‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-2

bowபாண்டவப் படைகளின் நடுவினூடாக காசிநாட்டு இளவரசி அம்பை கூந்தல் எழுந்து நீண்டு பறக்க பெருங்குரலெழுப்பியபடி ஓடினாள். ஒவ்வொரு ஆயிரத்தவர் குழுவுக்கும் இருவர் என காவலர் சிறிய மரமேடைமேல் வேலுடன் விழித்து அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு அக்ஷௌகிணியின் தொடக்கத்திலும் சிறு காவலரணில் எழுவர் தாழாப் படைக்கலங்களுடன் இருந்தனர். எவரும் அவளை காணவில்லை. பெருவெள்ளம் அகன்ற பின் சேற்றில் பரவிக் கிடக்கும் சருகுகளும் சுள்ளிகளும் தடிகளும்போல பாண்டவப் படை நிலம்படிந்து துயின்றுகொண்டிருந்தது. இரவிலெழுந்த நீர்வெம்மை மிக்க காற்று அவர்களின்மேல் அசையாது நின்றிருக்க மீன்நெய்ப் பந்தங்களின் ஒளிவட்டங்களில் கொசுத்திரள்கள் பொறிகளென, புகையென சுழன்றன. அவர்கள் எவரும் அவள் ஓசையை கேட்கவில்லை.

ஜலன் அவர்கள் தன்னை அறியக்கூடுமென அஞ்சி மறுகணமே அது நிகழவில்லை என்பதை உணர்ந்தான். அவன் காற்றுபோல விழியறியாது சென்றுகொண்டிருந்தான். அவ்வாறென்றால் நான் இறந்துவிட்டேனா? அந்த எண்ணம் எழுந்ததுமே அச்சத்தில் உடல்நடுக்குற ஒருகணம் நின்றான். இறக்கவில்லை என எவ்வாறு உணர்வது? தன்னை உயிருடன் இருப்பதாக உணர்வதற்கு பிறர் தேவைப்படுகிறார்கள் என்னும் விந்தையால் அவன் உளநிலைப்பு அடைந்தான். அவ்வண்ணமென்றால் உயிரோடிருப்பது என்பதே பிறர் அளிக்கும் நிலைதானா? தன்னிருப்பென்பது காலமும் இடமும் கடந்தது. தான் மட்டுமே அறிந்தது.

என்ன செய்வதென்றறியாமல் அவன் சுழன்று நோக்கினான். அறிக, என்னை அறிக! நான் இருக்கிறேன். நான் இங்கிருக்கிறேன். கூச்சலிடலாம், நெஞ்சிலறைந்து வீறிடலாம். இவர்களில் எவரேனும் என்னை கேட்டால், எவர் விழியேனும் என்னை அறிந்தால், நான் உயிருடனிருக்கிறேன். கேட்டாகவேண்டும், அறிந்தாகவேண்டும். இல்லையேல் நான் இப்புவியில் இல்லை என்றாவேன். அவன் “காவலர்தலைவரே! காவலர்தலைவரே!” என அழைத்தான். காவலர்தலைவன் அவ்வொலி எட்டும் தொலைவுக்கு அப்பால் என இயல்பாக வேலை கைமாற்றியபடி கொசுக்களை விரட்டினான். அவனருகே பந்தம் மெல்லிய ஓசையுடன் வாய்திறந்து ஒரு வண்டை விழுங்கியது.

ஜலன் பெருகும் அச்சத்துடன் கால்கள் நடுங்க நின்றான். பின்னர் எண்ணி காலெடுத்து முன்னால் சென்று காவலர்தலைவனின் தோளை மெல்ல தொட்டான். அவன் அதை உணரவில்லை என்று உணர்ந்ததும் இரு கைகளாலும் அவன் உடலைப்பற்றி உலுக்கினான். அவனால் தொட முடிந்தது, மானுட உடலின் வெம்மையையும் மென்மையையும் அறியமுடிந்தது. ஆனால் காவலர்தலைவன் வெறுமனே கொட்டாவி விட்டபடி சாய்ந்து அமர்ந்துகொண்டான். ஜலன் தளர்ந்து வேலை ஊன்றி மண்ணில் குந்தி அமர்ந்தான். சில கணங்கள் உளம் தொய்ந்து அசைவிழந்து கிடந்தது. ஒரு கணத்தில் பற்றிக்கொள்ள துயரா சினமா என்றறியாத உளப்பொங்குதல் எழுந்தது. கண்களிலிருந்து நீர் வழியலாயிற்று. எழுந்து வேலால் அங்குளோர் அனைவரையும் குத்திவீசவேண்டும் என்றும், அவர்களின் குருதிமேல் நின்றாடவேண்டும் என்றும் வெறிகொண்டான். ஆனால் உடல் செயலற்று இருந்தது.

