இருளும் ஒளியும்

devil

தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் அமேசானில் வாங்க

நான் சிறுவனாக முழுக்கோடு என்ற ஊரில் வளர்ந்தேன். அன்றெல்லாம் அங்கே நிறையபேர் அம்பாடி ரப்பர் எஸ்டேட்டின் ஊழியர்கள். அது அன்று மதிப்புமிக்க வேலை. ஏனென்றால் நிரந்தரமான மாதஊதியம். அத்துடன் ரப்பர்பால்சீவி சேர்த்து ஒப்படைத்துவிட்டு திரும்பிவரும்போது சைக்கிள் நிறைய விறகோ பச்சைப்புல்லோ கொண்டுவரலாம். அது அன்றாடச்செலவுக்கு.

ஆனால் ஒரே சிக்கல் அதிகாலை மூன்றுமணிக்கே கிளம்பிச்செல்லவேண்டும். ஐந்துமணிக்கெல்லாம் வேலையை தொடங்கிவிடவேண்டும். ரப்பர் மரங்களை வெயில் எழுவதற்கு முன்னரே பட்டைசீவி பால்வடித்துவிடுவார்கள். வெயில் வந்துவிட்டால் பால் உலர்ந்து மேற்கொண்டு ஊறாமலாகிவிடும். காலை பத்துமணிக்கெல்லாம் பாலைச்சேர்த்து கொண்டுசென்று மையத்திற்குக் கொடுத்துவிட்டு கிளம்பிவிடலாம். வழியிலேயே புல்லறுப்பதென்றால் மீண்டும் ஒருமணி நேரம். இரண்டுமணிக்கு மதியச்சாப்பாட்டுக்கு திரும்பிவிடலாம்.

மதியம் ஒரு நீண்ட தூக்கம்போட்டபின் சிவந்த கண்களுடன் சாயங்காலம் டீக்கடைகளில் காணப்படுவார்கள் அம்பாடி ஊழியர்கள். எங்களூரில் அவர்கள்தான் கருக்கிருட்டுக்கு முன்னரே விழிப்பவர்கள். அவர்கள் காணும் காட்சிகள் வழியாக தெரியவரும் ஊரே வேறு. ஆகவே அவர்களின் பேச்சுக்களில் ஒரு தனி ஆர்வம் டீக்கடைக்காரர்களுக்கு உண்டு. அப்பு அண்ணன் சொல்லும் பேய்க்கதைகளை டீக்கடையில் கூடியவர்கள் விழிபிதுங்கி கேட்டிருப்பார்கள்.

அப்போதெல்லாம் எந்த ஆர்வமும் இல்லாமல் ஓரமாக அமர்ந்து குழிந்த கன்னம் மேலும் குழிய டீ குடிப்பவர் கிருஷ்ணபிள்ளை மாமா. பழுத்த யதார்த்தவாதியாதலால் எப்போதும் எதையும் உற்சாகமாகவோ உத்வேகமாகவோ அவர் சொல்லிக் கேட்டதில்லை. அப்புவண்ணனின் பேய்க்கதை வர்ணனைகள் முடிந்தபின்னர் சிலசமயம் கிருஷ்ணபிள்ளை மாமாவிடம் “சங்கதி உள்ளதா பிள்ளேச்சா?” என்று சிலர் கேட்பார்கள். “என்னமோ அவனுக்குத் தோணுது” என்பார். “பிள்ளை கண்டதுண்டா பேயை?”. அவர் பீடியை இழுத்து புகைவிட்டு இல்லை என தலையாட்டுவார்

