கம்போடியா- நிறைவுப்பகுதி, சுபஸ்ரீ

IMG_6607

க்பால் ஸ்பீன்

26/07/18 – நாகரீகங்களின் வளர்ச்சியில் நீர்வளத்தின் பங்கு எப்போதுமே முக்கியமானதெனினும் கம்போடியாவின் கோவில்களில் நீர் மிகவும்முக்கியமான இடம் பெற்றிருக்கிறது. அனைத்து ஆலய வளாகங்களும், தடாகக் கரையிலோ, ஏரியின் மத்தியிலோ, நாற்புற அகழி சூழவோ,அல்லது கோவில்களுக்குள்ளேயே பல குளங்களுடனோதான் அமைக்கப்பட்டிருக்கின்றன.  கோவில்கள் மட்டுமன்றி க்மெரின் காலத்தில் மிகசெறிவான கால்வாய் இணைப்புகளும் பாசன முறைகளும் நிகழ்ந்திருக்கின்றன. டோன்லே சாப் எனும் மாபெரும் நன்னீர் ஏரி தவிர, இதர பலஏரிகளும் குளங்களும் இருந்திருக்கின்றன. இவற்றின் தொடர்ச்சியாக முதல் சூரியவர்மன் காலத்தில் தொடங்கி இரண்டாம் உதயாதித்தவர்மன் காலம் வரை நூற்றுக்கணக்கான லிங்கங்கள் சியாம் ரீப் நதியின் கிளை நதியானஸ்தங் ரோஸேய்சிற்றாற்றில் நிறுவப்பட்டிருக்கின்றன. பண்டே ஸ்ராயிலிருந்து மேலும் சிலமைல்கல் தொலைவில் அமைந்தக்பால் ஸ்பீன்எனும் குலேன் மலைகளைச் சார்ந்த ஒரு மலையில் இருக்கிறது இந்த ஆற்றுப் படுகை. சிறுவனத்தின் வழி மலைப்பாதையில் முக்கால் மணி நேரம் ஏறிச் செல்லும் பாதை. அதிக ஆளரவமில்லாது, வெயில் வேளையிலும் வெப்பம்தகிக்காது ஏறிவிட, மேலே ஆற்றின் சலசலப்புக்கு அடியில் அமிழ்ந்திருக்கின்றன தரையோடு பதிந்தது போல தட்டையான லிங்கங்கள்.

 20180726_105733

நதி வளைந்து செல்லும் இருமருங்கிலும் ஆங்காங்கே சிற்பங்கள். பாற்கடல் உறங்கும் பெருமான் பல இடங்களில் தெரிகிறார். சிறிது தூரம் மண்ணுக்கு அடியில் மறைந்தோடும் ரகசிய வாகினி மீண்டும் ஒரு சிற்றருவியென வெளிவருகிறாள். கலைகளின் மீது தவழ்ந்தோடும் நதிஅங்கோர் அருகில் ஸியாம் ரீப் நதியில் சென்று கலந்து அங்குள்ள அகழிகளையும் ஏரிகளையும் நிறைக்கிறது. 

ஐந்து நாட்களில் இத்தனை கோவில்களைப் பார்த்த பிறகு இதைக் கால வரிசைப்படுத்தி மன்னர் குல நிரையோடு புரிந்து கொள்வது க்மெர் கலையின் வளர்ச்சியையும், உச்சத்தையும் அடையாளம் காண உதவக்கூடும் என ஏற்கனவே படித்த சில புத்தகங்களையும், நேரில் கண்டநினைவுகளையும், புகைப்படங்களை மீண்டும் பார்த்தும், மனதின் அடுக்குகளில் கீழே சென்றுவிட்ட காட்சிகளை மேலே கொணர்ந்தும் எழுத முயற்சித்திருக்கிறேன்.

