அசோகமித்திரனின் சில படைப்புகளை மீள் வாசிப்பு செய்தும், தவறவிட்ட பல நாவல்களைப் புதிதாக வாசித்தும் அவரது எழுத்துலகை அணுகிக் கொண்டிருக்கிறேன். அவ்வகையில் சமீபத்தில் வாசித்த இரண்டு நாவல்கள் ஏற்படுத்திய அலைகளைக் கீழே தொகுத்திருக்கிறேன். நீங்கள் அசோகமித்திரன் குறித்து எழுதிய பல கட்டுரைகளையும் வாசித்தும் இருக்கிறேன். அதன் தாக்கம் இருக்கலாம், இது விமர்சனமாகவோ நூலாய்வாகவோ தெரியவில்லை. இது என்னில் அவர் எழுத்து ஏற்படுத்தும் அலைகளின் பிரதிபலிப்பு முயற்சியே, அல்லது இவ்விதமாக நான் இந்த எழுத்தைப் புரிந்து கொள்கிறேன் எனத் தொகுத்துக் கொள்கிறேன்.
கரைந்த நிழல்கள், மானசரோவர் இரண்டு நாவல்களுமே திரைத் துறையைக் களமாகக் கொண்டவை.
எனில் அது மட்டுமே இதன் பொதுமைத் தன்மை. அந்தக் களத்தில் இரு வேறு வகையான உறவுத் தளங்களை அசோகமித்திரன் வரைந்தெடுக்கிறார்.
கரைந்த நிழல்கள்
அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் வாசித்துச் செல்லும் போது உருவாகி வரும் உளச்சித்திரம் இது. பயணத்தில் எதிர்திக்கிலிருந்து அணுகி மறையும் காட்சிகள் போல இக்கதையில் நிகழும் சம்பவங்கள் கண்முன் உயிர்த்து, நிகழ்ந்து, கடந்து செல்கின்றன. முன் பின் காரணிகளின்றி துண்டுக்காட்சிகள் போலத் தோன்றி மறைகின்றன, எனில் வெவ்வேறு கதை மாந்தர்களின் வழி கதை தொடர்கிறது. ஒரு நெடும் பயணத்தின் போது சில நிமிடத்துளிகளில் ஓடி மறையும் காட்சிகளே அகவயமாய் பயணம் எனும் ஒட்டுமொத்த நினைவுகளாய் நம் மனதில் பதிகின்றன. அதுபோன்ற அனுபவம் இது. முற்றுப்புள்ளியிலல்ல, தொக்கி நிற்கும் வார்த்தைகளிலேயே மொழி பயணிக்கிறது.
திருவிழாக்களுக்கு முன்னர் மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றியுள்ள ஆடி வீதிகளை, பிரகாரங்களை நிறைக்கும் பெரும் கோலங்களைப் பல பெண்கள் கூட்டாக வரைவார்கள். நூற்றுக்கணக்கான ஊடுவரிசைப் புள்ளிகளை மிக நேர்த்தியாகப் பல திசைகளிலிருந்து பல கைகள் சுழித்தும் வளைத்தும் அணுகிப் பெருந்தேரோ கொடிப் பந்தல்களோ ஊஞ்சலோ நம் கண்முன் எழும். அதுபோல திரைத்துறையெனும் பல கரங்கள் சேர்ந்தெழுதும் சித்திரத்தின் உயிர்விசையே கதையின் சரடு. பலர் தனித்தனியே இயங்கினாலும் ஒன்றென விரியும் கோலத்தை சிறு விரல்களின் இயக்கங்களைக் காட்டுவதன் வழியே இவரால் உணர்த்திவிட முடிகிறது.
ஒளியின் மீது பயணிக்கும் திரைத்துறை நிழல்களால் ஆனது. நிழல்கள் கரைவது முழு இருளிலும், ஒளி வெள்ளத்திலும். அவ்விருளையும் ஒளியையும் அங்குமிங்குமாகக் காட்டுகிறார்.
ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் கதையொன்றின் நடுப்பக்கம் போல, அன்றாடத்தின் அவசரகதியில் புரொடக்ஷன் மேனேஜர் நடராஜனின் பார்வையில் கதை தொடங்குகிறது. கதை அங்கு தொடங்கவில்லை, ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் நாம் அங்கு கதவைத் திறந்து நுழைகிறோம்.
