ஐரோப்பா-2, சொல்லில் எஞ்சுவது

london1
எழுத்தாளர் இடங்களுக்கு அழைத்துச்செல்லும் இளம் எழுத்தாளர்

2016 ஜூன் மாதம் எங்கள் லண்டன் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு லண்டனில் வசித்த இலக்கியவாதிகளின் இல்லங்கள் மற்றும் அவர்கள் வழக்கமாக வரும் மாலைவிடுதிகள் வழியாக ஒரு சுற்றுலா. வழக்கத்துக்கு மாறாக ராய் மாக்ஸம் அதில் வந்துகலந்துகொண்டு சுற்றுலா முழுக்க நடந்து வந்தார். “புதிய பப் எதையாவது காட்டுவார்கள் என்று நினைக்கிறேன்” என்று கண்ணடித்தபடிச் சொன்னார். எங்கள் வழிகாட்டி ஒர் ஆய்வுமாணவர், எழுத்தாளராக முயல்பவர். ராய் மாக்ஸமை அறிமுகம் செய்தபோது அவருக்குத் தெரிந்திருந்தது. அவருடைய தேநீர் குறித்த நூலை வாசித்திருந்தார்

லண்டனில் வாழ்ந்த எழுத்தாளர்கள் என் நினைவில் எழுந்தபடியே இருந்தார்கள். வழிகாட்டியின் பேச்சிலும் தாக்கரே, டபிள்யூ டபிள்யூ ஜேகப்ஸ், எமிலி பிராண்டே, டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின் என பெயர்கள் வந்துகொண்டே இருந்தன. என்ன சிக்கலென்றால் இவர்களை கேள்விப்பட்ட நாளிலிருந்து லண்டன் என்னும் நகரம் என் மனதில் விரிந்துபரந்த வெளியாக மாறிக்கொண்டே இருந்தது. நடக்கவைத்தே அழைத்துச்சென்ற வழிகாட்டி அந்நகரை மிகச்சிறிதாக ஆக்கிவிட்டிருந்தார். திடீரென லண்டன் நாகர்கோயில் அளவுக்கே ஆகிவிட்டதுபோல ஒரு மனப்பிரமை.

lon3

லண்டன் நகர் மையத்தில் 77, பரோ ஹை தெருவில் [Borough High Street] இருக்கும் ஜார்ஜ் இன் என்னும் உணவு விடுதியின் முன்னாலிருந்து பயணம் ஆரம்பித்தது. இந்த விடுதி முந்நூறாண்டு பழைமையானது என்றார். பதினாறாம் நூற்றாண்டு முதல் அந்த விடுதி செயல்படுகிறது. ஷேக்ஸ்பியரே அங்கே வந்து உண்டு குடித்திருக்கிறார். டிக்கன்ஸின் நாவலொன்றில் அவ்விடுதி பற்றியக் குறிப்புகள் உள்ளன . இவை அங்கே எழுதி வைக்கப்பட்டிருந்தன. உண்மையா இல்லையா என நம்மால் சோதித்தறியமுடியாது. அந்த கோணத்தில் பழைமையான அவ்விடுதியைப் பார்ப்பது உள எழுச்சியை அளிப்பதாக இருந்தது

