சிரபுஞ்சி, அதிகாரிகள் -கடிதங்கள்

ராம் குமார், உணவகப் பொறுப்பாளர்
ராம் குமார், உணவகப் பொறுப்பாளர்

சிராப்புஞ்சியின் மாமழை

அன்புள்ள ஜெ

 

உங்கள் சிரபுஞ்சியின் மாமழைக் கட்டுரையில் மிகமுக்கியமான விஷயம் ஐஏஎஸ் அதிகாரிகளைப் பற்றி நீங்கள் சொன்னது. நான் கானிலாகாவில் இதைப்பார்க்கிறேன். ஒரு 20 ஆண்டுகளில் பணிக்குவந்த அதிகாரிகளில் முக்கால்வாசிப்பேர் இலட்சியவாதிகள், நேர்மையானவர்கள். அவர்களை அரசியல்வாதிகள் அஞ்சுகிறார்கள்.

 

நம்மூர்க்காரர்கள் பொதுவாக இடதுசாரித்தனத்தை பாவனை செய்பவர்கள். ஆகவே இந்த இளம் அதிகாரிகளின் கடுமையான உழைப்பையும் அவர்களின் பங்களிப்பையும் பற்றி நாம் அதிகமாகப்பேசுவதில்லை. நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

 

ஸ்ரீனிவாசன்

 

அன்புள்ள ஜெ

 

சிரபுஞ்சியின் மாமழை அருமையான கட்டுரை. உங்கள் தனிமைப்பயணம் வேறு ஒரு மனநிலையுடன் உள்ளது

 

சாலையை ஒட்டி மேகாலயாவில் உருவாகிவரும் வளர்ச்சியைச் சொல்கிறீர்கள். மேகாலயா வழியாக மொத்த வடகிழக்கையும் கடந்து பர்மாவுக்குள் சென்று தாய்லாந்துடன் இணையும் மாபெரும் சாலைத்திட்டம் ஒன்று இப்போது திட்டமிடப்படுகிறது. அது நடந்தால் அப்பகுதியில் வறுமையே இருக்காது

 

நான் அங்கே பணியாற்றியிருக்கிறேன். 1990களில் அங்கே அன்றைக்கெல்லாம் கொலைப்பட்டினிதான் எங்கேயும். ஊருக்கு ஒருவர் இருப்பார். அவர் கனிமக்கொள்ளைக்காரர். மற்ற அத்தனைபேருமே எதையாவதுபிடித்துத் தின்பவர்கள்தான். வண்டுகள் பூச்சிகள் புழுக்கள் எல்லாமே அவர்களுக்கு உணவுதான். அதனால் உடல்முழுக்க பலவகையான அலர்ஜிகளும் புண்களும் இருக்கும். பரிதாபமான நிலை.

 

இன்றைக்கு நிலைமை மாறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

 

ஆர். ரங்கநாதன்

 

அன்புள்ள ஜெ

 

வடகிழக்குப் பகுதிகளில் உருவாகிவரும் வளர்ச்சியின் சித்திரத்தை அற்புதமாக முன்னரே எழுதியிருந்தீர்கள். தீவிரவாதம் என்பது ஒரு சமூகத்தை வேரோடு அழித்துவிடுவது. ஆனால் தீவிரவாதம் பேசுபவர்கள் மக்கள்நலனையே  பேசுவார்கள். மக்களை உண்மையாகப் பாதிக்கும் பிரச்சினையைத்தான் கையிலெடுப்பார்கள். அதை மிகைப்படுத்தி வெறுப்பை உண்டுபண்ணி வன்முறை நோக்கிக் கொண்டுசெல்வார்கள். கடைசியில் தீவிரவாதம் உருவாகி அடித்தளமே அழியும்

 

நீங்கள் எழுதுவதெல்லாம் எவருக்காவது காதில்விழுந்தால் சரி

 

ராஜசேகர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 57
அடுத்த கட்டுரைஅழிசி மின்புத்தக வெளியீட்டகம் விமர்சனப் போட்டி 2018