யுதிஷ்டிரரின் அவைக்குள் நுழைகையில் உத்தரன் தன் உடல்முழுக்க எடைமிக்க களைப்பை உணர்ந்தான். உள்ளே யுதிஷ்டிரரும் பிறரும்கூட அத்தகைய களைப்புடன் இருப்பதாகத் தோன்றியது. மதுக்களிப்பில் அகம்குழைந்து நாக்குழறி பேசிக்கொண்டிருப்பவர்களின் கூட்டம்போல அங்கிருந்த பேச்சொலிகள் முதற்செவிக்கு தோன்றின. அவன் உள்ளே நுழைந்ததும் அங்கே அமைதி உருவாகியது. அது அவன் உடலில் உருவாக்கிய கூச்சத்துடன் தலைவணங்கினான். அவனுக்குப் பின்னால் வந்த திருஷ்டத்யும்னன் தலைவணங்கி தன் இருக்கையை அடைந்து அமர்ந்தான். உத்தரன் “அஸ்தினபுரியின் அரசர் திரும்பிச்சென்றுவிட்டார், அரசே” என்றான்.
“நம் படைகளின் உளநிலை என்ன?” என்றார் யுதிஷ்டிரர். அதிலிருந்த பொருளின்மையால் உத்தரன் பேச்செழாமல் ஆனான். உரத்த குரலில் “வேறென்ன? நம் படைகள் உண்டாட்டுக்கு ஒருங்கியிருக்கின்றன. பெண் கிடைக்குமா என கேட்க விழைகின்றன, அவ்வளவுதான்” என்றான் பீமன். “இதைப்பற்றி இன்று முழுக்க இங்கிருந்து பேசுவோம். போர் தொடங்கும்போது அவர்களின் கதைகளுக்கு முன் மண்டையை கொண்டு கொடுப்போம். குமிழி உடைத்து விளையாடும் குழந்தைகள்போல அவர்கள் மகிழட்டும்.” யுதிஷ்டிரர் எரிச்சலுடன் “போதும், மந்தா!” என்றார். “அப்படியென்றால் இனி என்ன செய்யவேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். இனி எவரும் கவலையையும் சோர்வையும் இங்கே பேசவேண்டியதில்லை” என்று பீமன் சொன்னான்.
“ஆம், அதையே நானும் எண்ணுகிறேன்” என்றான் சகதேவன். “நாம் இனி சொல்ல என்ன உள்ளது? இளைய யாதவர் சொல்லட்டும். இனி வஞ்சினங்களுக்கெல்லாம் இடமில்லை. நமக்கு பொழுதே இல்லை” என்றார் துருபதர். அனைவரும் இளைய யாதவரை பார்க்க அவர் அதே விலகிய நோக்குடன் அமர்ந்திருந்தார். “இளைய யாதவர் இத்தருணத்தில் உரிய வழியொன்றை சொல்லவேண்டும்” என்றான் நகுலன். இளைய யாதவர் உயிர்கொண்டு “ஆம், உடனே ஏதேனும் செய்தாகவேண்டும்” என்றார். பின்னர் “இங்குள்ள நாம் போர்புரிந்து நெடுங்காலமாகிறது. தொடர்ந்து போரிலிருக்கும் குடிகளில் இருந்து எவரேனும் அவையிலிருந்தால் அவர்களிடம் பேச விழைகிறேன்” என்றார்.
எவரும் எழவில்லை. துருபதர் “எப்போதும் போரிலிருப்பவர்கள் என்றால் பாணாசுரரின் அசுரகுடியினர்தான்” என்றார். “அவர்கள் தங்கள் உடன்குருதியினரிடம்தான் பெரும்பாலும் பூசலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதேனும் தெரிந்திருக்கும்” என்றார் இளைய யாதவர். “ஆம், அது ஒரு வழி” என்றான் திருஷ்டத்யும்னன். “பாணாசுரரின் படையிலுள்ள மூத்த படைத்தலைவரை அழைத்துவருக!” என ஆணையிட்டார் யுதிஷ்டிரர். “நிஷாதர்களான மல்லர்களும் அசுரகுலத்தவரும் தொடர் போர்களில் இருப்பவர்கள். அவர்களின் தலைவர்களும் வரட்டும்” என்றார் இளைய யாதவர்.
ஏவலன் சென்றபின் தனக்குத்தானே என “நல்லவேளையாக அனைத்து மூத்த படைத்தலைவர்களையும் இங்கே அவைகூடலுக்கு வரச்சொல்லி ஆணையிட்டிருந்தேன். அருகில்தான் இருக்கிறார்கள்” என்றார். அவையில் ஒவ்வாமை உருவாக்கும் அமைதி நிலவியது. உத்தரன் பெருமூச்சுவிட்டு உடல்தளர்த்தி அமர்ந்தான். “நம் இளையோர் அனைவரும் வரட்டும். அவர்களுக்கும் ஏதேனும் தோன்றலாம். பொதுவாக இளையோர் ஊக்கநிலையில் இருப்பவர்கள். ஊக்கத்தை தக்கவைக்கும் கலை அறிந்தவர்கள்” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், அதுவும் நன்றே” என்ற திருஷ்டத்யும்னன் திரும்பி அவைஏவலனிடம் “இளவரசர் அனைவரும் வருக!” என்றான்.
ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். பிரதிவிந்தியனும் சுதசோமனும் சுருதகீர்த்தியும் சதானீகனும் சுருதசேனனும் முதலில் வந்தனர். யௌதேயனும் நிர்மித்ரனும் தொடர்ந்து வந்தனர். ஸ்வேதன் அரவானுடன் வந்து அமர்ந்தான். சங்கன் தனியாக வந்தான். திருஷ்டத்யும்னனின் மைந்தர்களும் சாத்யகியின் மைந்தர்களும் வந்தார்கள். அசுரர்களும் அரக்கர்களும் நிஷாதர்களும் கிராதர்களுமாக மெல்ல அவை நிறைந்தது. மேலும் வந்த இளையவர்கள் பின்னால் சுவர்சாய்ந்து நின்றனர். மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபனும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவும் உத்தரனின் அருகே வந்து நின்றார்கள். மைய நிஷாதநிலத்து அரசர் மணிமானையும் அவர் மைந்தர் மணிகர்ணனையும் அவன் கைவீசி அருகழைத்தான். அவர்களுடன் கீழ்நிஷாதநிலத்து அரசர் தண்டதரனும் அவர் மைந்தர் சார்ங்கதரனும் அவனருகே வந்து நின்றனர்.
அவையில் மூச்சொலியே முழங்கத் தொடங்கியது. “அபிமன்யூ எங்கே?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “விற்பயிற்சியில் இருக்கிறார், அழைத்துவரச்சொல்லி தூதனை அனுப்பியிருக்கிறேன்” என்றான் யௌதேயன். அனுபநாட்டு மூதரசர் விருத்தஷர்மரும் அவர் மைந்தர் வசுதனரும், இளையோன் நீலனும் உள்ளே வந்தனர். தொடர்ந்து அபிமன்யூ மூச்சிரைப்புடன் உள்ளே வந்து தலைவணங்கி பின்னால் சென்று நின்றான். அவை நிறைந்ததைக் கண்ட யுதிஷ்டிரர் “இளைய யாதவர் அவர் விழைவதை உசாவலாம்” என்றார். இளைய யாதவர் “ஆம்” என அசைந்து அமர்ந்தார். முகமன் இன்றி நேரடியாகவே பேசலானார். “மூத்த போர்வீரர்களே, நீங்கள் இதற்குள் அறிந்திருப்பீர்கள். நம் படைகள் ஊக்கமழிந்துள்ளன. போர் வரக்கூடும் என்ற நம்பிக்கையை அனைவரும் இழந்துள்ளனர். களியாட்டுநிலை கொண்டிருக்கிறார்கள். இப்படியே இவர்களை நாம் போருக்கு கொண்டுசெல்ல இயலாது. நாளை மறுநாள் புலரியில் அவர்கள் போருக்கு பொழுதுகுறித்துச் சென்றிருக்கிறார்கள்.”
“ஆம்” என்றார் பாணாசுரரின் அமைச்சரான சுபூதர். “நமது படைகள் முதுகொடிந்த மலைப்பாம்புபோல கிடக்கின்றன.” உத்தரமல்லநாட்டு தீர்க்கபிரக்யர் “அஸ்தினபுரியின் அரசர் செய்த அந்த சூழ்ச்சியை நாங்களும் செய்வதுண்டு. எதிரிகுடியின் தெய்வத்தையோ மூதாதையையோ அவர்களுக்குள் புகுந்து தொழுதுவருவோம். அவர்களின் வஞ்சத்தை அது அணையச்செய்யும், போர்விசை குறையும். கூடவே நம்முடைய தன்முனைப்பை அவர்களுக்கு காட்டும். அது அவர்களை உள்ளூர அஞ்சவும் வைக்கும்.” என்றார். அசுரகுலத்து அரசர் ஹிரண்யகட்கர் “அவர் போருக்கு நாள்குறித்துச் சென்றது உச்சகட்ட சூழ்ச்சி. இனி போரே நிகழாது, நிகழ்ந்தால் வெறும் கொலையாட்டு மட்டுமே” என்றார்.
