யுயுத்ஸு அபிமன்யூவின் தேரை அமரத்தில் அமர்ந்து செலுத்திக்கொண்டிருந்தான். பீஷ்மரின் அம்புபட்டு தேர்த்தட்டில் விழுந்த அர்ஜுனனை கேடயப்படை காப்பாற்றி அழைத்துச் சென்றுவிட்டிருந்தது. “தடுத்து நிறுத்துக… பிதாமகரை தடுத்து நிறுத்துக… சூழ்க! சூழ்க!” என திருஷ்டத்யும்னனின் முரசொலி ஆணையிட்டது. அபிமன்யூ தேர்த்தட்டில் நின்று கூச்சலிட்டும் வெறிகொண்டு தேர்த்தூண்களை கால்களால் உதைத்தும் வில்லைச் சுழற்றி தேரில் அறைந்தும் கொப்பளித்துக்கொண்டிருந்தான்.
“செல்க! செல்க! அவர் முன் சென்று நிற்கவேண்டும். இத்தருணமே! இப்போதே!” என்று கூச்சலிட்டான். அவனில் கொந்தளிக்கும் உணர்வென்ன என்று யுயுத்ஸுவால் புரிந்துகொள்ள இயலவில்லை. பீஷ்மர் இரு நாட்களிலுமாக கொன்று வீழ்த்திய இளவரசர்களின் எண்ணிக்கை நூறுக்கு மேல் என்று அவன் அறிந்திருந்தான். அர்ஜுனன் ஒரு விழியிமைப்பொழுது தோற்று பின்வாங்கியதை நேரில் கண்டுமிருந்தான். “இளவரசே, ஒற்றைநிரையாக நின்று எதிர்க்கும்படி ஆணை” என்றான். “இது என் ஆணை… செல்க! செல்க!” என்றான் அபிமன்யூ.
இளமை எப்போதுமே தன்னை சற்று மிகையாகவே மதிப்பிட்டுக்கொள்கிறது, தனக்குரிய வாய்ப்புகள் அமையாதுபோகுமென்று அஞ்சுகிறது. வாழ்வு கண்முன் விரிந்து கிடக்கையில் அதை பணயம் வைத்தாடி வாழ்வுக்கு அப்பாலென எதையோ அடையத் துடிக்கிறது. “இளவரசே, இளவரசர் சுருதகீர்த்தியும் நீங்களும் இருமுனையிலும் நிகர்நின்று தாக்கவேண்டும். பின்புறம் சாத்யகி எழுவார். நாம் செய்யக்கூடுவது இணையான விசையில் முப்புறமும் தாக்கி பிதாமகரை தடுத்து நிறுத்துவது மட்டுமே. இனி அவரை வென்று செல்ல நம்மால் இயலாது. பொழுது அடங்கிக்கொண்டிருக்கிறது” என்று யுயுத்ஸு சொன்னான். “இன்று நான் அவரை வெல்வேன்! இன்று அவர் நெஞ்சு பிளந்து குருதியுடன்தான் பாடிவீடு மீள்வேன்! செல்க! முன் செல்க!” என்று அபிமன்யூ கூச்சலிட்டான்.
யுயுத்ஸு பொறுமையை சேர்த்துக்கொண்டு “ஒருவர் நிரையிலிருந்து முன் எழுவதைப்போல் பிழை பிறிதில்லை. பிதாமகர் வெறிகொண்டிருக்கிறார். அவருடைய அம்புகளின் எல்லைக்குள் தனித்து நெஞ்சுகொண்டு நிறுத்துவது போன்றது அது” என்றான். “அஞ்சுகிறீர்களா? அச்சமிருந்தால் தேரிலிருந்து இறங்கிக்கொள்ளுங்கள்” என்றான் அபிமன்யூ. அவன் பேசிக்கொண்டிருக்கையிலேயே அவனிடமிருந்து ஆணைபெற்று தனித்தியங்குவதுபோல வில் அம்புகளை பெய்தது. பீஷ்மரின் ஏழு அணுக்கவில்லவர் அலறி விழுந்தனர். யுயுத்ஸு “நான் அஞ்சுவதஞ்சுபவன்” என்றான். அபிமன்யூ “செல்க! செல்க! மாற்றுச் சொல்லை பொருட்படுத்தமாட்டேன்! செல்க!” என்று கூச்சலிட்டான்.