டைரக்டர் ஜகந்நாத் ராவ், இதர ஓட்டுநர்கள், நடன இயக்குநர், துணை நடனப் பெண்கள் என விரைந்து திரையில் தேர்ந்த ஓவியனின் கையசைவுகளில் உருவாகும் கோட்டுருவங்களென சித்திரம் உருவாகிறது.
அச்சில் வேகமாக சுழலும் இப்புவி தனது ஓட்டத்தை ஒருக்கால் நிறுத்தினால் கண்ணுக்குப் புலனாகாத எத்தனையோ விசைகளால் புவிசார் அனைத்தும் திக்கெங்கும் சிதறிப் போக நேரிடலாம். அதுபோல பலருக்கும் வீடாக இருக்கும் ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், ஒரு திரைப்படம் இறுதிக் கட்டத்தில் நின்று போய் வீழத் தொடங்க, அது சார்ந்த பல்வேறு நிலையிலுள்ள பல கலைஞர்கள் திசைக்கொருவராக சுழற்றி எறியப்படுகிறார்கள்.
கதையின் தொடக்கத்தில் புரொடஷன் மேனேஜர் நடராஜன் அலையின் மீதிருந்து கதை முடிவில் ஆழத்தில் எங்கோ தொலைந்து போகிறான். சம்பத் கதையின் முதற்பகுதியில் சாதாரணமாக வருகிறான். வெளியிலிருந்து இந்த பளபளப்பான இந்திரபுரியைக் கனவுகாணும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தனது உறவினர்களை படப்பிடிப்பு காண அழைத்து வருகிறான். இன்று வெற்றிப் படங்களில் ஏறி நின்று வாழ்வை சுவைத்துக் கொண்டிருக்கிறான். புகழின், அதிகாரத்தின் உயரத்தில் நின்று நடிகையை வீடு புகுந்து மிரட்டக்கூடிய தயாரிப்பாளர் ரெட்டியார் அதே நடிகையின் ஒத்துழைப்பில்லாமல் படம் நின்று போய்த் தலைமறைவாகிறார்.எந்த விநாடியும் கரணம் தப்பி விடக்கூடிய உச்சத்தில் நின்று கொண்டிருக்கும் தயாரிப்பாளர் ராம ஐயங்காரும், திரைப்படத்துறையால் முற்றும் கைவிடப்பட்ட நடராஜனும், நொடிந்து போகும் ராஜ்கோபாலுமாக பல சாத்தியங்கள் விரவியதே வாழ்க்கை.
இது திரைத்துறையின் கதை மட்டுமல்ல. திரைத்துறை எனும் தான் நன்கறிந்த வரைதிறையில் இம்மானுட வாழ்வை வரைந்தெடுக்கிறார் அசோகமித்திரன். முன்பின் தொடர்பற்றது போன்ற இவ்வாழ்வின் நிகழ்வுகள் மிகக்கச்சிதமான காரண காரியங்களாகப் பிண்ணிப் பிணைந்து, நிகழக்கூடிய பல்லாயிரம் சாத்தியக்கூறுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து முன்னகர்வதில் உள்ள அர்த்தத்தையும் வியர்த்தத்தையும் வெளிப்படுத்தும் சித்திரம். அதன் தரிசனம் என அவர் அடைவதென்ன எனில் முதற்பார்வைக்கு ஒரு முடிவில்லாத வெறுமை தெரிகிறது. அதன் பிறகு கேரம் விளையாட்டுப் பலகையின் மையத்தில் அடுக்கி வைக்கப்பட்ட காய்கள் சுண்டப்பட்ட கணத்தின் அடுத்த விநாடி போல ஒரு சித்திரம் எழுகிறது. அடுத்த சுண்டுதல் எந்தக் காயை நகர்த்தப்போகிறது என ஆடும் கரங்களும் முன் நொடியில் அறிவதில்லை. அது ஒரு முடிவை நோக்கிய தெரிவேயன்றி வேறெதுவும் இல்லை. ‘இது இவ்வாறு இங்கு நிகழ்கிறது’ என்பதே இவர் எழுத்து சொல்லும் காட்சி. சாட்சியாயிருப்பதைத் தவிர மானுடன் வாழ்விலும் செய்யக்கூடவதென்ன? களக்காய்களின் அனைத்து நிகழ்தகவுகளையும் நிகழ்த்திப் பார்த்தாலும் அடுத்தாக தெரிவு செய்வதற்கு ஒரு வாய்ப்பே இருக்கிறது, அதுவும் வெளிக்கரங்களால் நிகழ்த்தப்படுகிறது எனும் போது உளம் ஒரு விடுதலையை உணர்கிறது.
