மோடி அரசு, என் நிலைபாடு

modi

அன்புள்ள ஜெமோ,

பணமதிப்புநீக்க நடவடிக்கை முழுத்தோல்வி என ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. ஏறத்தாழ புழக்கச்சந்தையிலிருந்த முழுப் பணமும் திரும்ப வந்துவிட்டது. ஆகவே ஈட்டல் எதுவுமில்லை, மறுபக்கம் புதிய நோட்டுகள் அச்சிட்டதனால் உருவான இழப்பு மிக அதிகம். பணமதிப்பு நீக்கத்தை ஆதரித்து வலுவாக எழுதியவர் நீங்கள். உங்கள் அரசியல்நிலைபாட்டை அறிய விரும்புகிறேன். இதை பேசவிரும்பவில்லை என்று தவிர்ப்பீர்கள் என்றால் ஏமாற்றம் அடைவேன். ஏனென்றால் நான் உங்கள் தீவிரமான வாசகன்

எஸ்.ராஜேந்திரன்

***

அன்புள்ள ராஜேந்திரன்,

இதில் ரகசியம் ஏதுமில்லை, நான் முன்னரே எழுதியவைதான். மீண்டும் இறுதியாக என் தரப்பைச் சொல்லிவிடுகிறேன்

எனக்கு அரசியல்மாற்றங்கள் வழியாக நிகழும் சமூகவளர்ச்சிமேல் பெரிய நம்பிக்கை ஏதுமில்லை. ஒரு குறிப்பிட்ட பொருளியலமைப்புக்குள் ஆட்சி மாற்றம் என்பது மேலோட்டமானதுதான். கேரளத்தை காங்கிரஸ் ஆட்சி செய்வதும் பினராயி விஜயன் ஆட்சிசெய்வதும் குறைந்த அளவிலான வேறுபாட்டையே உருவாக்குகிறது. பொருளியலை, சமூகமாற்றத்தை உருவாக்கும் விசைகளே வேறு. ஆகவே எப்போதுமே அரசியல்களத்தில் சொல்லாடுவதில்லை. அரசியல் சார்ந்து மிகைநம்பிக்கை கொள்வதுமில்லை

ஆகவேதான் நரேந்திரமோடி ஆட்சியை நெருங்கிக்கொண்டிருந்த உச்சகட்டப் பிரச்சார காலத்திலும் சரி, அவர் ஆட்சியைப்பிடித்தபோதும் சரி, நான் ஒரு சொல்கூட பேசவில்லை. அவருடைய ஆட்சி அமைந்தபோது எளியமுறையில் வாழ்த்தோ நம்பிக்கையோ தெரிவித்துகூட எதுவும் எழுதவில்லை. உண்மையில் அவருடைய அரசு அமைந்த அத்தேர்தல்முடிவுகள் வெளிவந்தபோது ஊட்டி காவியஅரங்கு நடந்துகொண்டிருந்தது. தேர்தலின்பொருட்டு அதை ஒத்திவைக்கக்கூட நான் ஒப்பவில்லை. அந்த அளவுக்கு தேர்தலரசியல்மேல் நம்பிக்கை கொண்டவர்கள் வரவேண்டாம் என்பதே என் நிலைபாடாக இருந்தது – கணிசமானவர்கள் வரவில்லை. அதை நான் பொருட்படுத்தவுமில்லை.

அவ்வரசு அமைந்த அன்று ஊட்டியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்னேன், பாரதிய ஜனதா கட்சி இருபதாயிரம் கோடிரூபாய் பிரச்சாரத்திற்குச் செலவிட்டு பதவியைப்பிடித்துள்ளது என்கிறார்கள். ஆகவே இரண்டுலட்சம் கோடியையாவது அதை அளித்தவர்களுக்கு திரும்ப அளிப்பதே அதன் ஆட்சியின் முதல் கடமையாக இருக்கும். ஆகவே அதைப்பற்றி எனக்கு எந்தக் கற்பனாவாத மயக்கமும் இல்லை என்று.

பின்னர் பாரதிய ஜனதாக் கட்சியின் இரண்டு நடவடிக்கைகளை நான் ஆதரித்தேன். ஒன்று, டெல்லியில் அதிகாரங்களாக உறைந்துவிட்டிருந்த சில கலாச்சார மையங்களைப் பெயர்க்கும் அதன் முயற்சியை. ஆனால் மிக விரைவிலேயே அந்த மையங்கள் அனைத்திடமும் பாரதிய ஜனதா சமரசம் செய்துகொண்டது. எந்த ஆட்சி வந்தாலும் அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்களே இன்றும் உடனிருக்கிறார்கள். அவர்கள் சென்ற ஆட்சிக்காலத்தில் அதிதீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர்கள், இன்று ஆதரவாளர்கள்.