“இந்நிலை உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்?” என்றார் இளைய யாதவர். அவர்கள் அந்த நேரடி வினாவால் குழம்பி தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். “சொல்க!” என்றார் இளைய யாதவர். “எங்கள் குடிகளுக்குள் களிப்போர் அடிக்கடி நிகழும். சிலதருணங்களில் எங்கள் வீரர்கள் நிகழ்வது களிப்போர் என்ற உளநிலையிலேயே இருப்பார்கள். அவர்களை அதிலிருந்து மீட்பது கடினம். அவர்கள் செவிகொள்வதை நிறுத்திவிட்டிருப்பார்கள். பேசி புரியவைக்க முடியாது” என்றார் அசுரகுலத்து அரசர் ஹிரண்யகட்கர். “அதற்கான பொழுதும் போர்த்தருணங்களில் நமக்கு இருக்காது. அந்நிலையில் ஒரு அருநிகழ்வுதான் நமக்கிருக்கும் ஒரே வழி. அனைத்துப் படையினரும் இடியுடன் மின் வந்து தொட்டதுபோல் அதை உணர்வார்கள். சொல்லின்றியே அவர்களை அது கிளர்ந்தெழச் செய்யும். இனி பிறிதொன்றில்லை என்ற உறுதிப்பாட்டை அளிக்கும்.”
“என்ன செய்வீர்கள்?” என்றார் இளைய யாதவர். “எண்ணவும் கடினமானதை. எண்ணினால் உளம் நடுங்குவதை” என்றார் ஹிரண்யகட்கர். “நினைவில் எழுபவை பல. எதிர்த்தரப்பிலிருந்து சிறைபிடித்துக் கொண்டுவந்து பணயப்பொருட்களாக வைத்திருந்த படைவீரர் நூற்றுவரை படைமுகப்பில் வைத்து தலைவெட்டி குவித்தோம் ஒருமுறை. அவர்களின் ஊர்களுக்குள் புகுந்து குழந்தைகளும் பெண்டிரும் துயிலும் வீடுகளுக்கு தீவைத்து சாம்பலாக்கிவிட்டு மீண்டோம். அவர்களின் குடிநீரில் நஞ்சு கலக்கி கொன்று அவர்களின் காதுகளைக் கொய்து மாலையாக்கி அணிந்துகொண்டு நான் ஒருமுறை தேரிலெழுந்து படைமுன் தோன்றியிருக்கிறேன். எதிர்த்தரப்பில் எழும் பெருவஞ்சம் நம்மில் ஒரு துளியைக்கூட எஞ்சவிடாது என்று தெரிந்தபின் நம் படைவீரர் துணிந்துவிடுவார்கள்.”
பாணாசுரரின் அமைச்சர் சுபூதர் “எங்கள் குருதிக் குடிகளுக்குள் போர் நிகழ்வதுண்டு. தங்கள் உற்றாரும் உறவினரும் மறுபக்கம் இருக்கக் கண்டு உளம் சோர்வுறுவர். தங்கள் அரசர்களும் குடித்தலைவர்களும் தங்கள் குருதியினர் ஒருவரை ஒருவர் கொன்றுகொள்வதை ஏற்க மாட்டார்கள் என்றும் ஆகவே இறுதியில் எப்படியும் இப்போர் சொல்லுறுதியில் நிகர்நிலை கொண்டு நின்றுவிடும் என்றும் எண்ணிக்கொள்வார்கள். அதுவே இப்போது இங்கேயும் படைகளில் திகழும் எண்ணம்” என்றார். “சுபூதரே, உங்கள் அசுரகுடியினர் இப்போது அவ்வாறு ஐயம் கொண்டுள்ளனரா?” என்றார் இளைய யாதவர். அவர் மறுமொழி சொல்லவில்லை. காரூஷ நிஷாதகுடித் தலைவர் அஷ்டஹஸ்தர் “ஆம், அரசே. எங்கள் குடியினர் ஐயம்கொண்டுள்ளனர்” என்றார்.
யுதிஷ்டிரர் சினத்துடன் “என்ன சொல்கிறார்கள்?” என்றார். “ஷத்ரியர்களும் அரசகுடியினரும் குருக்ஷேத்திரத்தில் நேருக்குநேர் போரிட வாய்ப்பில்லை என்பதுதான் இங்குள்ள படைகளின் பொதுவானபேச்சு. வேண்டுமென்றால் தங்கள் தரப்புகளின் ஆற்றலை காட்டிக்கொள்ளும்பொருட்டு ஒரு சிறு போர் இங்கு நிகழும், அதில் அசுரரும் நிஷாதரும் மடிவார்கள், தங்கள் ஆற்றலை நிறுவிக்கொண்டபின் அரசகுடியினர் அமைதிப் பேச்சுக்கு என அமர்வர், சொல்லுறுதிச் சாத்திட்டபின் தோள்தழுவிக்கொள்வார்கள், பகைமறந்து கண்கனிவார்கள், இரு அரசர்களும் ஒருவரோடொருவர் காட்டும் நட்பும் கனிவும் அதையே காட்டுகின்றன என்று படைகள் எண்ணுகின்றன” என்றார் காரூஷ நிஷாதகுடித் தலைவர் அஷ்டஹஸ்தர். யுதிஷ்டிரர் “அவ்வெண்ணத்தை அகற்ற நீங்கள் என்ன செய்தீர்கள்? நான் அறியவிழைவது அதையே” என்றார். சில கணங்களுக்குப்பின் “நானும் அவ்வண்ணம் ஐயம்கொண்டுள்ளேன், அரசே” என்றார் அஷ்டஹஸ்தர்
