கல் அழகுறுதல்

108-2

கம்போடியா பயணம்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

“கம்பொடியாவில் நல்ல மழை. நனைந்தபடித்தான் ஆலயவளாகத்தைப் பார்க்கவேண்டும் என்றனர். மழை கல்லுக்கு மிகவும் பிடித்தமானது. கல் அழகுகொள்வது நனையும்போதுதான்”.

அப்படித்தான் இருந்தது சில நாட்கள் முன்பு தஞ்சாவூர் கோவிலில் மழை பெய்தபோது. நான் அப்போது எடுத்த நிழற்படங்கள் இவை. கடந்த ஆறு வருடங்களாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறேன் நான். என்னுடைய படங்களை உங்களிடம் காட்ட வேண்டும் என்ற ஆசை வெகுநாளாக இருந்துகொண்டிருக்கிறது. உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்ற சந்தோசம் தான்.

அன்புடன்,

கார்த்திக்கேயன்.ப

காதல் ஒரு கடிதம்

110-Edit

அன்புள்ள கார்த்திகேயன்

முன்பொருமுறை பாலு மகேந்திராவிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் கறுப்புவெள்ளையில் எடுத்த சில மலையாளப்படங்களைப் பற்றிச் சொன்னேன். பரவசமாகிவிட்டார். “இன்று எவரேனும் ஒரு கறுப்புவெள்ளைப் படம் எடுக்க அழைத்தால் பணமே வாங்க மாட்டேன்!” என்றார். இறுதியாக எடுத்த படத்தை கறுப்பு வெள்ளையில் எடுக்கவிருப்பதாகக்கூடச் சொன்னா

“நிறம்கிறது ஒருவகையான இன்னொசெண்டான விஷுவல். அதிலே ஆர்ட்டிஸ்டுக்கு ரோலே இல்லை. அதோட இப்ப கிரேடிங் எல்லாம் வந்தாச்சு. இனிமே ஒளியிலே பண்றதுக்குப் பெரிசா ஒண்ணுமில்லை. ஆனா கறுப்புவெள்ளைங்கிறது நாமளே உருவாக்கிற உலகம். கறுப்புவெள்ளைதான் கனவுகளுக்கு நெருக்கமானது. அதிலே கலர்கூட கொண்டுவர முடியும். நான் கறுப்புவெள்ளையிலே பாத்த பாதேர் பாஞ்சாலி எனக்கு கலர்ப்படமாத்தான் ஞாபகத்திலே இருக்கு” என்றார் பாலு

இந்தப்படங்களின் நிழலும் இருளும் ஒளியை அழகுறச்செய்கின்றன. வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைபிழை -கடிதம்
அடுத்த கட்டுரைஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது