திரிச்சூர் நாடக விழா

 

டிசம்பர் இருபத்திரண்டாம் தேதி ஊட்டியில் இருந்து நண்பர்களுடன் காரில் வந்து கோவையில் இறங்கி பேருந்தில் நள்ளிரவு பன்னிரண்டுமணிக்கு திரிச்சூருக்கு வந்தேன். மலையாள திரைக்கதையாசிரியரூம் இயக்குநருமான லோகித் தாஸ் காரில் வந்து கூட்டிக்கொண்டு சென்றார். அவரது வீட்டுக்கு சென்றேன். லோகி இயக்க மோகன்லால் நடிக்கவிருக்கும் பீஷ்மர் என்ற படத்துக்கு திரைக்கதை எழுதுவதற்காக லோகி அங்கே தங்கியிருந்தார். ஊட்டியில் இருந்து வந்ததனால் எனக்கு திரிச்சூரில்  அவ்வளவாக குளிர் தெரியவில்லை. சென்றதுமே சமகால மலையாள இலக்கியத்தைப்பற்றி பேச ஆரம்பித்து விடியற்காலை நாலரை மணிக்குத்தான் தூங்கினோம்.

திரிச்சூர் ஆசிய நாடகவிழா காலையில் தொடங்கியிருந்தது.[ ITFOK, International Theatre Festival of Kerla ]  நாங்கள் மாலையில்தான் செல்ல முடிந்தது. இந்தவிழாவின் அமைப்பு மூன்று கட்டங்கள் கொண்டது. காலையில் நடிகர்கள் இயக்குநர்களுடன் உரையாடல், அறிமுகம் போன்றவை. மதியம் கருத்தரங்கு. மாலையில் கேரளத்தைச் சேர்ந்த சிறு நாடகங்கள். இவையெல்லாம் கேரள சங்கீத நாடக அக்காதமியின் உள்ளரங்கத்தில் நடைபெறும். மாலை ஏழுமணிக்கு வெளியே எழுப்பப்பட்ட இரண்டாயிரம் பேர் அமரத்தக்க தற்காலிகக் கொட்டகையில் பிரதான நாடகங்கள்.

நாங்கள் சென்றபோது கொட்டகையில் முழுக்க ஆள்நிரம்பியிருந்தது. லோகியின் மனைவியும் இரு மகன்களும் பக்கத்து ஊரான ஆலுவாவில் இருந்து வந்திருந்தார்கள். இடம்பிடித்து அமர்ந்துகொண்டோம். கேரளப்பண்பாட்டுத்துறை அமைச்சர் எம்.ஏ.பேபி உரையாற்றி விழாவை துவங்கிவைத்தார். எம்.ஏ.பேபி நவீன இலக்கியங்களில் ஆழ்ந்த அறிமுகமும், இலக்கியவாதிகளுடன் நல்ல பழக்கமும் கொண்ட அமைச்சர். பொதுவாக கேரள பண்பாட்டுநடவடிக்கைகளில் அவரது தலைமையில் ஒரு வேகம் காணப்படுகிறது என்றார்கள். கேரள சங்கீத நாடக அக்காதமி தலைவர் நடிகர் ‘பரத்’ முரளி உரையற்றினார்.

முதல் நிகழ்ச்சி பெங்கிங் ஓபரா குழுவினரின் சீன ஓபரா. இயக்குநர் வெங் குஷன். ஷெய் ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த இக்கலையை ஒரு சடங்குகலையாக அங்கே கருதுகிறார்கள். மரபான முறையில் நெடுங்காலம் பயிற்சி எடுத்தவர்களே இதை நடிக்க முடியும். நாடகம், நடனம், கழைக்கூத்து ஆகியவை நுட்பமாக கலந்த கலைவடிவம் இது. சீன புராணங்கள் மற்றும் நாட்டார்க்கதைகளை அடிப்படையாகக் கொண்டு இவை நடிக்கப்படுகின்றன.

முதல் கதை  ”தாமரை விளக்கு”. இளவரசி ஒருத்தி காட்டுமன்னனை காதலிக்கிறாள். அவளை மன்னர் மலையில் கொண்டுசென்று தள்ளுகிறார். அவளை அவள் மகன் காப்பாற்றி கூட்டிவருகிறான். மாந்திரிக சக்தி உள்ள ஒரு விளக்கு அவனுக்கு உதவுகிறது. உக்கிரமான வாள்சண்டைகள் நிறைந்த நாடகம் இது. சிலசமயங்களில் ஜெட்லீயின் சண்டைப்படம் பார்க்கும் உணர்வு. நடிகர்கள் அந்தரத்தில் சுழன்று பறந்தார்கள். ஏழுட்டு பொருட்களை ஒரே சமயம் அந்தரத்தில் சுழலவிட்டார்கள்.

இரண்டாவது ஓபரா குரங்கு மன்னர் என்ற கதை. குரங்குமன்னரின் உல்லாசங்கள் வேடிக்கைகள் அவரது அரசாட்சி ஆகியவற்றைச் சித்தரிக்கிறது. பொதுவாகவே குழந்தைகள் ரசிப்பதற்கான எளிமையான வடிவம் கொண்ட கலை இது. பளபளக்கும் ஆடைகள், விதவிதமான கிரீடங்கள், கண்ணில் நிற்கும் முகமூடிகள், நகைகள் என அரங்கில் ஒரு விசித்திரக்கனவைக் காணும் அனுபவத்தை அளித்தது.

இரண்டாம்நாள் மலையாள நாடகம். திரிச்சூர் ரூட்ஸ் என்ற நாடக அமைப்பினால் நடத்தப்பட்ட  முத்ரா ராட்சஸம். கிபி நாலாம் நூற்றாண்டில் விசாகதத்தன் எழுதிய சம்ஸ்கிருத நாடகத்தின் மலையாள நவீன நாடக வடிவம் இது. இதை எழுதி இயக்கியவர் ஜோஸ் சிறமேல் என்ற நாடகக் கலைஞர். பதினைந்துவருடம் முன்பு ஜோஸ் உருவாக்கிய இந்நாடகத்தை 1987 ல் காசர்கோட்டில் நான் பார்த்திருக்கிறேன். அரங்கில் என்னைக் கவர்ந்த முதல் நவீன நாடகம் இதுதான். ஜோஸ் ஒரு அசலான கலைஞர். ஆனால் பெருங்குடிகாரர். ஆகவே தன் கலைத்திறனை முழுக்க வெளிப்படுத்தமுடியாமல் அழிந்தவர். குடியிலால் விரைவிலேயே இறந்தார். காசர்கோட்டில் நாடகம் முடிந்தபின் அவரைக் கண்டு நான் சில சொற்கள் பேசியிருக்கிறேன்.

முத்ரா ராட்சஸத்தின் மையக்கதாபாத்திரம் சாணக்யன். தன் தந்திரங்களால் ஒரு மாபெரும் தேசத்தை உருவாக்கிக்காட்டிய பேரமைச்சரின் கருணையையும் பெருந்தன்மையையும் இக உலக சுகங்களில் முற்றிலும் ஈடுபடாத அவரது விலகலையும் காட்டுகிற நாடகம் இது. கொடுங்கோலர்களான நந்தர்களை வீழ்த்தி சந்திரகுப்த மௌரியனை ஆட்சிக்கட்டிலில் நிலைநாட்டுகிறார் சாணக்யர். ஆனால் பிரச்சினைகள் தீரவில்லை. ஒரு காட்டுவாசி மன்னரையும் அவரது படைகளையும் கூட்டுசேர்த்துக்கொண்டுதான் அவ்வெற்றி அடையப்பெற்றது. அதற்காக பாதி அரசை அவருக்கு வாக்களித்திருந்தார் சாணகியர்

ஆனால் அம்மன்னர் சந்திரகுப்த மௌரியனைக் கொன்று முழு நாட்டையும் கைப்பற்றும் திட்டங்களில் இருக்கிறார். இந்நிலையில் தனநந்தனின் அமைச்சரான ராட்சஸன் என்ற வீரர் தன் எஜமானர்களைக் கொன்ற சந்திரகுப்த மௌரியன் மேல் கடுமையான கோபத்துடன் அவனை அழித்துப் பழிவாங்கும் சபதத்துடன் நகருக்கு வெளியே பதுங்கியிருக்கிறார். தோற்றோடிய நந்தவம்சத்துப் படைகளை அவர் ஒன்றுதிரட்டியிருக்கிறார்.

