‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 75

tig உதடுகளின் அசைவிலிருந்து பேசப்படும் சொற்களை விழிகளால் கேட்டறியும் அதரஸ்புடம் என்னும் கலையை ஏழாண்டுகள் பயின்றிருந்தான் சஞ்சயன். அவன் இளைய யாதவரின் உதடுகளையே நோக்கிக்கொண்டிருந்தான். காலமே அற்றவனாக அச்சொற்களினூடாக அவன் கடந்துசென்றான்.”பார்த்தா சித்தத்தைக் குவித்து நீ சொற்களைக் கேட்டாயா? உன் உளமயக்கு அழிந்ததா?” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் ”ஆம், உன் அருளால் என் அகத்திகைப்பு அழிந்தது. நான் நிலைமீண்டேன். ஐயங்கள் அழிந்தேன். நீ ஆணையிடுவதைச் செய்வேன்”. சஞ்சயன் பெருமூச்சுவிட்டான்

“என்ன? என்ன?” என்றார் திருதராஷ்டிரர். ”வாசுதேவனுக்கும் பேருள்ளத்தோனாகிய பார்த்தனுக்கும் இடையே நிகழ்ந்த சொற்களை நான் கேட்டேன். விண்ணோரும் அறியவிழையும் ஆழ்பொருள் கொண்டவை அவை”. திருதராஷ்டிரர் “சொல், என்ன? என்ன அங்கே?” என்றார். சஞ்சயன் பெருமூச்சுவிட்டு “தேரோட்டியும் வில்லவனும் ஒன்றென்றாகும்  தருணம்” என்றான்.

திருதராஷ்டிரர் பரபரப்படைந்திருந்தார். இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடிகளை தட்டியபடி “என்ன நிகழ்கிறது? சொல்! என்ன நிகழ்கிறது?” என்றார். “பொறுங்கள் அரசே, முதலில் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சஞ்சயன் சொன்னான். “பொறுத்துக்கொள்வதற்காக இங்கு வரவில்லை. இன்னும் பொழுதில்லை. சொல்! அங்கென்ன நிகழ்கிறது? படைகள் எவ்வண்ணம் உள்ளன? எவர் எங்கு நிற்கிறார்கள்? என்ன சூழ்கை அமைக்கப்பட்டுள்ளது? நீ பார்க்கப் பார்க்க சொல்லிக்கொண்டே இரு” என்றார்.

சஞ்சயன் “நான் பார்த்து தொகுத்துச் சொன்னாலொழிய தங்களால் புரிந்துகொள்ள முடியாது, பேரரசே. ஒருகணம் நுண்காட்சியாகவும் மறுகணம் பெருந்தோற்றமாகவும் படைகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். “நான் தொகுத்துக்கொள்கிறேன். நான் தொகுத்துக்கொள்கிறேன்” என்று திருதராஷ்டிரர் கூவினார். “நீ பார்த்ததை அவ்வண்ணமே சொல்! உன் கண் அவ்வாறே சொற்களாக மாறட்டும். உன் கண்ணை நான் அடைவேன். சொல்!” என்றார். ஒரு கணம் அவரை திரும்பி நோக்கியபின் “ஆம், அதுவும் உகந்த வழியே” என்று சஞ்சயன் சொன்னான்.

“பேரரசே, கீழே குருக்ஷேத்ரப் பெருங்களம் மாபெரும் பன்னிரு படைக்களம்போல் தோற்றமளிக்கிறது. அதன் மேற்கு எல்லையில் கிழக்கு நோக்கியவர்களாக பாண்டவர்களின் படை நின்றுகொண்டிருக்கிறது. மறுபக்கம் மேற்கு நோக்கி கௌரவப் படை நிற்கிறது. இரு படைகளுக்கும் பின்புறம் மிக விலகி ஐந்து வெவ்வேறு குழுக்களாக அடுமனையாளர்களும், ஏவலர் குழுக்களும், மருத்துவ நிலைகளும், அமைச்சர் குடில்களும், பொருள் வைப்பு நிலைகளும் அமைந்துள்ளன. பாண்டவப் படைகள் முப்புரிவேலின் வடிவில் இப்போது சூழ்கை கொண்டுள்ளன. வேலின் நடுவே அதன் கூர் என விராட மைந்தனாகிய உத்தரன் நின்றிருக்கிறார். அவருக்குப் பின்னால் விராடர்களின் விரைவுப்புரவிப் படை வெள்ளி ஒளிவிடும் கவசங்களுடன் அணிவகுத்துள்ளது. தொடர்ந்து இருபுறமும் திருஷ்டத்யும்னராலும் பீமனாலும் அவர் காக்கப்படுகிறார்.”

