ஐரோப்பா 8- காலத்தின் விழிமணி

kohinura

இந்தியத் தொன்மங்களில் வரும் அருமணி சியமந்தகம். இது ஒரு வைரம் என்பதை வர்ணனைகளிலிருந்து உணரமுடிகிறது. சூரியன் தன் கழுத்திலணிந்திருந்த இந்த வைரம் சத்ராஜித் என்னும் யாதவனுக்குக் கிடைத்தது. அங்கிருந்து அது கிருஷ்ணனின் கைக்கு வந்தது. இந்த மணியைப்பற்றிய வரலாற்றுக்குறிப்பு ஏதுமில்லை. பாகவதத்திலும் பின்னர் விஷ்ணுபுராணத்திலும் இதைப்பற்றிய கதைகள் உள்ளன. இந்த வைரம் எது, எங்குள்ளது என்பதைப்பற்றி ஏராளமான கதைகள் உள்ளன.

இத்தகைய ஒர் அரிய வைரம் அப்படி தொலைந்துபோய்விடாது, எங்காவது இருக்கும் என்று சிலர் வாதிடுகிறார்கள். கோகினூர் வைரம்தான் அது என்று கதை உள்ளது. இன்னொருநாட்டில் என்றால் பல நாவல்கள், சினிமாக்கள் வந்திருக்கும். உண்மையில் இதற்கிணையான பல வைரங்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. கிருஷ்ணதேவராயர் அணிந்திருந்த பல வைரங்களைப் பற்றி பர்ப்போஸா [Duarte Barbosa] பயஸ்  [Dominigo Paes] போன்ற அக்காலப் பயணிகளின் குறிப்புகளில் காணமுடிகிறது. அவருடைய குதிரையின் நெற்றியில் ஒரு பெரிய வைரம் அணிவிக்கப்பட்டிருந்தது என்கிறார் பர்போஸா. அவ்வைரங்கள் எவை என பெரும்பாலும் அடையாளம் காணப்படவில்லை.

lon1

பொதுவாக அவ்வைரங்களைப்பற்றிய அறிவார்ந்த உரையாடல்களே இந்தியாவில் இல்லை. அவை எங்கோ தேடப்படுகின்றன, கண்டடையப்படுகின்றன, பொது அறிவுத்தளத்துக்கு வருவதேயில்லை. கிருஷ்ணதேவராயரின் வழிவந்தவர் என சொல்லப்படும் ஜி.வைத்யராஜ் என்பவரிடம் மிக அரிய வைரங்கள் பல உள்ளன என்றும் அவற்றில் ஒருபகுதி சர்வதேச ஏலத்துக்கு வந்தது என்றும் ஒரு வதந்தி காற்றில் அடிக்கடி உலவிக்கொண்டிருக்கிறது. விஜயநகரத்தின் வைரங்களைப்பற்றி அவ்வாறான கதைகள் அடிக்கடி செவியில் விழுவதுண்டு. வைரங்களைத் தேடி விஜயநகர் சார்ந்த பகுதிகளில் கோட்டைகளையும் ஆலயங்களையும் உடைப்பவர்கள் அடிக்கடி கைதாகிறார்கள்

இன்றைய ஆந்திர-கர்நாடக எல்லையில் ஹோஸ்பெட் பகுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருந்தது விஜயநகரம். 1336 ல் ஹரிஹரர் ,புக்கர் என்னும் இரு படைத்தலைவர்களால் உருவாக்கப்பட்ட நகரம். டெல்லி சுல்தான்களின் ஆட்சி வலுவிழந்தமையால் தெற்கே ஒரு பேரரசாக எழுந்தது. பல குலங்களால் ஆளப்பட்டாலும் பொதுவாக இவர்களை நாயக்கர்கள் என்பது வழக்கம். கிருஷ்ணதேவராயர் இவர்களில் மிகச்சிறந்த மன்னர். அவர் காலத்தில் தென்னகமே விஜயநகரின் ஆட்சியில் இருந்தது