முதல்முறையாக லண்டனின் அக்காலத்தைய கணப்புகளைப் பார்த்தது அங்கேதான். மின்கணப்புகளின் காலகட்டத்தில் அவை அர்த்தமற்ற நினைவுச்சின்னங்கள். அக்கணப்புகள் எரிந்த நாட்களில்தான் லண்டன் உலகத்தின் நவீன சிந்தனையின் மையமாக இருந்தது. ஷேக்ஸ்பியர் முதல் ஜேம்ஸ் ஜாய்ஸ் வரை, ஜே.எஸ்.மில் முதல் டி.எஸ். எலியட் வரை, ஜான் ஹோப்ஸில் இருந்து ஏ.என்.வைட்ஹெட் வரை, ஃப்ரான்ஸிஸ் பேக்கன் முதல் சார்ல்ஸ் டார்வின் வரை முந்நூறாண்டுகள் அறிவின் அலைக்கொந்தளிப்பு நிகழ்ந்தது. இன்றும் அறிவியலிலும் தத்துவத்திலும் பிரிட்டிஷ் அறிவியக்கம் தொடர்கிறது என்றாலும் இலக்கியத்தில் அது எரிந்தெழுந்த காலங்கள் வரலாறாக மாறிவிட்டிருக்கின்றன. ஒருகாலத்தில் லண்டன் தீவிபத்துக்களுக்குப் புகழ்பெற்றது. கணப்புகள் எல்லைமீறுவதன் விளைவு. ஜார்ஜ் இன்னில் பல கணப்புகளில் செயற்கையாக எரியா விறகுகளை வைத்திருந்தனர்.

lon4

லண்டனின் தெருக்களில் செங்கற்களையும் கருங்கற்களையும் பாவியிருந்தனர். சற்று அப்பாலிருந்து நோக்க அவ்வெளி மிகப்பெரிய முதலைதோற்பரப்பு போலத் தோன்றியது. இடுங்கலான தெருக்கள் அதே தொன்மையுடன் பேணப்படுகின்றன. இருபுறமும் சென்றநூற்றாண்டுகளைச் சேர்ந்த கட்டிடங்கள். பெரும்பாலானவை இரண்டாம் உலகப்போரின் ஜெர்மானியக் குண்டுவீச்சுகளால் அழிக்கப்பட்டவை. மீண்டும் அதே வடிவில் கட்டப்பட்டிருக்கின்றன. நூறாண்டுகளுக்கு முன்பிருந்த பாசிப்பரவலையும் நீர்க்கருமையையும்கூட அப்படியே திரும்பக்கொண்டு வந்துவிட்டார்கள் போலும் என நினைத்துக்கொண்டேன்.

வழிகாட்டி சொன்னதற்கும் மேலாக நானே கற்பனை செய்துகொண்டேன். ஜேன் ஆஸ்டின் இந்த தெருக்களில் சாரட் வண்டியில் சென்றிருப்பார். மேரி கெரெல்லி இந்தத் தெருக்களில் நடந்திருக்கக் கூடும் .அப்போதே தண்டவாளங்களில் குதிரைகள் இழுத்துச்செல்லும் வண்டிகள் வந்துவிட்டிருந்தன. அவை ஓசையின்றி செல்லும் என்பதனால் வண்டிகளின் வலப்பக்கம் மிகப்பெரிய வெண்கல மணியைக் கட்டி அடித்தபடியே செல்வார்கள்.நகரமே அந்த மணியோசையால் நிறைந்திருக்கும். அவற்றுக்குமேல் தேவாலய மணியோசைகள்.  லண்டன் உட்பட ஐரோப்பிய நகர்கள் அனைத்திலுமே நகர்மையத்திலேயே வைக்கோல்சந்தை என்னும் பெயர்கொண்ட ஓர் இடம் உள்ளது. லண்டனின் ஹேமார்க்கெட் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் உள்ளது. அக்காலத்தில் நகரம் குதிரைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. இன்று டீசல்,பெட்ரோல் போல அன்று வைக்கோல் நகரை இயக்கும் ஆற்றலாக இருந்திருக்கிறது.இன்று வண்டிப்புகை போல அன்று குதிரைச்சாணி