“முப்புரிவேலின் இடப்பக்கக் கூராக குலாடகுடியின் சங்கன் தன் விரைவுப்புரவிப் படையுடன் நின்றிருக்கிறார். வலது கூர்முனையாக குலாடகுடியின் மூத்தவனாகிய ஸ்வேதன் நின்றிருக்கிறார். விரைவுப்படைகள் அனைத்தும் புரவிகளில் எடுத்துச்செல்லத்தக்க நீளமில்லாத விற்களை ஏந்தியவர்கள். அப்புரவிப்படைகளின் பின்னால் நீள்வில் ஏந்திய வில்லவர் அமர்ந்த விரைவுத்தேர்ப்படைகள் நின்றிருக்கின்றன. அவற்றுக்குப் பின்னால் காலாட்படைகள் நிலைகொள்கின்றன” என்றான் சஞ்சயன். “ஆம், விற்புரவிப் படைகள் ஊடுருவ தேர்ப்படைகள் அவற்றைத் தொடர்ந்து வழியமைக்க அதில் காலாட்படைகள் நுழையும்படி அமைந்துள்ளது சூழ்கை” என்றார் திருதராஷ்டிரர். “தேர்ப்படைகளுக்குப் பின்னால் அத்தேர்கள் அளிக்கும் இடைவெளியின் அகலத்திலேயே நீளமாக வேலேந்திய காலாட்படைகள் அமைந்துள்ளன” என்று சஞ்சயன் சொன்னான். “ஆம், அவை தேர்களால் இழுத்துச் செல்லப்படுவதுபோல் தோன்றும்” என்றார் திருதராஷ்டிரர்.

அவர் எவ்வகையிலோ விழிநோக்கு கொண்டிருக்கிறார்போலும் என்னும் திகைப்பை சஞ்சயன் அடைந்தான். “அரசே, ஒவ்வொரு படை நடுவிலும் பின்னாலிருக்கும் படை தேவையெனில் மேலும் பிரிந்து முன்னால் வருவதற்கான இடைவெளி உள்ளது. ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்து நீளமாக்கவும் ஒன்றுடன் ஒன்று செருகிக்கொண்டு அகலமாக்கவும் இயலும் வகையில் படைகள் அமைந்துள்ளன. படைகளின் முகப்புகளில் ஆயிரத்தவர் தங்கள் கொடிகளுடன் நின்றிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆயிரத்தவர் குழுக்களுக்குள்ளும் நூற்றுவர்களின் பத்துக் கொடிகள் தென்படுகின்றன. ஓர் ஆயிரத்தவர் குழுவுக்கு மூன்றடுக்கு கொண்ட காவல்நிலையொன்று சகடங்கள் அமைந்த பீடத்தின் மேல் ஏழு புரவிகளால் இழுக்கப்படுவதாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்மேல் கொடிவீரர்களும் முழவோசை எழுப்புபவர்களும் அமைந்திருக்கிறார்கள். ஓர் அக்ஷௌகிணிக்கு மையத்தில் பெருங்காவல்நிலை உள்ளது. அதன்மேல் பெருமுரசும் கொம்புகளும் ஏந்தி வீரர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.”

“ஆம், அவை வெவ்வேறு ஒலி எழுப்பும் முழவுகள். அக்ஷௌகிணிகளின் முழவுகள் இடியோசை கொண்டவை. ஆயிரத்தவர் முரசுகள் சற்றே உலோக ஒலி கலந்தவை” என்றார் திருதராஷ்டிரர். “நமது படைகளும் அவ்வாறே அணிவகுத்துள்ளன, அரசே” என்றான் சஞ்சயன். “அமுதகலக்கொடி பறக்கும் பதினெட்டு செய்திமாடங்களால் சூழப்பட்டுள்ளது நமது படையின் முகப்பு. நமது படைகள் பூண்டுள்ள மான்கொம்பு வடிவின் முதற்கிளையின் கூர்முகப்பில் மீன்கொடி பறக்கும் தேரில் தன்னைவிட இருமடங்கு பெரிய நிலைவில்லை இடக்கால் கட்டைவிரலுக்கும் நெடுவிரலுக்கும் நடுவே ஊன்றி இடையில் கையூன்றி களத்தை கூர்ந்து நோக்கியபடி பீஷ்மர் நின்றுள்ளார். அவர் வெண்ணிறத் தலைப்பாகை அணிந்திருக்கிறார். அவருடைய தேரும் வெள்ளி என ஒளிவிடுகிறது. அவருடைய முதன்மை மாணாக்கனாகிய விஸ்வசேனர் அவருக்கு தேர் செலுத்துகிறார். அரசே, ஒருகணம் பீஷ்மரே அங்கும் அமர்ந்திருப்பதாக எண்ணி திகைப்புகொண்டேன்.”

