பெண்களின் எழுத்து- தொடரும் விவாதம்

sel

பெண்ணியமும் பெண்களின் எழுத்தும்

அன்பு ஜெ ,

 எழுத்தாளர்களில் ஆண்பெண் பேதமின்மையைப் பற்றிய சில கருத்துக்களைத் தங்களது தளத்தினில் கண்டேன். இருபாலார்கும் உள்ள அனுபவங்கள் , புரிதல்களின் நிலைப்பாடுகள் வேறுபடும் போது  , அவர்களின் சொல்லாக்கங்களும் வேறுபடுகின்றனவே.

பெரிய எழுத்தாளர்களைப் பற்றின பேச்சில்லை இவை. சாதாரண குடும்பபெண்ணின் நிலைப்பாடுகள் பற்றியன.  பெண்னென்பவள் மாறுபடுகிறாள்.அவள் சராசரி பெண்களைப் போல நல்ல குடும்பதலைவி என்ற பட்டத்துடன் , குழந்தைகளைத் திறன் பட வளர்த்தல் , வீட்டை கவனமுடன் பராமரித்தல் ,பொழுது போக்கென கைப்பேசியில் பெரு நேரத்தை செலவிடல் , அதை விட மாற்ற முடியாதது தொலைக்காட்சியில் மூழ்கி விடுதல்.இதில் அவள் மருத்துவரோ அல்லது பெரிய நிறுவனத்தில் வேலைப் பார்பவராகவோ இருந்தால் மரியாதையும் மதிப்பும்  , அவளுடைய பெயருக்கு பின்னால் இணைக்கப்பட்ட தகுதிகள் எளிதில் அவருக்கு பெற்று கொடுத்து விடும்.

இவர்களைப் பற்றிய பேச்சும் இல்லை இது.இலக்கிய ஆர்வமுள்ள பெண்ணைப் பற்றியது.சராசரியான  வாழ்க்கை வாழ்பவளுக்கு , பொருளாதார பளுவும் இல்லாதவளுக்கே , பெரும் பொறுப்புகளெல்லாம் ஒரளவுக்கு  ஓய்ந்த பிறகு  , தன்முனைப்பின் ஊடாக , தன் மனதிற்கும் அறிவுக்கும் இயந்த ஒரு பொழுது போக்கு ‘இலக்கியம்’ என அமைந்தால் அவருக்கு நல்ஊழே எனக் கொள்ளலாம்.பெண்ணுக்குரிய சிறப்பான வாழ்க்கையறிதல்கள், மெய்த்தரிசனங்களை வாசகர்களாக எதிர்பார்க்கிறோம் என்ற தங்களுடைய வரிகள் ஆழ்ந்த பொருளுடையவை என தோன்றுகிறது.

இலக்கிய ஆர்வலராக ஒரு பெண்னென்பவள் தன் சுற்றத்தால் அதிக மதிப்புவடையவளாக கருதப்படுகிறாளா ? என்ற கேள்விக்கு பெரும் பிரயத்தனத்திற்கு பிறகே ஓரளவுக்குக்கென கொள்ளலாம்.அதுவும் ஆங்கில புலமையை விட தமிழுக்கு சற்றே குறைவென்றே நினைக்கிறேன். இதைப்பற்றி ஏற்கனவே தங்களுடன் பகிர்ந்ததாக ஞாபகம். தங்கள் தளத்தில் வெளியான என்னுடைய விமர்சன கடிதங்களை பெருமையுடன் இவர்களுடன் பகிர்ந்தபோது பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை சிலரைத் தவிர்த்து. இது பெண்னென்பதாலா? தமிழிலக்கியமென்பதாலா என்பது இன்றைய வரைக்குமே சிறு ஐயப்பாடு உண்டு.

எல்லாவற்றுக்கும் மேலாக ஏதோ விஷயம் இருக்கிறது இவர்களுக்கு  என்ற குறைந்த பட்ச மதிப்பையாவது இலக்கியம் பெற்றுக்கொடுத்து விடுகிறது. அதுவும் தங்களைப் போன்ற நல்ல படைப்பாளிகளின் எழுத்து , பெண் வாசகிக்கு அணியென , கவசமென திகழ்கிறது. தாங்கள் கூறியது போல ‘எழுத்தாளர்களின் ஆளுமை எழுத்தின் அழகியலை முடிவு செய்யும் முகமாக இவ்வேறுபாடு கூடுமெனின் நன்றே!