lon4

1565ல் தலைக்கோட்டை என்ற இடத்தில் நிகழ்ந்தபோரில் அன்றிருந்த பாமினி சுல்தான்களால் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது. [பிஜப்பூர், பீரார் ,பீதார் ,அஹமதுநகர், கோல்கொண்டா] விஜயநகரம் அழிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சி அங்கிருந்து தெற்கேவிலகி கூத்தி என்னுமிடத்திலும் பின்னர் அனந்தபூரிலும் நீடித்து 1646 வரை நீடித்தது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்ட நாயக்கர் ஆட்சிகள் தஞ்சை, மதுரை, செஞ்சி, அனந்தபூர், துவாரசமுத்திரம், சித்ரதுர்க்கா ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட வெள்ளையர் ஆட்சி வருவதற்கு முன்புவரை நீடித்தன. ஹைதர் அலி, திப்பு சுல்தான், சந்தாசாகிப் ஆகியோரால் 1730ல் அவை வெல்லப்பட்டன.

இன்று விஜயநகரம் ஹம்பி என அழைக்கப்படுகிறது. ஒரு மாபெரும் இடிபாட்டுக்குவியல் அது. நான் பலமுறை அங்கே சென்றிருக்கிறேன். 1982ல் முதல்முறையாகச் சென்றபோது உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளாகி மயங்கிவிழுந்திருக்கிறேன். ஹம்பியில் விரூபாக்ஷர் ஆலயத்திற்கு முன்னால் அந்நகரின் மாபெரும் வைரவணிகர் வீதி உள்ளது. இந்த சந்தையைப்பற்றி பர்போசா எழுதியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட எடைக்குமேல் உள்ள வைரங்களை அரசர்களுக்கு மட்டுமே விற்கவேண்டும் என்றும், பிறர் அதை வாங்கினால் தண்டனை என்றும் சட்டமிருந்தது என்கிறார். அரசகுடியினர் அரிய மணிகளை விற்பதில்லை. அவற்றை அவர்கள் அணிகலன்களாகவும் தெய்வங்களுக்குரிய காணிக்கைகளாகவும் கருதினர்

ஹம்பி வைரச்சந்தை
ஹம்பி வைரச்சந்தை

கோஹினூர் இந்தச் சந்தையில் விற்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஏனென்றால் அநத அருமணி அன்றைய கோல்கொண்டாவில் கிடைத்திருக்கலாம் என்பது நிலவியலாளர் கூற்று. அது அப்போது விஜயநகரத்தின் ஆட்சியில் இருந்தது. ஆந்திராவில் ஹைதராபாத் அருகே, பழைய கோல்கொண்டா நாட்டுக்குள், கிருஷ்ணா நதி பலவகையான பாறைகளை அரித்துக்கொண்டு ஓடும் கொள்ளூர் வைரச்சுரங்கம் நெடுங்காலமாகவே வைரங்களுக்குப் புகழ்பெற்றது. அங்கேதான் இந்தியாவின் புகழ்பெற்ற பல வைரங்கள் கிடைத்தன. கோஹினூர் அங்கே கிடைத்திருக்கலாம். அது கிருஷ்ணதேவராயரிடம் இருந்தது என்றும் விஜயநகர் வீட்சிக்குப்பின் பிஜப்பூர் சுல்தானின் கைக்குச் சென்றது என்றும் அங்கிருந்து பீஜப்பூரை வென்ற முகலாய ஆட்சியாளரான அக்பரிடமும் பின்னர் ஷாஜகானிடமும் சென்றது என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.

அன்று ஆப்ரிக்கா பிற உலகத்தால் கண்டடையப்படவில்லை. ஆகவே தரமான வைரங்கள் இந்தியாவில் மட்டுமே கிடைத்தன. மிகத்தொல்காலத்தில் எரிமலைக்குழம்புக்குள் அகப்பட்டு அழுத்தமும் வெப்பமும் கொண்டு இறுகும் கரியே வைரம். தென்னிந்தியா தொன்மையான எரிமலைப்பாறைகளாலானது. அந்தப்பாறைகளை நதி ஒன்று ஆழமாக வெட்டிச்செல்கையில் வைரம் வெளியே வருகிறது. கிருஷ்ணா ஆவேசமான ஆறு. பெருவெள்ளம் வடிந்தபின் அதன் கூழாங்கற்பரப்பு விரிந்துபரந்து கிடக்கும். அதில் அரிதாக வைரங்கள் கிடைத்தன. வாழ்நாளெல்லாம் அந்த மணலை அரித்துக்கொண்டிருப்பவர்களில் மிகச்சிலருக்கு மட்டும் அவை அகப்பட்டன. பின்னர் ஆப்ரிக்காவில் நிலக்கரிப்படிவங்களில் வைரங்கள் கிடைக்கத் தொடங்கியபோது  வைரம் மதிப்பிழந்தது. இன்று கருவிகளைக்கொண்டு இருக்குமிடத்தை அறிந்து ஆழத்தில் தோண்டி அவற்றை எடுக்கிறார்கள். அருமணிகளில் எவற்றுக்கும் இன்று விலைமதிப்பு பெரிதாக இல்லை. வைரத்துக்கு மட்டும் அதன் மதிப்பு செயற்கையாக உருவாக்கி நிலைநிறுத்தப்படுகிறது