“அவருக்குப் பின்னால் பன்னிரு கவர்களாக பிரிந்து நின்றிருக்கிறது நமது படை. ஒவ்வொரு கவர் முனையிலும் நமது பெருவீரர் ஒருவர் நின்றிருக்கிறார். துரோணர், கிருபர், சல்யர், துரியோதனர், சகுனி, அஸ்வத்தாமர், ஜயத்ரதர், பூரிசிரவஸ், கிருதவர்மர், பிரக்ஜ்யோதிஷ மன்னர் பகதத்தர், மாளவமன்னர் இந்திரசேனர், கலிங்க மன்னர் ஸ்ருதாயுஷ் ஆகியோரை தெளிவாக காண முடிகிறது” என்று சஞ்சயன் சொன்னான். “ஒவ்வொருவரையாக பார்க்கிறேன், அரசே. கமண்டலமும் வில்லும்கொண்ட கொடியுடன் துரோணர், எருதுக்கொடியுடன் கிருபர், சிம்மவால் கொடியுடன் அஸ்வத்தாமர், கரடிக்கொடியுடன் ஜயத்ரதர், கலப்பைக்கொடியுடன் சல்யர், பசுக்கொடியுடன் கிருதவர்மர், சூரியக்கொடியுடன் கலிங்கனான கேதுமான், ஈச்சையிலைக் கொடியுடன் சகுனி, மலைச்சூரியக் கொடியுடன் ஸ்ருதாயுஷ், படகுக்கொடியுடன் பகதத்தர்” என்று சஞ்சயன் தொடர்ந்தான்.

“அவர்களின் கவசங்களில் அந்த முத்திரைகள் உள்ளன. தேர்க்குஞ்சியிலும் தெரிகின்றன. ஒவ்வொருவர் அருகிலும் கழையன் ஒருவன் நீள்கழையுடன் செல்கிறான். தேர்களில் ஆவத்துணைவர் இருவரும் அறிவிப்பாளர் ஒருவரும் உடன் நிற்கிறார்கள். அவர்களின் புரவிகளும் கழுத்திலும் விலாவிலும் இரும்புவலைக் கவசங்கள் அணிந்துள்ளன. முழங்கால் வளைகளும் மூட்டுக்காப்புகளும் கொண்டு காக்கப்பட்டுள்ளன” என்றான் சஞ்சயன். “மான்கொம்பின் ஒவ்வொரு கவரும் முனையில் ஒரு வேல்கொண்டு முன் வளைந்து நீண்டுள்ளது.”

“ஆம், மான்கொம்புச் சூழ்கை நன்று” என்று திருதராஷ்டிரர் சொன்னார். பெரிய வெண்பற்களைக் காட்டி சிரித்து தலையைச் சுழற்றியபடி “மிகச் சரியான படைசூழ்கை அது. முப்புரி வேலுக்கு மான்கொம்புதான் கேடயமாக இயலும். மிக எளிதில் ஏதேனும் ஒரு கவரில் வேலின் கணு சிக்கிக்கொள்ளும். சற்றே சுழற்றினால் போதும்” என்றார். அவர் கையை தூக்கி மான்கொம்பை சுழற்றுவதுபோல் அசைத்து “முப்புரிவேலை கைவிட்டுவிடவேண்டியிருக்கும். வலு காட்டினால் வேலின் மூன்று கவர்களும் ஒன்றிலிருந்து ஒன்று விலகி நெளியும். ஆம்!” என்றார். இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடியை அறைந்து “ஆம்! ஆம்! அதுதான் நிகழவிருக்கிறது. அதுதான்! நான் அறிகிறேன்! பிதாமகர் பீஷ்மர் முன்னணியில் நிற்கையில் மான்கொம்பு கொல்திறல் படைக்கலம் என்றும் ஆகும். மான்கொம்பின் இயல்பு அது. கேடயமாகவும் படைக்கலமாகவும் மாறிமாறி செயல்படும் விந்தையான கருவி” என்றார்.

சஞ்சயன் திரும்பி அவருடைய உணர்வெழுச்சியை பார்த்தான். அதுவரை அவரிலிருந்த துயரமும் விலக்கமும் முற்றாக பறந்துபோய் போர்க்களத்தில் படைக்கலமேந்தி போர்முரசு முழங்கக் காத்திருக்கும் படைவீரனின் வெறியும் உவகைக்கொப்பளிப்பும் கொண்டவராக மாறிவிட்டிருந்தார். அவர் உடலின் வாயில்களைத் திறந்து முற்றிலும் புதிய ஒருவர் வந்தமர்ந்திருப்பதைப்போல. ஆனால் அந்தப் புதியவரை அவன் மேலும் நன்கறிந்திருப்பதாக அவனுக்கு தோன்றியது. அவன் தொடர்ந்து சொன்னான். “நம் படைகள் முற்றிலும் பழுதின்றி நிரைகொண்டுள்ளன, அரசே. என்ன நிகழ்கிறதென்பதை இங்கிருந்து தெளிவாக பார்க்க இயல்கிறது. புறாக்கள் படைகளுக்குமேல் புலரி ஏரியில் நீராவிப்படலம்போல் படர்ந்துகொண்டிருக்கின்றன. அவை சென்றமரும் இடங்களில் எல்லாம் செய்திகள் சென்று விழுந்து எரியென பற்றிக்கொண்டு அக்கணமே முரசொலியும் கொம்போசையுமாக மாறுகின்றன. அதற்கேற்ப படை மேலும் மேலும் தன்னை கூர்மைப்படுத்தி திரட்டிக்கொள்கிறது.”

