பெண்ணியமும் பெண்களின் எழுத்தும்

illa
இளங்கோ கிருஷ்ணன்

 

நாஞ்சில்நாடன் பட்டியல்

பொதுவெளியில் பெண்கள்…

பெண்களின் எழுத்து…

பெண்ணிய வசை

பெண்களின் அறிக்கை

பெண்வெறுப்பும் அம்பையும்- ஹிந்துவுக்கு எழுதப்பட்ட கடிதம்

அம்பை

அம்பையின் ஊடக தந்திரம்

ஜெ

 

இளங்கோ கிருஷ்ணன் முகநூலில் இவ்வாறு எழுதியிருந்தார்.

 

ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் என்று பாகுபடுத்துவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை. எழுத்துதான் இருக்கிறது அதில் ஆண் பெண் பேதம் இல்லை.

 

நன்றாக எழுதுகிறார் என்று ஒருவர் இன்னொருவரை ஏற்பதுகூட ஒருவகை அந்தரங்கமான வாசிப்பு மட்டுமே. கூட்டு நனவிலி என்று ஒரு விஷயம் உள்ளது. அதன் அடிப்படையிலேயே சிலர் மிக நல்ல எழுத்தாளர்களாய்ப் பெரும்பாலானவர்களால் கொண்டாடப்படுகிறார்கள். அதிலுமேகூட ஆண் பெண் பாகுபாடு எல்லாம் திட்டமிட்டு இருப்பது இல்லை.

 

எத்தனையோ ஆண்கள் நன்றாக எழுதாதவர்களாக சுமாராக எழுதுபவர்களாகவே இருக்கும்போது பெண்கள் சுமாராக எழுதினால் மட்டும் பால் பாகுபாடு எங்கிருந்து வருகிறது … அதை மட்டும் ஏன் சாடுகிறீர்கள் கிண்டல் செய்கிறீர்கள் என்று பெருந்தேவி கேட்கிறார். அதை ஆணாதிக்கத்தோடு அவர் இணைத்து யோசிக்கிறார். என்னால் அதை வெறும் ஆணாதிக்கமாக மட்டுமே பார்க்க முடியவில்லை.

 

சுமாராக, அரைவேக்காடாக எழுதும் எத்தனை ஆண்களை இந்த சமூகம் தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கிறது. (சமூகம் என்பது இலக்கிய சூழல்) அது பெரும்பாலும் இல்லை அல்லது அது மிகவும் குறைவு.

 

அதுவே பெண்கள் விஷயத்தில் அப்படியா நடக்கிறது. இன்றைய சூழலில் ஒரு பெண் கைக்கு வந்ததை எழுதி இருக்கும் பதிப்பு சாத்தியங்களைக் கொண்டு ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டால் சாகித்திய அகாடமி வரை சென்றுவிட முடிகிறது. இந்த உழைப்பின்மைக்கான அங்கீகாரத்தைத்தான் சிலர் கேள்வி கேட்கிறார்கள்.

 

பெண்களின் எழுத்தை ஆண்கள் கிண்டல் அடிப்பதிலும் கேள்வி கேட்பதிலும் பால் பாகுபாடு இருக்கிறதா என்றால் உள்ளார்ந்த அளவில் சிறிது உள்ளதுதான். ஆனால், அந்த விமர்சனம் அல்லது கிண்டல் மொத்தமும் அவள் பெண் என்பதாலயே எழுகிறது. அது முழுக்க ஆணாதிக்கம் என்பதைப் போன்ற சித்திரத்தை உருவாக்க நினைக்கிறார்கள் சிலர்.

