அஞ்சலி – வி.எஸ்.நைபால்

VS_Naipaul_650

 

எண்பதுகளில் வி.எஸ்.நைபாலின் பேட்டி ஒன்றை இலஸ்டிரேட்டட்  வீக்லி இதழில் வாசித்தேன். அதில் இருந்தது வெறும் திமிர் என்று அப்போது தோன்றியது. இப்போது எழுத்தாளனுக்கு இருக்கும் இயல்பான தன்பார்வை சார்ந்த உறுதிப்பாடு என நினைக்கிறேன். அது தவறோ சரியோ அதையொட்டியே அவனுடைய இருப்பு. ஆனால் அன்று நிராத் சௌதுரியின் Thy Hand, Great Anarch ! என்னும் கட்டுரை நூல் வெளிவந்து இந்திய ஆங்கிலச் சூழலில் ஆறுமாதமாக பெரிதும் பேசப்பட்டது. எனக்கு நைபால் இன்னொரு நிராத் சி சௌதுரி ஆகத் தோன்றினார். இருவரையும் ஒப்பிட்டு அன்று எழுதியிருக்கிறேன். ஆனால் சௌதுரி பிரிட்டிஷாரின் உளஅடிமை. கலை என்றால் என்னவென்றே அறியாத சிறுமதியர். நைபால் அடிப்படையில் இலக்கியக் கலைஞர் என இன்று நினைக்கிறேன்.

 

நான் நைபாலை விரும்பி விரிவாக வாசித்ததில்லை. எண்பதுகளில் எழுந்த விவாதங்களை ஒட்டி, அவருடைய அவருடைய இந்தியா குறித்த உளப்பதிவுகளின் தொகுதிகளாக வெளிவந்த ‘An Area of Darkness’, ‘A wounded civilization’  மற்றும் ‘India a million mutinies now’. ஆகிய மூன்று நூல்களில் இரண்டாவது நூலை மட்டும் வாசித்தேன். அதைப்பற்றி அப்போது ஒரு குறிப்பு எழுதியிருக்கிறேன். பின்னர் முதல்நூலை வாசித்தேன்- அதை முழுமையாக வாசிக்க என்னால் இயலவில்லை. உதிரிச் சித்திரங்களாகவே அவை நினைவில் எஞ்சுகின்றன. இந்தியப் பயணங்களில் அவ்வப்போது அவருடைய வரிகளோ சில காட்சிகளோ நினைவிலெழுவதுண்டு. சொற்பொழிவுகளில் சுட்டியதுமுண்டு. பிடிவாதமாக அவை என் நினைவில் நிற்பதனால்தான் அவர் என்னை எங்கோ பாதித்திருக்கிறார் என நினைத்துக்கொள்கிறேன்.

 

புனைவுகளில் அவருடைய A house for Mr Biswas வாசித்திருக்கிறேன். அது கொஞ்சம் என் அப்பாவின் சாயல் உள்ள ஒருவரின் கதை.  இரண்டு அம்சங்கள் பிஸ்வாஸுக்கும் என் அப்பாவுக்கும் பொதுவானவை. அப்பா வாழ்நாள் முழுக்க தன்னை மனைவியும் மனைவியின் வீட்டாரும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்னும் பிரமையில் இருந்தார். ஒரு வீடு கட்டிவிட்டால்  தான் பூமியில் நிலைகொள்ளமுடியும் என நம்பினார். பெரும்பாலான லௌகீக விஷயங்களில் அப்பா தோல்விதான் அடைந்தார். அப்பாவிடம் ஒரு ‘உலகப்பதற்றம்’ இருந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் தாய்வழிச் சமூக அமைப்புக்குள் இருந்து விலகி ஓர்  ஆண்மையச் சமூக அமைப்புக்குள் புகுந்துகொண்டு அவ்வாறே வாழும்பொருட்டு முயன்றவர் அவர்.  அத்தகைய கலாச்சாரத் தடுமாற்றத்தை பிஸ்வாஸிலும் கண்டேன். இந்த உளப்பதிவுக்குமேல் அந்நாவலும் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. ஆனால் அப்பா பற்றிய ஒரு குறிப்பில் நைபாலைப்பற்றிச் சொல்லியிருந்தேன்.