யுயுத்ஸு பற்களைக் கடித்து நெஞ்சிலெழுந்த சொற்களை அடக்கி புரவியைச் சுண்டி தேரை பீஷ்மரின் அம்புவளையத்தின் முன் கொண்டு சென்றான். அபிமன்யூவின் அம்புகள் பீஷ்மரின் அம்புகளை இடைமுறித்து அறைந்து தெறிக்கவைத்தன. அவர் திரும்பி நோக்கி எழுந்து பறந்த தாடியை தலையை அசைத்து பின்னால் தள்ளி முதிய உடலின் நடுக்கத்துடன் நகைத்து “வருக! இன்று பிறிதொரு சிறுமைந்தனின் குருதியுடன் பாடிவீடு மீளப்போகிறேன் போலும்!” என்றார். “பார்ப்போம், பிதாமகரே. என்றும் முதியதை இளையது வெல்வதே காட்டின் நெறி” என்றான் அபிமன்யூ. பீஷ்மர் சிறுவனின் குதலைப்பேச்சை மகிழ்ந்து செவிகொள்பவர் என சிரித்து “தொன்மையானவை அறங்கள். அவையே வெல்லும்…” என்றார். “வருக!” என கைகாட்டினார். அபிமன்யூ “இன்று இவரை கொல்வேன்… இந்தச் சிரிப்பைக் கண்டபின் பாடிவீடு மீண்டால் நான் ஆணே அல்ல” என்றான்.
அபிமன்யூவின் தொலையம்புகள் பீஷ்மரின் தலைக்குமேல் எழுந்து பறந்து வளைந்து விழுந்து அவருக்குப் பின்னால் பீமனின் படைகளுக்கும் அப்பால் பொருதிக்கொண்டிருந்த சகுனியின் படைவீரர்களை கொன்றன. விழியோட்டியபோது ஒரு அம்புகூட வீணாவதில்லை என்று கண்டு யுயுத்ஸு அவன் அம்புகளை வெறுமனே பெய்யவில்லை, குறிநோக்கியே எய்கிறான் என உணர்ந்தான். எவ்வண்ணம் என திகைத்ததுமே ஒரு வீரன் வீழ்ந்தான். உடன் பிறிதொருவன். மறுகணமே இன்னொருவன். அபிமன்யூ கவசங்களோ தேர்முகடுகளோ ஒளிவிட்டுத் திரும்பும் மின்னலை மறுகணம் அறைகிறான் என்று தெரிந்தது. ஓர் அம்பு அங்கே சென்றதும் பிறிதொரு வில்லில் இருந்து என இன்னொரு அம்பு பீஷ்மரை நோக்கி சென்றது. “ஆம், இவனே இருகைவில்லவன்… தந்தையைக் கடந்தவன். உடல் விழியாக்கி கைகளை உளமாக்கி தன்னை எச்சமின்றி வில்லென்று மாற்றிக்கொள்பவன்…” என்று யுயுத்ஸு எண்ணினான். “பெருவில்லவன். தேவர்களாலும் கந்தர்வர்களாலும் விரும்பப்படுபவன்!” மறுகணம் அவன் நெஞ்சு பதைத்தது. அக்கணம் அவன் தெளிவுறக் கண்டான். இவனை தேவர்கள் கொண்டுசெல்வார்கள். களத்தில் அபிமன்யூ விழுந்துகிடப்பதை நேர்விழியால் என அவன் கண்டான்.
யுயுத்ஸு “இளவரசே, இது காடல்ல, களம். இங்கு போரை நிகழ்த்துபவை மனிதர்களல்ல. படைக்கலங்களும் அவற்றை ஆளும் தெய்வங்களும்தான்” என்றான். “பேசவேண்டாம், முன் செல்க!” என்று அபிமன்யூ கூவினான். “அவரை சென்றறையவேண்டும் என் அம்புகள்… அவர் நெஞ்சுக்கவசத்தை பிளக்கும் விசை கூடவேண்டும் அவற்றில்.” யுயுத்ஸு தேரை மீண்டும் அணுக்கமாக கொண்டு சென்றான். ஒவ்வொரு அம்பும் சிறுத்தை என உறுமும் அண்மை. அம்பு செல்லும் காற்றில் செவிமடல் குளிரும் அண்மை. அவன் பீஷ்மரின் கண்களை அருகிலென கண்டான். அவை சிவந்திருந்தன. காமத்தில் சிவந்த பெண்விழிகள்போல. அவர் கொள்ளும் உடலுச்சங்கள் இவைதானா? அனைத்தையும் உதறி ஆயிரம் படியிறங்கி வந்து நின்று குருதியாடி களிவெறிகொள்கிறாரா? பிதாமகரே, இங்கிருந்து எப்படி மீள்வீர்கள் என அவன் உள்ளம் கூவியது. அவரை வெவ்வேறு அவைகளில் கண்ட நினைவுகள் ஓடின. அவரல்ல இவர். அந்த ஒவ்வொரு பீஷ்மரிலிருந்தும் அவர் சேர்த்து கரந்து வைத்த ஒன்று. ஒவ்வொரு முறையும் நிகழாமல் அவர் அப்பால் கடத்திய ஒன்று.
