தீட்டு, சபரிமலை, மதம்

sabari malai
வணக்கத்திற்குரிய ஜெ!
தீட்டு பதில் படித்தேன்.  என் மகளுடன் நம்பிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது சபரிமலையில் பெண்கள் நுழைவுபற்றி விவாதித்ததேன்.  அவள் நிலைப்பாடு ‘காலம் மாறும்போது மத சடங்குகள் மாறும்.  மாற வேண்டும்.  ஐயப்பன் ப்ரம்மச்சாரி.  அவன் முன் பெண்கள் போகக்கூடாது’ என்று நம்புகின்றவர்கள் போகாமல் விட்டுவிடலாம் என்பது.  நான் ‘மதங்கள் நம்பிக்கை சார்ந்தவை.  நம்பிக்கைக்கும் பெண்ணியத்திற்கும் முரன்பாடு வரும்போது இந்த இடத்தில் நம்பிக்கைக்கு முன் இடம் கொடுக்க வேண்டும்’ என்று நினைக்கிறேன் .
உங்கள் கருத்து என்ன?
அன்புடன்,
பாலா.

அன்புள்ள பாலா

பொதுவாக இன்றுள்ள ஒரு போக்கை முதலில் குறிப்பிட்டாகவேண்டும். எந்த வகையிலும் மதம்குறித்த அக்கறையோ மதிப்போ அறிதலோ இல்லாதவர்கள் மதம்பற்றிய கருத்துக்களை உருவாக்கிப் பரப்புகிறார்கள். அவற்றை எதிர்ப்பவர்களை மதவாதிகள் என முடிவுகட்டி உச்சகட்ட ஏளனமும் வசையும் முன்வைக்கிறார்கள். இந்துமதம் சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு மட்டுமே இங்கே குரல் உள்ளது. மிக எளிமையான சில அடிப்படைகளைக்கூட பேசும் சூழல் இல்லை.

நான் மதம்குறித்து எழுதிய கட்டுரைகளுக்கு வந்த எதிர்வினைகளைப் பார்க்கிறேன். எதை எழுதினாலும் உடனே அந்த எளிமையான அரசியல்சரிகளின் அளவுகோலை போட்டு கூச்சலிடுபவர்களே மிகுதியாக எழுந்து வருகிறார்கள். அவர்களின் வரலாற்றுப்புரிதல் மிகமிகக் குறைவானது. தொன்மங்களின் அழகியல், சமூகவியல் பற்றிய புரிதல் அதைவிட குறைவானது. ஆனால் நாலைந்து எளிமையான மனிதாபிமானக் கோஷங்கள், சில்லறை அரசியல்சரிகளைக் கூச்சலிடுவதனாலேனே தங்களை அறிவுஜீவிகள் என எண்ணிக்கொள்கிறார்கள்

எதற்குச் சொல்கிறேன் என்றால் நான் எழுதிய தீட்டு கட்டுரை ஆலயங்களில் மாதவிலக்கான பெண்களைத் தவிர்க்கும் போக்கை ‘முட்டுக்கொடுக்கும்’ பொருட்டு எழுதப்பட்டது என சில ஆவேசமான கடிதங்கள் வந்தன.. வெறுமே அரசியலில் ஊறி மொக்கையாகிவிட்ட மூத்தவர்கள் எழுதினால் அதைப்புரிந்துகொள்வேன். அவர்களை பொருட்படுத்தவேண்டியதில்லை. ஓரளவு படிக்கும் இளைஞர் சிலர் எழுதியிருந்தது கசப்பூட்டியது.

ஆலயத்துச் சடங்குகளில் நிகழும் அனைத்து நவீனமாறுதல்களையும் வரவேற்பவன் நான். தலித்துக்கள் பூசகர்களாவதை ஆதரித்து எழுதியவன். அத்தகைய நோக்கு கொண்டுள்ளவன் என்ன எழுதியிருப்பான் என்றுகூட யோசிக்க முடியாத அந்த மொண்ணைத்தனத்தையே இணையச்சூழலின் வெற்று அரசியல்கூச்சல் உருவாக்குகிறது. அதைக்கடந்து இங்கே சிலவற்றை விவாதிப்பதே கடினம். ஆயினும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.

’தீட்டு ’கட்டுரையின் சாரம் இதுவே.

அ. எந்த மதமும் தொல்குடிச் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் எடுத்து விரிவாக்கிக்கொண்டே தன் வழிபாட்டுமுறையை அமைத்திருக்கும். ஏனென்றால் ஆழ்படிமங்களும் தொன்மங்களும் பழங்குடி மரபில் முளைத்தவை.

ஆ.தீட்டு வெறுமே ‘அருவருப்பால் விலக்கும்’ சடங்கு அல்ல. அது பிறப்பு இறப்பு தொடர்பான தொல்குடிகளின் புரிதல்சார்ந்தது. அவ்வாறு பலவகையான விலக்குகள் தொல்குடிகளில் உள்ளன

இ.தொல்குடிகளின் வாழ்விலிருந்து எடுத்து விரிவாக்கப்பட்ட ஒரு தொன்மம்,சடங்கு என்பதனாலேயே அதற்கு இருமுகம் உண்டு. ஒருபக்கம் தெய்வம் ஆணென்றிருக்கையில் அது விலக்கு. இன்னொருபக்கம் தெய்வம் அன்னை என்றிருக்கையில் அது புனிதமான பொலிதல். ஆகவே அதை ஒற்றைப்படையாகப் பார்ப்பது பிழை

ஈ ஏனென்றால் பழங்குடி நம்பிக்கைகள் எப்போதுமே இப்படி இருபாற்பட்டவை. அவை மாதவிலக்கை விலக்கு என்றும் பார்க்கும். மறுபக்கம் வளத்தின் அடையாளமாகவும் பார்க்கும்

உ. இன்றைய வாழ்க்கையில் இத்தகைய விலக்குகள் போன்றவற்றில் இருந்து மக்களின் உள்ளம் விலகி வருகிறது. இவை மதத்தின் ஆழமான மையப்படிமம் சார்ந்தவை அல்ல. சடங்குகளே. ஆகவே அவை மெல்ல மாறுதலடைவது இயல்பானது. வரவேற்புக்குரியது.

இதே நோக்கில்  சபரி மலை பற்றி.முன்பு நான் எழுதிய கட்டுரைக்கும்  [ கேரளத்தின் தலித் பூசகர்கள் மூன்று வினாக்கள்] இதேபோல மொண்ணையான அரசியல்சரிகளைப் பேசுபவர்களின் போலிக்குமுறல்கள் கிளைத்து வந்தன. ஒன்றைப் புரிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் தன்னை ஒரு வேடத்தில் நிறுத்தி பொங்கிப் பிலாக்காணம் வைப்பது ஒரு தமிழ்மனநோய்

அக்கட்டுரையின் சாரத்தை மீண்டும் இவ்வாறு சுருக்கி அளிக்கிறேன்

அ. சபரிமலையில் பெண்கள் விலக்கப்படுவதில்லை. அது பொய்ப்பிரச்சாரம். முதல் மாதவிலக்கிலிருந்து இறுதி மாதவிலக்குவரை மட்டுமே பெண்கள் விலக்கப்படுகிறார்கள்.

ஆ. அது அவர்கள் பெண்கள் என்பதனால் அல்ல. ஐயப்பன் துறவியாக, காம ஒறுப்பு நோன்பு கொண்டவராக உருவகிக்கப்பட்டிருக்கிறார் என்பதனால்தான். அன்றும் இன்றும் துறவிகளுக்குரிய நோன்பு அது