பாரதிய ஜனதாவின் இந்த ஆட்சிக்காலத்தில் கலாச்சாரத் தளத்தில் அதன் செயல்பாடுகள் அருவருக்கத்தக்கவை. அவர்கள் இடதுசாரிகளை ஆதரிக்கவேண்டுமென்பதில்லை , அவர்களின் தரப்பிலேயே பொறுப்புடன் பேசும் உண்மையான அறிஞர்களை, அவர்களுக்காகவேகூட இத்தனை ஆண்டுகளாக பணியாற்றியவர்களை, பொறுப்புகளுக்குக் கொண்டுவந்திருக்கலாம். மாறாக பெரும்பாலான பதவிகள் கவனிப்பாரற்று காலியாகவே விடப்பட்டன. நிரப்பப் பட்டவற்றில் சென்ற காலத்துத் துதிபாடிகளோ இன்றைய ஆட்சியாளர்களின் அடிப்பொடிகளான வெற்றுமனிதர்களோதான் நியமிக்கப்பட்டார்கள். கலாச்சார அமைப்புகள் இருப்பதையே டெல்லியை ஆளும் மிகச்சிறிய அதிகாரக்குழு அறிந்திருக்கவில்லை. அவர்களின் உலகில் அப்படி ஒரு விஷயமே இல்லை. அவர்களின் அறிவுத்தரமும் பண்பாட்டுத்தரமும் இங்கே ஒரு அடகுக்கடை நடத்தும் மார்வாடியின் அளவுக்கு சற்றும் மிகுந்ததாக இருக்கவில்லை.

இரண்டாவதாக, பணமதிப்புநீக்கத்தை நான் ஆதரித்தேன். அதை ஆதரிப்பதற்கான காரணங்கள் மேல் இன்றும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியத் தொழில் – வணிகத்துறையை அறிந்தவர்கள் இங்குள்ளது வரிகட்டுவோருக்கும் கட்டாதவர்களுக்கும் இடையேயான போட்டி என்று அறிந்திருப்பார்கள். இந்தியாவின் தொழில்வணிகத்தை பெரும்பாலும் கையில் வைத்திருக்கும் குஜராத்தி – மார்வாடி குழுக்கள் முற்றிலும் வரிகட்டுவதில்லை. வரி ஏய்ப்பை ஆயுதமாகக்க் கொண்டு வரி கட்டுவோரை வீழ்த்தி சந்தையில் ஆதிக்கம் கொள்வதே அவர்களின் வழிமுறை. அவர்களின் ஆதரவால் பதவிக்கு வந்தவர் மோடி. பணமதிப்பு நீக்கம் நேரடியாகவே அவர்களுக்கு எதிரான நடவடிக்கை. அவர்களின் அடித்தளத்தை நொறுக்குவது. அதை அவர் எடுத்ததே அவர்மீதான நம்பிக்கையை உருவாக்கியது. இந்தியாவின் வரிவசூலை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைக்கான முதற்படி அது என தோன்றியது. அத்துடன்  இந்தியப்பொருளியலின் பெரும் நோய்க்கூறான கள்ளநோட்டுப் புழக்கத்தை பத்தாண்டுகளுக்காவது அது கட்டுப்படுத்தக்கூடும் என நம்பினேன்.

சாதாரணமாக எந்த ஆட்சியாளரும் அத்தகைய ஒரு நடவடிக்கையைச் செய்யத் துணியமாட்டார்கள்.ஏனென்றால் அது உடனடியாக கடுமையான மக்கள் எதிர்ப்பையே உருவாக்கும். நீண்டகால அளவில்தான்  அதன் பொருளியல் லாபங்கள் அறியப்படலாகும், அதற்குப்பின்னரே தேர்தல்கள லாபங்களை எதிர்பார்க்க முடியும். அதற்கு ஓர் ஆட்சியாளர் துணிவதென்பது அவருடைய நல்ல நோக்கத்தையே காட்டுகிறது என்று எண்ணினேன். வரலாற்றில் இடம்பெறுதல், மீண்டும் பதவிக்கு வருதல் போன்ற பல காரணங்களுக்காக ஆட்சியாளர்கள் மெய்யான நடவடிக்கைகளை எடுப்பதுண்டு. இருக்கும் அமைப்பின் எல்லைக்குள் சில முன்னடிவைப்புகளை அவர்கள் உருவாக்கக் கூடும். நரசிம்மராவ் போல நல்விளைவுகளை உருவாக்கவும் வாய்ப்புண்டு. அன்று என் எதிர்பார்ப்பு அதுவே.

அந்நடவடிக்கை தொடங்கியதுமே அதன்மேல் உருவான எதிர்ப்பு ஏமாற்றத்தை அளித்தது. அதன் எதிரிகள் இன்று சொல்வதுபோல அது ஒரு மோசடி என்பதனாலோ அதனால் நன்மை நிகழாதென்பதனாலோ அவர்கள் அதை எதிர்க்கவில்லை. அந்த அளவுக்கு மேதைகளல்ல அவர்கள். அரசியல் எதிரி எதைச்செய்தாலும் எதிர்க்கும் எதிர்க்கட்சி மனநிலை மட்டுமே அவர்களிடமிருந்த்து. அதனால் உருவான மக்கள் எதிர்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயன்றனர். உண்மையிலேயே மோடி அரசியல் ஆதாயம்பெற்றுவிடக்கூடும் என அஞ்சினர். அந்த அவசரம் எனக்கு கசப்பளித்தது. அதையே நான் கண்டித்தேன்.

