ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5

 

WhatsApp Image 2018-07-16 at 3.04.49 AM

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

அன்புள்ள ஜெ

ராஜ் கௌதமனைப்பற்றிய குறிப்பில் ஒருவர் அயோத்திதாச பண்டிதரும் பகுத்தறிவுவாதிதான் என்று சொல்லியிருந்தார். முதல் விஷயம் அயோத்திதாசர் மரபான முறையில் தொடுவர்மம், மந்திரவாதக்கலை போன்றவற்றைச் செய்துவந்தவர். அவரிடம் மந்திரவாதச் சிகிச்சைக்குப்போனதைப்பற்றி திருவிக எழுதியிருக்கிறார். அதோடு அயோத்திதாசர் அவருடைய நூல்களில் சொல்லு புராணங்களை எல்லாம் உண்மையான நம்பிக்கையுடன் மட்டுமே சொல்லியிருக்கிறார். அவற்றை தொன்மங்களாக வாசிப்பது நம் வசதி. அயோத்திதாசர் நவீனத்துவம் உருவாக்கிய பகுத்தறிவு மரபைச் சேர்ந்தவர் அல்ல. அவர் அதற்கு முந்தைய நீண்ட பாரம்பரியத்துடன் தொடர்புள்ளவர். அதோடு அவர் முன்வைத்த பௌத்தம் அம்பேத்கர் சொல்ல நவபௌத்தம் போல பகுத்தறிவு பௌத்தம் அல்ல. அது ஏராளமான நம்பிக்கைகளும் சடங்குகளும் கொண்ட ஹீனயான தேரவாத பௌத்தம். அதை அவர் நம்பி கடைசி வரை ஒழுகினார். ஆகவே அவரை ஆத்திகர், சடங்கு நம்பிக்கை கொண்டவர், மாயமந்திர நம்பிக்கை கொண்டவர் என்றுதான் சொல்லவேண்டும். அவர் எழுதியவையும் பெரும்பகுதி அவைதான். ராஜ் கௌதமன் அவற்றைத்தான் விமர்சனம் செய்கிறார் ஏன்என்றால் ராஜ்கௌதமன் பகுத்தறிவாளர். அவர் அதை எதிர்க்கிறார்.

 

மகேந்திரன்.எஸ்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

ராஜ் கௌதமன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அவருடைய புதுமைப்பித்தன் பற்றிய நூலை மட்டும்தான் வாசித்திருக்கிறேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு தமிழினி வெளியிட்ட முக்கியமான நூல் அது. சிலுவைராஜ் சரித்திரம் வாங்கியிருக்கிறேன். புதுமைப்பித்தனை காய்தல் உவத்தல் இல்லாமல் கறாராக மதிப்பிட்டு எழுதியிருக்கிறார் ராஜ் கௌதமன் என்பதுதான் சரி. சுந்தர ராமசாமி முதலியோரின் மிகையாக பாராட்டுதலும் இல்லை. தலித் முகாமிலிருந்து வந்து எதிர்ப்பும் இல்லை. நடுநிலையான விமர்சகர் என்ற எண்ணம் ஏற்பட்டது. ராஜ் கௌதமனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

 

செல்வக்குமார்

 

அன்புள்ள ஜெ

 

ராஜ் கௌதமனுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் கடிதங்கள் எதிலுமே ஒருவர்கூட அவருடைய ஆகோள்பூசலும் பெருங்கற்கால நாகரீகமும், பாட்டும் தொகையும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் ஆகிய நூல்களிக் குறிப்பிடவில்லை. அந்த இரு நூல்களுமே முக்கியமானவை. அவை தமிழ்ப்பண்பாடு என நாம் இன்றைக்குச் சொல்வது எப்படி பழங்குடி வாழ்க்கையில் ஒரு hegemony யை உருவாக்குவதன் வழியாக உருவாகி வந்தன என்று சொல்கின்றன. அந்த ஆதிக்கத்தின் முழுப்பொறுப்பையும் பிராமணர் மேல் போடும் வழக்கமான பார்வைக்குப் பதிலாக தமிழக நிலப்பிரபுத்துவ சாதிகளான வேளாளர் முதலியார் போன்றவர்களுக்கு அந்த ஆதிக்க உருவாக்கத்தில் உள்ள முதன்மையான பங்கை மிகச்சரியாகச் சுட்டிக்காட்டுகின்றன. அதனால்தான் இங்கே பெரும்பாலும் இடைநிலைச்சாதிகளால் ஆன அறிவுச்சூழலில் அந்நூல்கள் பேசப்படவேயில்லை

 

சுரேஷ்பாபுraj

 

 

ராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்

ராஜ் கௌதமன் படைப்புக்கள்

ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்

சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல்

ராஜ்கௌதமனின் இரு நூல்கள்

ராஜ் கௌதமன் -கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 55
அடுத்த கட்டுரைசூஃபிதர் -கடிதம்