ராஜ்கௌதமன், திருப்பூர் சந்திப்பு, சிலுவைராஜ் சரித்திரம்…

t

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

அன்புக்குரிய ஜெ.மோ அவர்களுக்கு

வணக்கம் !

நான் சந்தோஷ் குமார். திருப்பூரில் வசிக்கிறேன். மெடிக்கல் டிரான்ஸ்க்ரிப்ஷன் பணியில் உள்ளேன். தமிழ் இலக்கியங்களில் நாவல் ,சிறுகதைகள், கவிதைகள் வாசிப்பதையும் ஒரு பகுதி நேர பணியாகவே செய்கிறேன்.

சென்னையில் வாசகசாலை எனும் இலக்கிய அமைப்பு வாசிப்பு எனும் செயல்பாட்டை  பொதுமக்களிடம் பரவலாக்க  நண்பர்களால் நடத்தப்படும் அமைப்பு. கார்த்திகேயன், அருண், பார்த்திபன்,மாரி செல்வம் போன்ற நண்பர்களால் தொடங்கப்பட்ட வாசகசாலையின் முதலாம் ஆண்டு விழாவில் மூன்று நூல்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதற்காக எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபன் அவர்கள் எடுத்த காணொளியில் நீங்கள் விருது குறித்து உரையாற்றியதும்  உங்களுக்கு நினைவிருக்கும்.

வாசகசாலை இந்த ஆண்டு சென்னையை கடந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பிப்ரவரி மாதம் முதல் இலக்கிய நிகழ்வுகளை நடத்தத்தொடங்கியது. இதுவரை தமிழகத்தில் 14 மாவட்டங்களிலும் பெங்களூரிலும் இலக்கிய நிகழ்வுகளை வாசகசாலை நடத்தி வருகிறது.

திருப்பூரில் வாசகசாலை இலக்கிய நிகழ்வுகளுக்காக ஒருங்கிணைப்பு பணியில் சில நண்பர்களுடன் நானும்  உள்ளேன். இம்மாதம் மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக  ஆறாம் நிகழ்வாக திருப்பூரில்  எழுத்தாளர் ராஜ் கெளதமன் எழுதிய ‘சிலுவைராஜ் சரித்திரம்’ நாவல் குறித்தான கலந்துரையாடல் நிகழ்வை முன்னெடுக்க கடந்த மாதம் முடிவெடுத்திருந்தோம். அதன்படி 22ம் தேதி ‘சிலுவைராஜ் சரித்திரம் ‘ நாவல் குறித்த கலந்துரையாடலுக்கான அறிவிப்பு பணிகள்  தொடர்ச்சியாக ஈடுப்பட்டிருந்தப்போது.. நேற்று உங்கள் இணையதளத்தில் எழுத்தாளர் ராஜ் கெளதமன் அவர்களுக்கு ‘விஷ்ணுபுரம் விருது ‘ வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அறிந்த உடன் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் பெற்றோம். விஷ்ணுபுரம் விருது அறிவிக்க பட்ட மிக சரியான சமயத்தில் திருப்பூரில்  சிலுவைராஜ் சரித்திரம் நாவல் குறித்தான கலந்துரையாடலை முன்னெடுப்பதில் வாசகசாலை பெருமையும் அடைகிறது.

ஒவ்வொரு மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வுகளுக்காக எடுக்கப்படும் நூல்களை  ஏற்கனவே வாசித்திருந்தாலும் வாசிக்காவிட்டாலும்  நிகழ்வை ஒருங்கிணைக்கும் வாசகசாலை நண்பர்கள் தீவிரமாக வாசித்துவிடுவதுண்டு. வாசித்து விட்டே நிகழ்வில் பங்கேற்கவேண்டுமென எங்களுக்குள் ஒரு விதிகளை உருவாக்கிக்கொள்வோம். அதன்படி.. சிலுவைராஜ் சரித்திரம் நாவலை ஒரு இரவு பயணத்தில் ஒரே இரவில் வாசித்து முடித்தேன். எழுத்தாளர் ராஜ் கெளதமன் அவர்களின் எழுத்தும் வாசிப்பு விழிகளை கட்டிப்போட்டது எனலாம்.

இரயில் பயணத்தில் நாவல் வாசிக்கபடுவது எப்போதும் எனக்கு இனம்புரியாத உணர்வலை ஏற்படுத்தும் ஜெ.மோ சார். உங்களின் இரவு நாவலையும் அப்படித்தான் ஒர் இரயில்  பயணத்தில் இரவு நேரத்திலே படித்திருந்தேன். அதே போலவே சிலுவரைராஜ் சரித்திரமும்.. புதுப்பட்டி ஆர்.சி தெருவில் பிறந்த   சிலுவையுடன்… நானும் பயணிக்கத்தொடங்குகிறேன். திருப்பூரிலிருந்து சென்னைக்கு   தோரயமாக 7 மணி நேரம் பயண நேரம். ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் இரயில் நிற்கும் போதெல்லாம்  சிலுவைவிட்டு சில நிமிடங்கள் பிரிந்துவிடுவேன்.. வாசிப்பினால்  மூளை உண்டாக்கும் சோர்வுக்கு ஒரு தேநீர் தேவைப்படும். அருந்திவிட்டு .. விட்ட பக்கத்திலிருந்து எடுத்து படிக்க ஆரம்பித்தால் வேகமெடுக்கும் இரயிலும் என் வாசிப்பும்.  இஎன் வாசிப்பில்  சிலுவை பி.எஸ்.ஸி . சேவியரின் உதவியில்  சிலுவை எம்.ஏ. ஆனதும் ..வேலை தேட ஆரம்பிப்பது.. காரைக்காலில்  கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைவது. கார்க்கி.. கார்ல் மார்க்ஸ் புத்தகங்கள் வாசிப்பதுமாய் இருந்த சிலுவை.. தகப்பனிடம் சண்டை  போட்டு  பெங்களூருவில் சேவியருடன் என சிலுவையை வாசிப்பால் பின் தொடர்ந்த எனக்கு மதமாற்றம் சிலுவையை என்ன செய்ய இருக்குமென  ‘காலச்சுமை’ இப்போது என் கையில் .