ஒருநாள் நான் டீக்கடைக்குச் சென்றபோது அப்பு அண்ணன் உற்சாகத்தில் பெஞ்சில் அமர்ந்தபடியே துள்ளிக்கொண்டிருந்தார். “இனி யாருக்குடே திருட்டாந்தம் வேணும்? நம்பாதவன் ஆருடே?” என்றார். நான் அருகே நின்ற சின்னமுத்தனிடம் “என்னவாக்கும் சங்கதி?” என்றேன். “கிருஷ்ணபிள்ளைய பேய் அடிச்சுப்போட்டு” நான் திகைத்தேன்.”அல்ல காய்ச்சல். ஜன்னி வரை வந்துபோட்டு. ஆஸ்பத்திரியில கெடக்குதாரு” என்றான் சின்னமுத்தன்

”பேயில்லடே, ஒடி! ஒடியாக்கும்!” என்றார் அப்பு அண்ணன். நான் பெஞ்சில் அமர்ந்தேன். அப்பு அண்ணன் நடந்ததைச் சொன்னார். காலையில் அப்பு அண்ணானும் கிருஷ்ணபிள்ளையும் நேசமணினும் பிறரும் ஒரு பெரிய திரளாகச் சேர்ந்துதான் அம்பாடிக்குச் செல்வார்கள். வழக்கமாக முதலில் எழுபவன் நேசமணி தான். அவன் சாலையில் நின்று “கூவே! கூவே! கூ!” என்று உரக்கக் கூச்சலிடுவான். அந்த ஒலிக்குப்பழகிப்போய்விட்ட பால்வெட்டுக்காரர்கள் பாயிலிருந்து முனகியபடி எழுந்து முகம் கழுவி முந்தையநாள் மிஞ்சிய மயக்கிய மரவள்ளிக்கிழங்கும் மீன்கறியும் போட்டு கலத்திலிட்டு கனல் அடுப்பில் வைத்திருக்கும் கஞ்சியை மனைவியை எழுப்பாமல் தாங்களே எடுத்துக்குடித்துவிட்டு சைக்கிளில் கிளம்பிவிடுவார்கள்.

கூவியபடியும் சைக்கிள் மணியை ஒலித்தபடியும் கிராமத்துத் தெருக்களில் அவர்கள் செல்லும் ஒலிகேட்டு ஒவ்வொருவராகச் சேர முழுக்கோடு எல்லை கடந்து புண்ணியம் விலக்கை அடையும்போது பதினெட்டுபேர் சேர்ந்துவிடுவார்கள். அதன்பின் சைக்கிளில் ஏறி மிதிக்கத்தொடங்கினால் ஐந்துமணிக்கு ஆலஞ்சோலை கடந்து அம்பாடி எஸ்டேட்டுக்குள் நுழையமுடியும். சைக்கிளில் ஏறியபின்னர் அவர்கள் பேசிக்கொள்ளமுடியாது. எதிரில் ரப்பர்தடி ஏற்றிக்கொண்டு லாரிகள் வரும். வழியில் மாடுகள் நிற்கும். முழுக்கவனமும் சாலையில் இருக்கவேண்டும்.

கிருஷ்ணபிள்ளையின் வீடு கடைசியாக இருந்தது. அவரது வீட்டுக்குமுன்னால் நின்று மணியடித்து அழைத்தபோது அவரது மனைவி ஜானு எழுந்து வந்து “அவ்வோ கெடப்பாக்கும். நல்ல காய்ச்சலு உண்டு பாத்துக்கிடுங்க. இண்ணைக்கு வரேல்லன்னு சொல்லிப்போடுங்க” என்றிருக்கிறாள். சரி என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செல்லும் சைக்கிள் ஓசையைக்கேட்டு அரைக்காய்ச்சலில் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை பாய்ந்து எழுந்தார். வழக்கமாகச் செய்வதுபோல பாய்ந்தோடி உமிக்கரி எடுத்து பல்தேய்த்து முகம் கழுவி அடுப்பில் கிடந்த மீன்கஞ்சியைக் குடித்துவிட்டு சைக்கிளில் ஏறி சாலைக்கு வந்தார்

சாலையில் எவருமில்லை. அப்போதுதான் அவர் தூக்கத்திலிருந்தே முழுமையாக விழித்தெழுந்தார். முந்தையநாள் நல்ல காய்ச்சல் இருந்தமையால் கொஞ்சம் சாராயம் வாங்கி அதில் எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்தவர்தான். தலைசுழன்றாலும் எப்படியாவது மிதித்து நண்பர்களைச் சந்தித்து சேர்ந்துவிடலாம் என்று நினைத்து ஏறிக்கொண்டார். சைக்கிளை மிதிக்க மிதிக்க குளிர்காற்று கொஞ்சம் ஊக்கத்தைத் தந்தது.

