காலையில் முதற்புலரியில் கரிச்சான் குரலெழுப்பும்போதே விழித்துக்கொண்ட ஸ்வேதன் தன்னைச் சுற்றி நிழல்கள்போல பாண்டவர்களின் படை அசைந்துகொண்டிருப்பதை கண்டான். எழுந்தமர்ந்தபோது பல்லாயிரக்கணக்கான பந்தங்களின் ஒளியில் உருவங்களும் நிழல்களும் இணைந்து பலமடங்காக பெருகிய படை பறவைமுழக்கம்போல் ஓசையெழுப்பி காலைச் செயல்களை ஆற்றிக்கொண்டிருந்தனர். அவன் எழுந்து உடலில் படிந்திருந்த புழுதியை தட்டினான். புலரிக்குளிரில் புழுதியை அள்ளியபடி தெற்கிலிருந்து மலைக்காற்று வீசியிருக்கக்கூடுமென்று உணர்ந்தான்.
குழலை அவிழ்த்து கைகளால் உதறி மீண்டும் சுழற்றிக் கட்டியபோதுதான் அரவானின் நினைவு வந்தது. குடிலுக்குள் நுழைந்து ஒருகணம் கழித்தே அவன் அங்கில்லை என்பதை உணர்ந்து திடுக்கிட்டான். வெளியே வந்து நான்குபுறமும் சுற்றிப் பார்த்தான். அங்குள்ள அத்தனை பேரும் வேறுவகையான உடல்களுடனும் அசைவுகளுடனும் நீருக்குள் தெரியும் பாவைகள்போல அப்பாலிருந்தனர். அவர்கள் எவரிடமேனும் எதையாவது சென்று கேட்க முடியுமென்று தோன்றவில்லை. அப்பெருந்திரளில் அரவான் எங்காவது சென்றிருந்தால் அவனாகவே திரும்பி வரும் வரை கண்டறிவதும் எளிதல்ல.
அவன் என்ன செய்வதென்றறியாமல் தன் குடிலிருந்த பகுதியை சுற்றி வந்தான். அங்கு படைவீரர்கள் காலைக்கழிப்புக்காக சுரைக்குடுவைகளில் நீருடன் நீண்ட நிரைகளாக நின்றிருந்தார்கள். இடைவரை உயரமான நான்கு தட்டிகளால் ஒருவர் அமரும்படி மறைக்கப்பட்ட சிற்றிடத்திற்குள் குழி தோண்டப்பட்டு அதன்மேல் குழியுள்ள பலகை போடப்பட்டிருந்தது. அந்தப் படைப்பிரிவின் அனைவரும் அங்கு மலம் கழித்ததும் அந்த துளையிடப்பட்ட மரமேடையை எடுத்தகற்றி தோண்டப்பட்ட குழியை மண்ணிட்டு மூடினர். முந்தைய நாளே ஒவ்வொருவரும் தங்களுக்கென பிடித்து வைத்திருந்த நீரில் முகம் கழுவி பல்தேய்த்துக்கொண்டனர். அதற்குள் அவ்வாழ்க்கை பழகிவிட்டிருந்தமையால் மிகுந்த விரைவுடன் அதை நிகழ்த்திக்கொண்டிருந்தனர்.
அவன் அங்கு நின்று பிறவற்றில் உளம் செலுத்தியபோது அவன் எண்ணத்தின் ஆழம் மறுதிசைக்கு சென்று அமைந்தது. அரவான் அக்குடிலுக்குள்தான் இருக்கிறான் என ஓரு நுண்புலன் சொன்னது. மீண்டும் குடிலுக்குள் சென்று அதன் உட்பகுதியின் மூலைகளை நன்கு பார்த்தான். விழிதூக்கியபோது சரிந்த கூரையின் இரு மூங்கில்களுக்கு நடுவே கூரையுடன் ஒட்டியதுபோல படிந்து அரவான் துயின்றுகொண்டிருப்பதை பார்த்தான். முதலில் ஏனென்றறியாத ஒரு நடுக்குதான் உருவாகியது. அவன் வேறோர் உயிர் என்னும் எண்ணம். பின்னர் துணிந்து கைநீட்டி அவனை தொட்டான்.