கிருஷ்ண தேவராயர்
கிருஷ்ண தேவராயர்
b1
ஷா ஜகான்

நாதிர்ஷா

நாதிர்ஷா

அகமது ஷா துரானி
அகமது ஷா துரானி
ரஞ்சித் சிங்
ரஞ்சித் சிங்
vic
விக்டோரியா

கோஹிநூர் பற்றிய குறிப்பிடத்தக்க பதிவுகள் ஏதுமில்லை. ஆனால் முகலாய ஆட்சியாளரான பாபர்  187 காரட் எடையுள்ள ஒரு அரிய வைரத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார். கோகினூர் 186 காரட் எடையுள்ளதென்பதனால் அது கோகினூர்பற்றிய குறிப்பே என சில ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள். அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காபூர் 1307ல் தென்னகப்படையெடுப்பின்போது கைப்பற்றிக் கொண்டுவந்த செல்வங்களில் ஒன்று அது என்றும், பெரும்பாலும் வரங்கலை ஆண்ட காகதீயர்களின் கையிலிருந்து கொள்ளையிடப்பட்டிருக்கலாமென்றும் அவர்கள் கூறுகிறார்கள். 1526 ல் சுல்தான்களை பாபர் வென்றபோது அவருக்கு பரிசாக இந்த வைரம் அளிக்கப்பட்டது. காகதீயர்களின் ஆட்சியில்தான் அன்றைய கோல்கொண்டா இருந்தது. வரலாற்றுக்கு முன்பாக கோகினூர் தோன்றுவது ஷாஜகானின் ஆட்சிக்காலத்தில்தான். அலங்காரப்பித்து கொண்டிருந்த ஷாஜகான் அமைத்த மயிலாசனத்தில் அவருடைய தலைக்குமேல் பதிக்கப்பட்டிருந்தது கோகிநூர்.

கோகி நூர் 196 மெட்ரிக் காரட் எடைகொண்டது.[38.2 கிராம்] ஷாஜகான் அவருடைய மைந்தரான ஔரங்கசீபால் சிறையிலடைக்கப்பட்டார். வைரங்களை அணியவிரும்பாதவரான ஔரங்கசீப் கோகிநூரை கருவூலத்தில் வைத்தார். 1739 ல் பாரசீக ஆட்சியாளரான நாதிர் ஷா டெல்லிமேல் படையெடுத்துவந்தார். டெல்லியை ஆண்ட முகம்மது ஷாவைத் தோற்கடித்து கருவூலத்தைக் கைப்பற்றினார். கோகிநூர் அவர் கைக்குச் சென்றது. அவருடைய அவைப்புலவர் ஒருவர் இவ்வாறு சொன்னதாகச் சொல்லப்படுகிறது. “ஒரு கல்லை நான்கு திசைகளுக்கும் எறிந்து முழுவிசையுடன் வானிலும் எறிந்து நடுவேயுள்ள இடத்தை முழுமையாக தங்கத்தால் நிரப்பினாலும் இந்த வைரத்தின் மதிப்புக்கு நிகராகாது” அந்த அருமணிக்கு பாரசீக மொழியில்  மலையின் ஒளி அல்லது ஒளிகொண்ட மலை என்ற பொருளில் கோகி நூர் என பெயரிட்டதும் நாதிர்ஷாவின் அவையில்தான்

