திரு ஜெயமோகன் அவர்களுக்கு
தங்கள் வலையில் படித்த இந்த கட்டுரை பெரும் சந்தோஷத்தை கொடுத்தது.
50 வருடங்களாக காமராஜ் ஓரளவும், ராஜாஜி முழு அளவும் திராவிட கட்சி பிரச்சாரங்களால் பெரிய வில்லன்களாகவே சித்தரிக்கப் பட்டுள்ளனர். உங்கள் கட்டுரை தற்காலத்தில் திராவிட பிரச்சாரத்திரைகளை நீக்கி, அந்தக்கால ஆவணங்கள் மூலம் அந்த மனிதர்களின் சாதனைகளையும், தோல்விகளையும் பார்ப்பதில் முதல் முயற்சி. இது இன்னும் சிந்தனையாளர்களால் முன்னெடுத்துச் செல்லப்படுமானால் தமிழ்நாடு `இருட்டு யுகத்திலிருந்து` வெளியே வரலாம்.
திராவிட பிரச்சாரகர்கள், ஹிஸ்டெரிகலாக, ராஜாஜி `குலக் கல்வி` என்பதை ஆரம்பித்து வருணஸ்ரம தர்மத்தை திராவிடர்கள் மேல் திணிக்க முயற்சித்ததாகவும், திக/திமுக கட்சிகள் அந்த வர்ணாசிரம சதியிலிருந்து தமிழர்களை மீட்டதாகவும் கட்டுக்கதை இடுகிறனர். இது வரை நான் அப்படிப்பட்ட பிரசாரகர்களை உங்கள் ஆதாரம் – அதாவது அரசு ஆணைகள் – யாவை என்றால் யாராலும் கொடுக்க முடியவில்லை. உங்கள் வலைத் தளத்தில் முதன் முறையாக அக்கால அரசு சிந்தனை/திட்டம் பற்றி படித்ததில் மகிழ்ச்சி. மேலும் ராஜாஜி மாகாண பிரிவினை போது , சென்னை தமிழ்நாட்டில் இருக்க வெற்றிகரமாக முயன்றதையும் சுட்டிக் காட்டி இருப்பது நல்லது.
ராஜாஜி ஒரு காம்ளிகேடட் ஆசாமி, அதே சமயம் நேரமையான அரசியலையும் கடைப்பிடித்தார். அதற்கு 2 உதாரணங்கள் 1942ல், காங்கிரஸ் முஸ்லிம் லீக்/ ஜின்னாவுடன் பேசவே மாட்டேன் என பிடிவாதமாக இருந்தது. அப்போது ராஜாஜி காங்கிரஸில் தனியராக, நமக்கு பிடிக்குமோ இல்லையோ, முஸ்லிம் லீக்/ ஜின்னா பெரிய அரசியல் சக்தி, அத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக உறவுக்கு வர வேண்டும் என்றார். அதற்காக அவர் மேல் காங்கிரஸ்காரர்கள் முட்டைகளை வீசினர். ஆனால் சில வருடங்களில் காங்கிரஸ் வலுவடைந்த முஸ்லிம் லீகுடன் பேச்சு வார்த்தை நடத்த நிர்பந்தம் ஏற்பட்டது.
அதே போல், 1950ல், சோஷலிசம் தவறு, தனியார் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று வெளிப்படையாக கொள்கை செய்தார். அவருடைய பொருளாதார எண்ணங்களை ஏற்க்காலும், ஏற்க்காவிட்டாலும் , அவர் வெளிப்படையாக கொள்கைகளை வைத்து அதை தன் அரசியலின் அடிப்படையாக செய்ததை பாராட்ட வேண்டும். அது தற்போது சோஷலிசம், மக்கள் நலம் என வேஷம் போட்டு, தன் குடும்ப நலனுக்கு மட்டும் தனியார் முதலீட்டை திருட்டுத் தனமாக முன் வைப்பதற்கு எதிர்மாறானது.
நீங்கள் சொல்லும் போல், அவர் `பழைய உலக மனிதர்` அதே சமயம் அவரிடம் நேர்மையும், முன் பார்வையும் இருந்தது. அது கடந்த 40 வருடங்களில் கிடைக்காதது
மதிப்புடன்
வன்பாக்கம் விஜயராகவன்
============================
Dear J,
There seem to lots of factual errors regarding your article about Rajaji
and the status of Madras. I have not seen any description by M.A.Mathai
about Rajaji refusing to talk to Nehru by phone when Potti Sriramulu
fasted to death. Pls check again.
and Congressmen persuaded Rajaji to become CM in 1952 and initially
he refused. And although Rajaji and Kamaraj has differences, they shared
mutual love and respect. Pls read thru Rajmohan Gandhi’s book.
and you too have fallen for the common myth that Rajaji’s Swathanthra
joinned in coalition with DMK in 1967, simply to bring down Kamaraj.
Rajaji tried to form an anti-congress grand alliance all over India.
and purely for idealogical reasons. He was very clear that socialisitic
policies of Congress were counter productive and corrupt ; hence
without opposing Congress and Communists directly, it was impossible
to oppose socialism in India. and by 1967 Kamaraj was entrenched in
New Delhi and in central politics. Rajaji was too great a man to stoop
to fight for personal reasons or animosity. He was much misunderstood man.