பணமதிப்புநீக்கம் தோல்வியடைவதை கண்கூடாகவே பார்த்துக்கொண்டிருந்தேன். சில தனியார் வங்கிகள் அதை உடைத்து பெரும்லாபம் ஈட்டின. கணக்காளர்களும் வங்கியாளர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கைகோர்த்துக்கொண்டு அதை அழித்தார்கள். நான் அறிந்தது உண்மை என்றால் கெடு முடிந்து எட்டுமாதங்கள் கடந்தும்கூட பழையநோட்டுக்களை மாற்றிக்கொண்டிருந்தார்கள். முதலில் தயாரிப்பின்மை, அரசுநிர்வாகத்தின்மேல் ஆள்வோருக்கு கட்டுப்பாடு இல்லாமை ஆகியவையே அதற்குக்காரணம் என நம்பினேன். ஆனால் அத்தனை நோட்டுகளும் திரும்பி வந்துவிட்டன என்றால் அதன்பொருள் ஒன்றே, இதில் பாரதியஜனதா கட்சியும், இந்த அரசும் ரகசிய லாபமீட்டாமல் இவ்வாறு நிகழாது. அவர்கள் உடனிருக்காமல் இத்தனை முழுமையான மோசடி நிகழவே முடியாது. அவர்கள் அதற்குப்பொறுப்பேற்றே ஆகவேண்டும். அதன் விளைவான அனைத்து அழிவுகளுக்கும்.

கடுமையான அரசியல் நிலைபாடு கொண்டவர்கள், மதக்காழ்ப்புகளை அரசியலாக வெளிக்காட்டுபவர்கள் தவிர இந்தியாவின் எளிய குடிமக்கள் பெரும்பாலானவர்கள் அந்நடவடிக்கை வந்தபோது நான் கொண்டிருந்த நம்பிக்கையையே கொண்டிருந்தார்கள். அதை அம்மக்களுடன் எளிய முறையில் உரையாடிய எவரும் உணர்ந்திருக்கலாம். இன்று அவர்களில் பலரும் நான் உணரும் ஏமாற்றத்தையும் கசப்பையும் தாங்களும் அடைந்திருப்பார்கள். ஒரு குடிமகனாக தனிப்பட்ட முறையில் அவமதிக்கப்பட்டவனாக, சுரண்டப்பட்டவனாக உணர்கிறேன். நரேந்திரமோடியின் ’மனதோடு பேசும்’ நிகழ்ச்சியில் உள்ள அசட்டு நாடகத்தனம், செயற்கையான பாவனைகள், புனிதர்களுக்குரிய நல்லுபதேச மொழிகளை கூச்சமே இல்லாமல் சொல்லும் தோல்தடிமன் உச்சகட்ட வெறுப்பையே உருவாக்குகிறது.

ஆயினும் நடுநிலையில் நின்றபடித்தான் பார்க்கவேண்டும் என எனக்கே சொல்லிக்கொண்டேன். இந்த ஆட்சியின் செயல்பாடுகளை என் தனிச்சூழலிலும் நான் செய்யும் பயணங்களிலும் கூடுமானவரை உளப்பாகுபாடின்றியே நோக்குகிறேன். கருத்துக்கேட்கும்போது அரசியல்திரிபுகள் அற்றவர்கள், சொல்லப்போனால் ஆதரவுநிலையுடன் இவ்வரசை நோக்கியவர்களிடமிருந்தே கேட்டறிகிறேன். விளைவாக உருவான என் எண்ணம் சுதந்திரத்திற்குப்பின்னர் இந்தியாவில் உருவான அரசுகளில் முழுத்தோல்வியடைந்த இரண்டு அரசுகளில் ஒன்று இது என்பதே. இன்னொன்று 1971- 77 ல் இந்திராகாந்தி அமைத்த அரசு.ind

இரு அரசுகளையும் பலவகையிலும் ஒப்பிட முடியும், பொதுவான மூன்று அம்சங்களைச் சொல்லலாம்.

ஒன்று, ஒற்றைமனிதரை முன்னிறுத்தும் நபர்வழிபாட்டு அரசியல். அனைத்து இடங்களிலும் ஒரு மனிதரை அரசே முன்வைப்பது. அரசு ஊடகம் அனைத்து ஆற்றல்களையும் கொண்டு, கோடானுகோடி ரூபாய்ச் செலவில் அவரை விளம்பரப்படுத்துவது. அவரை ஒரு தீர்க்கதரிசி, அவதாரம், ரட்சகர் நிலைவரை கொண்டுசென்று வைப்பது. எழுபதுகளில் இந்தியாவே இந்திரா என்னும் கோஷத்திற்கும் இன்று நரேந்திர மோடிமேல் அரசு குவித்துப்பெருக்கும் துதிக்கும் வேறுபாடில்லை. ஒருவரை நம் அரசு வரிப்பணத்தால் மிகைவிளம்பரம் அளித்து பூதாகரமாக்கி நிறுத்தி அவர்களுக்கு எதிராக பிறர் அரசியல்செய்வேண்டும் என்னும் நிலையை உருவாக்குவது ஜனநாயகத்தை அழிப்பது.