பின்னர் எழுந்து திரும்பி நோக்கினான். ஒன்றே செய்வதற்குள்ளது, சென்று தன் காவல்மேடையை அடைவது. அங்கு என் உடல் இருக்கும். அரைத்துயிலில், விண்மீன்கள் உதிர்வதை நோக்கிக்கொண்டிருக்கும். சென்று அதில் பொருந்திக்கொள்வேன். அவ்வுடலில் இருந்து ‘எல்லாம் கனவு!’ என உணர்ந்து விழித்துக்கொள்வேன். அவன் திரும்புவதற்குள் அப்பாலிருந்து வெறிக்கூச்சல் எழுந்தது. அவன் பதைத்து நோக்கியபோது இரு கைகளையும் விரித்தபடி அம்பை அவனை நோக்கி சுழல்காற்றென வருவது தெரிந்தது. அவன் “அன்னையே” என்றான். “வா. வந்து காட்டு… எங்குளான் அவன்? அவன் எங்குளான்?” என்று அவள் கூவினாள். “வருகிறேன், அன்னையே” என்று சொல்லி அவன் அவளுடன் ஓடினான்.

வற்றிய ஏரியின் மீன்படிவு என துயிலும் படைகளினூடாக அவர்கள் சென்றார்கள். “வீணர்கள்… கோழைகள்…” என்று அவள் பற்களைக் கடித்து கைகளை நீட்டி கூவினாள். “போர்புரிய வந்தவர்களல்ல இவர்கள்… கீழ்மக்கள். தலைகொடுக்க வந்த வெள்ளாடுகள்…” என சிலரை ஓங்கி உதைத்தாள். அவர்கள் திடுக்கிட்டு உடலதிர்ந்தபின் மீண்டும் துயிலில் மூழ்கினர். ஜலன் “அதோ அதுதான் இளைய பாண்டவர் அர்ஜுனரின் பாடிவீடு, அரசி” என்றான். உறுமலோசையுடன் அவள் அதை நோக்கி சென்றாள்.

தட்டிகளாலும் மரப்பலகைகளாலும் செய்யப்பட்ட சிறிய பாடிவீட்டின் கதவு திறந்திருந்தது. வெளியே இரு காவலர் வேல்களுடன் அமர்ந்திருந்தனர். அவள் அவர்களைக் கடந்து உள்ளே சென்று அங்கே மஞ்சப்பலகையில் மல்லாந்து படுத்திருந்த அர்ஜுனனை அணுகினாள். அவள் உள்ளே நுழைந்த காலடியோசையை அவன் உடலே கேட்டது. மூடிய விழியிமை விதிர்ப்பு கொள்ள அவன் எழுவதற்குள் அவள் அவன் நெஞ்சின்மேல் தன் காலைத் தூக்கி வைத்தாள். “எழுக, மூடா! கீழ்மகனே, நாணிலையா உனக்கு?” என்றாள். “அரசி! அன்னையே!” என அவன் தடுமாறினான். “உன் ஆயிரம் அம்புகள் ஒற்றை இலக்கை அடையாது உதிர்ந்தன. வீரனென்று வில்தூக்கி அலைகிறாயா? இழிந்தோனே, நீ அரசமகனா?” என்று கூவினாள்.

அர்ஜுனன் விழிமலைக்க அவளை நோக்கினான். கைகளைக் கூப்பியபடி “அன்னையே, நான் என் இறுதித்திறன் வரை குவித்தே அவரை எதிர்கொள்கிறேன். என்னிடம் இனி எஞ்சுவதேதுமில்லை” என்றான். “பிறகு ஏன் உன்னை இருதோள் வில்லவன் என்கிறார்கள்? எங்குளது உன் கலை? எவர் உன் ஆசிரியர்?” என்றாள் அவள். அர்ஜுனன் “என் கலையை நான் ஒவ்வொருநாளும் கணமும் என வழிபட்டேன். ஆனால் மும்முறை அதன்மேல் நான் ஐயம் கொண்டு வில்தாழ்த்தினேன். அரசி, ஒவ்வொருமுறை ஐயம்கொள்கையிலும் என் கலை என்னை ஏழுமுறை கைவிடுகிறது. வழுக்குமரம் ஏறுபவன்போல் இழந்து இழந்து எய்தியவன் நான். அவரோ ஒருகணமும் தன் வில்லை ஐயுறவில்லை. பெருங்கலை சலியா நோன்பை விலையெனக் கோருகிறது” என்றான்.

