‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 63

tigஅரவானும் ஸ்வேதனும் பாண்டவப் படைப்பெருக்கினூடாக ஒழுகிச்சென்றனர். படையின் பொதுவிரைவை உடலால் கற்றுக்கொண்ட புரவிகள் சீரடி எடுத்துவைத்து சென்றன. விழிசரித்து பல்லாயிரம் குளம்புகளை பார்க்கையில் அவை நன்கு வகுக்கப்பட்ட அசைவுகளால் அலைகள் என தெரிந்தன. உடல் மிக எளிதாக கற்றுக்கொள்கிறது, விலங்குகளின் உடல் மேலும் எளிதாக என்று ஸ்வேதன் எண்ணினான். அவ்விலங்குகளின் உடல்களிலிருந்து அதை ஊர்பவர்கள் படையின் ஒத்திசைவை பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் உடலிலிருந்து உள்ளத்திற்கு அவ்வொத்திசைவு சென்றது.

ஒவ்வொரு எண்ணத்திலும் திகழ்ந்த அந்தத் தாளம் அவர்களை சொல்லெடுக்க முடியாதவர்களாக்கியது. அரிதாக எதையேனும் உரைத்தவர்கள்கூட தனிச்சொற்கள் அந்த இசைவிலிருந்து மீறி விலகி நின்றிருப்பதை உணர்ந்து சொல்லவிந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவும் ஏதுமிருக்கவில்லை. மொழியிலாத ஒற்றைப் பேருளமாக அனைத்து உடல்களிலும் அவர்கள் பரவியிருந்தனர். விண்ணில் எழுந்து சுழன்றமைந்த கொடிகளாலும், அக்காட்சியை ஒலியென நடித்த முரசுகளாலும் அவர்கள் இணைக்கப்பட்டனர். தேவையானபோது பிரிக்கப்பட்டனர்.

பாறைகளை கடந்துசெல்லும் ஆறுபோல சிற்றூர்களை வளைத்தும் சிறு குன்றுகளை கடந்தும் அப்படை சென்றது. ஒரு பெருவிலங்கு பிளிறி செதில்களை அசைத்து தனக்குத்தானே ஆணையிட்டுக்கொண்டு செல்வதுபோலிருந்தது. தொலைவில் மேட்டில் அது மேலேறும் ஆறுபோலிருந்தது. மறுபக்கம் சரிவிறங்கி ஏறியபோது வளைந்து மாபெரும் வில் என தோன்றியது. ஊடே வந்த பெரிய பாறையொன்றில் முட்டி இரண்டாகப் பிரிந்து வளைந்து மறுபக்கம் ஒன்றிணைந்தது. பல்லாயிரம் கவசங்களால் ஒளி கொண்டிருந்தது. மாபெரும் நத்தை ஒன்று உருவாக்கிச் சென்ற வெள்ளித்தடம் என அசைவில் அதில் வண்ணம் மின்னியது.

ஸ்வேதன் அப்படைப்பெருக்கின் ஓசைகள் எப்படி செவிக்கு தெரியாதனவாக மாறிவிட்டன என்று வியந்தான். ஓசையென எண்ணி உளம் கொடுத்தபோது செவிப்பறைகள் கிழியும் முழக்கமென அது ஒலித்தது. பல்லாயிரம் குளம்படிகள், உலோகக் குலுங்கல், சகட முழக்கம், முரசொலிகள், கொம்பொலிகள். ஆனால் சீரான தாளத்தை அவை அடைந்தபோது ஒற்றைப் பரப்பென்றாகி பின்பு சித்தத்திலிருந்து மறைந்தது. ஓசையென்பது மீறல், அமைதியென்பது ஒத்திசைவு என்று ஸ்வேதன் எண்ணினான்.

இப்பெருக்கில் தன் உள்ளம் மட்டுமே அவ்வாறு சொற்களை வகுத்துக்கொள்கிறதோ என்ற எண்ணம் எழுந்தது. தான் ஒருவன் மட்டுமே சூழ்ந்திருக்கும் படைகளை தலைதிருப்பி நோக்கியபடி செல்வதை அவன் உணர்ந்தான். பல்லாயிரம்பேரில் ஒருவர் அவ்வாறு தன்னை பிரித்துக்கொண்டு அப்படையை பார்க்கும் நோக்கு கொள்கிறார்கள். அவர்கள் அப்படையால் வெளித்தள்ளப்பட்டு அழியக்கூடும், அன்றி அப்படையை வழிநடத்தி தலைமை என்றாகவும் கூடும்.

