அன்புள்ள ஜெ…
சில ஆண்டுகள் முன்புவரை அரசுப் பேருந்துகளுக்கு தலைவர்கள் பெயர்கள் சூடடும் வழக்கம் இருந்தது… மத அரசியல் வேறுபாடின்றி பெயர்கள் ஏற்கப்பட்டன… அப்போது ஒரு தலித் தலைவரின் பெயர் ஒரு மாவட்டத்தில் ஓடும் பேருந்துக்கு சூட்டபபட்டது.. அவ்வளவுதான்… அந்தப்பகுதியின் ஆதிக்க சாதியினர் ரகளை செய்தனர்.. அந்த பேருந்தில் பயணிக்க மாட்டோம் என போராட்டம் நடத்தினர்… கடைசியில் இனி யார் பெயருமே சூட்டப்பட மாட்டாது என அறிவித்து அனைத்து பெயரையுமே நீக்கியது அரசு.
தலித்துகளின் வளர்ச்சியை மட்டும் அல்ல.. அவர்களது உயர்வையமேகூட சகித்துக் கொள்ள முடியாத போக்கு சிலரிடம் இருந்தாலும் சாதாரண சூழலில் தலித் விரோத போக்கை பொது வெளியில் காட்டுவதில்லை.. பார்ப்பான் பூணூல் என பொதுப்படையாக ஜல்லியடித்துவிட்டு அவ்வப்போது தமது தலித்விரோத சுயரூபத்தை காட்டுவார்கள்…
காலா பட வெளியீட்டின்போது நாம் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் சிலருமேகூட தலித் எப்படி தலைவனாக இருக்க முடியும் லாஜிக் இல்லையே என்றனர்.. ஆதிக்க சாதி ஆதிக்கயினரின் கோட்டைகளில் படத்துக்கு கடும் எதிர்ப்புகாணப்பட்டது..
தலித்துகள் குறித்து நிறைய எழுதியுள்ளீர்கள்.. அயோத்திதாசர் குறித்து கட்டுரைகளும் புனைவும் படைத்துள்ளீர்கள்… அம்பேத்கரின் புத்தரும் அவர் தம்மமும் நூல் குறித்துவிரிவாக எழுதியுள்ளீர்கள்.. அப்போது இது போன்ற எதிர்வினைகளை சந்தித்திருப்பீர்கள் என கருதுகிறேன்.. அது குறித்து சொல்லவும்… பேச்சளவில் பிராமண எதிர்ப்பு செயலளவில் தலித் விரோதம் என்பதன் அனுகூலம்தான் என்ன ?
அன்புடன்
பிச்சைக்காரன்
***
அன்புள்ள பிச்சைக்காரன்
நண்பர் வே.அலெக்ஸ் வழியாக எனக்கு தலித் இலக்கியச் சூழலுடன் அணுக்கமான தொடர்பு இருந்தது. அவர் ஒருங்குசெய்த வெவ்வேறு இலக்கியநிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாட்டின் பல நகரங்களுக்குச் சென்றிருக்கிறேன். பேசியிருக்கிறேன். நான் பார்த்த முக்கியமான விஷயம் என்பது அவ்விழாக்கள் எதற்கும் வேறு சாதியினர் அனேகமாக வருவதில்லை என்பதுதான். 99 விழுக்காடு தலித்துக்கள் மட்டுமே. அதைப்பற்றி அலெக்ஸிடம் பேசினேன். அவர் சொன்னார், தலித்துக்கள் என்று சொல்லமுடியாது. ஒரே சாதியினர் மட்டுமே. அலெக்ஸின் சாதியினர். ஆக அது ஒரு சாதிக்குழுமம் போலவே செயல்பட்டது. பிறருக்கு அங்கே இடமில்லை.