lon

நாதிர்ஷாவின் மகனிடமிருந்து ஆப்கன் மன்னர் அகமது ஷா துரானியிடம் இந்த வைரம் சென்றது. அவருடைய மகன் ஷூஜா ஷா துரானி ரஷ்யாவால் தாக்கப்பட்டபோது பஞ்சாபுக்கு தப்பி ஓடிவந்தார். அவருக்கு அடைக்கலம் அளித்த சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்குக்கு நன்றிக்கடனாக அந்த வைரத்தை அளிக்கவேண்டியிருந்தது. மகாராஜா ரஞ்சித் சிங் பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு கோகினூர் அளிக்கப்படவேண்டும் என இறுதிச்சாத்து எழுதியிருந்தார். ஆனால்  1849 ல் சீக்கிய அரசை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி தோற்கடித்து தன் நிலத்துடன் சேர்த்துக்கொண்டது. அவர்கள் அந்த வைரத்தையும் சீக்கிய அரசின் கருவூலத்தையும் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டார்கள். விக்டோரியா மகாராணிக்கு சீக்கிய அரசர் அதை அன்பளிப்பாக அளிப்பதாக போருக்குப்பின் எழுதப்பட்ட லாகூர் உடன்படிக்கையில் எழுதி கைச்சாத்து பெறப்பட்டது. 1850ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைவரால் பக்கிங்ஹாம் அரண்மனையில் நிகழ்ந்த விழாவில் கோகினூர் விக்டோரியா மகாராணிக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. அவ்வாறு கோகினூர் பிரிட்டிஷ் அரசின் உடைமையாக ஆகியது.

கோகினூரை துரதிருஷ்டங்களின் கல் என்று சொல்வதுண்டு. அதை ஒருவர் அணிந்தால் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் அவரோ அவர் வாரிசுகளோ  பெருந்துயரை அல்லது அழிவைச் சந்திப்பார்.அதை வைத்திருந்த காகதீயர்கள் அல்லது நாயக்கர்களின் அரசு முற்றாக அழிந்தது. ஷாஜகான் மகனால் சிறையிடப்பட்டு நோயாளியாகி இறந்தார். அகமதுஷா அப்தாலி படையெடுப்பில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். துரானி நாடிழந்து ஓடினார். சீக்கியர்கள் அரசிழந்தனர். அதைக் கைப்பற்றிய கிழக்கிந்தியக் கம்பெனியும் ஆறாண்டுகளில் அதிகாரமிழந்தது. அந்தக் கல்லை லண்டனுக்கு கொண்டுபோன கப்பல் காலராவாலும் விபத்துக்களாலும் பாதிக்கப்பட்டது. அந்நம்பிக்கையால்தான் பிரிட்டிஷ் அரசியின் மணிமுடியில் சூட்டப்பட்ட அக்கல் அங்கிருந்து அருங்காட்சியகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

download

சென்ற 2011ல் திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆலயத்திற்குள் இருக்கும் நிலவறைகளில் உள்ள பெருஞ்செல்வம் நீதிமன்ற ஆணைப்படி திறந்து கணக்கிடப்பட்டது. சமீபகாலத்தில் பெரிய வியப்பலைகளை உருவாக்கியது இந்நிகழ்வு. இச்செல்வம்  சேரன் செங்குட்டுவன் காலம் முதலே இருந்துவரும் கருவூலம் என்றும் அதை 1731ல் இன்றைய ஆலயம் கட்டப்படும்போதே  உருவாக்கப்பட்ட  ஆலயத்தின் அடித்தள அறைகளில் பாதுகாத்து வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 1789ல் திப்புசுல்தான் திருவிதாங்கூர்மேல் படையெடுத்துவந்தபோது மேலும் செல்வம் அவ்வறைகளில் ஒளித்துவைக்கப்பட்டது. இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசகுடி மட்டுமே அறிந்த ரகசியமாக இருந்தது அச்செல்வம். ஆகவே பாதுகாப்பாகவும் இருந்தது, பிரிட்டிஷார் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. கப்பத்துக்காக திருவிதாங்கூர் பிரிட்டிஷாரால் கசக்கிப்பிழியப்பட்டது. ஆனால் அரசகுடியினர் அச்செல்வத்தைப்பற்றி மூச்சுவிடவில்லை.