இரண்டு, சமையற்கட்டுச்சபையின் நிர்வாகம். தனிமனிதனை மையமாக்கிய அரசு அமையும்போது இயல்பாக உருவாவது இது. அவருக்கு அணுக்கமான ஒரு சிறுகுழுவுடம் அனைத்து அதிகாரங்களும் சென்று சேர்கின்றன. வெவ்வேறு துறைநிபுணர்கள், அனுபவம் மிக்கநிர்வாகிகள், களத்தொடர்புடைய அரசியலாளர்கள் ஆகியோர் கூடி செயல்படுவதாகவே இந்தியா போன்ற ஒரு மாபெரும் நாட்டின் நிர்வாகம் இருக்கமுடியும். இங்கே ஒவ்வொன்றையும் பலதரப்புகளைக் கலந்தாலோசித்து சிறிய அளவில் செய்து பார்த்து , தொடர்ச்சியாக விமர்சனங்களை கவனித்து பிழைகளைக் களைந்தே நிறைவேற்றவேண்டும். ஏனென்றால் இதன் சமூகப்,பொருளியல் அமைப்பு எந்த மேதையாலும் புரிந்துகொள்ளமுடியாதபடிச் சிக்கலானது. சமையற்கட்டுச்சபையில் வெறும்துதிபாடிகளும் சதிகாரர்களுமே அமர முடியும். அங்கே என்ன நிகழ்கிறதென்றே எவருக்கும் தெரியாது – அமைச்சரவையில் இருப்பவர்களுக்கும் கூட. இந்த அரசு அத்தகைய சிறு குழு ஒன்றால் நடத்தப்படுகிறது. அவர்களைச்சுற்றி தன்னலமிகளான வணிகர்களின் ஒரு வட்டம். கட்சியோ அரசின் பிற அமைப்புகளோ எந்த அதிகாரமும் இல்லாத வெற்றுப்பார்வையாளர்களாக மாறிவிட்டிருக்கின்றனர். எழுபதுகளின் இந்திரா அரசும் இத்தகையதாகவே இருந்தது

மூன்றாவதாக இது ஓர் அதிகாரியாதிக்க அரசு என்பது. இத்தகைய தனிமனிதமைய, சமையற்கட்டு நிர்வாக அரசு அது நடைமுறையில் செயல்பட அதிகாரிகளின்திரளையே நம்பியிருக்கும். ஆகவே வேறுவழியில்லாமல் அதிகாரியாதிக்க அரசு [ bureaucratic government]  ஒன்று உருவாகிறது. அதிகாரியாதிக்க அரசின் இயல்புகளில் முக்கியமானது அது எவ்வகையிலும் முன்னகர விரும்பாது என்பதுதான். வழக்கமானவற்றை மட்டுமே செய்தபடி தன் வட்டத்தில் சுற்றிவருவதே அதற்கு உகந்தது. ஆகவே அனைத்து மாற்றங்களையும் அது காகித அளவில் மட்டுமே செய்யும்.  கத்தைகத்தையாக அறிக்கைகளை மட்டுமே தயாரித்து மேலே அனுப்பும். அரசதிகாரிகள் அளிக்கும் அத்தனை அறிக்கைகளும் பெரும்பாலும் பொய்யே. தகவல்களை முடைந்து பொய்யான அறிக்கைகளை உருவாக்குவதில் பயிற்சியே அரசூழியர் முதலில் அடைவது.  அந்த அறிக்கைகளையே ஆட்சியாளர்கள் மக்களை நோக்கித் துப்பிக்கொண்டிருப்பார்கள்.

இந்திய அதிகாரிவர்க்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்தே ஊழல் வழியாக உருவாகி ஊழலினூடாக நிலைநிறுத்தப்படுவது. ஊழலுக்கான நடைமுறைகள் அனைத்தும் இருநூறாண்டுக்காலச் சடங்குகளாக மாறிவிட்டிருக்கின்றன. அதிகாரிகளின் கட்டமைப்பு ஆளும் அரசின் ஏவற்கருவியாக ஆகவேண்டும் என்றால் அரசு அதன் ஊழலுக்கு தடையற்ற முழு வாய்ப்பு அளித்தாகவேண்டும். அரசின் அனைத்து திட்டங்களையும் அவர்கள் முழுமையாகவே உண்டு செரிப்பார்கள். வான் உடைந்து பெய்தாலும் ஒரு துளிகூட தரைக்கு வராது. இன்றைய அரசு மிதமிஞ்சிய வரிகளை உருவாக்கி அதை அதிகாரிகளை அதை வசூல்செய்யும் வேட்டைவிலங்குகளாக்கி அவர்கள் ஊழலில் திளைக்க வழிவகுத்துள்ளது. இன்றும் வரிகட்டாத பழம்பெருமை கொண்டவர்கள் அதே வீச்சில் தொடர்கிறார்கள்.

