கும்பமுனி யார்?

kumpamuni2தேசிகவினாயகம் பிள்ளை தமிழ் விக்கி

அன்புள்ள  ஜெ,

https://nanjilnadan.com/2018/08/20/பைரவதரிசனம்/

நாஞ்சில்நாடனின் இந்தக்கதை பிரமாதம்…கும்பமுனி தொடரில் இப்படி ஒரு வரி தோன்றவைப்பது தான் நாஞ்சிலின் முத்திரை..!

“மூத்த பின்நவீனத்துவத் தமிழ் எழுத்தாளனின் பழுதுபட்ட கிழட்டு இருதயம் படபடவெனத் துடித்து, சற்று நேரம் நின்று, பின்பு சீராக அடிக்கத் துவங்கியது.”

சரி- நாஞ்சில் தான் கும்பமுனி என்று படித்தாயிற்று. ஆச்சி தான் கண்ணுப்பிள்ளை என்ற வாசிப்புக்கு இடமுள்ளதா?

மதுசூதனன் சம்பத்

கவிமணி
கவிமணி

அன்புள்ள மது

சென்னை வந்துவிட்டீர்கள் என கேள்விப்பட்டேன்

பொதுவாக புனைகதைகளின் கதாபாத்திரங்களை இன்னார் என அடையாளப்படுத்துவது கடினம். அந்த ஆசிரியரே கூடச் சொல்லமுடியாது. வாசகர்கள் கொஞ்சம் ஊகிக்கலாம்

கும்பமுனி மூன்று மனிதர்களின் கலவை என இப்போது தோன்றுகிறது. நகுலன் முதன்மையாக. கொஞ்சம் கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை.நாஞ்சில் எழுத எழுத கும்பமுனி கவிமணியை நோக்கி நகர்கிறார். கும்பமுனியின் வீடும் சூழலும் கவிமணிக்குரியவை. கவிமணியின் நக்கலும் இடக்கும் ஊரறிந்தவை. கும்பமுனி ஒரு காவியம் எழுதியிருந்தால் ‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ போலவே இருந்திருக்கும். கவிமணியின் பல சொல்லாட்சிகளை கும்பமுனிக்கு அளித்திருக்கிறார் நாஞ்சில். அதோடு அவர்களிருவரையும் தானாக சமைத்துக்கொண்டு உள்ளே வாழும் நாஞ்சில்நாடன்

கும்பமுனியின் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை ஒரு தனிக் கதாபாத்திரம். நகுலனுக்கு அப்படி யாருமில்லை – எனக்கு யாருமில்லை, நானேகூட என வாழ்ந்தவர். நாஞ்சிலுக்கு உலகெலாம் உண்டு, தனிமை இல்லை. ஆச்சிக்கு இலக்கியமெல்லாம் கிடையாது என்பது மேலதிக சௌகரியம்

நகுலன்
நகுலன்

கண்ணுபிள்ளைக்கு முன்னுதாரணமாக அமைந்தவர் கவிமணியின் தவசிப்பிள்ளை. பிள்ளைகள் இல்லாதிருந்த கவிமணி தவசிப்பிள்ளையுடன்தான் தங்கியிருந்தார். உடம்பெங்கும் சொறியால் அவதிப்பட்டார். அவருடைய தவசிப்பிள்ளையும் செய்யுள் எழுதுவார், அவர் ஓர் அரை கவிமணி. கடைசிக்காலத்தில் கவிமணி எழுதிய ‘எந்நாள் காண்பேன் இனி?” வகை இரங்கல் வெண்பாக்கள், திருமண வாழ்த்துக்கள் போன்றவை தவசிப்பிள்ளையின் கைவண்ணம் [காணிக்கை உண்டு] என்று சொல்லப்படுவதுண்டு

கவிமணி பற்றி அ.கா.பெருமாள் பேச்சில் உருவாக்கிய மிகச்சுவாரசியமான சித்திரங்களிலிருந்து நாஞ்சில் இந்தக் கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கலாம்

ஜெ

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’

மீண்டும் கும்பமுனி

நாஞ்சில் நாடனின் கும்பமுனி

கும்பமுனியின் காதல்

 கும்பமுனி ஓர் அறிமுகம்

முந்தைய கட்டுரைமனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்
அடுத்த கட்டுரைமனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள் -கடிதங்கள்