அன்றெல்லாம் களியல் என்னும் ஊரைத் தாண்டினால் காடும் ரப்பர்த்தோட்டங்களும்தான். இருபக்கமும் இருட்டு ஊறிக்குவிந்துகிடப்பதுபோல மரக்கூட்டம். வானத்தில் மேகங்கள் நிறைந்து மெல்லிய மின்னல்கள் வெட்டிக்கொண்டிருந்தன. நிலவொளியோ விண்மீன் ஒளியோ இல்லை. கண்பழகிய வெளிச்சத்தில் சாலை மட்டும் தெரிந்தது. அச்சாலைக்கு அவரது சைக்கிளே நன்றாகப் பழகியிருந்தது.

அவர்சென்று கொண்டிருக்கையில் தொலைவில் நாய்கள் பெருங்குரலெடுத்துக் குரைப்பதைக் கேட்டார். அப்பகுதியில் நாய்கள் இல்லையே என எண்ணிக்கொண்டார். காட்டுநாய்கள் அப்படிக் குரைப்பதில்லை. நெருங்கும்தோறும் சாலையில் நிறைய நாய்கள் வால்களை விடைத்து காதுகளை முன்குவித்து கால்களை மாற்றி மாற்றி வைத்து பதறிக்கொண்டும் குரைத்துக்கொண்டும் நிற்பதைக் கண்டார்

அவையெல்லாம் களியலுக்கு இப்பால் திற்பரப்பு சாலைச்சிந்த்ப்பைச் சேர்ந்த தெருநாய்கள் என்று தெரிந்தது. பலநாய்களை அவaரால் அடையாளம் காணவும் முடிந்தது. அவை உச்சகட்ட அச்சத்தில் கழுத்துமயிர் சிலிர்த்திருக்க நின்றுகொண்டிருந்தன. இன்னும் கொஞ்சம் துணிந்த நாய்கள் முன்னால் சென்று நின்றிருந்தன. திடீரென்று ஒரு நாய் கடுமையாகக்குரைக்க மற்றநாய்களும் பெருங்குரலில் சேர்ந்துகொண்டன. நாய்கள் மேல் மோதாமலிருக்க சைக்கிளை திருப்பித்திருப்பிச் சென்றார்.

அங்கே சாலையோரமாக பள்ளத்தில் ஒரு நாய் நின்றிருப்பதைக் கண்டார். கன்னங்கரிய நாய். மற்றநாய்களை விட ஒரு மடங்கு பெரியது. அது சினத்துடன் தலையை நன்றாகத் தாழ்த்தி வாலை நீட்டி மெல்ல உறுமியபடி நின்றது. அதைச்சூழ்ந்து நின்றிருந்த தெருநாய்கள் அதை தப்பவிடாமல் குரைத்துக்கொண்டிருந்தன. ஊருக்குள் நுழைந்த அந்த நாயை அவர் குரைத்து துரத்தி காட்டின் எல்லை வரைக் கொண்டுவந்து விட்டிருக்கின்றன என்று அவர் ஊகித்தார்