அவள் “கீழ்மகனே!” என்று கூவியபடி அவன் தலையை ஓங்கி உதைத்தாள். “இழிமகனே, கோழையே, கீழோனே!” என்று கூவியபடி வெறிகொண்டு அவன் தலையை உதைத்துக்கொண்டே இருந்தாள். பின்னர் மூச்சுவாங்க நின்று “நீ பிறந்ததற்கு வேறேது பயன்? இக்கடன் தீர்க்க ஆற்றலில்லாதோன் என்றால் தின்று கழித்து செத்து மட்கும் ஊன்பிண்டமன்றி வேறென்ன நீ?” என்றாள். சினவெறியில் அவள் கைகள் பெருகுவதுபோல தோன்றின. நெஞ்சிலும் தலையிலும் மாறிமாறி ஓசையுடன் அறைந்தபடி திரும்பி நான்கு பக்கமும் நோக்கி “எங்கு சென்றீர்கள்? இழிமகள்களே, எங்கு சென்றீர்கள்? வந்து சொல்லுங்கள், உங்கள் குருதியின் துளியிடம் அவன் ஏன் பிறந்தான் என்று… வருக…” என்று குரலெழுப்பினாள்.

குடிலின் மறுபக்கக் கதவினூடாக அவளைப்போலவே தோன்றிய அரசமகள் ஒருத்தி மெல்ல உள்ளே வந்தாள். அவளைத் தொடர்ந்து அவள் ஆடிப்பாவை என இன்னொருத்தி. அவர்களை நோக்கி அம்பை “இதோ உங்கள் உடலில் முளைத்தெழுந்த வில்லவன். திறனிழந்து நம்பிக்கையழிந்து உயிர்பிரிந்த உடல் என கிடக்கிறான்… பார்த்துக்கொள்ளுங்கள். இவனுக்காகவே இத்தனை நாள் விண்ணிலிருந்து பெருமிதம் கொண்டீர்கள்…” என்றாள். சினம் தாளாமல் அவள் நகைத்தாள். விழிகளில் அழுகையுடன், பற்கள் துறித்துத் தெரிய, தொண்டை ஏறியிறங்க, தலையை பின்தள்ளி முழங்கிச் சிரித்து “நீங்கள் உளம் கரந்த வஞ்சம் எனக்கு அளித்த பரிசு இந்த ஊன்தடி. உங்கள் தவம் முதிர்ந்து எழுந்தது இந்த வெற்றுரு… நன்றாக பார்த்துக்கொள்க… நன்று… இதற்குமேல் உங்களுக்கும் ஒன்றுமில்லை என்று அறிக!” என்றாள்.

அர்ஜுனன் எழுந்து அமர்ந்து கைகூப்பி அவ்விரு பெண்களையும் நோக்கி “அன்னையரே!” என்றான். கசப்புடன் முகம் சுளிக்க முன்னால் வந்து “உன் தந்தையரைப் பெற்ற அன்னையர் நாங்கள். என் பெயர் அம்பிகை” என்றாள் முதல் அரசி. “இவள் என் தங்கை அம்பாலிகை. எங்கள் கொழுநரை நாங்கள் விரும்பினோம். எளிய விழைவுகளிலும் அதைவிட எளிய வஞ்சங்களிலும் திளைத்தோம். எங்கள் கனவுகளில் நாங்கள் எங்கள் அக்கையாகி எரிந்து எழுந்துகொண்டிருந்தோம். அதை எங்கள் உள்ளத்திடமிருந்தே மறைத்தோம்.”