20180726_105836

கெமெர் மன்னர்கள் மற்றும் கோவில்களின் கால வரிசை  

  • கிமு 15 – 2 ஆம் நூற்றாண்டுகம்போடியாவின் தொல் வரலாற்றுப் பின்புலம் அறியப்படவில்லை எனினும், வெண்கலக் காலகட்டத்துப்பொருட்கள் பல இன்றைய கம்போடியப் பகுதிகளில் கிடைத்துள்ளன. இரும்பு யுகத்தின் இறுதியிலேயே டோன்லே சாப் மற்றும் மேகாங்நதி தீரத்திலும் இன்றைய கம்போடிய, வியட்நாம் கடற்கரைகளிலும் வணிகர்கள் குடியேறியிருக்கிறார்கள். 
  • கிபி 1 – 8ஆம் நூற்றாண்டுஇந்தக் காலகட்டத்தில் தெற்கு பர்மா, தாய்லாந்து, மற்றும் இன்றைய வியட்நாமின் கடற்துறைகளின்வழியே இரு பெரும் மதங்களான இந்து வைதீக மதமும், பௌத்த மதமும் உள்நுழைந்திருக்கின்றன. அங்கோருக்கு முந்தையகாலகட்டம்ஃபுனான்என்று சீனக் குறிப்புகளில் அழைக்கப்படும் வர்த்தக அமைப்பு இப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. நகரஅமைப்புகளின் கூட்டமைப்பாகியசென்லாவணிக துறைமுகங்களை நிர்வகித்து வந்திருக்கின்றது. இப்பகுதியின் அரசுகளில் ஆயிரம்வருடங்களுக்கு மேலாக மொழி (பாலி மற்றும் சமஸ்கிருதம்), மதம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளில் பாரதத்தின் ஆளுமைஇருந்திருக்கிறது. குறிப்பாக ராமாயணமும் மகாபாரதமும் அங்கு சென்று மிக விரிவாகக் கலைகளில் வெளிப்பட்டிருக்கின்றன. 

20180726_105956

ஆசியாவின் வணிகப் பாதைக்கு அணுக்கமாக இருந்ததும் கடல் வாணிபத்தின் அங்கமாக இருந்ததும் ஏற்கனவே நீர்வளம் நிறைந்தஇப்பகுதியில் பேரரசு ஒன்று உருவாவதற்கு அடிகோலியிருக்கலாம். எனில் கடற்புறங்களிலிருந்து விலகி மைய நிலத்திலேயே இதன்தலைநகரங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஸியாம் என்றழைக்கப்பட்ட இன்றைய தாய்லாந்து மற்றும் ஜாவாவின் ஆதிக்கமும் மிகுதியாகஇருந்திருக்கிறது. இவர்களது புராணங்களின்படி கௌண்டியர் எனும் அந்தணருக்கும் நாக இளவரசி சோமைக்கும் பிறந்த குலம்காம்போஜர்களின் அரசகுலம். 

