அண்ணாவின் ஓய்வு

anna
சரத், நான், அண்ணா , அண்ணாவின் மைத்துநர்

அண்ணா [பி.பாலசங்கர்] சென்ற 31 -8-2018 அன்று பணி ஓய்வு பெற்றார். நேசமணி போக்குவரத்துக் கழகத்தில் கணிப்பொறி உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்து துறைக்கண்காணிப்பாளராக ஆனார். நாகர்கோயில் ராணித்தோட்டம் பணிமனை, பின்னர் திருவட்டார், படந்தாலுமூடு, தென்காசி என பல ஊர்கள். மிகப்பெரிய நட்புசுற்றம் கொண்டவர். ஆனால் அதிகாரத்தை அஞ்சாதவர். சண்டைக்காரர். ஆகவே பணிநாள் முழுக்க பந்தாடப்பட்டவர்.

களியக்காவிளை முபாரக் ஓட்டலில் ஒரு பிரிவு உபச்சார விருந்து. நான் தனியாகச் சென்றிருந்தேன். அண்ணாவின் மகன் சரத் அவருக்கு வண்டியோட்டியாக வந்திருந்தார். அண்ணாவின் மைத்துனர் வந்திருந்தார்.

எனக்கு வேலை எப்போதுமே பெரும் சிறை. இத்தனைக்கும் நான் பணியாற்றிய காலகட்டத்தில் பெரிய பணிச்சுமையென எதுவும் இருந்ததில்லை- நாகர்கோயிலில் ஓராண்டு கணக்கராகப் பணியாற்றிய காலம் தவிர்த்தால். அரசியல் இலக்கியம் தொழிற்சங்கம் என நாள் விரைந்துசெல்லும். எதிரிலுள்ள டீக்கடையில் பாதிப்பொழுது. அது அரசூழியர்களின் பொற்காலம். ஆனாலும் வேலையை வெறுத்தேன். என் வாழ்க்கை என்றுமே ஒரு கொண்டாட்டம். நான் வேலையை விட்டநாளில் தொடங்கி அது மேலும் கொண்டாட்டமாக ஆகியது.

ஆனால் அண்ணா வேலையை இறுகப்பற்றிக்கொண்டவர். நள்ளிரவு வரைக்கும்கூட அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவார். அவருடைய சுற்றமும் கேளிக்கையும் முழுக்கவே அலுவலகச் சூழலில்தான். வீடு வந்துசெல்லும் இடம்போல. திடீரென்று ஓய்வுபெறுவது என்பது அவருக்கு அதிர்ச்சிதான். சென்ற ஓராண்டாகவே அடிக்கடி அதை எண்ணி நிலைகுலைந்தபடியேதான் இருந்தார்.

விருந்து உற்சாகமாக இருந்தது. அண்ணா அவருடைய மெய்யான் உணர்ச்சியை மறைக்க செயற்கையாக வேடிக்கைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். அண்ணாவின் நண்பர்கள் என்னை வந்து சந்தித்து கைகுலுக்கு நான் எழுதிய படங்களைப் பற்றி பேசினர். விடைபெற்றுக் கிளம்பியபோது “அருண்மொழிக்கு குடுடா” என்று பிரியாணிப்பொட்டலத்தை காரில் வைத்தார்

திருவட்டாறில் அண்ணாவின் நண்பர் ஒருவரை அவர் வீட்டுக்குக் கொண்டுசென்று விட்டுவிட்டு திரும்பினேன். என் திருமணத்தில் உடன்நின்றவர். “கல்யாணமாகி பத்துபதினஞ்சு வருசம் இருக்கும்லா?” என்றார். இருபத்தைந்தாண்டுகள் என்றேன். “ஆ?” என்றார். “காலம் போற போக்கு!” என்னும் வியப்பொலி அன்றெல்லாம் கிராமங்களில் காதில் விழுந்துகொண்டே இருக்கும். அப்போது வேடிக்கையாகத் தோன்றிய அச்சொல்லாட்சி இப்போது திகைக்க வைக்கிறது

பணியில் இருந்திருந்தால் நானும் 2020ல் ஓய்வு பெறவேண்டியிருக்கும். நல்லவேளை இலக்கியத்தில் ஓய்வுக்கு வயதை காரணமாகக் காட்டுவதில்லை எவரும்.

முந்தைய கட்டுரைடாக்டர் ஷிவாகோ – பாலாஜி பிருத்விராஜ்
அடுத்த கட்டுரைமனுஷ்யபுத்திரன்,புதுத்திறனாய்வு