 

பெண்ணியம் என்ற அறமார்ந்த அடையாள அரசியலின் பின் ஏன் சிலரின் உழைப்பின்மையை, அறியாமையை ஒளிக்கிறீர்கள்?பெண் எனும் அடையாள அரசியலின் சிக்கல்கள் நிச்சயம் விவாதிக்கபட வேண்டியவை. பெண் எழுத வருவதின் சிக்கல்கள், அதன் பிரச்சனைகள் எல்லாமே பொருட்படுத்தப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தரமற்றதை தரமற்றது என்று ஒப்புக்கொள்வதில் என்ன சிக்கல். அதை நீ சொல்லாதே நாங்கதான் சொல்வோம் நீ ஆண் என்று சொல்வதிலும் என் கட்சிக்காரனை நான் விட்டுத் தர மாட்டேன். நீ விமர்சனம் வைக்காதே நாங்க வைச்சிக்கிறோம் என்பதிலும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

 

சில சமயங்களில் நான் மிகவும் மதிக்கும் பெண் படைப்பாளிகள்கூட அவுட் ஆஃப் த பாக்ஸ் யோசிக்க மறுக்கிறார்களோ என்று தோன்றும். ஆண் என்பதால் நமக்கு அது பொருட்படுத்தத் தோன்றுகிறது. அவர்களுக்கு அது தோன்றுவது இல்லையோ என்று நினைப்பேன். ஆணாதிக்கவாதி என்று சாடினால் சாடிக்கொள்ளுங்கள் பால் சார்ந்த கரிசனங்களை படைப்பாளிகளுக்குத் தருவதில் எனக்கு உடன்பாடிலை. புரிந்துகொள்வது வேறு. புரியவே செய்கிறேன் பெண்களின் பாடுகளை… ஆனால், ஒப்புக்கொள்ள மனமில்லை… நன்றாக எழுதினால் யாராய் இருந்தாலும் ஒப்புக்கொள்வதில் எந்த மனத் தடையும் இல்லை. அதில் எந்த அரசியலும் என்னளவில் இல்லை. 

 

இதை ஒட்டி கவிஞர் பெருந்தேவி போன்றவர்கள் கடுமையான எதிர்வினைகளை ஆற்றியிருந்தார்கள். இந்த விவாதம் ஏற்கனவே நீங்கள் சொல்லிய ஒரு கருத்தின் இன்னொரு வடிவம் போலிருக்கிறது என்றும் குற்றச்சாட்டுகள் வந்தன. உங்கள் கவனத்துக்கு…

 

ஆர்.

 

அன்புள்ள ஆர்,

 

என்னுடைய முகநூல் ஒற்றர் நீங்கள் என்ற பெயர் ஏற்படாமல் தடுக்க பெயரை நானே தவிர்க்கிறேன்.

 

நான் சொன்ன கருத்தும் ஏறத்தாழ இதுதான். எழுத்துக்கு ஆண்பெண் சலுகைகள் இல்லை. எழுத்தாளரின் ஆளுமை எழுத்தின் அழகியலை முடிவுசெய்யும் கூறுகளில் ஒன்று. ஆகவே நாம்  எழுத்தாளர் ஆணா பெண்ணா என்று பார்க்கிறோம். பெண்ணுக்குரிய சிறப்பான வாழ்க்கையறிதல்கள், மெய்த்தரிசனங்களை வாசகர்களாக எதிர்பார்க்கிறோம். சிலவற்றை ஆசிரியர் பெண் என்பதிலிருந்து புரிந்துகொள்கிறோம். ஆஷாபூர்ணா தேவி பெண் என்பது பிரதமபிரதிசுருதி [முதல் எதிர்க்குரல்- தமிழில்] புரிந்துகொள்வதற்கு மிக உதவியானது. இதற்கு அப்பால் ஆசிரியர் பெண் என்பது எவ்வகையிலும் எழுத்திற்கு பொருட்டு அல்ல

 

ஆனால் தமிழ்ச்சூழலில் பெண் எழுத்தாளர்களின் இடம் மதிப்பிடப்படும்போது ‘அய்யோ பாவம், இப்பதான் எழுத வந்திருக்காங்க பெண்கள்’ என்ற பாவனை எப்போதும் இருந்தது. பெண்குரல்களாக முன்னிறுத்தப்பட்ட பல எழுத்தாளர்கள் பெண் என்பதனால் மட்டுமே அந்தக் கவனத்தைப் பெற்றார்கள். அவர்களும் அதை திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டார்கள். பெண் எழுத்தாளர்கள் மீதான விமர்சனமாக அல்ல, இப்படி பெண் என்பதனால் பொருட்படுத்தும்படி எதையும் எழுதாதவர்கள் முன்னிறுத்தப்படுவதையே நான் விமர்சித்தேன். அது முதன்மையாக அவ்வாறு முன்னிறுத்தும் எழுத்தாளர்கள் மீதான விமர்சனம்தான்.