  • கிபி 9-13ஆம் நூற்றாண்டுஅங்கோர் காலகட்டம் (அடிக்கோடிடப்பட்டிருப்பவை நாம் இந்தப் பயணத்தில் பார்த்த ஆலயங்கள்) 
    • முதலாம் பவவர்மன்ஃப்ணோம் தா ஆலயம்
    • முதலாம் ஈசானவர்மன்சம்போர் ப்ரே குக் ஆலயம்
    • முதலாம் ஜெயவர்மன்ப்ரே க்மெங் ஆலயம்
    • ஏற்கனவே மேன்மையடைந்திருந்த ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்திலிருந்து வந்ததாகக் கருதப்படும் இரண்டாம் ஜெயவர்மன் கிபி 802-ல்மகேந்திர பர்வதம் என்றழைக்கப்பட்ட ப்ணோம் குலேன் மலைகளில் அந்தணர்கள் முன்னிலையில், அரசனை இறையெனப்பார்க்கும்தேவராஜன்எனும் கருத்துருவாக்கத்தின் தொடக்கமாக சக்கரவர்த்தியென முடிசூட்டிக்கொண்டான். வைதீக மதமும் வேள்விகளும் அந்தணர் ஆதரவும் பேரரசொன்றை நிறுவ உதவி இருக்கின்றன. அந்தக் காலகட்டம் முதலே பௌத்த மதம் முதன்மை அரச மதமாக இருப்பினும் இந்து மதமும், இந்து தெய்வ வழிபாடுகளும்இணையான இடம் வகுத்திருக்கின்றன. இவனது காலகட்டத்தில் உருவானது ஹரிஹராலயம் (இன்றைய ரோலஸ்,அங்கோருக்குஅருகே). இவனது மறைவுக்கு இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு வடிக்கப்பட்ட ஸ்டோக் காக் தோம் கல்வெட்டுகளில் இரண்டாம் ஜெயவர்மன் குறிப்பிடப்பட்டுள்ளான். 850-ல் இரண்டாம் ஜயவர்மன் மறைவு.
    • மூன்றாம் ஜயவர்மன் (854-877) ஆட்சி குறித்து அதிகக் குறிப்புகள் இல்லை. ஹரிஹராலயம் கோவில்களில் சிலவற்றை (ப்ரசாத்கோக் ப்ரோ) கட்டத் தொடங்கியிருக்கிறான்.
    • கிபி 877-889 முதலாம் இந்திரவர்மன் ஹரிஹராலயத்தை (ரோலஸ் கோவில்கள்) மிகவும் விரிவுபடுத்துவதோடல்லாமல் அங்கோர்நகருக்கு அடிகோலுகிறான். இந்திரதடாகம் எனும் 12,500 அடி நீளமும் 2,600 அடி அகலமும் கொண்ட ஏரியை அமைக்கிறான். இவனதுகாலத்துக்குப் பிறகே இறையென அரசனை நிறுவும் விதமாக ஒவ்வொரு மன்னனும் அரச ஆலயமாக ஒன்றை அமைப்பதும்,முன்னோர்களுக்கென கோவில்கள் எடுப்பதும், போர் வெற்றிகளுக்கென நகரங்களை நிர்மாணிப்பதும், மேரு மலை வடிவத்தில்பேராலயங்கள் எடுப்பதும் தொடங்குகிறது. இவனது குறிப்பிடத்தக்க கோவில்கள்ப்ரே கோ, பேகாங்.
    • கிபி 889-ல் முதலாம் இந்திரவர்மன் மறைவுக்குப் பிறகு வாரிசு மோதலில் யசோவர்மன் வென்று முதலாம் யசோவர்மன் 890-ல்அரசனாகிறான். நூறு பௌத்த மடாலயங்களை இவன் நாடெங்கும் எழுப்பியதாக சொல்கிறார்கள். தனது தந்தை அமைத்த இந்திரதடாகத்தின் மத்தியில் லோலெய் ஆலயம் கட்டுகிறான்.யசோதரபுரம் (அங்கோர்) எனும் புதிய தலைநகரம் எழுந்து வருகிறது.இவனது இதர ஆலயங்கள்ப்ணோம் பகெங்,ப்ணோம் க்ரோம். கிபி 900-ல் இவனது மறைவுக்குப் பிறகு இவனது மைந்தர்கள்முதலாம் ஹர்ஷவர்மனும் இரண்டாம் ஈசானவர்மனும் ஆட்சியமைக்க இயலவில்லை.
    • கிபி928-ல் நான்காம் ஜெயவர்மன் ஆட்சி அமைத்து அங்கோரில் இருந்து ஐம்பத்தாறு மைல் தொலைவில் கோ கெர் எனும்இடத்துக்கு தலைநகரை மாற்றினான். ப்ரசாத் தோம் இவன் எழுப்பிய ஆலயம். இவனுக்குப் பிறகு கிபி 941-ல் வந்த இரண்டாம் ஹர்ஷவர்மன் மூன்று வருடங்களே ஆட்சியிலிருந்தான்.
  • IMG_6533
    • இரண்டாம் ராஜேந்திரவர்மன் கிபி 944-ல் ஆட்சிக்கு வந்து மீண்டும் யசோதரபுரத்துக்கு ஆட்சிக் கட்டிலை மாற்றினான். கிழக்கு மேபான் எனும் தீவுத்திடல் ஆலயத்தையும், ப்ரே ரூப் எனும் அரச ஆலயத்தையும் உருவாக்கினான். சாம் குலத்தை போரில்வென்றான்.
    • கிபி968-ல் இவனது மறைவுக்குப் பிறகு இவனது மகன் ஐந்தாம் ஜயவர்மன் ஆட்சிக்கு வந்தபோது அரசு வலுப்பெற்றிருந்தது. இவனது தந்தை காலத்தில் தொடங்கப்பெற்ற பண்டே ஸ்ராய், டா கியோ எனும் இவனது அரச ஆலயம் இரண்டும் இவனால் நிறைவுபெற்றன. கிபி1000-ல் இவனது மறைவுக்குப் பின் ஒன்பது வருடங்கள் பெரும் பூசல்கள் நிகழ்ந்தன.
    • முதலாம் சூரியவர்மன் (1002-1050) முடிசூடி எல்லைகளை தெற்கு லாவோஸ் வரை விரிவுபடுத்துகிறான். இவனது அரண்மனைவளாகத்துள் பிம்மேனகாஸ் ஆலயத்தை முன்னோர்களுக்கென அமைத்தான். ப்ரே விஹார் இவனது திருப்பணி.
    • இவனது காலத்துக்குப் பிறகு இரண்டாம் உதயாதித்த வர்மன் பாபுவன், மேற்கு மேபான் கோவில்களைக் கட்டினான்.
    • அவனைத் தொடர்ந்த அவனது சகோதரன் மூன்றாம் ஹர்ஷவர்மனும் அதன் பிறகு ஆறாம் ஜெயவர்மனும் குறுகிய காலத்துக்குஅரசாண்டனர். விமயபுரம் (இன்றைய பிமாய்) இவன் உருவாக்கியது.
    • 1113-ல் ஆட்சியை அமைத்த இரண்டாம் சூரியவர்மன் மீண்டும் ஒரு உன்னத காலகட்டத்தைத் தொடங்கி வைத்து அங்கோர் வாட்(1130-50) எழுப்பினான். இது க்மெர் அரசின் உச்சம்.
    • அதன்பிறகு பல வருட நிலையின்மைக்குப் பிறகு நிலையான ஆட்சிக்கு வந்தது ஏழாம் ஜெயவர்மன் (1181-1220). இவனே க்மெர்அரச குலத்தின் மாபெரும் அரசரென அறியப்படுகிறான். இவனது ஆட்சியில் புதிய தலைநகரமாக வாசுகி எல்லையிட்ட அங்கோர்தாம், அதனுள் நிற்கும் முகங்களின் ஆலயமான பேயான், யானைகளின் உப்பரிகை, தொழுநோய் மன்னன் உப்பரிகைஆகியவற்றுடன் எழுந்தது. முககோபுரங்கள் கொண்ட அனைத்து ஆலயங்களும் இவனது ஆட்சிக்காலத்தில் எழுந்தவை. ஜெயதடாகம் எனும் ஏரி, 102 மருத்துவநிலைகள், நான் பீன் ஆலயம், ஸ்ர ஸ்ராங் குளம், மாபெரும் பௌத்த மடாலயமாகிய ப்ரேகான், மர உகிர்களின் ஆலயமாகிய தா ஃப்ரோம், பண்டே க்டாய் என நாங்கள் பார்த்த அனேக ஆலயங்கள் இவனது கலைப்பணி. கிபி1215-ல் ஏழாம் ஜயவர்மன் மறைவு.