அந்தி இறங்கிக்கொண்டிருந்தது. வானில் முகில்கள் சிவந்து விளிம்புவட்டங்கள் மட்டும் ஒளிகொண்டிருந்தன. கதிர் முற்றாக மறைவதை முடிவெடுப்பது யார்? காட்டில் எப்போதும் அது ஒரு தனிப்பறவை என்பதை அவன் கண்டிருந்தான். அம்பென இலைப்பரப்பிலிருந்து சுழன்று கூச்சலிட்டு அது கீழே இறங்கும்போது அந்தியெனும் சொல்லை அனைத்துப் பறவைகளும் பெற்றுக்கொள்கின்றன. அக்கணமே காட்டின் ஓசைகள் முற்றாக மாறுபடுவதை அவன் கண்டிருக்கிறான். இங்கு எங்கோ ஒரு நிமித்திகன் அம்முடிவை எடுக்கிறான். இப்போது தேர்த்தட்டில் நின்றபடி அவன் கதிரவனை பார்த்துக்கொண்டிருக்கிறான். இப்பெரும்படையின் நாள்முடிவை அவன் வகுக்கிறான்.

எதிர்பார்க்கத் தொடங்கியதும் காலம் நீளலாயிற்று. கதிர் முற்றமைந்துவிட்டது என்று அவனுக்கு தோன்றியது. அனைத்து முகில்களும் விரைந்து அணைந்துகொண்டிருந்தன. ஓரிரு முகில்களில் மட்டும் செந்நிறத் தீற்றல் எஞ்சியிருந்தது. இன்னமும் அந்த நிமித்திகன் கதிரை பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் பார்க்கும் கதிரவன் பிறிதொன்று என்றால் இப்பெரும்படை இருளில் நடந்துகொண்டிருக்கும்.

அவன் எண்ணி ஒழுகிக்கொண்டிருக்கையிலேயே விண்ணில் ஓர் எரிஅம்பு எழுந்து பொறிகள் வெடித்து மலராகச் சுழன்று கீழிறங்கியது. முரசுகள் முழங்கின. மிகத் தொலைவில் மெல்லிய அதிர்வென அவன் முரசுகளின் ஓசையை கேட்டான். யானையின் கரிய உடலுக்குள் முனகலோசை எழுவதுபோல. பின்னர் அந்த ஓசை பெருகிப் பெருகி சூழ்ந்திருந்த அனைத்து முரசுகளிலும் நிகழ்ந்து அவன் சித்தத்தை அள்ளிக்கொண்டது. அம்முழக்கில் அவன் சுழன்று மையச்சுழி நோக்கி செல்வதைப்போல இருந்தது. காதுகளில் அணையாத கார்வையை எஞ்சவிட்டு அது அவனைக் கடந்து மேலும் பின்னால் அகன்று சென்றது. மிகத் தொலைவில் ஒரு எளிய விம்மலாக மறைந்தது.

படைகளின் ஓசை முற்றாக மாறுபட்டது. அவன் தலைதிருப்பி நோக்கியபோது அதன் அசைவனைத்தும் நிலைமாறுவதை கண்டான். ஒரு காட்டில் காற்றில் அனைத்து இலைகளும் கவிழ்ந்து வண்ணமாறுபாடு கொள்வதைப்போல. அரவான் “பிறிதொரு இரவு, மூத்தவரே” என்றான். ஸ்வேதன் “ஆம்” என்று சொல்லி முன்னால் சென்று அவர்களுக்கான படைக்குடிலை ஏவலர் அமைப்பதை பார்த்தான். கழைமூங்கில்களில் மெல்லிய மூங்கில்கீற்றுத் தட்டிகள் கட்டப்பட்டு எட்டாக மடிக்கப்பட்டிருந்தது அக்குடில். அதை இழுத்தெடுத்து மண்ணில் வைத்து மடிப்பை விரித்து இரு இடங்களில் தறிகளை அறைந்ததும் கண்ணெதிரில் நிலம் திரண்டு எழுந்து யானையென்றாவதுபோல் குடில் உருவாகி வந்தது.

அரவான் நின்று சோம்பல் முறித்தான். ஸ்வேதன் தன் புரவியை ஏவலனிடம் அளித்துவிட்டு “நாளை உச்சிப்பொழுதில் நாம் குருக்ஷேத்ரத்தை சென்றடைவோம் என்கிறார்கள்” என்றான். அரவான் திரும்பிப்பார்த்து “அந்தியாகும் என்றார்களே?” என்றான். “அல்ல, இந்த விரைவு நம்மை அறியாமலேயே குருக்ஷேத்ரத்தை அணுகுந்தோறும் மிகுந்துவிடும். ஓரிரு நாழிகைகள் முன்னரே நாம் சென்று சேர்ந்துவிடுவோம்” என்றான் ஸ்வேதன்.

அரவான் சிற்றறைக்குள் புகுந்து தன் ஆடையை மாற்றத் துவங்கினான். ஸ்வேதன் தன் உடைகளை உதறி மீண்டும் அணிந்தபின் குழல்கற்றைகளைப் பிரித்து கைகளால் நீவியும் சீவியும் புழுதியையும் சருகுப்பொடிகளையும் அகற்றினான். அங்கிருந்த சிறுமரத்தினடியில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டான். ஏவலர்குழு மேலும் மேலும் சிறுகுடில்களை நிரையென அமைத்தபடி கடந்து நெடுந்தூரம் சென்றுவிட்டிருந்ததை அங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். அரவான் ஆடை மாற்றி குழல் திருத்தி அவனருகே வந்து அமர்ந்தான்.