பீஷ்மரும் அபிமன்யூவும் கணமொழியா அம்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அம்புகளின் ஓசை பாறைகளை அலைத்து சரிந்து பரந்தொழுகும் அருவி போலவும் நடுவே பாறையொன்றில் நின்று அதை கேட்டுக்கொண்டிருப்பது போலவும் யுயுத்ஸு உணர்ந்தான். பீஷ்மரின் அம்புகளின் திசை கணித்து அதற்கேற்ப தேரை திருப்பினான். அவன் திருப்பும் திசை கணித்து அதற்கேற்ப அம்பு செலுத்தினான் அபிமன்யூ. அபிமன்யூவின் உளம் செல்லும் வழிகளை அவனால் உய்த்துணர முடியவில்லை. அவன் வெறிக்கூச்சலிட்டபடி, நகைத்தபடி போரிட்டான். வஞ்சமோ விழைவோ இல்லாதபோது போர் வெறும் விளையாட்டென்று ஆகிவிடுவதை யுயுத்ஸு கண்டான். விளையாட்டில் வெற்றி ஒரு பெருங்களிப்பு, ஆனால் தோல்வி இழப்பல்ல. விளையாடுபவர்களே மாவீரர்கள். மறுபக்கம் பீஷ்மரும் விளையாடுகிறார். அவருக்கும் அடையவோ இழக்கவோ ஏதுமில்லை. அம்புகளின் ஆடலன்றி வேறேதுமில்லை இப்போர்.
அபிமன்யூவின் அம்பு ஒன்று பீஷ்மரின் தலைக்கவசத்தை அறைய அவர் நிலைதடுமாறியபோது அவர் தோள்கவசத்தை உடைத்தது இன்னொரு அம்பு. “ஆம், அதை எண்ணிக் கொள்க! தந்தை அல்ல இத்தனயன்” என்று அவன் கூவினான். அர்ஜுனன் தோற்றுப் பின்னகர்ந்ததே அபிமன்யூவை முன்னகர்ந்து சென்று வென்றுகாட்டவேண்டுமென்று துடிப்பு கொள்ளச் செய்கிறதென்று யுயுத்ஸு அப்போதுதான் உணர்ந்தான். அவன் கொள்ளும் அந்த விசை பீஷ்மருக்கு மட்டுமல்ல அர்ஜுனனுக்கும் எதிரானது. வில்லேந்தி நின்றிருப்பவன் களம்கண்டு முதிர்ந்த பிறிதொரு அர்ஜுனன்.
அவன் உள்ளம் வியப்பால் அலைக்கழிந்தது. ஒரு போர்க்களம் எத்தனை ஆயிரம் வாழ்வுத்தருணங்களால் ஆனது! எத்தனை கோடி உளக்கணக்குகள் முடிச்சவிழ்வது! அவன் விழிகள் அம்புக்கு திசைதேர்ந்து கைகளுக்கு ஆணையிட, கடிவாளங்கள் தறியின் நாடாக்களென ஓட, தேர் போர்க்களத்தை தானே புரிந்துகொண்டதைப்போல விலகியும் பாய்ந்தும் பின்னகர்ந்தும் பொருத, அப்பாலிருந்து அவன் அனைத்தையும் வியந்து நோக்கிக்கொண்டிருந்தான். வாழ்வின் பெருவெளி முழுக்க ஒவ்வொரு தருணத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கும் முடிவிலாப் போரின் உச்சங்கள் மட்டுமேயான ஒரு வெளி இக்குருக்ஷேத்ரம். தந்தையர் தனயரை, மைந்தர் மூதாதையரை, உடன்பிறந்தார் மறுகுருதியினரை எதிர்கொள்ளும் களம். தன்னைத்தானே பிளந்து பூசலிடும் தளம்.
அபிமன்யூவின் விரைவும் ஒரு கணமும் சலிக்காத உளவிசையும் அவனை திகைக்கச் செய்தது. அர்ஜுனன் மெய்த்தேடலின்றி, காமமின்றி வில்லவன் மட்டுமென்றே எழுந்ததுபோல. பீஷ்மரின் முகத்திலும் அந்தத் திகைப்பையும் பின் மகிழ்ச்சியையும் அவன் கண்டான். பீஷ்மர் அவன் கவசங்களை உடைத்தார். அவன் வில்லையும் மும்முறை சிதறடித்தார். ஆடியில் பாவை மாறும் விரைவுடன் அவன் கவசம் மாற்றிக்கொண்டான். உலைஎரியில் பொறிச்சிதறல் என அவனிடமிருந்து எழுந்தன அம்புகள். முதலில் விளையாட்டென அவனை எதிர்கொண்டார் பீஷ்மர். மறுபக்கம் சுருதகீர்த்தி இணையான விரைவுடன் அவரை தாக்க இரு விழிகளும் இரு திசைக்குமென அளித்து நின்று வில்லாடினார். பின்பக்கம் சாத்யகியின் படைகளை அவருடைய அணுக்கப்போர்வீரர்களில் பாதிப்பேர் எதிர்கொண்டனர். சாத்யகி பீஷ்மரை அம்புதொடும் தொலைவுக்கு வந்தடையவில்லை. அவன் அங்கே வந்துவிட்டால் அவர் தணிந்தேயாகவேண்டும். ஆனால் அவர் அதை எண்ணியதாகத் தெரியவில்லை.
