காதல் ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ
எத்தனையோ இரவுகளில் பலவித காரணங்களுக்காக என் தூக்கத்தை இழந்திருக்கிறேன், காரணமே இல்லாமல் வெறுமனே எனக்குத் தேவையே இல்லாத ஒன்றை சிந்தித்துக் கொண்டே உறங்க கால தாமதமான நாட்கள் எண்ணிச் சொல்ல முடியாதது. ஆனால் நான் நேற்று தூக்கத்தைத் தொலைத்ததற்கு காரணம் தங்கள் தளத்தில் வந்திருந்த கல் அழகுறுதல் கட்டுரையோடு இணைந்த பழைய கடிதம், ”காதல் ஒரு கடிதம்”. நேற்றிரவு தான் அந்தக் கடிதத்தை வாசித்தேன், சரியாக சொல்ல வேண்டுமென்றால் பன்னிரண்டரைக்குத் தான் வாசித்து முடித்தேன். அதன் பின் பலவாறாக என் சிந்தனைகள் என் தூக்கத்தை துறத்திவிட்டன. அண்ணன் கெ இருந்த மனநிலை சரியாக நான் ஓராண்டு முன்பிருந்த அதே மனநிலை. நான் உங்களுக்கு அதைப்பற்றி எழுதியிருந்தால் ஏறத்தாழ அப்படியே இருக்கும் ஒரு கடிதம் அது. மாதங்கள் கூட மாறாமல் அதே ஏழு மாதம் தான்.
மிக துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால் 3, ஜனவரி 2017, அன்று தான் அவளிடம் பேசத் தொடங்கினேன். அதிலிருந்து கடந்த ஜீலை இறுதி வரைதான் எங்கள் பேச்சுவார்த்தை நீடித்தது. என்னை விட ஒரு வயது இளையவள், நான் வேலை செய்யும் அதே அலுவலகம்தான், ஆனால் வேற டீம். என்னுடைய ஒரு தலை காதலை அவளிடம் சொல்ல எனக்கு ஏழு மாதம் தேவைப்பட்டது, நிராகரித்துவிட்டாள். அதுவரைக்கும் நன்றாகத்தான் பழகினோம். எனக்கு உண்டான முதல் காதல், அதனால் எளிதில் விட்டுவிட முடியவில்லை. மூன்று வாரம் அவளை தொலைபேசி மூலமாகவும் நேரிலும் சமாதானம் செய்தேன். அவள் தன் முன்முடிவுகளோடு தீர்க்கமாக இருந்தால். இதற்கு மேல் ஒரு பெண்ணிடம் பேசுவது அநாகரீகமாக எனக்குப்பட்டது. அப்போது என் பேச்சை நிறுத்திவிட்டேன். நான் கடைசியாக அவளிடம் சொல்லிய வார்த்தைகள் எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. “நான் உனக்கு ஒரு நல்ல நண்பனாக இருப்பேன்” என்றேன். அன்றோடு அவளிடம் பேசுவதையோ, அவளை பார்ப்பதையோ நிறுத்திவிட்டேன். கெ கூறிய அதே வரிகள் இவைதான் என் நினைவுகளை நேற்று மீட்டு மீட்டு எங்கெங்கோ கொண்டுச் சென்றன.
வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு சலித்தவன் நானல்ல. அதுவா நானா என ஒரு கை பார்ப்பதே என் வழக்கம் ஆனால் இந்த விஷயத்தில் என்னால் அவ்வளவு எளிதாக வெளிவர முடியவில்லை, நீங்கள் சொன்னது போல் என் அகங்காரம் அடிபட்டதே இதற்கு காரணம். கிட்டதட்ட மூன்று மாதம் நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. இதிலிருந்து அடுத்த அத்தியாயத்திற்கு முன்னேற எனக்கு துணையாய் இருந்தன இரண்டு, ஒன்று என்னை சமாதானம் செய்ய நல்ல நண்பர்களும் என் குடும்பத்தாரும் இருந்தார்கள்.