ஸ்வேதன் “உனது குடியிலிருந்து எவரையும் இப்போருக்கு நீ அழைத்து வரவில்லையா?” என்றான். அரவான் சில கணங்களுக்குப்பின் “எங்கள் குடிக்கு புஜகர்கள் என்று பெயர். பதினெட்டு நாகர்குடிகளில் நாங்கள் முதன்மையானவர்கள். என் குடியினர் அனைவருமே திரண்டு போருக்கெழுந்துள்ளனர். அவர்கள் கௌரவர் பக்கம் சேர்ந்துள்ளனர்” என்றான். ஸ்வேதன் விழிகளை சுருக்கினான். அரவான் “தாங்கள் என் குலக்கதையை அறிந்திருப்பீர்கள். என் அன்னை இளமையில் எங்கள் குடியைச் சேர்ந்த காரகன் எனும் நாகனை மணந்திருந்தார். சிலகாலமே அவர்கள் சேர்ந்திருந்தனர். என் அன்னை காரகனை ஒருநாள் துறந்து தன் தந்தையிடம் மீண்டு வந்தார். ஏன் என்று தந்தை கேட்டபோது அவனிடம் நஞ்சு இல்லை என்றார். காரகன் பெரும் சினத்துடன் என் அன்னையை வெல்ல முயன்றார். அவர்களுக்குள் தொடர்ந்து பூசல்கள் நிகழ்ந்தன. காட்டில் நிகழ்ந்த ஒரு தழுவல்போரில் என் அன்னையின் தொடுகையால் நஞ்சேற்று மூன்று நாட்களுக்குப்பின் காரகன் உயிர் துறந்தார்.”

நாகர் குடியில் அவ்வாறு பெண்டிரால் கணவர்கள் கொல்லப்படுவது அவ்வப்போது நிகழ்வது. ஆயினும் மூதன்னையர் என் அன்னைக்கு மூன்றாண்டுகள் கடுநோன்பு அளித்தனர். அன்னை தனியாக காட்டில் சிறுபொந்தில் வாழ்ந்து அந்நோன்பை கடைக்கொண்டிருந்தார். தன் நஞ்சுக்கும் விசைக்கும் ஈடுநிற்கும் ஆற்றல்கொண்ட ஒருவனுக்காக அத்தவத்தை அவர் மேற்கொண்டார். அவ்வாறுதான் எங்கள் ஐராவதீகம் எனும் நகருக்கு எந்தை வந்தார். அவரைக் கண்டதுமே என் அன்னை தான் காத்திருந்தது அவரையே என்றுணர்ந்தார். அவர்கள் காதலில் நான் பிறந்தேன். என் அன்னை தன் சீற்றத்தை முற்றும் இழந்து கனிந்தவளானார். எனது இருபத்தெட்டாவது நாளில் எந்தை ஐராவதீகத்திலிருந்து கிளம்பி மேலும் கிழக்குத்திசை நோக்கி சென்றார்.

நாகர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அனைவருமே ஆணும் பெண்ணுமின்றி குழந்தையென மட்டுமே இருப்பார்கள். இருபத்தெட்டாவது நாளில் என்னை ஆணென்று வகுத்து அரவான் என்று பெயரிட்டனர். என் அன்னையின் தந்தை மறைந்த பின்னர் எங்கள் குலமுறைப்படி என் அன்னையின் தாய்மாமன் அரசுப்பொறுப்புக்கு மூதன்னையரால் அமர்த்தப்பட்டார். அவருடைய மைந்தரே என் அன்னையால் நஞ்சு பெற்று மறைந்த காரகன். என் அன்னையின் தாய்மாமனால் நான் வெறுக்கப்பட்டேன். என்றோ ஒருநாள் அவரைக் கொன்று நான் எங்கள் குடியின் தலைவனாவேன் என்று அவர் அஞ்சினார். ஏனெனில் வெறியாட்டெழுந்து வருவது உரைக்கும் மூதன்னையர் மும்முறை எங்கள் ஐராவதீக நாகர்குடியில் ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் நினைவுகூரப்படும் ஒரே பெயர் என்னுடையது மட்டுமே என்றனர். என்னை மானுடரின் காவியங்களும் விதந்து பாடும் என்று உரைத்தனர்.