ஏற்கனவே உயிர்ப்போடு சுழன்று கொண்டிருக்கும் புவியிலேயே உயிர் தன் முதல் மூச்சை சுவாசித்து கால்பதிக்கிறது. அவ்வுயிரின் இறுதி சுவாசத்தின் பிறகும் கருணேயேயின்றியோ, அல்லது மிகு கருணையாலோ, பூமி தன் ஓட்டத்தைத் தொடர்கிறது. நாம் வாழும் காலம் என்பது ஒரு துண்டுக் காட்சி, எனில் மிகப் பெரும் கண்ணியில் தனது பங்கை ஆற்றிவிட்டு ஒவ்வொரு மனிதனும் வெளியேறுகிறான்.
இக்கதையில், நெருக்கடிகளில் மனித மனம் கொள்ளும் நடிப்புகளில் சிலவற்றை அசோகமித்திரன் காட்டுகிறார்.
பிரபல தயாரிப்பாளர் ரெட்டியார் இறங்குமுகத்தில் இருக்கிறார். வங்கியிலும் வெளியிலும் அவரது சொல் செலவாகாத நிலை. அவரது வீடு தனது உச்சகட்ட மேன்மைகளை இழந்தவடுக்களோடு இருக்கிறது, இருப்பினும் எதற்கும் நிதானமிழக்காத மகன் இருக்கிறான். அவரை அது மேலும் அலைக்கழிக்கிறது. இது மிக நுண்ணிய சித்திரம். நமது தள்ளாட்டத்தின் போது அதிநிதானமாக அருகே நிற்கும் ஒருவன் நம்மை மேலும் நிலைகுலையச் செய்வதுண்டு. ஏதோ விதத்தில் அது நமது தடுமாற்றத்தை ஏளனத்துக்குள்ளாக்குகிறது என்பதால் இருக்கலாம்.
அதே நேரம், உதவி இயக்குனர் ராஜ்கோபாலுக்கு படம் நின்று போன பிறகு கையில் பணி ஏதுமில்லை, திருமணமான அண்ணனோடு வாழும் வீட்டில் மரியாதை இல்லை, இந்நிலையில் அம்மா அவனது திருமணத்துக்குப் பெண் பார்க்கிறாள். பலரிடம் சிபாரிசுக்காக சென்று அவமானங்களை அடைகிறான். ராஜ்கோபால் பசியோடு அலைகிறான். போதையில் நண்பர்களைத் திட்டுகிறான். வீட்டை அடைந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுகிறான். அவன் அலைந்து திரிந்து அடைந்த களைப்பைக் காட்டிலும், வீட்டில் அடைந்து கிடந்து உழைக்கும் அவள் களைப்பு அதிகமாகத் தோன்றுகிறது, எனில் அவள் நிலை சிதறாமல் இருக்கிறாள்.
ரெட்டியாரின் மகனின் நிதானம் போல இதுவும் வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக்கொள்பவர்களின் நிதானம். சில பொழுதுகளில் அந்த நிலைகுலையாமை நம்மை ஆறுதல் படுத்தவும் கூடும். ஒரு வேளை தன்னை விட இளைய சந்ததியிடம் காணும் நிலைகுலையாமை நம்மை சலனப்படுத்துவதாகவும், தாய் அல்லது மூத்தோரிடம் நாம் காணும் நிதானம் அமைதியளிப்பதாகவும் இருக்கிறதோ!