இவ்விரு ஆபத்துகளையும் சாணகியர் மதிநுட்பத்தினாலேயே எதிர்கொள்கிறார். சந்திரகுப்த மௌரியனைக் கொல்ல ராட்சஸன் அனுப்பிய கொலைகாரர்களை ஏமாற்றி அவர்களைக் கொண்டு காட்டுவாசி மன்னரையும் அவரது மகனையும் கொல்லச்செய்கிறார். ஆகவே தோழனைக் கொன்றவன் என்ற பழி சந்திரகுப்த மௌரியன் மேல் வராமலாகிறது. காட்டுவாசிப்படைகள் ராட்சஸனுக்கு எதிராக ஆகின்றன. ஆனால் காட்டுவாசி மன்னனின் கடைசி மகன் சந்தேகம் கொண்டு தன் படைகளுடன் ஓடிப்போகிறான். அவனை சந்தித்து ராட்சஸன் தன்னுடன்சேர்த்துக்கொள்கிறார்.

இந்நிலையில் ராட்சஸனின் முத்திரை மோதிரம் சாணக்யர் கையில் அகப்படுகிறது. மிகதந்திரமாக சாணக்யன் அந்த முத்திரை மோதிரத்தைப் பயன்படுத்தி ஓலைகளை உருவாக்கி ராட்சஸனை அந்த காட்டுவாசி மன்னன் ஐயப்படும்படிச் செய்துவிடுகிறார். தன்னை காட்டிக்கொடுத்து சந்திரகுப்த மௌரியனின் அமைச்சராக ஆவதற்கு ராட்சஸன் சதிசெய்வதாக இளம் மன்னன் ஐயப்பட்டு அவரைக் கொல்ல முயல ராட்சஸன் தப்பி ஓடி மகதத்துக்கே வருகிறார்.

மகதத்தில் சாணக்யர் கைதுசெய்து வைத்திருக்கும் தன் உயிர்த்தோழரான சந்தனதாசன் என்ற வைர வணிகரைக் காப்பாற்ற ராட்சசன் எண்ணுகிறார். இந்தத்தோழர் ராட்ஸஸனின் குடும்பத்தை பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பவர். சாணக்யர் எத்தனைகேட்டும் அவர்களை காட்டிக்கொடுக்க மறுப்பவர். அதற்காக கொலைக்களம் வரைச்செல்ல தயாரானவர்.

ஆனால் கைதான ராட்சஸனை சாணகியர் சந்திக்கிறார். தன் மன்னர் தோற்றபின்னும் விசுவாசத்தைக் கைவிடாத ராட்சசன் மேல் தனக்கிருக்கும் அளவிலா மதிப்பை சாணக்யர் வெளிப்படுத்துகிறார். தன் பணி முடிந்தது, பேரரசின் பதவிகளில் தனக்கு நாட்டமில்லை என்கிறார் சாணக்யர். ஒரு நல அமைச்சனிடம் இளம் சந்திரகுப்த மௌரியனை ஒப்படைக்கவே தான் விழைவதாகச் சொல்கிறார். சந்தனதாசனின் உயிருக்கு விலையாக சாணக்யர் ராட்சசனிடம் கோருவது அவர் சந்திரகுப்த மௌரியனின் அமைச்சர் பதவிக்கான வாளைப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே. ராட்சசன் வேறு வழியில்லாமல் வாளைப் பெற்றுக்கொள்கிறார். அவரிடம் அரசை ஒப்படைத்துவிட்டு வனவாசம்சென்று அங்கே தவம்செய்கிறார் சாணக்யர். இதுவே முத்ரா ராட்சசத்தின் கதை.

