வேதங்களையும் அவற்றின் உட்பொருளையும், கவித்துவத்தையும் காண விரும்புவோர்க்குத் தாங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) எவையாக இருக்கும்?
— பி.கே.சிவகுமார்.
வேதங்களை நான் படித்தது மலையாள மொழிபெயர்ப்புகளில். மலையாள மொழி மேற்கட்டுமானத்தில் சம்ஸ்கிருதமேதான். ஆகவே மொழிபெயர்ப்பு மிக உண்மையானதாகவும் நேர்த்தியானதாகவும் இருக்கும். மேலும் மொழிபெயர்ப்புகளைக் கேரள தேசியப் பெருங்கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனன் செய்திருக்கிறார். வேதங்கள் குறித்த அரிய ஆய்வுகளும் மலையாளத்தில் உள்ளன.
வேதங்களைப் பற்றி படிக்க ஆரம்பிக்கையில் ஓர் அடிப்படைத்தெளிவு தேவை. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான சாயனர் வேதங்களுக்குச் சடங்கு சார்ந்த ஓர் உரை எழுதினார். ‘சாயன பாடிய’மே பொதுவாக மரபு சார்ந்தவர்களால் ஏற்று முன்வைக்கப்படுகிறது. வேதம் ஞானத்துக்கு ஞானமான மூலநூல். அதன் கருத்துக்களைவிட ஓலியே முக்கியமானது. அதை உரியமுறையில் உரிய தருணங்களில் ஓதுவதே சிறந்த வேதஞானம். இதுவே சாயனரின் தரப்பாகும். காஞ்சி சந்திர சேகர சரஸ்வதியானாலும் ஸ்ரீரங்கம் ஜீயரானாலும் இதே தரப்பைத்தான் முன்வைப்பார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்த சரஸ்வதி சாயனரைக் கடுமையாக மறுத்து வேதங்களைத் தத்துவ சிந்தனையின் மூலநூல்களாக முன்வைக்கிறார். அவர் வேதங்களை அறிவுபூர்வமாக ஆராய அறைகூவினார். அதையொட்டியே வேதங்கள்சார்ந்து புதியகோணங்கள் உருவாயின. வேதங்களின் அர்த்தங்களை அறிவது, அவற்றின் சொற்களை படிமரீதியாக உணர முயல்வது ஆகிய போக்குகள் உருவாயின. அரவிந்தர் இம்மரபில் வந்த முக்கியமான வேத ஆய்வாளர்.
மூன்றாவது மரபு இந்தியவியலாளர்களால் உருவாக்கப்பட்டது. வேதங்களை இறந்தகாலத்தின் பகுதிகளாக எண்ணி ஆய்படுபொருளாக அணுகுவது இவர்களின் பாணி. இவர்களில் கிறித்தவ மதத்தை முன்னிறுத்தும் நோக்கும் ஏகாதிபத்திய மனோபாவமும் கொண்டவர்கள் உண்டு. திறந்த மனம் கொண்டவர்களும் உண்டு. மாக்ஸ்முல்லர் இரண்டாம் வகையினர்.
ஒருநூல் இதில் எந்தவகை என்று பார்ப்பது அவசியம். மூன்றுவகையான நூல்களையும் ஓரளவாவது படிப்பதும் தொகுத்துக் கொள்வதும் உதவும் என நித்ய சைதன்ய யதி சொல்வார்.
தமிழில் ஜம்புநாதன் என்பவர் வேதங்கள் அனைத்தையும் மொழிபெயர்த்திருக்கிறார். நூல்களை என் நண்பர் ராஜசேகரன் [விஷ்ணுபுரம் ஒரு பார்வை-யின் ஆசிரியர்] வைத்திருக்கக் கண்டுள்ளேன். மிகக் குறைவான பிரதிகளே அச்சிடப்பட்டும் விற்காமலாகி ஜம்புநாதன் அவர் தன் சொத்துகளையெல்லாம் இழந்து வறியவரானார் என்பார்கள். மறுபதிப்பேதும் வரவில்லை. சென்ற சிலவருடங்களில் மறுபதிப்புக்கு முயற்சிகள் நடந்தன.