அவன் கைவிரல் பட்டதுமே உஸ் என்ற ஒலியெழுப்பி பல்காட்டிச் சீறியபடி அவன் நெளிந்து தலைதூக்கினான். ஸ்வேதன் கையை பின்னிழுத்து நகர்ந்துகொண்டான். அரவானின் விழிகள் நீள்வட்ட கருவிழியுடன் இமையா மணிகள் போலிருந்தன. அவன் உடல் அரவெனவே மூன்று நெளிவு கொண்டிருந்தது. பின் அவன் ஸ்வேதனை அடையாளம் கண்டு புன்னகைத்து “மூத்தவரே, நீங்களா?” என்றான். கைநீட்டி தூணைப்பற்றி அரவுபோல உடல் நெளித்து கீழே வந்தான் “என்ன செய்கிறாய்?” என்றான் ஸ்வேதன். “நான் நேற்று இங்கு துயில முயன்றேன். இக்குடிலின் ஓரங்களில் பதுங்கிப் பார்த்தேன். என்னால் நிலத்தில் துயில முடிவதில்லை. பொந்துகளிலோ மரக்கிளைகளிலோதான் நாங்கள் துயில்வது வழக்கம். ஆகவே மேலே சென்றுவிட்டேன்” என்று அவன் சொன்னான்.
“மேலேயா? அங்கு எப்படி துயில முடிகிறது?” என்று ஸ்வேதன் கேட்டேன். “அங்குதான் நான் இடறின்றி துயில்வேன். தரையிலிருந்தால் அனைத்து காலடி ஓசைகளும் என்னை அதிரவைத்துக்கொண்டே இருக்கும்” என்றான் அரவான். ஸ்வேதன் மேலே பார்த்து “எப்படி துயிலில் உடலோய்ந்து விழாமல் அங்கு ஒட்டியிருக்கிறாய்?” என்றான். அரவான் புன்னகைத்தான். “வருக, பொழுதாகிறது!” என்றான் ஸ்வேதன். அரவான் தன் ஆடையை சீரமைத்தபடி வெளியே வந்தான். “நமக்கான நீர் உள்ளது. விரைந்து கிளம்பு” என்றான் ஸ்வேதன். “படைகிளம்புவதற்குள் நாம் கிளம்பவேண்டும். இன்னும் சற்று நேரத்தில் இங்கிருந்து பயணம் தொடங்கினால் வெயில் எழுவதற்குள் மாமன்னர் யுதிஷ்டிரரின் படைப்பிரிவை சென்றடைவோம். அங்குதான் இன்று அவை கூடவிருக்கிறது. முறைப்படி நம்மை சந்தித்து நமக்குரிய படையாணையை அளிக்கவேண்டியது அவரே” என்றான் ஸ்வேதன்.
“ஆம், நேற்றே சொன்னார்கள். சற்று நேரத்தில் சித்தமாகிவிடுவேன்” என்றபடி அரவான் வெளியே சென்றான். ஸ்வேதன் காலைக்கடன்களை முடித்து முந்தைய இரவே ஏவலர் அளித்த உணவுருளைகளில் இருந்து ஊன்துண்டுகளை மட்டும் எடுத்து அரவானுக்கு அளித்தான். தானும் உண்டு நீரருந்தினான். பொடித்த வஜ்ரதானியமும் உலர் ஊனும் உப்புடன் சேர்த்து உருட்டப்பட்ட அவ்வுணவு சுவையாக இருந்தாலும் விழுங்குவது கடினமாக இருந்தது. அரவான் அதை மூன்று கவளங்களிலாக அப்படியே விழுங்கிவிட்டான்.
நடுநடுவே நீரருந்தியபடி உண்டுகொண்டிருந்த ஸ்வேதன் “விழுங்கிவிட்டாயா?” என்றான். “ஆம்” என்று அரவான் சொன்னான். “நேற்றும் பார்த்தேன், நீ ஊனுணவுகளை அவ்வாறே விழுங்கிவிடுகிறாய். ஆனால் அவை சிறுதுண்டுகளாக இருந்ததால் அத்தனை வேறுபாடு தெரியவில்லை” என்றான் ஸ்வேதன். “நாங்கள் உணவை விழுங்குவதுதான் வழக்கம்” என்றான் அரவான். “நெஞ்சில் அடைத்துக்கொள்ளாதா?” என்று ஸ்வேதன் கேட்டான். “இல்லையே? அவ்வாறு ஆவதில்லை” என்றபின் “நீங்கள் ஒவ்வொரு கவளத்திற்கும் நீரருந்துவதுதான் எனக்கு விந்தையாக உள்ளது” என்றான். ஸ்வேதன் ஒருகணத்திற்குப் பின் “ஆம், பாம்புகள் நீரருந்துவதில்லை” என்றான்.
