
அன்புள்ள ஜெ.,
முன்பெல்லாம் எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒருவரைப் பார்த்தால் அவர் யார் வரைந்த ஓவியம் போல் இருக்கிறார் என்று நினைத்துக்கொள்வேன். ஓவியர்கள் என்றால் வாரப்பத்திரிகைகளில் வரையும் ஜெ., ம.செ., மாருதி, கோபுலு, அரஸ், ஸ்யாம் இப்படி. உதாரணமாக நீங்களெல்லாம் ஜெ. அல்லது ராமு(கல்கண்டில் மட்டுமே இவர் வரைந்து பார்த்திருக்கிறேன்)வின் ஓவியம். உங்கள் வீட்டில் மற்றவர்களெல்லாம் மாருதியின் ஓவியங்கள். பி.வி.கிருஷ்ணன், தி.ஜானகிராமன் போன்றோர் மாயாவின் ஓவியம் – கஷ்க் முஷ்க் என்றுதான் வரைவார். வறுமையைச் சித்தரிக்கும் ஓவியங்கள் இவர் வரைத்திருக்கவே மாட்டார் என்று சொல்லலாம்..என் பெரியப்பா ஒருவர் வீட்டில் எல்லோரும் அப்படியே கோபுலு படம் போலவே இருப்பார்கள்.

கோபுலு “தில்லானா மோகனாம்பாள்” கதைக்கு வரைந்த ஓவியங்கள் இன்றும் ஞாபகத்தில் உள்ளன. அவர் ஜெயகாந்தன் கதைகளுக்கு வரைந்த ஓவியங்கள் க்ளாஸிக்குகள். அவர் வரைந்த கரிகால் பெருவளத்தானின் ஓவியத்தைப்பற்றி நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.தன் வயது முதிர்ந்த காலத்திலும் வலது கை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டபோது இடது கையால் வரையக்கற்றுக்கொண்டு வரைந்தார் கோபுலு.”கேரிகேட்சேர்” “போர்ட்ரெய்ட்” இரண்டிலும் வல்லுநர் இவர் ஒருவரே. லதா என்றொருவர் சாண்டில்யன் கதைகளுக்கு மட்டுமே வரைந்து பார்த்திருக்கிறேன். எல்லாவற்றையும் பெரிசாக வரைவார். ம.செ.யின் பெண்கள் அழகாகவும், அடக்கமாகவும் இருப்பார்கள். சீதாப்பாட்டியைத் தவிர எல்லாப் பெண்களையும் “செக்ஸி ” யாகவே வரைந்தார் ஜெயராஜ் என்கிற ஜெ.. சுஜாதா தொடர் கதைகளுக்கு எப்போதும் இவர் ஓவியம்தான். இவர் ஓவியத்தின் கீழ் கையெழுத்திடும்போது ஜெ என்று போட்டு சில புள்ளிகள் வைப்பார். அது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ஒரு முறை பேத்தி பிறந்தவுடன் ஒரு புள்ளியைக்கூட்டிக் கொண்டார். மாலி, கோபுலு, தாணு, மதன் என்று கேலிச்சித்திரக்காரர்களின் வரிசை வேறு.