தண்டபாணி சுவாமிகள் என்பவர் சாமவேதத்தை அழகிய உரையுடன் மொழிபெயர்த்தார். இதன் பிரதி, ஊட்டி ராமகிருஷ்ண மட நூலகத்தில் உள்ளது. இதுவும் குறைவாக அச்சிடப்பட்ட அரிய நூலே. இதன் ஒளிப்பிரதியை நித்ய சைதன்ய யதி வைத்திருந்தார். அவர் எழுதி முடிக்காத சாமவேத உரைக்காக நான் சுவாமிகளின் உரையை முழுக்க மலையாளத்தில் மொழிபெயர்த்தேன்.
மற்றபடி உரையுடன்கூடிய வேதநூல்கள் இல்லை. கிரந்த லிபியில் அத்துறை நிபுணர்களுக்காக அச்சிடப்படும் குறைந்த எண்ணிக்கையான நூல்கள் சில வந்துள்ளன.
வேதங்களைப் பற்றி படிக்க மாக்ஸ்முல்லர் தொகுத்த ‘Sacred Books of the East’ உதவும். மோதிலால் பனாரஸிதாஸ் டெல்லி வெளியீடான எஸ்.வி.கணபதி மொழிபெயர்த்த ‘Samaveda’, தேவி சந்த் மொழியாக்கம் செய்த Munshiram Manoharlal Publishers-ன் ‘The Atharva Veda’ ஆகியவை நவீன மொழியாக்கங்கள் என நித்ய சைதன்ய யதியால் மேற்கோள் காட்டப்படுவதுண்டு.
C.Kunhan Raja எழுதிய ‘Post Philosophers of the Rigvetha’ எனக்கு உதவிய நூலாகும். V.M.Apte எழுதிய ‘Vedic Age’ என்ற நூலை நித்ய சைதன்ய யதி முக்கியமாகக் குறிப்பிடுவதுண்டு. நான் அதிகமும் நடராஜகுரு நித்ய சைதன்ய யதி ஆகியோரின் உரைகள் மற்றும் நூல்களையே நம்பியுள்ளேன்.
தயானந்த சரஸ்வதியின் ‘சத்யார்த்தபிரகாசம்‘ தமிழிலும் ஆரிய சமாஜத்தவரால் வெளியிடப்பட்ட நூல். அரவிந்தரின் Aurobindo Ghosh தொகைநூல்களில் வேதங்களைப்பற்றிய இலக்கியத்தரமான ஆய்வுகள் உள்ளன. The secret of the Veda, Life divine, The foundations of Indian culture ஆகியவை குறிப்பிடத்தக்க நூல்கள். Henrich Zimmer எழுதிய Philosophies of India முக்கியமாகக் கருதப்படும் ஆய்வுநூல். எல்லா பேராசிரியர்களும் மேற்கோள் காட்டுவது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய ‘இந்திய தத்துவ ஞானம்’ ஒரு முக்கியமான நூல். வேதாந்தத்தைச் சற்றே முக்கியப்படுத்தி இந்திய ஞான மரபை ஆன்மிக மைய மரபாகக் காட்டும் பெரும் நூல் இது. தமிழில் வந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் ஹிரியண்ணா [Hiriyanna] எழுதிய ‘இந்திய தத்துவ மரபு’ [Outlines of indian philosophy] விரைவில் தமிழினி வெளியீடாக வரவுள்ளது. இது கறாரான பார்வையை முன்வைக்கும் விறுவிறுப்பற்ற ஆனால் முக்கியமான நூலாகும். கி.லட்சுமணன் எழுதிய ‘இந்திய தத்துவ ஞானம்’ (பழனியப்பா பிரதர்ஸ்) தமிழில் கிடைக்கும் நல்ல அறிமுக நூல். சைவசித்தாந்தம் மீது ஒரு சார்பு உண்டு என்றாலும் நேர்த்தியானது. நா.சுப்ரமணியம் எழுதிய ‘இந்திய சிந்தனை மரபு’ என்ற நூலும் முழுமையான தகவல்கள் கொண்டது. இவ்விருவருமே ஈழத்தமிழர்கள்.
