திரு ஜெயமோகன்,
என் பெயர் சு.வள்ளிராஜன், சென்னையில் வசித்தது வருகிறேன். உங்களை பற்றி திரு பாலாகுமரன் அவர்களின் ஒரு உறையடலில் குறிப்பிட்டு இருத்தார். அதன் பிறகு யூடூப்பில் உங்களது சில வீடியோவை பார்த்தேன் பிறகு உங்கள் இணையம் ,www.jeyamohan.in, வழியாக சில பதிவுகள் படித்தேன்.
உங்களை எழுத்துக்களில் ஒவ்வொன்றும் ஆழமான கருத்துகள் உள்ளது, வாசகனுக்கு ஒரு முழுமையை அறிமுகப்படுகின்றது. என்னுடைய வசிப்பு அதிகமாக ஆன்மீக புத்தகங்கள்தான், அதிலும் ஓஷோவின் புத்தகங்கள் அதிகம். “ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம்” மிகவும் அருமை, எனது பல எண்ண ஓட்டங்களை அது பிரதிபலித்தது.
உங்கள் திருக்குறள் சொற்பொழிவு யூடூப்பில் கேட்டு மிகவும் மகிழிச்சி அடைத்தேன். பொதுவாக நான் ஒரு சொற்பொழிவை திரும்ப திரும்ப கேட்க விரும்புவது இல்லை, ஆனால் உங்கள் திருக்குறள் சொற்பொழிவை கடந்த வாரம் மட்டும் இரண்டு முறை பார்த்து ரசித்தேன், மீண்டும் பார்க்க துண்டுகிறது. உங்கள் திருக்குறள் ஆராய்ச்சி்யை நீங்கள் புத்தகமாக வெளியிட்டு இருத்தால் அதை வாங்க மிகவும் ஆவலாக உள்ளேன். எனது இரு மகன்களுக்கும் அதை வாழ்வின் பொக்கிஷமாக அளிக்க விரும்புகிறேன்.
80′ களில் பிறந்த என்னை போன்ற பலருக்கு தமிழ்/ ஆங்கிலம் (தெரிந்து) இரு மொழிகளும் 100% எழுத/படிக்க சரியாக வருவதில்லை. எனது மொழலியில் ஏதாவது பிழை இருத்தால் பொறுத்தருள்க.
எனக்கு ஆன்மீக மற்றும் வரலாறு சம்பத்தப்பட்ட உங்கள் புத்தகங்கள், எதை படிக்கலாம் என்று ஆலோசனை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
எஸ்.வள்ளிராஜன்
அன்புள்ள வள்ளிராஜன்,
ஆன்மிகம் என்று பொதுவாகச் சொல்வதற்குள் பல உளப்போக்குகள் அடங்கியிருக்கின்றன. ஓங்கியிருக்கும் போக்கு என்பது பக்தி மற்றும் வழிபாடு சார்ந்ததுதான். என்னுடைய இயல்பில் அவற்றுக்கு இடமில்லை.
இன்னொரு ஆன்மிகம் என்பது தத்துவசிந்தனை, ஊழ்கம் [தியானம்] ஆகியவற்றைச் சார்ந்தது. அவற்றையே நான் முன்வைக்கிறேன். இந்து மெய்யியல் சார்ந்து எழுதியிருக்கிறேன். அதன் ஒரு பகுதி என ஆலயங்களையும்,படிமங்களையும் மூலநூல்களையும் குறித்து எழுதுகிறேன்.