Kamaraj’s greatest sin was making Indira PM in 1966. Without his active
support and canvassing, Morarji would have rightly become the PM. Kamaraj
and the Syndicate belived they can ‘control’ the young and inexperienced
Indira Gandhi easily from behind and play kingmakers for ever. Alas.
more later.
—
Regards / அன்புடன்
K.R.Athiyaman / K.R.அதியமான்
Chennai – 96
http://nellikkani.blogspot.com
http://athiyamaan.blogspot.com
http://athiyaman.blogspot.com (english)
———————————————–
அன்புள்ள தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தங்களின் “மபொசி,காமராஜ், ராஜாஜி…” கட்டுரை படித்தேன்.
உங்களிடமிருந்து இப்படி ஒரு வரலாற்றுப் பிழை மலிந்ததும் அவதூறான சொற்கள் நிரம்பியதுமான ஒரு கட்டுரையை எதிர்பார்க்கவில்லை. திராவிடத் திரிபுக்குச் சற்றும் சளைத்ததில்லை உங்களதும். எல்லா ஆளுமைகளும் எல்லாக் காலத்தும் நனி சிறந்தோர் இல்லைதான். ஆனால் அதே சமயம் அவரவர் நிறைவேற்றிய வரலாற்றுக் கடமைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்தான்.
“அவரது தமிழரசுக்கழகம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது” – என்கிறீர்கள். தமிழரசுக் கழகம் என்பது ம.பொ.சி. காங்கிரசில் இருந்தபோது ஒரு கலாச்சார இயக்கமாகவே துவங்கப்பட்டது என்பதும் அதன் துவக்கவிழாவில் சில காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றார்கள் என்பதும் உண்மை. ஆனால் அது ‘காங்கிரசால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது’ என்பது உண்மையல்ல. அது உண்மையானால் வடக்கெல்லை மீட்புப் போராட்டம் உச்சத்தை அடைகையில் அதைத் தேச ஒற்றுமைக்கு ஊறு என்று கூறி,’அப் போராட்டத்தைக் கைவிடுகிறீர்களா? அல்லது தமிழரசுக் கழகத்தார் காங்கிரசை விட்டு வெளியேறுகிறீர்களா?’ என்று காமராஜ் தலைமையிலான காங்கிரஸ் 1954-இல் விளக்கம் கேட்கும் நிலை வந்திருக்காது. அதற்கு முன்பும் தமிழரசுக் கழகம் குறித்து நேருவே விளக்கம் கேட்கும் நிலையும் வந்திருக்காது.தெ.பொ.மீ., மு.வ., சஞ்சீவி முதலான தமிழறிஞர்களும் இருந்த அமைப்பு அது. கவிமணி, நாமக்கல் கவிஞர், பாரதிதாசன் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டதும் கூட.
“குரங்கின் கையில் குட்டியாக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ம.பொ.சியின் தமிழரசுக்கழகம்” என்பதெல்லாம் எவ்வளவு அவதூறான சொல்லாடல்?
இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பே ஆந்திரத் தனி மாநிலக் கோரிக்கை எழுந்துவிட்டது. சுதந்திற்குப் பின் வீறு கொண்டது. சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னைக்கும் உரிமை கொண்டாடினர் ஆந்திரர். சுதந்திரம் பெற்ற மறு நாளே வடக்கெல்லை காக்கத் திருப்பதி புறப்பட்டவர் ம.பொ.சி. வடவேங்கடம் வரை மீட்கப் போராடி, தணிகை வரை மட்டுமே மீட்க முடிந்தது. இதில் காங்கிரசின் பங்கோ, ராஜாஜியின் பங்கோ ஏதுமில்லை. தணிகையை மீட்க உடன் போராடியோர் மங்கலம் கிழார் முதலானோர்.
பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்தபோது ‘ சென்னை மீதான உரிமை கோருவதை விட்டால் உங்களின் தனி மாநிலக் கோரிக்கைக்கு தமிழரசுக் கழகமும் போராடும்’ என்றவர் ம.பொ.சி. ‘தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று போராடினார் அவர். சென்னையை மீட்க ராஜாஜி உதவினார். அப்போதைய சென்னை மேயர் செங்கல்வராயனுக்கும் இதில் பங்குண்டு.
தெற்கெல்லைப் போராட்டத்தைத் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு முன்னின்று நடத்தியது. நேசமணி, பி.எஸ். மணி போன்றோர் முக்கியமானவர்கள். ஜீவாவின் பங்கும் குறிப்பிடத் தக்கது. இந்தியதேசிய காங்கிரஸ் கேரள காங்கிரசை ஆதரித்த போது ம.பொ.சி. திரு.த.நா.கா.வை ஆதரித்தார். அப்போதைய போராட்டத்தில் (கல்குளம்) ஈடுபட்ட 11 தமிழர்கள் பட்டம் தாணுப்பிள்ளை உத்தரவால் சுட்டுக் கொல்லப் பட்டனர். பி.சோ. கட்சியைச் சேர்ந்த கேரள வெறியர் அவர். ( அச் சம்பவத்திற்காக அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஆர்.எம்.லோகியா அவரிடம் விளக்கம் கேட்டார்.) தென்குமரியை மீட்க அங்கு சென்று குரல்கொடுத்த, போராடிய ஒரே தமிழகத் தலைவர் ம.பொ.சி. தமது ‘தமிழன் குரல்’ இதழில் தொடர்ந்து எழுதிவந்தவர் அவர். அவர் நடத்திய இதர இதழ்கள் தமிழ் முரசு, செங்கோல். இந்திய ஒன்றியத்திற்குள் சுதந்திரச் சோஷலிசத் தமிழ்க் குடியரசு அமைய வேண்டும் என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். தமிழிலக்கிய ஓர்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் ம.பொ.சி.யுடையது.
