ஐரோப்பா-1, அழியா ஊற்று

europ1

2016 வரை நான் சென்ற நாடுகள் அனைத்துமே ‘புதிய’ உலகங்கள். இன்றைய நாகரீகம் உருவாகத் தொடங்கிய பின்னர் மனிதர்கள் குடியேறி சமைத்துக்கொண்டவை. நான் இந்திய எல்லையைக் கடந்து சென்ற முதல் அயல்நாடு கனடா. 2001 செப்டெம்பரில் அ.முத்துலிங்கம் அவர்களின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்குச் சென்றேன். முதல்வெளிநாடு என்பது எவருக்கும் எண்ண எண்ணக் கிளர்ச்சியூட்டும் நினைவு. இன்றும் நயாகராவும், மேப்பிள்காடும், டிம் ஹார்ட்டன் டீக்கடையில் அமர்ந்து பேசிய இலக்கியமும் நினைவில் இனிக்கின்றன.

அதன்பின்னர் 2006 ல் சித்ரா ரமேஷ் முயற்சியால் சிங்கப்பூருக்கும் அங்கிருந்து மலேசியாவுக்கும் சென்றேன். 2009 ஏப்ரலில் ஆஸ்திரேலியாவுக்கு நோயல் நடேசன் அவர்களின் அழைப்பால் சென்றேன். அங்கிருந்து வந்ததுமே 2009 ஜூலையில் அமெரிக்கா சென்றேன். நண்பர் திருமலைராஜனும், சிறில் அலெக்ஸும் ஏற்பாடுசெய்திருந்த வாசகர் சந்திப்புகள்.

eu2

சுந்தர ராமசாமி ஒர் அவதானிப்பை முன்வைப்பதுண்டு. நேராகச் செல்லும் சாலை வளைந்து வளைந்து செல்லத் தொடங்கினால், அகன்ற சாலை இடுங்கத் தொடங்கினால், ஆறு வரப்போகிறது என்று பொருள். ஆறு இருக்குமிடத்தில் முன்னரே மக்கள் செறிவாகக் குடியேறி ஊர்களை அமைத்திருப்பார்கள். அங்கே வழிகள் வளைந்தாகவேண்டும். இடுங்கியாகவேண்டும். கனடாவிலும் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கண்ட மாபெரும் சாலைகள் அந்த நிலம் புதியது என்பதற்கான சான்றுகள் என நினைத்துக்கொண்டேன்

கனடா கிட்டத்தட்ட வெற்றிடமாக கிடந்த நிலப்பரப்பு. அங்கே சென்றமைந்த ஐரோப்பியக் குடியேறிகள் உருவாக்கியது அந்நாடு. கனடாவின் நீட்சியாகவே நான அமெரிக்காவைக் கண்டேன். பலவகையான நிலங்களுடன் விரிந்துபரந்துகிடந்த அந்த மாபெரும் நாடு இன்னமும்கூட முழுமையாகக் கண்டடையப்படாதது என்று தோன்றியது. சிங்கப்பூரும் புதியநிலம்தான்.ஒரு பழைய செம்படவச் சிற்றூர் லீ க்வான் யூ என்னும் தலைவரின் ஒருங்கிணைப்பால், மேற்குநாடுகளின் ஆதரவால் பெருநகரென்றும் நாடென்றும் ஆனது அது.

eu3

மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் பழங்குடி நிலங்கள். அங்கு இன்றுகாணும் அனைத்தும் சென்ற சில நூற்றாண்டுகளாக உருவானவை. ஆஸ்திரேலியாவிலும் மலேசியாவிலும் பயணம் செய்யும்போது இந்தியவிழிகளுக்கு அந்நிலம் ஆளில்லாமல் ஒழிந்து கிடப்பதாகவே உளமயக்கு ஏற்படும்

இந்தப் புதுநிலங்களுக்கு உரிய முதல் பொதுத்தன்மை இவை ‘வரலாறற்றவை’ என்பதே. சில நூறாண்டுகளின் குடியேற்ற – ஆதிக்க வரலாறே இவற்றில் உள்ளது. அதை ‘இளம் வரலாறு’ என்று சொல்வேன். அது சுண்ணக்கல் போன்றது. காலத்தால் இறுகி இறுகித்தான் அது பளிங்கு ஆக முடியும். வரலாற்றின் நிகழ்வுகள் காலத்தின் அழுத்தத்தால், மொழி அதன்மேல் ஓயாது அலையடித்துக்கொண்டிருப்பதனால் மெல்ல மெல்ல தொன்மங்கள் ஆகின்றன. வரலாற்றுச் சின்னங்கள் படிமங்களாகின்றன. இளம் வரலாறு நமக்கு செய்திகளின் தொகையாகவே வந்து சேர்கிறது. முதிர்ந்த வரலாறு உணர்வுகளாக, கனவுகளாக வந்து சேர்கிறது. செய்தித்தாளுக்கும் இலக்கியப்படைப்புக்குமான வேறுபாடு போன்றது இது.

