தணியாத தாகம் -கடிதங்கள்

mouni1_thumb[1]

தணியாத தாகம்  

அன்புள்ள ஜெ,

 

 

பெண்களைப்பற்றிய தொடரில் மௌனி எழுதிய கதைபற்றி வாசித்ததும் ஒரு எண்ணம் வந்த்து. பாரதி முதல் இலட்சியக்காதலி என்ற கருத்து எப்படியெல்லாம் உருவாகி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு வந்தீர்கள்.  அதில் உச்சகட்ட இலட்சியக்காதலி மௌனி முன்வைப்பதுதான். இலட்சியம் மட்டும்தான் இருக்கிறது காதலே இல்லை.

 

செல்வா

 

 

அன்புள்ள ஜெ

 

 

தமிழிலக்கியத்தின் பெண்கள் எப்படியெல்லாம் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை விவாதிக்கும் இலக்கியத்தொடர் அவ்வப்போது என வெளிவந்துகொண்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஒரு பார்வையை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. ஒரு நூலாக இதைத்தொகுக்கலாம் என நினைக்கிறேன். பாரதியில் இருந்து இன்றைய இலக்கியம் வரை எவ்வாறெல்லாம் பெண்களை காட்டியிருக்கிறார்கள் என்று பார்க்கும்போது மௌனி பெண்களைப்பற்றியே எழுதவில்லை என்பது தெரிகிறது.மௌனி பெண் என்னும் கான்செப்ட் பற்றித்தான் எழுதுகிறார். அந்த கான்செப்டைத்தான் ஒரு உச்சநிலை நோக்கிக் கொண்டு செல்கிறார். அதில் காமம் இல்லை. வாழ்க்கையின் ஒரு உச்சநிலைக்கு அவர் பெண் என்று பெயர் சூட்டுகிறார்

 

அர்விந்த்

 

 

 

 

அன்புள்ள ஜெ.,

 

என்ன ஒற்றுமை? இந்தக் கதையை நேற்றுதான் படித்திருந்தேன். மதுரை மணி ஐயர் துண்டு துண்டாகப் பாடுகிறார் என்றொரு விமர்சனம் இருந்தது. அதற்கு கல்கி எழுதினார் “ஆமாம் ஐயா, அத்தனையும் மல்கோவா துண்டுகள்” என்று. அப்படிப்பட்ட மல்கோவா துண்டுகளில் ஒன்றுதான் பிரபஞ்சகானம். ஒரு குறிப்பிட்ட உணர்வு நிலையினை வாசகனுக்குக் கடத்தக்கூடிய அலாதியான கதைகள் மௌனியுடையவை. அதுவும் விக்டோரிய ஒழுக்கவியல் பின்னணியில் நீங்கள் இந்தக் கதையை அலசிய விதம் இன்னொரு மல்கோவா துண்டு. “ஷொட்டு”(நாவினால் எழுப்பப்படும் பாராட்டு ஒலி)ப் போட்டுக்கொண்டுதான் படித்தேன். மௌனி படித்திருந்தால் “அருமை, அருமை” என்றிருப்பார்.

 

அன்புள்ள,

 

கிருஷ்ணன் சங்கரன்

 

 

 

 

முந்தைய கட்டுரைபெண் எழுத்தும் இலக்கியமும்
அடுத்த கட்டுரைஅன்னைக்கு இரண்டு கவிதைகள்