யுதிஷ்டிரர் சொல்லவிந்தார். அவர் உடல் பதறிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. பின்னர் தளர்ந்த குரலில் “இது பெரும் குற்றச்சாட்டு. என் நேர்மையை மறுக்கிறீர்கள். என் சொற்களை புறந்தள்ளுகிறீர்கள்” என்றார். அஷ்டஹஸ்தர் மறுமொழி சொல்லவில்லை. உரத்த குரலில் “வேறு எவர் அவ்வாறு எண்ணுகிறீர்கள்? இந்த அவையில் வேறு எவருக்கேனும் அவ்வெண்ணம் உள்ளதா?” என்றார் யுதிஷ்டிரர். அவையில் அமைதி நிறைந்திருந்தது. அந்த அமைதி யுதிஷ்டிரரை அச்சுறுத்தியது. “என்ன சொல்கிறீர்கள்? அனைவரும் அந்த எண்ணத்துடன் உள்ளீர்கள் என்றா நான் கொள்வது?” என்றார். அரக்கர் குலத்தலைவர் வக்ரசீர்ஷர் “அரசே, இதில் தங்கள்மேல் நம்பிக்கையோ ஐயமோ கொள்வது என்பது எழவே இல்லை. ஆனால் அத்தகைய அரசுசூழ்கைகள் ஷத்ரியக் குடிகளில் இயல்பாக நிகழ்வனவே. இல்லை என நீங்கள் மறுக்கமாட்டீர்கள்” என்றார். யுதிஷ்டிரரின் உடற்தசைகள் தளர்வதை காணமுடிந்தது. பெருமூச்சுடன் அவர் தலையை அசைத்தார். அவையில் பலவகையான உடல் அசைவுகளின் ஓசைகள் எழுந்தன.
அசுரர் குடித்தலைவர் காகர் “அது தங்கள் நேர்மை மீதான நம்பிக்கையின்மையால் அல்ல அரசே, தங்கள் அறம் மீதுள்ள நம்பிக்கையால் எழும் எண்ணம். ஒருபோதும் உடன்குருதியர் போரிடலாகாதென்று தயங்கியவர் நீங்கள். மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும் பிதாமகரையும் ஆசிரியர்களையும் உடன்பிறந்தவர்களையும் எதிர்க்கலாகாதென்று இறுதிக்கணம் வரை எண்ணியவர். இன்னும் ஒரு வாய்ப்பு அவ்வாறு அமையும் என்றால் அதை தவறவிடமாட்டீர்கள்” என்றார். யுதிஷ்டிரர் அந்த மறுமொழியால் சற்று அமைதிகொண்டார். ஆனால் முகம் சலிப்பும் கசப்பும் கொண்டது போலிருந்தது. பீமன் “இதை நான் எதிர்பார்த்திருந்தேன், பலமுறை இதையே சொல்லவந்தேன்” என்றான். யுதிஷ்டிரர் “மந்தா…” என்று கெஞ்சும் குரலில் சொல்ல பீமன் சினத்துடன் தலையை அசைத்தான்.
அவை அமைதியாக இருந்தது. சற்றுநேரம் கழித்து “நான் என்ன செய்யவேண்டும்? உங்கள் ஊக்கம் கெடாமலிருக்க நான் ஆற்றவேண்டியது என்ன?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். அவர்கள் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர். “நான் உங்கள் படைகளை சந்திக்கிறேன். அவர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். இது பெண்பழி தீர்க்க எழுந்த படை. அவ்வஞ்சம் அணையாமல் போரில் பின்வாங்குதல் என்பதில்லை.” என்றார். பின்னிரையிலிருந்து பாணாசுரரின் மைந்தனான சக்ரன் “ஆனால் அது அரசியின் ஆணை மட்டுமே. அதை அரசி உரைப்பதுவரை உங்கள் குரல் எழவில்லை என நாங்கள் அறிவோம். ஷத்ரியகுடியினர் ஆண்களாலானவர்கள், அங்கு பெண்வஞ்சம் ஒரு பொருட்டே அல்ல என்பது தொல்கூற்று” என்றான். யுதிஷ்டிரர் ஏதோ சொல்வதற்காக வாயை அசைத்தார். பின்னர் கையசைத்து சோர்வுடன் சாய்ந்துகொண்டார்.
