மனுஷ்யபுத்திரன் ,இலக்கியம் அரசியல்

manush

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

அன்புள்ள ஜெ

மனுஷ்யபுத்திரன் விவாதத்தில் நீங்கள் எழுதிய கட்டுரையை வாசித்தேன். தொடர்ச்சியாக நீங்கள் சொல்லிவரும் கருத்துதான். இந்துமரபு என்பது ஒரு இறுகிப்போன அமைப்பாக ஆகக்கூடாது, விவாதவெளியாக இருக்கவேண்டும். அதை அரசியல் தரப்பாக மாற்றிவிடக்கூடாது. தெருச்சண்டியர்களின் கைகளில் மத அதிகாரம் போகக்கூடாது. இந்துமதம் என்பது மெய்மைக்கான தேடல், அதை இழிவுபடுத்தும் முயற்சிகளையும் அழிக்கமுயலும் முயற்சிகளையும் எதிர்க்கவேண்டும். அதை இந்தக்கட்டுரையிலும் திரும்பச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் பொதுப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்லமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே இப்படி நீண்ட கருத்துக்களைச் சொல்வதுதான் உறுத்துகிறது

எஸ்.சரவணன்

***

அன்புள்ள சரவணன்,

நான் கருத்துச் சொல்லும் பிரச்சினைகளைக் கவனியுங்கள், அவை எனக்குச் சொல்வதற்கு ஏதேனும் இருக்கும் இடங்களே. இலக்கியம், மதம், ஆன்மிகம் சார்ந்த தளங்களில் மட்டுமே கருத்து சொல்கிறேன். மற்ற இடங்களில் நமக்கு என்ன தெரியும்? நாளிதழ்கள், அரசியல்வாதிகள் உருவாக்கும் செய்திகளை ஒட்டி கருத்துச்சொல்லிக் களமாடுவது எழுத்தாளனின் பணி அல்ல. நான் முன்னர் எழுத்தாளன் என்னும் என் எல்லைக்கு அப்பால் சென்று சொன்ன சில கருத்துக்களைக்கூட இப்போது மறுபரிசீலனை செய்துகொண்டிருக்கிறேன். இனி அப்பிழைகளைச் செய்யப்போவதில்லை.

எழுத்தாளன் கருத்து சொல்லவேண்டும் என வாதிடுபவர்கள் சொல்வதை கவனியுங்கள். எவராவது எழுத்தாளன் சொல்வதென்ன என்று செவிகொடுக்கிறார்களா? அதற்கேற்ப தங்கள் தரப்பை மாற்றிக்கொள்கிறார்களா? முன்னரே கருத்துசொன்ன எழுத்தாளர்களை இவர்கள் எப்படி எதிகொண்டிருக்கிறார்கள்? தாங்கள் ஏற்கனவே சொல்லிக்கொண்டிருக்கும் உறுதியான தரப்பை ஏற்று எழுத்தாளன் தன் பின்னால் வந்து நின்று கொடிபிடித்து கோஷமிடவேண்டும் என்று மட்டுமே நினைக்கிறார்கள். கொஞ்சமேனும் மாற்று கருத்தை எழுத்தாளன் சொல்லிவிட்டால் கண்மூடித்தனமாக வசைபாடுகிறார்கள். எழுத்தாளன் தன் ‘பிரியாணிக்கும்பலில்’ ஒருவனாக ஆகவேண்டும் என்பதைத்தான் இவர்கள் எழுத்தாளன் கருத்து சொல்லவேண்டும் என்ற சொற்களால் உத்தேசிக்கிறார்கள்.

அப்படி ஏதேனும் ஒரு தரப்புடன் சென்று நின்று கோஷமிடுபவன் எழுத்தாளனே அல்ல. அவன் கோஷமிடும் தொண்டன். அவன் எதையும் எழுதிவிடமுடியாது. எழுத்து தான் தனியன், தன் குரல் தனித்தொலிப்பது என ஒருவன் நம்பத் தொடங்கும்போதே எழுகிறது. பல்லாயிரம் கருத்துக்கள் உலவும் உலகப்பெரும்பரப்பில் தன் குரலுக்கும் ஓர் இடமுண்டு என அவன் எண்ணும் தன்னம்பிக்கையே எழுத்தின் ஊற்று. ஆகவே உலகமெங்கும் என்றும் எழுத்தாளன் தனிப்பாதை கொண்டவனே. எழுத்தாளனை நோக்கி மத அமைப்புகளும் அரசியல் இயக்கங்களும் எங்கள் வில்லையை மாட்டிக்கொள் என்று சொல்லி அழைப்பதும் , மறுத்தால் அவனை வசைபாடுவதும் , முடிந்தால் தண்டிப்பதும் வரலாறெங்கும் நிகழ்ந்தபடியேதான் உள்ளன. அவர்களை மீறி, அவர்களுக்கு எதிராகவே இன்றுவரை உலக இலக்கியப்படைப்புக்கள் அனைத்தும் எழுதப்பட்டுள்ளன

ஜெ

***

அன்புள்ள ஜெ

கலைஞர் இறப்புக்கு அஞ்சலி செலுத்தாத நீங்கள் மனுஷ்யபுத்திரன் கவிதை விஷயத்திற்கு மட்டும் நீண்ட எதிர்வினை ஆற்றியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. உங்க்ள் செலெக்டிவ் ஆன கோபம் என்ன அடிப்படையிலானது?