“படைவீரர்கள் எருமைத்தோலாலும் யானைத்தோலாலும் ஆன கவசங்களும் ஆமையோட்டுக்கவசங்களும் அணிந்திருக்கிறார்கள். வில்லவர்களை எதிர்கொள்ளும் காலாட்படையினர் மார்பில் இரும்புச் சங்கிலி பின்னிய கவசங்களை அணிந்திருக்கிறார்கள். தலைக்கவசங்கள் இரும்புக்குமிழிகள்போல் மின்ன இங்கிருந்து பார்க்கையில் ஒரு பெரும்நுரைப்படலமென தெரிகிறது படைப்பெருக்கு” என்றான் சஞ்சயன். “ஆம், அதை என்னால் பார்க்கமுடிகிறது… நுரைப்படலம்! இரும்பு நுரைப்படலம்!” என்று திருதராஷ்டிரர் கூவினார். “அரசே, இரு நகரங்கள் ஒன்றையொன்று நோக்கி அமைக்கப்பட்டுள்ளதுபோல் உள்ளன படையமைவுகள். மிதக்கும் படகுகளாலான பெருநகரங்கள் என்று சொல்லலாம். எக்கணத்திலும் தன்னை கலைத்து புதிய வடிவில் அடுக்கிக்கொள்ள வாய்ப்புள்ளவை. இங்கிருந்து பார்க்கையில் அவை ஒன்றையொன்று முட்டும்போது ஒன்றின் இடைவெளிகளில் இன்னொன்று மிகச் சரியாக புகுந்துகொண்டு ஒற்றை வெளியென ஆகும்பொருட்டு அமைக்கப்பட்டவைபோல் தோன்றுகின்றன.”

“இருவகை கவசப்படைகளை காண்கிறேன். தேர்களால் கொண்டுசெல்லப்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைத்து அடுக்கப்படும் ஆளுயர நிலைக்கவசங்கள். அவற்றை கொண்டுசெல்லும் தேர்களுக்கு மேல் அவை தூக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆணை எழுந்ததும் அவற்றை தாழ்த்தியபடி முன்னால் சென்று இணைத்து கவசங்களாலான சுவரை அமைக்க முடியும். யானைகள் கொண்டுசெல்லும் இரும்புக்கவசங்கள் இரண்டு ஆள் உயரமானவை. அவை யானைகளின் முட்டுதலையும் தாங்குபவை. அவற்றை தங்கள் முன் சாற்றி வைத்தபடி நின்றிருக்கின்றன யானைகள்” என்றான் சஞ்சயன். “யானைப்படை மூன்றுவகை. முள்கொண்ட உருளைகளை சங்கிலிகளில் கட்டி துதிக்கையில் வைத்திருக்கும் தாக்குதல்யானை. முன்னணி கவசத்தடைகளை உடைக்கும் நீண்ட தூண்களை ஏந்திய தண்டானை. கவசங்களை ஏந்திய தடையானை” என்றான். “இந்தப் போரில் இருபுறமும் யானைப்படை முன்னணிக்கு அனுப்பப்படவில்லை.” திருதராஷ்டிரர் “எதிரியின் படைசூழ்கை கோட்டைபோலிருந்தாலொழிய யானைகளால் பெரும்பயன் ஏதுமில்லை” என்றார்.

“நீர்ப்பரப்பில் மீன்கள் துள்ளி எழுந்தமைவதுபோல படைவெளியின் நடுவே கழையர் எழுந்து இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். படையணிவகுப்பை ஒவ்வொரு தலைவரும் தீரா ஐயத்துடன் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். கிருதவர்மர் மேலும் மேலும் பதற்றம் கொண்டிருக்கிறார். ஏனென்றால் அவருடன் வந்திருப்பவர்கள் யாதவர்கள். அவர்களில் விருஷ்ணிகளின் நிலை குறித்த ஐயம் நின்றிருக்கிறது. படைமுகத்தில் தங்கள் தலைவரான இளைய யாதவரை கண்டால் அவர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்று பிற யாதவகுடியினர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரர் “அவர்கள் மேலும் கடுமையாக நடந்துகொள்வார்கள். மேலும் மேலுமென பாண்டவர்களை கொன்று குவிப்பார்கள். ஏனென்றால் மானுட உள்ளம் எப்போதும் ஓர் உச்சநிலையில் இருந்து மறுஎல்லைக்கே செல்கிறது. அவர்கள் பாண்டவர்கள் மீது கொண்டிருந்த அன்புக்கு அடியில் எஞ்சியிருந்த வெறுப்பு பேருருக் கொள்ளும். இளைய யாதவரை வாழ்த்தி கண்ணீர்மல்கிய போதெல்லாம் அடிபட்டு நஞ்சுகொண்ட ஆணவம் ஆயிரம் படம் விரித்து எழுந்து வரும்” என்றார்.