ஸ்வேதன் தன் புரவியில் ஏறிக்கொண்டான். அரவான் அவனுடன் இணைவிரைவுடன் நடக்க அவர்கள் படைநடுவே செல்லத்தொடங்கினர். தொலைவில் கொம்போசை எழுந்தது. உடன் முரசு எழுந்து இணைந்துகொண்டது. கொம்பும் முரசும் கலந்த ஓசை ஒற்றைச்சொல்லென ஒலித்து எதிரொலிகளாகப் பெருகி படைமுழுக்க பரந்து தழுவியது. அவ்வோசை சென்று தொட்ட இடமனைத்தும் படையின் அசைவில் எழுந்த மாற்றத்தை விழிகளால் பார்க்க முடிந்தது. அரவான் “நீர்ப்பரப்பின்மீது காற்று படுவதுபோல் இந்த ஓசை கடந்து செல்கிறது” என்றான். மறுகணமே அந்தப் படைகளின் மாற்றத்தை சிற்றலையின் வண்ணக்குலைவாக ஸ்வேதன் பார்த்தான். கண்மூடியபோது முரசொலியை அப்படை தன் குரல்முழக்கத்தால் எதிர்கொள்வதுபோல் தோன்றியது. அவன் எண்ணுவதற்குள்ளே அரவான் “ஓசையை குகைகள் முழக்கமாக மாற்றிக்கொள்வதுபோல” என்றான்.
ஸ்வேதன் கண்ணைத் திறந்து “உன் ஒப்புமைகளைக் கொண்டே இனி நான் இப்புவியை பார்க்கமுடியும் போலுள்ளது” என்றான். படைப்பிரிவுகள் அணிவகுத்துக்கொண்டிருந்தன. அவர்கள் நூறு வாரை செல்வதற்குள் அப்பெரும்படை முழுமையாகவே சீர்கொண்டுவிட்டிருந்தது. “அரைநாழிகைக்குள் இத்தனை ஆயிரம்பேர் பிழையின்றி அணிவகுப்பதென்பது நெடுநாள் பயிற்சியினூடாக அமைவது” என்று ஸ்வேதன் சொன்னான். “ஆனால் அப்பயிற்சியை பெரும்பொருட்டு அதற்கு முன்னரே பயிற்சிகொண்ட உள்ளம் அவர்களிடம் இருக்கவேண்டும். அது தலைமுறைகள்தோறும் கைமாறி வந்தணைய வேண்டும். அப்போது மட்டுமே பயிற்றுவிக்க முடியும்.”
“யானைகளை பயிற்றுவிக்க முடியும், காட்டெருமைகளை பயிற்றுவிக்க முடியாதென்பார்கள்” என்றான் அரவான். ஸ்வேதன் “ஆம். இங்கு வந்துள்ள நிஷாதர்களிலும் கிராதர்களிலும்கூட பயிற்றுவிக்கவே முடியாத சிலர் இருந்தனர். அவர்களை தனிப்படைப்பிரிவாக பின்புறம் சேர்த்துக்கொண்டிருக்கின்றனர் என்று அறிந்தேன்” என்றான். அரவான் “எங்கள் படைகளை இவ்வாறு ஒற்றைப் பேருடலென மாற்ற முடியாது. பாம்புகள் ஒவ்வொன்றும் தனிநெளிவு கொண்டவை. நூறு பாம்புகள் செல்வதைக் கண்டால் உங்களுக்கு புரியும், அவை நூறு நெளிவுகளாகவே இருக்கும். அவற்றின் உடலிலுள்ள அவற்றுக்குரிய அந்நெளிவு பிறவியிலேயே அவற்றுக்கு வருவது. அதை அவற்றின் நுண்ணுடல் என்று எங்கள் மூத்தோர் கூறுவர்” என்றான்.