இ. உருவ வழிபாடு என்பது அத்தகைய பலவகையான உருவகங்களால் ஆனது. குருவாயூரில் இறைவன் கைக்குழந்தை. திருவனந்தபுரத்தில் அவர் துயின்றுகொண்டிருக்கிறார். ஏற்றுமானூரில் அவர் அரசர். இக்குறியீடுகளை பலவகையான சடங்குகள் வழியாக நிலைநிறுத்துவதே உருவவழிபாட்டின் இயல்பு. தெய்வங்கள் காலையில் நீராட்டுக்குச் செல்வதுண்டு. இரவில் பள்ளியறையில் ஊஞ்சலில் வைத்து ஆட்டி தூங்க வைப்பதுண்டு. கடவுள் தூங்குவாரா என்று கேட்கும் முட்டாளுக்கு பாவபக்தி என்றால் என்ன என்று தெரியவில்லை.  பக்தனுக்குத்தெரியும் அலகிலா பரம்பொருள் தூங்குவதில்லை, விழிப்பதில்லை, அது உருவம் கொண்டது அல்ல என்று. ஆனால் அதை உள்ளத்தால் உணர முடியாது. ஏனென்றால் மானுட உள்ளம் உருவங்களையே உணர்ச்சிகரமாக அணுகமுடியும். ஆகவே அப்பரம்பொருளை அவ்வாறு உருவம் அளித்து அவ்வுருவை மெய்யென்று நம்பி உணர்ச்சிகரமாக வழிபடுகிறான். அருவமான அனைத்தையும் நாம் உருவகித்தே அணுகுகுகிறோம். எந்த மதமாக இருந்தாலும்.

ஈ. உருவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் இந்த உருவகங்களை ஏற்றாகவேண்டும். அந்தத் தெய்வத்தை வழிபட அந்த உளநிலைக்குள் தாங்களும் நுழைந்தாகவேண்டும். எனக்கு உருவவழிபாட்டு நம்பிக்கை இல்லை. ஆகவே அந்த உருவகங்களை ஒருவகையான கலைச்செயல்பாடுகளாக மட்டுமே நான் பார்க்கிறேன். அக்கோயில்களில் வழிபடும்பொருட்டுச் செல்வதில்லை. ஆனால் ‘அதெப்படி சாமி சின்னப்புள்ளையா இருக்கமுடியும்? மம்மு ஊட்டிவிட்டாத்தான் சாமி திங்கும்னா அது எப்டிடா சாமியாக முடியும்?” என்பதுபோன்ற மொண்ணைத்தனமான ‘பகுத்தறிவு’க் கேள்விகளைக் கேட்பதில்லை. அந்த உருவகங்களின் அழகைப் புரிந்துகொள்கிறேன்

உ. வெற்றுப் பகுத்தறிவை மட்டுமே அளவீடாகக் கொண்டு இத்தகைய குறியீடுகளைத் தகர்க்க முனைவது ஒருவகையில் மதத்தின் மீதான தாக்குதல். இது இந்துமதத்திற்கு மட்டுமே இங்கே செய்யப்படுகிறது. புர்க்கா போடுவது மத உரிமை என்று வாதிடுபவர்களே சபரிமலை ஆலயத்தில் இளம்பெண்களை விடாவிட்டால் அதை இடிக்கவேண்டும் என்று வாதிடுகிறார்கள். இந்த வகையான  ‘சீர்திருத்த’ நோக்குடன் எழும் எவருக்கும் இந்துமதம் மீது மதிப்போ அக்கறையோ அறிதலோ இல்லை. இவர்களில் பலர் இந்துமதம் அழியவேண்டும் என்றே சொல்லிவருபவர்கள். இந்துமதம் அழியவேண்டும் என்று சொல்லிக்கொண்டே அதில் சீர்திருத்தம்பேச வருபவர்களை இந்துக்கள் எப்படி எதிர்கொள்ளவேண்டும்?

ஊ. ஒரு வழிபாட்டுமுறை தொன்மையான சடங்காக இருந்து இன்றும் மானுடநிகர்த்தன்மைக்கு எதிராக நீடிக்கும் என்றால் அதைக் களைவது இன்றியமையாதது. அனைவருக்கும் ஆலயநுழைவை, அனைத்துச் சாதிகளும் அர்ச்சகர் ஆவதை, ஆலயங்களில் உயிர்ப்பலி தடுக்கப்படுவதை இன்னும் இவைபோன்ற பல சடங்குகளை உறுதியாக வலியுறுத்தவேண்டும் என்பதே என் எண்ணம்

