறப்பு இங்கு எவருக்கும் ஒரு பொருட்டல்ல. ஒருவேளை தந்தையும்கூட ஓரிரு நாட்களில் அதை கடந்து செல்லலாம். என் இறப்பு எனக்கு மட்டுமே பொருட்டு. அவ்விறப்பால் நான் எதை அடைவேன்? அவன் பாஞ்சால இளவரசியை எண்ணிக்கொண்டான். அந்த உளக்கிளர்ச்சியில் இருப்பும் இன்மையும் காலமும் இடமும் மயங்க அவள் மிக அருகிலென நின்றிருந்தாள். மெல்லிய மயிர்ப்பரவல்களும் பருக்களும் கொண்ட சிவந்த வட்டமுகம். அடர்ந்த புருவங்கள். சற்றே வளைந்து தடித்த கீழுதடு. சின்னஞ்சிறு மூக்குக்கு மேல் நீலப்புகை என மயிர்ப்பரவல். சற்றே பச்சை ஊடுருவிய சிறிய விழிகள். சிறுகுருவிகளுக்குரிய மென் துடிப்பு கொண்ட உடலசைவுகள். குருவிகளுக்குரிய கூரிய ஒலிகொண்ட சிரிப்பு. அவன் உடற்கிளர்ச்சி அடைந்தான். உடனிருந்த காவலர்களிடமிருந்து அதை மறைப்பவன்போல் அமர்ந்துகொண்டான்.
படைநகர்வு முழுக்க பாஞ்சால இளவரசி சௌம்யை அவனுடன் வந்தாள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு யானைத்தோலாலான சிறு கூடாரம் அமைத்து அளிக்கப்பட்டது. அதிலிருந்த வெளிப்படைத்தன்மை அவர்கள் இருவருக்குமே கூச்சத்தை அளித்தது. படைகளுக்கு மிகவும் பின்னால் தனி அணியாக வந்துகொண்டிருந்த அரசமகளிரின் குழுவுடன் சௌம்யை வந்தாள். படைகள் அந்தியில் அடங்கிய பின்னர் மூடுதிரையிடப்பட்ட விரைவுத்தேரில் படைகளுக்குள் வந்து கூடாரத்திற்குள் புகுந்து அவனுக்காக காத்திருந்தாள். அவன் இருளிலேயே வந்து இருளுக்குள் அவளுடன் தங்கி இருள் எழுவதற்கு முன்னரே திரும்பிச்சென்றான். ஆயினும் அவனுக்கு பிறர் விழிநோக்க நாணமிருந்தது. அதை தவிர்த்திருக்கலாம் என்று முதலில் இருவருமே எண்ணினர். முதல் நாள் சௌம்யை “நாளை முதல் இது வேண்டாம். என்னால் விழிகளை சந்திக்க இயலவில்லை” என்றாள். ஆனால் ஒவ்வொருநாளும் அவர்கள் அணுகி அறிந்தனர். மேலும் மேலும் தெளிவுகொண்டபடியே வந்தாள். காலை எஞ்சிய வினாவுக்கு அந்தியில் விடையுடன் தோன்றினாள்.
மணம்முடித்த முதல்நாள் இரவு உபப்பிலாவ்யத்தின் சிற்றறையில் அவர்கள் இரு நெடுந்தொலைவு எல்லைகளில் திகைத்து நின்றிருந்தனர். மாளிகையைச் சூழ்ந்து படைநகர்வின் முழக்கம் ஒலித்துக்கொண்டிருந்தது. சாளரத்தினூடாக காற்று வரும்போதெல்லாம் மழைபோல அவ்வோசை வந்து அறைந்தது. அவன் ஏவலரால் அழைத்துவரப்பட்டு அறைவாயிலில் விடப்பட்டான். கால்கள் குளிர்ந்து உறைந்து நிற்க வெளியே சற்று நேரம் நின்றான். பின்னர் உள்ளே சென்று வாயிலிலேயே தயங்கினான். அவளை அணுகவோ சொல்லெடுக்கவோ முயலவில்லை. சாளரக் கதவுகளை மூடி சூழலறியாது ஒலித்த அந்த ஓசையை துண்டிக்க விரும்பினான். ஆனால் அது எவ்வகையிலேனும் நாணிலாச் செய்கையாக தோன்றிவிடுமோ என்று எண்ணி ஒழிந்தான்.
நெடும்பொழுதுக்குப் பின் சௌம்யை விழிதூக்கி அவனை நோக்கி புன்னகைத்தாள். அதிலிருந்த துணிவு அவனை அஞ்சச் செய்தது. கைகளால் சாளரத்தின் மரக்கட்டையை பற்றிக்கொண்டான். அவள் “பேரோசையிடுகிறது படை, அதை மூடுக!” என்று சொன்னாள். “ஆம், நானும் அதையே எண்னினேன்” என்று நடுங்கும் குரலில் சொல்லி அவன் சாளரக் கதவை இழுத்து மூடினான். ஓசை மட்டுப்பட்டது. அவ்விடைவெளியை உள்ளம் நிரப்ப மேலும் பேரோசையை அகச்செவியில் கேட்கத் தொடங்கினான். “ஏனிந்தப் பேரோசை?” என்று அவள் கேட்டாள். “படைநகர்வு தொடங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் நாம் குருக்ஷேத்ரத்தில் இருப்போம்” என்று அவன் சொன்னான்.
சௌம்யை உதடுகளை நாவால் வருடி கழுத்து அசைய மூச்செறிந்து “நானும் உடன்வருவேன் என்று தந்தை சொன்னார்” என்றாள். “என்னிடமும் சொன்னார்கள்” என்றான். “ஏன் நிற்கிறீர்கள்? அமர்ந்துகொள்ளலாமே” என்று அவள் மஞ்சத்தை காட்டினாள். அவன் தளர்ந்த கால்களை உளவிசையால் தள்ளி வைத்து மெல்ல நடந்து மஞ்சத்தருகே சென்றான். “அமர்க!” என்றாள். அவள் அருகே மஞ்சத்தின் விளிம்பில் அவன் அமர்ந்துகொண்டான். “நாணம் கொள்கிறீர்கள். ஆண்கள் இத்தனை நாணுவார்களென்று நான் அறிந்ததே இல்லை” என்றாள் சௌம்யை. “நாணமல்ல” என்று அவன் சொன்னான். பின்னர் புன்னகைத்து “நாணமேதான்” என்றபின் “நீ… நீங்கள் இத்தனை துணிவுடன் இருப்பீர்கள் என்று எண்ணவில்லை” என்றான்.
“நான் எப்போதுமே துணிவானவள்தான்” என்று சௌம்யை சொன்னாள். “படைக்கலம் பயின்றிருக்கிறேன். புரவியும் யானையும் ஊர்வேன்.” அவன் “ஆம், அரசகுடியினருக்கு அவை கற்பிக்கப்படுமென்று கேட்டிருக்கிறேன்” என்றான். “ஏன் உங்கள் குலத்தில் கற்பிக்கப்படுவதில்லையா?” என்று சௌம்யை கேட்டாள். அச்சொல்லிலிருந்த சிறுமுள்ளொன்று அவனை குத்த “எங்கள் குலமும் அரசகுலம்தான்” என்றான். அவள் கைநீட்டி அவன் தொடையை மெல்ல தொட்டு “இல்லையென்று நான் சொல்லவில்லை” என்றாள். “அவ்வாறல்ல” என்றான் அவன். சௌம்யை “நம்முள் உளப்பூசலென்று ஏதேனும் நிகழ வாய்ப்பிருப்பது இவ்வேறுபாடால்தான். என் குலம் தொன்மையான ஷத்ரிய குலம். நீங்கள் எழுந்து வரும் யாதவர் குடி. இருவருக்குமே மெய்யென்ன என்று தெரியும்” என்றாள். அந்தத் தெளிவு அவனை நிறைவுறச்செய்ய “ஆம்” என்றான்.
அவள் குரல் அன்னையருக்குரிய கனிந்த தணிவை கொண்டிருந்தது. “உங்கள் தந்தை என்னை நீங்கள் மணந்தபோது உணர்வு மீதூற மிகைபணிவு காட்டி நெகிழ்ச்சிச் சொல் பெருக்கினார். இவ்வுறவு எந்தை உங்கள் குடிக்கு அளிக்கும் பெருங்கொடை என்பதுபோல. அந்த உணர்வுகளுக்குள் நாமிருவரும் சென்றுவிட்டால் ஒருபோதும் நாம் நல்லுறவு கொள்ளப்போவதில்லை. குடியும் குலமும் இந்த அறைக்கு வெளியே இருக்கட்டும். நாம் இதற்குள் கணவனும் மனைவியுமாக மட்டும் இருப்போம்” என்றாள். நடுங்கும் குரலில் “ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன்” என்றான் அசங்கன். அவள் மேலும் அணுக்கமானவளாக ஆகிவிட்டிருந்தாள். அவளிடம் எத்தயக்கமும் உளவிளையாட்டும் தேவையில்லையென்ற உறுதி தோன்றியது. ஆனால் அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.
“உண்மையில் குலம், குடிப்பெருமை எதுவும் பெண்டிர்க்கு ஒரு பொருட்டல்ல. யாதவர்குலத்துப் பெண்களுக்கு இருக்கும் உரிமையும் விடுதலையும் ஷத்ரியப் பெண்களுக்கில்லை. அவர்கள் பொன்மாளிகையின் சுடர்கன்னிச் சிலைகள்போல. காம்பில்யத்தில் இருந்து விடுதலை பெற்று உங்கள் யாதவநகரிக்கு வரமுடியுமென்றால் அதைவிட நான் விரும்புவது பிறிதொன்றில்லை” என்று சௌம்யை சொன்னாள். அவன் “இந்தப் போர் முடிந்ததும் நாம் ரிஷபவனத்துக்கு செல்வோம்” என்றான். “ஆம்” என்றபடி அவள் அவன் கைகளை பற்றிக்கொண்டாள். “ஏன் உங்கள் விரல்கள் குளிர்ந்திருக்கின்றன?” என்றாள். “நான் அஞ்சுகிறேன்” என்றான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். அவனால் மறுமொழி சொல்ல இயலவில்லை. அவள் மீண்டும் தாழ்ந்த குரலில் “ஏன்?” என்றாள். அவள் கைவிரல்கள் அவன் கைவிரல்களுடன் பிணைந்தன.
அவன் உடைந்த குரலில் “எனக்கு பெண்கள் அறிமுகமாகவில்லை” என்றான். “அதனால் என்ன?” என்றபடி அவள் அவனருகே அசைந்தமர்ந்து அவன் கைகளை எடுத்து தன் மடியில் வைத்து இரு கைகளாலும் பொத்திக்கொண்டாள். அவன் “என்னை உங்களால் விரும்பலாகுமா, இளவரசி?” என்றான். “இதென்ன கேள்வி? விரும்பாதவனை மணமுடிப்பாளா ஷத்ரியப் பெண்?” என்றாள். அவன் உள்ளம் படபடக்கலாயிற்று. “என்னில் உங்களுக்கு பிடித்ததென்ன?” என்றான். “இளமைந்தருக்குரிய நாணமும் தயக்கமும். சில தருணங்களில் சொல்திருந்தா சிறுமைந்தன் போலிருக்கிறீர்கள்.”
அசங்கன் மேலும் நாணி “ஆம், என்னால் விழிநோக்கி பேச இயலவில்லை என்றும் எதையேனும் பேசுகையில் நாக்குழறி குரல் தழுதழுக்கிறது என்றும் தந்தை சொல்வதுண்டு. ஆகவே அவை முறைமைகளை முன்னரே பலமுறை எனக்குள் சொல்லி தெளிவான சொற்றொடர்களாக ஒப்பித்துவிடுவேன்” என்றான். அவள் “அதற்கு இன்னும் காலம் உள்ளது. முடிசூடி அவையமர்ந்து முறைச்சொல் பேசி ஒன்றையே நாள்தோறும் நிகழ்த்தி சலிப்புற்று வாழ்வதை முடிந்தவரை கடத்திவைப்போம். அரசர்களின் இனிய வாழ்வு சூதர்களின் சொற்களில் மட்டும்தான். முடிந்தவரை இளமையுடன் இருங்கள். அறியாதவராகவும் பதற்றம் கொள்பவராகவும் நீங்கள் இருப்பதையே நான் விழைகிறேன்” என்றாள்.
அவன் “உங்களிடம் பதற்றமோ அறியாமையோ இருப்பதாக தெரியவில்லையே?” என்றான். சௌம்யை “எங்கள் குடியில் அத்தைதான் அனைவருக்கும் முற்காட்டு. பாரதவர்ஷத்தின் அரண்மனை மகளிர் அனைவருமே துருபதன்மகள்போல் ஆகவேண்டுமென்ற ஆழ்கனவை கொண்டிருக்கிறார்கள். எங்கள் அரண்மனையில் அனைவருமே அத்தையாக மாறும்பொருட்டு இளமையிலேயே முறையாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்” என்றாள். அவன் “அவர்களின் நிமிர்வே நெஞ்சு நடுங்கவைப்பது. என்னால் அவர்களின் கால்களை மட்டுமே விழிதூக்கி பார்க்க இயல்கிறது” என்றான்.
ஆனால் அவள் உதடு சுழித்து “அத்தனை பேருருக் கொண்டு நின்றிருப்பது எத்தனை கடினம் என்றுதான் நான் எப்போதும் எண்ணுவேன்” என்றாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “வாழ்நாளில் ஒருமுறையாவது தாவிக்களிக்க வேண்டுமென்று யானைக்கு எண்ணமிருந்தால் அதன் வாழ்வுக்கு என்ன பொருள்?” என்றாள். அவன் புரியாமல் தலையசைத்து “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “என்னை ஒருமையிலேயே அழைக்கலாம். நாம் மணமுடித்து ஒரு பகல் முடிந்துவிட்டது” என்று அவள் சொன்னாள். அக்குரலின் ஒலிமாறுபாடால் அவன் உளம்விழித்து அவள் விழிகளை பார்த்தான். அவை மெல்லிய புன்னகையுடன் நனைந்த இலைநுனிகள் போலிருந்தன. அவள் தொண்டை மெல்ல அசைந்தது. உதடுகள் சிவந்து ஈரமாக இருந்தன. அவை நெளிவு கொள்வதைப்போல் தோன்றியது. மிக மந்தணமாக எதையோ சொல்லவருபவள்போல்.
அவன் “என்ன?” என்றான். அவள் எழுந்து அவன் தலையை அள்ளி தன்னை நோக்கி இழுத்து அவன் உதடுகளில் முத்தமிட்டாள். அவளுடைய துணிவும் முதிர்ச்சியும் அவனுக்கு ஆறுதல் அளித்தன, அடிதுழாவித் தவிக்கும் பெருக்கில் சிக்கிய பற்றுக்கொடி என. ஆனால் வேறெங்கோ ஒருவன் அதனால் சீண்டப்பட்டான். அவ்விரவில் அவ்விருநிலையில் நின்று அவன் அவளுடன் இருந்தான். பெண் உடலின் புதுமை அவனுடலில் காமத்தை எழுப்பியது. பெண்ணுடலெனும் கனவு கலைந்தது பிறிதொருவனை ஏமாற்றம் கொள்ளச்செய்தது. உடல்களின் ஊடாடுதல் நீர்துழாவிக் களிக்கும் சிறுவனென விடுதலை அளித்தது. மிகச் சிறிதாகிவிட்டோமோ என ஆழத்திலிருந்தவனை சலிப்புகொள்ள வைத்தது.
அவள் அவனை நன்றாக பழகிய ஒருவனை என ஆட்கொண்டாள். விலகி அவளருகே மல்லாந்து படுத்திருந்தபோது தன் கையை அவன் மார்பின்மேல் போட்டு தோளில் தலை சாய்த்து அருகே கிடந்த அவளிடம் “உன் அகவை என்ன?” என்றான். அவள் “பதினேழு” என்றாள். “என்னைவிட ஓர் அகவை குறைவுதான்” என்றான். “ஆம், அதற்கென்ன?” என்று அவள் கேட்டாள். “ஒன்றுமில்லை” என்றான். அவன் உள்ளம் போகும் திசையை உணர்ந்து அவள் “பெண்களுக்கு உளஅகவை சற்று மிகுதி என்பார்கள்” என்றாள். அவன் “ஆம்” என்றான். அவள் அவன் காதில் “அதனால் ஏமாற்றமா?” என்றாள். “ஏமாற்றமா?” என்றபடி அவளை திரும்பி தழுவிக்கொண்டு “ஏமாற்றம் என்றா தோன்றுகிறது?” என்றான். “இத்தருணத்தில் என்ன தோன்றுகிறதென்று இருவருக்குமே தெளிவிருக்காது” என்று அவள் சொன்னாள்.
“தருணத்தைப் பற்றி நன்கறிந்திருக்கிறாய்” என்றான். அவள் “முதிய பெண்டிர் பேசுவதில் பெரும்பகுதி இதைப்பற்றித்தானே?” என்றாள். அவன் “ஆண்கள் மிகக் குறைவாகவே இதைப்பற்றி பேசிக்கொள்வோம். மூத்தவர் முன்னிலையில் பேசுவது அரிதினும் அரிது” என்றான். “ஆம், அறிந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “இவ்வாறு நிகழும் என்று நான் எண்ணவில்லை” என்று அசங்கன் கூறினான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “போருக்கென்று கிளம்பி வந்தேன்” என்றான். “இதுவும் போரின் ஒரு பகுதியே” என்றாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “இத்திருமணம் ஏன் நிகழ்கிறதென்று நம் இருவருக்குமே தெரியும்” என்றாள். “ஏன்?” என்று அவன் மீண்டும் கேட்டான். அவன் சித்தம் உறைந்திருந்தது.
அவள் பேசாமல் கிடந்தாள். “சொல்” என்றான். “உங்கள் குலத்தின் இளையோர் அனைவருமே போருக்கு செல்கிறீர்கள்.” அவள் சொல்லவந்ததை புரிந்துகொண்டு “ஆம்” என்று அவன் சொன்னான். அவள் பெருமூச்சுவிட்டு மல்லாந்து தன் இரு கைகளையும் மார்பில் கோத்து மாளிகையின் கூரையை பார்த்தபடி படுத்திருந்தாள். பின்னர் “அரசியரைப்போல வேறெங்கேனும் பெண்டிர் வெறும் கருப்பை மட்டுமாக எண்ணப்படுவார்களா என்று தெரியவில்லை” என்றாள்.
அவள் உள்ளம் செல்லும் திசை அவனுக்கு முற்றிலும் புரியவில்லை. ஆனால் சற்றுமுன் மிக அணுக்கமாக இருந்தவள் மிகத் தொலைவில் விலகிச்சென்றிருப்பதை உணரமுடிந்தது. தான் இருக்கும் இடத்திலிருந்து அவளை சென்றடைவதற்கு நெடுந்தொலைவு கடந்து பிறிதொருவனாக உருமாற வேண்டுமென்று எண்ணினான். அவள் “துயில் கொள்க!” என்றாள். உண்மையில் அவன் அப்போது துயிலையே விரும்பினான். கண்களை மூடிக்கொண்டபோது பிறிதொருவனாக ஆகிவிட்டதுபோல் தோன்றியது. விட்டுவிட்டு வந்த அனைத்தும் மிக உகந்தவையாக இருந்தன.
அவன் தன்னை ஒரு சிறுவனாக எண்ணிக்கொண்டான். நீர்நிலைகளில் கூச்சலிட்டபடி ஓடிப்பாய்ந்து நீந்தி கரையேறி தலைசிலுப்பி துளிசிதற நின்றிருக்கும் ஒருவனை அவன் கண்டான். ஒளிமேவிய அலைகள் கொந்தளிக்க நீர்மை அவன் கண்களுக்குள் நிறைந்திருந்தது. காவல்மாடத்தின் இருளுக்குள் விழிகளுக்குள் ஒளிததும்பி அலைப்பதன் விந்தையை உணர்ந்து அவன் தன்னுணர்வு கொண்டபோது ஒருவர் அருகே அமர்ந்திருப்பதுபோல அவன் உணர்ந்த உண்மையொன்று உடனிருந்தது. உடல் திடுக்கிட அவன் “ஆ!” என்றான். காவல்துணைவன் “என்ன?” என்றான். “ஒன்றுமில்லை” என்றான். அவன் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. விடாய்கொண்டு தொண்டை தவித்தது. கையூன்றி எழுந்து மரக்குடைவுக் கலத்தை அணுகி அள்ளி அள்ளி குளிர்நீரை உடலுக்குள் நிறைத்துக்கொண்டான். பின்னர் நிமிர்ந்து விண்மீன்களை நோக்கினான். பெருமூச்சுடன் கைகளை மார்பில் கட்டியபடி அவற்றின் பொருளிலா பெருவிரிவை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான்.