அபிமன்யூ பீஷ்மரின் கவசங்களை உடைத்தான். அது நிகழ்ந்த பின்னரே நெஞ்சு அதிர அது எவ்வாறு நிகழ்ந்ததென்று யுயுத்ஸு எண்ணினான். தந்தை உடைத்து செல்ல இயலாத பெருஞ்சுவரை தனயன் திறந்திருக்கிறான். பிறிதொரு முறை அம்பெய்து அபிமன்யூ பீஷ்மரின் தொடைக்கவசத்தை உடைத்தபோதுதான் என்ன நிகழ்கிறதென்று அவன் உளம் தெளிந்தான். முதலில் பீஷ்மர் அவனுக்கு இடம் கொடுக்கிறார் என்று அவனுக்கு தோன்றியது. ஆனால் அவ்விழிகளில் எழுந்த சினம் அவ்வாறல்ல என்று காட்டியது. முதல்முறையாக பீஷ்மர் வாய்திறந்து உறுமலோசை எழுப்பினார். மீண்டுமொரு அம்பு அவர் தோள்கவசத்தை உடைக்க அவர் இமைப்பதற்குள் தோளில் அபிமன்யூவின் அம்பு தைத்தது. பாண்டவப் படைகளில் இருந்து அபிமன்யூவுக்கு வாழ்த்தொலியும் வெற்றிக்கூச்சல்களும் எழுந்தன.
யுயுத்ஸுவால் திரும்பி அபிமன்யூவை பார்க்க இயலவில்லை. பீஷ்மர் நீளம்பு ஒன்றால் அபிமன்யூவை தாக்க அவன் தேரை திருப்பினான். தேர்க்குவடின்மேல் அது அறைந்த விசை அவன் உடலிலேயே அதிர்ந்தது. சிம்புகளாகத் தெறித்த தேர்முகடின் மேல் இன்னொரு அம்பு அறைந்து அபிமன்யூவின் தேரை கூரையற்றதாக்கியது. தன் தலைக்கு வந்த அம்பை தடுக்க யுயுத்ஸு நுகத்தின்மேலேயே மல்லாந்து படுத்தான். அண்ணாந்த விழிகளுக்கு மேல் சிறகதிர்வோசையுடன் சென்றது அம்பு. அடுத்த அம்பில் தேர்த்தூண் சிதறி சிம்புகள் அவன் முகத்தின்மேல் தெறித்தன. அம்புகளுக்கு ஒதுங்கி நிலம்படிய தவழ்ந்தெழுந்த அபிமன்யூ நாண் உறும, தலைமயிர் அசையும் விசையுடன் பேரம்பு ஒன்றைச் செலுத்தி பீஷ்மரின் தேர்த்தூணை உடைத்தான். பீஷ்மரின் அம்பு புலியென உறுமியபடி வந்து அபிமன்யூவின் புரவியை தாக்கியது. இடப்பக்கப் புரவியின் கழுத்தறுந்து தொங்க பிறபுரவிகளின் நடை சிதறி தேர் வலமிழுத்தது. யுயுத்ஸு வாளை உருவி கழுத்தறுந்து கவிழ்த்த தோல்பை என குருதி கொப்பளிக்க தொங்கி உதறிக்கொண்டிருந்த புரவியின் கடிவாளத்தை அறுத்து அதே விசையில் பிற புரவிகளின் கடிவாளங்களை இழுத்து திருப்பி இடம்திருப்பினான். அவன் எண்ணியதை உணர்ந்துகொண்ட ஆறு புரவிகளும் விழுந்த புரவியின் இடத்தை நிரப்பிக்கொண்டு தேரை நிலைவிசை கொள்ளச்செய்தன.
அபிமன்யூ தேரைப்பற்றி உணரவேயில்லை. தேவர்களின் விண்ணூர்தியில் இருப்பவன்போல அவன் அம்புகளை பெய்தான். பீஷ்மர் நடுங்கிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். முதுமைக்குரிய முறையில் தாடை விழுந்து வாய் திறந்திருந்தது. அவருடைய அம்புகள் தன் தலைக்குமேல் பறந்து செல்வதை உணர்ந்து அவன் செவிகூர்ந்தபோது பின்னால் எழுந்த ஓசையிலிருந்து அபிமன்யூ என்ன செய்கிறான் என்று புரிந்தது. நீளம்பு தொடுத்த அவ்விசையிலேயே தேர்த்தட்டில் ஒருக்களித்து விழுந்து படுத்தபடியே மேலும் அம்புகளை விடுத்தான். அது விற்போரின் முறைமை அன்று, கிராதரும் நிஷாதரும் கொள்ளும் படைசூழ்ச்சி. அதை அவன் செய்யக்கூடுமென்று பிதாமகர் எண்ணியிருக்கவில்லை என்பதே அவ்வெற்றிகளுக்கு வழிவகுத்ததென்று தெரிந்தது.