1946-1965 காலங்களில் செல்வாக்கு பெற்றிருந்த கட்சி தமிழரசுக் கழகம். தமிழரசுக் கழகம் முன்னெடுத்த
தமிழ்த் தேச அரசியலையும் உட்செரித்து வளர்ந்ததுதான் அண்ணாவின் தி.மு.க. அந்த இடத்தில்தான் அது பெரியாரின் தி.க.விடமிருந்து வேறுபட்டது. 1967 காலகட்டத்தில் ம.பொ.சி.யின் நிலைப்பாட்டினால் பலர் அவரை விட்டு விலகினர் என்பது உண்மை. அதன் பாற்பட்டு எமக்கும் விமரிசனம் உண்டு. ஆனால் தமிழ்த் தேச எல்லை மீட்பில் அவர் பங்கு மகத்தானது. எல்லை மீட்பில் காமராஜருக்கு நீங்கள் கொடுத்திருக்கும் அதீத முக்கியத்துவம் தவறானது.
ஆந்திர, கருனாடக, கேரள காங்கிரசுக்கு இருந்த இன ஓர்மை அப்போது தமிழ்நாடு காங்கிரசுக்கு இல்லை. அதனால் தமிழர் இழந்த மண் அதிகம்.
நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் ம.பொ.சி. ‘எனது போராட்டம்’ என்ற அவரது தன்வரலாறு, புதிய தமிழகம் படைத்த வரலாறு, தமிழகத்தில் பிறமொழியினர், விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, இலக்கியத்தில் இன உணர்ச்சி போன்றவை முக்கியமானவை. அவட்றில் சிலவற்றையாவது வாசிக்க முயல்வீர்கள் என்று நம்புகிறேன். அவர் குறித்த செய்திகள், கட்டுரைகள் www.maposi.blogspot.com என்ற வலைப்பூவில் பெரிதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தமிழியம் முதலான சொற்களில் நம்பிக்கையுடைய உங்களுக்கு, தமிழர் – தமிழ்த் தேசியம் முதலான சொற்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், பல்லாயிரம் வாசகர் கொண்ட தங்களுக்கு வரலாற்றுப் பதிவுகளில் கவனப்பாடு அவசியம் என்று நினைக்கிறேன். மிகை புகழோ- திருவுருவாக்கமோ, அவதூறோ-இழிவுபடுத்தலோ தவிருங்கள்.
நன்றி.
அன்புடன்,
யுவபாரதி.
=============================================
ஜெ..
ராஜாஜியின் உயர்குணங்களையும், நேர்மையையும் சரியாக எழுதியிருக்கிறீர்கள். இன்றைய காலகட்டத்துக்கு இது தேவை.
இறுதி இரண்டு பத்திகளில் எனக்குச் சில விஷயஙக்ள் சொல்ல வேண்டும். நேருவின் சோஷியலிஸம் பற்றி.
1948ல், தொழில் கொள்கையை உருவாக்க, ஜே.ஆர்.டி மற்றும் ஜி.டி.பிர்லாவின் தலைமையில் ஒரு குழுவை உருவாக்கி அவர்கள் ஒரு திட்ட வரைவை அளித்தார்கள். அது பாம்பே ப்ளான் என்று அழைக்கப் படுகிறது. அது, மூலதனம் அந்தக் காலத்தில் குறைவாக இருப்பதால், core secotr களில், அரசே முதலீடு செய்து நிறுவனங்களை உருவாக்க பரிந்துரைத்தது. பொதுத் துறை உருவாகியதன் பிண்ணணி இது. நேரு லட்சிய வாதியாக இருந்ததே இந்தியாவின் மிகப் பெரும் பேறு.
மூன்றாண்டுகள் பொதுத் துறையிலும், 17 ஆண்டுகள் தனியார் துறையிலும் பணிபுரிந்த பின் என் புரிதல் இவையே.
1. பொதுத் துறையில், ஒருவர் பணியிலமர்த்தப்பட குறைந்த பட்சத் தகுதி உண்டு. தனியார் துறையில் அது கிடையாது.
2. பொதுத் துறை அரசின் சொத்து என்பதால், எல்லா மக்களும் அதில் பங்கு பெறும் நிலை உருவாகியது. இங்கே கவுண்டர் கம்பெனியிலோ, செட்டியார் கம்பெனியிலோ போய்ப் பாருங்கள். இன்றும் கூட இதுதான் நிதர்சனம்
3. பொருளாதாரம் சீர்திருத்தங்கள் வந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னும், ONGC, IOC, BP, HPCL, BHEL, Coal India, BEL போன்ற அரசு நிறுவனங்கள் மிகத் தரமாகச் செயல்பட்டு வருகின்றன. அவை உலகின் எந்த நிறுவனத்துக்கும் சளைத்தவையல்ல. இன்று ராஜாவால், சீரழிக்கப் பட்ட BSNL இன், தொலைபேசிச் சேவை மிக மிகக் குறைவான கட்டணத்தில் கிடைப்பது. அது எந்த தனியார் துறைக்கும் ஈடு கொடுக்கக் கூடியது. கடந்த 5 ஆண்டுகளில், பங்குச் சந்தையில், முதலீட்டுக்கு மிக அதிகமான வருவாயை ஈட்டித் தந்தவை பொதுத் துறைப் பங்குகளே என்கிறது ஒரு பங்குச் சந்தை ஆய்வு.. (சரி என்கிறார், பங்குச் சந்தையில் உழலும் என் குஜராத்தி நண்பர்)
4. 17 மில்லியன் டன்னிலிருந்து இன்று 120 மில்லியன் டன்னாக உயர்ந்த பால் உற்பத்தி, அமுலின் தாக்கத்தினால் உருவானது. குரியன் என்னும் பொதுத் துறை ஊழியர் சில ஆயிரங்கள் சம்பளத்தின் செய்தது அது. தில்லியின் மெட்ரோவும் (குறித்த காலத்தில் முடிக்கப் பட்ட உலகத் தரம் வாய்ந்த ஒரு நிறுவனம்), கொங்கன் ரயிலும் ஸ்ரீதரன் என்னும் பொதுத் துறை ஊழியரால் உருவானது.