மூலநாடகத்தில் உள்ள சூத்திரதாரனை கேரள சாக்கியார் கூத்தில் உள்ள சாக்கியார் ஆக உருமாற்றியதில் ஆரம்பிக்கிறது ஜோஸ் சிறமேலின் நாடகத்திறன். பின்பக்கம் சதுரங்கக்கட்டங்கள் கொண்ட திரையும் அமர்வதற்கான பெட்டிகளும் அல்லாமல் வேறு அரங்கப்பொருட்கள் ஏதும் இல்லை. இடைவேளைகளோ பிற மாற்றங்களோ இல்லாமல் இரண்டுமணி நேரம் ஓடும் நாடகத்தில் மேடையில் உடல்மொழிகள் மூலமே மகதம், காடு, அரண்மனை, தெரு அனைத்தையும் உருவாக்கிக்காட்டுகிறார்கள். நடிகர்களே யானையாகவும் கோடைச்சுவராகவும் மாறுகிறார்கள். ஒவ்வொரு அசைவும் கனகச்சிதமாக வகுக்கப்பட்டு ஒரு கணநேரம் கூடத் தொய்வில்லாமல் சென்றுமுடிகிறது இந்நாடகம்.

அரசியலென்னும் சதுரங்கத்தில் வெற்றி மட்டுமே முக்கியம், அதன் நோக்கம் மக்கள்நலம் என்றால் அதில் எல்லாமே சரிதான் என்று வாதிடும் நாடகம் இது. சதுரங்க காய்கள் போல ஒற்றர்களையும் மனிதர்களையும் நகர்த்தி இரு மூளைகள் ஆடும் ஆட்டமே நாடக நிகழ்வுகள். நாடகம் முடிந்தபின்னரும் எக்காலத்திலும் அரசியல் என்பதே ஒரு மாபெரும் ஆட்டம்தானா என்ற எண்ண ஓட்டத்தை உருவாக்கியது. சாணக்கியனாக நடித்த ஜெயராஜ் வாரியரின் உடல்மொழியும் சிரிப்பும் சாணக்கியனை மேடையில் பிறக்க வைத்தன.

மூன்றாம் நாள் வங்கதேசத்து நாடகம். ஆரண்யக் நாட்டோ தள் நடத்திய ‘ராரங்’, இயக்குநர் மாமுனூர் ரஷீத். பாதல்சர்க்காரின் தெருநாடகப்பாணியில் அமைந்த ஒருந் ஆடகம் இது. ஆனால் மேடைக்கு உகந்த ஒளியமைப்புகளுடன் மறு ஆக்கம் செய்யப்பட்டிருந்தது. கிழக்குவங்கத்து சந்தால் பழங்குடிமக்கள் தங்கள் நிலத்துக்காகப் போராடுகிறார்கள். நிலப்பிரபுக்கள், மதகுருக்கள், அரசாங்கம் மூன்றும் இணைந்து அவர்களை ஒடுக்க முனைகையில் தங்கள் போராட்ட குணம் காரணமாகவே அவர்கள் வென்றுமேற்செல்கிறார்கள்.

வங்கத்தின் தெருக்களில் பலநூறுமுறை நடிக்கப்பட்ட நாடகம் இது. நேரடியான அரசியல்செய்தி கொண்டது. ஆகவே அதிகமான உணர்ச்சி அழுத்தங்களும் நுட்பங்களும் இல்லை. ஆனால் நடிகர்களின் உடலசைவுகள் துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. நாடகவெளியை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தார்கள். ஆகவே ஒரு பெருந்திரளான மக்கள் இடம்பெயர்ந்து சென்று கொண்டே இருக்கும் தேடலை கண்முன் காட்டியது நாடகம். வன்முறைகள் கலவரங்கள் ஆகியவற்றை பாவனைகள் மூலமே அரங்கில் நிகழ்த்தினார்கள். ஆவேசமாக விற்களை வளைத்து எழும் சந்தால்களின் கொந்தளிப்பை காண்பது கிட்டத்தட்ட வரலாற்றை மேடையில் காண்பதுபோல.