அன்புடன்,
செல்வி அ.
கடலூர்.

***

அன்புள்ள செல்வி,

நான் இந்த சிக்கல்களை எல்லாம் நுட்பமாகவும் முழுமையாகவும் அறிவேன். வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் ஓர் எழுத்தாளன் இந்த எளிமையான அன்றாடச் சிக்கல்களை அறியாதவராக இருக்க வாய்ப்பில்லை. நான் பேசிக்கொண்டிருப்பதெல்லாம் இதற்கு அப்பாலுள்ள பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே.

உண்மை, பெண்களுக்கு மகப்பேறும் குழந்தை வளர்ப்பும் ஒரு பெரிய பிரச்சினைதான். அவர்களின் நேரம், உணர்ச்சிகரமான ஈடுபாடு இரண்டையும் முழுமையாகவே எடுத்துக்கொள்ளும் ஒரு காலகட்டம் உண்டு.  அதைக் கடந்து வந்தே பெண்எழுத்தாளர்கள் எழுதவேண்டும்.

ஆனால் அதேபோன்ற பெருந்தடைகள் ஆண்களுக்கும் உண்டு. ஒன்று, ஒரு குறிப்பிட்ட வயதில் தனக்கான தொழில்துறையை தெரிவுசெய்து அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு நிலைகொள்வது. கணிசமானோர் இளம் வயதிலிருந்த  இலக்கிய ஆர்வம், அரசியல் ஈடுபாடுகளை இழந்து அந்த காலகட்டத்துடன் நின்றுவிடுகிறார்கள். அந்த மாயவாசலை கடந்து மறுபக்கம் செல்லும்போது முற்றிலும் பிறிதொருவராக ஆகிவிடுகிறார்கள்.  இலக்கியவாசகர்களாகவும் எழுத்தாளர்களாகவும் எஞ்சுபவர்கள் அந்தக்காலகட்டத்துடன் கடுமையாகப் போராடி, பலவற்றை இழந்து , மீண்டு வந்து தங்களை உருவாக்கிக் கொள்பவர்களே. இந்தியச் சூழலில் இறுதிவரைக்கும்கூட அவர்கள் தொழில் குடும்பம் என இருமுனைகளிலும் போராடிக்கொண்டேதான் இலக்கியப் படைப்புகளில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலான குடும்பச் சூழல்கள் இலக்கிய ஆர்வத்திற்கு எதிரானவை. பெரும்பாலான தொழிற்சூழல்களும் எதிரானவையே. நான் இருநிலைகளிலும் சாதகமான சூழல் கொண்டிருந்தேன். ஆனால் இந்த வசதி பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இல்லை.

இலக்கிய எழுத்துக்கு பெண்களுக்கு குடும்பத்தில் கௌரவம் உண்டா என்று கேட்டீர்கள். ஆண்களுக்கு மட்டும் என்ன கௌரவம்? வாசிக்கும் புத்தகங்களையே வீட்டுக்குக் கொண்டுசெல்ல முடியாத ஆண்களே இங்கே மிகுதி. அலுவலகத்தில் சூழலில் எங்கும் தங்களை இலக்கிய வாசிப்பாளனாக காட்டிக்கொள்ள முடியாது. அதைக்கடந்த ஒர் அந்தரங்கமான விசையால் மட்டுமே இங்கே இலக்கியம் எழுதி வாசிக்கப்படுகிறது.

நேரமில்லை, சூழல் அழுத்தம் என்பதெல்லாம் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. இலக்கிய ஆக்கம் சாதகமான சூழல்களில் உருவாகும் ஒரு கேளிக்கை அல்ல- அப்படி நினைப்பவர்கள் பாமரர்கள். இலக்கியம் அனைத்து தடைகளையும் மீறி முன்னெழும் ஓர் எழுச்சி. தடைகள் அதை மேலும் வல்லமை கொண்டதாக்குகின்றன. பெண்களுக்கு இலக்கியப்படைப்புக்குரிய வேகம் இருக்கும் என்றால் இத்தடைகள் அவர்களை மேலும் வீச்சுடன்தான் எழுதவைத்திருக்கும்.