“அரசே, நமது படைகளில் அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் மாங்கனி கொடிகளுடன் நின்றிருக்கிறார்கள். அவர்களுக்கு அருகே கோசலமன்னன் பிரஹத்பலன் மயில்கொடியுடன் நின்றிருக்கிறார். சௌவீரர்களும் பால்ஹிகர்களும் பால்ஹிக மன்னர் சலன் தலைமையில் அணிகொண்டிருக்கிறார்கள். காந்தாரர்களின் படைப்பிரிவுகளை சுபலர் தலைமைதாங்குகிறார். மறுபக்கம் ஒட்டகக் கொடியுடன் காம்போஜத்தின் சுதக்ஷிணனும் சூரியக்கொடியுடன் அங்கநாட்டரசர் கர்ணனின் மைந்தர் விருஷகேதுவும் இளையோரும் நின்றிருக்கின்றார்கள். காமரூபத்தின் படைகளை அவர்களுக்குப் பின்னால் பார்க்கிறேன். இணையாக வங்கநாட்டுப் படைகளும் நின்றிருக்கின்றன. அதற்கும் அப்பால் நின்றிருப்பவை திரிகர்த்தர்களும் உசிநாரர்களும் இணைந்த பெரும்படை. அதை திரிகர்த்தனாகிய சுசர்மன் தலைமை தாங்குகிறார். மிகத் தொலைவில் கூர்ஜரத்தின் படைகளை காண்கிறேன். அவர்கள் சைப்ய நாட்டு கோவாசனரால் நடத்தப்படுகிறார்கள்.”

திருதராஷ்டிரர் மெல்ல அமைதியடைந்தார். பற்களைக் கடித்து தாடையை முன் நீட்டி கூர்ந்த தணிந்த குரலில் “மறுபக்கம் பார்த்தனும் பீமனும் நின்றுள்ளனர் அல்லவா?” என்றார். “ஆம், அவர்கள் தங்கள் படைகளின் அணிகளை நோக்கிவிட்டு படைமுகப்புக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். முப்புரிவேலின் கைப்பிடியில் அமைந்த இரு கவர்களென அவர்களின் படைகளை நிறுத்தியிருக்கிறார்கள். இளைய பாண்டவராகிய பீமன் உடலெங்கும் இரும்புக்கவசங்கள் அணிந்திருக்கிறார். தலைக்கவசத்தை வலக்கையில் நெஞ்சோடணைத்து பற்றியிருக்கிறார். சிம்மக்கொடி பறக்கும் பெருந்தேரில் நெஞ்சகன்ற ஏழு யவனப்புரவிகள் பூட்டப்பட்டுள்ளன. தேர்த்தட்டில் நின்றபடி கைசுட்டி தன் படையின் பல்வேறு பகுதிகளை நோக்கி தேரை திருப்பும்படி பாகனுக்கு ஆணையிட்டுக்கொண்டிருக்கிறார். அவரைப்போன்றே இரும்புக்கவச உடையணிந்தவர்களால் ஆன படைகள் அவரைப்போலவே உடல்நடிக்கின்றன. அவர்களின் முகப்பில் புரவிவீரர்களும் தொடர்ந்து தேர்களும் பின்னர் காலாட்படையினரும் நின்றிருக்கிறார்கள்.”

“பார்த்தன்! பார்த்தன் எங்கே? அவர்களைப்பற்றி சொல்! அவர்களைப் பற்றி சொல்லவந்து விட்டுவிட்டாய்!” என்றார் திருதராஷ்டிரர். சஞ்சயன் “அரசே, மறுப்பக்க கவரில் இப்போது நான் அர்ஜுனரை பார்க்கிறேன். அவரது படைமுகப்பில் நின்றிருக்கும் தேரில் குரங்குக்கொடி பறக்கிறது. இளைய யாதவர் தேர்ப்பாகனாக அமர்ந்திருக்கிறார். முழுக்கவச உடையணிந்து தலையில் அணிந்த தலைக்கவசத்தை தோளுக்குப் பின்னால் சரித்து நின்றுகொண்டிருக்கிறார் பாண்டவர். இளைய யாதவர் அவருக்கு படைகளை கைசுட்டி எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறார். பின்னால் நின்றிருக்கும் இரண்டு ஆவத்துணைவர் அம்புகளை எடுத்து சீராக அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள். அத்தேரின் பின்பக்கம் தூண்கள் முழுக்க அம்பறாத்தூணிகள் அம்புநிறைத்து தொங்கவிடப்பட்டுள்ளன. போருக்கென அவர்கள் ஒருங்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்றவில்லை. ஒரு இனிய விழாவிற்கான உளநிலை அவர்கள் முகத்தில் தெரிகிறது” என்றான்.

