அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
வெண்முரசின் சிறப்புக்கூடுகையில் கலந்துகொண்ட பின்னர் இப்போதுதான் ஊர் திரும்பினேன். இதற்கு முன்னர் விஷ்ணுபுரம் விழாக்களிலும், ஊட்டி காவியமுகாம்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன் எனினும் இந்தக்கூடுகை மிகச்சிறப்பானதொன்றாக இருந்தது. உங்களின் எழுத்துக்களில் அனைத்தையுமே நான் வாசிப்பவள் அதுவும் மீள் மீள வாசிப்பவள் எனினும் ’வெண்முரசு’ என்னும் மாபெரும் படைப்பினைக்குறித்த பிரமிப்பே எனக்குள் முழுமையாக நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் மீள் வாசிப்பில் எனக்கு பல புதிய விஷயங்கள் தெரிய வந்துகொண்டே இருக்கின்றது.. எனவே இந்த வெண்முரசுக்கான சிறப்புக்கூடுகையில் நான மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டேன்.
முதல் நாள் நீங்கள் இல்லாவிடினும் வழக்கம் போலவே சரியான நேரத்தில் ஏற்கனவே கலந்துகொள்பவர்களுக்கு தெரிவித்திருந்தபடி முதல் அமர்வு துவங்கியது. திரு. மது ,வெண்முரசின் தரிசனங்களும் படிமங்களும் குறித்துப்பேசினார். ’’தண்நிலவும் கங்கையும், வழுக்கும் குளிர் நாகங்களும் சந்தனக்காப்புமாய் குளிர்ந்திருக்கும் சிவனை அனலோன் என்கிறோம்’’ என்னும் அவர் தமிழாக்கம்செய்த அந்த அழகிய சமஸ்கிருதப்பாடலுடன் துவங்கினா.ர் குந்தி பீஷ்மர் சந்திப்பு சுப்ரியையின் எஞ்சும் நஞ்சு, முதற்கனலில் விதைத்தவை இன்று முளைத்து கிளைபரப்பி வளர்ந்திருப்பது என்று அழகாகப் போனது அவர் உரை.. குறிப்பாக சுழற்சி தரிசனம் குறித்து வெகு அருமையாக சொன்னார்.
அனைத்து அமர்வுகளிலுமே திரு கிருஷ்ணன் வலுவான ஆதாரபூர்வமான தகவல்கள் நிறைய அளித்தார். அவரை இதற்கு முன்னரே பல ஆண்டுகளாக, நிகழ்வுகளை கச்சிதமாக ஒருங்கிணைப்பவராக, மட்டுறுத்துனராக, உரைகளில் ஆழ்ந்து மட்டுறுத்துவதையே மறந்தவராக, உங்களின் மிக நெருங்கிய அன்பு நண்பராக அறிந்திருக்கிறேன். ஆனால் இந்தக்கூடுகையில் அவரின் legal expertise என்னவென்பதை உணர முடிந்தது.
Biological தந்தை யாரென்பதற்கான DNA சோதனைகளுக்கான சட்டம், பிறழ் உறவில் பெண்னை குற்றவாளியாக இணைக்ககூடாது எனும் சட்டம், கர்ணனை least crime committed என்று சொல்லலாம் இப்படி ஒவ்வொருஅமர்விலும் வெண் முரசு தொடர்பான பல சட்ட நுணுக்கங்களை விளக்கமாக கூறினார்
அடுத்த அமர்வில் பாரி, வெண்முரசின் உச்சதருணங்கள் குறித்துப்பேசினார். அரிஷ்டனேமி இளையயாதவர் குசேலர்,புஷ்கரன் என்று மிக முக்கிய கதாபாத்திரங்களின் உச்ச தருணங்களை விளக்கினார். பல வருடங்கள் ஊழ்கத்திலிருந்த இளைய யாதவரின் பீலிவிழி அவருக்குப்பதிலாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்ததை, இளைய யாதவருக்கும் குசேலருகும் இருந்த உறவை,. புஷ்கரன் என்னும் ஆளூமையைக்குறித்தெல்லாம் பேசினார்.
அந்த அமர்விலும் நிறைய கலந்துரையாடினோம். கர்ணனுக்கும் சுப்ரியைக்குமான கசப்பு அவள் சேடி இறந்தபோது அவளின் வஞ்சமும் இறந்துவிடுவது இப்படி கலந்துரையாடலிலும் அதிகம் புதிய கோணங்களும் புதுப்புது அர்த்தங்களும் கிடைத்தன பலரிடமிருந்து
அடுத்ததாக ராகவ் சொற்களின் எண்ணிக்கை குறித்து மிக விரிவான ஒரு ஆய்வு செய்திருந்தார். அது மலைப்பாக இருந்தது மொத்த வார்த்தைகள் இதுவரை வெண் முரசிலெத்தனை, , குறிப்பிட்ட சில வார்த்தைகள் எத்தனை முறை உபயோகத்திலிருக்கிறது, எப்படி ஒரு குறிப்பிட்ட வார்த்தையை சுலபமாக தேடி எடுக்கலாம் என்று விளக்கினார்.