5. பொதுத் துறை நிறுவனங்கள் monopoly ஆகச் செயல்படுகின்றன. அதனால்தான் என்றும் ஒரு வாதம் உண்டு. அவர்களுக்கு சொல்வதெல்லாம், இன்று இந்தியாவில், plastic granules தயாரிப்பும், அவற்றின் விலையும் ரிலையன்ஸினால்தான் தீர்மானிக்கப் படுகிறது. (இதைப் பற்றி ஒரு தனியான கட்டுரை எழுதலாம். விவரம் வேண்டுவோரிடம் தனியாகப் பேசலாம் – 15 வருடங்களாக ப்ளாஸ்டிக் க்ரான்யூல்ஸ் வாங்கி வருகிறேன்).
6. பொதுத் துறையில் காதும் காதும் வச்ச மாதிரி ஊழல் செய்யலாமா? இன்று சிரிப்பாய்ச் சிரிக்கும் ஊழல்களில், பெரும்பான்மையான ஊழல்கள் பொதுத் துறை ஊழல்களே. எத்தனை தனியார் துறை ஊழல்கள் வெளி வருகின்றன??. பொதுத் துறை ஊழல்கள் உடனடியே வெளியே வருகின்றன. ஏனெனில், அவற்றின் செயல்பாடுகள் ஒரு சமூகத்திடையே உள்ளது. அங்கு தொழிலாளர் அமைப்புகள் மிகவும் வலுவானவை. இன்றும் Spic போன்ற நிருவனங்கள் ஏன் அழிந்தன என்று யாருக்கும் தெரிவதே இல்லை
7. ONGCயின் தலைவருக்கு சம்பளம் சில லட்சங்கள். ஆனால், முகேஷ் அம்பானியின் வீடு மட்டுமெ 4500 கோடிக்கு மேல். அவ்வீட்டின் மாத மின்சாரக் கட்டணமே மாதம் 70 லட்சம். கடந்த 20 ஆண்டுகளில் நடந்த விளைவுகள் இது. எனக்கு அதன் மீது புகார்கள் இல்லை. பணம் இருக்கிறது; கட்டுகிறார். சுதந்திரம் கிடைத்துமே முதலாளிகள் கையில் பாரதம் சிக்கியிருந்தால் என்ன ஆயிருக்கும்?? இந்தியாவின் இயற்கை வளங்கள் லாபம் என்ற பெயரில் சூரையாடப் பட்டு மாளிகைகள் கட்டப் பட்டிருக்கும்.
பல்லாயிரம் வேதாந்தாக்கள் 50 வருடம் முன்பே உருவாகிட, கஞ்சிக்கே வழியற்ற கூட்டம் ஆயுதத்தை நோக்கி இயல்பாகச் சென்றிருக்கும்.
8. தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தை அழிப்போம் (நம்ம வள்ளுவர் கூட இதே மாதிரி ஏதோ சொல்லியிருக்கிறார் – சட்னு நினைவுக்கு வர்ல) என்பதே நம் அறம். efficiency என்னும் பெயரில் சில முதலாளிகளுக்கு நாட்டைத் தாரை வார்ப்பதல்ல.. efficiency வேணாம்னு சொல்லல. அது தனியார் துறையின் திறன் மட்டுமல்ல.. அமுல், லிஜ்ஜட் பப்பட் என்று உதாரணங்கள் தர முடியும். ஆனால், அதற்கு முதலிடம் கொடுக்க வேண்டிய சமூக சூழல் அன்று இல்லை.
இன்று உலகெங்கும் வங்கிகள் சரிந்திட, இந்திய வங்கிகள் உலகின் மிக நிலையான வங்கிகள் என்று போற்றப் படுவதற்கு மிக முக்கிய காரணம் – அவை அரசின் கட்டுப் பாட்டுக்குள் இருந்தமையே. கட்டற்ற முதலாளித்துவமும், கட்டுப்பாடான கம்யூனிஸமும் செல்லும் பாதை ஒன்றே – அழிவு. இன்றும், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற உலகின் மிக அதிகாரம் கொண்ட நாட்டுத்தலைவர் ஓபாமா சிரமப் படுகிறார் – ஏனென்றால், அமெரிக்காவின் அரசுக் கட்டுமானம் தொழில்தலைவர்களால் நிர்மாணிக்கப் படுகிறது..