அவன் ஆடியை மீண்டும் மெல்ல நெருக்கி “இளைய யாதவர் கனவிலிருப்பதுபோல் அரைவிழி மூடியிருக்கிறார். நான் அவர் விரல்களை பார்க்கிறேன். ஊழ்கத்தில் என அவை ஒன்றுடன் ஒன்று படிந்து அமைந்திருக்கின்றன. அவர் உதடுகளும் ஊழ்கநுண்சொல்லை உரைப்பவைபோல் மெல்ல அசைகின்றன. அவர் இளைய பாண்டவருக்கு சொல்லும் சொற்களை செவிகளால் கேட்க அவராலும் இயலாது. அவை ஒருவரை ஒருவர் நன்கறிந்தவர்கள் சொல்லின்றி அறியும் மொழியாலானவை போலும். அரசே, கார்நீலரின் தலையிலிருக்கும் பீலி விழிதிறந்து திகைத்ததுபோல் அப்பெரும் போர்க்களத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர் மஞ்சள் மரவுரி ஆடை மட்டும் அணிந்திருக்கிறார். மார்பிலோ கைகளிலோ தோளிலோ எங்கும் கவசங்களில்லை. ஏழு புரவிகள் பூட்டப்பட்ட தேர் அது. ஒன்றுடன் ஒன்று முற்றிலும் ஒத்த, மெலிந்து நீண்ட கால்களும் ஒட்டிய வயிறும் கொக்கின் கழுத்தும் கொண்ட வெண்புரவிகள். சிவந்த மூக்கும் சிவந்த கண்களும் கொண்டவை. அவை சோனக நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டவை. பாலையின் வெண்மணல் அலைகளால் உருவாக்கப்பட்ட கால்கள் கொண்டவை. மிகுவிரைவு கொள்ளும் ஆற்றல் பெற்றவை” என்றான் சஞ்சயன்.

“என் மைந்தர் எங்கே? என் மைந்தர் என்ன செய்கிறார்கள்? அதை சொல்!” என்றார் திருதராஷ்டிரர். “அரசே, துரியோதன மாமன்னர் யானைமேல் வெண்கொற்றக்குடை சூடி போர்க்களத்தின் முகப்பு நோக்கி செல்கிறார். அவரைச் சூழ்ந்து இசைச்சூதரும் பிறரும் வாழ்த்தொலி எழுப்பியபடி செல்கிறார்கள். அவருக்கு முன்னால் செல்லும் யானைமேல் அமுதகலக்கொடி பறக்கிறது. அவர் தலைக்குமேல் அரவுக்கொடி பறக்கிறது. முற்றிலும் உடல்மறைக்கும் இரும்புக்கவசத்துடன் அவர் தோன்றுகிறார். களமெழுந்த போர்த்தேவன் என தோன்றுகிறார். அவரைச் சூழ்ந்து இலங்கும் கொடிகளும் பாவட்டாக்களும் மின்னும் கொம்புகளின் வளைவுகளும் மலர்க்காடென உளம்மயங்கச் செய்கின்றன.”

“துரியோதன மாமன்னரை தலைக்கவசமின்றி நோக்கினால் பீமசேனர் என்றே தோன்றும். அவருக்கு நேர் பின்னால் துச்சாதனரும் அவர்களுக்குப் பின்னால் துச்சகரும் துச்சலரும் துர்மதரும் தேர்களில் நின்றிருக்கிறார்கள். பிற கௌரவ இளவரசர்கள் தொடர்ந்து அணி நிரந்துள்ளனர். அவருக்கு வலப்பக்கம் சுபாகு அவரைப் போலவே கவசம் அணிந்து கதையுடன் தேர்த்தட்டில் நின்றிருக்கிறார். அனைவரும் ஒருவர் பிறிதொருவர்போல் தோன்றுகிறார்கள். அவர்கள் நூற்றுவருக்குப் பின்னால் கௌரவ மைந்தர் ஆயிரத்தவரும் அதேபோல கவச உடையணிந்து புரவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். அனைவருமே தங்கள் தமையனுக்குரிய அரவுக்கொடியும் அரவு முத்திரையும் கொண்டிருக்கிறார்கள். அரசே, ஒருகணம் பீமனாகவும் துரியோதனராகவும் கௌரவ பாண்டவ மைந்தராகவும் உருக்கொண்டு நின்றிருப்பது ஒன்றே என்னும் உளமயக்கு உருவாகிறது.”

“மறுபக்கம் யுதிஷ்டிரர் தேருக்கு வந்துவிட்டார்” என்று சஞ்சயன் தொடர்ந்தான். “நந்தமும் உபநந்தமும் அமைந்த வெண்கொடி பறக்கும் அவருடைய தேரின் இடப்பக்கம் சரபக்கொடி கொண்ட நகுலரின் தேரும் வலப்பக்கம் அன்னக்கொடியுடன் சகதேவரின் தேரும் தெரிகின்றன. நகுலரும் சகதேவரும் தேரிலிருந்து இறங்கி மூத்தவரின் கால்தொட்டு வணங்கி வாழ்த்துகொண்டு தங்கள் படைப்பிரிவுகளுக்கு திரும்பிச்செல்கிறார்கள். அவர்கள் அகன்றதும் காத்து நின்றிருந்த அபிமன்யூ துள்ளும் மீன் பொறிக்கப்பட்ட கொடியுடன் வந்து யுதிஷ்டிரரை வணங்குகிறார். அவரைத் தொடர்ந்து சுருதகீர்த்தி காளைக்கொம்பு பொறிக்கப்பட்ட கொடிகொண்ட தேரில் வந்து அவரிடம் வாழ்த்து பெறுகிறார். பாண்டவ மைந்தர் ஒவ்வொருவராக வந்துகொண்டிருக்கிறார்கள்.”

