கம்போடியா – ஒரு கடிதம், சுபஸ்ரீ
கம்போடியா- பாயோன் – சுபஸ்ரீ
கம்போடியா: அங்கோர் தாம், பிற கோவில்கள்-சுபஸ்ரீ
கம்போடிய பயணத்தின் நான்காவது பகுதி
25/07/18 – ஸியாம் ரீப்பில் கோவில் உலா வருவதற்கு இரண்டு வழித்தடங்கள் இருக்கின்றன. ‘பெரிய சுற்றுப்பாதை’ என்றழைக்கப்படும் பாதையில் செல்வதாக அன்றைய திட்டம்.
முந்தைய நாளாகிய 24ஆம் தேதியன்று ஆலய வளாகங்கள் ஏதும் செல்லவில்லை. கம்போடியாவின் வாழ்வாதாரமான ‘டோன்லே சாப்’(Tonle Sap) ஏரிக்கு சென்று வந்தோம். ஏரி என்று சொல்வது எவ்விதத்திலும் அதை விளக்கப் போதாது. நன்னீர் நதி எனப்பொருள் கொள்ளும் இப்பெருநீர்ப்பரப்பு கம்போடியா எனும் கலம் ஏந்தும் அமுதம். நாட்டின் எல்லைகளில் திகழும் மலைப்பிரதேசங்களும் நடுவில் பரந்த வண்டல் மண் சமவெளியுமான நில அமைப்பு கொண்ட கம்போடியாவின் மத்தியில் ஒரு பெரும் பள்ளமான பகுதி இந்த டோன்லே சாப். இது மேகாங் நதி வரை நீள்கிறது. இந்தியப் பெருநிலத்துக்கு சிந்து போல, கங்கை போல க்மெர் வரலாற்றின் களமாக இருந்திருக்கிறது இந்த ஏரி.
பெரும் படகு ஒன்றில் இதன் கால்வாய் வழி பயணித்து எல்லைகளே கண்ணுக்குப் புலனாகாத ஏரியில் நுழைந்த தருணம் கனவு போலிருந்தது. கலங்கிய சேற்றுநீர் போல நிறம் கொண்டிருந்த இவ்வேரியில் மிதக்கும் கிராமங்கள் இருக்கின்றன. பலகைகளை இணைத்தும் பெரிய மிதவைகளை அமைத்தும் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தை என அனைத்தும் கொண்ட வாழ்விடங்கள். இவற்றில் வாழும் பெரும்பகுதியினர் வியட்நாம் போரில் குடியேறிய அகதிகள்.
நிலையான வாழ்வொழிந்து புலம் பெயர்ந்து வேரூன்ற நிலமின்றித் தண்ணீரில் வாழத் தொடங்கிவிட்டவர்கள். கணமொழியாது அலைப்புண்டு கொண்டிருக்கும் மிதவைகளில் இருக்கும் வீடுகளில் நூற்பின்னல்களாலான ஊஞ்சல்கள் கட்டி உறங்குகிறார்கள். நிலைகொள்ளாத நீர்த்தளும்பல் ஏற்படுத்தும் உபாதைகள் இலாது ஊசலின் இசைவான அசைவில் உறங்குவது எளிதென்பதே காரணம். அலைமீதான வாழ்வென்பது முதற்பார்வைக்கு மிக வியப்பாக இருக்கிறது. எனில் நாம் நில்லாது சுழலும் நிலத்தை நிலையானதென்று உணரும் புலன் கொண்டவர்களாதானே! இருத்தலின் தேவைகளும் நிர்பந்தங்களும் எழும் போது எதையும் மானுடம் பழகக்கூடும்.
சதுப்பு நிலக்காடுகள் வழி செல்லும் படகுப் பயணத்தில் சிறு குழந்தைகள் நீரில் மீனென உலாவுவதைக் காண முடிந்தது. காற்றடிக்கப்பட்ட ரப்பர் சக்கரங்களிலும், மிதவைகளிலும் நீந்தி விளையாடும் சிறுவர்கள். மழைக் காலங்களில் ஊறிப் பெருகும் இந்த ஏரி 160கி.மீ நீளத்திலிருந்து விரிந்து 250கி.மீ நீளமாகிவிடும். கம்போடியாவின் மிக முக்கியமான வாழ்வாதாரமாக இருக்கிறது.