 

இவ்வாறு சில மெல்லிய இணைப்புகளே நைபாலுக்கும் எனக்குமிடையே உள்ளன. அவருக்கு நோபல் அறிவிக்கப்பட்டபோது ஆச்சரியம்தான் எழுந்த்து. ஆனால் அவரை ஐரோப்பியரோ அமெரிக்கரோ கொண்டாடுவதில் பொருளிருக்கிறது. அவர் அவர்களுக்காக எழுதிய எழுத்தாளர். ஆனால் சுந்தர ராமசாமிக்கு அவர் மேல் பெரிய ஈடுபாடு இருந்தது. பல உரையாடல்களில் நைபால் பற்றிச் சொல்லியிருந்தார். நைபால் இந்தியாமேல் கொண்டிருந்த ஈவிரக்கமில்லாத பார்வையே இந்திய எழுத்தாளன் கொள்ளவேண்டியது என அவர் சொன்னதை நினைவுகூர்கிறேன். ஆனால் அதே ஈவிரக்கமில்லாத பார்வை அவருடைய டிரினிடாட் வாழ்க்கையைப்பற்றி, அவர் பயின்ற ஐரோப்பா பற்றி அவருக்கு இருக்கவில்லை என்று நான் வாதிட்டிருக்கிறேன். மிக இயல்பாக ஐரோப்பாவின் சிறுமைகளையும் நைபால் பெற்றுக்கொள்ளக்கூடும்  என்றும் சொன்னேன். கடைசிக்காலத்தில் நைபால் கொண்டிருந்த இஸ்லாமிய வெறுப்பு , இந்துத்துவ ஆதரவு உட்பட பல அம்சங்கள் அத்தகையவைதானோ என ஐயுறுகிறேன்.

 

நைபாலின் இறப்பை ஒட்டி என் உள்ளத்தில் துண்டுதுண்டாக ஓடுவனவற்றை அவ்வாறே பதிவுசெய்யலாம் என எண்ணி இதை எழுதுகிறேன். இப்போது செக் குடியரசின் பிராக் நகரின் மையத்தில் ஒரு பழைய இல்லத்தின் மாடியில் அமைந்த தங்குமிடத்தில் இருக்கிறேன். இந்தச் சூழலும் அவர் சார்ந்த நினைவுகளை கிளர்த்துகின்றன.  எந்தச் செய்தியும் செவிகளில் விழவில்லை என்றாலும் சென்ற சிலநாட்களில் இரண்டுமுறை நைபாலை  நண்பர்களுடனான பேச்சில் நினைவுகூர்ந்திருக்கிறேன். ஆகவே அவருடைய இறப்பு குறித்த செய்தி சிறு அதிர்ச்சியை அளித்த்து

 

ஆங்கிலம் வழியாக ஒன்றை வாசிக்கையில் நான் மேலதிகமான உழைப்பை அளிக்கவேண்டியிருக்கிறது. ஆகவே அந்நூல்கள் ‘சுவாரசியமானவை’யாக ‘முக்கியமானவையாக’ இருந்தால் மட்டும் போதாது எனக்கு. அவை என் வாழ்க்கைநோக்கை மாற்றும் அளவுக்கு வலிமையுடன் என்னைத் தாக்கவேண்டும். என் கனவுகளைப்பெருக்கும் அளவுக்கு அழகியல்விரிவு கொண்டிருக்கவேண்டும். நைபால் இடைத்தர எழுத்தாளர் மட்டுமே. ஆனால் அவர் என்னை ஏதோ வகையில் பாதித்து இத்தனை ஆண்டுகளில் கூடவும் வந்திருக்கிறார்.

 

ஏன்? முதலில் அவருடைய சீண்டல்கள். ஒரு காட்சி, அது எந்த நூல் என நினைவுகூர முடியவில்லை. நைபால் ஒரு ரயில் நிலையத்தைச் சித்தரிக்கிறார். ரயில் வரப்போகிறது. ஒரு பிச்சைக்காரன் தன் செயற்கைப் புண்களை வைத்துக் கட்டுகிறான். ரயில்நிலையப் பிச்சைக்காரர்கள் அனைவரும் புண்களுடன் தயாராகிறார்கள். இந்தப்பயணத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ம்யூனிச் நகரில் இருக்கையில் இந்தக் காட்சியை நண்பர்களிடம் சொன்னேன். நைபாலின் தேர்ந்த மொழி அந்த ரயில்நிலையத்தை இந்தியாவாக ஆக்குகிறது. இந்தியா எதைக் காட்சிப்படுத்துகிறது என்னும் துணுக்குறலை உருவாக்குகிறது. அந்தச் சீண்டலில் இருந்து நான் வெளியேறவே இல்லை போலும். அவரை வாசித்த நாளில் என் இந்திய அலைதலை ஆரம்பித்தேன். இத்தனை ஆண்டுகளாக ஏதோ ஒருவகையில் அவருக்கான விடைகளை நான் இந்தியா முழுக்க அலைந்தலைந்து கண்டுபிடிக்கிறேனா?