lon5

லண்டனை நேரில் பார்ப்பதுவரை ஆங்கில இலக்கியங்களில் வரும் ‘செய்தியோட்டச் சிறுவன்’ [Erraand boy] என்ற விஷயம் எனக்குப் பிடிகிடைக்கவேயில்லை. ஒருவருக்கொருவர் செய்திகளைச் சிறிய காகிதச்சுருளில் எழுதி சிறுவனிடம் கொடுத்தனுப்புகிறார்கள். இதற்கென்றே சிறுவர்கள் இருந்திருக்கிறார்கள். லண்டனைப் பார்த்தபின் புரிந்தது, பெரும்பாலான பிரபுக்களின் வீடுகள் சிறுவர்கள் ஓடிச்சென்று குறிப்பைக் கொடுத்துவிட்டு திரும்ப ஓடிவரும் அளவுக்கு அருகருகேதான் இருந்திருக்கின்றன. தாக்கரே அந்தப்பக்கம் ஓரு மதுக்கடையில் இருக்க கூப்பிடு தூரத்தில் டிக்கன்ஸ் இந்தப்பக்கம் இருந்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் சின்னச் சந்தில் தோளோடு தோள் முட்டி ‘மன்னிக்கவும்’ என தொப்பியை எடுத்து தாழ்த்தி வணங்கிவிட்டுச் சென்றிருக்கவும்கூடும்.

சார்ல்ஸ் டிக்கன்ஸ் வந்தமர்ந்து எழுதியதாகச் சொல்லப்படும் The Grapes என்னும் மதுவிடுதி Narrow Street,ல் உள்ளது. 1583ல் கட்டப்பட்ட இவ்விடுதியை சார்ல்ஸ் டிக்கன்ஸ் அவருடைய நூலில் குறிப்பிட்டிருக்கிறார் அங்கே ஷேக்ஸ்பியர்கூட வந்து தங்கியிருந்தார் என்று சொல்லி அருகிலிருந்த ஒரு தங்கும் விடுதியின் சாளரத்தை வழிகாட்டி வெளியே நின்று சுட்டிக்காட்டினார்.

old-curiosity-shop-resized

சாத்தானின் மதுவிடுதி என அழைக்கப்பட்ட Prospect of Whitby அருகிலுள்ளது.எழுத்தாளர்கள் சந்திக்க உகந்த இடம்தான். ஜெருசலேம் விடுதி The Jerusalem Tavern இன்னொரு இடம். இது பதினாலாம் நூற்றாண்டு முதல் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவை அனைத்துமே இன்று பழுதுபார்க்கப்பட்டு நல்லநிலையில் உள்ளன. பழமையின் தடையங்களை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, அவற்றை புதியனவாக்கி புழக்கத்திற்குக் கொண்டுவருவது ஐரோப்பாவின் இயல்புகளில் ஒன்று. பழைமையை தோன்றச்செய்யும்படி புதிதாகக் கட்டுவதுமுண்டு. இது வரலாற்றுடன் ஆழ்ந்த தொடர்பை உருவாக்குகிறது, சமகாலத்தை சென்றகாலத்துடன் இணைக்கிறது. கட்டிடங்கள் போல காலத்துடன் இணைந்தவை வேறில்லை. அந்த விடுதிகளில் ஒவ்வொரு பொருளும் குறியீடுகளும் அடையாளங்களுமாக ஆகிவிட்டிருந்தன. அங்கே அமர்ந்திருக்கையில் சென்ற காலம் ஆழ்மனத்தில் ஓடிக்கொண்டேதான் இருக்கும். அருகே அந்த இலக்கியமேதைகள் இருப்பதுபோன்ற பிரமை இருந்துகொண்டிருக்கும்

லண்டனில் சென்றகால எழுத்தாளர்கள் வாழ்ந்த மையங்கள் அவர்களுடைய டைரிக்குறிப்புகள், வாழ்க்கை வரலாறுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. Fitzroy Tavern அவற்றிலொன்று. அக்காலத்து உயர்தர மதுவிடுதி. டைலன் தாமஸ், ஜார்ஜ் ஆர்வல் போன்றவர்கள் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடம். முதல்,. இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் இலக்கியவாதிகள், கலைஞர்கள் சந்திக்கும் முக்கியமான மையம் ..ஃபிட்ஸ்ராய் காபிநிலையமாக 1883ல் டபிள்யூ. எம் ப்ரட்டன் என்பவரால் கட்டப்பட்டது. பல கைகள் மாறி இன்று ஒரு மதுநிறுவனத்திற்கு உரிமையானதாக உள்ளது.இன்று வெவ்வேறு இலக்கிய ஆர்வலர் அங்கு வந்துகொண்டிருந்த தங்கள் எழுத்தாளர்களுக்காக அங்கே நினைவுக்கூட்டங்கள் நடத்துகிறார்கள்