eu4

பேரிலக்கியப் படைப்பு போல தொடத்தொடத் திறக்கும் ஆழம் கொண்டதாக, நமக்கே உரிய உட்பொருட்களை அளித்துக்கொண்டே இருப்பதாக வரலாறும் மாறக்கூடும். அதற்கு அவ்வரலாறு பற்பல அடுக்குகள் கொண்டதாக ஆகவேண்டும். அதன் ஒவ்வொரு புள்ளியும் பலமுனைகளில் திறக்கப்படவேண்டும். அதை வரலாற்றாசிரியர்கள் ஓர் அளவுக்குமேல் செய்யமுடியாது. அதைச் செய்பவை இலக்கியங்கள். பேரிலக்கியங்களில் வரலாறும் தத்துவமும் சமூகவியலும் அன்றாடவாழ்க்கையும் ஒன்றாகக் கூடிக்கலக்கின்றன. அந்த ஒட்டுமொத்தமே வரலாற்றை பெருகச் செய்கிறது. காடாகி நிற்பது மண்ணின் சுவையே. இலக்கியங்களாக ஆகும்போதே மண் பொருள் பெறுகிறது

வரலாற்றை சந்திக்கும்போது நாம் அடையும் விம்மிதம், உளவிரிவு, எண்ணப்பெருக்கு ஆகியவை வரலாறு அவ்வாறு தொன்மமும் படிமமும் ஆக மாறி ஆழம் கொள்ளும்போது உருவாகின்றவைதான். நான் கண்ட புதிய உலகங்களின் வரலாறு வியப்பூட்டியது, சித்திரங்களாக மாறி நினைவில் நிறைந்தது. ஆனால் இந்தியாவில் பயணம் செய்யும்போது உருவாகும் உணர்வுக்கொந்தளிப்புகளும் கனவும் அப்பயணங்களில் பெரும்பாலும் உருவாகவேயில்லை. அது இந்தியா என் நாடு என்பதனாலா என நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். புதிய உலகங்களில் உள்ள நவீனத்தன்மையாலா என்று எண்ணியிருக்கிறேன்.

eu52012 செப்டெம்பரில் நமீபியா சென்றபோது அவ்வெண்ணம் மாறியது. ஆப்ரிக்கா ஒரு தொல்நிலம். நமீபியாவின் மணல்பரப்பும் கலஹாரியும் காலமே அற்ற பாலை வெளி. அங்கும் நான் ஒருவகை புத்தெழுச்சியைத்தான் உணர்ந்தேன். இயற்கையில் ஒரு விலங்கென நின்றிருப்பதன் விரிவை. ஆனால் இமையத்தில், கங்கைக்கரையில் நான் அறிந்த அந்தக் கனவை அடையவில்லை. அப்போது தோன்றியது அக்கனவை உருவாக்குவது நிலம் அல்ல என. நிலத்தை படிமங்களாக ஆக்கும் வரலாறுதான் அந்நிலங்களில் விடுபடுகிறது

சென்ற 2016 ல் நான் முதல்முறையாக ஐரோப்பாவை கண்டேன்.  ஜூன் 10 ஆம் தேதி சென்னையிலிருந்து அருண்மொழியுடன் கிளம்பி அபுதாபி வழியாக லண்டனைச் சென்றடைந்தேன். நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன், சிவா கிருஷ்ணமூர்த்தி, சதீஷ், பிரபு, சிறில் அலெக்ஸ், கிரிதரன் ராஜகோபாலன் ஆகியோர் வரவேற்றனர். நண்பர்களின் இல்லங்களில் தங்கியபடி லண்டனையும் சூழ்ந்திருந்த இங்கிலாந்தின் சிற்றூர்களையும் பார்த்தேன். அங்கிருந்து காரில் கிளம்பி பிரான்ஸ் வழியாக இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம் வந்து மீண்டும் லண்டன் திரும்பி ஊருக்கு மீண்டேன். முதல்கணம் முதல் ஐரோப்பா எனக்கு முற்றிலும் ஆழ்ந்த அனுபவமாக, வரலாற்றுத்தரிசனமாக இருந்தது. அன்று தொடங்கி இன்றுவரை மீளமுடியாமல் ஆழ்த்திவைக்கும் கனவு. நாற்பதாண்டுகளாக என்னை சுழற்றியடிக்கும் இந்தியா என்னும் கனவுக்குச் சற்றும் குறைவில்லாதது