கதை நெடுகிலும், நெருக்கடிகளிலும் பிழைப்புக்காகவும் மனிதர்களும் காட்டும் சிறுமைகளின் சுயநலத்தின் இயலாமையின் தெறிப்புகள்.விசுவநாத சாஸ்திரி தயாரிப்பாளர் ரெட்டியாரிடம் தன் தம்பிக்காக சிபாரிசுக்கு வருகிறார். அதற்காக தேவேந்திரன் என்றெல்லாம் ரெட்டியாரைப் புகழ்கிறார். ரெட்டியார் இறங்குமுகத்தில் இருக்கிறார், எனில் அதை அவர் ஒப்புக்கொள்வதாயில்லை, முதற்கட்ட புறக்கணிப்புகளுக்குப் பிறகு தன்னை வந்து பார்க்கும்படி சாஸ்திரியிடம் சொல்கிறார். அது அவர் அகம் அறிந்த நிழலை முகம் காட்டாது மறைப்பதுதானே. கதையெங்கும் சிபாரிசுகளுக்கான காத்திருத்தல், பல விதங்களில் வருகிறது. அதன் பொருளின்மையும், இருந்தும் அதைத் தொடர்ந்து முயற்சிப்பவர்களும், எங்கேயோ நீளும் கை ஒன்றைப் பற்றி ஏறிவிடுபவர்களுமாகிய, ஏறும் தருவாயில் உதறிவிடுபவர்களுமாக ஒரு நெடுவரிசை.
வேலையில்லாத உதவி இயக்குனர் ராஜ்கோபால் பசியோடு உதவி எடிட்டர் சிட்டியைச் சென்று இன்னொரு இயக்குநர் ராம்சிங்கிடம் சிபாரிசுக்காகப் பார்க்கிறான். மற்றுமொரு சிபாரிசுக்கான காத்திருப்பு, ஏமாற்றம். அவன் முன்பு எண்ணாது செய்த ஒரு நுண்ணிய ஏளனத்துக்காக அவமதிக்கப்படுகிறான்.
தன்னோடு வேலை பார்த்த சம்பத்தை அன்று புதிதாகத் தொடங்கிய ஜமால் பிக்சர்ஸில் பார்க்கிறான். தண்ணீர் கேட்கும் ராஜ்கோபாலுக்கு இடத்தை மட்டும் கைகாட்டிவிட்டு சம்பத் விரைகிறான். நின்று பேசினால் சிபாரிசுக்கு வந்துவிடுவானோ என்ற பதற்றமாக இருக்கலாம், அல்லது தனது புதிய வாய்ப்பை ராஜ்கோபால் அறிந்துவிடக்கூடாதென்பதாக இருக்கலாம். ஒரு கூரிய புறக்கணிப்பு, ஒரு சிறிய ஆனால் கூர்கொண்ட கத்தி. ராம்சிங்குக்காக காத்திருக்கையில் நடிகை ஜயசந்திரிகா ராஜ்கோபாலிடம் பேசுகிறாள். நிறைய மனிதர்கள் இருக்குமிடத்தில் அதிகம் லட்சியம் செய்ய வேண்டியிராதவரிடம் அசாதாரணக் கவனம் காட்டுவது அவளது இயல்பு என்கிறார். இது கவனம் செலுத்துவதுபோல செய்யும் நுண் அவமதிப்பு.
இதுபோன்ற சித்தரிப்புகள் நாம் தினமும் கண்டாலும் தவறவிட்டுவிடக்கூடிய நொடிகள்; எனில் மனதின் நுகரி அவற்றைத் தவறவிடாது முகர்ந்து சேர்த்துவைக்கும். அத்தகைய சிறு நொடிகளின் அதிர்வுகளிலேயே கதையை மீட்டிச் செல்ல அவருக்கு இயல்பாக இயல்கிறது.
இக்கதையில் கைவிடப்படும் புறக்கணிக்கப்படும் அனைவரும் எதிர்கொள்ளும் மனிதர்கள் அற்றநீர் குளத்து அறுநீர் பறவைகளா எனில் அதுவுமல்ல.தயாரிப்பாளர் ராம ஐயங்காரின் வாழ்க்கை, அனைத்தும் நிறைந்திருந்தும் வெறுமையான வீடு, விலகி நிற்கும் குடும்பம். மெல்ல மெல்ல முன்னேறி எந்நேரமும் சறுக்கக்கூடும் எனும் உச்சியின் தனிமை. கைவிடப்பட்ட படத்தை முழுமை செய்து வெளியிடும் முயற்சியில் இருக்கிறார். எத்தனையோ இக்கட்டுகளுக்கிடையே தன்னை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கும் மகனைச் சென்று பார்க்கிறார். குடித்து விட்டுத் தனிமையில் இருக்கும் மகனிடம் பேச முற்படுகிறார். ஒருவரையொருவர் அணுக முடியாத விலக்கம் நடுவில் நிற்கிறது, வார்த்தைகளால் காயப்படுத்திக்கொள்கிறார்கள். இறுதியாக தன்னை, தான் வாழ்க்கையில் அடைந்த அறிதலை அவன் முன் வைக்கிறார்.மற்ற கதைமாந்தர்களுக்கு தோல்வியால் விலகிடும் உறவுகள் எனில் ராம ஐயங்காருக்கு அவரது வெற்றியே அவரது குடும்பத்தை அவரை விட்டு விலகச் செய்கிறது.