ஆதிமூலம், மருது போன்றோர் தீவிரஇலக்கியர்களுக்கான ஓவியர்கள். ஆதிமூலத்தின் காந்தி மற்றும் மன்னர் வரிசைப்படங்கள் என்றுமிருக்கும். இப்போது ஷண்முகவேல் வெண்முரசில் கலக்கியெடுக்கிறார். இவர் “வெண்முரசு” ஓவியங்களை மட்டுமே வைத்து ஒரு பொருட்காட்சி நடத்தலாம். ஒருமுறை மதுரை சித்திரைத்திருவிழா தேர் பவனியை வரைந்திருந்தார். தினமலர் நாளிதழ் இரண்டு பக்கங்களில் வெளியிட்டிருந்தது. மூச்சை நிறுத்திவிடும் ஓவியம் அது. முன்போல் தற்போது தொடர்கதைகள் வருவது குறைந்து விட்ட நிலையில் அச்சூடகத்தில் ஓவியர்களின் பங்கு என்ன?
அன்புள்ள,
கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,
கதைச்சித்திரங்கள் [illustrations] உலக அளவில் இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே உள்ளன. பல பேரிலக்கியங்களை நாம் அவற்றுக்கு புகழ்பெற்ற ஓவியர்கள் அளித்த கதைச்சித்திரங்கள் வழியாகவே நினைவுகூர்கிறோம். கதைச்சித்திரங்கள் போல காலத்தைக் கண்முன் நிறுத்துவன வேறில்லை
ஆரம்ப காலத்தில் ஓவியங்கள் மரவெட்டு முறையில் அமைந்தவை. மரக்கட்டையில் ஓவியர் பள்ளங்களாகச் செதுக்கும் ஓவியம் பின்னர் ஈய அச்சாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் ஈயப்படிவுமுறையில் ஓவியங்கள் அச்சிடப்பட்டன. அம்முறையில் கோடுகள் தெளிவாக அமையும். ஆகவே கோட்டோவியங்கள் பெரிதும் விரும்பப் பட்டன. அவை அச்சில் மை ஊறாமல் பதிவாகும்.. அச்சுத்தொழில் வழியாக நூல்கள் பரவலானபோது அச்சுக்கென வரையும் ஓவியர்கள் உருவானார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் நூல்களில் கதைகளைச் சித்தரிப்பவர்கள். வழக்கம்போல இதிலும் பிரிட்டிஷ்காரர்களே முன்னோடிகள்

கதைச்சித்திரங்களுக்கு முன்னோடியாக அமைந்தவை டிக்கன்ஸின் நாவல்கள். டிக்கன்ஸின்நாவல்களுக்கு முதல்தரமான கோட்டோவியங்கள் அமைந்தமைக்குக் காரணம் அவர் அக்கால நட்சத்திரம் என்பதுதான். அவருடைய நூல்கள் மிகப்பெரிய அளவில் விற்பனையாயின. அவருடைய கோட்டோவியங்களை அனைத்து மொழியாக்கங்களுக்கும் பயன்படுத்த முடிந்தது. ஆகவே நல்ல ஓவியர்கள் முழுநேரமாக அவருக்குப் படம் வரைய முடிந்தது.
ஜார்ஜ் க்ருய்க்ஷாங்க் [George Cruikshank] கதைச்சித்திரங்களின் முன்னோடியாக கருதப்படுகிறார். [1792 – 1878] சார்லஸ் டிக்கன்ஸின் நெருக்கமான நண்பர். என் இளமைக்காலத்தில் நூலகங்களில் இருந்த பெரும்பாலான தடித்த அட்டைபோட்ட செம்பதிப்புகளான டிக்கன்ஸ் நாவல்களில் அவருடைய ஓவியங்கள் இருக்கும். மார்த்தாண்டம் கல்லூரி நூலகத்தில் பழைய ஸ்காட்டிஷ் தந்தையரின் கொடைகளான அந்நூல்களை வாங்கி படங்களை மெய்மறந்து நோக்கியிருந்திருக்கிறேன்.
க்ருயிக்ஷாங்கின் குடும்பமே ஓவியர்கள்தான். அவருடைய தந்தை உருவச்சித்தரிப்பாளர். அவருடைய அண்ணனும் அத்தொழிலையே செய்தார். தன் 31 வயதில்தான் அவர் கதைச்சித்திரங்களுக்கு வந்தார். கேலிச்சித்திரங்களும் உருவச்சித்தரிப்புகளும் வரைந்திருந்தாலும் இன்று டிக்கன்ஸின் ஓவியராகவே அறியப்படுகிறார்