 

இந்தச் சலுகைகள் பெற்ற பெண் எழுத்தாளர்கள், பெண் கவிஞர்கள் எவர் எவர் என அனைவருக்கும் தெரியும். நேரடியாகவே சொல்கிறேனே, எழுத்தாளர் பிரபஞ்சன் போன்றவர்கள் பல இதழ்களில் விதந்தோதி புளகாங்கிதம் அடைந்த பெண் எழுத்தாளர்களை எழுத்து என்பதற்காக தமிழின் சீரிய எழுத்துக்களின் வாசகன் ஒரு பொருட்டாக கருதுவானா என்ன? கருதவும் இல்லை. அது பிரபஞ்சனின் பலவீனம் என்றே தமிழ் வாசகன் கடந்துசென்றான். இந்த விமர்சனம் ஏன் வருகிறது? எந்த ஒரு பெண் எழுத்தாளரின் எந்த ஒரு எழுத்தையும் எந்தக் கோணத்திலேனும் விமர்சனம் செய்துபாருங்கள், நீங்கள் ஆணாதிக்கவாதி என்ற பெயர் உடனே எதிர்வினையாக வந்துசேரும்.

 

நான் சொன்ன கருத்துக்கு பெண்கள் எழுதிய எல்லா எதிர்வினைகளுமே ‘ஒட்டுமொத்த’ பெண்களும் எழுதக்கூடாது என்றும் எழுதுவது நன்றாக இல்லை என்றும் நான் சொல்கிறேன் என திரித்துக்கொண்டு அதற்கு ஆக்ரோஷமாக எதிர்வினை ஆற்றுவதாகவே இருந்தது. பரவலாகப் புகழப்பெறும் பெண்களின் எழுத்தின் தரம் பற்றி நான் சொன்ன அனைத்துமே பெண்களின் ஒழுக்கம் பற்றி நான் குறைசொல்வதாக திரித்து அதை ஆங்கில ஊடகங்கள் வழியாக  ‘உலகமெங்கும்’ கொண்டுசென்றார்கள். ஆம் ‘உலகம் எங்கும்’. பல சர்வதேச அரங்குகளில் தமிழில் பெண்கள் எழுதுவது கொலைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது என மூக்குச் சிந்தி என்னுடைய கருத்தை திரித்து முன்வைத்து உச் உச் உச் களைப்பெற்றுக்கொண்டார்கள். அந்த விவாதத்தில் பெண்கள் நடந்துகொண்ட கும்பல்வழிமுறை தமிழில் எழுதும் அனைவருக்கும் விடப்பட்ட உக்கிரமான எச்சரிக்கை. பெரும்பாலான மூத்த எழுத்தாளர்கள் பெண் எழுத்துக்களைப் பற்றி வாயே திறக்காமலிருப்பதும் சொன்னால் பாராட்டி மட்டுமே சொல்வதும் இவர்கள் சேர்ந்து உருவாக்கிய அந்த சேற்றுத்தாக்குதலுக்குப்பின்னர்தான்.

 

எனது அந்த கருத்து ஓரு விமர்சன எதிர்வினை. அதை கடுமையாக மறுப்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அது கொஞ்சம் அத்துமீறி அவன் இவன் தரத்துக்குச் சென்றதும் இலக்கியத்தில் இயல்பானதே என்பதுதான் என் எண்ணம். இன்னும் கொஞ்சம் கீழ்த்தரமாகத் திட்டியிருந்தாலும் எனக்கு ஒன்றும் பிரச்சினை இருந்திருக்காது என  சென்ற முப்பதாண்டுகளில் என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். எனக்குக் கசப்பூட்டியது ‘பெண் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை’ என்ற பேரில் வெளிவந்த ஒரு ‘எச்சரிக்கை அறிவிப்பு’ .இந்த அரைவேக்காடுகளைப் பொருட்படுத்தவே கூடாது என்னும் கசப்பையே அது உருவாக்கியது. கிட்டத்தட்ட நூறு பெண்கள். சமையல்குறிப்புகள் உட்பட எதையாவது எழுதியவர்கள், எழுத முயன்றவர்கள், எழுதியபோது அந்தப்பக்கமாக கடந்துசென்றவர்கள் என அத்தனைபேரும் கையெழுத்துபோட்டது. இந்த தகுதியுணரா வரிசையைத்தான் எந்த எழுத்தாளனும் உடனே நிராகரிப்பான். அதில் இணையவே உளம்கூசுவான். அந்த நூற்றில் ஒருவராக நின்றிருப்பதை விட வேறெதுவும் பெரிய அவமரியாதை அல்ல என எண்ணுவான்