என்னை கொல்ல என் அன்னையின் மாதுலர் ஏழுமுறை முயன்றார். எனவே என் அன்னை என்னை எடுத்துக்கொண்டு நாகர்களுக்கு அயல்நிலமாகிய சக்ரதீபத்திற்கு சென்றார். அங்கு நான் என் அன்னையரின் உடன்பிறந்தார் சூழ வாழ்ந்தேன். எனக்கு நாகர்களின் நச்சுக்கலையையும் நாகமொழியையும் கற்பித்தார். உடன் மானுடமொழியும் அவரால் எனக்கு கற்பிக்கப்பட்டது. என்றேனும் ஒரு நாள் என் தந்தையை நான் காண்பேன் எனில் அம்மொழியில் உரையாடவேண்டுமென்று அன்னை சொன்னார். என் அன்னையின் தாய்மாமன் எந்தைமேல் தீராச்சினம் கொண்டிருந்தார். எங்கள் குடி மாண்பு அவரால் குலைக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் தன் மைந்தனை கொன்றபின் என் அன்னை அடைந்தது அயல்குடியினரான இளைய பாண்டவரை என்பதே அதற்கு மிகவும் அடிப்படையாக இருந்தது.

“நான் எந்தையை முன்பொருமுறை பார்த்தேன்” என்று அரவான் சொன்னான். “முன்பா?” என்று ஸ்வேதன் கேட்டான். “ஆம், என் அன்னையிடம் எந்தையை நான் பாக்கவேண்டுமென்று மீண்டும் மீண்டும் கேட்டேன். அன்னை என்னை எங்கள் குடியின் பூசகியாகிய உதிரையின் சிறு குகைக்கு அழைத்துச் சென்றார். இருண்ட சிறிய அப்பொந்திற்குள் நாங்களிருவரும் ஒருவர்பின் ஒருவராக தவழ்ந்து நெளிந்து நுழைந்தோம். ஏழு சுழல் வழிகளுக்குப்பின் உள்ளே மெல்லிய வெளிச்சம் தெரியலாயிற்று. அங்கு வட்ட வடிவமான சிற்றறைக்குள் உதிரை அமர்ந்திருந்தார். அவர் இடைக்குக்கீழ் அரவுடல் கொண்டிருந்தார். அன்னை வணங்கி என்னை தன் மைந்தனென அவரிடம் அறிமுகம் செய்தார். தன் தந்தையை இவன் காணவிழைகிறான் அன்னையே. அவர் எங்கிருந்தாலும் இவன் அங்கு சென்று கண்டுவருக என்றார் அன்னை” என்றான் அரவான்.

அன்னை தன் நாவை நீட்டியபோது அதில் இளநீல ஒளி பரப்பும் நாகமணி இருந்தது. அவர் நா நீண்டு ஒரு சிவந்த கையென மாறியது. அந்த நாகமணியை ஓரிடத்தில் வைத்தார். அவர் நா இரண்டெனப் பிரிந்து துடித்து வாய்க்குள் மறைந்தது. இரு கைகளையும் அவர் விரித்தபோது ஐந்து விரல்களும் ஐந்து நாகக் குழவியென நெளிந்தன. பத்து நாகங்களின் நாவுகளும் வெளிவந்து படபடத்தன. அவர் குரல் காற்றில் சீறும் ஒலியாலானதாக இருந்தது. அதில் சொல் எதுவும் இருக்கவில்லை. நான் அந்த நாகமணியின் நீலஒளியால் விழிகவரப்பட்டு அமர்ந்திருந்தேன். அதன் ஒளி பெருகிப் பெருகி என் நோக்கை முற்றாக கவர்ந்துகொண்டபோது அச்சீறலோசை சொல்லென்றாகியது.

“உன் தந்தை இப்போது இந்திர உலகில் இருக்கிறார். இந்திரனின் அவையில் இருக்கும் அவரை நீ விழைந்தால் சென்று பார்க்கலாம்” என்றார். நான் “ஆம்” என்று உரைத்தேன். என் உடலை தன் சுட்டுவிரலால் அன்னை தொட்டார். அந்தச் சிறு நாகம் எனை தன் நச்சு நாவால் முத்தமிட்டதும் குளிர்நடுக்கு கொண்டு என் கால்களும் கைகளும் பொன் என்று மாறலாயின. பொன்னிற உடல்கொண்டு எடையிழந்து மேலெழத் தொடங்கினேன். முகிலென மாறி விண்ணில் பரவிச் சென்றேன். உம்பர் உலகிற்கு ஒரு மழைத்துளியென சென்றடைந்தேன். அங்கு இடைக்குக்கீழ் பொன்னிற நாகஉடலும் இரு நீண்ட நாகக் கைகளும் இமையா மணிவிழிகளும் நாபறக்கும் வாயும் கொண்டவனாக ஊர்ந்து இந்திரனின் அறைக்கு சென்றேன்.