பத்மநாப சாமியின் செல்வம் பற்றிய செய்திகள் வெளியானபோது இந்தியா முழுக்க இருக்கும் ஆலயங்களைப்பற்றிய ஆர்வம் கிளம்பியது. ஸ்ரீரங்கம் , திருச்செந்தூர் உள்ளிட்ட ஆலயங்களில் அதேபோல அறைகள் இருந்தன. எதிலும் எந்தச் செல்வமும் இல்லை. அவை முழுக்கவே தொடர்ச்சியான படையெடுப்புகளாலும் பிரிட்டிஷாரின் திட்டமிடப்பட்ட முறையான சுரண்டலாலும் முழுமையாகவே கவர்ந்துசெல்லப்பட்டன. பத்மநாபசாமியின் கருவூலம் இன்று உலக அளவில் ஓரிடத்தில் இருக்கும் பெருஞ்செல்வங்களில் ஒன்று.ஏராளமான வைரங்கள், அருங்கலைப்பொருட்கள். அந்தக் கணக்கில் பார்த்தால் இந்தியா முழுக்க இருந்து கொள்ளைபோன செல்வத்தின் அளவு என்ன?

lon2

2014ல் நியூயார்க் சென்றிருந்தபோது அங்கு அருங்காட்சியகத்தில் முகலாயர்களின் நகைகள், வைரங்கள் ஆகியவற்றாலான தனிக்கண்காட்சி ஒன்றைக் காண வாய்ப்பு கிடைத்தது. [Treasures from India: Jewels from the Al-Thani Collection]மறைந்த கத்தார் இளவரசர் ஷேக் ஹமீது பின் அப்துல்லா அல்தானி[Sheikh Hamad bin Abdullah Al-Thani]  யின் தனிப்பட்ட சேகரிப்பில் உள்ள நகைகள் அவை. அவர் உலகமெங்குமிருந்து ஏலத்தில் வாங்கிய நகைகள்.  ‘சட்டபூர்வமான’ சிக்கல்களால் அக்கண்காட்சி இந்தியா தவிர பிறநாடுகளில் மட்டுமே நடந்துவருவதாக அறிவிப்பு தெரிவித்தது  . அருண்மொழி ஐந்தே நிமிடத்தில் “நான் வெளியே போயிடறேன். எனக்கு கைகாலெல்லாம் நடுங்குது… ஏன்னே தெரியலை” என்றாள். நான் சுற்றிச்சுற்றி வந்து அந்த வைரங்களையும் அருமணிகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பிரமைபிடித்ததுபோலிருந்தது. உறைந்த எரிதழல்கள், கல்மலர்கள், வெறித்த விழிகள், இறுகிய நீர்த்துளிகள், சொட்டுக்குருதிகள்…

இந்த அருமணிகளின் பொருள்தான் என்ன? ஏன் இவற்றை மானுடர் இத்தனை ஆர்வத்துடன் சேர்த்தனர்? இவற்றை செல்வமாகக் கருதினர்? இவற்றுக்காக பேரரசுகள் போரிட்டிருக்கின்றன. ராணுவங்கள் செத்து அழிந்திருக்கின்றன. அழகா? எளிய கண்ணாடிக்கல்லுக்கு இதே அழகு உண்டு. அரிதென்பதனாலா? ஆனால் அரிதான எத்தனையோ இப்புவியிலுள்ளன. அழகானதும் அரிதானதுமான ஒன்று நிரந்தரமானதாக இருப்பதன் விந்தையால்தான் என தோன்றுகிறது. அதிகாரத்தின் அடையாளமாக  அவை மாறின. பின் உலகை ஆளலாயின. எண்ண எண்ண விந்தைதான். உலகமே கூழாங்கற்களாலானது. அவற்றில் சில கூழாங்கற்கள் உலகை ஆள்கின்றன!

