பெண்ணியமும் பெண்களின் எழுத்தும்
ஜெ
இந்த ஒட்டுமொத்த விவாதத்திலும் பெண்கள் பலருக்குப் புரியாத விசயம் ஒன்றுதான். பெண்ணியம் என்பது ஓர் எழுத்தாளரின் ஒட்டுமொத்தமான புறப்பார்வையாக இருக்க முடியாது. அது ஒரு ஐடியாலஜி. அவ்வாறான எல்லா கொள்கைகளுக்கும் ஓர் எல்லை உள்ளது. அது பொதுவானது. புறம் சார்ந்தது. அதை எங்கிருந்து வேண்டுமென்றாலும் பெற முடியும். நேஷனலிசம், என்விரான்மெண்டலிட்ம், மார்க்ஸிசம் என்பவை போன்று ஒரு objective idea தான் பெண்ணியமும். அதற்குச் சிந்தனையில் பெரிய மதிப்பு உண்டு. உலகத்தை நோக்கிய பார்வையையே மாற்றியமைத்தவை அவை. அவை இல்லாமல் நவீன சிந்தனையே இல்லை.
ஆனால் இலக்கியத்தில் அவை ஒரு பொதுவான புறப்பார்வையை மட்டுமே அளிக்கமுடியும். அவற்றை ஓர் எழுத்தாளர் தன்னுடைய private quest ல் ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதை வைத்து வாழ்க்கையையும் மனித மனத்தையும் பண்பாட்டின் நுட்பமான ஆழங்களையும் வரலாற்றையும் ஆராய முடியும். ஆனால் அந்த quest மிகவும் அந்தரங்கமானது. அதை அறியத்தான் நாம் ஒரு எழுத்தாளரை வாசிக்கிறோம். அந்த private truth இல்லாவிட்டால் அந்த எழுத்தாளரின் சீற்றம் துக்கம் எதுக்குமே மதிப்பு ஏதும் இல்லை. ஒரு பொது உண்மையை வாசிக்க நாம் கொள்கையாளர்களையே வாசிக்கலாமே. அவர்கள் மிகச்சிறப்பாக இவற்றைச் சொன்னபின் அமெச்சூர் ஆக இவர்கள் திரும்பிச் சொல்வதை எதற்கு வாசிக்கவேண்டும்?
இந்தபிரச்சினைதான் நீங்கள் வேறுவகையில் சொல்லியிருக்கிறீர்கள். Private quest கொண்ட ஒர் எழுத்தாளர் தன்னை இப்படி ஒரு ist என அறிவித்துக்கொள்ள மாட்டார். இப்படி சக ist களின் வரிசையில் சென்று நிற்கவும் மாட்டார். ஒட்டு மொத்தமான கும்பல் அடையாளத்துடன் நின்று கருத்துச் சொல்லமாட்டார். “நாங்களெல்லாம்…” என்று சாதி மதம் இனம் போன்ற அடையாளங்களுடன் எழுத்தாளர் பேசும்போதே அவர்மேல் நம்பிக்கை போய் விடுகிறது.
ஞானசம்பந்தன்
இலக்கியச் சச்சரவுகளுக்குள் போக விரும்பாத நிலை அல்லது சோம்பலாக உணர்வதால் சுருக்கமாகக் குறிப்பு வரைந்துவிடுகிறேன்.
இங்குள்ள பெண் எழுத்தாளர்களில் மிகச்சிலரைத் தவிர வேறு யாருக்கும் மொழிநடை கைகூடுவதில்லை. தங்கள் படைப்புகள் அனைத்தும் வெறும் ஐந்நூறு சொற்களுக்குள் கிண்டப்படுவதாகவே இருக்கிறது. இதே பிரச்சினை பெரும்பாலான ஆண் எழுத்தாளர்களுக்கும் இருக்கிறது. எனினும் ஆண் எழுத்தாளர்கள் சுமாரெனில் எப்படி எங்களைச் சுமாரென்று சொல்லலாம் என மொத்த கூட்டமைப்பின் பிரதிநிதியாக நன்றாக எழுதும் எழுத்தாளர்களோ ஏன் சுமாருக்கும் கீழே எழுதுபவர்களோ வந்து நிற்க மாட்டார்கள். ஆனால் பெண் எழுத்தாளர்கள் இத்தகைய தருணங்களில் சட்டென்று தன்னைச் சொல்கிறார்களோ என்றெண்ணி அல்லது தன்னினத்திற்காகப் பேசுகிறேன் என்று உணர்ச்சிவசப்பட்டு ஒருநொடியில் சராசரி பெண்ணாகி விடுகின்றனர்.
