கம்போடியா: அங்கோர் தாம், பிற கோவில்கள்-சுபஸ்ரீ

Baphuon 1
Baphuon 1

 

 

கம்போடியா – ஒரு கடிதம், சுபஸ்ரீ

கம்போடியா- பாயோன் – சுபஸ்ரீ

 

 

அன்புநிறை ஜெ,

 

கம்போடிய பயணத்தின் மூன்றாவது பகுதி.
23/07/18 – இரண்டாவது நாளாக மீண்டும் அங்கோர் தாம்; முதல்நாள் பாயோன் மட்டுமே பார்க்க முடிந்தது. அது தவிர ஏனைய கோவில்கள் அன்றைய திட்டம்.

காற்றில் இருக்கும் மழையீரத்தில் நனைந்த காலை நேர நாளவன் மிக மெதுவாக வனங்களிடையே ஒளிந்து உடன் வந்து கொண்டிருக்க,  டுக்டுக் அங்கோர் தாம் நோக்கி சென்றது.  அவசரங்களின் அணிவகுப்பே வாழ்வு எனும் நிலைக்கு இன்னும் சியாம் ரீப் வரவில்லை, எதுவும் இங்கு விரைவதில்லை. ஒரு காலை விடிவதன் அமைதியைக் காண நொடிகளில்லாத வாழ்வுக்கு நடுவே இந்த கம்போடிய பயணம் கோடையின் குளிர்நிழல்.  பாதையோரங்களில் முழுதாக எழுந்திராது பரந்து நின்ற மூங்கில் புதர்களைப் பார்க்கும்போது, எங்கோ வரலாற்றுள் இன்றும் பொதிந்திருக்கும் சியாம் ரீப், விரைத்து நிற்கும் அன்றாட வாழ்வெனும் மூங்கில் தளரும் இரவின் மடி எனத்தோன்றியது.

Baphuon 2

அங்கோர் தாம் வாயிலில் அணி நிரக்கும் பாற்கடல் கடையும் சிற்பங்கள், தரையில் நீண்டு கிடக்கும் கல் ஆரமென காலை வெயிலில் கருமை மின்னியது. அமுதம் தேடும் முயற்சியில் அழிவின் வடுக்களை சுமந்த அமரர் முகங்கள். சிதறிப் பரந்து கிடந்த சிலைகளை எடுத்து மீட்டமைத்திருப்பதால் கருத்த உடலும் மிக வெண்மையாக பொருந்தாத் தலை கொண்ட சிற்பங்கள் இருக்கின்றன. ஒருவர் தலையைப் பிறிதொருவர் அணிந்து கொண்ட திகைப்பு விழிகளில் தெரிகிறது.

வனத்துள் வகிடு கிழித்து செல்லும் மையச் சாலை, அங்கோர் தாமின் நடுவில் எரிமலையின் எஞ்சி உருகிய கரும்பாறை மலை எனத் தோற்றமளிக்கும் பாயோனைக் கடந்து மற்றொரு பேரலாயமான பாபுவன் (Baphuon) வரை சென்றது.

Baphuon 5
Baphuon 5

பாபுவன்  

 
பாபுவன் இரண்டாம் உதயாதித்தவர்மனின் அரச ஆலயம். சிவனுக்கு கட்டப்பட்டது. பின் வந்த நூற்றாண்டுகளில் பௌத்த ஆலயமாகி சயனிக்கும் புத்த பிரானும் அங்கே குடிகொண்டிருக்கிறார்.  மலையைப் பெயர்த்தெடுத்து மானுடன் உருவாக்கிய நிகர்மலை. பெரும்பரப்பில் மண்நிரப்பி மேலே கற்களை அடுக்கிக் கட்டப்பட்டிருக்கிறது. மண்ணின் தன்மையாலும் பெருங்கற்களின் எடையாலும் பலமுறை மீண்டும் மீண்டும் சேதமடைந்து எடுத்துக் கட்டப்பட்டிருக்கிறது. 1960களில் தடைப்பட்ட சீரமைப்புப்  பணி, 1995-ல் மீண்டும் தொடங்கப்பட்டு 2011ல் முடிவடைந்திருக்கிறது. தொல்லியல் துறையினர் அடர் கானகத்திடையே கற்குவியலாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட சிதறிய கற்களாக இக்கோவிலைக் கண்டடைந்திருக்கிறார்கள். உலகின் மாபெரும் முப்பரிமாண புதிராக, முன்னூறுக்கும் மேற்பட்ட நபர்களின் கூட்டு முயற்சியில் பதினாறு ஆண்டுகால உழைப்பில் எழுந்து நிற்கிறது பாபுவன்.