“தெய்வங்கள் காற்றிலும் ஒளியிலும் நீரிலும் இருந்து அசைவுகளை எடுத்து கலந்து அறியா வெளியில் ஒரு நாகத்தை செய்கின்றனர். உடலற்ற வெறும் நெளிவு அது. பின்னர் முட்டைக்குள் கருத் துளியென இருக்கும் ஒரு நாகத்திற்கு அதை அளிக்கின்றனர். அந்த நுண்நாகத்தை கருவடிவிலிருக்கும் பருநாகம் பெற்றுக்கொண்ட பின்னரே அது வளரத் தொடங்குகிறது. முட்டைக்குள் அதன் முதல் அசைவு நிகழ்ந்ததுமே முட்டை உடையத் தொடங்குகிறது. வெளிவந்து விழுந்ததும் தரையில் தனக்குரிய தனி நெளிவை அது நிகழ்த்துகிறது” என்றான் அரவான்.
காலையொளி எழத்தொடங்கியதும் படை ஏரிப்பரப்பென வெள்ளி மின்னல்களால் நிறைந்தது. “ஒவ்வொரு கவசப்பரப்பிலும் இப்படை பாவை ஒளிப்பு கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் தன் உடலில் இப்படையை ஏந்தியிருக்கிறார்கள்” என்று அரவான் சொன்னான். பின்னர் “விந்தைதான்! ஒவ்வொரு வேல்முனையிலும் இப்படை உள்ளது. ஒவ்வொருவர் விழிமணிகளிலும் இப்படை இருக்கும்” என்றான். ஸ்வேதன் “என் இளையோன் இருந்திருந்தால் அடுமனையிலிருந்து கற்ற எதையாவது சொல்லியிருப்பான்” என்றான்.
காவல்மாடங்களுடன் மாளிகைகளுடன் அப்படை அவர்களைச் சூழ்ந்து பெருகிச்சென்றது. அத்தனைமுறை வியந்த பின்னரும் அவன் அந்த வியப்பில் மீண்டும் திளைத்தான். ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் எல்லையென அமைக்கப்பட்ட காவல்மாடத்தில் முத்திரைக் கணையாழிகளையும் ஆணையோலைகளையும் காட்டி அவர்கள் கடந்து சென்றனர். “மேலும் மேலுமென ஒவ்வொருவரும் இப்படையின் ஒரு பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் அரவான்.
ஸ்வேதன் “படைக்கு அவ்வல்லமை உண்டு. அதன் பெரும்பரப்பு அசைவுகளின் ஒத்திசைவு. ஒவ்வொரு தனிப்படைவீரனையும் அவன் ஆளுமையை அழித்து தன்னுள் கலந்துகொள்கிறது. இவர்களில் ஒருவரை நிறுத்தி நீ யாரென்று கேட்டால் தன் படைப்பிரிவின் பெயரையும் எண்ணிக்கையையும் மட்டுமே சொல்வார். எவரும் பிறிதெதையும் எண்ணுவதில்லை” என்றான். “படைகளுக்குச் சென்றுவந்தவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். படைப்பிரிவில் வரும் ஆழ்துயில்போல எங்கும் வருவதில்லை. ஏனெனில் முற்றிலும் கடந்தகாலம் அகன்றுவிடும்போது உள்ளம் எச்சமின்றி கரைந்தழியும் நற்துயில் அமைகிறது. உள்ளமென்பது நினைவுகளின் பெருந்தொகுதிதான். அரவின் வால் வாயால் கவ்வப்படுவதுபோல் அதன் ஒருமுனையை பிறமுனை கவ்வி எதிர்காலம் என்றாகிறது. அப்பெருஞ்சுழல் நின்றுவிடுவதுபோல் இனிய நிலை வேறில்லை.”
“தவத்தோர் அதையே ஊழ்கம் என்று சொல்கிறார்கள். படையிலமைதல் ஒருவகை ஊழ்கம். இறப்பு அருகிலிருக்கிறது. அதைவிடக் கொடிது உடற்சிதைவும் வாழ்நாளெல்லாம் எஞ்சும் அதன் துயரும். ஆயினும் படையில் மானுடர் மகிழ்ச்சியுடனிருக்கிறார்கள். போருக்குச் சென்றுவந்தவர் பின்னர் போரைப்பற்றி அன்றி பிறிதெதையும் பேசுவதில்லை. மானுடம் காதலைவிட உறவுகளைவிட பெருவிழவுகளையும் பேரழிவுகளையும்விட போரைப்பற்றியே மிகுதியாக பேசியிருக்கிறது. நம் சூதர் பாடல்களில் பெரும்பகுதி போர்களின் விவரிப்பே” ஸ்வேதன் சொன்னான்.
“போரில் அல்ல, படையென்றாவதில் மானுடர் கொள்ளும் பேருவகை ஒன்றுள்ளது. ஒவ்வொருவரும் தங்களில் உள்ள குறையொன்றை பிறரைக்கொண்டு நிரப்புகிறார்கள். தந்தையை மைந்தரும் கணவனை மனைவியும் தனியனை குடியும் நிரப்புவர். நிரம்பா இடைவெளிகள் பல. ஆயின் படை ஒவ்வொருவரையும் எச்சமின்றி நிரப்பிவிடுகிறது. ஆற்றில் விழுந்து நிறைந்து அமிழ்ந்து செல்லும் சிறுகுடுவைகளாகிவிடுகிறார்கள் மானுடர்” என்றபின் நகைத்து “நூல்களில் பயின்றது. நூல்கள் நேர்காண்கையில்தான் மெய்ப்பொருள் கொள்கின்றன” என்றான் ஸ்வேதன்.
யுதிஷ்டிரரின் மையப் படைப்பிரிவிற்கு அவர்கள் இளவெயில் வெம்மைகொள்ளத் தொடங்கும்போது சென்று சேர்ந்தனர். அவர்கள் செல்லும் செய்தி முன்னரே புறாக்களினூடாக அங்கு சென்றடைந்திருந்தது. தலைக்குமேல் பரந்திருந்த காற்றலைகளில் அப்படையை ஆளும் ஆணைகள் புறாக்களினூடாக மிதந்து கொண்டிருந்தன. “நம்மை ஆளும் சொற்கள்” என ஸ்வேதன் புறாக்களை சுட்டிக்காட்டினான். அரவான் “ஆம், புறாக்களினூடாக செய்திகள் சென்றடையுமென்று நான் அறிந்திருக்கிறேன். அப்புறாக்களுக்கு அச்செய்தி தெரிவதில்லை என்று என் அன்னை சொன்னாள்” என்றான்.
“புறாச்செய்திகள் முதன்மையான ஆணைகளை மட்டும் கொண்டு செல்கின்றன” என்றான் ஸ்வேதன். “ஒருவருக்கான புறா பிற எவரிடமும் செல்வதில்லை. அவர் எங்கு இடம் மாறினாலும் தேடிச் சென்று அவர் தோளில் மட்டுமே அமரும். அவர் துயின்றிருந்தால் காத்திருக்கும், மயங்கியிருந்தாலோ இறந்திருந்தாலோ திரும்பி வந்துவிடும். அவ்வேறுபாடு அவற்றுக்கு தெரியும்.” அரவான் வானை பார்த்தபடி வந்தான். “கழுகுகளும் செய்தி கொண்டு செல்கின்றன. இந்திரப்பிரஸ்தத்திலிருந்தும் அஸ்தினபுரியிலிருந்தும் உபப்பிலாவ்யத்திலிருந்தும் வரும் செய்திகளை அவை கொண்டு வருகின்றன” என்றான் ஸ்வேதன்.
அரவான் திரும்பி “ஏன் நாகங்களை செய்தி கொண்டுசெல்ல பழக்கலாகாது? புறாக்கள் விண்ணில் செல்வதைப்போல அவை காலடியில் செய்திகளுடன் சென்றிருக்குமே?” என்றான். ஸ்வேதன் சிரித்து “இதுவரை எவரும் அதற்கு முயலவில்லை என்று எண்ணுகின்றேன்” என்றான்.
யுதிஷ்டிரரின் படைப்பிரிவின் பொறுப்பாக யௌதேயனும் நிர்மித்ரனும் இருந்தார்கள். புரவியை ஏவலரிடம் அளித்தபின் யுதிஷ்டிரரின் அலுவல்மாளிகை முன் அவர்கள் சென்று நின்றதுமே யௌதேயன் நிமிர்ந்து ஒருகணம் அரவானை நோக்கினான். களைப்பால் அவன் கண்கள் தளர்ந்தவைபோல் இருந்தன. ஸ்வேதன் முகமன் சொல்வதற்குள் “நீங்கள் அந்த மையமாளிகைக்கு அருகே இருக்கும் சிறுமாளிகையில் அமர்ந்திருக்கலாம். இன்று அரசரின் அவை எட்டு நிகழ்வுகளாக ஒருங்கமைக்கப்பட்டுள்ளது. முதல் நிகழ்வில் அவர் ஒற்றர்களை சந்திக்கிறார். இரண்டாம் நிகழ்வில் படைத்தலைவர்கள் சந்திப்பு நிகழ்கிறது. மூன்றாவது சந்திப்பில்தான் படைசூழ்கைகள் குறித்த பேச்சு நிகழும். உங்களை மூன்றாவது சந்திப்பில் அழைக்க வாய்ப்பு மிகுதி. ஆனால் எப்போதுமே நீங்கள் சித்தமாக இருப்பது நன்று” என்றான்.