சாதாரணப் பெண்ணாக இருக்கும்பட்சத்தில் பெண்ணென்றும் பாராமல், பெண்ணுரிமை என்றெல்லாம் பேசிக்கொள்வதில் தவறில்லை. ஆனால் ஒரு படைப்பாளியாக ஒரு கலையில் வல்லமை பொருந்தியவராக அறியப்படும்போது எதிர்கருத்து வந்தால் பாலினம் என்கிற போர்வைக்குள் ஒளியக்கூடாது. போட்டி மனப்பான்மை என்பது பெண் எழுத்தாளர்களுக்குள்ளேயே முடிந்துவிடக்கூடாது. ஆனால் இங்கு பெண் எழுத்தாளர்களுக்குள் போட்டியும் கிடையாது. மாறி மாறி பாராட்டிக் கொள்வதை ஆரோக்கியமான போக்கு என்று கருதுகின்றோம். உண்மையில் அது எழுதப்பழகும் குழந்தை சக குழந்தையிடம் “என் அ எப்படி இருக்கு? உன் ‘அ’வும் அழகா இருக்கு” என்பது போன்றதாகும். ஆண் எழுத்தாளரின் படைப்பின்மீது தைரியமாக வைக்கப்படும் விமர்சனத்தைச் சக பெண் எழுத்தாளர் மீது வைக்க இயலாது என்பதே இங்கு நிதர்சனமான உண்மை.
ஆணோ பெண்ணோ உங்களுக்கென மொழி வசப்பட்டால் யார் விமர்சித்தாலும் மறுவினை ஆற்றயியலாத அளவிற்கு எழுதி அவர் முகத்தில் வீசிட இயலும். பெண் எழுத்தாளர்கள் அதற்கென மெனக்கெடல் வேண்டும். எனவே சிறப்பாக எழுதும் பெண் எழுத்தாளர்கள் இதுபோன்ற பொதுவான பெண் எழுத்து சார்ந்த சீண்டல்களைப் புறந்தள்ளுதல் நலம்.
வெண்பா கீதாயன்
சார்
வணக்கம். நீங்கள் குறிப்பிட்டிருந்த திரு.இளங்கோகிருஷ்ணனின் பதிவில் அவர் சொன்ன கருத்தை ஆமோதித்து நானும் பின்னுாட்டமிட்டிருந்தேன். கூடவே எனது கருத்தாக, // பெண் எழுத வருவதின் சிக்கல்கள், அதன் பிரச்சனைகள் எல்லாமே பொருட்படுத்தப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை// என்ற அவரின் கருத்துக்கு, இம்மாதிரியான பரிதாபங்கள் தேவையில்லை என்று தோன்றுகிறது. படைப்புகளை பால் பேதமற்று விமர்சியுங்கள். அதன் நிறைகுறைகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம் என்றும் கூறியிருந்தேன்.
பொதுவாகவே, பெண் என்பதை முன்னிறுத்தியே காரியங்களை சாதித்துக் கொள்வதில் எனக்கு எப்போதுமே சம்மதமில்லை. அதே சமயம் பெண் என்பதாலேயே நிராகரிக்கப்பட்ட தருணங்களும் (இலக்கியம் உட்பட) எனக்கு வாய்க்கவே செய்கிறது. அதையும் இலக்கியத்தின் வழியேதான் கடக்க வேண்டியிருக்கிறது.
நீங்கள் முன்பு கூறிய கருத்துகளையே இப்போதும் கூறியுள்ளீர்கள். என்னை பொறுத்தவரை தங்களின் கருத்து ஏற்புடையதே. (அந்த நுாறில் ஒன்று நானில்லை)
அன்புடன்
கலைச்செல்வி.