ஆர். முருகேஷ்

***

அன்புள்ள முருகேஷ்

நான் இன்றுவரை சினிமா, அரசியல் பிரபலங்களின் இறப்பை ஒட்டி தமிழகத்தில் உருவாகும் எந்த sycophancy யிலும் கலந்துகொண்டதில்லை. அவர்களில் பலருடன் எனக்கு நேரடியான அணுக்கம் இருந்தும் கூட. எழுத்தாளன் அதற்குக் கூசவேண்டும் என்பதே என் எண்ணம். அந்த ஆள்கூட்ட உணர்ச்சிவெறிகளில் கலந்துகொண்டு நெகிழும், கூச்சலிடும் எழுத்தாளர்கள்மேல் எனக்கு எந்த மதிப்பும் இல்லை.

தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே அஞ்சலிக் கட்டுரை, நெகிழ்ச்சிக்குறிப்பு எதையும் எழுதவில்லை என்பதைக் கவனியுங்கள்.  இது நெடுங்காலமாகவே சிற்றிதழ் சார்ந்த இலக்கிய மரபிலிருக்கும் மனநிலை. ஆள்கூட்டத்திடம், மையப்பெரும்போக்குடன் முரண்படுவதே எழுத்தாளனாவதன் முதல்படி. நீங்களும் கும்பலில் ஒருவர் என்றால் கோஷமிடச்செல்லுங்கள், முகநூலில் புழுக்கையிடுங்கள். இலக்கியத்திற்குள் வந்து தொந்தரவுசெய்யாதீர்கள்.

நான் அஞ்சலிக்கட்டுரைகள் எழுதுவது

அ. எனக்கு நேரடியாக அணுக்கமான நண்பர்களுக்கு.

ஆ.இலக்கியத்தில் பங்களிப்பாற்றி அறியப்படாது மறைபவர்களுக்கு.

இ.இலக்கிய ஆளுமைகளுக்கு.

அந்த அஞ்சலிக்குறிப்புகளில்கூட அவர்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பை மிகையின்றிச் சரியாகச் சொல்லவே முயன்றிருப்பேன். பெரும்பாலும் என் மதிப்பீட்டை ஒட்டியே மேற்கொண்டு அவர்களின் மீதான விவாதம் நிகழ்வதையும் கண்டிருக்கிறேன்.

கூட்டுமனநோய் போல வெளிப்படும் பிரபலங்களுக்கான இரங்கலில் சிறுவிமர்சனத்துக்கோ மதிப்பீட்டுக்கோ இடமில்லை. ஜெயலலிதா கருணாநிதி அல்லது வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவில்லை என எழுத்தாளனை வசைபாடுபவர்கள் அவ்வெழுத்தாளன் தன் தரப்பாக ஒரு சிறுவிமர்சனத்தையோ மதிப்பீட்டையோ சேர்த்துக்கொண்டால் எப்படி எகிறிக்குதித்து வசைபாடுவார்கள் என எண்ணிப்பாருங்கள். அவர்கள் எதிர்பார்ப்பதென்ன என்று புரியும்.

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்,

மனுஷ்யபுத்திரன் பற்றிய கட்டுரையில் பேச விட்டுப்போன விசயம் ஈழத்திற்கு திமுக செய்த துரோகமும் அதற்கு இவரைப்போன்றவர்கள் செய்த சப்பைக்கட்டும். இவர்களின் ஆத்மா செத்துவிட்டது. இந்த இனத் துரோகிகள் கவிதை எழுதி என்ன முற்போக்கு எண்ணத்தை விதைக்கப்போகிறார்கள்?

செல்வ. சிவக்குமார்

***

அன்புள்ள சிவக்குமார்

உங்கள் புரஃபைல் நீங்கள் இளையவர் என்பதை காட்டுகிறது. ஈழ விஷயங்களை நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே பார்த்துவருகிறேன்.

ஈழ மக்கள் விஷயத்தில் ஆழமான நல்லெண்ணமும், தொடர்ந்த முயற்சியும் கொண்டிருந்தவர்கள் இருவர், எம்.ஜி.ஆர் அடுத்து முக. முக மற்றும் கனிமொழி கடைசி வரை முயன்றதை, அவர்கள் எடுத்த முயற்சிகள்  தோற்கடிக்கப்பட்டதை அறிவேன். ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள்தான் எழுதவேண்டும். அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

ஈழ விஷயத்தில் துரோகிப்பட்டம் பெறாத தமிழர்கள் எவருமே இல்லை. நேற்றுதான் இந்தக் கட்டுரையை வாசித்தேன். வேடிக்கையாக இருந்தது

http://umarchennai.blogspot.com/2015/08/why-i-am-not-a-may17-member.html?m=0

ஜெ

***

கருத்துரிமையும் கேரளமும்
இரு எல்லைகள்
பஷீரும் ராமாயணமும்
எம்.எஃப் ஹூசேன் இந்து தாலிபானியம்
இந்துத்துவம் காந்தி
எம் எஃப் ஹூசேய்ன்

ஹூசேய்ன் கடிதங்கள்
காதலர் தினமும் தாலிபானியமும்
தேவியர் உடல்கள்

முந்தைய கட்டுரைகேரளக் கருத்துரிமை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஐரோப்பா-2, சொல்லில் எஞ்சுவது