1938 woodcut illustrations for
Crime and Punishment.
Phiz என்ற பேரில் வரைந்த ஹாப்லோட் பிரௌன் [Hablot Knight Browne] டிக்கன்ஸின் ஓவியராக புகழ்பெற்றிருந்த இன்னொருவர். [1815 1882] எழுபதுகளில் பாடநூலாக இருந்த டிக்கன்ஸ் நாவல்களில் இவருடைய ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. ஃபிஸின் தந்தையும் ஒரு ஓவியர். ஆனால் அவர் ஃபிஸ்ஸுக்கு 7 வயதிருக்கையிலேயே குடும்பத்தை விட்டு ஓடிப்போய் அமெரிக்காவில் குடியேறினார். ஆகவே முறையான ஓவியக்கல்வி அவருக்கு வாய்க்கவில்லை. கல்லில் ஓவியம்செதுக்குபவராக தொழிலைத் தொடங்கி தன் இடம் கதைச்சித்திரம் என்று கண்டுகொண்டார்
பின்னர் ஒவ்வொரு முக்கியமான எழுத்தாளருக்கும் அவருக்குரிய ஓவியர்கள் உருவானார்கள். ஐரோப்பிய இலக்கியத்தின் கதைச்சித்திரங்களைப்பற்றி ஒரு தனி நூல்தான் எழுதவேண்டும்.தாக்கரே, ஜார்ஜ் எலியட் போன்றவர்களுக்கு மிகச்சிறந்த ஓவியர்கள் அமைந்தனர். குறிப்பாகச் சொல்லப்படவேண்டியவர் பிராம் ஸ்டாக்கர். அவருடைய சித்தரிப்புமொழி மிக மோசமானது. மிகச் சாதாரணமான எழுத்தாளர். அவருடைய அழியாக்கதாபாத்திரமான டிராக்குலா பிரபு கதைச்சித்தரிப்பாளர்கள் வழியாகவே உலகளாவிய படிமமாக ஆனார் [டிராக்குலா கதைச்சித்திரங்கள்]

எண்பதுகளில் சோவியத் ருஷ்ய நூல்கள் இங்கே அறிமுகமானபோது மீண்டும் அற்புதமான கதைச் சித்திரங்கள் கிடைக்கலாயின. ராதுகா பதிப்பகத்தின் நாவல்களில் உள்ள ஓவியங்கள் இருளும் ஒளியும் கலப்பதை கோடுகளினூடாக காட்டுபவை. என்னிடம் அந்நூல்கள் பல இன்றும் உள்ளன. தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களுக்கு அக்காலத்தைய பழைய ஓவியங்களையே ராதுகா பதிப்பகம் பயன்படுத்தி வந்தது. அது அபாரமான ஒரு காலப்பயண உணர்வை அளித்தது

சோபியா மார்மல்டேவின் இறப்பை பார்க்கிறாள். குற்றமும் தண்டனையும்
Dementy Shmarinov (1907–99)மலையாளத்தில் நல்ல கதைச்சித்தரிப்பாளர்கள் பலர் இருந்தாலும் முதன்மையானவர் நம்பூதிரி. கே.எம்.வாசுதேவன் நம்பூதிரி நெடுங்காலம் மாத்ருபூமி வார இதழின் ஓவியராகப் பணியாற்றினார். பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.வி. விஜயன் போன்றவர்களின் கதாபாத்திரங்களை மறக்கமுடியாத கோட்டோவியங்களாக மாற்றியவர். எளிமையான கோடுகள், சிற்பத்தன்மை கொண்ட உருவங்கள், கதகளியை நினைவுபடுத்தும் விரல்முத்திரைகள் கொண்டவை அவருடைய ஓவியங்கள்.
பஷீரின் கதாபாத்திரங்கள் கேலிச்சித்திரத் தன்மை கொண்டவை. அவற்றை நம்பூதிரி காட்சிப்படுத்தியது கேரளத்தின் இலக்கியநினைவுகளாக நிலைகொண்டுள்ளது. எட்டுகாலி மம்மூஞ்சு, ஒற்றக்கண்ணன் போக்கர் போன்றவர்கள் மறக்கமுடியாத கதைமாந்தர். காலச்சுவடு வெளியீடாக குளச்சல் மு யூசுப் மொழியாக்கம் செய்த பஷீர் கதைகளில் அவ்வோவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன
ஆனால் நம்பூதிரியின் ‘மாஸ்டர்பீஸ்’ ஓவியங்கள் எம்.டி.யின் ரண்டாமூழம் [தமிழில் இரண்டாமிடம். ஆ.மாதவன்] மகாபாரத நாவலுக்கு அவர் வரைந்தவை. மிகமிகக்குறைவான கோடுகளில் வரைவது நம்பூதிரியின் பாணி. அக்குறைவான கோடுகளிலேயே தொலைவையும் அசைவையும் உருவாக்கிவிடுவார். அதோடு கற்புடைப்புச்சிலைகளின் அழகியலையும் கொண்டவை அவை.