அங்கு என் தந்தை பீடத்தில் அமர்ந்து இந்திரனுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அவரை அணுகி கால்தொட்டு வணங்கினேன். “நான் உலூபியின் மைந்தன், தங்களை காணும்பொருட்டு இங்கு வந்தேன்” என்றேன். தந்தை என்னை இரு கைகளாலும் எடுத்து தன் மடிமேல் வைத்துக்கொண்டார். “உன் அன்னையின் விழிகள்” என்று மகிழ்ந்து சொன்னார். “அவளை காண்பதற்கு முன்னரே உன்னை பலமுறை என் கனவில் கண்டுள்ளேன்” என்று உரைத்தார். “நான் தங்களுக்கு என்ன செய்யவேண்டும், தந்தையே?” என்று கேட்டேன். “ஒரு பெரும்போர் வரும். அன்று எனக்குத் துணையாக வருக! போர் வெற்றி உன்னால் கூடும். என் குடியின் குருதி வழியில் எப்போதும் உன் பெயர் திகழும்” என்று சொல்லி என் நெற்றி தொட்டு தந்தை நல்வாழ்த்துரைத்தார்.

குகையிலிருந்து திரும்புகையில் அன்னையிடம் தந்தை உரைத்ததை நான் சொன்னேன். “ஆம், அவர் என்னை காணவந்தது அதன் நிமித்தமே என்று தோன்றுகிறது” என்றார். நான் அயல் நிலத்தில் வளர்ந்தேன். அனைத்து திறன்களையும் பெற்றேன். இப்போர் நிகழும் செய்தி சற்று பிந்தித்தான் காட்டுக்குள் வந்தது. நாகசூதர் சொல்லி அன்னை அறிந்தார். “தந்தை உனக்குரைத்த ஆணை அணுகியுள்ளது, கிளம்புக!” என்று வாழ்த்தி அனுப்பினார். என்னுடன் வருவதற்கு நாகவீரர்கள் எவருமில்லை. எங்கள் குடிகள் அனைத்தும் திரண்டு கௌரவர் தரப்புக்கு செல்ல வேண்டுமென்றும் காண்டவப் பெருங்காட்டை அழித்து நாகர்குடி ஒறுத்த எந்தையையும் அவர் குலத்தையும் முற்றும் பழிவாங்குவதே நாகர்களின் இலக்கு என்றும் காடுகள்தோறும் செய்தி பரவி வந்தது.

என் அன்னையின் தாய்மாமன் என்னை அழைத்து தன் அவையில் நிறுத்தி நாகர்குலத்தின் ஆணையை சொன்னார். “உன் குலத்தின் பொருட்டு நின்று பொருதுக! உன் தந்தையுடன் நான் கொண்ட பழியை முடிப்பதும் உனது கடமை. நீ யார், நாகனா பாண்டவ மைந்தனா என்பதை இத்தருணத்தில் முடிவு செய்” என்றார். “நான் என் அன்னையின் மைந்தன் மட்டுமே. அன்னை தன்னை இளைய பாண்டவருக்கு முற்றளித்துவிட்டார். பிறிதொன்றும் எண்ணும் நிலையில் நான் இல்லை” என்றேன். என் குடியினர் சினந்து எழுந்து வாய் திறந்து பற்கள் ஒளிர என்னை சூழ்ந்தனர். நான் “என் அன்னை அளித்த நச்சுக்கலையால் உங்களில் நூற்றுவரைக் கொன்று இங்கு இருந்து எழுந்து செல்ல என்னால் இயலும், விலகுக!” என்றேன்.

என் அன்னையின் தாய்மாமன் “நீ எங்களுக்கெதிராக களம் நிற்பாயெனில் நாகர்குடியின் பழியை நீ ஏற்பாய். உன் நஞ்சால் குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் ஒரு நாகன் கொல்லப்பட்டாலும் உன் மூதன்னையர் மண்ணுலகின் அடுக்குகளில் பழிவஞ்சம் கொண்டு எழுவர். இது என் வஞ்சினம்” என்றார். நான் மறுமொழி சொல்லாது தலைவணங்கி அவர் அவையிலிருந்து மீண்டேன். அன்னையிடம் விடைபெற்றுக்கொண்டு இங்கு வந்தேன் என்னுடன் என் அன்னை அனுப்பிய நாக வீரர்கள் எழுவர் மட்டுமே வந்தனர். அரவான் சொல் ஓய்ந்தபின் ஒளியமைந்த கீழ்ச்சரிவை நோக்கியபடி வந்தான்.

tigகுருக்ஷேத்ரத்தை அன்று சென்றடைவோம் என்னும் எண்ணம் விழிப்புவந்த முதற்கணமே ஸ்வேதனை வந்து தொட்டது. உடலில் திடுக்கிடலென நிகழ்ந்த விசையுடன் அவன் எழுந்தமர்ந்து இருளில் ஒலித்துக்கொண்டிருந்த படைகளின் முழக்கத்தை கேட்டான். அது முற்றிலும் மாறிவிட்டிருப்பது உடனே தெரிந்தது. அனைவருமே அவ்வெண்ணத்துடன்தான் விழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று உணர்ந்தான். எழுந்து குடிலுக்குள் சென்று அதன் மூங்கில்களை ஒட்டி துயின்றுகொண்டிருந்த அரவானை அணுகி ஒருமுறை விரல் சொடுக்கினான். அவ்வோசையில் அரவானின் உடலில் ஒரு சிறு நெளிவு கடந்து சென்றது. சீறலோசையுடன் விழி திறந்து அவன் ஸ்வேதனை பார்த்தான். அவை நாகவிழியின் நீள் ஒளி கொண்டிருந்தன. பின்னர் நாகவிழியாக மாற அவன் நெளிந்து கீழே இறங்கி தரையில் நின்றான்.