இம்மூன்று அம்சங்களால்தான் முற்றிலும் செயல்படாத, ஆனால் இடைவிடாது வெற்றுச்சொற்களை வீசிக்கொண்டே இருக்கும் அரசு உருவாகிறது. ஒரு கட்டத்தில் அரசே அதிகாரிகாள் அளிக்கும் அறிக்கைகளை நம்ப ஆரம்பிக்கிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் வேலையின்மையும் வறுமையும் உச்சத்திலிருந்த, இந்தியாவின் வளர்ச்சி மாபெரும் தேக்கத்தை அடைந்த காலகட்டம் இந்திராவின் ஆட்சிக்காலம். நம்மைச்சூழ்ந்திருந்த நாடுகளெல்லாம் நம்மைக் கடந்து நெடுந்தொலைவு சென்றது அப்போதுதான்.  ஆனால் வறுமையை விரட்டுவோம் [கரீபி கடாவோ] போன்ற கோஷங்களால் அதை நாம் இன்று நினைவுகூர்கிறோம். இன்றைய அரசும் மிகப்பெரிய பொருளியல்குளறுபடிகளை, தேக்கத்தை உருவாக்கிவிட்டு கவற்சியான சொற்களை உமிழ்ந்துகொண்டிருக்கிறது

நரேந்திர மோடிக்கும் இந்திராகாந்திக்கும் இடையேயான ஒற்றுமைகள் வியக்கவைப்பவை. இருவரும் ஆழ்ந்த பாதுகாப்பின்மை உணர்வு கொண்டவர்கள். ஆகவே செயற்கையாக ஓர் இரும்புத்தோற்றத்தை நடிக்கிறார்கள். சர்வாதிகாரம் மூலம் ஆற்றல்கொண்டவர்களாக ஆக முயல்கிறார்கள். அதற்காக நம்பிக்கைக்குரியவர்களின் சிறுகுழுவை உருவாக்கி அதை சார்ந்திருக்கிறார்கள். தனிமனிதப்பிம்பம், மிகையுணர்ச்சிப்பிரச்சாரம் வழியாக அரசியலை கையாளமுடியும் என நினைக்கிறார்கள். தேசப்பாதுகாப்பு குறித்த அச்சத்தை மக்களிடையே உருவாக்கி தங்களை ரட்சகர் எனக்காட்டி அதிகாரத்தைக் கையாள்கிறார்கள்‘என்னைக்கொல்லச் சதி’ என இந்திரா காந்தி கூச்சலிடாத நாளே இல்லை. இவர்கள் இந்தியாவை ஆள்வதற்கான அறிவாற்றலோ நிர்வாக அமைப்போ இல்லாத நிலையில் முற்றிலும் செயல்படாத ஒரு கருங்கல்லை அரசு என மக்கள்மேல் சுமத்துகிறார்கள்.

சென்ற ஐந்தாண்டுகளில் பொருளற்ற காகிதத் திட்டங்களை அறிவித்து அதிகாரிகள் அளிக்கும் அறிக்கைகளை அதன் விளைவுகளாக முன்வைக்கும் செயலை மட்டுமே மோடி அரசு செய்திருக்கிறது. அறிவிக்கப்பட்ட எந்தத் திட்டமும் எவ்வகையிலும் நடைமுறைக்கு வரவில்லை. இவர்கள் சாதனைகளாகச் சொல்லும் அனைத்துமே பழைய திட்டங்களைப் பெயர்மாற்றம் செய்து முன்வைப்பவை. இயல்பான வளர்ச்சித்தகவல்களை தாங்களே செய்ததாக சொல்லிக்கொள்பவை. எவ்வகையிலும் சரிபார்க்கமுடியாத வெற்றுப்புள்ளிவிவரங்கள். நரசிம்மராவ் ஆட்சியில் ராவின் நிதானமான திட்டமிடலால், நிபுணர்களின் ஒத்துழைப்பால்  உருவான இந்தியப்பொருளியல் மலர்ச்சி பின்னர் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களால்  பின்னிழுக்கப்பட்டது. அது முழுமையாகவே படுத்து மீண்டும் எழுபதுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது இன்றைய இந்தியா

காகிதத்திட்டங்களின் பொருளின்மையை பல நிலைகளில் நாம் காணலாம். பலமுறை முன்னரும் எழுதியிருக்கிறேன். முதல் உதாரணம், ஸ்வச் பாரத். இந்தியா குப்பையில் மூழ்கிக்கிடக்கிறது. நான் சென்ற நாடுகளில் குப்பைக்குள்ள்ளேயே கிடக்கும் ஒரே நாடு இந்தியாதான். நம்மைவிட பொருளியலில் பிற்பட்ட ஆப்ரிக்க நாடுகளோ கம்போடியாவோகூட நம்மைவிட மேலான சூழல்தூய்மைகொண்டவை. ஏனென்றால் இங்கே குப்பையை அள்ளுவதற்கான அமைப்பு என எதுவும் சென்ற ஐம்பதாண்டுகளில் உருவாக்கப்படவில்லை. வெள்ளையர் ஆட்சியில் உருவான அதே குப்பை அள்ளும் முறைதான். அதையும்கூட நிதிப்பற்றாக்குறை என்று சொல்லி தனியாருக்கு குத்தகைக்கு அளித்துச் செயலிழக்க வைத்துள்ளனர். குப்பையை ஒழிப்பதாகச் சொல்லி கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து உருவாக்கப்பட்ட திட்டம் ஸ்வச் பாரத். அதனூடாகச் செய்யப்பட்ட ஒரே ஏற்பாடு குப்பைகள் கிடந்தால் அதை அரசிடம்  தெரிவிக்க ஒரு செயலி உருவாக்கப்பட்டது மட்டுமே.