Baphuon Buddha face

அவலோகிதேஸ்வர முகக்கோபுரம் கொண்ட நுழைவுவாயில்.  மரங்களிடையே நடந்து சில மரப்படிகள் மேலேற, வரிசையாக நடப்பட்ட தூண்களின் மீது நீண்டு செல்லும் நுழைவுப் பாதை. காற்றில் சருகுகள் பறந்து கலைகின்றன. நில்லாது வளரும் காலப் பெருவனத்தின் உதிர்ந்து போன நிமிடங்கள். தூண்களால் தாங்கப்பட்ட மையப்பாதை, இருபுறமும் நீர் நிறைந்த கடந்தகாலத்தை மனதுள் விரித்துவிட நுழைவில் இருக்கும் கோபுரத்தை தலைகீழ் நீர்பிம்பங்களாக அகக்கண் விரித்துக் கொண்டது. முதல்வாயிலுள் நுழைந்ததும் உள்ள சாலை கோபுரங்கள் கூண்டு வண்டியின் வடிவில், சிதம்பரம் போன்ற கோபுரங்களை நினைவுபடுத்துகிறது.

Baphuon8

நடுவே நாற்புற பட்டை வடிவான கூம்பென எழுந்து நிற்கிறது 82 அடி உயரமான பாபுவன். இது மூன்றக்குகள் கொண்ட பிரமிடு வடிவம். நான்கு புறமும் உச்சியை நோக்கி மேலேறும் செங்குத்தான படிகள். அதன் ஒவ்வொரு அடுக்கிலும் நுழைவுவாயிலென உயர்ந்து நிற்கும் உச்சிக்கமலம் சூடிய கோபுரம். சுற்றிவர தூண்கள் துணைநிற்கும் திருமுற்றம். உள்ளே சமதளத்தில் நுழைந்ததும் இரு நிரைகளாய் காலத்தின் கருமை பூசி ஆங்காங்கே வெளிரித் தெரியும் தூண்கள் வழியாக சுற்றி வரும் பாதை. கிழக்கு நோக்கும் உயர்ந்த முகப்பில் இரண்டாம் அடுக்கின் சாளரங்கள் அதன் அகன்ற விழிகளால் நம்மை நோக்குகின்றன.

முதல் தளத்தில் இருபுறத்திலும் முகமண்டபங்கள் இருந்ததன் தடம், வேலைப்பாடமைந்த மேடைகளாய் எஞ்சி நிற்கின்றன. ஏகாந்தம் மட்டுமே தரும் விடுதலையோடு அப்சரஸ் தூண்களில் மேற்கூரையின்றி நிற்கிறாள். அவளது கை ஏந்திய மலர்கள் வாடுவதில்லை. சுற்றுப் பிரகாரத்திற்கும் கோவிலுக்கும் இடையேயான சமதளத்தில் வெட்டுண்ட தென்னை மரத்தின் அடிமரப்பாகம் போல நூற்றுக்கணக்கான கற்கள் வரிசையாக நிற்கின்றன.

Baphuon 7

கெமெர் ஆலயங்களில், மேரு ஆலயம் (அல்லது மலை ஆலயம்) மற்றும் பரந்த ஆலயம் என இருவகையான ஆலயங்களில் இது முதல் வகைமையைச் சேர்ந்தது. சட்டம் சட்டமாக பல சதுரங்களை ஒன்றன் மேல் ஒன்றென அடுக்கியது போன்ற தோற்றம். அதோடு இழைந்த செங்குத்தான படிகள். பழைய படிகள் தொற்றி ஏறும் வண்ணம் செங்குத்தானவை. இப்போது ஏறுவதற்கு இரும்புக் கம்பிகளால் தாங்கப்படும் மரப்படிகள் போடப்பட்டிருக்கின்றன. கருமையான மணற்பாறை சுவர்களில் பசுமை தளிர்விட்டு பல இடங்களில் செடிகள் முளைத்திருக்கின்றன. வலிமை என்பது உயிர் விசையே என அறிந்திருக்கக்கூடும் பாறையில் வேர் செலுத்தி  காற்றில் அசையும் அத்தளிர்கள் .