என்ன நாய் அது என்று தெரியவில்லை. உள்ளூர் நாய் இல்லை. எஸ்டேட்டில் யாராவது வளர்க்கும் வெளிநாட்டு நாயாக இருக்குமா என்று தோன்றியது. தெருநாய்கள் அதைக் கடித்துக்கொன்றுவிடும் என்று நினைத்து சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு கல்லை எடுத்தார். அதற்குள் அந்த கரிய நாய் மெல்ல மெல்ல உறுமியபடி நகர்ந்து காட்டுக்குள் சென்றது.ஏதோ ஓர் எல்லையை கடந்தது போல திடீரென்று அதன் தோரணை மாறியது. பெருங்குரலில் கர்ஜித்தபடி ஒரு தெருநாயின்மேல் பாய்ந்து கழுத்தைக் கடித்து தூக்கி உதறி வீசியது. மற்றநாய்கள் ஊளையிட்டபடி சிதறி ஓடின. கடிபட்ட நாய் எழமுயன்று கீழே விழுந்து துடித்தது. அதன் கால்கள் மண்ணைப்பிராண்ட வால் புழுதியில் அளைந்தது.

மற்றநாய்கள் ஊளயிட்டபடி விலகி தொலைவுக்குச் சென்றன. அங்கே நின்றபடி ஓலமிட்டு கதறியழுதன. கரியநாய் சாலைக்கு வந்து நின்று தலையை தூக்கி அவற்றை நோக்கி மீண்டும் உறும அவை அஞ்சி அழுதபடி ஓடி இருளுக்குள் மறைந்தன. கிருஷ்ணபிள்ளை தன் உடல் அச்சத்தில் விதிர்த்து செயலற்று நிற்பதை உணர்ந்தார். சைக்கிள் இல்லாவிட்டால் அவர் விழுந்திருப்பார். ஏனென்றால் அந்தக் கரிய நாய் கடைசியாக உறுமியபோது மனிதக்குரலில் வசைச்சொல் ஒன்றைச் சொல்வதாக அவர் கேட்டார்

அந்த நாய் அவரை நோக்கித் திரும்பியது. அதன் கண்கள் இரு செங்கனல் துண்டுகள் போலிருந்தன. அது வாயைத்திறந்து நாவால் மோவாயை நக்கியபடி அருகே வந்தபோது “யார்நீ?” என்று அடிக்குரலில் உறுமியது. ”எனக்க தெய்வங்களே! எனக்கம்மே” என்று அலறியபடி கிருஷ்ணபிள்ளை திரும்பி சைக்கிளில் ஏறிக்கொண்டு வெறியுடன் மிதித்தார். அவருடைய பழகிப்போன கைகால்கள் அதைச்செய்தமையால் அவர் தப்பினார். அவரைத்தொடர்ந்து கால்நகங்கள் தரையில் பிராண்டும் ஒலியுடன் அந்த நாய் துரத்திவந்தது. ஆனால் குரைக்கவில்லை.

இருமுறை திரும்பிப்பார்த்த அவர் அதன் அனல்விழிகளை மிக அருகே எனக் கண்டார். சைக்கிள் பெடலை அவரது கால்கள் இயந்திரம் போல மிதித்தன. உடலில் இருந்து வியர்வை வழிந்து உடைகள் நனைந்து காற்றில் படபடத்து துளிகள் தெறித்தன. எத்தனை தூரம் அப்படிச்செல்ல முடியும் எனத் தெரியவில்லை. சாலையில் வெண்ணிறமாக ஏதோ ஒன்று தெரிந்தது. காட்டுமாடு. அதை கடந்துசெல்லமுடியுமென்று தோன்றவில்லை. தெய்வங்களே என்று கூவியபடி அவர் சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தார். முற்றிலும் மூளை செயலற்றிருந்தமையால் சைக்கிளை நிறுத்தக்கூட தோன்றவில்லை

அது ஒரு வெண்ணிறமான மாடு. அதன் மேல் முட்டி அவர் அதன் முதுகின் மேல் உருண்டு மறுபக்கம் போய் விழுந்தார். சைக்கிள் காளைக்கு அப்பால் தரையில் கிடந்து சக்கரம் சுழன்றது. கரிய நாய் ஓடிவந்த வேகத்தில் சைக்கிள் அருகே நெருங்கி கால்களை ஊன்றி நின்றது. தலையைத்தாழ்த்தி உறுமியது. அதன் கண்களைத்தான் அவர் கடைசியாகப் பார்த்தார்.