ஸ்வேதன் தலைதாழ்த்தி “காத்திருக்கிறோம்” என்றான். யௌதேயன் மீண்டும் அரவானை பார்த்தபின் “இவரை பார்க்க ஒருவேளை தந்தை விரும்பக்கூடும். நேற்று அவரிடம் வந்த ஓலைச்செய்தியில் இவர் சிறிய தந்தையின் இளைய வடிவம் போலிருக்கிறார் என்று ஒரு வரி இருந்தது. அதை தந்தை மிக விரும்பியதாக முகக்குறி காட்டியது” என்றான். அரவான் புன்னகைத்தான். யௌதேயன் “நீ இளமையில் சுருதகீர்த்தி இருந்ததுபோல் இருக்கிறாய் என்று எனக்கு தோன்றுகிறது. எங்களில் அவனே அழகன். நாங்கள் அனைவரும் அவனை நோக்கி மகிழ்வதுண்டு” என்றான். “நீ அவனை பார்த்தாயல்லவா?”
“ஆம்” என்றான் அரவான். “எனக்கு தனிச்செய்தி அனுப்பியிருந்தான். எங்கள் அனைவருக்குமே உன் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நாம் எந்த மகிழ்ச்சியையும் கொண்டாடக்கூடாது. படைகளில் இருக்கையில் உறவுகள் கொண்டாடக்கூடாது என நெறி உள்ளது. நீ முன்னரே வந்திருக்கலாம்” என்றான் யௌதேயன். “உன்னை படையில் சேர்த்துக்கொள்ளலாகாது என்றும் உன் குலத்துக்கு நீ எஞ்சவேண்டும் என்றும் சிறிய தந்தை விரும்புகிறார். அவர் அதை எண்ணுவதற்குள்ளே அவ்வெண்ணத்தை சுருதகீர்த்தி அடைந்திருக்கிறான்” என்று யௌதேயன் சொன்னான். அரவான் “என் பணி இங்கு போரில் ஈடுபடுவதே. என் அன்னையின் ஆணை” என்றான்.
“நீ நாகமணிபோல் அரிதாகவும் அழகாகவும் இருக்கிறாய் என்று சுருதகீர்த்தியின் ஓலையில் எழுதப்பட்டிருந்தது. படைப்பிரிவில் அருமணியும் ஒரு கூழாங்கல்லே. அடுக்கிக் கட்டலாம் பொறுக்கி எறிந்து தாக்கவும் செய்யலாம். மணிமுடியில் சூடவேண்டிய வைரம் இங்கு எடையும் கூரும் மட்டுமே” என்றான். அரவான் “நான் என் முடிவை அவரிடம் தெரிவித்துவிட்டேன்” என்றான். “எவ்வாறாயினும் இறுதி முடிவை எடுக்கவேண்டியவர் தந்தை. அவர் முடிவு இளைய யாதவரின் எண்ணப்படியே அமையும். அதற்கு நீயும் நானும் இப்படையிலுள்ள ஒவ்வொருவரும் கட்டுப்பட்டவர்கள்” என்றான். அரவான் “நான் என் அன்னைக்கு மட்டுமே கட்டுப்பட்டவன்” என்றான். அந்த மறுமொழியை எதிர்பாராத யௌதேயன் திகைத்து பின் புன்னகைத்து “நன்று” என்றான்.
ஸ்வேதன் தலைவணங்கி “செல்கிறோம்” என்று சொல்லி முன்னால் சென்றான். யௌதேயன் இயல்பாக கைநீட்டி அரவானின் தோளில் தொட்டு “எங்கள் மொழியை நன்கு பேசுகிறாய்” என்றான். பின்னர் திரும்பி தன் காவல்நிலைக்கு சென்றான். நிர்மித்ரன் “உனக்கு இரவுணவு பிடித்திருந்ததா?” என்றான். அரவான் “நான் ஊனுணவை மட்டுமே உண்பவன்” என்றான். “ஆம், அதையும் ஓலையில் சொல்லியிருந்தான். அவ்வாறே உனக்கு உணவு அளிக்க மூத்தவர் ஆணையிட்டுள்ளார்” என்றபின் தவறி கையெடுப்பதுபோல அரவானின் தோளை தொட்டான். “செல்க!” என்றான்.