என் மனசாட்சியின் காவலர் என்று தாத்தா (அதை ஏன் சொன்னார் என்று ஊகிக்கிறேன் – வயசான காலத்தில் தாத்தா பொச கெட்டுப் போய் கஸ்தூர்பாவை விட்டு இன்னொரு அம்மாவைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தார். அதை ராஜாஜி, நேரே சென்று அவர் முகத்தில் அடித்தாற்போல் பேசி நிறுத்தினார் – அந்த தைரியம் அப்போது அவருக்கு மட்டுமே இருந்தது) சொன்னாலும், ரொம்ப வெவரமா பொட்டி சாவிய நேருகிட்ட தான் குடுத்துப் போனார். you can’t beat a gujarati!
மகாத்மாக்களை போற்றலாம். அவர்களோடு வேலை செய்ய முடியாது என்று விலகி வந்தார் ராஜாஜி. அதே போல், ராஜாஜியின் நேர்மையையும், திறமையையும் போற்றலாம். புகைப் படத்துக்கு மாலை போட்டு வணங்கலாம். அவ்வளவே
அன்புடன்
பாலா
===========================================
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை கேணி கூட்டத்தில் தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. தமிழ்த் தேசியம் தொடர்பாகவும் திராவிட அரசியல் தொடர்பாகவும் எனக்கு சில கேள்விகள் இருந்தன. அன்றைய சூழலில் கேட்க இயலவில்லை. இந்திய தேசியமும் தமிழ்த் தேசியமும் முரணானவை என்று நீங்கள் கருதுகிறீர்களா? மிகப் பொருத்தமான காலகட்டத்தில் எழுந்த தமிழ்த் தேசியம் குறித்த ஓர்மை, அதே சமத்தில் தோன்றிய திராவிட அரசியலால் சிதைந்து போனதா? வகுப்புவாதம் மற்றும் இனவெறுப்பை முன்னிறுத்தாமல் பண்டைய இலக்கியப் பரிச்சயங்களின் வழியாக வடித்த தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் தமிழரசுக் கழகம் என்ற கட்சியை வழிநடத்திப் பிறகு அந்நிலைப்பாட்டிலிருந்து விலகிப் போன ம.பொ.சிவஞானம் பற்றி உங்களது கருத்து என்ன?
அன்புள்ள
தி.பரமேசுவரி
அன்புள்ள பரமேஸ்வரி அவர்களுக்கு
ம.பொ.சிவஞானம் அவர்களைப்பற்றி என் புரிதல் அல்லது மதிப்பீட்டை நான் விரிவாகவே எழுத வேண்டும். திராவிட இயக்கம் உருவாக்கிய பிளவுப்போக்குள்ள தமிழ் தேசியத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் தரப்பில் இருந்து உருவான ஒருமைப்பாட்டு நோக்கமுள்ள தமிழ் தேசியத்தை அவர் முன்வைத்தார் என்று எண்ணுகிறேன். அது முக்கியமான ஒரு தரப்பு. ஆனால் காங்கிரஸ் அவரை கைவிட்டது. அதற்கு பெரும்பாலும் காமராஜ் அவர்களே காரணம். அந்தத் தரப்பின் பண்பாட்டு முக்கியத்துவத்தை உணர காமராஜ் அவர்களால் இயலவில்லை.
இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய அமைப்புக்குள் பல்வேறு மொழிவாரி உபதேசியங்கள் உள்ளன. அவை தனி நாடுகளாக தனித்தியங்க முடியாது. காரணம் இந்நாட்டின் விரிவான மக்கள் பரவல். விரிவான பண்பாட்டுப்பரவல். இந்நாடு ஒரு ஒற்றைப்பண்பாட்டு தேசியமாகவும் உள்ளது. இந்த மைய அமைப்புக்குள் ஒவ்வொரு கூறும் தன் தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்ளவும் வளர்க்கவும் வேணிய தேவை உள்ளது. அதற்கு பிளவுப்போக்கில்லாத, ஒருமைநோக்கு கொண்ட, ஆக்கபூர்வமான தேசிய உருவகம் தேவை. அதாவது தேசிய உருவகத்தை பாசிசமாக மாற்றும் பொக்குக்கு எதிரான நேர்நிலை தேசியம்
ஈ.எம்.எஸ் அவர்கள் கேரள தேசியம் குறித்து பேசும்போது அதைத்தான் பேசினார் என்பது என் எண்ணம். அதை ஈ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் என்ற கட்டுரையில் பேசியிருக்கிறேன். மபொசியின் அந்த தரப்பு வலுபெற்றிருந்தால் இன்றைய வெறுப்புத்தேசிய குரல்கள் இத்தனை எழுந்திருக்காது
ஒருமைப்பாட்டுக்கு, ஆக்கபூர்வமான தேசியத்திற்கு பண்பாட்டில் பயிற்சி தேவை. மொழியில் தேர்ச்சி தேவை. வெறுப்புக்கு, பாசிசத்துக்கு முச்சந்தியில் கூச்சலிடும் முரடர்களே போதும்
மபொசி தோற்கடிக்கப்பட்டது -நண்பர்களாலும் எதிரிகளாலும் அவரது தனிப்பட பலவீனங்களாலும்- ஒரு பெரிய இழப்பே.