மார்க்சிய நோக்கில் மூன்று நூல்களை நான் முக்கியமாகச் சொல்வேன். ஒன்று தேபிபிரசாத் சட்டோபாத்யாய எழுதிய ‘இந்தியமரபில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்’. தமிழில் கரிச்சான் குஞ்சு. இரண்டு இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் எழுதிய ‘வேதங்களின் நாடு’. மூன்று கெ.தாமோதரன் எழுதிய ‘Indian thought’. முதலிரண்டும் தமிழில் கிடைக்கும். தனித்தனி நூல்களாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. ராகுல சங்கிருத்யாயனின் தர்சன் திக் தர்சன் ஒரு நல்ல நூலல்ல என்பது என் எண்ணம். ஆனால் பலர் அதை மேற்கோள் காட்டுகிறார்கள்.
வேதங்களை அறிய மோனியர் வில்லியம்ஸின் வேதச்சொல்லகராதி [Monier-Williams] மிக முக்கியமான கைத்துணை. இணையத்தில் கிடைக்கும் இந்நூலை வாங்குவது என் நீண்டகாலக் கனவுகளில் ஒன்று. இரு நூல்களை நான் ஆங்கிலத்தில் சிரமப்பட்டுப் படித்துள்ளேன். அவை தமிழாக்கம் செய்யப்பட்டால் வெளியிட ஏற்பாடு செய்யமுடியும். ‘The Vedic Experience- Manntramanjari’ என்ற நூல் Raimundo Panikkar அரவிந்தரின் பாதையில் எழுதியது. All India Books Pondichery வெளியீடு. A.A.MacDonal எழுதிய Motilal Banarasidas Delhi வெளியீடான ‘Vedic mythology’ இன்னொரு முக்கியமான நூலாகும்.
ரிக்வேதம் பத்தாவது மண்டிலம், சாமவேதம் ஆக்னேய காண்டம் ஆகியவையே வேதங்களில் கவித்துவ உச்சம் கொண்டபகுதிகள். அவற்றை மட்டும் படித்தால்கூடப் போதும்
-*-
இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்” புத்தகத்தின் நீட்சியாக இந்தியத் தத்துவ/ஞான தரிசனங்களை மேலும் அறிய ஒருவர் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று எந்தப் புத்தகங்களை உங்கள் வாசகர்களுக்குப் பரிந்துரைப்பீர்கள்?
— பி.கே.சிவகுமார்.
இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள் என்ற எனது நூல் ஓர் எளிய அறிமுகநூலாகும். தரிசனங்களை விரிவாக அறிய டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய ‘இந்திய தத்துவஞானம்’ என்ற பெரியநூல் உதவக்கூடியது. தேபி பிரசாத் சட்டோபாத்யாயவின் இந்திய சிந்தனையில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும் விரிவாக உதவக்கூடிய நூலாகும். மேலும் தரிசனங்களை அறிய தமிழில் நூல்கள் இல்லை.
ஆங்கிலத்தில் மாக்ஸ் முல்லரின் ‘The Six Systems of Indian Philosophy’ முக்கியமான முதல் நூல். சரத் சந்திர பானர்ஜி சாங்கியம் நியாயம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எழுதியவர். [The Sanhkya Philosophy. The Nyaya: The theory of Philosophy] ரிச்சர்ட் கார்பெயின் ‘The Sankhya Philosophy’. ‘Richard Garbe’ சாங்கியம் மற்றும் யோகம் குறித்த அதிகாரபூரவநூலாக கருதப்படுகிறது. A.Histry of early Vethantha Philosophy – HajimeNakamure, A.History OF Indian Logic- S.Chandra Vidyabhusura ஆகியவை குறிப்பிடத்தக்க நூல்கள். பொதுவாக டெல்லியின் மோதிலால் பனாரஸிதாஸ் வெளியீட்டக அட்டவணையில் ஏராளமான நூல்களைக் காணலாம். என் வாசிப்பு எல்லைக்குட்பட்டது. பல நூல்களை நான் தகவல்களைச் சரிபார்க்கப் புரட்டியிருக்கிறேன் என்பதைச் சொல்ல விழைகிறேன்.
தரிசனங்களின் பல மூலநூல்களே இப்போது வெளியாகிவிட்டன. சாங்கியகாரிகை, சங்கிய பிரவசன பாஷ்யம் முதலிய பல நூல்கள் மலையாளத்திலேயே அரசின் பிரசுர நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.