அன்புள்ள ஜெ..
இணைய எழுத்து குறித்து உங்கள் கட்டுரைகளை ஒட்டி இன்னொரு விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விழைகிறேன்.
சில்லறையா சில்லரையா என சந்தேகம் வந்தால் அந்த காலத்தில் எல்லாம் , பேப்பரில் அல்லது வெகு ஜன பத்திரிக்கையில் எப்படி எழுதுகிறார்கள் என பார்த்து உறுதி செய்து கொள்வார்கள்… அந்த அளவுக்கு பத்திரிக்கைகளின் நம்பகத்தன்மை இருந்தது… ப்ரூஃப் ரீடிங் என்பது மொழியாளுமை கொண்டவர்கள் பொறுப்பில் இருந்தது…
நீங்கள் பத்திரிக்கைகள் , நாளிதழ்கள் படிப்பதில்லை என கருதுகிறேன். ஒரு சோதனைக்காக , ராண்டம் சாம்ப்ளிங் முறையில் ஏதாவது பத்திரிக்கையை எடுத்துப் பாருங்கள்.. அதிர்ச்சி அடைவீர்கள்..
இலக்கணப்பிழைகள் , கவனப்பிழைகள் , எழுத்துப் பிழைகள் என ஒரு வித அலட்சியத்துடன் இவர்கள் செயல்படுவது புரியும். வெகு ஜன இதழ்களின் வாசக எண்ணீக்கை குறைந்து விட்டதால் , இவர்களுக்கு இது போதும் என்ற மன நிலையில் பத்திரிக்கைகள் செயல்படுவது போல தோன்றுகிறது..
வேறு வேலை எதற்கும் தகுதி இல்லாதவர்கள் , போதிய மொழி அறிவு அற்றவர்களின் சரணாலயமாக பத்திரிக்கை துறை மாறி விட்டதோ என்ற சந்தேகம் வருகிறது..
இணைய வருகைதான் இதற்கு காரணமா என தெரியவில்லை… முக நூலில் இரண்டு வரி எழுதி சில லைக்குகள் பெற்று விட்டால் , தானும் ஓர் எழுத்தாளன் தானும் ஓர் இலக்கியவாதி என்ற தன்னம்பிககையை பெற்று , அசட்டுத்தனமாக செயல்படும் இணைய மொண்ணைத்தனம் இதழியலில் பிரதிபலிப்பது போல தோன்றுகிறது…
இதெல்லாம் அதீத கற்பனை என தோன்றினாலும் இதழியலின் வீழ்ச்சி உண்மைதான் என்றும் தோன்றுகிறது
உதாரணமாக வெண் முரசு என்ற உலக சாதனை புத்தகம் என்ற அளவுக்காவது ஒரு வெகு ஜன கட்டுரை எழுதும் இதழியல் திறமையை பார்க்க முடியாதது ஏமாற்றம்தான்..
பத்திரிக்கையாளர்களுக்கு இலக்கியம் தெரிந்திருக்க வேண்டும் என்பது என் வாதம் அல்ல… ஒரு பரபரப்பு செய்தி என்ற அளவுக்காவது எழுத தெரிந்திருக்க வேண்டும். என நினைக்கிறேன்
அன்புடன்
பிச்சைக்காரன்
அன்புள்ள பிச்சைக்காரன்,
உண்மை என்பதை இன்றைய நாளிதழ்களை தொடர்ச்சியாக வாசிக்கும் எவரும் உணர முடியும். உண்மையில் இன்று ஒப்புநோக்க பிழையில்லாமல், சீரான மொழிநடையுடன் வெளிவந்துகொண்டிருக்கும் நாளிதழ் என்றால் தினத்தந்திதான். மிகையான துதிபாடல்கள் இல்லாமல் வசைபாடாமல் நிதானமான நடைகொண்டிருப்பதும் அது மட்டுமே. மற்ற நாளிதழ்கள் கிட்டத்தட்ட துண்டுப்பிரசுரங்களின் தரத்தை அடைந்துள்ளன.
என்ன காரணம் என்றால் இன்று அச்சிதழ்கள் பெரும் சரிவில் இருக்கின்றன. புலனாய்விதழ்கள் போன்றவை மூடப்படும் நிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. ஆகவே முறையான ஊழியர்களை அகற்றிவிட்டு குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பகுதிநேரப் பணியாளர்களை நியமிக்கிறார்கள். வலைப்பூக்களில் எழுதும் நபர்களை பத்திரிகைகளில் பணியாற்ற அழைக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு வம்புகளை எழுதுவதில் பயிற்சி இருக்கிறது. அது வாசகர்களில் ஒருசாராருக்குப் பிடித்துமிருக்கிறது. ஆனால் இதழியலின் பொறுப்பு என்ன என அவர்களுக்குத் தெரியாது. அறிவார்ந்த நேர்மை கிடையாது. அவர்களை வழிநடத்துவதற்கும் எவருமில்லை. இது பத்திரிகைகள் அவற்றுக்கிருந்த முதன்மையான இடத்தை இழந்து பொருளியல்சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பதன் அடையாளம் மட்டுமே
அதோடு இன்னொன்றும் உள்ளது. அதை தொடர்ச்சியறுதல் எனலாம். முன்பு ஒர் இதழில் வேலைக்குச் செல்பவர் மூத்தவர்களிடம் பயிற்சி பெறுவார். மூத்தவர்கள் அனுபவமும் அதிலிருந்து பெற்ற அறிதல்களும் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் மூத்தவர்களிடமிருந்து பெற்ற ஒரு நடைமுறை ஒழுங்கை, தரக்கட்டுப்பாட்டை தங்கள் கீழே இருப்பவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்கள். அதாவது இதழியலில் ஒரு குருகுல முறைமை இருந்தது. தினமணி ஆசிரியர் சம்பந்தம் அவர்கள் எத்தனை கறாரான ஆசிரியராக அமைந்து கற்பித்தார் என்பதை நான் கண்டிருக்கிறேன். ஏ.என்.சிவராமன் போன்றவர்கள் எப்படி கண்டிப்பான ஆசிரியர்களாக அமைந்தார்கள் என்று அவர் சொல்லி அறிந்திருக்கிறேன்.
ஆனால் இன்று திடீரென்று அப்படி ஒரு முன்தொடர்ச்சி தேவையில்லாமல் ஆகிவிட்டிருக்கிறது. எவரும் எங்கும் நுழைந்து எதையும் எழுதலாம். இந்த கட்டற்ற பெருக்கு நவீன மின்னூடகத்தால் உருவானது. இந்த மின்னூடகவெளி, சமூக ஊடகவெளி எவரும் எதையும் எழுதலாமென்று ஆக்கிவிட்டது. கருத்துக்களில் கட்டுப்பாடு இல்லை. இலக்கண வரையறைகள் இல்லை. இங்கிருந்து சென்று அச்சிதழ்களையும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது அந்த ‘சுதந்திர அலை’. இன்று அச்சிதழ்கள் தனித்தன்மைகளை இழந்து சமூக ஊடகங்களின் நீட்சியாக தங்களை மாற்றியமைத்துக்கொண்டிருக்கின்றன
இந்த தொடர்ச்சியறுதலை ஒரு குறையாகச் சொல்லவில்லை. இதற்கு பல சாதகமான அம்சங்களும் இருக்கக் கூடும். இதழியல் ஆய்வாளர்கள்தான் அதைச் சொல்லவேண்டும். இந்த அம்சம் எனக்கு தென்படுகிறது, அவ்வளவுதான்
ஜெ