“என் மைந்தன் பிறந்து அவன் விழியிலாதோன் என வயற்றாட்டி சொன்ன முதற்கணம் நான் ஏங்கியது இவன் எப்படி அவரை எதிர்கொள்வான், எங்ஙனம் வஞ்சம் முடிப்பான் என்றுதான். அன்று உளமழிந்து கண்களை மூடிக்கொண்டு விழிநீர் வடித்தேன். அவன் கொண்ட விழியின்மையால் அக்கண்ணீர் என எண்ணி சேடியர் என்னை நோக்கி ஆறுதலுரைத்தனர். நான் வியந்துகொண்டிருந்தேன். அந்த முதல் எண்ணம் என் உள்ளத்தில் இயல்பாக எழுந்தபோதுதான் என் கனவுக்குள் இருப்பதென்ன என்று என் உள்ளம் அறிந்தது” என்றாள் அம்பிகை. “நான் என் அக்கையன்றி வேறல்ல. அவள் பிறிதொரு உடலில் பிறிதொரு வழியில் வெளிப்பட்டதே நான்.”

அம்பாலிகை “ஆம், நானும் என் மைந்தன் வெளிறிய சிறுபாவை என பிறந்தபோது முதல் எண்ணமாக அடைந்தது இவன் கையில் வில் நிற்குமா, இவனால் அவ்வஞ்சத்தை முடிக்கவியலுமா என்றுதான்…” என்றாள். அம்பிகை மேலும் அருகே வந்தாள். “எங்கள் வஞ்சம் எங்கள் மைந்தரின் ஆழத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. அவர்கள் தங்கள் கனவுகளில் அதை அறிந்துகொண்டிருந்தனர். ஆகவே நனவில் அதற்கு எதிராக நெடுந்தொலைவு சென்றனர். அந்தக் கனவுகளிலிருந்து பிறந்தவர்கள் நீங்கள்…”

அவள் முகம் அம்பையின் முகம்போலவே உணர்வுக்கொதிப்பு கொண்டு அசைந்தது. “உன் கைவில் எங்களால் அளிக்கப்பட்டது. அதற்கு நாங்கள் இட்ட முதற்பணி அவ்வஞ்சத்தை முடிப்பதே. அதை செய்யாதொழிந்தால் உன்மேல் விண்ணிலிருந்து காறி உமிழ்வோம். நீ விண்ணுலகு எய்த ஒருபோதும் ஒப்போம். அறிக, விண்ணேறிய முன்னோரின் சொல்லின்றி எவரும் மூச்சுலகையும் அடைவதில்லை. சிறுமதியனே, நீ தோற்று மீண்டாயென்றால் உன்னை எங்கள் எரிசொல்லால் மீளா இருளுலகுக்கே அனுப்புவோம். உன் குடியின் மைந்தர் எவரும் அளிக்கும் எள்ளும் நீரும் ஏற்கமாட்டோம்…”

அம்பாலிகை “நீ உன் தந்தையின் மைந்தன் என்றால் உன் வஞ்சம் எரிந்தெழுக! வென்றால் மட்டுமே நீ எங்கள் மைந்தன். இது எங்கள் ஆணை! அறிக தெய்வங்கள், இது எங்கள் இறுதிச் சொல்!” என்றாள். அம்பை “வில்லுக்கும் தனக்கும் நடுவே சொல்வந்து நிற்கக் கண்டவன் இவன். இனி இவன் வெல்லப்போவதில்லை. விலகுக… இனி இவனிடம் எனக்கு சொல் இல்லை” என்றபடி வாசல் நோக்கி சென்றாள். அர்ஜுனன் கைநீட்டியபடி அவள் பின்னால் சென்று “அன்னையே… அன்னையே… நில்லுங்கள். ஆணை, நான் என் வில்லுடன் களம்நின்று அவரை கொல்வேன். என் அன்னையர் உளம்கொண்ட வஞ்சம் ஒழிப்பேன். ஆணை!” என்றான்.

அம்பை நின்று இகழ்ச்சியால் வளைந்த உதடுகளுடன் “நீ அவனுடன் களம் நின்றுபொருதுவாய், அது எனக்கு தெரியும். எவ்வகையிலும் அவனை வெல்வேன் என வஞ்சினம் உரைத்துள்ளாயா?” என்றாள். அர்ஜுனன் “அவரை வெல்வேன் என்று வில்தொட்டு ஆணையிட்டுள்ளேன்” என்றான். “அறிவிலி!” என அவள் கைநீட்டி கூவினாள். கழுத்துத் தசைகள் அதிர விழிகள் நீர்மைகொள்ள பெருங்குரலில் கேட்டாள் “நான் கேட்டதற்கு மறுமொழி சொல். எவ்வண்ணமேனும் வெல்வேன், எந்நிலையிலும் கொல்வேன் என்று வஞ்சினம் உரைத்தாயா?” அர்ஜுனன் பேசாமல் நின்றான்.