“கோவிதாராக் கொடி கொண்ட தேரில் திருஷ்டத்யும்னர் ஆணைகளை பிறப்பித்தபடி படைமுகப்பில் தேரில் சென்றுகொண்டிருக்கிறார். விற்கொடித்தேரில் பாஞ்சாலர் நின்றிருக்க அவரைத் தொடர்ந்து அவருடைய படைகள் ஏழு நீள்சுவர்கள் என அணிகொண்டிருக்கின்றன. சாத்யகியின் காளைக்கொடியை காண்கிறேன். தொலைவுவரை விரிந்துள்ள இந்திரப்பிரஸ்தத்தின் படைகளை அவர் ஆள்கிறார். மச்சர்களின் மீன்கொடிகளும் முதலைக்கொடிகளும் மீன்குத்திக்கொடிகளும், மல்லநாட்டவரின் எருமைக்கொடிகளும் பன்றிக்கொடிகளும் கழுதைக்கொடிளும், கிராதர்களின் காகக்கொடிகளும் ஆந்தைக்கொடிகளும், நிஷாதர்களின் ஆமைக்கொடிகளும் முள்ளம்பன்றிக்கொடிகளும் அசுரர்களின் யானைக்கொடிகளும் கழுகுக்கொடிகளும் வல்லூறுக்கொடிகளும் நெடுந்தொலைவுவரை நிரந்துள்ளன.”

“கௌரவர்களின் புரவிகள் அனைத்தும் கரும்பட்டுபோல் உடல் கொண்டவை. விரிந்த நெஞ்சும் உறுதியான கால்களும் நரம்புகள் புடைத்த பெரும் கழுத்தும் கொண்டிருக்கின்றன” என்றான் சஞ்சயன். “ஆம், அவை தளராதவை. எத்தனை விரைந்தாலும் போர்க்களத்தில் அவை நாக்கை நீட்டுவதில்லை. நுரை உமிழ்வதில்லை” என்றார் திருதராஷ்டிரர். “தேர்களிலும் வேறுபாடுள்ளது. கௌரவர்களின் தேர்கள் எடைமிக்கவை, வலிமையானவை. பெரும்பாலும் அவை ஒன்றுக்குமேற்பட்ட புரவிகளால் இழுக்கப்படுகின்றன. சகடங்களில் அச்சுகளில் பிற சகடங்களை வெட்டும்படி சுழலும் கத்திகள் கொண்டவை. அவற்றின் புரவிக்கால்களிலும் அணுகுபவர்களை வெட்டும் கூர்கத்திகள் உள்ளன. பாண்டவர் படைகளில் ஒற்றைப்புரவிகளால் இழுக்கப்படும் மெல்லிய தேர்களே மிகுதி. அங்கே பெரும்பாலான படைவீரர்கள் எளிய காலாட்கள்” என்றான் சஞ்சயன். “அவர்கள் அவன் ஒருவனை மட்டுமே நம்பி வந்துள்ளனர்” என்றார் திருதராஷ்டிரர்.

“நான் இப்போது அஸ்வத்தாமரை பார்க்கிறேன். அவர் இரு கைகளையும் கட்டி ஊழ்கத்திலென முகம்கொண்டு வலக்காலை முன்வைத்து வில்லூன்றி தேர்த்தட்டில் காத்து நின்றிருக்கிறார். பீஷ்மர் அதோ தேர்த்தட்டில் அரைவிழிமூடி நின்றிருக்கிறார். அவருடைய வில்லின் நாண் மட்டும் இறுகி விம்மி நின்றுள்ளது. பூசனைக்கோ நூல்நவிலவோ அமர்ந்திருக்கும் யோகியினுடையதுபோல் தோன்றுகிறது அவர் முகம். அரசே, துரோணரை பார்க்கிறேன். அவர் தன் தாடியை மென்மயிர் வலையால் கட்டி கொண்டை போலாக்கியிருக்கிறார். தலையிலும் தோலாலான நாடாக்களைச் சுற்றி கொண்டையிட்டிருக்கிறார். அவர் மடியிலுள்ளது நீண்ட வில். அம்பறாத்தூணியை வலப்பக்கம் வைத்து ஒவ்வொரு அம்பாக எடுத்து அதன் கூர்முனையை நோக்கி மீண்டும் வைத்துக்கொண்டிருக்கிறார். முட்டை விரித்து அப்போதே வெளிவந்த சிறு கோழிக்குஞ்சுகளை கை அழுத்தாமல் எடுத்து மென்மயிர்ப்பட்டு நலுங்காமல் நோக்கி அவற்றின் நெல்மணி அலகை வருடி வைப்பவர் போலிருக்கிறார். முகமும் அவ்வண்ணமே கனிந்துள்ளது” என்றான் சஞ்சயன். “கிருபர் அருகே நின்றிருக்கும் ஏவலனுக்கு ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஓர் வகுப்பில் இருப்பவர்போலவே தோன்றுகிறார்.”