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தாங்கள் 27.12.10 அன்று எழுதிய ம.பொ.சி, காமராஜ், ராஜாஜி.. கட்டுரை படித்தேன். தமிழக வரலாற்றை இன்னும் எப்படியெல்லாம் திரித்து எழுத உத்தேசித்திருக்கிறார்களோ, இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறார்களோ என்றுதான் தோன்றியது. தமிழக வரலாற்றை (குறிப்பாக எல்லைப் போராட்டம்) யார் எப்படி எழுதினாலும் அதைச் சகித்துக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்கத் தமிழன் இத்தனைக் கால அடிமை வாழ்வில் பழக்கப்படுத்தப்பட்டுத் தானே இருக்கிறான். ஆனால் எல்லாத் தமிழர்களையும் நீங்கள் அப்படி நினைத்துவிட்டால் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே, அது உங்கள் தவறு. நான் முன்னர் எழுதிய ம.பொ.சி தொடர்பான கடிதத்திற்குத் தாங்கள் கொடுத்த பதிலை மேலே கொடுத்திருக்கிறேன்.
திராவிட இயக்கம் உருவாக்கிய பிளவுப்போக்குள்ள தமிழ் தேசியத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் தரப்பில் இருந்து உருவான ஒருமைப்பாட்டு நோக்கமுள்ள தமிழ் தேசியத்தை அவர் முன்வைத்தார் என்று எண்ணுகிறேன். அது முக்கியமான ஒரு தரப்பு. ஆனால் காங்கிரஸ் அவரை கைவிட்டது. அதற்கு பெரும்பாலும் காமராஜ் அவர்களே காரணம். அந்தத் தரப்பின் பண்பாட்டு முக்கியத்துவத்தை உணர காமராஜ் அவர்களால் இயலவில்லை. இப்படி எழுதிய நீங்களே தங்கள் மதிப்பீட்டை மாற்றிக்கொண்டது எவ்வாறோ?உங்கள் மொத்தக் கட்டுரையையும் படித்தால் சிரிப்புத்தான் வருகிறது. கதை புனையும் ஆற்றலைத் தாங்கள் எப்படி யெல்லாம் பயன்படுத்துகிறீர்கள் என்று?
தமிழரசுக்கழகம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது.
காங்கிரஸ் தன்னுடைய தேசியப்பார்வையை கைவிடாமல் தமிழ்ப்பெருமிதத்தை கையாள நினைத்தது. தமிழ்த்தேசியத்தை இந்திய தேசியத்தின் ஒரு பகுதியாக முன்வைக்க நினைத்தது. இதன் பொருட்டே ம.பொ.சியின் தமிழரசுக்கழகம் 1946ல் தொடங்கப்பட்டது.
ஆகவே சுதந்திரத்தை ஒட்டி உருவாகிவந்த அரசியல் அதிகார ஆட்டத்தில் ஆந்திரர்களை வெல்லவேண்டிய தேவை காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கு இருந்தது. அவர்கள் தேசியவாதிகளாகையால் நேரடியாக இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான எதையும் பேச முடியாது. ஆகவே குரங்கின் கையில் குட்டியாக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ம.பொ.சியின் தமிழரசுக்கழகம்.
ம.பொசி என்ற மனிதரும் அவரது இயக்கமும் தெலுங்கு ஆதிக்கத்துக்கு எதிராக சத்யமூர்த்தியாலும் பின்னர் ராஜாஜியாலும் உருவாக்கி முன்வைக்கப்பட்டவர்கள் என்பதே வரலாறு.
நீங்கள் துப்பறியும் சாம்புவா, அல்லது ஷெர்லக் ஹோம்ஸா என்று தெரியவில்லை. உங்கள் புதிய கண்டுபிடிப்புகள் மெய்சிலிர்க்கச் செய்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகனை வாசிக்கின்ற, அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்புத் தருகின்ற ஒரு வாசகர் கூட்டம் உங்கள் பின்னால் இருக்கும்போது உங்கள் சொற்களில் இன்னும் கவனமாக இருக்க வேண்டுமென்று கருதுகிறேன். நீங்கள் ஒட்டுமொத்தமாக எல்லைப் போராட்டத்தில் பங்குபெற்று அடியும் உதையும் வாங்கிச் சிறை சென்ற – உயிரிழந்த தியாகிகளையும், உங்கள் வார்த்தைகளை அப்படியே நம்புகின்ற வாசகர்களையும் அவமானப்படுத்துவதாகவே எண்ணுகின்றேன்.
திராவிட இயக்கங்கள் வரலாற்றைத் திரித்தும் மறைத்தும் செய்த மாயங்கள் போதாதென்று இப்போது நீங்கள் கிளம்பியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. மொழிவாரி மாநிலப் பிரிவினைக் கிளர்ச்சியின்போது ஆந்திர அரசியல் கட்சிகள் ஆந்திர மகா சபை என்கிற பொது அமைப்பின் கீழ் ஒன்று திரண்டபோதும் தமிழகத்தில் வழக்கமான மௌனமே நிலவியது. அப்போது பிரச்சனையை எதிர்கொண்டு, முன்னெடுத்துத் தன் கட்சியான தமிழரசுக்கழகத்தின் வாயிலாக எதிர் கொண்டவர் ம.பொ.சி. அன்றைய முதல்வராக இருந்த ராஜாஜி, சென்னை நகர மேயராக இருந்த செங்கல்வராயன் ஆகியோரும் தங்கள் பங்களிப்பினைச் செய்துள்ளனர். இவையெல்லாமே ம.பொ.சியின் எனது போராட்டம் என்ற அவருடைய வாழ்க்கை நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கெல்லைப் போரில் மங்கலங்கிழாரின் அழைப்பின் பேரில் சென்ற ம.பொ.சிக்கு நீங்கள் சொல்லும் ராஜாஜி எந்த உதவியும் செய்யவில்லை. அது மட்டுமல்லாமல் ம.பொ.சியும் அவரது தோழர்களும் ராஜாஜி அரசாலேயே இரு முறை சிறையிலடைக்கப்பட்டனர். தமிழரசுக்கழகத் தோழர்களான திருவாலங்காடு கோவிந்தசாமி, பழனி மாணிக்கம் என்ற இருவர் சிறையிலேயே உயிர் துறக்கின்றனர். ஆனால் அத்தனையும் முன் கூட்டியே பேசித் திட்டமிட்ட நாடகம் என்கிறீர்கள் நீங்கள்.