25/07 அன்று ‘பண்டே க்டாய்’ ஆலயத்திலிருந்து உலாவைத் துவங்கினோம். ஏழாம் ஜெயவர்மனின் காலத்திய பௌத்த மடாலயம். அங்கோர் தாமின் நுழைவு கோபுரம் போல முகங்களால் ஆன நுழைவாயில் கோபுரம் அளவில் சிறியது. அரண் சூழ்ந்த வளாகத்துள் நிழல் விரித்த பாதையில் ஆங்காங்கே சூரியத் தீவுகள். நீண்ட பாதையின் ஒரு புறம் விற்பனைக்குக் காத்திருக்கும் வண்ணச் சித்திரங்களில் க்மெர் ஆலயங்கள் மீண்டும் மீண்டும் உயிர் கொள்கின்றன. மேலும் நடந்து ஆலய முகப்பை அடைந்ததும் கற்தளத்தில் சிம்மங்கள் முகப்பில் அமர்ந்திருக்க நீளரவங்கள் காவல் புரியும் கூரைகளற்ற முகமண்டபம். சுவர்களில் ஒலிக்காத கற்சலங்கை குலுங்க நடன முத்திரைகளில் தேவமகளிர் நிருத்யம் பயில்கிறார்கள்.
சாலை கோபுர அமைப்பு கொண்ட முகப்பு. பல நிலைகள் தாண்டிச் செல்லும் கருவறை நோக்கிய வழியைப் பார்க்கும்போது பக்கவாட்டில் சரிந்து கிடக்கும் ஆழ்கிணறொன்றில் எட்டிப்பார்ப்பது போல இருந்தது. இன்மையில் தொலைந்து போகும் தொலைவில் தெரிந்தது கருவறை.
முதல்வாயில் கடந்ததும் முதற்பனி பொழிந்த கூரை போல கருங்கற்களில் பசுமை ஆங்காங்கே படர்ந்திருக்க இருளுக்கு அழகான சட்டமிட்ட சதுரமான சாளரங்கள். நடைவழி சுற்றிலும் நின்ற தூண் செதுக்குகளில் சிற்பமென நின்ற அப்சரஸ் நடன மங்கையரின் எலும்பற்றதென வளையும் காந்தள் நீள்விரல்கள் முந்தைய நாளிரவு பார்த்த கம்போடிய பாரம்பரிய நடனத்தை நினைவுறுத்தின. இருபுறமும் காற்றும் மழையும் வெயிலும் வந்துலவும் கூரையற்ற மண்டபங்கள் கருமையும் செம்மையும் பசுமையுமாய் பல வண்ணங்கள் அணிந்திருக்க அடுக்கிய வளையல்கள் என சிறுதூண்கள் நிற்கும் சாளரங்கள். உயரமான விமானம் கொண்ட அதன் மையக் கருவறையை அடைந்த பின்னரே கோவிலின் நீளம் புரிந்தது. உட்புகுந்து வந்த அதே தொலைவு கருவறையிலிருந்து பின்புறம் நீள்கிறது ஆலயம். நீள்வளாகத்தின் மையப் புள்ளியில் இருக்கிறது மூலப்பிரதிட்டை.
ஆளரவம் குறைந்த இக்கோவிலின் ஏகாந்தம் இதற்குத் தனியழகு தருகிறது. தண்டமேந்தி நிற்கும் துவாரபாலர்களும், கையில் மலர்கொண்டு நிற்கும் தேவமகளிரும் மழை நனைத்த ஒளியில் ஒளிர்கிறார்கள். அணி புணைந்து கொண்டும், மலர் சூடியும், ஆடியில் தனைக் கண்டு அழகு செய்தும், காத்திருக்கும் அப்சரஸ்களைப் பார்க்கும்போது, காத்திருத்தலைக் கல்லில் வடித்தவன் கல் மனம் கொண்டவனாகத்தானிருப்பான் என்று தோன்றுகிறது.