காலையில் அவ்வழிச்சென்ற ஒரு லாரிக்காரன் அவரைக் கண்டடைந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றான். அங்கே அவர் கண் விழித்ததும் அஞ்சி நடுங்கி எழுந்து அமர்ந்து அலறினார். நர்ஸைக் கண்டதும் படுக்கையிலிருந்து எழுந்து ஓடி சன்னல்வழியாக வெளியே குதிக்கப்பார்த்தார். அவரை மயக்க ஊசிபோட்டு தூங்க வைத்தனர். உடல் மின்சாரம் பாய்ந்ததுபோல துடித்துக்கொண்டே இருந்தது. சாயங்காலம் கொஞ்சம் நினைவு வந்தபோதுதான் நடந்தவற்றைச் சொன்னார்

“அது ஒடியாக்கும் மாப்பிள” என்றார் அப்பு அண்ணா. ஒடி என்றால் என்ன என்று அவர் விளக்கினார். மலையாளக் குறவர்களின் மாந்திரீக முறைகளில் முக்கியமானது அது. பிறரும் அவர்களிடமிருந்து அதைக் கற்றுக்கொள்வதுண்டு.மலைக்குறவர்களுக்கு பலவகையான காட்டுத்தெய்வங்கள் உண்டு. அவை காட்டில் கண்ணுக்குத்தெரியாத வடிவில் வாழ்கின்றன. அவர்கள் அவற்றை பூசை செய்து வசப்படுத்தி மாந்திரீகத்திற்கு கையாள்கிறார்கள்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு வடிவம் உண்டு. சிலதெய்வங்கள் கழுகுகளைப்போன்றவை. அவை காற்றுடன் கலந்திருப்பவை. காற்றில் அவற்றின் சிறகோசையைக் கேட்கமுடியும். அவற்றின் சிறகுகளின் காற்று வந்து நம் உடலைத் தொட்டுச்செல்வதை உணரமுடியும். சில தெய்வங்கள் யானைகளைப்போல. அவற்றை முகில்களில் காணமுடியும். சில தெய்வங்கள் பன்றிகள். அவற்றை நாற்றமாக மட்டுமே உணரமுடியும். சிலதெய்வங்கள் மான்கள். அவற்றை நீரில் நிழலாட்டமாக காணலாம். சிலதெய்வங்கள் கிளிகள். அவை காட்டின் இருளுக்குள் மனிதர்களைப்போல சிரிக்கும், அல்லது அழும் அல்லது பேசும்

அந்தத்தெய்வங்களை பூசைசெய்து மகிழ்ச்சிப்படுத்தி அருளைப்பெறும் மலைக்குறவன் அவற்றின் வடிவை தான் எடுக்கமுடியும். அப்படி கழுகாக, பன்றியாக மானாக கிளியாக உருமாறும் கலையைத்தான் ஒடிவித்தன் என்கிறார்கள். ஒடியாக மாறி வரும் மிருகத்தை மனிதர்கள் அடையாளம் காணமுடியாது. பிறமிருகங்கள் கண்டுகொள்ளும். மாடுகள் மிரண்டு விலகி ஓடும். மான்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளாது. பன்றிகள் சூழ்ந்து தாக்க முயலும். ஒடியாக வந்து எதிரியை கொன்றுவிட்டு திரும்பிச்செல்வார்கள் தீயமந்திரங்களைச் செய்யும் மந்திரவாதிகள். காசுவாங்கிக்கொண்டு கொலைகளைச் செய்வதுமுண்டு.