அனேகமாக எல்லாருமே சிறப்பாக நடித்தாலும் காவலதிகாரியாகவும் உதவியாளராகவும் நடித்த இருவரையும் பெரும் நடிகர்கள் என்றே சொல்லவேண்டும். அடக்குமுறையாளர்களுக்குரிய மிடுக்கை கோமாளித்தனமாக அவ்வப்போது மாற்றி , அவர்களுடைய உள்ளீடின்மை அச்சம் ஆகியவற்றை அற்புதமாக காட்டினார்கள். வெளியே கேட்கும் ஒவ்வொரு அசைவுக்கும் திடுக்கிட்டபடி — ஆனால் ஒலியை நாம் கேட்பதில்லை– அவர்கள் அஞ்சிநடுங்கும் இடங்கள் பெரிதும் ரசிக்கப்பட்டன.

நான்காம்நாள் நாடகம் பிரளயனின் ”பாரிபடுகளம்” பாண்டிச்சேரி பல்கலை நாடகப்பள்ளியினர் நடத்திய நாடகம். பிரளயன் எழுதி இயக்கியது. பறம்புமலை மன்னனாகிய பாரி மூவேந்தரால் சதிசெய்யப்பட்டு கொல்லப்படுவதும் மரணப்படுக்கையில் தமிழர் தமிழால் ஒன்றுபடமுடியும் என்று அவர் அறைகூவல் விடுப்பதும்தான் நாடகக் கரு.

சிலசமயங்களில் தமிழனாக இருப்பதற்காகவெ வெட்கி கூசிச்சுருங்கும் தருணங்கள் நமக்கு உருவாகும். அதில் ஒன்று இந்நாடகத்தை அரங்கில் கண்டது. அபத்தத்தின், கற்றுக்குட்டித்தனத்தின், உச்சமான கேலிக்கூத்து என்று இந்நாடக நிகழ்த்துதலைச் சொல்லவேண்டும். எந்தவித பயிற்சியும் இல்லாத நடிகர்கள் வசனங்களை நினைவு கூர்ந்து நிறுத்தி நிறுத்தி ஒப்பித்தார்கள். செயற்கையாக கைகால்களை ஆட்டினார்கள். சம்பந்தமில்லாமல் விளக்குகள் எங்கோ எரிந்தன.  நாடகத்தில் தோன்றிய ஒருவருக்காவது நாடகம், நடிப்பு என்பதைப்பற்றிய அடிப்படை புரிதல் இருப்பதாகத்தோன்றவில்லை. பள்ளிக்குழந்தைகள் போடும் நாடகங்கள் கூட எவ்வளவோ மேல்.

சோழ மன்னர் எம்.என் நம்பியாரை மனதில் நினைத்து வசனம் பேசுகிறார். மூவேந்தர்கள் மேடையில் உலவியபடி தத்துபித்தென்று வசனம் ஒப்பிக்கிறார்கள். ஒரு வசனத்துக்கு கையை ஆட்டியபிறகு வசனத்தை பேச ஆரம்பிக்கிறார்கள். அங்கவையும் சங்கவையும் சரோஜாதேவி- சச்சு வசனம் ஒப்பிப்பதுபோல பேசி ஓடுகிறார்கள். வாள்காயம் பட்ட பாரி இருபது நிமிடம் மேடையில் நெளிந்து துடிதுடித்து வசனம் பேசுகிறார்.

இந்த விழாவில் நல்ல நாடகங்கள் இருந்தன. மகத்தான நாடகங்கள் இருந்தன. ரசிக்கமுடியாத நாடகங்களும் இருந்தன. ஆனால் வசனம்,அசைவுகள், உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றில் துளியேனும் பயிற்சியின்மை எங்கும் இல்லை. ஒளியமைப்பு சோடைபோன ஒரு நாடகம் கூட இல்லை. ஆனால் பாரிபடுகளம் அரங்க ஒளியமைப்பு நாடகத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. ஒரு ஆசாமி மேடைக்கு வந்து அதற்கான நினைவுப்பரிசை பெற்றுக்கொண்டார். அவர் ஒரு நாடகப்பேராசிரியர் என்றார்கள் .