கிழக்கு மேபான்
அடுத்ததாக சென்ற கிழக்கு மேபான் ஆலயம் இதற்கு முன்னர் அந்தி வேளை சென்ற ப்ரே ரூப் ஆலயத்தின் இணை ஆலயம். இவ்விரண்டு ஆலயங்களும் பத்து வருட இடைவெளியில் இரண்டாம் ராஜேந்திரவர்மனால் கட்டப்பட்டிருக்கின்றன. இரண்டும் ஒரே அமைப்பு கொண்டது, எனில் கிழக்கு மேபான் உயரம் சற்றுக் குறைவானது. இதன் இரண்டாம் சுற்று வளாகத்தில் நான்கு மூலைகளிலும் நிற்கும் யானை பச்சை மரங்களூடே எதிர்பாராது புலப்படும்போது உயிர்கொண்டதெனத் துணுக்குறச் செய்கிறது. பசிய வனத்திடை அமைந்த இக்கோவில் சியாம் ரீப் நதியின் நீர் வந்து நிறையும் கிழக்கு பராய் எனும் பெரிய ஏரியின் மத்தியில் எழுப்பப்பட்டிருந்திருக்கிறது.இன்று ஏரி வனமாகிவிட்ட நிலையிலும் வனப்புடனே திகழ்கிறது ஆலயம். சதுர வடிவ மேடையின் மேலே நாற்புறமும் கோபுரங்கள் சூழ, நடுவில் மையகோபுரம். கூரைகளற்ற நுழைவாயிலில் சித்திரச் சிலம்புகளால் ஆனதென நிற்கும் வாயில்தூண்கள்.
தோரணவாயிலில் ஹிரண்யனை வயிறு கிழிக்கும் நரசிம்மம். மைய கோபுரத்தின் முகப்பிலும் மும்முகம் கொண்ட ஐராவதத்திலமர்ந்த இந்திரன், தோரணத்தின் இருபுறமும் மூஷிகத்திலமர்ந்த கணங்களின் தலைவன். சீயங்கள் காவலிருக்கும் ஆலயக்கருவறையுள் நுழைந்து மேல்நோக்க, உள்ளீடற்றுக் குறுகி மேலெழும் பட்டைக் கூம்பு வானுக்குத் திறந்திருக்கிறது. சிறுசெங்கற்களாலான சுவர்களில் புடைப்பு சிலையென உருவழிந்த வாயிற்காவலர்கள். சுவரெங்கும் பலநூறு துளைகள், அருமணிகள் இருந்தனவென்றும், துப்பாக்கித் துளைகளென்றும் பல கதைகள் நிலவுகின்றன.
தா சோம்
ஜெயதடாகக்கரையில் இறங்கி சிறுகடைகள் கடந்து இக்கோவிலுள் நுழையும் போது மிகச் சிறியதெனத் தோன்றியது. இதன் முகப்பிலும் முகங்களால் ஆன வாயில் கோபுரம் ஏழாம் ஜெயவர்மனுடைய காலத்தியது எனக் காட்டுகிறது. இதை அவரது தந்தை தரணீந்திரவர்மனுக்கென எழுப்பியிருக்கிறார். ஒப்புநோக்க அளவிற் சிறிய கோவில். இதன் பின்வாயில் வரை செல்ல வேண்டுமா எனக் கேள்விகளோடே பின்புறம் சென்றோம். பின்வாயில் கோபுரம் ஆலயத்தின் உள்ளிருந்து நோக்க ஏதும் சலனமின்றி சாதாரணமாகத் தெரிகிறது. மறுபுறம் வெளியேறி நோக்க திகைக்க வைக்கிறது. தா ஃப்ரோம் போல இந்த நுழைவு வாயிற்கோபுரம் அத்தி மரத்தின் வேர்களின் பிடியில் நிற்கிறது. கோபுரத்தின் மீதேறி ஓங்கி நிற்கிறது மரம். வேர்ச்சிடுக்குகள் விழுதுகள் போல் இருபுறம் தொங்க விரிகுழல் மூதாட்டி போல நிற்கும் வாயில்.