அம்பை பற்களைக் கடித்து சீறும் குரலில் “இப்போது நான் கேட்கிறேன், அவனைக் கொல்ல எந்த எல்லைக்கும் செல்வாயா?” என்றாள். இரைகண்ட சிறுத்தைபோல் தலையை முன் நீட்டி மெல்லடி வைத்து அவனை அணுகி “சொல், எவ்விலையும் கொடுத்து அதை எய்துவாயா?” என்றாள். அவன் திறந்த வாயும் விழித்த கண்களுமாக நின்றான். “சொல், நீ கொண்ட நெறிகளனைத்தையும் கைவிடுவாயா? நீ உயர்வென்று எண்ணும் அனைத்தையும் கடந்துசெல்வாயா? அரக்கனாக அசுரனாக விலங்காக பாதாளதெய்வமாக மாறி நின்று போரிடவும் சித்தமாவாயா?”

அர்ஜுனன் “இல்லை அன்னையே, நான் என் வாழ்க்கையை இளைய யாதவருக்கு அளித்தவன். அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டவன்!” என்றான். “நீ யாதவனை விட்டு எழுவாயா? அவன் குருதிகொள்ளும்பொருட்டு நாராயணவேதத்தை உடைப்பாயா?” அர்ஜுனன் “மாட்டேன்” என்றான். “சீ, இன்று முடிந்தது உனக்கும் எனக்குமான உறவு… இழிவிலங்கே, விலகு!” என்றபடி அவள் திரும்ப அர்ஜுனன் “அன்னையே…” என்றான். “என்னை இனி அச்சொல்லால் அழைக்காதே” என்றபடி அவள் வெளியே ஓடினாள்.

இரு அன்னையரும் அவளைத் தொடர ஜலன் அர்ஜுனனை நோக்கியபடி நின்றான். அவன் உடல் காய்ச்சல்கண்டவன்போல் நடுங்கிக்கொண்டிருந்தது. பலமுறை வாயைத் திறந்து மூடினான். பின்னர் மெல்ல பின்னகர்ந்து சுவரை பற்றிக்கொண்டு மஞ்சத்தில் அமர்ந்தான். வெளியே அன்னையரின் பெருங்கூச்சல் கேட்டது. ஜலன் பாடிவீட்டிலிருந்து வெளியே ஓடினான். அங்கே மூவரும் கைகளை விரித்து ஆர்ப்பரித்தபடி சென்றார்கள்.

ஜலன் துயின்றுகொண்டிருப்பவர்களை நோக்கினான். அவர்கள் அவ்வோசையை கேட்கவில்லை என்று முதலில் தோன்றியது. ஆனால் துயின்றுகொண்டிருந்த ஒருவனின் முகத்தை நோக்கியபோது அதில் தெரிந்த உணர்வெழுச்சியின் நெளிவு அவனை திகைக்கச் செய்தது. அவன் முகங்களை மாறி மாறி பார்த்தான். அத்தனை முகங்களிலும் அச்சமும் சினமும் துயரும் என உணர்வுகள் கொந்தளித்துக்கொண்டிருந்தன. படுத்தபடியே அவ்வுடல்கள் போர்புரிந்துகொண்டிருந்தன.

மூன்று அன்னையரும் பீமனின் பாடிவீட்டை அணுகி அதன் இரு கதவுகளையும் மாறிமாறி அறைந்தனர். பெருங்காற்றிலென கதவுகள் உடைந்து திறக்க உள்ளே புகுந்து சுழன்று வெளியே வந்தனர். மகிழமரத்தின் அடியில் பீமன் வெறுந்தரையில் மல்லாந்து படுத்திருந்தான். அவனருகே ஊனுணவுக் கலங்களும் மதுக்குடங்களும் உருண்டு கிடந்தன. அம்பை பாய்ந்து வந்த விசையில் அவன் தோளை ஓங்கி உதைத்து “எழுக! எழுக, மூடா!” என்றாள். பீமன் எழுந்தமர்ந்து அவளை நோக்கி உடனே அடையாளம் கண்டுகொண்டு கைகூப்பியபடி எழுந்து நின்று “அன்னையே!” என்றான்.