அவையில் இருந்த அமைதியின் எடை மிகுந்து வந்தது. அனைவரும் இளைய யாதவர் ஏதேனும் சொல்வார் என எண்ணியவர்களாக ஓரவிழியால் அவரை நோக்கி அமர்ந்திருந்தனர். திருஷ்டத்யும்னன் இளைய யாதவரை ஒருமுறை நோக்கியபின் எழுந்து “படைகள் நம்பிக்கை இழந்துள்ளன என்பது கண்கூடு. நம்பிக்கையிழப்பு இப்போது களியாட்டாக தோன்றுகிறதென்றாலும் போர்முரசு ஒலிக்குமென்றால் ஒரே கணத்தில் உளச்சோர்வாக மாறிவிடும். அது நமக்கு பேரழிவு” என்றான். “நாம் போருக்கு மெய்யாகவே எழுந்துள்ளோம் என்றும் முழுவெற்றியாலன்றி வேறெதனாலும் அமையமாட்டோம் என்றும் படைகளுக்கு சொல்லியாகவேண்டும். எத்துணை விரைவாக சொல்கிறோமோ அத்துணை நன்று. செவிகொண்டதை அவர்களின் உளம் அறியவேண்டும். அதிலிருந்து அவர்களின் எண்ணங்கள் ஊறியெழவேண்டும்… நமக்கு பொழுதில்லை. உடனே நாம் சொல்லியாகவேண்டும்.”
“இனி சொல்ல முடியாது. ஒரு படைமுன் எத்தனைமுறை வஞ்சினம் உரைப்பது?” என்று பீமன் உரத்த குரலில் சொல்ல திருஷ்டத்யும்னன் தயங்கினான். கெஞ்சும் குரலில் “மூத்தவரே…” என்றான் சகதேவன். பீமன் “ஆம், இனி எப்படி படைகளுடன் பேசுவீர்கள்? படைத்தலைவர்களிடம் நீங்கள் சொன்ன சொல் கசிந்திறங்கிப் பரவி கீழ்நிலை வீரன் செவிவரை சென்றடைய ஐந்து நாட்களாகும். அப்போது சொல்சென்று சேர அவர்களுக்குத் தலையிருக்காது” என்றான். திருஷ்டத்யும்னன் “நான் சொல்ல வருவதும் அதைத்தான், பாண்டவரே. இனி சொற்களால் பயனில்லை. எவ்வகையிலேனும் நாம் படைகளுக்கு அறிவித்தாகவேண்டும், நாம் முற்றிலும் துணிந்துவிட்டோம் என்று” என்றான்.
“பாஞ்சாலரே, நீர் சொல்வதன் பொருளின்மை உங்களுக்கு புலப்படவில்லையா?” என்று பீமன் கை நீட்டியபடி முன்னால் வந்தான். “இங்கே நாம் போரையும், முழுவெற்றியையும், பெண்பழி தீர்ப்பதையும் பற்றியெல்லாம் வேண்டியமட்டும் பேசிவிட்டோம். அவர்கள் அப்பேச்சே பொய் என எண்ணுகிறார்கள். அது நம் மெய்யான நோக்கங்களை மறைத்துக்கொள்ளும் சூழ்ச்சி என நினைக்கிறார்கள். நமக்கு எதிரிமேல் ஆழ்ந்த பகை ஏதும் இல்லை என்றும் இது வெறும் படைவிளையாட்டே என்றும் கருதுகிறார்கள். நாம் மேலும் உணர்வெழுச்சியை காட்டலாம். மேலும் சொல்லொழுங்குடன் பேசலாம். நம் பேச்சு அழுத்தமும் விசையும் கொள்ளும்தோறும் நாம் மேலும் ஏமாற்றுக்காரர்காளாகவே தெரிவோம்.”
திருஷ்டத்யும்னன் கைவிரித்து “என்னால் சொல்லக்கூடுவதென ஏதுமில்லை. என் உள்ளமும் சோர்வடைகிறது” என்றபின் அமர்ந்தான். பீமன் கசப்புடன் நகைத்து “நம் அரசர் குடியறமெனும் பெரும்படைக்கலத்தை எடுத்து களம் நின்றிருக்கிறார். பிதாமகரும் ஆசிரியரும் வாழ்த்தியதும் அப்படைக்கலம் பலமடங்கு கூர்கொண்டுவிட்டது. நாம் இங்கே நம் தலைகளைக் காத்து நின்றிருப்போம். அது சென்று பகைவென்று மீளட்டும்” என்றான். “மூத்தவரே, சற்று அமர்க! அவை நிகழவிடுங்கள்” என்றான் சகதேவன். “இனி என்ன அவை? அனைவரும் கிளம்புங்கள். சென்று அறத்தை அணைத்துக்கொண்டு படுத்துத் துயிலுங்கள். நாளைமறுநாள் காலை தலைகளை கொண்டுசென்று கௌரவன் வாள்முன் வைத்து கண்களை மூடிக்கொள்ளுங்கள்… அறம் நாவில் தித்திக்கும்” என்றான் பீமன். சகதேவன் சீற்றம்கொண்டு ஓங்கி ஒலித்த குரலில் “சொல்லமைக, மூத்தவரே!” என்றபின் திரும்பி கைகூப்பி “இளைய யாதவரே, உங்களை அன்றி எவரையும் இத்தருணத்தில் நாங்கள் எண்ணவில்லை” என்றான்.