சிலமுறை அதில் என்ன நிகழ்கிறது என சோதித்துப் பார்த்திருக்கிறேன். புகார்செய்ததுமே குறுஞ்செய்திகள் வரத் தொடங்கும். ‘உடனே செய்யப்படும்’ என்று. ‘செய்துமுடித்துவிட்டோம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்’ என்று. நாலைந்து நாளைக்கு செய்திகள் வரும். நாம் செய்த புகாரை தொடர்ந்துசென்று பார்க்காதவர் என்றால் மனநிறைவு அடைந்துவிடுவோம். அரசு செயல்படுகிறது என நினைப்போம். ஆனால் குப்பை பெரும்பாலும் அங்கேதான் கிடக்கும். அல்லது சற்று இடமாற்றம் செய்யப்படும். ஏனென்றால் இந்தியாவெங்கும் எந்நகரத்திலும் எந்தக்கிராமத்திலும் குப்பையை அள்ளுவதற்கான அமைப்புகள் இல்லை. குப்பை அள்ள வண்டிகள் இல்லை, ஊழியர்கள் இல்லை, அள்ளப்பட்ட குப்பையை எரிக்கவோ அழிக்கவோ எந்த வசதியும் இல்லை. செயலி இருந்து என்ன பயன்?

இதேதான் ரயிலிலும். சென்ற ஐந்தாண்டுகளில் ரயில்பயணம் தாளமுடியாத அளவுக்கு சீரழிந்துள்ளது.பயணம் பலமடங்கு பெருகுகிறது, ஆனால் ரயில்துறை தேங்கிக்கிடக்கிறது. தத்கால், அர்ஜெண்ட் தத்கால் என பல திட்டங்களால் மறைமுகமாக கட்டணம் கூட்டப்படுகிறது. கழிப்பறைகள் கழுவப்படுவதில்லை.  பெட்டிகள் தூய்மைசெய்யப்படுவதில்லை. ஆனால் புகார் கொடுப்பதற்குச் செயலிகள் உண்டு. புகார் கொடுத்தால் ஐந்தே நிமிடத்தில் மறுமொழிகள் வரத்தொடங்கும். உடனே ஓர் அதிகாரி வந்து உடனே செய்கிறோம் என்பார். நான் புகார்கொடுத்தபோதெல்லாம் உடனே வந்து கழிப்பறையை நீரூற்றி ஃபினாயில் ஊற்றிவிட்டுச் சென்றனர். ஆனால் பின்னரும் ரயில் கிளம்பும் இடத்திலேயே நாறித்தான் கழிப்பறைகள் காணப்பட்டன.

சமீபத்தில் நாகர்கோயில் – கோவை எக்ஸ்பிரஸில் நாறிக்கிடந்த கழிப்பறை பற்றி புகார் செய்தேன். நெல்லையில் வந்து தூய்மை செய்தனர். ஆனால் ஒர் அதிகாரி குமுறித்தள்ளிவிட்டார். ஏனென்றால் தூய்மைசெய்யும் ஊழியர்களே இல்லை. மொத்தப்பணியும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. குத்தகை எடுப்பவர் பலவகையான ’கழித்தல்’களுக்குப்பின் பெறுவது ஏலத்தில் கால்பங்கு. அந்த மிகக்குறைந்த தொகைக்கு அவர் நாலைந்து பிகாரி பையன்களை வேலைக்கு வைக்கிறார். நாகர்கோயிலிலேயே பிகாரிகள்தான் அப்பணி செய்கிறார்கள் .ஒருநாளைக்கு இருநூறு ரூபாய் ஊதியம். ஒரு ரயில்நிலையத்தின் அனைத்து பெட்டிகளையும் தூய்மை செய்ய ஊதியமாக அளிக்கப்படுவது ஒருநாளைக்கு மொத்தமாகவே ஆயிரம் ரூபாய்கூட இல்லை. அந்த பிகாரிகள் காலையில் வந்து சாயங்காலம் சென்றுவிடுவார்கள். அந்திக்குமேல் கிளம்பும் ரயில்களை தூய்மை செய்ய ஆளிருப்பதில்லை. கோவை ரயில் காலை நாகர்கோயில் வந்ததும் உடனே இன்னொரு எண் பெற்று கொல்லம் சென்று திரும்புவது. பல்லாயிரம்பேர் பயணம் செய்தது. கழிப்பறை நாறாமல் என்ன செய்யும்?

நாற்பது பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலின் நூற்று அறுபது கழிப்பறைகளை ஓர் ஊழியர் ஒருமணிநேரத்தில் தூய்மை செய்தால் எந்த அளவுக்குத் தூய்மை செய்யமுடியுமோ அதுவே சாத்தியம். ரயில் கிளம்பியபின் அந்த ஒப்பந்த ஊழியர்களான பிகாரிகள் பயணிகளின் கருத்தைக்கோரும் ஒரு படிவத்துடன் பரிதாபமாக வந்து நிற்பார்கள். இந்தி அல்லாது ஒரு சொல் தெரியாது. என்னதான் செய்வது? பரிதாபப்பட்டு கையெழுத்துபோட்டு அளிப்பார்கள் பயணிகள். பலசமயம் நான் ஐம்பது ரூபாய் அளித்து என் பெட்டியின் கழிப்பறைகளை மட்டும் தூய்மைசெய்யச்சொல்வேன்.