தமிழகம் முழுக்க இருக்கும் தலித்வெறுப்பு சாதாரணமானது அல்ல. அது பல்வேறு இடக்கரடக்கல்கள் வழியாக வெளிப்படும். நேர்ப்பேச்சில் “நானெல்லாம் முற்போக்கு சார்!” என்பார்கள். அரசியல்சரிகளையே பேசுவார்கள். முகநூலில் அரசியல்சரி சார்ந்து எழுதுவார்கள். ஆனால் அனைத்து நட்புகளும் சாதியின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். சுற்றம் என்பது சாதியே. சுற்றத்திற்குள் பேசுகையில் சாதிவெறியே இயல்பாக வெளிப்படும். இதைக் கடந்து அனைத்து நண்பர்களும் கொண்ட பெருங்கூட்டு என விஷ்ணுபுரம் அமைப்பைச் சொல்லலாம். இத்தகைய ஓர் அமைப்பில் புழங்குவதற்கான பண்பாட்டுப்பயிற்சியே இங்கு பெரும்பாலானவர்களுக்கு தங்கள் சூழலில் இருந்து கிடைப்பதில்லை. இங்கு வந்தபின் கற்றுக்கொள்கிறார்கள். பெரும்பாலும் பிழைகளின் வழியாக.
பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம் அது உச்சத்தில் இருக்கிறது. அந்த நோய்க்கூறை நேரடியாக கண்ணுக்குக் கண் எனச் சந்திப்பதே அதிலிருந்து விடுதலைபெறுவதற்கான வழி. ஆனால் அதற்குப்பதிலாக சாதியின் முழுப்பொறுப்பையும் பிராமணர் மீது சுமத்தி தான் விலகிக்கொள்ளவும், அதேசமயம் சாதிவெறியை பொத்திப்பேணவும் இந்த இடைநிலைச் சாதிகள் கற்றுள்ளன. இந்த மனநிலையை இங்குள்ள அத்தனை ‘அறிவுஜீவிகளும்’ வளர்க்கிறார்கள். அவர்களின் சாதிவெறிக்கும் அது திரையாகிறது.தமிழகத்தின் பிரச்சினை இதுவே. எது நோயோ அதை ’ஆம் நோய்’ என உணர்வதே இன்றுள்ள தேவை. மது அடிமை மீட்பில் ஒரு முக்கியமான அம்சம் ‘நான் ஒரு குடிநோயாளி’ என்று ஒவ்வொரு நாளும் பலமுறை சொல்லிக்கொள்ளுதல்.அதற்கு பிறரை பழி சுமத்தாமல் தானாக பொறுப்பேற்றுக்கொள்ளல்.
வெள்ளையானைக்குப் பின் என் நட்புக்குழுமத்தில் தலித் ‘ஆதிக்கம்’ வந்துவிட்டது என்று குற்றம்சாட்டி மனம்வெதும்பி ஒரு சிறுகூட்டம் விலகிச் சென்றுள்ளது. கடைசிவரை அவர்கள் தங்கள் கூடுகளிலிருந்து வெளிவர இயலவில்லை. வேறுவழியும் இல்லை.
ஆனால் இப்பிரச்சினைகள் எல்லாமே இலக்கிய நட்புகள் குடும்பநட்பு வரைச் செல்லும் சூழலில்தான். கல்விநிலையங்கள் வேலைநிறுவனங்களில் அவற்றுக்குரிய மட்டுறுத்தப்பட்ட சூழலும் அதற்கான நடைமுறைகளும் உள்ளன. அரசியல்கட்சிகள், தொழிற்சங்கம் போன்ற கொள்கைசார் அமைப்புக்களிலும் அப்படி ஒரு தனிநபர் சாராத புழக்கவெளி உண்டு. அங்கே மையமாக நடித்துக்கொண்டு செல்வதற்குரிய முறைமைகள் பயிலப்பட்டுள்ளன.
மீண்டும் காந்திக்கு. இந்திய அரசியல்தலைவர்களில் தன்னுள் உள்ள சாதியப்பற்றை தானே இரக்கமில்லாமல் நோக்கி ஆராய்ந்து கடுமையாக பயின்று களைந்தவர் அவர் மட்டுமே. பிற அனைவருமே அதை மறைத்து தாங்கள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என பாவனை செய்தவர்கள். இந்தியர்களுக்கு இரண்டாம்வழியே இயல்பானதாக உள்ளது. சாதிக்கு பிராமணர், இந்துமதம் என எதையாவது குற்றம்சாட்டி கடுமையாக வசைபாடி தன்னை விடுபட்ட ஆத்மா என பாவனைசெய்து நிறைவடைகிறார்கள். இந்தப்பொய்மையிலிருந்து விடுபடுவதே இன்றுள்ள அறைகூவல்.
ஜெ