இளைய யாதவர் “நான் இத்தகைய தருணத்தை முன்னர் எதிர்கொண்டதே இல்லை, நூல்களிலும் கண்டதில்லை” என்றார். “ஏனென்றால் இத்தகைய பெரும்போர்த் தருணம் முன்னர் இப்பாரதவர்ஷத்தில் அமைந்ததுமில்லை. இங்கே உள்ள இடர் என்னவென்றால் எவ்வகையிலும் ஒருவரோடொருவர் உறவில்லாத குடிகளின் திரள் ஒன்று களம்திரண்டுள்ளது. இப்படைகளில் நிற்பவர்களில் பெரும்பகுதியினருக்கு இங்கு வருவதற்குமுன் யுதிஷ்டிரர் எவரென்றே தெரிந்திருக்காது. வழக்கமாக ஷத்ரியப் படைகள் ஓர் அரசுக்கென ,கொடிக்கென வஞ்சினம் கொண்டு எழுந்து வந்தவையாக இருக்கும். அவர்கள் நிலமும் குலமும் காக்க படைகொண்டெழுவது தங்கள் கடன் என பிறவியிலேயே பயின்றவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றின்பொருட்டு களம்வந்துள்ளனர். அவை அவர்களுக்கு பிறவிமுதல் அளிக்கப்பட்ட இலக்குகள் அல்ல. கற்றவை, அளிக்கப்பட்டவை. ஆகவே ஐயம் எழுவது இயல்பே.”
அவர் என்ன சொல்லவருகிறார் என்று புரியாமல் அனைவரும் வெற்றுநோக்குடன் அமர்ந்திருந்தார்கள். “ஷத்ரியர்களில் நீண்ட போர்ப்பின்னணி கொண்டவர் மூத்த பாஞ்சாலர். அவர் சொல்லட்டும், இத்தகைய தருணம் முன்னர் அவருக்கு முன் எழுந்ததுண்டா? அதற்கு என்ன செய்தார்கள்?” என்று இளைய யாதவர் கேட்டார். துருபதர் அமைதியின்மையுடன் அசைந்தமர்ந்து “படைமுகப்பில் தலைமைமீது படைவீரர் ஐயம் கொள்வது முன்பு நிகழ்ந்ததில்லை” என்றார். “ஆனால் படைவீரர் சோர்வுறுவதும் தங்கள்மேல் ஐயம்கொள்வதும் நிகழ்வதுண்டு. அத்தகைய தருணங்களில் பேச்சுக்களால் எப்பயனும் இல்லை. ஏனென்றால் படைநகர்வின் நாட்களில் எல்லாம் படைகள் கொம்பும் முழவும் கொடியும் அளிக்கும் ஆணைகளை ஏற்று பழகிவிட்டிருப்பார்கள். சொற்றொடர்களையும் கருத்துக்களையும் பொருளாக மாற்றிக்கொள்ளும் திறன் மறைந்திருக்கும். அவர்களை தூண்டுவது செயல்களே.”
“அசுரரும் நிஷாதரும் இங்கு சொன்னதே ஷத்ரியர்களும் செய்வது. அவர்கள் சொன்னமையால் நானும் அதைச் சொல்கிறேன்” என துருபதர் தொடர்ந்தார். “படைத்திரளில் அமைந்தோர் அனைவரும் உடனடியாக அறிந்துகொள்ளும் ஒரு நிகழ்வு தேவை. அவர்களை நடுங்கச் செய்வது, கொந்தளிக்க வைப்பது. அதன் உட்பொருள் கிளர்ந்தெழுக என்னும் அறைகூவலாக இருக்கவேண்டும். இனி பின்னகர்தல் இல்லை என்னும் அறிவிப்பாக இருக்கவேண்டும். வெல்வோம் என்னும் நம்பிக்கையாக இருக்கவேண்டும். எதையும் இழக்கத் துணிந்துவிட்டோம் என்னும் வெளிப்பாடாகத் தெரியவேண்டும். அத்தகைய ஒன்றை இயற்றுவதே ஒரே வழி” என்றார் துருபதர். “போர்முனையில் அது தனிப்பெரும் வீரமும் இணையிலா தற்கொடையுமே. படைவீரர் ஒவ்வொருவரும் அதை தானும் நடிப்பார்கள். அதனூடாக கிளர்ந்தெழுவார்கள். அது நிறுவப்பட்ட வழி.”
“எழுபது ஆண்டுகளுக்கு முன்பு உசிநாரர்களுடனான போரில் அவ்வாறு படைகள் சோர்ந்தன. ஏனென்றால் பாஞ்சாலத்தைவிட இருமடங்கு அவர்களின் படை. என் சிறுதந்தையாகிய பார்த்திபர் வாளை உருவியபடி போர்க்கூச்சலுடன் எதிரிமேல் பாய்ந்தார். வெட்டிவீழ்த்தியபடி முன்னால் சென்றார். எழுபதுபேர் அவர் வாளால் களம்பட்டனர். இறுதியில் அவர் வீழ்ந்தார். குருதியில் நனைந்த உடலுடன் அறுந்து தொங்கிய கைகளுடன் தேர்ப்பீடத்தில் அமர்ந்து எங்களை நோக்கி வெற்றிவேல் வீரவேல் என கூவினார். அடுத்த கணம் அவர் தலை அறுந்து கீழே விழுந்தது. உடல் சரிந்து தேரிலிருந்து நிலத்தில் விழுந்து துடித்தது. எங்கள் படை வெற்றிவேல் வீரவேல் என கூவியபடி பொங்கி முன்னெழுந்தது. நாங்கள் வென்றோம்.”