“நீ அவனை கொல்லலாகுமா? சொல், நீ அவனை கொல்வாயா?” என்றாள் அம்பை. “அன்னையே, அவரைக் கொல்ல வஞ்சினம் உரைத்தவன் என் இளையவனாகிய அர்ஜுனன்” என்றான். அம்பை பாய்ந்து அவன் நெஞ்சை எட்டி உதைக்க அவன் இரண்டு அடி பின்னடைந்தான். அவன் முகத்தில் உமிழ்ந்து “கோழை… கீழ்மகன்… என் ஆணையை தவிர்க்கிறாயா?” என்றாள். “இல்லை, அன்னையே. அதன்பொருட்டு இமையசைக்காது உயிர்துறப்பேன். இது என் சொல். ஆனால் அவரைக் கொல்ல அவனால்தான் இயலும் என்பது நிமித்திகர் கூற்று” என்றான் பீமன்.

“இல்லை, அவனைக் கொல்ல அவனால் இயலாது. அல்ல அல்ல என அனைத்தையும் விலக்கி ஒன்றை மட்டும் தான் என கொண்டுள்ளவனின் தன்னிலையை மூன்று பெருந்தெய்வங்களும் காக்கின்றன. அவனைக் கொல்ல அந்த இழிமகனால் இயலாது. அவனைக் கொல்பவன் அவனுக்கு நேர் எதிர்த்திசையில் செல்பவன். அவனுக்கு விண்ணுலாவும் தேவர்கள் அனைவரும் துணையிருப்பர். இருளுலாவும் அத்தனை தெய்வங்களையும் துணைக்கொள்பவனே அவனை கொல்லமுடியும்” என்றாள் அம்பை. “நான் துணைக்கொள்கிறேன். நான் என்னை பலியிட்டு அவர்களின் ஆற்றலனைத்தையும் அடைகிறேன்” என்றான் பீமன்.

“சொல், எதை துறப்பாய்? நீ அவனைக் கொல்லும்பொருட்டு எதை கடப்பாய்?” பீமன் தன் நெஞ்சில் ஓங்கியறைந்து “அனைத்தையும் துறப்பேன், எதையும் கடப்பேன். இது என் ஆணை!” என்றான். “நீ கொண்ட நல்லியல்புகள் அனைத்தையும் துறப்பாயா? தெய்வம் நீத்தோர் சான்றோர் என நீ பெற்ற நல்லருள் அனைத்தையும் இழப்பாயா?” என்றாள் அம்பிகை. கைநீட்டியபடி அவள் அவனை நோக்கி வந்தாள். “சொல், நீ எங்கள் பொருட்டு முடிவிலாப் பெருநரகுக்குச் செல்லவும் துணிவாயா?” பீமன் “ஆம் அன்னையே, செல்வேன். எனக்கென்று எதையும் நாடமாட்டேன்” என்றான்.

அம்பாலிகை அருகே வந்து அவன் தோளைத் தொட்டு “உன்னை வாழ்த்துகிறேன், மைந்தா. என் கருவில் உன் தந்தை எழுந்தபோது அடைந்த உவகையை இன்று அடைகிறேன்” என்றாள். அவன் மறுதோளைத் தொட்டு “எழுக! உன் இருளனைத்தும் பெருகுக! நீ வெல்வாய்!” என்றாள் அம்பை. பீமன் “ஆணை, அன்னையே!” என்றான். அம்பை தன் இரு கைகளையும் விரிக்க இருபுறமும் இருளில் அசைவுகள் எழுந்தன. ஜலன் அறியாது பின்னடைந்தான். பேருருவ நிழல்தோற்றங்களை அவன் அங்கே கண்டான்.