The Grapes [76 Narrow Street, E14]
The Grapes [76 Narrow Street, E14]

ப்ளூம்ஸ்பரி விடுதி, ஃபிரெஞ்ச் ஹவுஸ் விடுதி ஆகியவையும் இலக்கியமுக்கியத்துவம் உடையவை என்றார். புளூம்ஸ்பரி விடுதி விர்ஜீனியா வுல்ஃபுடன் தொடர்புள்ளது. டீன் தெருவிலுள்ள பிரெஞ்சு ஹவுஸ் விடுதியில்தான் சார்ல்ஸ் டிகால் பிரெஞ்சு மக்களுக்கு அவர் விடுத்த புகழ்மிக்க அறைகூவலை எழுதினாராம். சொல்லப்போனால் அங்குள்ள எல்லா மதுவிடுதிகளுமே இலக்கிய முக்கியத்துவம் கொண்டவையாகத்தான் இருந்திருக்கும். எழுத்தாளனுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன? இதெல்லாம் ஒருவகையான சுற்றுலாக் கவற்சிகள். இன்று உருவாக்கப்படும் நவீனத் தொன்மங்கள்

ஒருகட்டத்தில் அவர் சொன்னவற்றை பின் தொடரமுடியாமலாயிற்று. பெரும்பாலும் அக்காலத்தைய சில்லறைப் பூசல்கள். வம்புவழக்குகள். ராய் மிக ஆர்வமாகக் கேட்டுத்தெரிந்துகொண்டார். அங்கே நான் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் ஒருவரோடொருவர் பேசியபடிச் செல்வதை என்னுள் பார்த்துக்கொண்டிருந்தேன். டிக்கன்ஸின் கற்பனாவாதத்தைப் பற்றி ஜான்சன் என்ன சொல்லக்கூடும்? ஆனால் வால்டர் ஸ்காட்டுக்கும் ஷேக்ஸ்பியருக்கும் அவரைப் பிடித்திருக்கும்…திடீரென்று தோன்றியது, எங்களுடனேயே ஓர் ஆங்கில எழுத்தாளர் இருக்கிறார். ராய் மாக்சம் அந்த கதைகளைக் கேட்டு என்னை நோக்கி கண் சிமிட்டிப் புன்னகைசெய்தார்.

The_Jubilee_Hospital,_Neyoor_(p.322,_1891)_-_Copy
The_Jubilee_Hospital,_Neyoor_(p.322,_1891)_-_Copy

குமரிமாவட்டத்திற்கு லண்டன் மிக நன்கு தெரிந்த ஊர். குமரிமாவட்டத்தில் கடலோரங்களில் போர்ச்சுக்கீசியர்களால் 1730 வாக்கில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் கொண்டுவரப்பட்டது. [அதற்கு முன் கிபி ஏழாம் நூற்றாண்டிலேயே சிரியன் மிஷனைச் சேர்ந்த தாமஸ் கானாயியால் திருவிதாங்கோட்டில் அரைப்பள்ளி என்னும் தொன்மையான தேவாலயம் வந்துவிட்டது. அது அனேகமாக இந்தியாவின் முதல் கிறித்தவ தேவாலயமாக இருக்கலாம்] மிகவிரைவிலேயே 1809ல் களில் லண்டன் மிஷன் குமரிமாவட்டத்தின் உட்பகுதிகளில் பணியாற்றத் தொடங்கியது.நாகர்கோயில் அருகே உள்ள மயிலாடியில் வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே லண்டன் மிஷனரி சொசைட்டியின் சார்பில் உருவாக்கிய முதல் தேவாலயமே இங்கே சீர்திருத்தக் கிறித்தவத்தின் வருகையை உருவாக்கியது.