towr

சிறில் அலெக்ஸ் குடும்பத்துடன் கோகினூர் வைக்கப்பட்டிருக்கும் லண்டன் கோபுரத்திற்கு [The Tower of London] சென்றோம். லண்டன் நகருக்கு நடுவே தேம்ஸ் நதியின் கரையில் இந்த தொன்மையான கோபுரக்கோட்டை [castle] அமைந்துள்ளது. கிபி 1066ல் நார்மன் படையெடுப்பாளர்களால் அமைக்கப்பட்டது இக்கோட்டை. இதிலுள்ள வெள்ளைக்கோபுரம் வில்லியம் மன்னரால் 1078ல் கட்டப்பட்டது. இங்கிலாந்தின் மீதான படையெடுப்பாளர்களின் அடையாளமாக அன்றைய பிரிட்டிஷ் மக்களால் இது கருதப்பட்டது. நெடுங்காலம் நார்மன் மன்னர்களின் அரண்மனையாக இது இருந்தது. பின்னர் சிலகாலம் சிறையாகச் செயல்பட்டது. கடைசியாக 1950களில் குற்றக்கும்பலின் தலைவர்களான கிரே சகோதரர்கள் என்னும் இரட்டையர்   இங்கே சிறைவைக்கப்பட்டிருந்தார்கள். அரசர்களான முதலாம் ரிச்சர்ட், மூன்றாம் ஹென்றி மற்றும் முதலாம் எட்வர்ட்  காலகட்டங்களில் ,பன்னிரண்டாம் நூற்றாண்டுமுதல் பதிமூன்றாம் நூற்றாண்டுவரை, இந்த கோபுரக்கோட்டை விரிவாக்கிக் கட்டப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டு கட்டிடம் அமைப்பே இன்றுள்ளது.

தொன்மையான கோட்டைகளில் உருவாகும் மெல்லிய படபடப்பை இங்கும் உணர முடிந்தது. ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்திரா காந்தியின் இல்லத்துக்கு புபுல் ஜெயகருடன் சென்றபோது மயக்கம் வருமளவுக்கு பதற்றத்தை உணர்ந்தார் என்றும், அது அங்கே அவர் உணர்ந்த வன்முறையால்தான் என்றும் வாசித்திருக்கிறேன். எல்லா அதிகார மையங்களிலும் வன்முறை நுண்வடிவில் உறைந்திருக்கிறது. பலசமயம் உச்சகட்ட வன்முறை என்பது மென்மையானதாக, அமைதியானதாக மாற்றப்பட்டிருக்கும். சமயங்களில் அது உயர்கலையின் வடிவிலும் இருக்கும். லண்டன் கோபுரம் நெடுங்காலம் பலவகையான போர்களின், அரண்மனைச் சதிகளின் களமாக திகழ்ந்தது. அது அதிகாரச்சின்னம் என்பதனாலேயே அதைக் கைப்பற்ற தொடர்ச்சியான முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. அத்துடன் அது ஒரு சிறை. சித்திரவதைகளும் மரணதண்டனைகளும் நிகழ்ந்த இடம். ‘டவருக்கு அனுப்புதல்’ என்ற சொல்லாட்சியே பிரிட்டிஷ் வரலாற்றில் இருந்திருக்கிறது.

lonaa

நான் பார்த்த முதல் ஐரோப்பியக் கோபுரக்கோட்டை இதுதான். இதற்குமுன்பு அமெரிக்காவில் சிகாகோ அருகே டியர்போர்ன் [ Fort Dearborn ] கோட்டையை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஐரோப்பியக் கோபுரக்கோட்டைகளின் பாணியில் கட்டப்பட்ட  பிற்கால அரண்மனைகள் சிலவற்றை  ஐரோப்பாவில் பார்த்ததுண்டு. லண்டன் டவர் முற்றிலும் வேறு அனுபவமாக இருந்தது. இப்பகுதிக் கட்டிடங்கள் நதிகளில் உருண்டுவந்தமையால் உருட்சி பெற்றுள்ள சிறியகற்களை சேறுடன் கலந்து அடுக்கி கட்டப்பட்டவை. அடித்தளங்களும் பெருஞ்சுவர்களும் சேற்றுப்பாறை அல்லது சுண்ணப்பாறைகளை வெட்டி அடுக்கி எழுப்பப் பட்டவை. உருளைக்கற்கள் சரியாக ஒன்றுடன் ஒன்று பொருந்துவதில்லை. ஏனென்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் உருண்டு ஒவ்வொரு தனியாளுமையை அடைந்த கற்கள், அவற்றை ராணுவமாக்க முடியாது. ஆகவே சுவர்கள் பெரும்பாலும் மிகத்தடிமனானவை. இத்தகைய கற்களுக்கு வளைவுகள் மிக உகந்தவை. ஒன்றை ஒன்று கீழே தள்ள முயன்று அவ்விசையாலேயே அவை நிரந்தரமாக நின்றிருக்கும். இதுவே ஐரோப்பிய கோபுரக்கோட்டைகளின் அழகியல்.