விக்டர் ஹ்யூகோ
விக்டர் ஹ்யூகோ

லண்டனின் தொன்மையான தெருக்களில் நண்பர்களுடன் நடந்தேன். சில கணங்களிலேயே ஆழ்ந்த கனவுநிலையை அடைந்தேன். கனவுகள் அனைத்துக்கும் ஒரு பொதுக்கூறு உண்டு, அவை நம்மை கிளர்ச்சியும் அச்சமும் கொள்ளச் செய்யும்போதே நாம் முன்னர் அறிந்தவையாகவும் இருக்கும். லண்டன் நான் நன்கறிந்த்தாகத் தோன்றியது. அதன் கல்வேய்ந்த இடுங்கிய தெருக்கள், நான்கடுக்கு மாளிகைகளின் சாம்பல்நிறச் சுவர்கள், கண்ணாடிச்சாளரங்களில் தெரிந்த வானொளி. புனைகதைகள் வழியாக பலநூறு முறை நான் உலவிய நகர். அங்கிருந்த ஒவ்வொன்றும் வரலாற்றின் ஆழம் கொண்டிருந்தன. புனைவிலக்கியத்தால் கனவூட்டப்பட்டிருந்தன.

லண்டனின் ஓசைகளை இப்போதும்கூட நினைவுறுகிறேன். பெரும்பாலான கட்டிடங்களின் வெளிப்பக்கம் மிகப்பழையது. சுண்ணக்கல்லாலோ மணல்கல்லாலோ ஆன சுவர்கள். அரிதாக ஆழ்சிவப்புச் செங்கற்கள். பல கட்டிடங்களில் செங்கற்களில் ஒரு சில உதிர்ந்துபோன இடைவெளிகள். கல்லால் ஆன அடித்தளங்களில் சிலசமயம் திறக்கும் சிறு சாளரங்கள். சில இடங்களில் சாலைப்பரப்புக்கு அடியிலேயே இறங்கிச்செல்லும் படிகள் சென்றடையும் அறைகளை காணமுடிந்தது. அவ்வப்போது பெய்து சுவடறியாமல் மறையும் மழை. இந்தியத்தோலுக்கு எப்போதும் இருக்கும் குளிர். பெரும்பாலானவர்கள் தோள்களைக் குறுக்கியபடி வேகமாக நடந்தனர். பெரும்பாலானவர்கள் குடை வைத்திருந்தார்கள். நீளமான மழைமேலாடைகள் மங்கலான மழையொளியில் நெளிந்தசைய அவர்கள் மிகப்பெரிய மீன்கள் போல எனக்குத் தோன்றினார்கள்.

டிக்கன்ஸ்
டிக்கன்ஸ்

ஐரோப்பா என்னும் ‘கருத்து’ என்னுள் குடியேறி நெடுங்காலமாகிறது. சொல்லப்போனால் இந்தியா என்னும் கருத்துடன் இணைந்தே அதுவும் வந்தது. இந்தியாவை ஐரோப்பாவின் கண்கள் வழியாகப் பார்ப்பதும், இந்தியாவையும் ஐரோப்பாவையும் எதிரெதிரென வைப்பதும் பின்னர் சிந்தனையில் அறிமுகமாயின.ஆனால் நானறிந்த ஐரோப்பா நான் சொற்கள் வழியாக உருவாக்கிக்கொண்ட உருவகம்தான். நேரடியாக அந்த மண்ணில் கால்வைக்கையில் அந்த பிம்பங்கள் உடைந்து சிதறியிருக்கவேண்டும். அதையே நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவை மேலும் மேலும் கூர்மையும் தெளிவுமே கொண்டன.

ஐரோப்பாவின் அத்தனை இடங்களிலும் நான் முன்னரே வாழ்ந்திருந்தேன். நாஸ்தர்தாம் பேராலயத்தில் நான் நாஸ்தர்தாமின் கூனனைச் சந்தித்து உடனுறைந்தது என் பதிமூன்றாவது வயதில். பாரீஸ் நகரின் மக்கள் கொந்தளிப்பு வழியாக அச்சமும் பதற்றமுமாக நான் அலைந்தது பதினைந்தாவது வயதில் டிக்கன்ஸின் இருநகரங்களின் கதையை வாசித்தபோது. லூவர் கலைக்காட்சியகமும், வத்திகான் மாளிகையும், கொலோன் பேராலயமும் நான் ஆழ்ந்து அறிந்தவையாக இருந்தன.

