சோனா

tung
வணக்கம்
விஷ்ணுபுரம் நாவலை நான் முதலில் கண்டது, 12 வருடங்களுக்கு முன், என் நண்பன் ஒருவன் வீட்டில். பாலைவனத்தில் ஸ்ரீ சக்கரத்தை வரைந்து முடிப்பது வரை மட்டுமே படிக்க முடிந்தது.  ஸ்ரீ சக்கரம் என்றால் என்னவென்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை என்றாலும் அந்த ப்ரம்மாண்டத்தினை உணர முடிந்தது. 2 மாதங்களுக்கு முன்பு விஷ்ணுபுரம் நாவலை கிண்டிலில் வாங்கி படித்து முடித்தேன். இந்த நாவலை நீங்கள் சுமார் 25 வருடத்துக்கு முன்னால் எழுதியிருக்கிறீர்கள் என்பது என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. இப்போது இந்நாவலுக்கு இணையத்தில் நான் கண்ட கூட்டுவாசிப்பை ஆங்கில நாவல்களுக்கு மட்டுமே நான் கண்டிருக்கிறேன். இந்நாவலை மொழிபெயர்ப்பு செய்வதை பற்றி நீங்கள் யோசித்ததுண்டா? இந்த நாவலின் பின்னுள்ள உழைப்பும், இதன் அபாரமான வீச்சும் இந்தியர்கள் அனைவரும் படிக்க வேண்டியது என்று தயங்காமல் கூற முடியும்.
ரத்த சிவப்பான சோனா என் மனதில் ஒரு கனவு போல் தோன்றினாலும் ஒரு deja vu இருந்து கொண்டே இருந்தது, இன்று தான் அது என்னவென்று நான் உணர்ந்தேன். ஹம்பி சென்ற பொழுது நான் கண்ட துங்கபத்திரா நதி இப்படி ஒரு சிவப்பு நிறத்தில்ஓடிக்கொண்டு இருந்தது. நடுப்பகலில், குன்று ஒன்றின் மேலிருந்து நான் கண்ட துங்கபத்திரா தான் என் சோனா. உங்கள் சோனா எதுவென்றறிய விரும்புகிறேன்.
அன்புடன்
பரத்
***

அன்புள்ள பரத்,

சோனா, சோன் என்ற பேரில் பல ஆறுகள் இந்தியாவில் உள்ளன.  பொதுவாக மழைக்காலத்தில் செம்மண் வழியாக வரும் பல ஆறுகள் கலங்கித்தான் பெருக்கெடுக்கும். எங்களூர் வழியாகச் செல்லும் கோதையாற்றில்தான் நான் இளமையில் நீந்தி களித்து வளர்ந்தேன். என் வாழ்க்கையுடன் பிரிக்கமுடியாதபடி இணைந்தது அது. உண்மையில் சோனா அந்த ஆறுதான்

ஆனால் இரு ஆறுகள் என்னை செக்கச்சிவந்த மகாநதி என்ற கனவை நோக்கிக் கொண்டுசென்றன. 1983ல் கண்ட பிரம்மபுத்ரா. மழைக்காலத்தில் அது பெருகிக்கொந்தளித்துச் சென்றது. ஓர் உதிரநதி. 1988ல் நீங்கள் கண்ட அதே கோணத்தில் நானும் துங்கபத்ராவை கண்டேன். ஹம்பியில் இருந்து. என் முதல் ஹம்பி பயணம் பற்றி இன்னொரு திருத்தலம் என்னும் தொடர்கட்டுரையையும் அன்று நான் எழுதிவந்த விஜயபாரதம் இதழில் எழுதினேன்

நீங்கள் துங்கபத்ராவில் சோனாவைக் கண்டது  ஆச்சரியமளிக்கிறது

ஜெ

***

விஷ்ணுபுரம் -வாழ்வும் பண்பாடும்

விஷ்ணுபுரம் வாசிப்பது பற்றி…

முந்தைய கட்டுரைஉயிர்த்தேன் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசுகாவின் “அண்ணன்களின் பாடகன் “