தடித்த தூண்கள் எழுந்து வளைந்து கிளைபோல விரிந்து கோத்துக்கொண்டு வளைவாக ஆகி கூரையமைத்த கூடங்கள், இடைநாழிகள். குளிர்ந்த காற்று அச்சுறுத்தும் நினைவுபோலத் தோன்றியது. அரசர்களின் ஆடைகள், அவர்களின் படைக்கலங்கள். அங்கே வாழ்ந்த மன்னர்களை மானுடர் என்று நம்புவது மிகவும் கடினம். விந்தையான ஏதோ உயிர்வகை, தேவர்களும் அரக்கர்களும் கலந்த ஒன்று. ஆனால் அரசர்களும் அரசிகளும் சிறுகுழந்தைகளாக இருந்தபோது விளையாடிய பொருட்கள் அங்கே காட்சிக்கு உள்ளது. அவர்கள் விளையாடிய சிறு பொம்மை வீடு. அது அவர்களை மானுடர் என்று காட்டியது. அவர்கள் மானுடர்களாக இருப்பது சிற்றிளமையில் மட்டும்தான்.

முதலாம் ரிச்சர்ட்
முதலாம் ரிச்சர்ட்

மேலே வெள்ளைக்கோபுரத்தில் ஏறும்படிகள் குறுகலானவை. அங்கே பல அறைகள் சிறைகளாகவும் தண்டனைக் கொட்டடிகளாகவும் பயன்பட்டவை. இரும்பு வளையங்கள், தளைகள். அதற்குள் எப்போதைக்குமாக வந்துசேரும் மனிதர்களின் உள்ளம் எப்படி இருக்கும்? எதிர்காலம் என்பது முற்றிலும் இல்லாமலாவதே மிகப்பெரிய வதை. மறு எல்லை இல்லாத இருண்ட சுரங்கங்களில் சென்றுகொண்டே இருப்பதுபோல. அதைவிட சகமனிதன் இரக்கம் அற்றவன் என உணர்வது, மானுடம் மீதான நம்பிக்கையை முற்றாக இழப்பது. அந்தக்கோடையிலேயே அந்த அறைகள் ஈரமாக இருட்டாக குளிராக இருந்தன. லண்டனின் புகழ்பெற்ற குளிர்காலத்தில் அவர்கள் உருவகம் செய்து வரைந்து வைத்திருக்கும் நரகங்களைப்போலவே இருந்திருக்கும்

சுற்றிலும் அகழி. ஆழத்தில் லண்டனின் காட்சி. அப்போது கோடையானதனால் உற்சாகமான சூழல் நிலவியது. ஜப்பானிய, சீனப்பயணிகள் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கிருக்கும் எந்தக்குறிப்பையும் வாசிப்பதை நாம் பார்க்கமுடியாது. சற்று மண்ணுக்குக் கீழே செல்லும் அடித்தளத்தில் ஒரு ஒயின்கடையும் நினைவுப்பொருட்கள் விற்கும் கடையும் இருந்தன. ஒரு கோப்பை வரலாற்றை விழுங்கி ஒரு துண்டு வரலாற்றை வாங்கிக்கொண்டு கிளம்பவேண்டியதுதான். வரலாற்றுத் தலங்களுக்கு மேல் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக பேசியபடிச் சுற்றிவருவதைப் பார்க்கையில் வெடிமருந்துக்குமேல் ஈ ஏதுமறியாமல் அமர்ந்து எழுந்து அமர்வதுபோல ஒரு கற்பனை எழுந்தது.

Tower_of_London,_south,_Buck_brothers

வெளியே கோட்டைவாயிலில் ஒரு இசைக்குழு அக்காலத்தைய ஆடைகளை அணிந்து இசைத்துக்கொண்டிருந்தது. எதிர்பாராமல் ஒரு கூச்சல். ஒரு பெண் வாளை உருவியபடி ஓடிவந்தாள். ஒருவர் வாளை உருவியபடி எதிர்த்துச் சென்றார். இருவருமே பழங்கால ஆடைகள் அணிந்திருந்தார்கள். ஒரு திறந்தவெளி நாடகக் காட்சி. அக்காலத்தைய வரலாற்று நிகழ்வொன்றை நடிக்கிறார்கள் எனத் தெரிந்தது. அந்த நாகரீகச் சுற்றுலாப்பயணிகளின் திரளில் வந்துசேர்ந்த அந்தக் கடந்தகாலம் சிலகணங்களுக்குப்பின் கேலிக்கூத்தாக மாறியது. சின்னக்குழந்தைகள் சில பயந்து அலறின.