கடந்து செல்கையில் ஸ்வேதன் சிரித்துக்கொண்டிருந்தான். அரவான் “ஏன் நகைக்கிறீர்கள்?” என்று கேட்டான். “ஒன்றுமில்லை” என்றபின் ஸ்வேதன் “உன்னை பார்த்த முதற்கணமே அவர்கள் நெஞ்சோடு தழுவிவிட்டார்கள். படைப்பிரிவின் நெறிகள் அதை ஒப்புவதில்லை என்பதனால் தவிர்த்தார்கள். நூறுமுறை எண்ணி கணக்கிட்டு மெல்ல தோள்தொட்டு அதை நிறைவேற்றினார்கள்” என்றான். அரவான் புன்னகைத்தபடி “அத்தொடுகையில் அது இருந்தது” என்றான். “விந்தைதான்! எவரென்றே தெரியாதவரெனினும் குருதி தொட்டுக்கொள்ள விழைகிறது” என்றான் ஸ்வேதன்.
அவர்கள் சிறிய குடிலருகே சென்றனர். அதில் படைத்தலைவர்கள் மூவர் முன்னரே காத்திருந்தனர். அவர்கள் இருவரும் படிகளில் ஏறி அங்கிருந்த பீடத்தில் அமர்ந்தனர். படைத்தலைவர்களின் நோக்கு அரவானை தொட்டதுமே மாறுவதை ஸ்வேதன் கண்டான். அவர்கள் சொல்லின்றி தலைவணங்கினர். ஒருவரை ஒருவர் விழிகளால் நோக்கிக்கொண்டனர். அரவான் ஸ்வேதனிடம் நெருங்கி அமர்ந்து “இவர்களின் ஆடைகளிலிருந்து எந்தப் படைப்பிரிவென்று சொல்லிவிடமுடியுமா?” என்று மெல்ல கேட்டான்.
“படைப்பிரிவுகள் அனைத்திற்கும் தனி அடையாளங்களும் பெயர்களும் அளிப்பது வழக்கம். பாண்டவர்களின் படைகள் முழுக்கவே இலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதோ இவர் மூன்றிலை படைப்பிரிவை சேர்ந்தவர். அதற்குக் கீழிருக்கும் எண் அவர்களுடைய பெயருக்கு நிகரானது. மின்படைக் குறியின் கீழ் இரண்டு கோடுகள் பொறிக்கப்பட்டுள்ளதால் இவர் இரண்டாம் நிலையினர். இவ்வண்ணம் ஏழு நிலைவரை உண்டு. எளிய படைவீரன் ஏழாம் நிலையினன்” என்றான் ஸ்வேதன். “இவர் அணிந்திருக்கும் கவசத்தின் வலப்பக்கம் சிந்துநாட்டின் கரடி முத்திரை உள்ளது. அதன் கீழ் உள்ள சுருள்கொடி அவருடைய தனி முத்திரை. பெரும்பாலும் அது அவருடைய குடியின் அடையாளமாக இருக்கும். இக்கவசத்தைக் கொண்டே இவர் சிந்து நாட்டில் எக்குடியில் எவ்வூரைச்சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கமுடியும். இந்தப் படைப்பிரிவின் எப்பிரிவில் எந்நிலையிலுள்ள எவ்வீரர் என்றும் அறியமுடியும்.”
அரவானின் காதில் மட்டும் விழும்படி அவன் பேசிக்கொண்டிருந்தான். அங்கிருந்த காத்திருத்தலின் இறுக்கத்தைக் கடக்க அப்பேச்சு உதவியது. அரவானிடம் சொல்வதுபோல அவனே அச்செய்திகளை சேர்த்துக்கொண்டிருந்தான். “இந்தக் கவசத்திற்கு ஓர் எண்ணுண்டு. அந்த எண் இவருடைய மணிக்கட்டில் பச்சைகுத்தப்பட்டிருக்கும். இக்கவசமின்றி இவர் களத்தில் விழுந்து கிடந்தால்கூட அவ்வெண்ணைக்கொண்டு இக்கவசத்தை கண்டெடுக்கலாம். அதில் இவருடைய செய்திகள் அனைத்தும் இருக்கும். களத்தில் அடையாளம் காணாமல் ஓருடல்கூட மறைவு செய்யப்படலாகாதென்பது தொல்நெறி” என்று ஸ்வேதன் சொன்னான்.
