அம்பேத்கரின் நவயானம்

bud

அன்புள்ள ஜெ…

கிரந்த காவடியில் வைத்து படிக்கத்தக்க புனித நூல்கள் வரிசையில் அம்பேத்கரின் ” புத்தரும் அவரது தம்மமும ” நூலுக்கு இடம் உண்டு என ஓர் உரையில் குறிப்பிட்டிருந்தீர்கள்…

ஆன்மிக இலக்கியத்தில் அந்த நூலுக்கு முக்கிய இடம் உண்டு என்பதையோ புத்த தத்துவ நூல்களில் மிகச் சிறந்த நூல்களில் ஒனறு என்பதையோ யாரும் மறுக்க முடியாது..

ஆனாலும் வேதங்கள் உபநிஷத்துகளை விமர்சிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டு வலிந்து தவறான பொருளை அளித்து அவற்றை குறைத்து மதிப்பிடுகிறாரோ என தோன்றுகிறது..

அதை தவறு என சொல்லவில்லை.இலக்கிய ரீதியாக அரசியல் ரீதியாக இப்படி விமர்சித்தால் அதை ரசிக்கலாம்.. ஆனால் கிரந்தகாவடியில் வைத்து படிக்கும் ஒரு புனித நூலில் இப்படிப்பட்ட கருத்துகள் வருவது சற்று தர்மசங்கடமாக இருக்கிறது

புத்த சமண மதங்களை திட்டும் சில சைவ வைணவ பாடல்களை படிக்கையிலும் இந்த சங்கட உணர்வு தோன்றுவதுண்டு…

அரசியல் மேடைகளில் அல்லது சராசரி பேச்சுகளில் இது பெரிய விஷயமில்லை.. ஆனால் நாம் மதிக்கும் நூல்களில் பாடல்களில் இந்த நடுநிலை தவறிய பார்வைகள் சற்று உறுத்தலாகவே இருக்கின்றன

இவற்றை சரியாக எப்படி புரிந்து கொள்வது ? ஒரு விஷயத்தை உயர்த்திப்பேச இன்னொன்றை தாழ்த்துவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் யுக்திதானா ?

அன்புடன்
பிச்சைக்காரன்

amb

அன்புள்ள பிச்சைக்காரன்

வைணவம் ஓர் அறிமுகம் என்னும் கட்டுரையில் ஒரு வரி வரும். விசிஷ்டாத்வைதம் என்றால் என்ன என்று ஒருவர் பேசத் தொடங்குகிறார். ‘நீச சங்கரன் என்ன சொல்றான்னா…” .இன்னொருவர் “மாமா, விசிஷ்டாத்வைதத்தைச் சொன்னது ராமானுஜர் இல்லியோ?”என்கிறார். அவர் “யார்ராது? சங்கரன வெய்யாம எப்டிரா வைஷ்ணவம் பேசுறது?” என சினம் கொள்கிறார்

எல்லா மதங்களிலும் ஒரு பூசல் அம்சம் இருக்கும். அது நேரடியான வெறுப்பாகவோ ஒடுக்குமுறையாகவோ அமையாத வரை, அதுவே மைய உணர்வாக நீடிக்காத வரை, அதை தவிர்த்துமுன்செல்ல அனுமதி இருக்கும் வரை, பிரச்சினை இல்லை. ஏனென்றால் மதங்கள் மூன்று தளம் கொண்டவை. மெய்மைத்தரிசனம், தத்துவம், சடங்குகளும் நம்பிக்கைகளும் செயல்முறைகளும்

தத்துவம் எப்போதுமே பூசல்தன்மை கொண்டது. தன்னை தெளிவாக வரையறை செய்வது அது. ஆகவே தானல்லாத பிறிதை விலக்கி வரையறுக்கும். அதை மறுக்கும். பூசல் அம்சம் இல்லாத தத்துவம் என எதுவும் இன்றுவரை உலகில் உருவாகவில்லை.