எ. ஆனால் சபரிமலையில் கருக்கோள் அகவையிலுள்ள பெண்கள் நுழைவது அத்தகையது அல்ல. அது அந்த தெய்வம் எப்படி உருவகம் செய்யப்பட்டுள்ளது என்பதைச் சார்ந்தது. இதையே இன்னொரு கோணத்தில் சொல்லலாம். ஆற்றுகால் பகவதி சினம் கொண்ட கன்னி. ஆகவே பகவதி எழும் பூசைநாளில் ஆண்கள் கோயிலில் மட்டுமல்ல அன்னைக்குப் பூசைநிகழும் ஒட்டுமொத்த திருவனந்தபுரத்திலேயே நடமாடமுடியாது. யாரேனும் உயர்நீதிமன்ற நீதிபதி இது ஆண்களின் வழிபாட்டுரிமையை மறுக்கிறது என்று சொல்வார் என்றால் அதுவும் எதிர்க்கப்படவேண்டியதே

ஐ. ஆனால் ஒட்டுமொத்தமாக சபரிமலை அய்யப்பன் குறித்த தொன்மத்தை அத்தெய்வத்தை வழிபடுபவர்கள் மாற்றிக்கொள்வார்கள் என்றால், இயல்பாக அது மாறுபடும் என்றால், இளம்பெண்கள் அனுமதிக்கப்படுவதிலும் பிழையில்லை. அவ்வாறான மாற்றங்கள் இயல்பாக நிகழ்ந்துகொண்டேதான் உள்ளன.அது உள்ளிருந்து நிகழவேண்டியது. அதற்குரிய விவாதங்கள் நிகழ்வது இன்றியமையாதது

இந்த மொத்த விவாதத்திலும் நான் சுட்டிக்காட்டுவது ஒன்றையே. மானுடநிகர்த்தன்மையை இலக்காகக் கொண்ட அனைத்து மாற்றங்களும் வரவேற்கப்படவேண்டியவையே. ஆனால் அவை உண்மையிலேயே மானுடநிகர்த்தன்மைக்கு எதிரானவையா என்று பார்க்கப்படவேண்டும். உருவவழிபாட்டின் அடிப்படை உருவகங்களைத் தகர்க்கும்படி அமையக் கூடாது.

ஆகவே மதத்தின்மேல் ஆர்வமும் அதைப் புரிந்துகொள்ளும் நுண்ணறிவும் கொண்டவர்களால் செய்யப்படவேண்டும். மொண்ணையான அரசியல்சரிகளை சிந்தனையாகக் கொண்டவர்கள் நுழைந்து களமாடும் இடம் அல்ல அது. எல்லாவகையிலும் இந்து மதத்தை அழிக்கமுனைபவர்கள் இத்தகைய விவாதங்களை தங்களுக்கான வாய்ப்பாகக் கொள்வதை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்

அனைத்துக்கும் மேலாக ஒன்றுண்டு. இத்தகைய விவாதங்களில் மதங்களைப்பற்றிய மதிப்பும், புரிதலும் கொண்டவர்கள் அதேசமயம் அதை நவீன ஜனநாயகக் பண்புகளுக்கும் மானுநிகர்க்கொள்கைகளுக்கும் ஏற்ப மாற்றியமைப்பதிலும் ஆர்வம் கொண்டவர்கள் கருத்துரைத்து முன்னணிக்கு வந்தாகவேண்டும். இல்லையேல் அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டு ஒட்டுமொத்தமாக இந்துமதத்தை இழித்துரைத்து அழிக்க நினைப்பவர்கள் ஒரு பக்கமும் அவர்களால் சீண்டப்பட்ட அடிப்படைவாத மதவெறியர்கள் மறுபக்கமும் நின்று களமாடும் சூழலே எழும். அதன் ஒட்டுமொத்த விளைவு மதவெறியர்கள் மதத்தைக் கைப்பற்றிக்கொள்வதில் சென்று நிற்கும். அதுதான் மதத்திற்கு பெரிய இக்கட்டுகளைக் கொண்டுவருவது

ஜெ

========================================================

குருவாயூரும் யேசுதாஸும்
கேரள தலித் அர்ச்சகர் நியமனம்
சாஸ்தா
======================================================================
அர்ச்சகர்கள், வரலாறு, கடிதங்கள்
நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்
நான் இந்துவா?
இந்துமதம்,சம்ஸ்கிருதம்,பிராமணர்
முந்தைய கட்டுரைசக்ரவர்த்தியின் தீர்ப்பு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70