 

நான் இவர்களைப்பற்றிச் சொன்ன அனைத்துக்கும் அப்பட்டமான சான்று அந்த அறிக்கையேதான். எந்த இலக்கிய வாசிப்பும் தங்களுக்கில்லை, எந்த இலக்கியமதிப்பீட்டின் அடிப்படையிலும் தாங்கள் செயல்படவில்லை, பெண்களுக்குச் சமூகம் அளிக்கவேண்டிய இடம் என்ற அளவிலேயே இலக்கிய அங்கீகாரத்தைக் கோருகிறோம் என்றுதான் அந்த அறிக்கை கோருகிறது. அந்தக் கருத்துக்கு எழுந்திருக்கவேண்டிய சரியான எதிர்வினை என்பது இன்று எழுதும் பெண்களில் சிறந்த சிலரை முன்வைத்து அவர்களின் கலைத்திறனை, மெய்வெளிப்பாட்டை விளக்கி எழுதப்படும் சில கட்டுரைகள். அவை வாசகனில் உருவாக்கும் சாதகமான எண்ணமே அக்குற்றச்சாட்டை அழிப்பது. மாறாக ‘நாங்கள் இத்தனைபேர் இருக்கிறோம்’ என ஒரு பெரிய பட்டியல். ‘எங்கள் மேல் விமர்சனம்  சொல்பவர் ஆணாதிக்கவெறியர், அவரைப் புறக்கணிப்போம்’ என்று ஒரு மிரட்டல். எழுத்தாளர்கள் செய்யும் வேலையா இது? அதோடு அந்த அறிக்கையின் மொழி. கடவுளே! மார்க்ஸில் இருந்து தொடங்கி மொக்கையினும் மொக்கையாக ஒரு கொள்கைப்பிரகடனம். அப்போது எவரோ எழுதியிருந்தார்கள், ஜெயமோகனிடமே கேட்டிருக்கலாம், குறைந்தபட்சம் நல்ல மொழியில் அதை எழுதி அளித்திருப்பார் என.  மெய்யாகவே எனக்கே அப்படித்தோன்றியது

 

நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் கேட்டார் “அந்த நூறுபேர் பட்டியலில் இலக்கியத் தகுதி கொண்ட எழுத்தாளர்கள் உண்டா ?” என்று.  “ஆம், நாலைந்துபேர் இலக்கியவாதிகள்தான்” என்றேன். “தயவுசெய்து அவர்களைப்பற்றி எழுதி அவர்கள் இலக்கியவாதிகள் , மற்றவர்கள் இலக்கியவாதிகள் அல்ல என்று வேறுபடுத்திக் காட்டுங்கள். அவர்களே நாங்களெல்லாம் ஒன்றுதான் என்று சொல்கிறார்கள்” என்றார். “அவர்களே நாங்கள் எழுத்தாளர்கள் அல்ல, பெண்கள் மட்டுமே என்று சென்று நின்றிருக்கிறார்கள்” என்று நான் சொன்னேன். இன்று விமர்சகன் பெண்களில் இருந்து பெண் எழுத்தாளர்களை அடையாளம் காட்டும் வேலையைச் செய்யவேண்டியிருக்கிறது.

 

ஜெ

 

பெண் எழுத்தாளர்கள் – மனுஷ்யபுத்திரன்

பெண்கள்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைநான் எழுதலாமா? -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 65