நான் பீன்
ஜெயதடாகத்தின் நடுவில் அமைக்கப்பட்ட தீவில் எழுப்பப்பட்டிருக்கிறது நான் பீன். சாலையிலிருந்து சிறிது தொலைவு நடந்து ஜெயதடாகத்தின் பெரிய நீர்ப்பரப்பைக் கடந்து செல்லும் பாதை. இருபுறமும் ஏரியில் பரவித் தெரியும் மரங்களின் எஞ்சிய அடித்தூர்கள். வரலாற்றுள் இருந்தென கலங்கிய சேற்றுநீரின் அடியிலிருந்து நம் முகம்காண எழுந்து வரும் சிறு மீன்கள். வழியில் இசைக்கப்படும் கம்போடிய இசை காற்றில் வெகுதூரம் அலைந்து தீவை அடைகிறது.
பிணைந்த நாகங்கள் என பொருள்படும் இவ்வாலயம் தடாகத்து மத்தியில் பாந்தள் சுருள் மேலமர்ந்தது. தலையொடு தலையும் வாலொடு வாலும் பிணைந்து சுருளும் அரவுகள். மத்தியில் நிற்கும் கருவறை நோக்கிப் பறந்து வருவது போல பலாஹம் எனும் குதிரை. போதிஸத்வரின் அம்சம் எனக் கருதப்படும் பலாஹம் மூழ்கும் கலமொன்றிலிருந்து வீரர்களைக் காக்கிறது.கிழக்குப் பகுதியில் மனிதத் தலையின் வாயிலிருந்து தடாகத்துக்கு நீர்வரும் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. மற்ற பகுதிகளில் சிம்ம முகமும், குதிரைத் தலையும், யானை சிரசும் நீர் பொழிகின்றன. இக்கோவில் புத்த புராணங்களில் வரும் புவியின் மையத்தில் இருப்பதாக வரும் அனவதப்தா எனும் இமாலய ஏரியைக் குறிக்கிறது (மானசரோவர்). பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஜோ டவ்கன் எனும் சீன யாத்ரீகரின் குறிப்புகளில் இவ்வாலயம் இருக்கிறது.
பண்டே ஸ்ராய்
ஸியாம் ரீப்பிலிருந்து குலேன் மலைகளுக்கு செல்லும் பாதையில் முப்பது கி.மீ தொலைவில் அமைந்த இவ்வளாகம், 967-ல் சிவனுக்கென அமைக்கப்பட்டது. கம்போடிய ஆலயங்கள் என மனம் அதுவரை தொகுத்து வகுத்துக் கொண்டிருந்த சித்திரத்தை முற்றிலும் மாற்றியமைப்பதாக இருந்தது.
பெண்களின் கோட்டை எனப் பொருள்கொண்ட பண்டே ஸ்ராய் பத்தாம் நாற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம். சிற்ப நுட்பங்களாலும், ஆலய அமைப்பினாலும் மட்டுமன்றி இக்கோவில் வளாகத்தின் மற்றொரு தனித்துவம் இது மன்னர்களால் கட்டப்பட்டதல்ல. இரண்டாம் ராஜேந்திரவர்மனின் அமைச்சரான யக்ஞவராஹர் எனும் அந்தணரால் கட்டப்பட்டது. திரிபுவன மஹேஸ்வர எனப் பண்டைய பெயர் கொண்ட இவ்வாலயம் செந்நிற மென்மணற்பாறைகளால் ஆனது. சிவனுக்கென எழுப்பட்ட இவ்வாலயத்தைச் சுற்றி ஈசுவரபுரம் எனும் ஊர் இருந்திருக்கிறது. இன்று அந்நகரின் சுவடுகள் இல்லை.
மறுநிர்மாணப் பணிகளில் மிகச் சிறப்பாக மீட்டமைக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆலயத்தை கண் முன்னர் காண்பது பெரிய அனுபவம். கோவிலை அணுகும் வெளி வாயில்களே செறிவான மலர்மாலைகளென அணிகொண்டு நிற்கின்றன. வெளிப்புற வாயில் மேலே அசுரர்கள் சுண்டனும் உபசுண்டனும் திலோத்தமைக்காக சண்டையிடுவதைக் காட்டுகிறது.