அரவான் எண்ணுவதை உடனே உணர்ந்துகொண்டு ஸ்வேதன் “ஆம், ஒருவர் உடல் துண்டுபடக்கூடும். ஆகவே நெஞ்சு தோள்கள் கால்கள் என ஐந்து இடங்களில் அந்த எண் பச்சைகுத்தப்பட்டிருக்கும்” என்றான். “போருக்குமுன் கவசங்களிலும் உடலிலும் எண்களையும் குறிகளையும் எழுதும் பணி பலநாட்கள் தொடர்ந்து நடக்கும். படைகளில் அது பெரிய சடங்கு. குலத்தையும் குடியையும் இளமையிலேயே பொறித்திருப்பார்கள். அரசுப்படைவீரனுக்குரிய முத்திரையும் அவன் உடலில் முன்னரே இருக்கும். இப்போருக்குரிய படைமுத்திரையை அவர்களின் படைக்களரியில் களரிதெய்வங்களுக்கு குருதிபலி கொடுத்து களரிஆசிரியர் தொட்டுக்கொடுக்க கூராணி எடுத்து பொறித்துக்கொள்வார்கள்.”
“முறைப்படி செய்திகள் உடலிலும் கவசங்களிலும் படைக்கலங்களிலும் பொறிக்கப்பட்ட வீரன் எழுதப்பட்ட ஓலை ஆகிவிடுகிறான் என்பது நம்பிக்கை. அவன் தெய்வங்களுக்கு அனுப்பப்பட்டவன். அவன் திரும்பி வரும்போது மீண்டும் விரிவான படையல் பூசனைகளுக்குப் பின் அவனுக்கு இப்போருக்கென அளிக்கப்பட்ட அடையாளங்கள் அழிக்கப்படும்” என்றான் ஸ்வேதன். அரவான் “ஏன் அவ்வாறு அடையாளம் காணப்படவேண்டும்?” என்றான். “ஒருவன் படையில் படுவான் எனில் அவன் குலம் அதை அறியவேண்டும். இங்கு அவன் எரிமறைவோ மண்மறைவோ செய்யப்பட்டாலும் அவன் குடியில் அவனுக்கொரு நடுகல் அமையவேண்டும். அங்கு அவன் கொடிவழியினர் ஆண்டுதோறும் ஊனும் கள்ளும் செம்மலர்களும் படைத்து பலிக்கொடை நிகழ்த்தி குறுமுழவு மீட்டி அவன் களம்பட்ட செய்தியை பாட்டாக பாடவேண்டும். இங்கு அவனை மண்ணுக்கோ நெருப்புக்கோ அளிக்கையில் அவன் பெயர் சொல்லி குலத்தையும் ஊரையும் உரைத்து விடையளித்து இறுதிச் செயல் முடிக்கவேண்டும்” என்றான்.
அரவான் பெருமூச்சுவிட்டான். “உங்கள் குடியில் மறைந்தவர்களுக்கு நடுகற்கள் நாட்டுவதுண்டா?” என்றான் ஸ்வேதன். “இல்லை” என்று அவன் சொன்னான். “எப்படி நினைவுகூர்வார்கள்?” என்றான் ஸ்வேதன். “எங்கள் தொல்கதைகளின்படி நாங்கள் மண்ணுக்கு மேலே வந்து மானுடர்களின் தலைகளை மட்டும் சூடிக்கொண்ட நாகங்கள். மறைந்தவர்களின் தலையை மட்டும் வெட்டி இங்கே களிமண்ணால் ஆன பீடத்தில் வைப்பார்கள். உடலை புதைத்துவிடுவார்கள். அவை கீழே நிலத்தின் வேர்வெளியாக செறிந்திருக்கும் நாகருலகுக்கு சென்றுவிடும். தலை மட்டும் பதினெட்டு நாட்கள் பூசனை செய்யப்படும். பின் அதன்மேல் ஒரு கலத்தை வைத்து மூடுவார்கள். ஓராண்டுக்குப் பின் அங்கே வெள்ளோடு எஞ்சும். அதை கொண்டுசென்று வடகிழக்கே இருக்கும் மூதாதையரின் தலையோடுகளின் பெருங்குவியலுடன் சேர்ப்பார்கள்” என்றான் அரவான்.