 

Baphuon 6

இரண்டாம் அடுக்கில் சுற்றி வரும் பாதையில் வெளிப்புறத்துக்குத் திறந்திருக்கும் சதுரவடிவிலான சாளரங்கள், சுற்றிலும் சின்னஞ்சிறு செதுக்கு வேலைகள் நிறைந்தவை. இந்தக் கோவிலின் சிற்பங்களும் ஒன்றன் மீது ஒன்றென அடுக்கப்பட்ட செவ்வகக் கற்களில் வடிக்கப்பட்டவையே. எனவே நிற்கும் அப்சரசின் இடைவரை ஒரு கல்லும், கழுத்து வரை ஒரு கல்லும், தலை வேறொரு கல்லுமாக இருக்கிறது. சுற்றி வரும் நீளரங்குகள் சில இடங்களில் கூரையை இழந்து அரைத்தூண்களாக. வேலைப்பாடுகளற்ற செவ்வகத் தூண்கள் என எஞ்சி நிற்பவை. கூரை இருக்குமிடங்களில் வளைந்து மேலேறும் தூண்கள் சந்திக்கும் முகடுகளின் கீழ் செல்லும் போது குடைந்தெடுத்த குகைவழி செல்லும் உணர்வேற்படுகிறது. ஒன்றுள் ஒன்றென அடுக்கப்பட்ட வாயில்களின் நிலைகள், வரைபடத்தின் சட்டமென உருமாறி உள்ளே தெரியும் பாதையை சித்திரமாக்குகின்றன. பக்கவாட்டில் திறந்த சாளரங்கள் வழியே சூழ்ந்திருக்கும் கானகம் உற்று நோக்குகிறது ;சிள்ளென்ற மொழியில் இடையறாது பேசுகிறது.

Baphuon 3

நான்கு திசைகளிலும் சுற்றுப் பிரகாரத்தின் மத்தியில் சிற்பங்களை அணியென உடுத்திய கமலமுடி கோபுரத்தோடு கூடிய நுழைவு வாயில்கள். அதன் வழியே மேலேறுகிறது செங்குத்தான மிக உயரமான படிகள். படிகளை ஒட்டிய பெருஞ்சுவர்களில் எளிதில் கவனமின்றித் தவறவிட்டுவிடக்கூடிய சில சிறிய போர்க்காட்சிகள், கணையாழியை சீதையிடம் காட்டும் அனுமன், மாரீசனைக் கொல்லும் ராமன், இரு காட்டுப் பன்றிகள் பொருதும் காட்சி, பாசுபதம் தேடிச் சென்ற அர்ஜுனனுக்கும் சிவனுக்கும் பன்றி வேட்டையின் பொருட்டான போர் என்று பல புராண சித்திரங்கள் சிறு சிறு செதுக்குகளாக இருக்கின்றன.

Elephant Terrace
Elephant Terrace

மூன்றாம் அடுக்கு மேலேறியதும் கூரைகளை இழந்த சுற்றுப்பாதைகள், நடுவே இருக்கும் தாழ்வான மையப்பகுதியை வலம் வருகிறது. அந்த இடம் கோவில் தெப்பத்தை சுற்றிவரும் மண்டபம்போலிருக்கிறது. கடுந்தரையில் சிறுதளிரை வேர்பிடித்து எழ வைக்கும் கதிரவன், நின்றிருக்கும் இருபுறத்து தூண்களையும் சரித்து நிழற்தூண்களென ஆக்குகிறான். நிழலில் உருவாகி நாளெலாம் நகரும் நிகர் கோபுரங்கள் உச்சி வெயிலில் குறுகி ஒடுங்குகின்றன .