மற்றொன்று தங்கள் நாவல்கள் தான். எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது கடந்த ஜீலை 2017 நான் கொற்றவை படித்துக் கொண்டிருந்தேன். அதில் வரும் வரிகள், “காலத்தை வணங்குக! அதன் எண்ணம் வான் அறியாதவை, மண் அறியாதவை, இறையும் திகைத்தொளிபவை”. அத்தருணத்தில் அந்த வரிகளை மந்தரம் போல் ஜெபித்துக் கொண்டிருந்தேன். அதனால் தான் ஒரு வருடம் கடந்தும் அந்த வரிகள் மட்டும் மனிதில் மறையாமல் பதிந்து நிற்கிறது. என்னை நான் மாற்ற முடியும் என்னால் இதிலிருந்து தப்பிக்க காலம் கண்டிப்பாக ஒரு பதில் சொல்லும் என மீண்டும் மீண்டும் எனக்குள் சொல்லிக் கொண்டேயிருந்தேன். அதன் பின் காடு நாவல் ஏறத்தாழ நீலி சாகும் போது என் காதலும் செத்துவிட்டிருந்தது. எல்லோர் காதலும் கிரியின் காதலைப் போல் தான், கிரி அந்த பிரிவின் துயரை மீறி வர அவனுக்கு ஒரு சமூகப்பணி அவனோடு வந்தது, அதன் பொருட்டே அவன் மீண்டு வந்தான், அவள் நினைவுகளிலிருந்து மீள்வதென்பது இயலாத காரியம் ஆனால் அவள் பிரிவின் துயர் தாக்காமலிருக்க அவனை ஒரு வேலை கட்டிப்போட்டிருந்தது. மருத்துவமனைக்கும் காடுக்கும் அவன் சைக்கிளில் ஓடிக்கொண்டிருந்த ஓட்டம் நான் ஓடுவது போல் எண்ணிக் கொண்டேன்.
கடந்த செப்டம்பரில்தான் நான் உங்களுக்கு என் முதல் கடிதத்தை எழுதினேன். என் வாழ்வின் அடுத்த அத்தியாயம் அந்த கடிதத்திற்கு பின் தான். நான் செய்ய வேண்டியதை எனக்கு மிக தெளிவாக கற்றுக் கொடுத்தீர்கள். அது எனக்கு மிகுந்த செயலூக்கத்தை தந்தது. நான் எழுதும் கவிதை குறித்து என் மிகை எண்ணம் அதோடு மடிந்தது அதன் பின் அதனை கற்கும் பணி என்னை முழுதாக அதில் ஈடுபடச் செய்தது. இலக்கியம் குறித்த ஒரு திறப்புவாயில் அது. அங்கிருந்து தான் என் பயணத்தை மீண்டும் தொடங்கினேன்.
இப்போது நான் எவ்வளவோ தூரம் கடந்துவந்துவிட்டேன். 2018 ஆரம்பம் முதல் தங்கள் கரங்கள் என் தோள்களை தட்டிக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. தங்களை பின்னுக்கு பின் பார்த்து பேசியது ஒவ்வொரு முறை எனக்கு வெவ்வேறு விதமான உள்ள எழுச்சியை தந்தது. தங்கள் வயதில் தங்கள் ஓட்டத்தைக் கண்டு என்னை மேலும் வேகமாக ஓடத் தூண்டிக் கொண்டேயிருக்கிறீர்கள்
.நீங்கள் சொல்வது போல் வாழ்வின் ஒரு சிறு பகடையாட்டம்தான் இந்த காதல் ஏன் பன்னிரண்டு ஏன் பூஜியம் என்ற தர்க்கம் தேவையில்லாத வீண் வேலை. அடுத்த அத்தியாயத்தில் இன்னும் சுவாரஸ்யமான இன்னும் கடினமான வேலைகள் நமக்கு காத்துக் கொண்டிருக்கிறது அதனை நோக்கியே பயணம் செய்வேன் முந்திய நினைவின் அலைகள் மட்டும் மிதமாக என்னோடு வீசிக்கொண்டே வருகிறது.
அன்பு
என்.
***
அன்புள்ள என்
அன்று ஈரோட்டில் நான் ஒரு கேள்விகேட்டேன். ஓர் எழுத்தாளராக எண்ணம் உள்ளதா? அதற்காக முழுமூச்சுடன் , கடைசித்துளி ரத்தம் வரை போராடுவீர்களா என்று. ஆம், அவ்வெண்ணம் உள்ளது என்றீர்கள். அதுதான் ஆண்மை. அதுதான் சரியான வழி
அது உங்கள் இலக்கு என்றால் வேறு அனைத்தும் விலகிச்செல்லட்டும். வெறிகொண்டு வாசியுங்கள். எழுதுங்கள். எழுந்துவருக
ஆறே மாதம். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் இவையெல்லாம் மிகமிகச் சாதாரணமானவை என்று தெரியும். திரும்பிப்பார்த்து சிரிப்பீர்கள்
பெரும் கனவுகளால் வாழ்வதே வாழ்க்கை. உறவுகள் அவை எவை என்றாலும் அக்கனவுக்கு முன் பொருட்டே அல்ல
ஜெ
***