“பொழுது விடியப்போகிறது. நாம் கிளம்ப சித்தமாக வேண்டும்” என்றான் ஸ்வேதன். “ஆம், இன்று குருக்ஷேத்ரத்தை அடைவோமல்லவா?” என்றான் அரவான். “நீயும் அவ்வெண்ணத்துடன்தான் விழித்தாயா?” என்று கேட்டான் ஸ்வேதன். “சற்றுமுன் நான் கனவில் அங்கிருந்தேன்” என்று அரவான் சொன்னான். “விழிதொடும் தொலைவுவரை மரங்களற்ற வெட்டவெளி. நடுவே பல குளங்கள். செக்கச்சிவந்து தோலுரித்த தசைப்பரப்புபோல் மென்மைகொண்டிருந்தது மண். வாள் போழ்ந்த காயங்கள்போல் ஆழ்ந்த பிலங்கள். அவற்றில் குருதியோட்டம்போல் செந்நிற நீர் சென்றுகொண்டிருந்தது.” அரவான் கனவிலிருப்பதுபோல் முகம் மலர “அங்கு நாகங்கள் நிறைந்திருந்தன. குவியல் குவியலாக விழுதுபின்னி நெளிந்துகொண்டிருந்தன. ஒரு புறம் கன்னங்கரிய அலைவெளி. மறுபுறம் பொன்னிற நாகங்களின் உடல் அலை. இரு பக்கங்களுக்கும் நடுவே பெரும் வெற்றிடம். அதில் இளங்காற்றில் புழுதி செவ்வலையென சுழன்றுகொண்டிருந்தது” என்றான்.

ஸ்வேதன் “நீ முன்பு குருக்ஷேத்ரத்தை பார்த்திருக்கிறாயா?” என்றான். “இல்லை” என்றான் அரவான். “உன் குடிகளில் எவர் பார்த்தார்கள்?” என்றான் ஸ்வேதன். “எவருமில்லை.” ஸ்வேதன் “கதைகளினூடாக அறிந்தாயா?” என்றான். “இல்லை, அச்சொல்லையே சின்னாட்களுக்கு முன் அங்கிருந்து கிளம்பும்போதுதான் என் அன்னை சொன்னார்” என்று அரவான் சொன்னான். ஸ்வேதன் “நானும் குருக்ஷேத்ரத்தை பார்த்ததில்லை. ஆனால் வெவ்வேறு நூல்களில் அப்பெருநிலம் எவ்வண்ணமெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ அதையே நீ கனவில் கண்டிருக்கிறாய்” என்றான். அரவென்றான விழிகளுடன் ஸ்வேதனின் விழிகளை பார்த்தபடி “அந்நிலம் என்னுள் உறைகிறது. நான் அதை நோக்கியே பிறவிகள்தோறும் வந்துகொண்டிருக்கிறேன் போலும்” என்றான் அரவான்.

“நாமனைவரும்தான்” என்று சொன்ன ஸ்வேதன் “கிளம்புவோம்” என்றான். அவர்கள் காலைக்கடன் முடித்து உணவருந்தி உச்சிப்பொழுதுக்கான உணவை துணிப்பையில் எடுத்துக்கொண்டு கிளம்பினர். முதல் அணிவகுப்பிற்கான அறைகூவல் எழுந்து அணைந்ததும் படைவீரர்கள் நீர்த்துளிகள் ஒன்றுடன் ஒன்று இணைவதுபோல குழுக்களாகி மேலும் பெரிய குழுக்களாக, படைத்திரள்களாக மாறினர். பன்னிரண்டு சாலைகளும் நடுவே பெருஞ்சாலையும் நூற்றுக்கணக்கான கிளைச்சாலைகளும் கொண்ட படை ஒருங்கியது. “எங்கேனும் உயரத்திலிருந்து இப்படை குருக்ஷேத்ரத்திற்குள் நுழைவதை பார்க்கவேண்டுமென்று விழைகிறேன்” என்றான் ஸ்வேதன். “ஒரு மூங்கிலிருந்தால் மேலே சென்று பார்க்கலாம்” என்று அரவான் சொன்னான்.