Kanaiyaazhi
Kanaiyaazhi

மேல்தளத்தின் நான்கு திசைகளிலும் பிரகாரத்தின் மையத்தில் சிறு கோபுரங்களுடன் வாயில்கள் இருந்திருக்கின்றன. ஹொய்சாலக் கோவில்களில் காணப்படுவது போல வரிவரியாக அடுக்கப்பட்ட சிலம்பெனத் தெரியும் தூண்கள். மேலே செறிவான செதுக்குகள். ஐராவதத்தில் அமர்ந்த இந்திரன் இங்கு மிக அதிகம் காணப்படும் சிற்பம். செவ்வகத் தூண்களின் அடிப்பகுதியிலும் மேற்புறத்திலும் நுண் செதுக்குகள்.  சற்றே அகலமான மேடையிலிருந்து நான்கு படிகள் இறங்கி குளம் போலத் தாழ்வாகப் பரந்து கிடக்கும் மையப் பகுதியின் நடுவில் மற்றொரு நாற்கோன பீடம் எழுகிறது. மேலே வீற்றிருக்கிறது திசைகளுக்கு வாசல் அமைத்து விண்ணோக்கி திறந்த திரு ஒழிந்த கருவறை. சுழன்று வரும் காற்று வெறுமை கருக்கொண்ட கருவறையில்  கோவில் கொள்கிறது. சூழ்ந்திருக்கும் வெளியும் கீழிருந்து நோக்க திருவென உள்ளே உள்ளே நிற்கிறது.   இன்மையிலிருந்து கிளைத்தெழும்  பல நூறு தெய்வங்கள்.

Leper King Terrace Wall 1
Leper King Terrace Wall 1

மறுபுறம் கீழிறங்கி சுற்றி வரும் போது ஆலயத்தின் பின்புறம் வடிவமிழந்து கற்களால் அடுக்கியெழுப்பப்பட்ட கோட்டை மதிற்சுவர் எனத் தெரிகிறது. ஓரிடம் உள்ளிருந்து வெளித்தள்ளியது போல் புடைத்து வளைந்து நிற்கிறது. சரிந்து விழுந்து சீரமைக்கப்பட்ட பகுதி அது. தகவற்பலகையை வாசித்த பின்னரே மீண்டும் அப்பகுதியை உற்றுநோக்க சயனித்த புத்தபெருமானின் முகம் தெரிகிறது. புடைத்தெழுந்த பகுதி புத்தரின் முகம்.

பாபுவனைச் சுற்றி வரும் பச்சை படர்ந்த கற்பாதை வழியாக நடந்து இடதுபுறம் சற்றே தொலைவிலிருந்து, பத்து படிகள் ஏறும் உயரமான மையப்பாதையைக் காணும் போது யாராலோ சுமந்து செல்லபடும் நீளமான ஏணி போல, அல்லது பாபுவன் எனும் தேரைக் கட்டியிழுக்கும் வடம் போலக் காட்சியளிக்கிறது தூண்களின் வரிசை. அங்கிருந்து இடதுபுறமாக வெளியேறி காடு வழி புகும் பாதை அரச வளாகமாக இருந்த பகுதியை சென்றடைகிறது. மதிற்சுவரால் சூழப்பட்ட இப்பகுதிக்குள் இருந்த மரக்கட்டங்களை காலமும் மிச்சமிருந்ததை வனமும் உண்டுவிட்டது.

 

Leper King Terrace Wall 4
Leper King Terrace Wall 4

பிம்மேனகாஸ் 

கற்சிதைவுகளுக்குள் நெளிந்து புகுந்து கொண்ட அரவொன்றைக் கண்டபடி ‘பிம்மேனகாஸ்’ (Phimeanakas) சென்றடைந்தோம்.