லண்டன் டவர் அருங்காட்சியகத்தில்தான் கோகினூர் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அரையிருள் பரவிய காட்சிக்கூடத்தில் பிரிட்டிஷ் அரசர்கள், அரசியரின் மணிமுடிகளும் அணிகளும் வைக்கப்பட்டுள்ளன. மணிமுடிகளிலிருந்து நகைகள் பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தால் அவற்றின் மாதிரிவடிவங்கள் செய்துவைக்கப்பட்டிருந்தன. அந்த இருளில் வைரங்கள் நம்மை ஒளிரும் விழிகள் போலச் சூழ்ந்துகொள்கின்றன. எவை எங்கிருந்தவை என்றெல்லாம் அறியமுடியவில்லை. கோகினூர் பற்றி மட்டும்தான் என் சிந்தை குவிந்திருந்தது. எலிசபெத் ராணியின் மணிமுடியில் 1937 வரை அது இருந்திருக்கிறது.

Queen_Mary's_Crown

கோகினூர் கண்ணாடித்துண்டுபோலத்தான் இருந்தது. உண்மையில் அது 1852ல் அதை மக்களுக்குக் காட்சிக்கு வைத்தபோது அது எவரையும் பெரிதாகக் கவரவில்லை. ஆகவே அதை மறுவெட்டு செய்து இன்றைய அமைப்புக்குக் கொண்டுவந்தார்கள். ஒரு கண்ணாடிப்பேழைக்குள் தெரிந்த கோகினூர் மிகச்சிறிய விளக்கால் கச்சிதமாக ஒளியூட்டப்பட்டிருந்தது. அருகே சென்ற ஒருவரின் சிவப்புநிற ஆடை அதில் பல்லாயிரம் மடிப்புகளாக மாறி உள்ளே சென்று சுழன்றது. சூழ்ந்திருக்கும் அத்தனை காட்சிகளையும் தன் பட்டைகளால் அள்ளி பலகோடி உள்ளடுக்குகளுக்குள் செலுத்தியபடி இருந்தது. நாம் அங்கிருந்து விலகினாலும் உள்ளே எங்கோ அவையனைத்தும் இருக்கும், துளியாக, அணுவாக. வைரம் வெறும் படிகம் அல்ல, அது நாம் அறியமுடியாத ஒரு நிகழ்வு.

ஆனால் அங்கிருந்தது கோகினூர்தானா? அது கோகினூரின் கண்ணாடியாலான தத்ரூப நகல் என்றார் நண்பர். இருக்கலாம், வரலாற்றை நாம் எங்கே பார்க்கிறோம்? நாம் அறிவதெல்லாம் புனைவைத்தானே?வெளியே வந்து அமர்ந்தபோது வாசித்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. கோகினூரை பஞ்சாபிலிருந்து விக்டோரியாவின் அவைக்குக் கொண்டுவரும் பொறுப்பில் இருந்தவர் ராணுவ அதிகாரியும் பஞ்சாப்பகுதி ஆளுநருமான சர் ஹென்றி லாரன்ஸ். அவர் அதை தன் கோட்டுப்பையில் வைத்திருந்தார், பத்திரமாக இருக்கட்டுமே என்று. அல்லது முடிந்தவரை கையிலேயே வைத்திருப்போமே என்று. அவர் தன் கோட்டை கவனக்குறைவாக வைரத்துடன் சலவைக்குப்போட்டுவிட்டார். அதன்பின் உயிர்பதைக்க அதைத்தேடி அலைய சலவைக்காரர் அது என்ன என்று தெரியாமல் திரும்பக்கொண்டுவந்து கொடுத்துவிட்டார். எனக்கு அத்தனை ஆட்சியாளர்களைவிடவும் ஹென்றி லாரன்ஸ்தான் அணுக்கமானவராகத் தோன்றினார். முயன்றிருந்தால் அவர் நல்ல நாவல்களை எழுதியிருக்கக் கூடும்.

முந்தைய கட்டுரைபாதையில் பதிந்த அடிகள்
அடுத்த கட்டுரைபுனைவின் வழித்தடம்