அன்புக்குரிய ஜெ.மோ சார்.  தன் வரலாறு வகைமையில் நான் வாசிக்கும் முதல் நாவல் இது. ஒரு நாவலுக்குள் அரசியல்.. அரசியல் சார்ந்த தொடர்புகள் , அதன் முரண்பாடுகள் ஒர் எழுத்தாளரின் பார்வையில்.. அவர் கருத்தியலுக்கு உட்பட்ட பார்வையை தன் வரலாற்று நாவலாக  படிப்பது வாசகர்களுக்கு எப்போதும் தகவல் களஞ்சியமாகவே இருக்கும். எது சரி.. எது தவறு என்பது வாசகரின் முடிவிலிருக்கும் சுதந்திரம் என்றாலும்.. சில நாவல்களில் இதுதான் சரி எனும் நிலைப்பாட்டிலிருந்து வாசகரை வேறுதிசைக்கு திருப்ப  முடியாத எழுத்துக்கள் ஆதாரங்கள் இருக்கும். அந்த வகையில்.. தன் வரலாறு வகைமையில் முன் அட்டையில் உள்ள உங்கள் வாசகத்தை முழுமையாக உணர்கிறேன்   “ நிகழ்ந்தவையும் புனைந்தவையும் ஊடுகலந்த ஒரு யதார்த்தம். ”

எழுத்தாளர் ராஜ் கெளதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பதற்கு ..வாசகனாய் எனது நன்றியையும் தெரிவிக்கிறேன்

மிக்க நன்றி ஜெ,மோ சார்.

இரா.சந்தோஷ் குமார்.

திருப்பூர்

raa

அன்புள்ள ஜெ

ராஜ் கௌதமனின் இரு நூல்களை நான் வாசித்திருக்கிறேன். அறம் அதிகாரம் எனக்குப்பிடிக்கவில்லை. அது வெறுமே மேடைப்பேச்சில் சொல்லவேண்டிய கருத்துக்களை எழுதியது போல் இருந்தது. ஆனால் அதன்பிறகு வாழித்த சிலுவைராஜ் சரித்திரம் மிகமிகப் பிடித்திருந்தது. பாவலாக்கள் இல்லாத நேரடியான நாவல் அது. சிலுவைராஜின் வாழ்க்கையை நாமெல்லாம் ஒரு அளவிலே வாழ்ந்திருப்போம் என்று தோன்றியது. நம்முடைய வாழ்க்கையிலும் சினிமா இப்படி ஒரு பெரிய பங்கை வகித்துள்ளது. நம் அப்பாவுக்கு எதிரான ஒரு கலகமாகவே நாம் வாழ்க்கையை அமைத்திருப்போம். அந்த அம்சங்களெல்லாம் சேர்ந்து ஒரு பெரிய நிறைவை உருவாக்கின. முக்கியமான நாவல். நம் நாவல் வாசிப்பில் பல நாவல்களுக்கு இல்லாத அம்சம் அதிலே உள்ளது. என்னவென்றால் நாம் சாதாரணமாக நம் வாழ்க்கையை வைத்து ஒரே ஒருநாவலை எழுதியிருந்தால் அதேபோலத்தான் எழுதியிருப்போம் என்பதுதான் அது

எஸ்.சரவணன்

***

அன்புள்ள ஜெ

ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் வாசித்தபோது அதில் அவர் தன் அப்பாவை எதிர்மறையாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக அவருடைய அப்பா மூர்க்கமான எதிரியாகவே காட்டப்படுகிறார். ஆனால் பின்னர் அவருடைய மகள் உயர்ந்த நிலையில் மதிப்பெண் பெற்று லண்டன் செல்லும்போது நினைத்துக்கொண்டேன். அது அந்த அப்பாவின் வெற்றி அல்லவா என்று. அவர் ஒரு தவம்போல செய்து தன் குடும்பத்தை நினைத்த இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டாரே என்று எண்ணினேன். அவருடைய அடக்குமுறையும் கோபமும் ஒருபக்கம் இருந்தாலும் அவர் எவ்வளவு தீவிரமாக படிப்பை நேசிக்கிறார் என்பதையும் தன் பையன் சூழலில் உள்ள ரவுடித்தனம் பொறுப்பின்மையிலிருந்து விலகவேண்டும் என்று விரும்புகிறார் என்றும் பார்க்கையில் அவர்தான் பெரிய கதாபாத்திரம் என்று தோன்றியது. அவரைப்போன்ற அப்பாக்களால்தான் நம் சமூகம் முன்னேறுகிறது

தியாகராஜன் மகாலிங்கம்

ராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்
ராஜ் கௌதமன் படைப்புக்கள்
ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்
சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல்
ராஜ்கௌதமனின் இரு நூல்கள்
ராஜ் கௌதமன் -கடிதங்கள்
முந்தைய கட்டுரைசூஃபிதர்
அடுத்த கட்டுரைஆசிரியர்களின் வாழ்த்து