இன்று குமரிமாவட்டத்தில் உள்ள இரு பெரிய அமைப்புகள் லண்டன் மிஷன் இயக்கத்தால் உருவாக்கப்பட்டவை. தமிழகத்தின் மிகப்பழைய கல்லூரி என அறியப்படும் நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி 1818ல் சார்ல்ஸ் மீட் அவர்களால் நாகர்கோயிலில் ஆரம்பிக்கப்பட்டது. 1891ல் ஆரம்பிக்கப்பட்டநெய்யூர் ஜூபிலீ ஆஸ்பிட்டல் இன்று சி.எஸ்.ஐ ஆஸ்பத்திரியாக தொடர்கிறது. குமரிமாவட்டத்தில் லண்டன் மிஷன் அமைப்பைச் சேர்ந்த ஏராளமான தேவாலயங்களும் கல்விநிலைகளும் உள்ளன. இன்று அவை சி.எஸ்.ஐ அமைப்பின் பகுதிகளாக உள்ளன

the-george-inn
the-george-inn

இளமையில் லண்டனில் இருந்து வரும் துரைகளை நிறையவே பார்த்திருக்கிறேன். பெரும்பாலானவர்கள் மதப்பிரச்சாரத்துக்காக வரும் பாதிரியார்கள். லண்டனின் குளிராடையிலேயே மேடையில் தோன்றுவார்கள். அதே ஆடை அணிந்த ஒருவர் அவர்களின் பேச்சை மொழியாக்கம் செய்வார். தேனீ வளர்ப்பு உட்பட பல்வேறு கைத்தொழில்களை உள்ளூரில் பரப்புவதற்காக வந்தவர்கள் இன்னொரு வகை. வேட்டிகட்டி மெல்லிய துணியில் சட்டை அணிந்து புண் போன்ற உதடுகளும் நரைத்த கண்களும் சிவப்பு தலைமயிரும் கொண்ட அவர்கள் எங்களுக்கு தீராத வேடிக்கைப்பொருட்கள். அக்காலத்தில் அமர்ந்துகழிக்கும் கழிப்பறை[ கம்மோடு] எங்களூரில் லண்டன் எனப்பட்டது. யாராவது லண்டன் என்றாலே வாய் பொத்திச் சிரிப்போம்.

நான் இளமையில் வாழ்ந்த முழுக்கோடு சிற்றூரின் மையமே அங்கிருந்த ஒய்.எம்.சி.ஏ தான். நூறாண்டு பழைமை கொண்ட அமைப்புஅது. அங்கே இருந்த லண்டன் மிஷன் பாதிரியார்கள் பேணிய தொன்மையான நூலகம் இளமையில் எனக்கு பெரிய புதையலாகவே தென்பட்டது. நான் எழுத்துக்கூட்டி மூச்சுப்பிடித்து படித்து முடித்த முதல் ஆங்கில நூல் ஐவன்ஹோ. வால்டர் ஸ்காட் என்றபெயரை பெருமிதத்துடன் சொல்லி அலைந்தது இன்றும் நினைவிலிருக்கிறது. பள்ளியில் அந்நூலின் கதையை சொல்லிச்சொல்லி பலமடங்கு பெரிதாக்கிக் கொண்டேன்..

shake
Shakespeare’s Globe

ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் இருந்த 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் வழியாகவே நான் இலக்கியத்தைப் பொறுமையாக வாசிக்கக் கற்றுக்கொண்டேன். பெரியபெரிய சொற்றொடர்கள். நீண்ட உரையாடல்கள். அதைவிட நீண்ட கடிதங்கள். பல பக்கங்களுக்கு நீளும் விவரணைகள். டெஸ் ஆஃப் ஊபர்வில்ஸில் டெஸ் தன் ஊரைவிட்டுக் கிளம்பிச்செல்லவே பல பக்கங்கள் ஆனதை மெய்மறந்து வாசித்து அவள் போய் சேர்ந்ததும் நானே நீண்ட நடை ஒன்றை முடித்ததுபோல் உணர்ந்ததை நினைவுறுகிறேன்