அவையில் இருப்பது என் உடம்பில் அமிலத்தை ஊற்றியது போலிருந்தது. அரங்கில் எழுந்த கேலிச்சிரிப்பு , முன்வரிசையில் என்னருகே இருந்த நாடகக்காரர்களின் நக்கல்கள்….எதற்காக இதை கொடுமையைச்செய்கிறார்கள்? நான் பார்க்கும் பிரளயனின் முதல் நாடகம் இது. இந்த அபத்தத்தைத்தான் இவர் இத்தனைகாலமாக செய்துவருகிறாரா? இந்தக்கோராமையை ஒரு சர்வதேச நாடகவிழாவுக்குக் கொண்டுவரக்கூடாது என்ற ஓர் அடிப்படைப்புரிதல்கூடவா இவருக்கு இல்லை? வாழ்நாளில் ஒரு நல்ல நாடகம்கூடவா இவர் பார்த்தது இல்லை?

சரி, பாண்டிச்ச்சேரி பல்கலை நாடகத்துறை மாணவர்கள் என்ன நடிப்பைக் கற்றார்கள்? இந்நிறுவனம் அளிக்கும் பட்டத்துக்கு என்ன மதிப்பு? மேடையில் நிற்கக்கூட கற்றுத்தராத இந்த  அமைப்புக்கு மத்திய அரசு இதுவரை எத்தனை கோடி ரூபாயை அள்ளி இறைத்திருக்கும்! எத்த்னை பேராசிரியர்கள், எத்தனை வகுப்புகள்….கேவலம்…

எழுந்து வரும்போது லோகித்தாஸ் கடும் சினத்துடன் ”இந்த பேராசிரியர் இதையெல்லாம் ஒருபோதும் அன்னிய மண்ணுக்குக் கொண்டுவரக்கூடாது…ஒரு மொழியை, ஒரு பண்பாட்டை, ஏன், அந்த மக்களின் அறிவுத்தளத்தையே, இன்று மேடையில் சிறுமைப்படுத்திவிட்டார்” என்றார். வெளியே அக்காதமி தலைவர் முரளியைக் கண்டேன். என்னைப் பார்த்ததுமே ”நான் பத்து நிமிஷத்தில் வெளியே வந்து விட்டேன்….ஸாரி…இப்படி சிலசமயம் ஆகிவிடுகிறது” என்றார். ”நீங்கள் இவர்களை கம்யூனிஸ்டுக்கட்சி வழியாக அழைத்திருக்கிறீர்கள். இல்லாமல் ஒரு அடிப்படைப்புரிதல் உள்ள எவருமே இவர்களை சிபாரிசுசெய்யமாட்டார்கள்” என்றார் ஒரு மலையாள நாடக ஆசிரியர். ”கண்டிப்பாக இல்லை. கட்சியின் வழியாக சிபாரிசு வந்திருக்கலாம். நாங்கள் அழைத்தது பாண்டிச்சேரி பலகலை நாடகப்பள்ளி என்பதனால்தான்” என்றார் முரளி

பலரும் அவரைச்சூழ்ந்து குறைகூறிக்கொண்டிருந்தார்கள். லோகி ”அவர் என்ன செய்வார்? இந்த அளவுக்கு கேவலமாக இருக்குமென அவரும் நினைத்திருக்க மாட்டார்” என்றார். இதழாளார் கெ.ஜெ.ஜோணி ”இந்தக்காலத்தில் இது பெரிய விஷயமே கிடையாது. ஒரு சிடி பதிவை வாங்கி போட்டுப்பார்க்க முடியாதா என்ன?நாடகம் முன்னே பின்னே இருக்கலாம். இந்த அளவுக்கு கேவலமாக இருப்பது கண்டிப்பாக இதை அழைதவர்களின் தவறுதான்” என்றார்