தெற்கெல்லைப் போராட்டத்தில் அப்போதைய திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுத்தபோது தமிழ்நாட்டிலிருந்து அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த ஒரே கட்சி தமிழரசுக் கழகம்தான். அதைக் குரங்குக்குட்டி என்று நீங்கள் என்ன சூத்திரத்தைக் கொண்டு அளவிட்டீர்களெனப் புரியவில்லை. இந்தப் போராட்டத்தில் அவருக்கு ஆதரவு தந்த ஒரே தலைவர் தோழர் ஜீவானந்தம். அப்போது அந்தப் பகுதியில் வாழ்ந்த கவிமணி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி. கே. எஸ் சகோதரர்கள் போன்றோரும் இந்தப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பங்கு பெற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பட்டம் தாணுப்பிள்ளை அரசினால் 11 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது வரலாறு. இந்தப் போராட்டங்களின் காரணமாகவே அவர் காங்கிரசிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியில் ம.பொ.சி ஆல்டெர்மேனாகப் பதவி வகித்தபோதுதான் முதல் முறையாக மாநகராட்சியின் வரவு செலவுக் கணக்கினைத் தமிழில் தாக்கல் செய்தார். அதன் சின்னமாக தமிழர் அரசுகளின் சின்னமான வில், புலி, மீன் ஆகியவற்றைப் பொறிக்கச் செய்தார். இத்தனை வரலாற்று விரிவையும் தாங்கள் தங்கள் சொல்வன்மையினால் திரிக்கப் பார்க்கிறீர்கள்.
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மேஎன்னும் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது. மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களே, வரலாற்றை உங்களைப் போன்றவர்கள் எப்படி, எத்தனை முறை திரிக்க முயற்சித்தாலும் அது தன் உண்மையான வடிவைக் காட்டியே நிற்கும். தனிப்பட்ட உங்கள் காழ்ப்புணர்ச்சிகளையெல்லாம் இப்படிக் கட்டுரைகளில் கட்டுக்கதைகள் கட்டி உங்களை நம்பும் வாசகர்களையும் ஏமாற்றாதீர்கள்.
ம.பொ.சியின் பிழைபட்ட மதிப்பீடாக நான் கருதுவது, காந்திக்குப் பிறகான காங்கிரசை மொழிவழி தேசிய இன, சுய நிர்ணயத்தை அங்கீகரிக்குமென்று நம்பியது; தன் வழியில் முழுமையாகச் செயல்பட விடாமல் காலில் கட்டிய இரும்புக் குண்டாகக் காங்கிரஸ் பற்று – நம்பிக்கை அவரைப் பின்னிழுத்தது. இரண்டாவது, தமிழக வரலாற்றின் விழுமியங்களை அறியாத – தன் காலத்தில் அவர் முழுமையாக எதிர்த்து வந்த – தி.மு.கவை 1967 தேர்தலில் ஆதரித்தது.
இறுதியாக ஒன்று, கட்டுரையில் ம.பொ.சி பற்றி நீங்கள் பயன்படுத்தியிருக்கும் சொற்கள் அவரை இழிவுபடுத்துவதாகவும் அவதூறு கற்பிக்கும் நோக்கத்துடனும் எழுதப்பட்டிருப்பதாக உள்ளது. உங்களுடைய எழுத்து ஆளுமைக்கு இது மரியாதை சேர்ப்பதாக இல்லை. இனியாவது அரைகுறையாக அறிந்துகொண்டு வரலாற்றை எழுதுவதைத் தவிர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
என்றும் தோழமையுடன்,
தி. பரமேசுவரி.
28.12.10
=================
Dear J,
thanks for your article about Rajaji. He is my hero and ideal.
and as usual I disagree with your assesment about his personality
and lack of mass appeal and about his lack of understanding about
‘democracy’. Would like to present you Rajmohan Gandhi’s excellent
biography of Rajaji and four volumes of Rajaji’s wekly articles in Swarajya,
compiled and published by Catalyst Trust of Chennai.
also, Kovai Ayyamuthu’s books talk of a very humane, warm and
democratic Rajjai.
Herewith enclosed my arguments about Rajaji which i mailed to
our friend thiru. Va.Srinivasan sir of Cbe.
I would also like to present you the CD of the documentary on
Su.Ra (by Ramani). We shall meet on 3rd at Chennai.