பொன் அணிச்செதுக்குகளென மிக நுணுகிய வேலைப் பாடுகள் கொண்ட இவ்வாலயத்துள்ளே மத்தியில் மூன்று விமானங்கள் உள்ளன. இவை அங்கோரின் மற்ற ஆலயங்களை ஒப்பு நோக்க அளவிற் சிறியதாக நான்கடி உயரமே கொண்ட வாயில்களோடு இருக்கின்றன. எனில் இவை முற்றிலும் மாறுபட்டவையாகவும் பூப்பின்னல்கள் போல மலைக்க வைக்கும் செறிவும் கொண்டவை. ஹொய்சாலர் கோவில்களின் சிற்ப வேலைகளை நினைவில் எழுப்பும் கலை. எனில் க்மெர் கலைக்கென இருக்கும் தனித்துவம் இங்கு முழுமை பெற்றிருக்கிறது. இக்கோவில் நிரையின் வாயிற்கதவுகள் மரவேலைப்பாடுகளை ஒத்தது, மதுரையின் மல்லிகைச் சரம் போல அடர்த்தியானது. கதவின் இருபுறமும் அணிவளையங்களாலான தூண்கள். திருவாச்சி என இருபுறம் அமைந்திருக்கும் வாயிற்தூண்களை ஒட்டிய தோரணப்பரப்பில் இடைவெளியே அற்ற பூஞ்சித்திர செதுக்குகள்.
வடபுறம் உள்ள கோபுரத்தின் முகப்பில் கான் விலங்குகள் அஞ்சி நடுங்க, நாகங்கள் வெருண்டு வெளியேற, ஒருபுறம் கிருஷ்ணன் மேற்பார்வையிட மறுபுறம் அர்ஜூனனின் அம்புகளில் தீக்கிரையாகும் காண்டவபிரஸ்தம். இடையறாது சரங்களால் மழை பொழியும் தேவர்க்கரசன். அஞ்சி வெளியேறும் சிம்மங்களும் மானும், அதன் உடல் மொழிகளில் தெரிகிறது போரின் உக்கிரம். அந்நிய மண்ணில் நமது பாரதக்காதையை சிற்பங்களில் காணும் கணம் சிலிர்க்கவைக்கிறது.
சிவனுக்கென இருக்கும் தென்புற மண்டபமுகப்பு கிழக்குப்புறம் இலங்கையரசன் தூக்கும் கைலாய மலையும், மேற்கு முகத்தில் சிவன் மீது மாறன் அம்பு தொடுப்பதும் சித்தரிக்கப்பட்டுள்ளன. மற்ற விமானங்களும் இதே போன்ற சிற்ப அடர்த்தியோடு பல்வேறு புராணக்கதைகளைக் காட்டுவதாக உள்ளது. இரண்டெனக் கிழித்தெறியும் ஜராசந்தனின் உடல் பிளந்திருக்க நடுவில் தெரியும் பீமனின் சிற்பம் அளவிற் சிறியதெனினும் மிகத் தீவிரமான விசையோடு தெரிகிறது. மற்றொரு நுழைவு வாயில் தோரணத்தில் வாலி சுக்ரீவன் போரும் வாலி வதமும் கடைந்திருக்கிறார்கள்.
மாலையை நோக்கி இறங்கும் வெயிலில் செம்மணற்பாறை சிற்பங்கள் மின்னும் பொன்னென ஒளிகொண்டு நின்றன. அந்தியில் தீப்பரப்பென விழிமயங்கக் கூடிய செம்பாலை நிறம். வெளியேறும் பாதையில் தனித்திருக்கும் இரு ஆலயங்களில் ஒன்றில் உமையோடு காளையமர்ந்த கைலைநாதனும், மற்றொன்றில் ஹிரண்யவதமும் செதுக்கப்பட்டிருந்தன.