பின்னர் ராஜமாணிக்கம் அவரகளின் ‘ வெண்முரசில் தந்தைமை’’ அமர்வு துவங்கியது. அது தீப்பிடித்தது போல பலராலும் பலவிதங்களில் அனல் பறக்க விவாதிக்கபப்ட்டு கூட்டுஉரையாக இருந்தது. குறிப்பாக பாரி, ’திருதிரஷ்டிரர் பெரும் தந்தையா அல்லது வெறும் தந்தையா’ என்று எடுத்துக்கொடுத்தது வெகு ஆர்வமாக மிகஆவேசமாகக்கூட விவாதிக்கப்பட்டதுதிருதிராஷ்டிரர், தீர்கதமஸ், துரோணர்,ஜாததேவன் சாத்யகி விதுரர் யயாதி என்று பட்டியலும் விவாதமும் மிக சுவாரஸ்யமாக நீண்டுகொண்டே போனது.
பிறகு இன்றைய அமர்வு , நீங்களும் இருந்தீர்கள். அந்தியூர் மணி அவர்களின் ‘’ பிற இலக்கியஙகளிலிருந்து வெண்முரசில் எடுத்தாளப்பட்டவை’’ என்னும் உரையும், பாண்டிச்சேரி தாமரைக்கண்ணனின் மாமழை குறித்த அருமையான் உரையும், வேணுவின் ‘’ நீலம் மலர்ந்த நாட்களும், மதிய உணவிற்குபின்னர் உங்களின் உரையுமாய் இன்றைக்கும் மிக அருமையான ஒரு நாளாகவே இருந்தது.
இந்த இரண்டு நாட்களுக்குப்பின்னர் இப்போது நினைக்கிறென் நான் வெண்முரசை மிக நேரடியாக் வாசித்திருக்கிறேன் என்று. வெண்முரசென்னும் ஒரு மாபெரும் அரண்மனையின் கதவுகளைத்திற5ந்து நேராக உள்ளே சென்று கொண்டிருந்திருக்கிறென் அந்த மகத்தான படைப்பின் பலதளங்களையும் அடுக்கைகளையும் மறை பொருட்களையும் நான் அறிந்திருக்கவே இல்லை
வெண்முரசு வாசிப்பில் இத்தனை இத்தனை சாத்தியங்கள் இருக்கின்றது, இத்தனைஇத்தனை கோணங்களில் வாசிக்க முடியுமென்பதைத் தெரிந்துகொண்டேன் ஒவ்வொரு கூடுகையிலும் புதியவர்கள் இளைஞர்கள், மற்றும் பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.. அதுவும் மகிழ்ச்சியாக இருந்தது.
விஷ்ணுபுரம் விழா எப்படி வருடந்தோறும் நடைபெறுகின்றதோ, அப்படி வெண்முரசுக்கும் அவசியம் நடத்தினால் இன்னும் பல வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை ஒரு வேண்டுகோளாகக் கேட்டுகொள்கிறேன்.
என்னைபொருத்தவரை மிக plain ஆக இருந்த வெண்முரசு வாசிப்பு இன்று மிகப்பெரிய சித்திரமாகிவிட்டிருக்கிறது.
உறிஞ்சுதாளில் சொட்டிய மைத்துளி ஊறி, விரிந்து பரவிச்செல்வதுபோல பல கோணங்களிலும் வாசிப்பின் சாத்தியங்கள் விரிந்து வருவதை பலரும் ஆச்சரயத்துடன் இந்த இரண்டு நாட்களும் உணர்ந்தோம். வழக்கம் போல சரியான நேரத்திற்கு உணவும் தேனீரும் வழங்கப்பட்டது, வாழையும் கரும்பும் சேனையும் மஞ்சளுமாக அருமையான சூழலில் இருக்கும் பண்ணை வீட்டில் இக்கூடுகை நடந்தது இன்னும் சிறப்பாக இருந்தது
இவற்றை எற்பாடு செய்தவர்களுக்கும் பலவேலைகளை விருப்பத்துடன் செய்தவர்களுக்கும் அமர்வுகளில் உரையாற்றியவர்களுக்கும், உங்களுக்கும் நன்றி
அன்புடன்
லோகமாதேவி
வெண்முரசு விவாதங்கள் தளம்