இவை ஒன்றையொன்று எதிர்த்துச் செயல்பட்டாகவேண்டும் என்பதில்லை. இவையிரண்டுக்குமான இணைப்பு பற்றி இந்துமரபில் நிறையப் பேசப்பட்டுள்ளது. ஆனால் என் நோக்கில் பக்திக்கு பெரிய இடமில்லை
நீங்கள் ஓஷோ வாசிப்பதாகச் சொல்லியிருப்பதனால் உங்கள் ஆர்வமும் நான் செல்லும் பாதை சார்ந்தே என ஊகிக்கிறேன். இந்தப் பாதையில் ஆன்மிகம் சார்ந்த வாசிப்பு என்பது மூன்றுவகை. அ. இந்துமெய்யியலை வரலாற்று ரீதியாக அறிந்துகொள்ளுதல் ஆ. அடிப்படையான வினாக்களை எழுப்பி தேடலை உருவாக்கிக்கொள்ளுதல் இ. மூலநூல்களை கற்றல்
மேலே சொன்ன மூன்று வகைக்கும் சில நூல்களை சுட்டுகிறேன். அவற்றிலிருந்து நீங்கள் மேலே செல்லலாம்
அறிமுகநூல்கள்
அ. இந்து ஞானம் ஓர் எளிய அறிமுகம், ஆசிரியர் க்ஷிதிமோகன் சென். [தமிழாக்கம் சுனீல் கிருஷ்ணன்] வெளியீடு சொல்புதிது பதிப்பகம்
ஆ. இந்துமதம் விவேகிக்கான வழிகாட்டி. ஆசிரியர் குரு நித்யசைதன்ய யதி. வெளியீடு சொல்புதிது பதிப்பகம்
இ. இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள். ஆசிரியர் ஜெயமோகன். வெளியீடு கிழக்கு பதிப்பகம்
அடிப்படை வினாக்களுக்கான நூல்கள்
அ. தத்வமசி ஆசிரியர் சுகுமார் அழிக்கோடு. சாகித்ய அகாடெமி
அ. இந்துமதம் சில விவாதங்கள். ஆசிரியர் ஜெயமோகன். வெளியீடு சொல்புதிது பதிப்பகம்
ஆ.இந்திய ஞானம், ஆசிரியர் ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம்
மூலநூல்கள்
அ. கீதை மூவர் உரையுடன். ஆசிரியர் க.ஸ்ரீதரன் வெளியீடு நர்மதா பதிப்பகம்
ஆ. பிரம்ம சூத்திரம். ஆசிரியர் அ.சுகவனேஸ்வரன் உரையுடன் வெளியீடு கலைஞன் பதிப்பகம்
மேலும் இத்தளத்திலேயே ஏராளமான கட்டுரைகள் , நூல்களின் இணைப்புக்கள் உள்ளன. கட்டுரைகளுக்குக் கீழே உள்ள இணைப்புகளைத் தொடர்ந்து சென்றால் நீங்கள் சில ஆண்டுகள் வாசிப்பதற்கானவை உள்ளன. ஆன்மிகம் என்னும் பகுதியைச் சொடுக்கி தேடினால்போதும். பார்க்க இணைப்பு
ஆன்மிகம் சார்ந்த கட்டுரைகளை நூல்களை வாசிப்பவர்களுக்கு சில தடைகள் நம் சூழலில் உள்ளன. அவை குறித்த ஒரு நுண்புரிதல் முன்னரே இருப்பது நல்லது
அ. ஆன்மிகம் என்றால் அது நன்னெறியாக எப்போதும் இருக்கவேண்டுமென்பதில்லை. ஏற்கனவே ஊறிப்போன சிந்தனைகளை உடைக்கக்கூடியதாக இருக்கலாம். நம் மூளையைச் சீண்டி புதிய கோணங்களை திறக்கக்கூடியதாக இருக்கலாம்
ஆ. ஒற்றைவரிகள், துணுக்குக் கதைகள் [பொதுவாக வாட்ஸப் புழுக்கைகள்] ஆன்மிக வாசிப்புக்குரியவை அல்ல. ஒட்டுமொத்தமாக ஒரு முழுப்பார்வையை முன்வைப்பவையே நம்மில் அழுத்தமான பதிவை உருவாக்க முடியும். அவை நூல்களும் கட்டுரைகளும்தான்.
இ.மூலநூல்களில் சொல்லாராய்ச்சி செய்தல், பொழிப்புரை ஆய்வுசெய்தல் ஆகியவற்றை மிதமிஞ்சி செய்வது வெறும் ஆணவ விளையாட்டு. கடந்த ஆயிரமாண்டுகளாக இந்தியாவை பீடித்திருக்கும் நோய் அது. அவர்களை முழுமையாக நிராகரியுங்கள். மூலநூல்களை நம் அனுபவத்தால், அறிவால், ஊழ்கத்தால் உணர்வதே தேவையானது. அதற்கான வழிகாட்டியாகவே நாம் வாசிப்பது அமையவேண்டும்
ஈ. பழைய ஆன்மிக, மத இலக்கியங்களை வாசிக்கையில் அவற்றுக்குரிய கலைச்சொற்களை அறிந்துகொள்ளவேண்டும்– உதாரணம் ஜாக்ரத், ஸ்வப்ன, சுஷுப்தி துரியம் போன்று. அதேபோல இன்றைய ஆன்மிக உரையாடல்களைப் புரிந்துகொள்ள இன்றைய கலைச்சொற்களையும் கொஞ்சம் தெரிந்துகொள்வது இன்றியமையாதது. ஏனென்றால் இன்றைய ஆன்மிக உரையாடல்கள் இன்றைய சிந்தனைகளை கருத்தில்கொண்டு அவற்றுடன் உரையாட முயல்கின்றன. உதாரணம் படிமம், தொன்மம்
ஜெ