“மூங்கிலில் ஏறுவது செய்தி நோக்கும் கழையர்களுக்கு மட்டுமே தெரிந்த கலை. அல்லது மூங்கிலை ஆழ நடவேண்டும்” என்றான் ஸ்வேதன். “நான் தங்களை கொண்டு செல்கிறேன்” என்றான் அரவான். ஸ்வேதன் “அவ்வாறெனினும்கூட மூங்கிலை இங்கு நிலையாக நடமுடியாது. மேலேறி நோக்கி அக்கணமே கீழிறங்கிவிட வேண்டியிருக்கும்” என்றான். அரவான் திரும்பிப்பார்த்து “அதோ அந்த வண்டியின் மேல் மூங்கில் உள்ளது” என்றான். “ஓடும் வண்டியில் மூங்கிலை நிறுத்தி மேலேறுவதா? விளையாடுகிறாயா?” என்றான் ஸ்வேதன். “நான் தங்களை கொண்டு செல்கிறேன், அஞ்சவேண்டாம்” என்றான் அரவான்.

படைநகர்வுக்கான அறைகூவல் எழுந்ததும் பல்லாயிரம் உடல்களினூடாக அசைவென ஓர் அலை கடந்துசென்றது. பின்னர் முன்னாலிருந்த படைப்பிரிவு கிளம்பிச்செல்ல அடுத்த படைப்பிரிவுக்கும் அதற்கும் நடுவே இடைவெளி உருவாயிற்று. ஒவ்வொரு படைப்பிரிவும் தங்களுக்கு முன் ஒரு இடைவெளியை வைத்தபடி கிளம்பி செல்லத்தொடங்கின. குருக்ஷேத்ரம் என்னும் சொல்லே தன்னுள் நிறைந்திருப்பதை ஸ்வேதன் உணர்ந்தான். அதை குறித்த ஒவ்வொரு கதையும் அவன் நினைவில் வந்து மோதி மோதி சென்றன.

வெயில் உச்சிக்கு சென்றது. சிறிய மிடறுகளாக நீரை அருந்தி அவ்வப்போது உலருணவில் ஒரு பிடியள்ளி வாயிலிட்டுக்கொண்டான். வியர்வை பெருகி வழிய படைகளில் இருந்தெழுந்த காற்றில் உப்பு வாடை நிறைந்திருந்தது. புரவிகளின் உடலிலிருந்து வியர்வை துளித்துச் சொட்டியது. விழிகளில் வெயில்வெளி அலையடித்தது. மிக மெல்ல அவர்கள் ஒழுகிக்கொண்டிருந்தனர். மிகத் தொலைவில் மெல்லிய முழக்கமொன்று கேட்டது. அரவான் “குருக்ஷேத்ரத்தை பார்த்துவிட்டார்கள்” என்றான். “குருக்ஷேத்ரம்!” என்று கைவிரித்து கூவினான். “இல்லை, இங்கிருந்து பார்க்க இயலாது” என்று ஸ்வேதன் சொன்னான்.

“அல்ல, மூத்தவரே. இது மேட்டு நிலம். இங்கிருந்து பதினெட்டு கிளைகளாக பிரிந்து குருக்ஷேத்ரத்திற்குள் நுழையவிருக்கிறார்கள்” என்றான். “இது மேட்டு நிலம் என்று எப்படி அறிந்தாய்?” என்று ஸ்வேதன் கேட்டான். “அங்கு பறக்கும் பருந்துகள் இங்கிருந்து பார்க்கையில் தாழ்வாக செல்கின்றன. இங்கிருந்து பத்து ஆள் ஆழத்தில் உள்ளது குருக்ஷேத்ரம். ஆனால் மிக மெல்ல சரிந்திறங்குவதனால் அந்த ஆழம் நமக்கு தெரிவதில்லை. முன்னால் சென்ற படைகள் தங்கள் குதிகால் தசைகளின் இறுக்கமாகவும் சகடங்கள் உரசும் கட்டைகளில் எடையாகவும் அச்சரிவை உணரத்தொடங்குவார்கள்” என்றான் அரவான்.

“நான் பார்க்கவிரும்புகிறேன், எப்படி குருக்ஷேத்ரத்திற்குள் நுழைகிறது இப்படை என்று” என்றான் ஸ்வேதன். “வருக!” என்று ஸ்வேதனின் கைபிடித்து அரவான் அழைத்துச்சென்றான். அவர்களுக்கு முன்னால் பொதிகளை ஏற்றியபடி சென்றுகொண்டிருந்த வண்டியை அணுகி அதில் கிடைமட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மூங்கிலொன்றை எடுத்து அவ்வண்டியின் பின்புறத்தில் ஊன்றினான். அதை பற்றிக்கொண்டு மேலேறினான். கழையர்கள் மூங்கிலின் கணுக்களில் கால் வைத்து குரங்குபோல் ஏறி மேலே செல்வதை ஸ்வேதன் கண்டிருந்தான். ஆனால் அரவான் பாம்புபோல அதில் வளைந்து சுற்றிச் சுழன்று மேலேறினான். அதன் உச்சியில் சென்று தன் உடலை பொருத்திக்கொண்டு கைகளை விரித்து நின்றான். சென்று கொண்டிருந்த வண்டியின் மீது எழுந்து நின்ற கழைமேல் அவன் கைவிரித்து நின்றது மிக மெல்ல பறக்கும் ஒரு பருந்தைப்போல் தோன்றியது. பாம்பு பருந்தாவது என ஸ்வேதன் எண்ணிக்கொண்டான்.