Regards / அன்புடன்
K.R.Athiyaman / K.R.அதியமான்
Chennai – 96
======================================
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் இராஜாஜி பற்றிய கட்டுரை என்னுடைய எண்ணங்களுக்கு சிறந்த வடிகாலைப்போல அமைந்திருந்தது. மிகச்சிறப்பான ஆய்ந்துரை . இராஜாஜியைப்பற்றிய
மிகச்சரியான ஒரு கணிப்பு.
திராவிட இயக்கங்களின் பொய்யுரைகளினால் தமிழகத்திற்கு ஏற்பட்ட விபத்துகளில் மிகப்பெரியது கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் சீரழிவு. திராவிட ஆட்சிகளின் தற்போதைய சாதனை கிராமப்புற ஆரம்பப் பள்ளிக்கூடங்களின் அவலநிலை. எல்லோருக்கும் கல்வி என்ற காமராஜரின் கனவு ,தற்போது பணமுள்ளவர்களுக்கு மட்டும்தான் தரமான கல்வி என்ற அளவில் தனியார் matriculation பள்ளிகளால் (பெரும்பாலும் அரசியல்வாதிகளால் நடத்தப்படுவது) எளிய மக்கள் சூறையாடப்படும் அவலம்.
நன்றியுடன்,
சங்கரநாராயணன்
================
கட்டுரை பற்றிய மாற்றுக்கருத்துக்களை தெரிந்துகொண்டேன். பொதுவாக நமக்கு பிரியமானவர்களை அப்பழுக்கற்றவர்களாக உருவகித்துக்கொள்ளும் மனப்பழக்கம் உண்டு. ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அது நல்ல மனநிலையே. ஆனால் அரசியலில் அது சரியாக அமையாதென்பது என் என்ணம். பற்றில் இருந்து வரும் வரிகளுடன் விவாதிக்கமுடியாது
நான் காமராஜ், ராஜாஜி, மபொசி ஆகிய அனைவரைப்பற்றியும் நிறைகுறைகளுடனேயே பார்க்கிறேன். அவர்களைப்பற்றி அவர்க்களோ அவர்களின் ஆதரவாளர்களோ எழுதும் நூல்களை மட்டும் சார்ந்திருப்பதில்லை. என்னுடைய புரிதல்கள் வெறும் வாசிப்பை மட்டும் சார்ந்தவை அல்ல. எல்லைபோராட்ட வீரரும் காங்கிரஸ் முன்னோடியுமான தாணுலிங்கநாடார் தேரூர் சிவன்பிள்ளை போன்றவர்களிடம் மிகநெருக்கமாக பழக்வும் அவர்களின் அந்தரங்க கடிதங்களை முறைப்படுத்தவும் வாய்ப்புகிடைத்தவன் என்ற முறையில் உருவான புரிதல்.
இக்கட்டுரையில் நான் மபொசியை குறைத்துமதிப்பிடும் தொனி வந்துவிட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர் ஒரு தனிப்பட்ட மக்கள் சக்தி அல்ல. அவருடைய ஆதரவுதளம் காங்கிரஸால், ஒரு பதிலிப்போரின் பொருட்டு உருவாக்கி அளிக்கப்பட்டது. அவர் நடத்திய எல்லா போராட்டங்களும் அவர் காங்கிரஸுக்குள் இருந்தபோதே நடத்தினார்.வெளியேற நேரிட்டபின் அவர் தனியாளானார். இது வரலாற்று உண்மை. ஆனால் அவர் தமிழ்மீதும், இந்தியதேசியத்தின் ஒளிமிக்க பகுதி என்ற கோணத்தில் தமிழ்த்தேசியம் மீதும் கொண்ட பற்று உண்மையானது. அவரது வரலாற்றுப் பங்களிப்பு முக்கியமானது. அதிகார உட்கட்சிஅரசியல் காரணமாக அவர் காமராஜால் வெளியேற்றப்பட்டது துரதிருஷ்டவசமானது என்றே நினைக்கிறேன். காங்கிரஸ் தமிழுணர்ச்சியற்றது என்ற வாதங்கள் வலுப்பெற அது வழியமைத்தது. காங்கிரஸின் தேசியநோக்கை தமிழுணர்வுடன் பிணைக்கவே ஆளில்லாமலாயிற்று. அவரது தரப்பு காங்கிரஸுக்குள் நீடித்திருந்தால் திராவிட இயக்க அரசியல் இந்த அளவுக்கு ஒற்றைப்படை வெற்றியை அடைந்திருக்காதென்றே நினைக்கிறேன். இக்கட்டுரையிலும் அதே தொனியுடன் மட்டுமே எழுதியிருக்கிறேன்
ராஜாஜி கட்சித்தாவல் மூலம் பதவிக்கு வந்தார் என்பதும் என்ன விளக்கமளித்தாலும் வரலாற்று உண்மை. நேரு அதை விரும்பவில்லை, பதவி விலக கோரினார், ராஜாஜி மறுத்துவிட்டார். இச்செய்தியை சமீபத்தில் ராமச்சந்திர குகாவின் காந்திக்குப்பின் இந்தியவரலாறு நூலிலும் கண்டதாக நினைவு. அதுவே முதல் கட்சித்தாவல் , முதல் மைனாரிட்டி அரசு. நான் திருவுருக்களை உருவாக்கவில்லை. சூழலை ஒட்டுமொத்தமான பின்னணியாக வைத்து தனிப்பட்ட அரசியல்தலைவர்களின் பங்களிப்பை புரிந்துகொள்ள முயல்கிறேன், அவ்வளவுதான்.
ஜெ