யுயுத்ஸு ஒருகணம் சலிப்புடன் தலையசைத்து பற்களை கடித்தான். அவன் கைகளில் கடிவாளம் தொய்ந்தது. அவ்விடைவெளியில் பீஷ்மரின் அம்பு வந்து அவன் நெஞ்சக்கவசத்தை பிளந்தது. யுயுத்ஸு அடுத்த அம்பு வருவதற்குள் அமரபீடத்திலிருந்து பாய்ந்து நுகத்தின்மேல் உடலொட்டி படுத்தான். கடிவாளத்தை விடாமல் தேரை செலுத்தியபடி எழுந்து அமர்ந்து கீழிருந்து கவசத்தை எடுத்து தலைவழியாக அணிந்தான். அடுத்த அம்பு கூகைபோல் ஒலியெழுப்பி வந்து அபிமன்யூவை அறைந்தது. அவன் நெஞ்சுக்கவசத்தின் துண்டுகள் யுயுத்ஸுவின் தலைமேல் விழுந்தன. கவசத்தை எடுத்தணிந்தபடி “செல்க! செல்க!” என்று அபிமன்யூ கூச்சலிட்டான். யுயுத்ஸு தன் வலப்புரவியின் கடிவாளத்தை இழுத்து தேரை திருப்ப “மேற்செல்க! மேற்செல்க!” என்று அபிமன்யூ கூவினான்.
மறுபக்கம் அணுகி வந்துவிட்ட சுருதகீர்த்தியின் அம்புகள் பீஷ்மரை தாக்கின. அவர் சுருதகீர்த்தியின் கவசங்களை உடைத்து அவன் தொடையில் அம்பை தறைத்தார். அபிமன்யூவின் மீறல்களை கருத்தில்கொண்ட பின்னர் பீஷ்மரின் உடலை அவனுடைய ஒரு அம்புகூட சென்று தொட இயலவில்லை. ஆனால் பீஷ்மரின் முன்நகர்வை அவர்களிருவரும் சேர்ந்து நிறுத்திவிட முடிந்தது. பின்னிருந்து சாத்யகியின் படை வந்து பீஷ்மரை சூழ்ந்துகொண்டது. சாத்யகியின் அம்புகள் பட்டு பீஷ்மரின் அணுக்க வில்லவர் அனைவரும் சரிந்தனர். அவரும் நான்கு தேர்வில்லவரும் மட்டும் படைநடுவே எஞ்சினர். சாத்யகியின் அம்பு வந்து பீஷ்மரின் பின் தோளை அறைய திரும்பி அவனை தாக்கி பின்னடையச் செய்தபின் பீஷ்மர் மூன்று பக்கமும் சுழன்று வில்தொடுத்தார். விஸ்வசேனர் நிலையுணர்ந்து தேரை பின்செலுத்தத் தொடங்கினார்.
அபிமன்யூ “துரத்திச் செல்க! துரத்திச் செல்க பிதாமகரை! இன்று கொல்லாமல் திரும்ப மாட்டேன்! துரத்திச் செல்க!” என்று ஆர்ப்பரித்தான். யுயுத்ஸு “பின்பக்கம் சாத்யகியின் படை பிளந்துகொண்டிருக்கிறது, இளவரசே. இன்னும் சற்றுப்பொழுதில் துரியோதனரும் சகுனியும் வென்று முன்வருவார்கள்” என்றான். செவியற்றவனாக அபிமன்யூ “செல்க… பின்செல்க!” என்று கூச்சலிட்டான். “இளவரசே, அங்கிருப்பது கௌரவர்களின் முழுப் படை. சாத்யகியும் பீமசேனரும் நெடும்பொழுது எதிர்நிற்கவியலாது. பீஷ்ம பிதாமகர் திரும்பி சாத்யகியை தாக்கத் தொடங்கினால் அவர் இருபுறமும் தாக்கப்படுவார்” என்று எரிச்சலுடன் சொன்னான். “பிதாமகர் திரும்பி தன் மையப்படை நோக்கி செல்கிறார். அவரை தொடர்வது நம்மால் இயலாது.”