நானும் லோகியும் அருகே ஒரு பாருக்குச் சென்றோம். அங்கே மலையாளா நிருபர்கள் சிலர் மது அருந்திக்கொண்டிருந்தார்கள். மலையாளா மனோரமா நிருபரும் நாவலாசிரியருமான ஜயன் சிவபுரம் என்னிடம் மீன்டும் அங்கலாய்க்க ஆரம்பித்தார். ”இதுவா நாடகம்? இப்படிக்கூடவா நாடகம் போடுவார்கள்…தூ”

”தமிழ் நவீன நாடகம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது….ஆனால் எந்த ஒரு தமிழ் நாடகமும் இதைவிட மேலானதாகவே இருக்க முடியும்”என்றேன் ”இதைப்பற்றி நான் தமிழில் என்னால் முடிந்தவரை கடுமையாக எழுதுகிறேன். தயவுசெய்து நீங்கள் மலையாளத்தில் எழுதக்கூடாது” என்றேன். மலையாள இதழ்கள் எதுவும் பாரிபடுகளம் பற்றி எதுவும் எழுதாமல் விட்டமைக்கு அவர்களின் விருந்தோம்பல் பண்பு காரணமாக இருக்கலாம், நான் மன்றாடியதும் காரணமாக இருக்கலாம்.

என்னால் ஆற்றிக்கொள்ளவே முடியவில்லை.ஆருண்மொழியைக் கூப்பிட்டேன் .ஒவ்வொரு நண்பராகக்கூப்பிட்டு அங்கலாய்த்தேன். திருவண்ணாமலை பவா செல்லத்துரையைக்கூப்பிட்டு புலம்பினேன். ”இப்படி கேவலப்படுத்த வேண்டுமா பவா? முற்போக்கு இலக்கியத்திலேயே தமிழில் எத்தனை நல்ல ஆக்கங்கள் வருகின்றன? இவரா தமிழின் பிரதிநிதி?” என்றேன். வசந்தகுமாரிடம் சொன்னேன். ”அப்டித்தான் ஜெயன் , நம்ம நாடகம் அந்த லெச்சணத்திலேதான் இருக்கு. முருபூபதி இன்னும் கேவலமா போடுவார். இப்ப அவர் டெல்லி போயிருக்கார். விடுங்க தமிழனோட தலையெழுத்து”

மறுநாள் மீண்டும் முரளியைப் பார்த்தேன். மீண்டும் என்னிடம் மன்னிப்பு கோரும் தோரணையில் பேச ஆரம்பித்தார். ”சரி விடுங்க.. ”என்றேன். வங்க நாடகாசிரியர் மாமுனூர் ரஷீதிடம் ஒரு சில சொற்கள் சொல்லி என்னை அறிமுகம்செய்துகொண்டதுமே ”தமிழ் நாடகம் பார்த்தேன். மிகவும் அமெச்சூர் நடிகர்கள்… பரவாயில்லை, இப்போதுதான் நாடகம் உருவாகிவருகிறது உங்கள் மொழியில்… பரவாயில்லை…” என்றார். பேசாமல் நழுவிவிட்டேன்.

பிரளயன், தங்களிடம் கைகூப்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழில் எழுதுபவன் என்ற முறையில். உண்மையிலேயே உங்கள் நலன் நாடுபவன் என்ற முறையில். தயவுசெய்து தமிழ்நாட்டைவிட்டு வெளியே போய் நாடகம்போடாதீர்கள். இடதுசாரி அமைப்புகளுக்கும் ஒருவிண்ணப்பம் . தயவுசெய்து இனிமே சிபாரிசுகள் செய்யும்போது வேறு யாரையாவது சொல்லுங்கள்.

முந்தைய கட்டுரைஊமைச்செந்நாய், கடிதங்கள் இன்னும்
அடுத்த கட்டுரைபனுவல்