தாமஸ் மன்
தாமஸ் மன்

அப்போது ஒரு புனைகதை வழியாகவே நான் ஐரோப்பாவைப்பற்றிச் சொல்ல முடியும் என்று தோன்றியது. அத்துடன் நான் எழுதிக்கொண்டிருந்த வெண்முரசின் கனவுக்குள் வலுவாக ஊடுருவி அதை கலைத்தன ஐரோப்பா அளித்த உளச்சித்திரங்கள். மூர்க்கமாக அவற்றை அள்ளி ஒதுக்கி அப்பால் வைத்துவிட்டே என்னால் வெண்முரசில் இறங்க முடிந்தது.  இப்போது என் எண்ணங்களை தொகுத்துச் சொல்லிக்கொள்ளலாம் என தோன்றுகிறது. இப்போது இவ்வாறு தொகுக்காவிட்டால் இவை நினைவில் சிதறிப்போய்விடலாம்.

இவை வெளியே இருந்து வந்து நோக்கிச் செல்பவனின் பார்வைகள். அங்கே சென்று வாழ்பவர் அடையும் புரிதல்கள் வேறாக இருக்கலாம். ஆனால் அயலவன் அடையும் பலவற்றை அங்கிருப்போர் அடைவதில்லை. விலக்கமும் தெளிவை அளிக்கக்கூடும். மேலும் ஐரோப்பாவைப் புரிந்துகொள்வது நான் என்னைப்புரிந்துகொள்வதும்கூட

eu0

சென்ற 2000த்தில் மலையாள மனோரமா நாளிதழ் லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த ஒரு பட்டியலை அதன் இரண்டாயிரமாண்டு சிறப்பு மலரில் வெளியிட்டிருந்தது. அதை நான் மொழியாக்கம் செய்தேன். 2000 ஆண்டு உலகவரலாற்றின் முக்கியமான நிகழ்ச்சிகள் இரண்டாயிரத்தை அது பட்டியலிட்டிருந்தது. சீனாவில் ஒரு அரசவம்சம் முடிவுக்கு வருவது, தென்கிழக்காசியாவில் ஒரு பேரரசு அழிவது ஒரு நிகழ்வு. காண்டர்பரி ஆர்ச்பிஷப் பதவி ஏற்பது ஒரு நிகழ்வு. அந்த அசட்டுத்தனத்துக்கு எதிராக அப்போது ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.அப்போது வந்த ஒரு கேலிச்சித்திரம் கூட நினைவுள்ளது. உலகம் என்னும் தர்ப்பூசனியில் ஐரோப்பா என்னும் கீற்று தராசின் ஒரு தட்டில். மறுதட்டில் எஞ்சிய உலகு. ஐரோப்பாதான் கீழே இருக்கிறது
உண்மையிலேயே ஐரோப்பியர் பெரும்பாலானவர்கள் ஐரோப்பாவே உலகமென நம்புபவர்கள். சிந்தனையாளர்கள்கூட. உலகையே ஐரோப்பிய விழிகளால் கண்டு இறுதியாக மதிப்பிடவும் அவர்களுக்குத் தயக்கமில்லை. சென்ற ஐம்பதாண்டுக்கால கீழைநாட்டு ,ஆப்ரிக்க வரலாற்றெழுத்து என்பது ஐரோப்பா உருவாக்கிய வரலாற்றுக்கு எதிரான , அவர்களால் விடப்பட்டுவிட்ட வரலாற்றை எழுதும் முயற்சி என்பதைக் காணலாம். ஆனால் மறுபக்கம் உலகவரலாற்றை புறவயமாக எழுதும் முயற்சியே ஐரோப்பாவால் முன்னெடுக்கப்பட்டது என்பதும் உண்மை.

