இணையதளச் சிக்கல்

dog-face-labrador-smile-407082

இணையதளச் சிக்கல்

அன்புள்ள ஜெ.,

“இணையதளச் சிக்கல்” படித்தேன். எங்கள் அறிவுப்பசிக்கு நீங்கள் போடுகிற பெருந்தீனிக்கு குரு தட்சிணையாக குறைந்தபட்சம் இந்த தளம் நடத்துகிற செலவு மற்றும் விஷ்ணுபுரம் விருது மற்றும் விழாச் செலவுகளை நீங்கள் ஏன் வாசகர்களிடமிருந்தே அன்பளிப்பாகப் பெறக்கூடாது? எங்களுக்கும் பைசாச் செலவில்லாமல் படிக்கிற குற்றஉணர்ச்சி குறையுமில்லையா?

அன்புள்ள,

கிருஷ்ணன் சங்கரன்

***

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

இன்றைய நிலையில் இந்தத்தளத்தை கட்டணத்தளமாக ஆக்க முடியாது. ஏனென்றால் அதற்கு வாசகர் செய்யவேண்டிய கடமைகள் காரணமாக வாசக எண்ணிக்கை குறையலாம். நன்கொடை பெற முடியும். அதற்குரிய அமைப்பு உருவாக்கப்படவேண்டும். அதை நான் நிர்வாகம் செய்ய முடியாது. அதைப்பற்றி யோசிக்கிறோம்

ஜெ

***

அன்பும் மதிப்புமுள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். என் பெயர் சுந்தரம். நான் தங்களது வாசகன். நீங்கள் என் சிந்தனையை வடிவமைத்தவர். நான் தங்களிடம் தொடர்பு கொள்ளவேண்டும் என பலமுறை எண்ணியதுண்டு. ஆனால் ஒரு மாபெரும் ஆளுமையுடன் தொடர்புகொள்ளுமளவு எனக்கு கருத்துத்தரம் இருக்குமா என்று ஐயப்பட்டு விட்டுவிடுவேன்.

இன்று தங்களது இணையதளச் சிக்கல் பதிவைப் படித்தேன். தமிழில் நான் காணும் மாபெரும் அறிவுச் செயல்பாடு இந்தத் தளம். இதன் சேவைக் கட்டணத்தைப் பற்றி குறிப்பிட்டுருந்தீர்கள். இந்த ஆண்டுக்கான கட்டணத்தொகையை தர விரும்புகிறேன். தங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். இணையம் வழியாக அனுப்பிவிடுகிறேன்.

உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .

மிக்க அன்புடன் ,
தி.இரா.சுந்தரம்

***

அன்புள்ள சுந்தரம்

இணையதளத்தை கட்டணத்தளமாக வைக்க எண்ணமில்லை. அதிலுள்ள சிக்கல்களால் கணிசமானவர்கள் வாசிப்பது குறைந்துவிடும். நன்கொடை பெறும் வசதியை உருவாக்கலாம். ஆனால் அதற்கு பலவகையான சட்டரீதியான சடங்குகளை முடிக்கவேண்டும். அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறோம்

ஜெ

***

அன்புள்ள ஜெ

இதற்கு முன் தளம் முடங்கியபோதும் எழுதியிருந்தேன். தளத்திற்கு என்று ஒரு பொது நிதி அல்லது கணக்கு வைத்துக்கொண்டு தடையின்றி நடத்தலாமே.
நான் தங்கள் தளத்தை தினமும் வாசிப்பவன். இரவு 12மணிக்கு வெண்முரசு emailஉம், தளத்தின் அன்றைய பதிவுகளும் வருகின்றன. தினமும் ஒரு பதிவாவது என் போன்றவற்கு பயனுள்ளதாகிறது.
நுகர்வோர் ஒவ்வொருவரும் தங்களுக்கு கடன்பட்டவரே என்பது என் கருத்து.
Google, Facebook, Youtube இவற்றை விட எனக்கு தங்கள் தளம் முக்கியமானது.
அன்புடன்
பகவதி
முந்தைய கட்டுரைராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைநாஞ்சில் நாடனின் கும்பமுனி