இருளில் நாகங்கள் என விழியொளி சூடியவை. கள்ளிச்செடியென கைகள் பெருகியவை. விடாய்கொண்ட வாயும் வெறிநகைப்பாகிய பற்களும் கொண்டவை. அவை கைகளை விரித்து வெறிக்கூச்சலெழுப்பின. ஒன்றுடன் ஒன்று இணைந்த உடல்கள் சுழித்து சுற்றிவந்தன. பீமன் தன் கைகளை விரித்தபடி அவற்றை நோக்கி போர்க்குரலெழுப்பினான். நெஞ்சில் ஓங்கி அறைந்து வஞ்சினம் கூவினான். அவை அதை ஏற்று முழக்கமிட்டன. ஒலி விரியவிரிய அவை பெருகிப் பரந்தன. ஆயிரம் பல்லாயிரம் தெய்வங்கள். இருண்ட ஏழடுக்குகளிலிருந்து அவை எழுந்தெழுந்து வந்தபடியே இருந்தன.

பீமனின் உடல் கருமைகொண்டு ஒளிவிடத் தொடங்கியது. அவன் கைநகங்கள் எருமை விழிகளென தெரிந்தன. கைகளை விரித்து அசைத்து மதயானை என பிளிறியபடி அவன் துயிலும் படைகள் நடுவே சுற்றிவந்தான். அவனுடன் நோக்க நோக்க பெருகிக்கொண்டிருந்த பேயுருக்களும் சேர்ந்துகொண்டன. அவை துயின்றுகொண்டிருந்த படைவீரர்களின் நெஞ்சிலும் தலையிலும் மிதித்து எழுப்பின. தங்கள் தலையிலும் மார்பிலும் அறைந்தபடி கூச்சலிட்டன. அவர்கள் ஒவ்வொருவராக அக்குரல் கேட்டு எழுந்தார்கள். அவர்களின் விழிகள் மாறிவிட்டிருந்தன. அவர்களும் கைகளை விரித்து போர்க்கூச்சலெழுப்பினர். அலையலையென பாண்டவப் பெரும்படை எழுந்துகொண்டிருந்தது. பூதவடிவுகொண்ட தெய்வங்களும் வெறியெழுந்த படைவீரர்களும் இணைந்து நிழலுடன் நிழல் கலந்ததுபோல் அவ்வெளியை நிறைத்து கொந்தளித்தனர்.

“செல்க! நாளை அவன் நெஞ்சுபிளந்து குருதி கொள்க! நீ வெல்வாய். பிறிதொன்றிலாதவன் வெல்லாமலிருக்க ஊழ்நெறியில்லை!” என்று அம்பை சொன்னாள். “ஆம். நான் வெல்வேன். நான் குருதியிலாடுவேன்!” என்று பீமன் நெஞ்சிலறைந்து கூச்சலிட்டான். அம்பை “அங்கே இலக்கு பிழைத்த அம்புகள் அனைத்தும் வஞ்சம் திரட்டி மீண்டெழுகின்றன. அவை உங்கள் அம்புத்தூளிகளில் மீண்டும் வந்தமர்க… நாளை பெரும்போரில் இந்த மண் குருதி வயலாகும்” என்றாள்.

முதல்முறையாக அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரியும் சிரிப்பு எழுந்தது. “அறிக, தெய்வங்கள்! ஒரு துளி விழிநீர் ஏழு குருதிக்கடல்களுக்கு நிகரானது. ஒரு பெண்ணுக்கிழைத்த பழிக்கென பன்னிரு தலைமுறைகள் நிணப்பலி அளித்தாகவேண்டும்!” மறுகணமே மகிழ்வு வஞ்சமும் வெறியும் துயரமும் கசப்புமென்றாக அவள் வீறிட்டாள் “வஞ்சம் எழுக! பெண்வஞ்சம் எழுக! குருதி! குருதி! கொழுங்குருதி! செங்கொழுங்குருதி!”

அவர்கள் மூவரும் பாண்டவப் படைகளினூடாக பறப்பதுபோல ஊடுருவிச் சென்றார்கள். படைப்பிரிவுகளுக்கு பின்பக்கம் அடுமனையும் மருத்துவநிலையும் பலநூறு நெய்விளக்குகள் எரிய ஒளிகொண்டிருந்தன. அடுமனைகளில் கலங்கள் அனல்கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தன. எழுந்த புகை பந்த வெளிச்சத்தில் தழலென்றே விழிக்கு தெரிந்தது. நிழலுரு மேலெழுந்து விண்ணில் பரவியாட அடுதொழிலர் உலவிக்கொண்டிருந்தனர். மருத்துவநிலைகளில் கைகளில் அகல்விளக்குகளுடன் அலைந்துகொண்டிருந்த மருத்துவப்பணியாளர்கள் மின்மினி செறிந்த சேற்றுப்பரப்பென அதை தோன்றச் செய்தனர்.