ஆனால் அபிமன்யூ பித்தெழுந்த கண்களுடன் வாயில் எச்சில் நுரைக்க “செல்க! பின் தொடர்க!” என்று கூவிக்கொண்டே இருந்தான். “இளவரசே, இதோ நோக்குக! பீமசேனர் கௌரவர்களால் சூழ்ந்துகொள்ளப்பட்டிருக்கிறார்” என்றான் யுயுத்ஸு. “மூடா, பின்னகர்கிறார் என்பதே அவர் ஆற்றல் இழந்திருக்கிறார் என்பதை காட்டுகிறது. செல்வோம்! சென்று அடிப்போம்!” என்றான் அபிமன்யூ. “இல்லை, பிதாமகர் வீண் உணர்ச்சிகளால் போரிடுபவர் அல்ல. இமைக்கணமும் பின்அடி எடுத்துவைக்காமல் நமது படையின் பெருவில்லவர்களை எதிர்கொண்டிருக்கிறார். இப்பெரும்படையை தனிமையில் எதிர்ப்பது வீணென்று உணர்ந்து பின்னடைகிறார். நம்மை கௌரவப் படைகளுக்குள் இழுக்கும் எண்ணமும் இருக்கலாம்” என்று யுயுத்ஸு கூச்சலிட்டான்.
“சொல்லாட நான் விழையவில்லை. முன்செல்க!” என்றபடி அபிமன்யூ பீஷ்மரின் பின்னால் வந்துகொண்டிருந்த அணுக்கவீரர்கள் இருவரை அம்பால் வீழ்த்தினான். அவர்களின் தேர்கள் உடைந்து களத்தில் கிடக்க பீஷ்மரின் தேர் பின்னகர்வது குறைந்தது. விஸ்வசேனர் தேரை பக்கவாட்டில் திருப்பி அரைவட்டமாக ஓட்டி கௌரவப் படைகளை நோக்கி கொண்டுசென்றார். “செல்க! பின்தொடர்க!” என்றான் அபிமன்யூ. “இளவரசே…” என்று யுயுத்ஸு சொல்லதொடங்குவதற்குள் அபிமன்யூ காலால் அவன் தலையை ஓங்கி மிதித்து “ஆணைக்கு இணங்கு, அறிவிலி… இன்றேல் இப்போதே உன் தலைகொய்வேன்!” என்றான். கையில் சவுக்கு எழ உளம்பொங்கிய யுயுத்ஸு உடனே தன்னை வென்று “ஆணை!” என்றான்.
அபிமன்யூவின் தேர் பீஷ்மரை துரத்தியது. “ஓடுகிறார்! தப்பி ஓடுகிறார்! பிடியுங்கள்! பிடியுங்கள் கிழவரை!” என்று அபிமன்யூ கூவினான். தன் சங்கை எடுத்து மும்முறை ஒலித்து “வெற்றி! பீஷ்மரை புறமுதுகிட்டு ஓடச்செய்துவிட்டேன்! வெற்றி!” என்று முழக்கினான். அவனைத் தொடர்ந்துவந்த வீரர்கள் வில்களையும் அம்புகளையும் தூக்கி “பீஷ்மரை புறமுதுகுகண்ட பாண்டவ மைந்தர் வெல்க! மின்கொடி வெல்க! வெல்க குருகுலம்!” என்று முழக்கமிட்டனர். முரசுகள் வெற்றிமுழக்கமிடத் தொடங்க பாண்டவப் படை வில்களையும் வேல்களையும் வானில் தூக்கி எறிந்து கூச்சலிட்டது. அபிமன்யூ “வென்றேன்! ஆம், நான் வென்றேன்! இனி கொன்றே தீர்வேன்! தொடர்க! தொடர்க!” என்றான்.
யுயுத்ஸு பற்களைக் கடித்து “இளவரசே, நாம் அவரை வெல்லவில்லை. பொய்ச்செய்தியை கூறுவது அரசகுடி வீரர்களுக்கு அழகல்ல” என்றான். அபிமன்யூ கூரம்பு ஒன்றை ஓங்கியபடி “நோக்குக, மூடா! அவர் யாரை அஞ்சி ஓடுகிறார் என்று பார்! அணுவிடை நகராது எந்தையை எதிர்கொண்டவர். புவியின் பெருவில்லவரை வென்று துரத்தியவர் ஏன் பின் திரும்பி ஓடுகிறார்?” என்றான். “போரில் பின்னடைவது அறிவும் தொடர்வது மடமையும் ஆகும் தருணங்களுண்டு” என்றான் யுயுத்ஸு. “வாயை மூடு… இக்கணமே உன்னை கொல்வேன்!” என அம்பை ஓங்கினான் அபிமன்யூ. “கொல்க!” என யுயுத்ஸு திரும்பி நெஞ்சுகாட்டினான். அபிமன்யூ ஆற்றாமையும் எரிச்சலும் விழிநீராக வழிய “செல்க! செல்க! செல்க!” என்று உளறலாக கூச்சலிட்டான்.