 20180726_112419

  • கிபி 13-15ஆம் நூற்றாண்டுபலமுறை நிகழ்ந்த சாம் படையெடுப்புகளில் க்மெர் வலுவிழந்தது. பலமுறை அங்கோர் தாக்கப்பட்டுஇறுதியாக 1431 படையெடுப்பில் பெருமளவில் சிதைக்கப்பட்டது.
  • கிபி 16-19ஆம் நூற்றாண்டுமேலும் பல வீழ்ச்சிகளுக்குப்பிறகு 1528-ல் ஆங் சான் எனும் அரசன் தலைநகரை இன்னும் தெற்கே லோவக்எனும் நகருக்கு மாற்றுகிறார். அங்கோர் கைவிடப்பட்டு கானகங்களுள் மறைகிறது. 1860-களில் பிரெஞ்சு இயற்கை ஆய்வாளர்அடர்வனத்துள் இடிபாடுகளாய் அங்கோர் தாமைக் கண்டடையும் வரை மாபெரும் ஆலயங்கள் முற்றிலும் இயற்கையின் ஆளுகையில் காத்திருந்திருக்கின்றன.

கம்போடியா கண்டு திரும்பிவந்து ஒரு மாதம் ஆகி விட்டது. காட்சிகள் மனதில் இருந்து மறைந்திருக்குமோ எனும் தயக்கத்துடன்தான் இப்பகுதிகளைஅணுகினேன். அன்றாட அலைகளை அஞ்சிடத் தேவையில்லை, கடல் ஆழத்தில் கிடக்கிறது மௌனம்; கல்லில் உறைந்த மௌனம் பெரும் கனவுகளென வேர்விட்டுக் கிளைப்பவை. இன்றும் உறக்கம் வராத முன்னிரவுகளில், தா ஃப்ரோமின் ஆலயவிழுங்கி மரங்கள், கோபுரங்களை விட்டிறங்கி வேர்க்கால்கள் கொண்டு நமைத் துரத்த, பாயோனின் முகங்கள் உரக்க நகையொலி எழுப்ப, அங்கோர் தாமின் வாயில்கள் தானாக அடைத்துக்கொள்ள, கானகம் சீவிடு ஒலியால் வீறிடுவது போல முன்னிரவில் கற்பனை செய்து கொள்வது ஒரு மாய உலகில் உலவும் கிளர்ச்சியைத் தருகிறது. 20180726_114331

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்

பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாதுநெட்டிருப்புப்

பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்

வேருக்கு நெக்கு விடும்

பசுமரத்து வேர் பற்றிக் கவ்விய நினைவுகளென கம்போடியா மனதுள் நின்றிருக்கிறது

 மிக்க அன்புடன்,

சுபா

HIAZ6701

Reference books for Angkor History:

  1. The Khmers – History and Treasures of An Ancient Civilization – Stefano VecchiaA
  2. Temples of Cambodia – Helen Ibbitson Jessup, a scholar and curator of South East Asia, Founder and president of Friends of Khmer Culture organization
  3. Angkor – David Stanford
  4. Preah Khan Monastic Complex – World Monument’s Fund, volume of two decades of architectural conservation work at Preah Khan
முந்தைய கட்டுரைஈர்ப்பு
அடுத்த கட்டுரைமோடி,அரசியல்,கருத்தியல்