சாதாரண ‘ஸ்லீப்பர் கோச்’களின் நிலைமை சென்ற சில ஆண்டுகளில் நம்பமுடியாத அளவுக்கு கீழிறங்கிவிட்டது வடகிழக்கு நோக்கிச் செல்லும் ரயில்களில் அனைத்துப்பெட்டிகளிலும் முன்பதிவுசெய்தாலும் அமரக்கூட இடம்கிடைப்பதில்லை. நான்குநாட்களுக்கு முன் என் மகனும் கடலூர் சீனுவும் படுக்கை முன்பதிவு செய்திருந்தும் ஒரிசாவிலிருந்து ஓர் இருக்கையில் எட்டுபேர் என அமர்ந்தபடி திரும்பி வந்தனர். பெட்டிக்குள் இருநூறுபேருக்குமேல்.ஏனென்றால் செலவுசுருக்க நடவடிக்கைகளால் டிக்கெட் பரிசோதகர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இன்று பதினைந்து பெட்டிகளுக்கு ஒருவர் தான் கண்காணிக்கிறார். அவரால் இந்தப்பெரும்கூட்டத்தை என்ன செய்ய முடியும்? ரயில்வே காவலர்களின் எண்ணிக்கையும் சென்ற ஆண்டுகளில் தொடர்ந்து குறைக்கப்படுகிறது. இந்திய ரயில்பெட்டிகள் இன்று எந்தப்பாதுகாப்பும் இல்லாத ஒரு பெரும் அராஜகவெளி. ஆனால் புகார் செய்ய செயலிகள் உண்டு. மென்மையான பதில்கள் உடனே கிடைக்கும். அதிகாரிகளின் அரசின் காகிதத்தோற்றம் என்றால் இதுதான்

இந்த அரசு அளிக்கும் அத்தனை செயல் அறிக்கைகளும் பொய்யானவை. இந்தியா முழுக்க இருபதாண்டுகளுக்கு முன் போடப்பட்ட நாற்கர நெடுஞ்சாலைகள் புதுப்பிக்கப்படாமல் பழுதடைந்து கிடக்கின்றன. ஆனால் அவற்றில் செல்ல பல்லாயிரம் ரூபாய் கட்டணம் கட்டவேண்டியிருக்கிறது. வட இந்தியாவில் சில இடங்களில் தேசியநெடுஞ்சாலைகள் கிராமச்சாலைகளைவிட மோசமாக உள்ளன. நாகர்கோயில்- மதுரை நெடுஞ்சாலையே துண்டுதுண்டாக பள்ளமும் உடைசலுமாகக் கிடக்கிறது.விமானநிலைய விரிவாக்கங்கள் அனைத்தும் தேங்கிக்கிடக்கின்றன. கல்வித்துறைக்கு நிதி இல்லை. மருத்துவத்துறையில் பெருந்தேக்கம். எங்கும் எந்தவிதமான செயல்பாடும் இல்லை. வளர்ச்சி போகட்டும், பராமரிப்பே நிகழவில்லை.

ஆனால் இந்தியவரலாற்றிலேயே அதிகமாக இன்று தனிமனிதன் வரிகட்டிக்கொண்டிருக்கிறான். சில துறைகளில் ஜிஎஸ்டி,வருமானவரி,சேவைவரி உட்பட ஒரே தொழிலுக்கு மூன்று வரி. வருமானத்தில் 40 சதவீதத்தை நேரடி வரியாக கட்டவேண்டியிருக்கிறது. வாங்கும்பொருட்களின் மறைமுக வரியையும் சேர்த்தால் ஈட்டுவதில் 70 சதவீதம் வரியாகப்போகும். அதற்கு மாற்றாக குடிமகன் பெறுவதென்ன? கட்டணம்கொடுத்தாலும் நல்லசாலைகள் இல்லை. கல்வி, மருத்துவம் என அனைத்துக்குமே பெரும்பணம் அளிக்கவேண்டும். நல்வாழ்வுத்திட்டங்கள் என ஒன்றுமே கிடையாது. இத்தகைய அதிக வரிவிதிக்கும் நாடுகள் முழுக்குடிமகனின் வாழ்க்கைக்கும் பொறுப்பேற்கும் நலம்நாடும் அரசுகள். இங்கே இந்த வரி வெவ்வேறு பொய்முதலீடுகள் வழியாக தனியார் கைகளுக்குச் செல்கிறது. வரி என்பதே அரசைப்பயன்படுத்தி சிலர் அடிக்கும் நேரடியான கொள்ளை என்றாகிவிட்டிருக்கிறது

இந்த அரசு ஊழலற்றதா? இன்றுவரை பெரிய ஊழல்களை அவைக்குக் கொண்டுவர எதிர்க்கட்சிகளால் இயலவில்லை என்பது உண்மை. ஆனால் இத்தகைய பெருங்கொள்ளை நிகழ்கையில் அதை ஊழல் என்று அல்லாமல் எப்படி மதிப்பிட முடியும்? எங்கே செல்கிறது இந்த மாபெரும் வரிவசூல் செல்வம்? வரிகட்டும் எனக்கு அதிலிருந்து ஒரு பைசாகூடத் தரப்படாது என்றால் அதைப் பெற்றுக்கொள்பவர் எவர்? ஊழலைச் சட்டபூர்வமாகச் செய்யும் வழிகள் கண்டடையப்பட்டுள்ளன, அவ்வளவுதான்.