நீளமான சித்தரிப்புகளுக்கு இருக்கும் ஆற்றலை நெடுங்காலம் கழித்தே நம்மால் உணரமுடியும். அவை மெதுவாகச் செல்வதனாலேயே அவற்றில் நாம் நெடுநேரம் வாழ்கிறோம். நுட்பமாக நினைவில் நிறுத்திக்கொள்கிறோம். ஹெமிங்வே பாணி நவீனத்துவநாவல்களின் நிலமும் வாழ்க்கையும் வெறும் செய்தியாகவே நினைவில் எஞ்சுகின்றன. பழைய பிரிட்டிஷ் , ருஷ்ய நாவல்களிலோ நாம் வாழ்ந்து மீண்டிருப்பதாகவே உணர்கிறோம். அவ்வப்போது வண்டிகளில் ஏறியும் நடந்தும் அந்தப்பயணத்தை செய்துகொண்டிருந்தபோது பிரிட்டிஷ் நாவல் ஒன்றினூடாகச் செல்வதாகவே தோன்றியது. சலிப்பு என்பது நம் மூலை ஓய்ந்துவிடும் நிலை அல்ல. நம் மூளையின் வழக்கமான பாதைகள் ஓய்ந்து ஆழம் மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும் நிலை. நினைவுகூருங்கள், சலிப்பூட்டும் நாவல்களே நீண்டகாலம் நினைவில் நிற்கின்றன. சலிப்பூட்டாத பேரிலக்கியமென ஏதுமில்லை.

Fitzroy_Tavern_-_Fitzrovia_-_W1
Fitzroy Tavern

லண்டனில் பெரும்பாலான புத்தகப்பிரியர்கள் செல்லும் செயரிங் கிராஸ் சாலை. ஒருகாலகட்டத்தில் பழைய புத்தகங்களின் சொற்கம். இப்போது குறைவாகவே அங்கே புத்தகங்கள் விற்கப்படுகின்றன. பொதுவாக புத்தகக் கடைகளே சோர்ந்துதான் காணப்படுகின்றன. நிறைய ஊர்ப்பெயர்களை ஊட்டியில் வெள்ளைக்காரர்கள் வைத்திருக்கிறார்கள். செயரிங் கிராஸ் முன்பு பிரம்மராஜன் இருந்த இடம். The Pillars of Hercules  என்ற மதுவிடுதி 1910ல் கட்டப்பட்டது. 1733 முதல் அங்கே செயல்படுகிறது. டிக்கன்ஸின்  இருநகரங்களின் கதையில்  அது குறிப்பிடப்பட்டுள்ளது- எனக்கு ஞாபகமில்லை. சொல்லப்போனால் அவர் சொன்ன எதுவுமே எனக்கு தெரிந்திருக்கவில்லை. பின்னர் விக்கிப்பீடியாவிலிருந்தே பல செய்திகளை தெரிந்துகொண்டேன். அந்தச் சாலை டிக்கன்ஸின் கதாபாத்திரமான Dr Manette, நினைவாக மேனெட் சாலை என அழைக்கப்படுகிறது

உண்மையில் பப்கள் எனக்கு ஆர்வமளிக்காத இடங்கள். இலக்கிய மதுக்கடை என்ற கருதுகோளே அன்னியமானது. ஆனால் இந்தவகையான மதுக்கடைகள் வழியாகவே லண்டனில் இலக்கியம் வளர்ந்திருக்கிறது. நாஞ்சில்நாடன் வந்திருந்தால் ஒரு முழுநாளும் எல்லா மதுக்கடையிலும் அமர்ந்து ஒரு குவளைவீதம் அருந்தி சென்றுமறைந்த பேரிலக்கியவாதிகளின் ஆத்மாக்களுக்கு அணுக்கமானவராக ஆகியிருப்பார்.எந்த மதுக்கடைக்கும் உள்ளே நுழையாமல் வெளியே நின்று பார்த்துச்செல்வதென்பது ஒரு பிழைதான்.