ப்ரே கான்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஏழாம் ஜெயவர்மனால் சாம்கள் மீது கொண்ட படைவெற்றிக்காக கட்டப்பட்டது. பல்லாயிரம் அலுவலர்களும் பணியாளர்களும் நிறைந்திருந்ததாக கல்வெட்டுகளிலிருந்து (97,840 பணியாளர்கள் இங்கு பணி புரிந்ததாக இங்கு கிடைத்த கல்வெட்டின் தகவல்) அறியப்படும் ப்ரே கான் ஆலயம் புனித வாள் எனப் பொருள் கொண்டது. நூற்றிமுப்பத்தெட்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்த பேராலயம். இதன் முதன்மை தெய்வம் லோகேஸ்வர போதிசத்வர். வீரகுமாரன் எனும் இளவரசனால் நிறுவப்பட்ட சமஸ்கிருத எழுத்துக் கல்வெட்டு இவ்விடத்தை ‘நகராஜெயஸ்ரீ’ – வெற்றித்திருநகரம் என்றே குறிப்பிடுகிறது. இக்கோவிலுக்கென அமைக்கப்பட்டதே ஜெயதடாகம்.
மழை இருள் திரையிறக்கியிருந்த மாலை. ஐந்து மணிக்கு மேல் நுழைய அனுமதி இருக்காதென அதற்கு முன் சென்று சேர விரைந்தோம்.
மழை நின்றும் தூவானம் நில்லாத இருளுக்குள் மாலை சரிந்து கொண்டிருக்கும் வேளை. கானகத்துள் பொதிந்து ஆளரவமே இல்லாத ஆலயம். சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் ஏதுமில்லை. கோவிலின் வாயிற்பகுதியில் நீர் பெருமளவு தேங்கியிருந்தது. நாமறியாத வரலாறு அகழியெனச் சூழ்ந்து நின்றது. பழைய படகுகளும் முறிந்த மரங்களும் அந்த அகழியையும் கோவிலையும் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டிவைக்கின்றன. பாற்கடல் கடையும் தேவாசுர நிரை இங்கும் இருமருங்கிலும் எழுதலை நாகமாகிய வாசுகியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். கோவிலின் இருபுறமும் இருபெரும் நாகத்தை வாயில் கவ்வி வளைந்து படம் தூக்கும் தலையைக் காலில் அழுந்தியபடி உயர்ந்தோங்கி நிற்கும் கருடன்.
கிழக்கு நோக்கிய இக்கோவிலுள் சென்றவுடன் இவ்வுலகத் தொடர்புகள் முற்றிலும் அறுந்து ஏதோ நாமறியாத உலகத்துள் நுழையும் உணர்வு. பல நிலைகளைத் தாண்டி கதவுகள் திறக்க காட்சி தரும் வைகுண்டம் போல விரிந்து நீளும் பாதை முடிவிலாது கருவறை நோக்கி சென்றது. ஆலயத்தினுள்ளே மழை நீர் ஆங்காங்கே தேங்கியிருந்தது.
முகில் மறைத்த குறைஒளியும், கருமையில் நெய்த பசுமை படிந்த சுவர்களுமாய் மழை வீழ்ந்த கற்பரப்பு பளபளத்தது. கருவறைத் திருவை அணுகுவதற்கு பல நிலைகளைக் கடக்க வேண்டியிருந்தது. நீள நெடுக செல்லும் விஸ்தீரணம் அதே போல இருபுறங்களிலும் ஆலயம் விரிந்து கொண்டே செல்வது நாற்சந்திப்புகளென ஆங்காங்கே கூடும் இடங்களில் புரியத் தொடங்கியது. அது ஒரு மாபெரும் பகடைக் களத்தை விரித்து வைத்தது போன்ற ஆலயம். நீளமும் குறுக்குமாக இரு கோடுகளின் சந்திப்புப் புள்ளியில் மூலக்கருவறை. அதில் பதினாறாம் நூற்றாண்டின் ஸ்தூபி அதற்கு முன்பிருந்த லோகேஸ்வரரின் இடத்தில் நிற்கிறது. மையக் கருவறையைச் சுற்றிலும் ஒன்றையொன்று ஊடறுத்து அமைந்த பல பிரகாரகங்கள். எங்கோ நீர் வடியும் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. அக்கோவிலின் ஆழமென அமைந்த இருளறையில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது.