எளிமையான சொற்களுக்கடியில் திறமையாக தன்னை மறைத்துக் கொள்ளும் இலக்கியவாதி அசோகமித்திரன்.
திரைத்துறையின் ஒளிவெள்ளத்தில் கரைந்து போன நிழல் வாழ்க்கையை சிறுவரிகளில் சொல்லி கடந்து செல்கிறார். வாசகன் கவனித்துவிட்டானா என்ற கவலை அவருக்கில்லை.
ஓரிடத்தில் ராஜ்கோபால் குழு நடனப் பெண்களோடு வேனில் ஏற்றிக் கொள்கிறான். ஆடுவதற்கு முன்பே வியர்வை நாற்றமெடுக்கும் பெண்கள். ‘ஒவ்வொருத்தியும் கோஷ்டி நடனப்பெண் என்ற நிலையிலிருந்து பிரபல நடிகை ஆவது வரை நாற்றத்தைத் தடுக்க முடியாது’ என்ற ஒற்றை வரியில் அந்தக் இருளின் மீது ஒளிக்கீற்று ஒன்றை ஊடுருவப் பாய்ச்சுகிறார்.
நின்று போன சந்திரா கிரியேஷன்ஸ் சாமான்கள் கிடக்கும் பூட்டிய அறையைத் திறந்து சிமெண்ட் மூட்டைகளை அடுக்குகிறார்கள். தூக்கியெறியப்படும் பழைய போட்டோ ஆல்பத்தையும் கிளாப் பலகையையும் சந்திரா க்ரியேஷன்ஸில் முன்பு வேலை பார்த்த முனுசாமி பிடுங்கிக் கொள்கிறான். ஏதோ ஒரு வகையில் நின்று போன படத்தில் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்குள்ளும் அந்தப் படம் இன்னும் மிச்சமிருக்கிறது. திரைப்படம் என்பது அதில் பங்குபெறும் ஒவ்வொருவருக்கும் அவர்களது பணி எவ்வளவு சிறியதாயிருப்பினும் அவர்களது கலைப்படைப்பாகவே உணர்வதைக் காட்டும் ஒரு சிறு நிகழ்வு.
திரைத்துறையின் அங்கதங்களும் அபத்தங்களும் கூட கதையெங்கும் வருகிறது.உதாரணமாக செக்கோஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து வந்தவர்களை தென்னிந்திய வர்த்தக சபைத் தலைவர் வழக்கமான ‘டெம்ப்ளேட் வார்த்தைகளில்’ வரவேற்பது, இந்தியாவுக்கும் செக்கோஸ்லோவாக்கியாவுக்குமான ‘இரண்டாயிரம் ஆண்டு கலாசாரத் தொடர்பு’ குறித்து அபத்தமாகப் பேசுவது, தலைசிறந்த படம் என நற்சான்றிதழ் வாங்கிய படத்தை வெளியே எங்கும் போக முடியாத நிலையிலிருந்த செக்கோஸ்லோவாக்கியர்கள் பார்க்கிறார்கள் எனக் காட்டுவது என்று அந்த ஒரே பகுதியில் எத்தனை அங்கதங்கள்.
வாசித்து முடித்ததும் எழும் அகக்காட்சி, இக்கதை எங்கோ முன்னரும் நிகழ்ந்து கொண்டிருந்தது, இந்நாவல் முடிந்த பின்னரும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. இந்தப் நாவல் திறந்து காட்டும் சாளரம் வழியாக ஒரு துண்டு வாழ்க்கை வாசகனுக்குக் கண்ணில் படுகிறது. அந்தத் துளிகளில் ஒவ்வொன்றிலும் ஒரு துளி தரிசனம் இருக்கிறது.