இன்றைய நவீன வாழ்க்கையில் பெண்களுக்கு நேரமில்லை என்பதைப்போல் நம்பமுடியாத ஏதுமில்லை. கணிசமான பெண்கள் நாளுக்கு பலமணிநேரத்தை தொலைக்காட்சிக்கு முன் செலவழிக்கிறார்கள். முகநூலில் முழுநேரமும் இருந்துகொண்டிருப்பவர்கள் உண்டு. ஆனால் புத்தகங்களை வாசிப்பதைப்பற்றி கேட்டால் மட்டும் பெரும்பாலான பெண்கள் ‘எங்கேங்க நேரம்?’ என அலுத்துக்கொள்கிறார்கள்.  பெண்கள் கடைகளுக்கும் பிற இடங்களுக்கும் செல்வது பல மடங்கு பெருகியிருக்கிறது. ஓர் இலக்கியநிகழ்ச்சிக்கு என்றால் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே என்றாலும் வருவதில்லை. கேட்டால் பயணம் பண்ணமுடியாத குடும்பச்சூழல் என்று பதில். [மேலும் புத்திசாலித்தனமான பதில் அதெல்லாம் ஆண்களின் நிகழ்ச்சி என. சரி, அப்படியென்றால் பெண்களின் நிகழ்ச்சிகள் நடக்கின்றனவே செல்லவில்லையா என்று கேட்டால் பதில் இருக்காது] நேரடியாக தங்களை நுண்மதிப்பீடு செய்துகொண்டு ஆம், எனக்கு ஆர்வம் எழவில்லை என்று என்றைக்கு பதில் சொல்கிறார்களோ அன்றுதான் ஏன் ஆர்வம் எழுவதில்லை என்ற கேள்விநோக்கிச் செல்வார்கள்.

நம் சூழலில் பெண்களின் பிரச்சினை ஒன்றே ஒன்றுதான். இலக்கியம் கோரும் அதிதீவிரம் அவர்களிடம் இல்லை.  கவனக்குவிப்பு இல்லை. மலையாள இலக்கியப்பேச்சாளர் எம்.என்.விஜயன் சொல்வதுபோல இது ‘நிறையப் புல் தின்று மிகச்சிறிதளவு மட்டும் பால்கறக்கும் ஒரு பசு’. அதில் பல ஆண்டுகள் உச்சகட்ட உழைப்பை போடுவதற்கு ஒருவகையான பித்துக்குளித்தனமும் நம்பிக்கையும் தேவை. நம் சூழலில் உள்ள பெண்களுக்கு எப்போதுமிருக்கும் நடைமுறைநோக்கு அதை மாபெரும் வெட்டிவேலையாக எண்ணச் செய்கிறது.

நேரமில்லை என்கிறார்கள்.இங்கே ஒன்றுக்குமேற்பட்ட பட்டங்கள், முனைவர் பட்டங்கள் பெற்ற பெண்கள் எத்தனைபேர் என்று பாருங்கள். ஆண்களை விட பெண்களே பயனுறு கல்வியில் மிகத்தீவிரமாக முன்சென்றுகொண்டிருப்பது தெரியவரும். இன்று சிறுதொழில்கள் செய்பவர்களில் எத்தனை ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள். அதற்கெல்லாம் எவ்வளவு பெரிய உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை என எண்ணிப்பாருங்கள். அவர்களுக்கும் குடும்பமும் பிறவும் இருக்கின்றன. அவற்றைக் கடந்தே அவர்கள் வெல்கிறார்கள். அந்த அர்ப்பணிப்பு ஏன் இலக்கியத்திற்கு இத்தனைகோடி தமிழ்ப்பெண்களில் ஒருவரால் கூட அளிக்கப்படவில்லை என்பதே என் கேள்வி. அது அவர்களுக்கு ஒரு பொருட்டெனத் தெரியவில்லை, அவ்வளவுதான். அதைத்தவிர பிற வாதங்கள் அனைத்துமே மழுப்பல்கள்தான்.

இங்கே எழுதவரும் பெண்கள் பெரும்பாலும் அறிவார்ந்து தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்வதில்லை என்பது ஒரு கண்கூடான உண்மை. தமிழிலக்கியத்தின் மரபை உணருமளவுக்கு வாசிப்புள்ள பெண் எழுத்தாளர்கள் எத்தனை பேர்? கணிசமான ஆண் எழுத்தாளர்கள் பெயர்அடையாளம் தெரிகையிலேயே அந்த அடிப்படை வாசிப்புடன் வெளிப்படுகையில் வெறும் தன்வயக் குறிப்புகளுடன், வாசிப்பின்மையை மறைக்கும் ஒருவகையான அப்பாவி நடிப்புடன் ஏன் பெண்கள் வெளிப்படுகிறார்கள்?