இந்திரா காந்தியாவது சில நலத்திட்டங்களைச் செய்ய முயன்றார். ஆனால் மோடி அரசு பசப்புச் சொற்கள், பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது. எளிய அளவில்கூட ஒரு நலம்நாடும் திட்டம் கிடையாது. வளர்ச்சித்திட்டங்கள் எவையுமில்லை, எளிய கவற்சித்திட்டங்கள் கூட இல்லை. சொல்லப்போனால் இங்கே மக்கள் என ஒரு திரள் இருப்பதையே இவர்கள் அறியவில்லை எனத் தோன்றுகிறது. இந்த நம்பிக்கை மிக ஆபத்தானது. மேலும் மேலும் கொள்ளையிடுவதற்கான அனுமதியை இந்தியச் சமூகம் அளிப்பதாகவே இவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதன்பொருட்டேனும் இவர்கள் அகன்றாகவேண்டும் .வேறு வழியே இல்லை. இதுவே என் அரசியல்

இந்த அரசை இந்துமதம் அழியவேண்டும் என நினைப்பவர்கள் எதிர்க்கிறார்கள், இந்தியாவைத் துண்டாடவேண்டும் என நினைப்பவர்கள் வெறுக்கிறார்கள், ஆகவே இதை ஆதரிக்கிறோம் என்பதே பலருடைய நிலைபாடாக இருக்கிறது. இந்திய எதிர்ப்பாளர்களின் உக்கிரமான கசப்புப்பிரச்சாரமே உண்மையில் மோடியை ஆதரிக்குமிடத்திற்கு பலரைத் தள்ளுகிறது. ஆனால் எதன்பொருட்டென்றாலும் குடிமக்கள் என சிலர் இருக்கிறார்கள், அவர்களிடமிருந்து வரி பெறுகிறோம், பதிலுக்கு அவர்களுக்கு சில பருக்கைகளையாவது அள்ளிவீசவேண்டும் என்றுகூட எண்ணாத ஓர் மூடுண்ட அரசை ஆதரிப்பது அறிவின்மை. நம் வாழ்க்கையை நாமே அழித்துக்கொள்வது அது. ஒருவர் இந்து என தன்னை உணர்கிறார் என்பதனால், இந்து என்னும் பெயரை இவர்கள் சொல்கிறார்கள் என்பதனால் இவர்களை ஆதரிப்பார் என்றால் அதைப்போல ஒரு வீழ்ச்சி பிறிதில்லை.

இன்று இருபக்கமும் உச்சகட்ட வெறுப்பரசியல் நிகழ்கிறது. அரசியல் என்பது மதத்துடன் இணைக்கப்பட்டிருக்கையில் வளர்ச்சி, மக்கள்நலம் எதுவும் எவருக்கும் ஒரு பொருட்டல்ல. இந்த அரசை நீக்கும் வெறிகொண்டிருக்கின்றனர் எதிர்தரப்பினர் , அரசைக் காக்கும் வெறி மறுபக்கம். ஆகவே உச்சகட்ட அரசியல்பிரச்சாரமும் எதிர்ப்பிரச்சாரமும் நிகழ்கிறது. இந்த கூச்சல்விவாதங்களில் இடம்பெற நான் விரும்பவில்லை. சமூகவலைத்தளங்களில் கட்சிகட்டி தகவல்திரிபுகள், சதிவேலைக்கண்டுபிடிப்புகள், சாதிமதக்காழ்ப்புகள், போலிப்புள்ளிவிவரங்கள் என கூச்சலிடும் எவருடனும் இதைப்பற்றி விவாதிக்கவும் தயாராக இல்லை. நான் இக்கருத்துக்களைச் சொல்வது நான் முன்னர் பணமதிப்பு நீக்கத்தை ஆதரித்தேன் என்பதனால், அந்த மாபெரும் பிழையால், இவ்வரசை ஆதரிக்கிறேன் எனும் எண்ணம் எழுந்திருக்கக்கூடும் என்பதனால் மட்டுமே

மேற்கொண்டு எதையும் பேசப்போவதில்லை. இது என் அரசியல் நிலைபாடு. எளிய குடிமகனின் அரசியல் இது. கட்சி சார்பு அரசியல் அல்ல. என் நண்பர்களில் பலர் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள், பலர் எதிர்ப்பார்கள். எங்கள் நட்புக்குழுமம் முழுக்க இருசாராரும் கொம்புமுட்டி பூசலிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இருசாராரிடமும் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. என் தளத்தை அவ்விவாதத்தின் களமாக ஆக்கவும் விரும்பவில்லை. எனவே  எவரும் எனக்கு இதுகுறித்து எழுதவேண்டியதில்லை. இதுகுறித்து மேலும் நான் எதுவும் சொல்லப்போவதுமில்லை. இதுகுறித்து எக்கடிதம் வந்தாலும் அதை எழுதியவரை என் மின்னஞ்சல்பட்டியலில் இருந்து விலக்க எண்ணுகிறேன். எனக்கு வேலைகள் நிறைய உள்ளன

ஜெ

முந்தைய கட்டுரைகம்போடியா- சியாம் ரீப்,மற்றும்… சுபஸ்ரீ
அடுத்த கட்டுரைடாக்டர் ஷிவாகோ – பாலாஜி பிருத்விராஜ்