பீமன் தன் தோளை ஓங்கி அறைந்த ஒலிகேட்டு அவை திடுக்கிட்ட்து. “ஆம், அதுவே வழி…” என்று கூவியபடி அவன் முன்னெழுந்தான். “நான் செல்கிறேன்… நான் முன்னெழுந்து சென்று காட்டுகிறேன்.” யுதிஷ்டிரர் “வாயைமூடு, மூடா” என பற்களைக் கடித்தபடி சீறினார். பீமன் சீற்றத்துடன் திரும்பி “வேறு எவர் வாளேந்தி முன் சென்றாலும் இங்கு எழுந்துள்ள ஐயம் விலகாது. நாம் பிறரை வைத்தாடுகிறோம் என்பதே இவர்கள் கொண்டுள்ள எண்ணம். நம் ஐவரில் ஒருவர் எழுந்து சென்றாகவேண்டும்… நம் குருதி களத்தில் விழுந்தாகவேண்டும்… அல்லது நம் மைந்தரில் ஒருவர்.” பீமன் கைகளை தூக்கினான். வெடித்தெழுந்த குரலில் “ஆம், நம் மைந்தரில் ஒருவர், நம் குருதியினர். அதன் பின் எவருக்கும் ஐயமிருக்காது” என்றான்.
“நான் செல்கிறேன், தந்தையே” என்று சுதசோமன் கூவினான். தோளில் அறைந்து கூவியபடி சர்வதன் அரசமேடை நோக்கி சென்றான். “நான் செல்கிறேன்… நான் காட்டுகிறேன் வீரமென்றும் தற்கொடையென்றும் சொல்வதற்கு என்ன பொருள் என்று…” சுருதகீர்த்தி “கதைவீரர் செல்வதில் பொருளில்லை. நான் செல்கிறேன், ஒரு நாழிகைப்பொழுது அவர்களின் முழுப்படையையும் கலங்க வைப்பேன். ஆயிரம் உடல் சரியாமல் நான் விழமாட்டேன்… ஐயமே தேவையில்லை” என்றான். அபிமன்யூ “என்னால் மட்டுமே இதை செய்ய முடியும் என்று நீங்கள் அனைவரும் அறிவீர்கள் தந்தையே” என்றான். சதானீகனும் சுருதசேனனும் “நாங்கள் செல்கிறோம்… எங்களை அனுப்புங்கள்” என்று கூவியபடி அவைமேடையை அணுகினர்.
இளைய யாதவர் கைதூக்கி “பொறுங்கள்… இளமைந்தர் சென்று களம்நின்று வீரமென்ன என்று காட்டலாம். நம் மைந்தர் களப்பலியானால் அதன்பின் மறு சொல்லே இல்லை. நாம் எண்ணுவது குருதியை மட்டுமே என களத்திலிருக்கும் அனைவருக்கும் அறிவிப்பதுதான் அது” என்றார். “ஆனால் எதிர்முனையில் இருப்பவர் பிதாமகர் பீஷ்மர். அவர் நம் மைந்தருக்கு எதிராக படைக்கலம் எடுக்கமாட்டார். அவர்களை அவர் எதிர்க்கவில்லை என்றால், கௌரவப்படைகளை இவர்கள் கொன்று அழித்த பின்னரும் திரும்பிவர ஒப்பினார் என்றால், என்ன ஆகும்?”
அவையினர் திகைக்க பிரதிவிந்தியன் “நான் அதை எண்ணினேன். பிதாமகர் பீஷ்மர் அந்த இளமைந்தனை நோக்கி புன்னகைத்து வாழ்த்தி திருப்பி அனுப்பினால் அவர்கள் அறத்தால் பெருகுவர். பலமடங்கு ஆற்றல் கொண்டவர்களாக தெரிவர். நாம் கேலிக்குரியவர்களாவோம்” என்றான். “இன்னொன்றும் நிகழலாம். பிதாமகரை எதிர்க்க அஞ்சி பாண்டவர்கள் தங்கள் மைந்தர்களை அனுப்புகிறார்கள் என்று எண்ணப்படலாம். அது நம் படைகள் எண்ணுவதை மேலும் உறுதிப்படுத்தும்…” யுதிஷ்டிரர் “போதும்” என சலிப்புடன் கைகாட்ட பீமனும் சோர்வுடன் கைகளை தொங்கவிட்டு பின்னகர்ந்தான்.