யுயுத்ஸு சலிப்புடன் தலையை அசைத்தபடி தேரை பீஷ்மரின் தேரை பின்தொடர்ந்து செலுத்தத் தொடங்கினான். உடைந்து கிடந்த தேர்ச்சகடங்களின் மீதேறி சடலங்களை உடைத்துச் சென்றது அத்தேர். அப்பால் பீமன் சகுனியாலும் சலனாலும் இருபுறமும் நெருக்கப்படுவதை கண்டான். அவன் நேர்முன்னால் கௌரவர் பதினெண்மர் தங்கள் நூற்றுக்கு மேற்பட்ட மைந்தர்களுடன் எதிர்நின்றனர். “இளவரசே, பீமசேனருக்கு பின்னால் பீஷ்மர் சென்றுவிடலாகாது. அவரை தடுப்பதொன்றே நாம் செய்யவேண்டியது” என்றான் யுயுத்ஸு. “ஆம், அவரை கொல்வோம்” என்றபடி அபிமன்யூ பீஷ்மரைத் தொடர்ந்து சென்று அம்புகளை செலுத்தினான். அவன் அம்புகள் அவரை எட்டவில்லை. “விரைக! அம்பெல்லைகளுக்குள் அவர் இப்போதே வந்துவிடவேண்டும். விரைக!” என்று அபிமன்யூ ஆணையிட்டான்.
மறுபுறம் சுருதகீர்த்தி பீஷ்மரின் வழியில் குறுக்கே புகுந்து தடுத்தான். பீஷ்மர் அவனை எதிர்கொண்டு தயங்கியபோது அபிமன்யூ மீண்டும் அவரை அம்பு எல்லைக்குள் கொண்டுவந்தான். பிறிதொரு போர் தொடங்கியது. பீமன் சலனையும் சகுனியையும் அம்புகளால் எதிர்கொண்டபடி போரிடுவதை யுயுத்ஸு கண்டான். ஒருகணமும் அஞ்சாத அவன் விசை அவர்களை அகத்துள் தயங்கச் செய்தது. அதை அவர்கள் தங்களிடமிருந்தே மறைத்தாலும் தொலைவில் அவர்களின் மொத்த அசைவில் அது தெளிவாகவே தெரிந்தது. ஒவ்வொரு கணமாக, ஒவ்வொரு அம்பாக அவர்கள் பின்னகர்ந்துகொண்டிருந்தார்கள். பின்னகரத் தொடங்கியதுமே முன்நோக்கும் உள்ளம் கூரழிய பீமனின் அம்புகளால் கௌரவ மைந்தர் விழத் தொடங்கினர். சமனும், சார்த்ரனும், குஜனும், உத்பவனும் தேர்த்தட்டிலிருந்து அலறி விழுந்தனர்.
மைந்தர் சாவதைக் கண்ட துர்முகன் வெறிகொண்டு நெஞ்சிலறைந்து “கொல்க! அவனை கொல்க!” என்று அலறினான். விருத்தனும் நிர்மதனும் காஞ்சனனும் காகேயனும் உதகனும் மூர்த்தனும் விழுந்தனர். அஞ்சிக் கூச்சலிட்டபடி கௌரவ மைந்தர் ஒருவரோடொருவர் இணைந்து திரண்டனர். பீமன் தேரிலிருந்து தாவி யானையொன்றின் கழுத்துச்சரடில் தொற்றிக்கொண்டான். அவன்மேல் அம்பு தொடுத்தவர்களை யானையின் மறுபக்கம் இருந்த பெருங்கவசம் தடுத்தது. கௌரவ மைந்தரின் தேர்களின் அருகே சென்றதும் அவன் சங்கிலி கட்டப்பட்ட கதையை வீசி அவர்களின் தலைகளை உடைத்தான். குருதி சிதற தலை உடைந்து அவர்கள் தேர்களிலிருந்து விழுந்து பின் மறைந்தனர். துச்சலனும் துர்முகனும் துர்மதனும் அலறினர். “மைந்தர்களை காத்து நில்லுங்கள்… மைந்தர்களை காத்து நில்லுங்கள்!” என்று துரியோதனன் அலறினான்.
துர்மதனையும் துச்சலனையும் பீமன் கதையால் எதிர்கொண்டான். இருவரும் சிறிதுநேரம்கூட அவனுக்கு எதிர்நிற்க இயலவில்லை. தோளில் அறை விழ துர்மதன் தேரிலிருந்து விழுந்தான். நெஞ்சுக்கவசம் நொறுங்க விழுந்த அறையால் துச்சலன் தேர்த்தட்டில் மல்லாந்தான். துர்முகன் அஞ்சி பின்னடைந்தான். கௌரவ மைந்தர் பின்னடைந்து விலக அவர்களை பீமன் யானைமேல் துரத்திச் சென்றான். தேர்கள் சகடம் சிக்கி நிற்க ஆனகனையும் குரகனையும் உதரனையும் குண்டனையும் சீர்ஷனையும் அறைந்து கொன்றான். அவர்களின் குருதியும் மூளைச்சேறும் அவன்மேல் தெறித்து கவசங்களில் கொழுப்புபடிய வழிந்தன. தலையை உதறி குருதித்துளிகளை தெறிக்கச் செய்து அவன் நெஞ்சிலறைந்தபடி வெறிக்கூச்சலெழுப்பினான்.