2016-06-18 21.17.15

ஐரோப்பா சென்ற இரண்டாயிரத்தைநூறாண்டுகளாக மானுட நாகரீகத்தின் மிக முக்கியமான ஊற்றுநிலமாக இருந்திருக்கிறது. உலகசிந்தனைகள், கலைகள் அனைத்தையும் முன்னெடுக்கும் முதன்மைவிசை அது. ஐரோப்பாவின் தாக்கம் இல்லாத பண்பாடு என இன்று உலகில் எதுவுமே இல்லை. அப்பண்பாடுகளின் மலர்ச்சிக்கும், பிறபண்பாடுகளுடனான உறவாடலுக்கும் ஐரோப்பிய ஊடாட்டம் களம் அமைத்துள்ளது. இன்றுநாம் காணும் உலகப்பண்பாடு என்பது ஐரோப்பியப் பண்பாட்டுக்கூறுகளால் முடைந்து ஒன்றிணைக்கப்பட்டதுதான். இன்றைய உலகின் நவீன ஜனநாயகவிழுமியங்கள், அரசியல்முறைமைகள் ஐரோப்பாவில் விளைந்தவை.

மறுபக்கம் சென்ற முந்நூறாண்டுகளில் ஐரோப்பாவின் காலனியாதிக்கம் உலகநாகரீகங்களைச் சூறையாடியிருக்கிறது. பெரும் பஞ்சங்களுக்குக் காரணமாகியிருக்கிறது. உலகப்போர்களினூடாக பேரழிவுகளை உருவாக்கியிருக்கிறது. ஐரோப்பாவில் உருவான நுகர்வுப் பண்பாடும், முதலீட்டியமும் உலகை அடக்கி ஆள்கின்றன. இன்றும் உலகின்மேல் ஐரோப்பாவின் மறைமுகப் பொருளியல் ஆதிக்கம் உள்ளது

ஐரோப்பாவை இவ்விரு முனைகளில் நின்றுதான் புரிந்துகொள்ளமுடியும். இரண்டும் இரண்டு உண்மைகள். ஒன்றை ஒன்று மறுப்பவை அல்ல, ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்பவை. வற்றாத பேராற்றல் ஒன்றின் ஊற்று அது என்றே நான் புரிந்துகொள்கிறேன். அது நித்ய சைதன்ய யதியின் கூற்று. ஆற்றல் ஒன்றே, வெளிப்பாட்டுமுறையே அழிவோ ஆக்கமோ ஆக அதை மாற்றுகிறது

k

மீண்டும் வருவேன் என அப்போதே தெரிந்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இப்போது 2018 ல் மீண்டும் ஐரோப்பா கிளம்பும்போது வாசித்து நிறுத்திவிட்டிருந்த ஒரு பெருநூலை விட்ட இடத்தில் இருந்து தொடங்குவதுபோலத்தான் தோன்றியது. 2015 நவம்பரில் இந்தோனேசியாவிற்குச் சென்று பரம்பனான் பேராலயத்தையும், போராப்புதூர் தூபியையும் பார்த்தேன். 2018 ஜூலையில் கம்போடியா சென்று ஆங்கோர்வாட் ஆலயத் தொகையைப் பார்த்தேன். வழக்கம்போல இந்திய விரிநிலத்தில் பயணம் செய்தேன். தொல்லுலகினூடாகச் சென்று கொண்டிருந்த என் உள்ளம் இன்னும் ஆழமாக ஐரோப்பாவை சென்று தொட்டு மீண்டுகொண்டிருந்தது.

2018 ஆகஸ்ட் 4 அன்று சென்னையிலிருந்து கிளம்பி ஃப்ராங்க்பர்ட் சென்றிறங்கினேன். விமானம் தரையிறங்குவதுவரை தூங்கிக்கொண்டிருந்தேன். தட் என அந்தப் பேருடல்பறவை நிலம்தொட்டபோது ‘புடன்ஃபுரூக்ஸில் இறங்கிவிட்டேன்’ என்று அரைத்துயிலில் எண்ணம் வந்தது. ‘புடன்புரூக்ஸிலிருந்து அடுத்து எங்கே செல்கிறோம்?” என்று நினைத்துக்கொண்டேன். அதன்பின்னர்தான் அது தாமஸ் மன்னின் நாவல் என நினைவுக்கு வந்தது. ஃப்ராங்க்பர்ட் என நினைவைத் திருத்திக்கொண்டேன். பெட்டிகளை எடுத்துக்கொண்டிருந்தபோது மீண்டும் அந்த ஊரின் பெயர் புடன்புரூக்ஸ் என்றே ஞாபகம் வந்தது. அதை தவிர்க்கமுயன்றபின் ஏன் தவிர்க்கவேண்டும், இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். எனக்கு ஜெர்மனி என்றால் தாமஸ் மன்தான்.

முந்தைய கட்டுரைமனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகேரளக் கருத்துரிமை -கடிதங்கள்