holms

திருவனந்தபுரத்தில் கேரளா காஃபி ஹவுஸ் ஒரு காலத்தில் அப்படி இலக்கியவாதிகள் சந்திக்கும் இடமாக இருந்திருக்கிறது. நான் இரண்டுமுறை சென்றிருக்கிறேன். பி.கே.பாலகிருஷ்ணன்,  மலையாற்றூர் ராமகிருஷ்ணன், எஸ்.வி.வேனுகோபன்நாயர் போன்ற எழுத்தாளர்களையும் இயக்குநர்  ஜி,அரவிந்தனையும் அங்கே சந்தித்தேன். இன்று திருவனந்தபுரம் மஸ்கட் ஓட்டலில் எழுத்தாளர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள்.  அதற்கு முன் ஐம்பதுகளில் இன்றைய ஸ்ரீகுமார் திரையரங்கின் முன்புறம் அப்படி ஒரு மையமாக இருந்திருக்கிறது என சுந்தர ராமசாமியின் நினைவுகள். நாகர்கோயிலில் இருந்த போத்தி ஓட்டல் கவிமணி, கே.என்.சிவராஜபிள்ளை, வையாபுரிப்பிள்ளை, கே.கே..பிள்ளை போன்றவர்கள் வந்தமரும் மையமாக இருந்திருக்கிறது. சென்னையில்டிரைவ் இன்  உட்லண்ட்ஸ் ஓட்டல் சமீபகாலம் வரை எழுத்தாளர்கள், கலைஞர்களின் பொதுவான சந்திப்புப் புள்ளி. ஒருகாலத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியே அங்கேதான் நடக்கும்.

ஆனால் இவை எதற்கும் இங்கே எந்தவகையான முக்கியத்துவமும் இன்றில்லை. எழுத்தாளர்களின் கடந்தகால ஏக்கங்களில் மட்டும் வாழ்பவை. இடங்களில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம்தான். ஆனால் ஒருகாலகட்டத்தின் சிந்தனைகள்  மேல் நமக்கு ஈடுபாடு இருக்கும்பட்சத்தில் அவை உருவான இடங்களும் முக்கியமாக ஆகிவிடுகின்றன. அவை அச்சிந்தனையின் படிமங்களாக மாறுகின்றன. .

ஷேக்ஸ்பியரின் குளோப் அரங்குடன் சுற்று முடிந்ததும் ராய் வழிகாட்டியின் முதுகைத்தட்டி வாழ்த்து தெரிவித்தார். நண்பர்கள் அளித்த மேலதிக பரிசை வழிகாட்டி நன்றியுடன் தலைவணங்கி பெற்றுக்கொண்டார். நான் லண்டனை முழுமையாகப் பார்த்துவிட்டதுபோன்ற திகைப்பை அடைந்தேன். டி.எஸ்.எலியட் ஒரு கட்டுரையில் சொல்கிறார். ஒரு புதியநூல் அதற்குமுன் நாம் வாசித்த அத்தனை நூல்களையும் முழுமையாக மாற்றியமைத்துவிடுகிறது என்று. லண்டன் தெருக்களில் நடந்த அந்த ஒருநாள் நான் வாசித்த அத்தனை பிரிட்டிஷ் நாவல்களையும் மாற்றியமைத்துவிட்டது என உணர்ந்தேன்.

முந்தைய கட்டுரைமனுஷ்யபுத்திரன் ,இலக்கியம் அரசியல்
அடுத்த கட்டுரைதிருட்டுத்தரவிறக்கம்