அவர்களுக்கும் அப்பால் யானைக்கொட்டடிகளும் புரவிநிலைகளும் இருந்தன. அவர்களைக் கண்ட யானைகள் கால் மாற்றிவைத்து மெல்ல பிளிறின. கட்டுத்தறியில் துள்ளிச்சுழன்ற புரவிகள் கனைத்தன. அப்பால் விழிதொடு எல்லைவரை விரிந்த ஏவலர் படைகளில் கட்டப்பட்டிருந்த காளைகள் கொம்புதாழ்த்தி பெருமூச்சுவிட்டன. ஏவலர் சிலர் துயிலில் புரண்டுபடுத்து முனகினர். சிலர் கடுங்குளிரை உணர்ந்து இடையாடையால் உடல் போர்த்திக்கொண்டனர்.

அதற்கும் அப்பாலிருந்த கொல்லர்களின் ஆலைநிரை உமிநீற்றுக் குவைகள்போல் புகை எழுப்பிக்கொண்டிருந்தது. அங்கே துருத்திகள் மூச்செறிய எரிகனல் சீறி சீறி எழுந்தது. பலநூறு கொல்லர்கள் பழுக்கக் காய்ச்சப்பட்ட வேல்முனைகளையும் அம்புமூக்குகளையும் கிடுக்கியால் எடுத்து பீடத்தில் வைத்தனர். பெருங்கூடங்கள் காற்றில் சுழன்று வந்து அறைய உலோகம் அடிவாங்கி சிலம்பி துள்ளியது. பின் அடங்கிய ஒலியெழுப்பி வடிவம் சூடியது. அதன் மேல் அடிமேல் அடியென விழுந்துகொண்டே இருக்க சிவந்து சிவந்து அது தன் சிதைவுகள் அனைத்திலிருந்தும் விடுபட்டெழுந்தது.

ஜலன் விழித்து நோக்கியபடி நின்றான். அன்னையர் உலைப்பீடங்கள் நடுவே பரவினர். ஒவ்வொரு அம்பாக நோக்கி தலையசைத்தபடி, பற்களைக் கடித்து உதடுகளை நெரித்து உறுமியபடி சுற்றிவந்தனர். அவன் பழுக்கக் காய்ச்சப்பட்ட அம்புகள் மலரிதழ்கள்போல பணிவதை, வழிந்து நீண்டு முனைகொள்வதை, நீரில் விழுந்து சீறி மூழ்குவதை கண்டான். அவற்றை எடுத்து சுழலும் சாணைகற்களில் வைத்தபோது செம்பொறிகள் நீண்டு தெறித்தன. கூர்கொண்டு வெள்ளித்துளி ஒன்றை சூடிக்கொண்டன. ஒரு விழி அவற்றில் திறப்பதுபோலிருந்தது. முட்டைக்குள்ளிருந்து வெளிவந்த நாகத்தின் முதல் விழிநோக்கு.

“பிறந்து பிறந்தெழுக! ஒழியாது இலக்கு தேடுக! குருதியுண்டு அமையும்வரை செல்க!” என்று அம்பை கூவினாள். “நாளை… விடிகிறது… நாளை அவன் வீழும் நாள்… பல்லாயிரம் தலைகள் உருள்க! பல்லாயிரம் நெஞ்சுகள் பிளந்தழிக! சோரி பெருகுக! வீழ்வோர் குரலால் விண்நிறைக!” அவளுடன் இணைந்து கைகளை விரித்தபடி அம்பிகையும் அம்பாலிகையும் “ஆம், நாளை! நாளை!” என்று கூவினர். “நாளை வஞ்சநிறைவு. நாளை பழிப்பொலிவு!” அவர்கள் கைகளை விரித்து நகைத்துக்கூவியபடி வெளியே செல்ல ஜலன் பின்னால் சென்றான். இருளலைகளாக கொந்தளித்துக்கொண்டிருந்த பாண்டவப் படைகளுக்கும் பாதாளதெய்வங்களுக்கும் நடுவே அவர்கள் வெறிக்கூச்சலிட்டுக்கொண்டு முன்னால் செல்ல அவன் தொடர்ந்தான்.

 வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைசரியான வாழ்க்கையா?
அடுத்த கட்டுரைசென்னையில் பேசுகிறேன்