வாழ்க்கை அவ்விதமே நிகழ்கிறது, தொகுத்து பெருந்தரிசனமாக ஆக்கிக் கொள்வது அனைவருக்கும் நிகழ்வதல்ல.
வானிலிருந்து தொடங்கி ஊற்றுமுகம் வெளிப்பட்டு நிலம்பல கடந்து கடல் சேர்ந்து வானேறும் ஒரு பெரு வளையமென ஆற்றைப் பார்ப்பது ஒரு பெருந்தரிசனப் பார்வை. துளிகளைத் துய்த்து அது ஒவ்வொன்றையும் நதியென உணர்வதும் ஒரு தரிசனம்தான். எனில்தான் ஏந்திச் செல்லப்படும் நதி துளிகளால் ஆனது எனும் பிரக்ஞையின்றியே நதியை அளைவதையே சாமானியனின் வாழ்வு அனுமதிக்கிறது. அதை சித்தரிக்கும் கதையாக கரைந்த நிழல்கள் இருக்கிறது.
மானசரோவர்
திரைத்துறையின் களத்தில் அமைந்தாலும் இது கோபால் சத்யன்குமார் என்ற இரு நண்பர்களுக்கிடையேயான உறவையும் அவர்களின் தேடல்களையும் பேசுகிறது. அவரது யதார்த்தவாத எழுத்துகளின் மத்தியில் ஒரு அறிவுகடந்த மறைஞானத் தேடல் கொண்ட மனிதனின் சித்தரிப்பு இந்நாவலை தனித்துக் காட்டுகிறது.
உண்மையில் அவர்களிடையே வரும் நட்பும் வழக்கமான ஒன்றல்ல. பம்பாய்த் திரை உலகின் மிகப் பெரும் திரை நட்சத்திரம் சத்யன் (திலிப்குமார் வாழ்க்கையை பிரதிபலிக்கக்கூடிய கதாபாத்திரம், கதையின் காலகட்டமும் அதுவே). தமிழ்த் திரைத்துறையின் மிக எளிதில் கடந்து போய்விடக்கூடிய திரைக்கதையாசிரியர் கோபால். எழுத்தாளனின் கனவுகளோடு தொடங்கி திரைக்கதை எழுதி எழுதி எழுத்தின் கனவுகளை ஆழப் புதைத்தவர்.
கோபால் அசோகமித்திரன் எழுதும் கீழ்தட்டுநடுத்தர வர்க்கத்தின் முகம். பொருளாதாரச் சிக்கல்கள், உள்ளமும் உடலும் சிதைவுற்ற மனைவி, இளம் வயதிலேயே குழந்தைகளை நோய்க்கு பறிகொடுத்த துயரம், புதிதாக மணமாகி சொல்லாத துயரோடு வளைய வரும் மகள் காமாட்சி, இவை அனைத்துக்கும் நடுவே டாக்டர் ஜிவாகோ படிக்கும் கோபால்.
திரைத்துறை வெளிச்சத்தின் உச்சத்தில் நிற்கும் சத்யன்குமார், பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பெஷாவரிலிருந்து புலம்பெயர்ந்தவர். ரத்த உறவுகளைப் பிரிவினைக்குப் பிறகு அடையாளம் காண முடியாது தனிமையாகிப் போனவர், வீடு முழுக்க பல்வேறு மனிதர்கள் ஒட்டுண்ணிகளாக வாழ இடம்கொடுத்தும் அதீத தனிமையில் உழலும் நடிகர்.
கோபாலின் அணுகமுடியாத மௌனத்தில், தன்னை நட்சத்திரம் என்பதற்காக அணுகாத அவரது ஆளுமையில் தான் கண்ட மெஹர் பாபாவின் சாயலைக் கண்டு ஒருவித பக்திபோன்ற நட்பை அடைகிறார்.
இருவர் பார்வையிலும் கதை மாறி மாறிப் பயணிக்கிறது. சத்யனின் வருகை கோபாலின் மனைவிக்குப் பிடிப்பதில்லை. கடும் காய்ச்சலில் பதினான்கு வயது மகனும், பெரும் உளச்சிதைவில் மனைவியும் இருக்கிறார்கள். மனைவியின் மனவாதை மிகுந்த ஒரு நாளில் மகன் இறக்கிறான்.