ராஜேந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்டது. பிறகு இரண்டாம் சூர்யவர்மனால் மீண்டும் புனரமைக்கப்பட்டிருக்கிறது.பத்தாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட இது அன்றைய அரசக் கோவிலாக இருந்திருக்கிறது. பதின்மூன்றாம் நூற்றாட்டின் ஜோ டாக்வன்(Zhou Dahuan) என்ற சீன யாத்ரீகரின் குறிப்புகளில் – மன்னன் இவ்வாலயத்தில் ஒவ்வொரு மாலையும் பெண்ணுருக்கொண்ட ஒரு நாகத்துடன் கூடியிருந்து அரசுக்கு அழியா வளத்தை வரமாகப் பெற்றான் என்ற சுவாரசியமான குறிப்பு இருக்கிறது. அப்போது இக்குறிப்பை வாசிக்கததால் இது குறித்து சற்று முன்னர் கண்ட நாகத்திடம் கேட்டறிய முடியவில்லை.

Phimeanakas 1
Phimeanakas 1

அதிகம் ஆளரவமில்லாத அக்கோவிலை சூழ்ந்திருக்கும் மரங்கள் அக்கோவிலின் தனிமையை நிழலால் காக்கின்றன. இப்போது அதில் மேலேற அனுமதியில்லை. பிம்மேனகாஸ் சிறியளவிலான பாபுவன் போல இருக்கிறது. மூன்றடுக்கு பிரமிடு, நாற்திசையிலும் படிகள். மூன்றாம் அடுக்கின் சாளரங்கள், வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றென பட்டை பட்டையாக அடுக்கப்பட்டது போன்ற கட்டுமானம். பாபுவன் கோவிலுக்கு வடக்கே அரச வளாகமாக இருந்த அரணுக்குள் அமைந்திருக்கிறது இந்த பிம்மேனகாஸ்(விம்மேனகாஸ் என்றும் சொல்கிறார்கள்)

Prea Rup
Prea Rup

யானைகள் உப்பரிகை

இக்கோவிலிலிருந்து வெளிவந்து இடப்புறம் வடக்கில் யானைகளின் மேற்தளம் என்றழைக்கப்படும் மிகப்பெரிய மேடை போன்ற அமைப்பு இருக்கிறது. ஏழாம் ஜெயவர்மனால் பன்னிரண்டாம் நூற்றாணடின் இறுதியில் கட்டப்பட்டிருக்கிறது. முன்னால் முகம் நீட்டிக் கொண்டிருக்கும் மேடையில், பல இடங்களில் யானைகள் துதி நிலம் தொட அணிவகுக்கின்றன. துதிக்கரமும் பல கற்களால் அடுக்கப்பட்டிருக்கிறது, எனில் யானையின் உடற்பரப்பு மிக நெருக்கமான கோடுகளால் ஆன தோற்பரப்பு போல கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. இயந்திரங்களில் மட்டுமே சாத்தியமென நினைக்கக்கூடிய சீரிய இடைவெளியும், கூர்மையும் கொண்ட கோடுகள்.

Prea Rup2
Prea Rup2

இம்மேடையின் மதிலெங்கும் அடுக்கப்பட்ட கற்களில் உருவெளிக் கோடுகளெனப் புடைப்பு சித்திரங்களாக இதன் பெயர்க்காரணமான யானைகள் அணிவகுக்கின்றன. இதன் எதிரே பெரிய திறந்தவெளியாக இருக்க அதன் மறு கரையென ஒரே சீராக மரங்களூடே சிறு ஆலயங்கள் நிற்கின்றன. இம்மேடையிலிருந்யு அரசன் அப்பெருவெளியில் நடைபெற்ற அணி ஊர்வலங்களையும், திருவிழாக்களையும் கண்டதாக சீன யாத்ரீகரின் நூற் குறிப்பிருக்கிறது.