மேலே பார்த்தபோது அரவான் மண்ணுடன் தொடர்பற்று மிதந்து கொண்டிருப்பதாக தோன்றியது. விழிதாழ்த்தி வண்டியின் கட்டையில் ஊன்றியிருந்த அம்மூங்கிலின் அடியை பார்த்தபோது எக்கணமும் நிலைதவறி அவன் விழக்கூடுமென்று வயிறு கூசியது. அவ்வெண்ணம் வந்ததுமே ஸ்வேதனின் உடல் நடுங்கலாயிற்று. அரவான் மூங்கிலின் முனையிலிருந்து மீண்டும் வளைந்து கீழிறங்கினான். “அது பெருங்காட்சி! தாங்கள் பார்த்தாகவேண்டும், மூத்தவரே” என்றான். இன்னொரு கழையை சுட்டிக்காட்டி “அதை எடுத்துகொள்ளுங்கள்” என்றான். “எனக்கு கழையிலேறும் பயிற்சியில்லை” என்றான் ஸ்வேதன். “நீங்கள் மூங்கிலை கையால் பற்றிக்கொள்ளுங்கள்” என்று அரவான் சொன்னான்.

ஸ்வேதன் அம்மூங்கிலை எடுத்து அதன் நுனியை வண்டியின் நுகத்திற்குப் பின்னாலிருந்த கட்டையில் ஊன்றி கையால் பிடித்துக்கொண்டான். அவன் கையை ஒரு கையால் பற்றிக்கொண்டு தன் மூங்கிலினூடாக மேலேறிய அரவான் அவனையும் இழுத்து மேலே கொண்டு சென்றான். இரு மூங்கிலின் முனைகளையும் உச்சியில் ஒன்றாக இணைத்து கைகளால் பற்றிக்கொண்டான். ஸ்வேதன் அதன் உச்சிக்குச் சென்று சற்று ஆடினான். அவன் உடலுக்குள் திரவங்கள் குலுங்க உயிர் பதைத்தது. “விழமாட்டீர்கள். உங்கள் எடையை நான் நிகர் செய்துகொண்டிருக்கிறேன்” என்று அரவான் சொன்னான். சில கணங்களுக்குப்பின் அவன் உடல் அதை அறிந்தது. அந்த இரு மூங்கில்களும் ஒன்றையொன்று தாங்கி முற்றிலும் நிகர் செய்திருந்தன.

கீழே சென்றுகொண்டிருந்த வண்டியின் அசைவுகூட அவன் உடலில் மெல்ல நிகழ மேலிருந்து கட்டி தொங்கவிடப்பட்டிருந்த கண்காணா சரடொன்றில் தொங்கிக்கிடப்பதுபோல அவன் வானில் நின்றான். “நோக்குக!” என்றான் அரவான். அவன் சுட்டிய திசையில் பாண்டவப் படை பற்பல கைவழிகளாக பிரிந்துகொண்டிருந்தது. அவை ஒழுகிச் சென்று குருக்ஷேத்ரத்திற்குள் இணைந்து அணிகளாகப் பெருகி நிறைந்தன. அவன் கனவிலென அக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தான்.

உடல்களாலான படை நீர்போல மாறி பள்ளங்களை நிரப்பி வழிந்தோடி, சென்றமைந்த இடத்தின் வடிவை எடுத்து நிரப்பிக்கொண்டே இருந்தது. நெகிழ்கையில் அனைத்து பருப்பொருட்களும் திரவங்களாகின்றன என்று அவன் எண்ணினான். தனிப்பொருட்களாக இருக்கையில் மட்டுமே அவற்றுக்கு மாறா வடிவும் நிலையுருவும் உள்ளது. இங்குள்ள மக்கள், ஜனபதங்கள், நகரங்கள் அனைத்தும் திரவத்தால் ஆனவை. பாரதவர்ஷம் ஒரு பெரும் திரவத்தின் தேக்கம். விண்ணில் நிறைந்திருக்கும் நீரின் பிறிதொரு வடிவம். துளிகளில் அது பொருள். பெரும்பொதுமையில் அலையடிக்கும் நீர்மை. அவன் உளம்விம்ம பெருமூச்செறிந்தான்.

முந்தைய கட்டுரைபெருநதியில் எஞ்சியது
அடுத்த கட்டுரைதளம் -கடிதம்