தமிழில் கதைகளுக்கான ஓவியத்தில் முதன்மையானவர் கோபுலுதான். அவரை மட்டுமே ஓவியர் என்று சொல்லமுடியும். மற்றவர்கள் பொம்மைபோடுபவர்கள்தான். பெரும்பாலும் ஒரேமாதிரியான முகங்கள், கற்பனையற்ற காட்சிச் சித்தரிப்புகள்.
கோபுலு கதைச்சித்திரங்களின் எல்லைகளையும் சாத்தியங்களையும் புரிந்துகொண்டவர். கதைச்சித்தரிப்பாளர் கதையை விளக்கிவிடக்கூடாது. கதையின் காட்சியை வாசிக்கும் வாசகனின் கற்பனையை தொடங்கிவைக்கவேண்டும், முடித்துவைக்கக் கூடாது. ஆகவே மிகத்தெளிவாக காட்டிவிடக்கூடாது. கதாபாத்திரங்களின் முகங்களைவிட சூழலே முக்கியமானது. சூழலை கூடுமானவரை துல்லியமான தகவல்களுடன் காட்டவேண்டும். மேலதிகமாக ஓவியனுக்குரிய அழகியல் தனித்தன்மை வெளிப்படவேண்டும். உதாரணமாக கோபுலுவின் ஓவியங்களில் நம் சிற்பங்களின் நெளிவும் குழைவும் வெளிப்படும்

கோபுலு வரைந்தவற்றில் மிகச்சிறந்த கோட்டோவியங்கள் துரோணன் எழுதிய கலங்கரைத்தெய்வம் என்ற நாடகத்தொடருக்கும் ஜெகசிற்பியன் எழுதிய ஆலவாய் அழகன் என்னும் நாவலுக்கும் வரைந்தவையே. தமிழில் ஓவியர்களுக்கான ஊதியம் மிகக்குறைவு. ஆகவே பெரும்பாலும் நல்ல ஓவியர்கள் இத்துறையில் ஈடுபடவில்லை. கோபுலுவே விரைவில் விலகி விளம்பரத்துறைக்குச் சென்றுவிட்டார்.
கே.எம்.ஆதிமூலம் கி.ராஜநாராயணன் போன்றவர்களுக்கு வரைந்திருக்கிறார். ஆனால் கதைச்சித்திரங்களின் இயல்பை அவர் புரிந்துகொள்ளவில்லை. அவருடைய கோட்டோவியங்கள் நவீன ஓவியங்களின் துணுக்குகள். கதைமாந்தரின் , கதைச்சூழலின் இயல்புகள் அவற்றில் வளர்ந்து வெளியாவதில்லை.
கோபுலு- கலங்கரைத்தெய்வம்ஷண்முகவேல் அடுத்த காலகட்டம். அவர் கணினித்திரையிலேயே மின்பென்சிலால் வரைபவர். பலவகையான வடிவக்கணக்குகளை கணினியே அளிக்கும். வண்ணங்களும் கணினியால் அளிக்கப்படுபவை.
ஷண்முகவேல் அவருடைய ஆர்வத்தால் வெண்முரசுக்கு இலவசமாக வரைந்தார். வருமானத்துக்காக இதழ்களில் வரைவதற்குச் சென்றார். அந்த சிறு ஊதியத்தில் வாழமுடியாதென்பதனால் மீண்டும் கணினி நிறுவன வேலைக்கே சென்றுவிட்டார். தமிழில் கதைச்சித்திரங்களை பேரிதழ்களால் கூட ஆதரிக்க முடியவில்லை. அந்நிலையில் வெண்முரசுக்கு இத்தனை ஓவியங்கள் அமைந்ததை பெரும்கொடை என்ரே சொல்லவேண்டும்

கதைச்சித்திரங்களின் வரலாறு வியப்பூட்டுவது. நம்மைப்போன்ற வாசகர்களின் நினைவுகளில் அது இலக்கியத்தின் ஒருபகுதியாக மாறி நீடிக்கிறது. மரவெட்டு ஓவியங்களிலிருந்து பென்சில், கரியமை பேனா, வண்ணத்தூரிகை வழியாக கணினித்திரைவரை ஒரு மாபெரும் பயணம் அது
ஜெ
***
பார்க்க