மதத்திலுள்ள தத்துவ அம்சமே அதை பிறன்மறுப்பை நோக்கிக் கொண்டுசெல்கிறது. மெய்மைக்குப் பிறன் என்பதில்லை. சடங்குகள் ஒருபக்கம் தனித்துவத்தை பேணியபடியே இன்னொருபக்கம் நெகிழ்ந்து பிறசடங்குகளை ஏற்றுக்கொண்டும் இருக்கும்

அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரது தம்மமும் என்னும் பெருநூலும்கூட இந்த பூசல் அம்சம் கொண்டதுதான். அதில் தரிசனம் உண்டு, தத்துவம் மேலோங்கியிருக்கிறது. ஆகவே பூசல் அம்சம் சற்றே மிகை. அதைக் கடந்தே அந்நூலை அணுகமுடியும். பிற மதநூல்களுக்கு அளிக்கும் சலுகையை அதற்கும் அளிக்கவேண்டியதுதான்

புத்தரும் அவருடைய தம்மமும் ஒரு புதியமதத்தின் மூலநூல். நவயான பௌத்தம் ஒரு மதமென எழாதுபோனமைக்கான காரணமும் அந்நூலில் உள்ளது. அதில் உள்ள தத்துவ அம்சம், வரலாற்றுச் சித்தரிப்புதான் அது. மதம் தொன்மங்களால்,சடங்குகளால் முதன்மையாகக் கட்டமைக்கப்படுகிறது. அவை நேரடியாக ஆழ்மனதுடன் பேசுபவை. எளியோரையும் எவ்வகையிலோ சென்றடைபவை. தத்துவமே கூட தொன்மங்களாகவோ சடங்குகளாகவோ உருமாற்றப்பட்டாகவேண்டும். அந்தக்கூறு அந்நூலில் இல்லை.

அத்துடன் அதில் உள்ளடங்கியிருக்கும் அரசியல் பெரிதும் சமகாலத் தன்மை கொண்டது. எல்லா மூலமதநூல்களிலும் அவ்வாறு சமகால அரசியல் உண்டு. அதை பின்னர் மெல்ல குறியீடுகளாக ஆக்கிக் கொள்வார்கள், கிறிஸ்தவம் போல. அல்லது உலகளாவிய அரசியலாக விரித்துக்கொள்வார்கள் – இஸ்லாம் போல.

அம்பேத்கரின் பெரிய குறை என்னவென்றால் அம்பேத்கரியர்கள் என சொல்லும்படியான பேரறிஞர்கள் எவருமில்லை என்பதே. காந்திக்கு அவர் சிந்தனையை கொள்கையென விரித்து முன்னெடுத்துச்சென்றவர்கள் அமைந்ததுபோல் அம்பேத்கருக்கு அமையவில்லை. அம்பேத்கரைப் பேசியவர்கள் அவர்கள் ஏற்கனவே இங்கே பேசிக்கொண்டிருந்த ஐரோப்பிய புதுத்தாராளவாதம் நோக்கி இழுத்துவிட்டனர். அவர்களின் பொதுச்சொல்லாடலில் ஒரு பெயரென்று ஆக்கிவிட்டனர்.

அம்பேத்கர் இவர்களின் உரையாடலில் ஒரு பெயராக மட்டும் வந்துகொண்டே இருப்பார். அது அவர் பெயரினூடாக தங்களுக்கு ஓர் ‘ஒடுக்கப்பட்டோர் ஆதரவு’ படிமத்தை உருவாக்கும்பொருட்டு மட்டுமே. அம்பேத்கர் தத்துவம், மதம், அரசியல்,சட்டம் சார்ந்து சொன்ன அசலான ஒரு மேற்கோள் இவர்களின் பேச்சிலோ கட்டுரையியிலோ வருவது மிக அரிது. இவர்கள் அம்பேத்கரின் புதுப்பௌத்த சிந்தனைகளை ‘ஓ அவருக்கு அறிவுபத்தாது , ஆனாலும் பரவாயில்லை’ என்ற பாவனையில் ஒதுக்கிவிட்டதில் வியப்பில்லை

அம்பேத்கரின் உள்ளம் மதம்நோக்கிச் சென்றது அவர் தத்துவம் அரசியல் இரண்டுக்கும் அப்பாற்பட்ட அகத்தேடல் கொண்டிருந்தார் என்பதனால்தான். சட்டநிபுணர், சமூகசீர்திருத்தவாதி ,அரசியலாளர், தத்துவவாதி ஆகிய முகங்கள் அனைத்தையும் விட எனக்கு அந்த மெய்ஞானியின் முகமே முக்கியமானது. ஆனால் அது இங்கே பேசப்படுவதேயில்லை. ஆகவே அம்பேத்கரின் நூல்களில் குறைவாக வாசிக்கப்பட்டது புத்தரும் அவருடைய தம்மமும்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைஇரு கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 71