Prea Rup3

தொழுநோய் மன்னன் உப்பரிகை 

ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்ட சிற்ப மேடை இப்பெயர் பெற்றது வருத்தம்தான். இதன் மேலே இந்தப் பெயரை வழங்கிய ஒரு சிலை – யமனுடைய சிற்பம் என்றும் தொழுநோய் கண்ட மன்னனின் சிற்பம் என்றும் இரண்டு விதமாக அறியப்படும் சிலை இருந்திருக்கிறது. இது அரச குடியின் இறுதிச் சடங்குகளுக்கான இடமாக இருந்திருக்கலாம் என அறியப்படுகிறது. இது பாதாளத்திலிருந்து உயிர் கொண்டெழுந்து  நிற்கும் ஏழுலகங்களின் அடுக்கு. பல மடிப்புகளாக மடிந்து செல்லும் இதன் கீழ்ப்புறத்தில் ஒவ்வொரு முனையிலும் பல தலை நாகங்கள் உடலைப் புவியடியில் மறைத்து, படம் மட்டும் தூக்கி சீறி எழ, நூற்றுக்கணக்கான உருவங்கள் இடைவெளியின்றி செதுக்கப்பட்ட இருபத்தைந்து மீட்டர் நீள சிற்ப மதில். கீழ் அடுக்கில்  நாகங்களும், கடற் கன்னிகளும், முதலை முதலான நீர்வாழ் உயிரிகள் மற்றும் ஊர்வனவும், அடுத்த வரிசையில் வெறித்த விழியுடன் அரக்கர்களும், மேலே கருடனும் ஏனைய தேவதைகளும், இன்னும் உச்சியில் அப்சரஸ்களும், கின்னரர்களும், என திகைக்க வைக்கும் சிலைகளின்திரள்.

Ta Phrom 3

தா ப்ரோம்

 
அடுத்ததாக மதிய உணவுக்குப் பிறகு சென்றது ஏழாம் ஜெயவர்மன் (1125 – 1215) காலத்தில் கட்டப்பட்ட ‘ராஜவிஹாரம்’ என்று பெயர்கொண்ட தா ஃப்ரோம் ஆலயம். இங்கிருந்து சிறிது தொலைவில் இருக்கும் ப்ரே கான் ஆலயம் ஏழாம் ஜெயவர்மனின் தந்தைக்காகவும் இது அவரது தாய்க்காகவும் கட்டப்பட்டதென சில குறிப்புகள் இருக்கின்றன. இது கட்டப்பட்ட காலத்தில் ஒரு கோவிலோடு கூடிய மடாலயமாகவும் சமயக் கல்வி நிலையமாகவும் இருந்திருக்கிறது. இதன் முதன்மை தெய்வமாகிய ப்ரக்ஞானபரமிதாவின் (ஞானத்தின் தேவி) பிரதிஷ்டை அரசனின் தாயை உருவகப்படுத்தி செய்ததாக சொல்லப்படுகிறது.
இங்கு கிடைத்த கல்வெட்டு ஆதாரங்களின் படி பன்னிராடயிம் பேருக்கு மேல் இவ்வளாகத்துள் வாழ்ந்ததாகவும் சுற்றுப்புற கிராமங்களின் வாழ்வதாரமாகவும் பண்பாட்டு மையமாகவும் இக்கோவில் இருந்திருக்கிறது. பதினைந்தாம் நூற்றாண்டின் ஸ்ரீந்திரவர்மன் வரை இக்கோவில் விரிவாக்கம் நடைபெற்றிருக்கிறது.

Ta Phrom 4

பதினைந்தாம் நூற்றாண்டில் க்மெர் அரசகுல வீழ்ச்சிக்குப் பிறகு வந்த நூற்றாண்டுகள் தா ப்ரோம் முற்றிலும் மனிதனால் கைவிடப்பட்டு வனங்களால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கோபுரத்தின் மீதும் வளைந்து சுருட்டிக் கவ்வும் மலைநாகமென வேர்கள்.
இலவம் மற்றும் அத்தி வகையைச் சேர்ந்த மரங்கள் நிறைந்த காடு. கல்லில் உறைந்திருக்கும் மாபெரும் கனவுகளை உறிஞ்சியதாலோ என்னவோ அனைத்து மரங்களும் பேருருக் கொண்டிருந்தன.  பெருமரங்கள் வளர்ந்து கோவிலை இறுகக் கவ்வியிருக்கும் அழகு அதிகம் கலையாது இதை சீரமைத்திருக்கிறார்கள். இவ்வாலய சீரமைப்புப்பணி இந்தியத் தொல்லியல் துறையின் உதவியோடு நடைபெற்றிருக்கிறது.