பீஷ்மர் சுருதகீர்த்தியின் அணுக்கத்தேர்வீரர்கள் எழுவரை கொன்றார். அத்தேர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி கவிழ சுருதகீர்த்தியின் தேர் முன்னகர முடியாமல் நின்றது. அபிமன்யூ “தொடர்க! தொடர்க!” என்று அலறினான். பீஷ்மரின் அம்பு அவன் தலைக்கவசத்தை சிதறடித்தது. அவன் நெஞ்சுக்கவசம் சிதற அம்பொன்று அவனை அறைந்து தேர்த்தட்டில் தள்ளியது. யுயுத்ஸு தன் தேரைத் திருப்பி பாண்டவப் படைகளுக்குள் கொண்டு சென்றான். அங்கு நின்ற பாகன் ஒருவனிடம் “விரைக! மருத்துவ நிலைக்கு செல்லட்டும் தேர்” என்றபடி பாய்ந்து புரவியொன்றில் ஏறிக்கொண்டான். பீஷ்மர் பீமனை நோக்கி பெரும்சினத்துடன் செல்வதை கண்டான். அவன் திரும்பி அவர் வருவதை பார்த்தான். என்ன நிகழ்கிறது என்பதை உணராத பித்தன் போலிருந்தான்.
கையில் சங்கிலியில் கட்டிய கதாயுதத்துடன் வேல்பட்டுச் சரிந்த யானை மேலிருந்து பாய்ந்து வேறு யானையொன்றின் மேல் ஏறிக்கொண்டான். கதாயுதம் காற்றில் இரும்புகுண்டு சீறிப்பறக்க அவனைச் சுற்றி சுழன்றது. தேர்க்குவடுகள் உடைந்தன, தேர் மகுடங்கள் அறைபட்டு தெறித்தன. சுஜாதனின் நெஞ்சை கதை அறைந்து உடைத்து மூக்கிலும் காதிலும் வாயிலும் குருதி பீறிட அவனை வீழ்த்தியது. கௌரவ மைந்தர் சதமனும் அக்ஷனும் விரூபனும் விகிர்தனும் நெஞ்சுடைந்து களம்பட்டார்கள். “மைந்தர் பின்னகர்க! மைந்தர் பின்னகர்க! மைந்தரைச் சூழ்ந்து காத்துக்கொள்க!” என முரசு அலறியது.
பீமனின் குருதிக்கோலம் கண்டு சகுனி திகைத்து வில்தாழ்த்தி தேரில் நிற்க சலன் கால் தளர்ந்து அமர்ந்தான். யானை மேலிருந்து தேர்மேல் குதித்த பீமன் நெஞ்சுடைந்து கிடந்த கௌரவ மைந்தன் கஜபாகுவினின் குருதியை இரு கைகளாலும் அள்ளி தன் முகத்திலும் நெஞ்சிலும் அறைந்தபடி வீறிட்டான். பீஷ்மர் திரும்பி அவனை நோக்கியதும் சீற்றம் கொண்டு உறுமியபடி தேரைத் திருப்பி அவனை நோக்கி செல்ல ஆணையிட்டார். பீமன் பீஷ்மரை நோக்கி வாய் வெறித்து பற்கள் தெரிய “வருக! வருக!” என்று கூவியபடி தேர்த்தட்டிலிருந்த வில்லை எடுத்து நாணேற்றினான். அக்கணம் ஊடே புகுந்த சாத்யகியின் அம்புபட்டு விஸ்வசேனர் தலையறுந்து அமரபீடத்தில் அசைந்து பக்கவாட்டில் விழுந்தார். தோலிணைப்பில் தொங்கிய அவருடைய தலை தேர்பீடத்தில் அறைந்து கீழே தொங்கியது.
பீஷ்மர் தேரிலிருந்து பாய்ந்து புரவிமேல் கால்வைத்து ஏறி பறவையெனப் பறந்து பிறிதொரு தேரின் விளிம்பில் தொற்றி வில்பூட்டி நாணிழுத்தார். பீமன் அவர்மேல் அம்புகளை சீறவைத்தபடி நேர்முன்னால் வந்தான். பீஷ்மரின் வில் சீற்றத்துடன் மேலெழுவதை யுயுத்ஸு கண்டான். ஆனால் மறுகணம் அவர் தோள் தளர்ந்து வில் தாழ்த்தினார். கையிலிருந்த அம்பு செயலற்று தழைய பீஷ்மர் தேர்த்தட்டில் அசையாது நின்றிருந்தார்.