 

நைபாலை இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து ஆங்கிலத்தில் எழுதும் பல எழுத்தாளர்களுக்கான முன்னுதாரணமாகக் கொள்ளலாம். இந்தியாவின் பேருரு அவர்களை அச்சுறுத்துகிறது, விடாமல் துரத்துகிறது. ஆனால் அதிலிருந்து தங்களை விலக்கிக்கொள்ள, வேறொருவராக வகுத்துக்கொள்ள முயல்கிறார்கள். ஐரோப்பியர்களாக, அமெரிக்கர்களாக ஆகிவிட ஏங்குகிறார்கள்.[ அதை நவீனமனிதனாக ஆதல் என கற்பனை செய்துகொள்கிறார்கள்]  அதில் பலவகையான பாவனைகளே பெரும்பாலும் தொழிற்படுகின்றன. இந்தியா மீதான எள்ளல்,  ஐரோப்பா மீதான வழிபாட்டுணர்வு என ஒரு ‘டெம்ப்ளேட்’ உண்டு. நிராத் சௌதுரி உதாரணம். இதை மேலும் மேலும் பூடகமாக வெளிப்படுத்துபவர்கள் இன்றைய பெரும்பாலான இந்திய ஆங்கில எழுத்தாளர்கள். இந்தியா மீதான மிகைப்படிமத்தை ஐரோப்பிய அறிவடிப்படை கொண்டு உருவாக்கிக் கொள்ளுதல் இன்னொரு வகைமாதிரி. உதாரணம் ராஜா ராவ். இவர்களில் உண்மைக்கு அணுக்கமான கலைஞர் நைபால்தான். ஆகவேதான் சீண்டினாலும் சல்மான் ருஷ்தி போல எரிச்சலூட்டுவதில்லை நைபால்.  முழுமையாக புறக்கணிக்கமுடியாதபடி சில அடிப்படை வினாக்களுடன் நம்முடன் இருந்துகொண்டே இருக்கிறார்.

 

காலையில் மீண்டும் சுசித்ராவுடன் நைபால் பற்றிப் பேசினேன், முந்தையபேச்சின் தொடர்ச்சியாக. நைபாலின் குறை என்ன? அவரிடம் நான் எதிர்பார்த்தது பெருங்கலைஞர்களுக்குரியதாக நான் எண்ணும் ஒருங்கிணைந்த முழுமைநோக்கை – அதை தான் தரிசனம் என்பேன். வாழ்க்கையினூடாகச் சென்றடையும் கனிவை. அவை அவரிடமில்லை. அவரிடம் இருப்பதென்ன?  தொந்தரவுசெய்யும் உண்மையின் கூர்மை. அதனால்தான் அரசியல்சரிகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் வயதான காலத்தில் இந்துத்துவ ஆதரவுநிலைபாட்டை எடுக்கமுடிந்த்து. இந்த உண்மையம்சம் ஆங்கிலத்தில் இந்தியாவைப்பற்றி எழுதும் பெரும்பாலானவர்களிடம் இல்லை. ஒருவேளை சில ஆண்டுகாலம் இந்தியாவின் மையத்தில் அவர் வாழ்ந்திருந்தால் அவர் முழுமைநோக்கிச் சென்றிருக்கலாம், கனிந்திருக்கலாம் என்று சுசித்ரா சொன்னார். உண்மைதான், அவர் இந்தியாவை பயணியின் கோணத்திலேயே பார்த்தார். எப்போதும் ரயிலில் சந்திக்கும் ஒருவராகவே அவரை என் மனம் உருவகித்திருக்கிறது.

 

குறைவாக வாசித்து, மறந்துவிட நினைத்த ஓர் எழுத்தாளர் இத்தனைகாலம் நினைவில் நீடிப்பது விந்தைதான். அதுவே அவருடைய பங்களிப்புபோலும். நைபாலுக்கு அஞ்சலி

 

முந்தைய கட்டுரைகிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 74