அப்படி எவரையோ கொல்ல ஊருக்குள் வந்த ஒடிமிருகம் அந்த நாய் என்றார் அப்பு அண்ணா. “அந்த நாய்க்க உயரத்தைப்பற்றி பிள்ளைவாள் சொன்னப்பமே தெரிஞ்சுபோச்சுல்லா?” என்றார்

“ஒடிகிட்டயிருந்து எப்டிடே தப்பினாரு?” என்று நெல்சன் தாத்தா கேட்டார்.

“அது லக்கு. அவரு போய் முட்டினது எதுக்கமேலேன்னு தெரியுமா?” என்றார் அப்பு அண்ணா

“எதுக்குமேலே?” என்றேன்

“நல்ல வெள்ளைக்காளை. சுமார் ஆறடி உயரம். சைக்கிளிலே போன அண்ணன் சொல்லுதாரு அவருக்கு நெஞ்சு அளவுக்கு அந்தக்காளைக்கு உயரம்னுட்டு. காளைக்கு அந்த அளவு உயரம் உண்டா? சொல்லும்”

“இல்லை” என்றேன்

“வெள்ளைக்காளையாக்கும். காட்டிலே ஏது வெள்ளைக்காளை?”

நான் பதில் சொல்லவில்லை

“அதும் ஒடியாக்கும்.இது நாயி. அது வெள்ளைக்காளை. இருட்டிலே இருந்து தப்பி வெளிச்சத்துக்குமேலே போய் முட்டியிருக்காரு”

யாரோ நல்ல மந்திரவாதி வெள்ளைக்காளையாக எங்கோ செல்லும்போது சென்று முட்டியிருக்கிறார். காளையை எதிர்கொள்ள நாயால் முடியவில்லை. நான் பெருமூச்சுவிட்டேன்.

இந்துமதத்தில் எருது, நாகம், யானை, மயில், சேவல், போன்று பல மிருகங்கள் தெய்வங்களாக உள்ளன.மிருகங்கள் தெய்வங்களாக வழிபடப்படுவதை இந்துமதத்தை ஆராய்ந்த ஆரம்பகால மேல்நாட்டு அறிஞர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆப்ரிக்காவிலும் பிறபகுதிகளிலும் உள்ள பழங்குடிகளின் பழக்கவழக்கங்களை இங்கும் பொருத்திப்பார்த்து அதைப்புரிந்துகொள்ள முயன்றனர்.

அங்குள்ள பழங்குடிகள் தங்களை சில விலங்குகளின் வழித்தோன்றல்கள் என எண்ணிக்கொள்ளும் வழக்கம் இருந்தது. முதலை, ஆமை, எருது, கரடி போன்ற பலவிலங்குகள் அவ்வாறு மூதாதையாக எண்ணிக்கொள்ளப்பட்டன அவ்வாறு தங்களை ஒரு விலங்கின் மக்கள் என எண்ணும் பழங்குடியினர் அதை தங்கள் குலஅடையாளமாகக் கொண்டனர். இந்த குல அடையாளங்கள் டோட்டம் [totem] எனப்பட்டன.

இந்தக்குல அடையாளங்களை காலப்போக்கில் அவர்கள் தெய்வங்களாக ஆக்கினர். பலியும் படையலுமிட்டு வணங்கினர். அம்மிருகங்களின் வேடம்புனைந்தவரை தெய்வமாக எண்ணி வழிபட்டனர். பின்னர் அத்தோற்றத்தை மரத்திலும் கல்லிலும் செதுக்கி தெய்வமாக வழிபட்டனர். இதை வெள்ளையர் totem worship என்றனர்

இந்துமதத்தின் விலங்குத்தெய்வங்களை இதேபோல குலக்குறித்தெய்வங்கள் என்று அவர்கள் அடையாளப்படுத்தினர். ஆனால் முற்றிலும் தவறான ஒரு புரிதல் அது. இந்தியாவில் எங்கும் எந்தப்பழங்குடியும் தன்னை விலங்குகுலத்தைச் சேர்ந்ததாக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. விலங்குகள் குலச்சின்னமாக எங்கும் இல்லை.