“இங்கு நிஷாதர்களும் கிராதர்களும் உள்ளனர். அவர்கள் சொல்லட்டும், என்ன செய்வதென்று” என்றார் இளைய யாதவர். “அவர்களின் குடிகளில் இத்தருணத்தில் என்ன செய்வார்கள்?” எவரும் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்க, இது நமக்கு இறுதி வாய்ப்பு!” என்றார் இளைய யாதவர். பின்நிரையில் இருந்த சம்பராசுரரின் மைந்தர் கீர்த்திமான் “எங்கள் வழிகள் உங்களுக்கு உவப்பானவை அல்ல” என்றார். “அதை பேசவேண்டாம்” என்று மூத்த கிராதமன்னர் கூர்மர் திரும்பி அவரை அடக்கினார். “அவர் சொல்லட்டும்… சொல்லுங்கள், கிராதரே” என்றார் இளைய யாதவர்.
“எங்கள் குடியில் போருக்குக் கிளம்புவதற்கு முன் எங்கள் மைந்தர்களில் ஒருவரை நாங்களே போருக்குரிய தெய்வமாகிய ரக்தைக்கு கழுத்தறுத்து பலிகொடுப்போம். அத்தனை போர்வீரர்களும் சூழ்ந்திருக்க இது நிகழும்… அம்மைந்தனின் குருதி எங்களால் தவிர்க்கமுடியாத ஓர் ஆணை. எங்களுக்கே நாங்கள் இரக்கம் காட்டிக்கொள்ளவில்லை, எனவே எதிரிக்கு எவ்வகையிலும் இரக்கம் காட்டமாட்டோம் என்னும் அறிவிப்பு அது. எங்கள் மைந்தர்கள் அனைவரையும் போர்முன் நிறுத்தும் கட்டாயத்தை அது எங்களுக்கு அளிக்கும். எதிரியின் இளமைந்தர்களைக்கூட தயங்காமல் கொல்லும் ஆற்றலை எங்கள் போர்வீரர்களுக்கு கொடுக்கும். அம்மைந்தனின் குருதி நினைவில் இருக்கும்வரை போரில் எந்நிலையிலும் அஞ்சி பின்வாங்க முடியாது. எதன்பொருட்டும் எதிரியுடன் போர்முறிவு செய்துகொள்ள இயலாது… முழுவெற்றியோ முற்றழிவோ மட்டும்தான் என்னும் அறுதி முடிவு அது” என்றார் கீர்த்திமான்.
அவை திகைத்து அமர்ந்திருக்க அரவானின் குரல் எழுந்தது. “அதை எங்கள் குடியில் பிறிதொரு வகையில் செய்வார்கள். களத்தில் முதன்மைவீரன் ஒருவன் தன் கழுத்தை தானே அறுத்து தற்கொடை அளிப்பான்.” அனைவரும் திடுக்கிட்டு திரும்பி அவனை பார்த்தனர். புருவம் சுருங்க முகம் சுளித்து “என்ன சொல்கிறாய்?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “அவன் பெரும்பாலும் அரசனின் இளைய மைந்தனாக இருப்பான். முதற்குருதியை தன் குடியிலிருந்து அளிக்கும் அரசனின் ஆற்றல் அளவிறந்தது. அவன் சொல் மாற்றிலாதது” என்றான் அரவான். அர்ஜுனன் “இது அரசப்பேரவை, உங்கள் குடியவை அல்ல. நீ அமர்க!” என்று எரிச்சலுடன் சொன்னான்.
அரவான் தலைவணங்கி “தந்தையே, நான் இப்போரில் படைமுகப்பில் தலைக்கொடை அளிக்கிறேன்” என்றான். அவையில் மென்முழக்கம் எழுந்தது. அவன் சொற்களை உத்தரன் முதலில் செவிகொண்டாலும் உளம் தொடவில்லை. பின்னர் ஊசியால் குத்தப்பட்டதுபோல உடல் அதிர அதை உணர்ந்து திரும்பி அரவானை பார்த்தான். அவன் முகம் மலர்ந்திருந்தது. அவை தன் சொற்களை உள்வாங்கவில்லை என உணர்ந்த அரவான் “குருக்ஷேத்ரத்தில் முதலில் விழுவது என் குருதியாக அமையட்டும். என் குடிக்கும் எனக்கும் அது அழியாப் பெரும்புகழை அளிக்கட்டும்” என்றான். தன் இடையிலிருந்த சிறிய நாகக்குறுவாளை எடுத்துக் காட்டி “இது என் மூத்தார் எனக்களித்தது. இது என் கழுத்தை துணிக்கும் என்றால் அதைவிடப் பெருமை எனக்கில்லை” என்றான்.
உத்தரன் தன் இடத்தொடை துள்ளிக்கொண்டிருப்பதை உணர்ந்து கையால் அதை அழுத்திக்கொண்டான். மூச்சை பலமுறை இழுத்துவிட்டு தன்னை ஆற்றிக்கொண்டான். அவையில் அரவானின் முகம் மட்டும் தனித்துத் தெரிவதாக தோன்றியது.