“ஜயத்ரதர் தன் கைகளில் தோலுறைகளை ஒவ்வொரு விரலாக இழுத்து நன்கு அணிந்துகொண்டிருக்கிறார். இல்லை, அவற்றை அவர் கழற்றுகிறார். மீண்டும் அணிந்துகொள்கிறார்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரர் “ஆம், அவன் இயல்பு அது. ஒவ்வொன்றும் அதன் மிகச் சரியான வடிவிலேயே அமையவேண்டுமென்று எண்ணுபவன். ஆகவே ஓயாமல் தன்னை திருத்திக்கொண்டிருப்பவன்” என்றார். “அவ்வியல்பாலேயே அவன் இலக்குகள் குறிதவறாமல் சென்று அமைகின்றன.” “கிருதவர்மரும் தன் கவசங்களை சீரமைத்துக்கொண்டிருக்கிறார். அஸ்வத்தாமர் விழிகளைச் சுழற்றி படைகளை மீள மீள நோக்குகிறார். பூரிசிரவஸ் பதற்றம் கொண்டிருக்கிறார். தேரின் தூணை கைகளால் தட்டிக்கொண்டிருக்கிறார். கைகளை மார்பில் கட்டியபடி நிலைகொண்ட உடலுடன் இரும்புச்சிலை என வீற்றிருக்கிறார் துரியோதனர்.”

திருதராஷ்டிரர் மெல்ல தளர்ந்து “போர் ஒருங்கிவிட்டது. முன்னரே உளங்களில் நிகழத் தொடங்கிவிட்டது. நான் இப்போது என் முன் நிகழவிருக்கும் போரை கண்டுகொண்டிருக்கிறேன்” என்றார். எரிச்சலுற்றவரைப்போல “வானை பார். பொழுது விடிய இன்னும் எவ்வளவு நாழிகையிருக்கிறது?” என்றார். சஞ்சயன் “வானம் நன்கு ஒளிபெற்றுவிட்டது, பேரரசே. ஒவ்வொருவரும் பிறிதொருவர் விழியை நன்கு நோக்கும் கணம் வரை போருக்கு பொழுது விடியவில்லை என்பதே கணக்கு. ஆகவே இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு மேடையிலிருந்து செய்தி எழக்கூடும்” என்றான். “ஆம்” என்று திருதராஷ்டிரர் பெருமூச்சுவிட்டார்.

“ஒவ்வொருவரும் பொறுமையின் எல்லையில் நின்றிருக்கிறார்கள். அரசே, யானைகள் நிலையழிந்து அசைகின்றன. புரவிகள் முன்கால்களால் நிலத்தை தட்டுகின்றன. தேர்களின் சகடங்கள் முன்னும் பின்னுமென அசைந்துகொண்டிருக்கின்றன. மெல்ல திரும்பும் வேல்முனைகளில் விழியொளி தோன்றி மறைகிறது. தேர்களின் குமிழ்முகடுகளில் காலையொளி குடியேறிவிட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் உயிர்நிகழ்வின் உச்சத்தில் நின்றிருக்கிறார்கள்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரர் “ஆம், நாண் இழுபட்டு நின்றிருக்கும் அம்பின் உறைநிலை” என்றார். “அப்போது அதன் கூரில் அமைந்த தெய்வம் ஆம் ஆம் ஆம் என சொல்லிக்கொள்கிறது என்பார்கள்.”

சஞ்சயன் “அரசே…” என்றான். மேலும் பேச அவனால் இயலவில்லை. அவன் மேற்கிலிருந்து எழுந்து பாண்டவப் படைகளைக் கடந்து கிழக்குநோக்கி சென்ற காற்றை கண்களால் பார்த்துக்கொண்டிருந்தான். பல்லாயிரம் ஆடைகளும் கொடிகளும் பாவட்டாக்களும் அசைய செம்மஞ்சள் வண்ண ஒழுக்கெனச் சென்று கௌரவர் படையை அடைந்தது அது. அங்கே வண்ணம் மாறி செந்நீல அலையென்று உருக்கொண்டது. எதிர்காற்றில் கௌரவர் விழிமூடி தூசுப்படலத்தை தவிர்த்தனர். கொடிகளும் யானைகளின் செவிகளும் பின்னோக்கி திரும்பின. “என்ன?” என்றார் திருதராஷ்டிரர். “காற்று” என்று அவன் சொன்னான். “எங்கிருந்து?” என்று அவர் கேட்டார். “மேற்கிலிருந்து” என்றான். அவர் மறுமொழி சொல்லாமல் நீள்மூச்செறிந்தார்.

முந்தைய கட்டுரைஇதழியலின் தொடர்ச்சியறுதல்
அடுத்த கட்டுரைகம்போடியா- பாயோன் – சுபஸ்ரீ