Ta Phrom Tree 1

இன்னும் சிலகாலம் கண்டடையப் படாதிருந்தால் இப்பெரு விருட்சங்கள் தனது வேர்களெனும் உகிர்களால் கவ்வி இக்கலைப் படைப்புகளோடு விண்ணோக்கி ஏகியிருக்கக் கூடும் என்று தோன்றியது. இத்தகைய மாபெரும் கலைப் படைப்புகள் எதற்காக யாரை நோக்கி எழுப்பப்படுகின்றன! காலத்தோடு இடையறாது கலைஞன் எதற்காகப் போரிடுகிறான்? தான் வாழும் காலத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்படினும், கைவிடப்படினும் எதற்காக இம்மரங்களைப் போலப் பறந்தெழ முயற்சிக்கிறான்!!

கணம்தோறும் சொட்டிக் கொண்டிருக்கும் காலத்தின் ஸ்தூல வடிவைக் காண்பது போலிருந்தது இன்றைய தா ஃப்ரோம் ஆலய வளாகம். ஒரு குருவியின் பிழையில் கிளைத்தெழுந்த ஆக்கிரமிப்பு என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டீர்கள். ஆலயத்தைச் சுற்றி நடந்தபோது, குருவிக் குலமே செய்த சதியென்று பட்டது. அல்லது அவ்வனத்தின் கைவிடப்பட்ட தேவதைகளின் வஞ்சம் எனத் தோன்றியது , ஒவ்வொரு மரமும் அக்கோவில்களின் மீது படர்ந்தொழுகியிருக்கும் விதம், என்ன ஒரு விசைகொண்ட பிடி!! தன்னுடையதாயிருந்து இழந்து போனதை மீட்டுக் கொள்வதற்கான ஒரு விசை. வானிலிருந்து உருகிச் சொட்டிய உயிர்த்துளிகள் போல அக்கோபுரங்கள் மேல் நின்ற மரங்களை, ஒவ்வொருவரும், படர்ந்து கவ்வும் நாகம் போல, சுருட்டி விழுங்கும் யானை போல என அக்காட்சியை சொல்லுக்குள் கவ்வ முயற்சித்துக் கொண்டிருந்தோம்.

Ta Phrom Tree 2
இன்று தா ஃப்ரோமில் மரஉகிர் பற்றிய கோபுரத்து மறு வாயிலை சிலந்திவலை பற்றியிருந்தது, அது இன்னொரு முயற்சி!! நாம் இரும்புச் சட்டங்கள் கொடுத்து தூக்கி நிறுத்துகிறோம். மனித யத்தனங்களை விழுங்க காலமும் ஞாலமும் காத்துக் கொண்டிருக்கின்றன.

சுண்ட வரும் சிறுவிரல் முன் நின்று எதிர்நோக்கும் ஒற்றை எறும்பென மானுடம் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறது. எங்கிருந்தோ பெருமலைகளை உடைத்து நதியிலும் மண்ணிலும் புரட்டி இப்பெருவடிவு சமைக்கிறது. கைவிடப்பட்டவற்றை காலம் பசுந்தழைக்குள் புதைத்து வைக்கிறது, மானுடம் மீண்டும் கண்டெடுக்கிறது. இதுவும் மனிதனும் இயற்கையும் இருபுறம் கடைந்திழுக்கும் பாற்கடல்தானோ, காலம் உமிழ்ந்த ஆலகாலம். நாம் இரண்டு நாட்களாகக் கண்டு வரும் இப்பெரும்பரப்பு மானுடத்தின் விழைவையும், கனவையும், அதன் உச்ச சாத்தியங்களும் மண்மூடக் கூடிய அபத்தத்தையும் ஒருங்கே முன்வைக்கிறது. மானுடம் மட்டுமல்ல, மண்ணின் பெரு விசையை மீறி எழுந்து நிற்கும் சிறு புல்லிலிருந்து விண்தொட நேரெழும் பெருவிருட்சம் வரை விழைவின் துளிகள்தானே.

 

Leper King Terrace Wall 5
ப்ரே ரூப்

க்மெர் மன்னன் ராஜேந்திரவர்மனால் 953-961 களில் கட்டப்பட்ட ‘கோவில் மலை’ வகைமையைச் சேர்ந்தது ப்ரே ரூப். இதுவும் அரச குலத்தின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற இடம் என்று கருதப்படுகிறது.