ஒரு நொடியில் விஷ்ணுபுர ஆலயத்துக்குள் நுழைந்து விட்ட உணர்வும் நாம் கற்பனையில் விரித்துக்கொண்டிருக்கும் ஒரு கதையுலகினுள் நுழைந்துவிட்ட படபடப்பும் ஏற்பட்டது. அந்தப் பேரமைதியில் சொட்டிக் கொண்டிருந்த நீர் நிகழ்காலத்திலிருந்து எங்கோ கனவுகளுக்குள் புதையுண்டிருக்கும் விஷ்ணுபுர ஆலயத்தில் சொட்டிக் கொண்டிருந்தது. இன்னும் சற்று நின்றால் ஞானசபை விவாதங்கள் காதில் விழக்கூடும் எனும் பிரமை ஏற்பட்டது. ஒருவரின் கற்பனையில் உதித்த பேராலயத்தை பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நூறு ஆண்டுகள் முன்பு கல்லில் வடித்த தலத்தில் கண்டடைய முடியுமென்பது மானுடத்தின் மாபெரும் கூட்டு மனம் ஒன்றின் சான்று போல இருந்தது. அதன் அதிர்வுகளிலிருந்து மீள இயலவில்லை. கோவில் மூடும் நேரமென அறிவித்த காவலர் நாங்கள் நுழைந்த திசையைச் சுட்டி, பலரும் திசைதவறிவிடும் சாத்தியத்தை சொன்னார். எதையும் தவறவிட்டுவிடாதிருக்க நெற்களம் முழுமையையும் சிறு அலகால் கொத்த முயலும் குருவியென மனம் பரபரத்தது.
காவலர் இடதுபுறம் இருந்த ஆலயங்களில் கோவர்த்தன மலை சுமந்த கண்ணனையும், ராமனோடு போர் புரியும் ராவணன் சிற்பத்தையும் அழைத்துச் சென்று காட்டினார். பின்பகுதியில் ரோமாபுரி மண்டபம் போலொரு இரண்டடுக்கு மண்டபம் இருக்கிறது, இதில் புனித வாள் என இவ்வளாகம் அழைக்கப்படக் காரணமான அரச வாள் இருந்திருக்கலாம் என ஒரு கருத்து இருக்கிறது.
இன்னும் முழுநாள் காண்பதற்கு அவ்வாலயத்தில் இருந்தும் மனமின்றியே வெளியேறினோம்.. ஐந்தரை மணிக்கு ஆலயம் விட்டு வெளியேறி மாலை இருளில் அமைந்திருந்த கடையில் தேநீர் அருந்திவிட்டு சிறுதொலைவு சாலையில் நடக்கத் தொடங்கினோம்.
சாலையின் இருபுறமும் வானோங்கிய மரங்கள் அடர்ந்த காடு. அந்தி வேளையின் மங்கிய இருளில் கானகம் ஓலமிடத் தொடங்கியது. சிலிர்க்கச் செய்யும் அவ்வோலம் அங்கு காடுகளில் வாழும் சீவிடு போன்ற ஒரு வண்டு எழுப்புவது. அலையலையாக ஒன்று தொடங்கியதும் மற்றொன்று குரல் கோர்த்துக்கொண்டு எழுப்பும் அமானுட ஒலி அவ்விடத்தில் கவியப்போகும் அந்தகாரத்தையும் எங்கோ மறந்து போன கடந்த காலத்தையும் காட்டுள் மறைந்து கிடந்த அக்கோவில்களையும் குறித்து ஓலமிடுவதாகத் தோன்றுகிறது. மாலை மயங்கிய பிறகு இதுபோன்ற ஏதேனும் ஆலய வளாகங்களுள் தனித்தலைவது துயில் மறக்கும் இரவுகளுக்கும், விழிமூடா கனவுகளுக்கும் நிச்சயமான வழி.
நாமறியாத க்மெரின் பொற்காலம், தொடர்ந்து வந்த பெரு வீழ்ச்சி, கானகத்துள் மறக்கப்பட்ட காலம் என யாருமறியாத மர்மங்களை உரக்க வீறிடுகிறது சில்வண்டு. அவற்றின் மொழியறியாப்பிழையில் மானுடம்.