இரு வேறு குணநிலைகள்.அதீத மன அழுத்தம் தரக்கூடிய நிலைமையிலும் கலங்காது நிதானமாகப் பேசும் கோபால், கோபாலது இழப்புக்காக கண்ணீர் விடும் சத்யன்குமார். அவருக்கு அந்த மகனின் இழப்பு, தன் பெற்றோரைப் பிரிந்து பெஷாவரை விட்டுக் கிளம்பிய இளமை நினைவுகளைக் கிளர்த்தி விடுகிறது.
சிதறிய குடும்பத்தை விட்டு இலக்குகள் தீர்மானிக்காத பயணத்தை கோபால் மேற்கொள்கிறார். சத்யன் கோபாலின் திடீர் தலைமறைவில் அலைக்கழிக்கப்படுகிறார். கோபால் படப்பிடிப்புகளுக்கு வருவதில்லையென்று அறிந்த சத்யன் அவரைத்தேடி பம்பாயிலிருந்து மதராஸ் வருகிறார்.
இங்கு நுண்ணிய காட்சி ஒன்றைக் காட்டுகிறார். சத்யன் நடிகை ஜெயசந்திரிகா வீட்டில் நேரு மறைவு செய்தியைக் கேட்டு மனம் கலங்கி, அவர்களைக் கடந்து செல்லும்போது தாய், மகள் இருவரும் சற்றே முகம் சிவந்ததாக அவருக்குப் படுகிறது. ஆண்-பெண் உறவுகளின் எல்லையற்ற பரிணாமங்களை அந்த ஒரு நொடி காட்டப் போதுமானதாக இருந்தது என்ற ஒற்றை வரியில் கடந்து செல்வதில் அசோகமித்திரம் தெரிகிறது.
கதையின் முடிச்சை, சத்யனின் மனநிலையை ஒரு காட்சியில் உருவகப்படுத்திவிட்டு அப்படியே எதேச்சையாக அவ்வழி வந்த வழிப்போக்கன் போல கடந்தும் செல்கிறார்.
கோபாலைத் தேடி மனம் தளர்ந்து ஊருக்கு நடுவே இருந்த கைவிடப்பட்ட பூங்காவில் சிறிது நேரம் புகைபிடித்தபடி அமர்ந்திருக்கிறார் சத்யன். சிகரெட்டை தூர எறிந்துவிட்டு இன்னொன்றைப் பற்ற வைத்துக் கொள்கிறார். தான் முன்னர் எறிந்த சிகரெட் துண்டு அணையாதிருந்தால் சருகுகள் பற்றிப் பெரிய தீ விபத்தாகிவிடக் கூடும் என்று சட்டென உணர்கிறார். உலர்ந்த இலைகளைக் காலால் கிளறி அதைத் தேடுகிறார். அவர் தேடுவதைக் கண்டு அணுகி விசாரிக்கும் டிரைவரிடம் வெள்ளி மோதிரம் விழுந்துவிட்டதென சொல்கிறார். அவனும் ஏதோ ஒரு பித்தளை மோதிரத்தைக் கண்டெடுத்துக் கொடுக்கிறான்.
இந்த சம்பவம் ஒரு விதத்தில் கதைக்கான மொத்த படிமமாகவும் தோன்றுகிறது. அவன் அறியாது பற்றி எறிந்துவிட்ட அக்கினித் துணுக்கு கோபால் வாழ்வைத் தீக்கிரையாக்கியிருக்குமோ எனும் பதற்றமே சத்யனது உள்மனத் தவிப்பு. பிறரது பார்வைக்கு அவன் தேடும் மோதிரமே ஏனைய அலைக்கழிப்புகள்.
ஆழத்தை மறைத்து அமைதி காட்டும் அலையற்ற கடல் போலவே கோபால் இருக்கிறார். அவரது தேடல் அவரை சித்தர் ஒருவரிடம் சென்று சேர்க்கிறது. அவர் உள்நோக்கிய பயணமொன்றைத் தொடங்குகிறார்.