ஓங்கி நிற்கும் மேடையின் மீது நான்கு முனைகளில் துணை கோபுரங்களும் மத்தியில் சற்றே உயரமான மேடையில் மைய கோபுரமுமாக நிற்கிறது ப்ரே ரூப். மாலை ஒளியில் இக்கோவிலைப் பார்ப்பதற்காக கதிர் மேல்வானிலிருந்து இறங்கும் வேளையில் சென்றிருந்தோம். அதுவரை பார்த்திருந்த கோவில்களில் இருந்து இது வேறுபட்டிருந்தது. சிறு செங்கற்கள் மற்றும் மணற்பாறையால் ஆன கட்டுமானம். எப்போதோ இருந்து சுண்ணப் பூச்சு சிறு திட்டுகளாக மங்கிய செந்நிற வண்ணங்களாக எஞ்சியிருந்தன. மாலைச் செவ்வொளியில் கோவில் மேலும் அரக்கேறுகிறது.
Pasupatham
பசுங்காடுக்கு நடுவே ஒரு சதுரவடிவ அரணுக்கு உள்ளே நிற்கிறது ப்ரே ரூப். இருபுறமும் நதிக்கரை போல நிற்கும் மேடைகளுக்கு நடுவில் உயர்ந்தோங்கும் படிகளின் மேலே இருபுறமும் அமர்ந்த நிலையில் சிம்மங்கள் காவலிருக்கின்றன. நான்முனை துணைக் கருவறைகளும் சிலபடிகள் மேலேறியிருக்க இருபுறம் சிம்மங்களால் காக்கப்பட்டு நிற்கின்றன. மைய விமானத்தின் முன் நந்தி அமர்ந்த இடம் வெறும் பீடமாக எஞ்சியிருக்கிறது. விடையேறிய பரமனும் எங்கோ சென்றுவிட உருவிலி அமர்ந்த கருவறை.

comp
அனுதினம் மறையும் கதிரை அவ்விடத்தில் காண்பதற்கென பெருந்திரள் கூடியிருந்தது. உலகத்தின் பல கோடிகளில் இருந்து வந்தவர்கள் அந்த க்மெர் ஆலயத்தின் செவ்வொளி கூடும் எழில் தருணத்தைப் பார்க்கக் காத்திருக்க, மூடுதிரைக்குப் பின் சூரியன் பாராமுகமாயிருந்தான். மதியம் பெய்த சிறுமழை ஆங்காங்கே வானத்தைத் தரை இறக்கியிருந்தது. தெளிவான நீரில் சிதிலமாகவும், காற்று வருடிய சிற்றலையில் அழகான கோவிலின் சாத்தியமாகவும் மாயம் நிகழ்த்திக் கொண்டிருந்தது பிம்பங்கள் தேங்கிய நீர் சதுரங்கள். அந்திம வெளி என்பதாலோ அந்தி ஒளியினாலோ மனதுள்ளும் வார்த்தைகளில்லாத மௌனம் கவிந்திருந்தது.வேறெங்கோ உயரத்திலிருந்து அங்கு கூடியிருப்பவர் அனைவரையும் ஒரு பறவைப் பார்வை பார்க்க முடிவதாய் ஒரு உணர்வு.

com

அங்கிருந்து மண்மறைந்த அனைவரும் விண்ணேயிருப்பார்கள் என்ற நம்பிக்கையை அங்கு மண் மறைந்து விண்ணெழும் கதிரோன் தினமும் சொல்வதாகப் பட்டது. மாலை வானம் பெரியதொரு முகில் திரையென விரிந்திருந்தது. முட்களில்லாத கடிகாரம் ஒன்றைப் பார்ப்பது போல வானம் பொழுது சாய்வதை காட்டாது ஒளி அவிந்து கொண்டிருந்தது. காத்திருப்பதில் இயற்கையோடு போட்டியே இருக்க முடியாது, இருள் கூர் கொள்ளும் முன் படியிறங்கத் தொடங்கினோம்.

 

மிக்க அன்புடன்,

சுபா

முந்தைய கட்டுரைசாகித்ய அகாடமி நாவல்கள்
அடுத்த கட்டுரைநடையின் எளிமை