ஐரோப்பா-4, நுண்ணோக்கிகள்
வணக்கம் திரு ஜெயமோகன்
ஷெர்லாக் ஹோம்ஸ் இன்றும் இந்தியாவில் பள்ளிகளில் ஆங்கில பாடபகுதியாக உள்ளது, வுட்ஹவுஸும் அதுபோலதான். இங்கிலாந்திலேயே இவற்றை இன்று படிப்பவர்கள் குறைவு என்றபோதும் இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
நாம் ஆங்கிலேயர்களின் கீழிருந்த காலத்தில் நாமும் பிரிட்டிஷ் கனவான்கள போல் ஆக வேண்டும் என கருதி ஷெர்லாக் ஹோம்சும் வுட்ஹவுஸ் நூல்களும் படித்தோம் என எண்ணி கொள்ளலாம். அதை இன்றும் படிப்பவர் கடந்த காலத்தை மீள செய்ய அவற்றை வாசிக்கிறார் என்றும் கொள்ளலாம். ஆனால் அதை மீறியும் ஒரு ஈர்ப்பு அவற்றின் மேல் தொடர்ந்து இந்தியர்களுக்கு இருந்தே வந்துள்ளது. அதேநேரத்தில் கோனன் டாய்லே தான் எழுதிய சிறந்த நூல்கள் என கூறியவை இங்கு அவ்வளவாக படிக்கப்படுவதில்லை.
இன்றும் வாசிப்பு பழக்கம் சிறிதளவே உள்ளவரின் புத்தக அலமாரியில் ஒரு ஷெர்லாக் ஹோல்ம்ஸ் நூலையும் வுட்ஹவுஸ் நூலையும் காணலாம். நான் சிறு வயதில் நூலகங்களில் அதிகம் கண்டது இந்நூல்கள் தான். நான் படித்த முதல் முழு ஆங்கில நாவல் தி ஹவுண்ட் ஆப் பாஸ்கெர்வில். அந்நாட்களில் நான் எப்பொழுதும் கையில்ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகத்துடன் தான் இருப்பேன். வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்லாமல் அறிவு சார்ந்த logical reasoningகும் வழிகாட்டியாக ஹோம்ஸ் என் நாயகனாக திகழ்ந்தார்.
வுட்ஹவுஸ் கோனன் டோய்ல் இருவரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள். அவர்கள் நூல்களிலும் அதை பற்றி எழுதியவர்கள். இந்தியா இன்று கிரிக்கெட் ஆடும், பார்க்கும் நாடுகளில் முதன்மையானது.கிரிக்கெட், ஹோம்ஸ், வாட்ஸன், பெர்டி வூஸ்டர், ஜுவ்ஸ் என பல எச்சங்களை பிரிட்டிஷ் ராஜ் நம்மிடம் விட்டு சென்றிருக்கிறது.
கோனன் டோய்ல், பெர்னார்ட் ஷாஹ், ஆஸ்கார் வைல்டு போன்ற ஆளுமைகளை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில நூல்கள் நமக்கு தருகின்றன(ஆனால் மூவரும் ஐரிஷ் பின்புலம்கொண்டவர்கள் என பின்புதான் தெரிந்தது)
Malcolm Muggeridge கடைசியான உண்மை ஆங்கிலேயன் இந்தியன் ஆக தான் இருப்பான் என கூறினார்(the last true Englishman would be an Indian). “நமக்கு வந்துசேர்ந்து, இன்றைக்கும் நம்மிடம் எஞ்சியிருப்பது அந்த பத்தொன்பதாம்நூற்றண்டு லண்டன்தான்.” கச்சிதம்!
ஸ்ரீராம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஷெர்லக் ஹோம்ஸ் என்ற வடிவத்தைக்கொண்டு பிரிட்டனை மதிப்பிடமுயன்றவிதம் சிறப்பாக இருந்தது. ஹோம்ஸ் இல்லத்துக்குச் சென்றது மட்டும்தான் நினைவு. ஆனால் அதை தொடர்ச்சியாக பல்வேறு சின்னச்சின்ன விஷயங்களுடன் இணைத்திருப்பது அழகாக உள்ளது.
உண்மையில் நீங்கள் சொல்லும்போதுதான் தோன்றியது, மெய்யாகவே அந்தக்கால பிரிட்டிஷ் குணாதிசயத்துக்குச் சரியான உதாரணம் ஷெர்லாக் ஹோம்ஸ்தான். உதாரணமாக ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம். அவர் இங்கிருக்கும்போது பறவையியலில் முன்னோடியாகச் செயல்பட்டார். இன்னொருவர் சர் ஜான் வுட்ரோஃப். அவர் தாந்திரிகத்தை ஆராய்ந்தார். அக்கால பிரிட்டிஷ்காரர்களுக்கு நுண்ணோக்கி வைத்து இந்த உலகை ஆராய்ச்சி பண்ணுவதுதான் பொழுதுபோக்கு. அறிவியலிலும் இலக்கியத்திலும் மிகப்பெரிய அலையை அது உருவாக்கியது. ஹோம்ஸை ஐ.ஏ.ரிச்சர்ட்ஸுடன் ஒப்பிட்டதெல்லாம் நன்றாக இருந்தது. டெக்ஸ்சுவல் கிரிட்டிசிசம் என்றாலே ஒரு துப்பறியும் வேலைதான்
ஆர்.சந்தானம்