அப்படியென்றால் ஏன் விலங்குகள் தெய்வமாகின்றன? மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பழங்குடிமக்களின் வழிபாடுகளையும் சரி தொன்மையான நம்பிக்கைகளையும் சரி ஒருவகையான இளக்காரத்துடன் குனிந்து கீழே பார்க்கிறார்கள். அவை அம்மக்களின் அறியாமையால் உருவானவை என்றுதான் விளக்குகிறார்கள்

மாறாக அவை அம்மக்களின் நுண்ணுணர்வால் உருவானவையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். இப்பிரபஞ்சத்தை விளக்க தொன்மையான மக்கள் அறிவியலை பயன்படுத்தவில்லை. கவித்துவத்தையே பயன்படுத்தினர். அந்தக் கவித்துவப்புரிதல்களில் இருந்து உருவானவையே இயற்கைவழிபாடும் விலங்குத்தெய்வங்களும் எல்லாம்

தொன்மையான மனிதர்கள் புயலையோ சூரியனையோ அஞ்சியோ புரிந்துகொள்ளாமலோ வழிபடவில்லை. அவற்றை கவித்துவமான குறியீடுகளாகவே வழிபட்டனர். இந்தப்பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் அலவிடமுடியாத ஆற்றலையே சூரியனாகவும் புயலாகவும் அவர்கள் கண்டனர். சூரியனையும் வாயுவையும் பற்றிய நம் பக்திப்பாடல்களில் உள்ள வர்ணனைகளை பார்த்தாலே அதைக் காணலாம். அவர்கள் தெய்வத்தை கோடிச்சூரியன் என்று வாழ்த்துவதை நாம் அறிவோம்

அதை உணராமல் பண்டைய மனிதர் சூரியனைக் கண்டு அஞ்சினார்கள். ஆகவே சூரியனை தெய்வமாகக் கும்பிட்டார்கள் என்று சொல்வது மடைமை. அதேபோன்றுதான் விலங்குகளை வழிபடுவதை குலக்குறி வழிபாடு என்று சொல்வதும். இன்றைக்கும் நம் கல்லூரிகளில் நாட்டாரியல் என்றபேரில் வெள்ளையர்கள் அரைவேக்காட்டுத்தனமாக எழுதி வைத்தவற்றையே பேராசிரியர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்

விலங்குகள் அனைத்தும் பல்வேறு விஷயங்களின் குறியீடுகள்தான். நாய் மரணத்தின் இருட்டின் குறியீடு என்றால் காளை வெளிச்சத்தின் குறியீடு. மிகப்பெரிய ஆற்றல் மிக மெல்ல வெளிப்படுவதே காளை என்பது. மிகவிரைவாக அணுகும் இருட்டே நாய். இப்படித்தான் நம்முடைய அத்தனை விலங்குத்தெய்வங்களும் பொருள்படுகின்றன. ஆரம்பித்தால் உங்களுக்கே தெரியும் முருகனின் கையில் உள்ள செந்நிறமான சேவல் தீயின் அடையாளம். நீலமயில் நீரின் அடையாளம்.

கிருஷ்ணபிள்ளை ஒரு நாயை சாலையில் பார்த்திருக்கலாம். நாய்களின் கண்கள் இருட்டில் ஒளிவிடும். அவை உறுமுவது மனிதர்கள் பேசுவதுபோலிருக்கும். பயந்து ஓடிப்போய் காளையில் முட்டி விழுந்தார். ஒரு குறியீடு பயமுறுத்தியது. இன்னொன்று காப்பாற்றியது. தெய்வங்கள் அக்குறியீடுகள்தான்.

[அமேசான் வெளியீடாக வந்துள்ள  தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் நூலில் இருந்து ]

முந்தைய கட்டுரைஅமெரிக்கக் கவிமாநாடு
அடுத்த கட்டுரைசாகித்ய அகாடமி நாவல்கள்