தளம் -கடிதம்

17554066_1884104015212580_7886132831421391553_n

 

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

 

 

ஒரு சனிக்கிழமை இரவு உணவின்போது என் பதின்வயது மகளுடன் பள்ளி நிகழ்வுகளைப் பேசிக்கொண்டிருந்தேன்.  ஆர்வமுடன் பல்வேறு விஷயங்களை அவள் விளக்கிக்கொண்டிருந்தபோது கடவுள், வழிபாடு சார்ந்த சில கேள்விகள் எழுந்தன.

 

 

‘இந்து மதம் எப்படி ஆரம்பித்தது’? என்று கேட்ட அவளின் கேள்விக்கு கிட்டத்தட்ட ஒருமணிநேரம் வேதத்திலிருந்து தொடங்கி, தரிசனங்கள், தெய்வங்கள், வழிபாடுகள் என ஒருவகையாக தொகுத்து ( சொல்லச் சொல்ல  எனக்கே ஆச்சரியமாக இருந்தது!) விளக்கினேன்.  சில அத்தியாங்களை ‘இந்திய  ஞானம்’ புத்தகத்திலிருந்து படித்தும் காண்பித்தேன்.   ஒரு ஏகலைவப் ப்ரயத்தனத்துடன் நானறிந்தவற்றை எளிமையாக புரியும்படிதான் சொன்னேனென்று நினைக்கிறேன்.   அவள் மிகுந்த ஆச்சரியத்துடனும் கவனத்துடனும் கேட்டாள். ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ எனக்கு சிறுதெய்வங்களைப் பற்றி விளக்க உதவியது. ஒரு விளக்கமான தொகுப்பை அளித்த உளநிறைவு எனக்கே ஏற்பட்டது.

 

 

பின் படுக்கைக்குச் சென்றபோது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.   சில வருடங்களுக்கு முன் இப்படி ஒரு கேள்வியை எப்படி எதிர்கொண்டிருப்பேன்? ஏதோ தெரிந்தவைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லியிருக்கக்கூடும்.  ஆனால் அதன் இடைவெளிகளை நிரப்ப இயலாதவனாக இருந்திருப்பேன்.  அப்படி இல்லாமல் , கேள்வியை தகுந்த முறையில் எதிர்கொண்டு விளக்கமளிக்க எனக்கு உதவியமைக்கு நன்றிகள் பல!  எனக்குத் தெரிந்ததோடு மட்டுமல்லாமல் இளைய தலைமுறைகளின் ஒரு பிரதிநிதியிடம் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லமுடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளானேன்.  அதன் வேராக உங்கள் எழுத்துகள் இருந்ததென்பது மிகையில்லை உண்மை.  “இப்படிப்பட்ட ஒரு மாபெரும் ஞான மரபெனும் பெரும்பட்டு வலையின் ஏதோ ஒரு முனையாக அல்லது புள்ளியாகத்தான் நீயும் நானும் இருக்க முடியும்.  நானறிந்ததையும் உணர்ந்ததையும் சொன்னேன்.  நீ இங்கிருந்து வேறு தளங்களுக்கும் போகமுடியும். ஆனால் அடிப்படை என்பது இப்படித்தான் இருக்கிறது” என்று சொல்ல , சற்று நேரம் கழித்து, கனவிலிருந்து விழித்ததுபோல் தன் எண்ணத்தின் தொடர்ச்சியாக  ‘ “ஆமா இல்ல” என்று   அவள்  ஆச்சரியத்துடன் சொன்ன அந்தக் கணத்தில் வாழ்வின் ஒரு தரிசனம் அவளுள் நிகழ்ந்ததைக் கண்டேன்.   ஒரு தினத்தின் முடிவில் தூக்கத்துக்கு முன் மனம் மிகுந்த நிறைவுற்று கண்ணீர் தளும்பிய ஒரு கணம்… அது அந்த நிகழ்வை சாத்தியமாக்கிய உங்கள் எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்குமே சமர்ப்பணம்!

 

 

என்னசொல்லி முடிப்பதென்று அறியாத ஒரு மனநிலையில்

 

 

நா. சந்திரசேகரன்

 

 

பின் குறிப்பு: தங்கள் வலைத்தளத்தில் ‘சிராபுஞ்சியில் மழை’ படிக்கமுயன்று ஒரு நாளெல்லாம் தளத்துள் நுழைய முடியாமல்   “bad gateway”    என்று காண்பித்துக்கொண்டிருந்தது.  அது மிகச்சிறந்த ஒரு வாசல்தானென்று யாரிடம் சொல்லித் திறப்பதென்று தெரியாமல் காத்திருப்பதொன்றே வழியென்று இருந்துவிட்டேன்.  மறுநாள் சொர்க்கவாசல் திறந்ததில் மகிழ்ச்சி.  ஆனால் இப்படி தளம் திறக்காமல் போகும் அந்த நேரம் மிகுந்த பதற்றத்தை உண்டாக்குகிறது.  பல்வேறு வாசகர்களுக்கு பல்வேறு வாசல்களோடு கை விரித்து தோளணைத்து உள்வாங்கிக்கொள்ளும் ஒரு கோட்டை தன் அனைத்து வாசல்களையும் மூடிக்கொள்வது மனதுக்கு ஒரு பெரும் அழுத்தத்தை உருவாக்குகிறது.

 

 

என்னைப்போன்ற வாசகர்களுக்கு மட்டுமன்றி இணையப் பயன்பாட்டால் எதிர்காலத்தினருக்கும் சென்று சேரவேண்டிய ஒரு மாபெரும் களஞ்சியம், உங்கள் வாழ்நாளின் விளைவு,  தொடர்பற்று போய்விடக்கூடாது. எப்படியேனும் நிகழ்ந்துகொண்டிருக்கவேண்டும்.  இதன் ஒரு பிரதி சேமிப்பாக எங்கேனும் வைத்திருக்க நீங்கள் கண்டிப்பாக வழி செய்திருப்பீர்கள். எனினும் அந்த நேரம் எனக்களித்த வெறுமையும் படபடப்பும் என்னை இவ்வாறு எழுதத் தூண்டியது.   நிகழ்தல் எப்பொழுதும் தொடர இறையை வேண்டுகிறேன்.  நன்றி.

 

 

 

அன்புள்ள சந்திரசேகரன்

 

இணையதளத்துக்கு நகல் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். நண்பர்கள் சிலர்தான் பார்த்துக்கொள்கிறார்கள். இன்றைய சூழலில் நிறைய உதவிகள் பலவகையிலும் தேவைப்படுகின்றன. மிகப்பிரம்மாண்டமான தளமாக ஆகிவிட்டது. ஏராளமான கட்டுரைகள், கடிதங்கள், விவாதங்கள் என ஒரு முழுமையான உலகம் இது. பத்தாண்டுகளில் சிறுகச்சிறுக உருவானது. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்

 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 63
அடுத்த கட்டுரைசிலுவைப்பாடு – காளிப்பிரசாத்