இங்கே புத்தகங்களைப் பற்றிய குறிப்புகளை தோராயமாக எடுத்துப் பாருங்கள். எத்தனை பெண்கள் தாங்கள் வாசித்த நூல்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்? நூல்களை வாசித்து அவற்றை ஏதோ ஒருவகையில் தொகுத்துக்கொண்டு எதிர்வினை ஆற்றுவதே எழுத்தாளன் தனக்குரிய கருத்தியல் அடையாளத்தை , தனக்கேயான சிந்தனைமுறைமையை உருவாக்கிக்கொள்ளும் தொடக்கநிலைச் செயல்பாடு. அதைச்செய்யும் பெண்கள் தேடிதேடிப்பார்த்தாலும் கிடைப்பதில்லை.  ஆனால் எழுதவரும் ஆண்களில் பெரும்பாலானவர்கள் அதைத்தான் முதலில் செய்கிறார்கள். இந்த வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினால் அதை பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை என மூக்கைச் சிந்துவதிலுள்ள அற்பத்தனம்கூட அவர்களுக்கு உறைப்பதில்லை.

இலக்கியவாதியின் வாசிப்புதான் அவனுடைய அடித்தளம். ஒரு வயதில் வெறிகொண்டு அகலமாக வாசித்து, தனக்குரிய தளத்தைக் கண்டடைந்த பின் கூர்மைகொண்டு மேலும் வாசித்து, எப்போதும் தன்னைப் புதிப்பித்துக்கொண்டே இருப்பவனே நல்ல எழுத்தாளன் ஆகமுடியும். எழுத்தாளனுக்குரிய புறச்சூழல்கள் அனைத்தையும் வாசிப்பே அளிக்கிறது. பரந்துபட்ட பலதள வாசிப்பு. மருத்துவம், வரலாறு, தத்துவம், அரசியல், மதம் என விரியும் வாசிப்பிலிருந்தே புறவுலகை விரித்தெழுதும் ஆற்றலை எழுத்தாளன் அடைகிறான். குர்ரதுலைன் ஹைதரின் அக்னிநதி மட்டும் வாசியுங்கள், அதை எழுத எத்தனை அறிவார்ந்த உழைப்பு தேவைப்பட்டிருக்கும் என்று புரியும். சற்றேனும் தத்துவ ஆர்வமில்லாத எழுத்தாளன் நல்ல நாவலை எழுதிவிடமுடியாது. தமிழில் கிருத்திகாவை தவிர தத்துவ ஆர்வத்தை வெளிப்படுத்திய பெண்எழுத்தாளர் எவர்?

எழுதநேரமில்லை என்பதைப்போன்ற பொய்யும் வேறில்லை. உங்களுக்குத் தெரியுமா, தமிழில் ஆண் எழுத்தாளர்கள் எழுதிய அளவைவிட மும்மடங்கு எழுதிய பெண் எழுத்தாளர்களே மிகுதி.  லக்ஷ்மி, சிவசங்கரி, அனுராதா ரமணன், ரமணி சந்திரன், முத்துலட்சுமிராகவன் போன்றவர்கள் எழுதியவை பல்லாயிரம் பக்கங்கள். அந்த எழுத்தில் ஏன் தரமில்லை என்ற கேள்வியைத்தான் எழுப்பிக்கொள்கிறோம். அதை அடைவதற்கான ஆர்வமோ அதற்கான அர்ப்பணிப்போ இல்லை என்பதே அதற்கான பதில்.

அத்தகைய உழைப்பைக்கூட அளிக்கமுடியாத நிலையிலேயே கவிதை எழுதுகிறார்கள். அதுவும் தங்கள் அன்றாட வாழ்க்கையைப்பற்றி, தங்கள் அன்றாட மனச்சள்ளைகளைப் பற்றி. அந்த டைரிக்குறிப்புகளுக்கு அப்பால் அவர்கள் எழுதுவது அன்றாட அரசியல் சரிகள், அதையொட்டிய கொந்தளிப்புக்கள். பித்து இல்லாத கவிதை, மொழியைக் கடக்காத கவிதை எளிய நாட்குறிப்பன்றி வேறல்ல. எழுதத்தெரியவில்லை, சோம்பல் என்பதனால்தான் இங்கே கவிதைகள் எழுதிக்குவிக்கப்படுகின்றன. வெறும் குப்பைப்புயல் இது. ஆனால் இதைக்கொண்டே உலகம் முழுக்க செல்லமுடியும், சர்வதேச மேடைகளில் நிற்கமுடியும் என மக்கள்தொடர்புத்திறன் கொண்ட பெண் எழுத்தாளர்கள் இங்கே நிறுவிக்காட்டிவிட்டனர்.

இலக்கியம் கோரும் தீவிரத்தை உழைப்பை அளிக்காமல்  எளிமையாக அடையாளங்களை எய்திவிடலாம் என்ற நம்பிக்கையை தமிழில் இத்தலைமுறையில் சில பெண்கள் பிறருக்கு அளித்துவிட்டார்கள். அவர்கள் எவ்வகையிலும் பொருட்படுத்த முடியாத சில அந்தரங்கக் குறிப்புகள், எளிய பெண்ணிலைக் கருத்துக்களை எழுதி ‘தமிழில் பெண்ணெழுத்தின் அலை’ என்ற மாயையை உருவாக்கினர். இன்று பத்தாண்டுகளுக்குப்பின் சொல்லும்படி ஒரு படைப்புகூட எஞ்சவில்லை. அந்த முன்னுதாரணங்கள் உருவாக்கிய தடம் பின்னால் எழுபவர்களுக்கு வசதியானதாக உள்ளது. வாசிக்கவேண்டியதில்லை, அர்ப்பணிக்கவேண்டியதில்லை. ’அவளுக்கு நான் என்ன குறைச்சல்’ என்னும் வேகம் இருந்தாலே போதும்.

ஒரு கட்டத்தில் இப்பெண் எழுத்தாளர்கள் டைரிக்குறிப்புகளில் இருந்து மேலே சென்று எளிய அரசியல் கொந்தளிப்புகளை நரம்புச்சிக்கலுக்குரிய உச்சகட்ட உணர்ச்சிகளுடன் முன்வைக்க ஆரம்பிக்கிறார்கள். வசைபாடுவதும் கசப்பை உமிழ்வதும் விசித்திரமான அரைவேக்காட்டுக் கருத்துக்களை  கக்குவதுமாகச்  செயலாற்றுகிறார்கள். அதற்கு ’அற்புதம் தோழி, பின்னிட்டீங்க போங்க’ வகை எதிர்வினைகளுடன் அசட்டு ஆண்களின் ஒரு சுற்றம். இந்தக்கீழ்மையை நோக்கிச் செல்லாமல் கலை என்னும் எய்த எய்த அகலும் மாயப்பெருந்தவத்தை நோக்கிச் சென்றாகவேண்டும் நம்மில் எழும் அடுத்த கட்ட பெண் எழுத்தாளர்கள். தன் தலையை பாறையில் முட்டி உடைக்கும் வெறியுடன் எழுபவர்களுக்குரியது இலக்கியம். சொகுசான, ஓய்வுநேர பணி அல்ல அது.

இந்த விவாதம் அந்த மாயையை உடைப்பதற்காகவே. இனி எழுந்துவரும் அடுத்த தலைமுறையின் ஆற்றல்மிக்க பெண்களை நோக்கி தமிழ் வாசகன் எதிர்பார்ப்புடன் நோக்குவதற்கு அது இன்றியமையாதது. அதைச் செய்யும்போது இந்த கும்பல் வழக்கமான கண்கசக்கல், எச்சரிக்கை, மிரட்டல் என கிளம்பி வருகிறது. நான் எந்த அமைப்புக்கும் விசுவாசமானவன் அல்ல. என் அமைப்புகளை நான் உருவாக்குவேன். எந்த முத்திரைக்கும் அப்பால் செல்லும் ஆற்றல்கொண்டவை என் படைப்புகள். ஆகவே எழுந்துநின்று அடுத்த தலைமுறை பெண்களிடம் இதைச் சொல்கிறேன். மெய்யான இலக்கியத்திற்குக் குறுக்குவழிகள் இல்லை. எழுந்து வந்து வென்றடக்குக.

ஜெ

நாஞ்சில்நாடன் பட்டியல்

பொதுவெளியில் பெண்கள்…

பெண்களின் எழுத்து…

பெண்ணிய வசை

பெண்களின் அறிக்கை

பெண்வெறுப்பும் அம்பையும்- ஹிந்துவுக்கு எழுதப்பட்ட கடிதம்

அம்பை

அம்பையின் ஊடக தந்திரம்

பெண் எழுத்தாளர்கள் – மனுஷ்யபுத்திரன்

பெண்கள்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைமாத்து
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 68