பல்வேறு அலைச்சலுக்குப் பிறகு சத்யன்குமார் உடல்நிலை சரியில்லாத நிலையில் அலைந்து கோபாலின் இருப்பிடத்தைக் கண்டடைகிறார். பயணத்தில் சித்தரையும் அவர் சித்தர் என்றறியாது சந்திக்கிறார்.
அவரைத் தேடியடைந்த சத்யன் கோபாலிடம் ஒரு உண்மையைக் கூறித் தன் பளுவை இறக்கிவிடத் தத்தளிக்கிறார். அங்கு ஓடும் ஆற்று நீரில் சத்யனைக் குளிக்கச் சொல்லிவிட்டு சித்தர் செல்கிறார். அதுவே அவரது மானசரோவர் என்று கோபாலை விளக்கச் சொல்கிறார்.
“வடக்கே பனி சூழ்ந்த ஹிமாலய மலைகளுக்கு நடுவே ஓர் ஏரி. அங்கே குளித்து வந்தால் மனம் சுத்தமாகிவிடும். மனம் சுத்தமானால் யோகம் சித்திக்கும். யோகமெல்லாம் நமக்கெதற்கு? மனம் சுத்தமானால் போதாதா?” என்று கோபால் சொல்கிறார்.
வாழ்வில் நமது செயல் களத்திற்கு அப்பால் நின்று நமை இயக்கும் சக்திகளின் விசை கண்டு திகைக்கிறோம். செல்திசையறியாது ஒரு அடைபட்ட பாதையில் சென்று முட்டிக்கொள்கிறோம். தத்தளிப்புகளில் தவிப்புகளில் நமை வழிநடத்தும் ஒருவர் குருவாக அமைவது பெருவாய்ப்பு. அதுவே அவரவருக்கான மானசரோவருக்கான வழி. அதற்கான தேடல் ஒவ்வொருவருக்கும் முற்றிலும் தனியானதே. கோபால் அடைந்து விட்ட மானசரோவரை சத்யன் அடைவதற்கு அவர் சுயமாக அலைந்து திரிந்தே ஆக வேண்டும். ஒரே சாலையில் பயணித்தாலும் ஒரே சமயத்தில் இலக்கு சென்றடைய முடியாத பாதை இது. இக்கதையில் திரைத்துறை வெறும் களம் மட்டுமே. இது எங்கும் நிகழ்ந்து விடக்கூடிய ஒரு கதை, எனில் களத்தை உயிர்ப்போடு சித்தரிக்க திரைத்துறை எனும் பிண்ணனி உதவுகிறது.
நாம் தினமும் பயணிக்கும் பாதையில் போகிறபோக்கில் கேட்கும் ஒரு பாடல் அன்றைய தினத்தை முழுமையாக நிறைத்துக் கொள்வதைப்போல, அசோகமித்திரன் சொல்லிச் செல்லும் அன்றாட வாழ்வு அதுவரை நாம் இனம் காணாத ஒரு தத்தளிப்பை, இயலாமையை, நிதர்சனத்தை நம்முள் மிக அனிச்சையாக உணர்த்திவிட்டுப் போகிறது.
இரண்டு நாவல்களும் திரைத்துறை சார்ந்தது என்று பொதுமைப்படுத்தி விட முடியாது. இது அவரது களம். அதிலிருந்து மனித உறவுகளை, வாழ்வின் ஆதாரம் குறித்த கேள்விகளை மௌனமாக எழுப்புகிறார். கண்முன் காணும் உலகியல் வாழ்க்கை, எளிய மனிதர்களின் அன்றாடப்பாடு, அதன் வேதனைகள் என சராசரிக் கவலைகள் இலக்கியமா என்ற கேள்விக்கு, அந்தத் தூரிகையைக் கொண்டு அவர் எழுதும் சித்திரம் தனது எல்லைகளை உணரும் மானுடத்தின் வலி என்ற வகையில் இலக்கியமாகிறது. அது ஒட்டுமொத்தத்தின் கூட்டு அறிதலாயன்றி தனிமனித அறிதலாயிருப்பினும் வாசகன் ஒவ்வொருவரும் அதை சென்றடைய முடிவதாலேயே அது கூட்டு அறிதலின் உச்சத்தில் நிற்கிறது.
மிக்க அன்புடன்,
சுபஸ்ரீ