கணினியில் எழுதுவது…
வாசிப்பும் அ.முத்துலிங்கமும்
அன்புள்ள ஜெ,
பள்ளிக்கூடங்கள் எழுதுமுறையை விட்டுவிடக்கூடாது என்பதே என் விருப்பம். நான் 12ம் வகுப்புவரை தமிழ் மீடியமும் இளங்கலையில் முதல் இரண்டு ஆண்டுகள் தமிழ் பாடமும் படித்தேன், எழுத தயங்கியதே இல்லை. என் மனைவி ஆங்கில வழி படித்தவள் தமிழ் எழுதுவார் என்றாலும் சரளமாக எழுத மாட்டார்.
மகள் தற்போது தான் எழுத படிக்கிறாள், ஆங்கிலம் வேகமாக எழுதவும், தமிழ் வேகமாக படிக்கவும் வருகிறது. கணினியை விட அவள் அதிகம் பார்ப்பது பழகுவது அலைபேசிதான். கையெழுத்து பழக வேண்டியது கட்டாயம் . ஒரு திறன் இல்லாமல் போய்விடக்கூடாது.
அலுவலகத்தில் இன்றய தலைமுறை இளைஞர்கள் நிலையும் அதேதான். அலைபேசியில் அசுர வேகத்தில் தட்டச்சு செய்கிறார்கள் ஆனால் தமிழ் பயன்பாடு குறைவு. நிறுவனங்களிலும் கையால் எழுத வேலையில்லை.
நானும் அதிகம் எழுத வேண்டுமென்றால் மட்டுமே மடிக்கணினி பயன்படுத்துகிறேன், அலைபேசியிலேஏ பெரும்பாலும் எழுதிவிடுகிறேன்.
பலர் project work copy paste தான், திறமை இல்லை. இது ஆபத்தானது.
மதன் கார்க்கியின் சொல் அகராதி பார்த்தீர்களா? சிறந்த முயற்சி
அன்புடன்
பகவதி
அன்புள்ள ஜெ
கணிப்பொறியில் எழுதுவதை பற்றிய உங்கள் கட்டுரையை ஒட்டி விவாதங்கள் நிகழ்ந்தன. இணையத்தில் பல இளம் எழுத்தாளர்கள் அவர்கள் எழுதுவது முழுக்க செல்பேசியில்தான் என்று எழுதியிருந்தனர். சுரேஷ்பிரதீப் வெண்பா கீதாயன் போன்றவர்கள் ஒருவரிகூட கையாலோ கணிப்பொறியிலோ எழுதியதில்லையாம். ஆச்சரியமாக இருந்தது.
இப்படி எழுதமுடியும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால் சிரிப்போம். ஆனால் உண்மை என்னவென்றால் நானே என் அலுவலகக் கடிதங்களில் 90 சதவீதத்தை செல்பேசியில்தான் எழுதுகிறேன். வாசிப்பதும் 90 சதவீதம் செல்பேசியில்தான். செல்பேசி ஒரு குட்டி அலுவலகமும் நூலகமும் ஆக மாறிவிட்டது
இதனால் எழுத்தில் என்ன வேறுபாடு? சுரேஷ்பிரதீப் நாவல் அவ்வளவு குட்டியாக இருப்பது இதனால்தான் என்று சொல்லமுடியுமா என நினைத்துக்கொண்டேன்
செந்தில்