கவி சூழுலா
கவி சூழுலா 2
இவ்வருடம் குறிஞ்சி மலர்வதன் பொருட்டு கேரள சுற்றுலாத்துறை உருவாக்கிய கையேட்டை இணைத்திருக்கிறேன் [தமிழ்நாட்டில் இப்படியான அரிய நிகழ்வுகள் நடப்பதே இல்லையா என்ன? ஏன் எதையுமே அறிய முடிவதில்லை? இந்த சிறு கையேடு எனக்கு இன்று அலுவலக குழுமத்தில் கிடைத்தது. ஏதாவது ஆக்கப்பூர்வமான பகிர்தல் மிக அரிதாகவே தமிழ்நாட்டு வாட்சாப் குழுமங்களில் நடக்கிறது. எனவே அங்கும் இவற்றை பகிர்ந்தேன்].
பேரன்புடன்,
நாகபிரகாஷ்
***
அன்புள்ள நாகப்பிரகாஷ்
இவ்வாண்டு கோடைக்கானலிலும் குறிஞ்சி பூத்திருக்கிறது. என் நண்பர் செந்தில் அங்கே விடுதி நடத்துகிறார். சாவித்ரி பங்களா என்று புகழ்பெற்றது. ஜெமினி சாவித்ரி தம்பதிகள் வைத்திருந்த கட்டிடம். என் மனைவியும் மகளும் மகளின் தோழியின் குடும்பத்துடன் சென்று குறிஞ்சியைப் பார்த்துவிட்டு வந்தார்கள்
கேரளத்தில் சூழுலா [Eco tourism] என்னும் ஒரு கருத்து புகழ்பெற்றிருக்கிறது. காட்டுவளத்தை அழிக்காமல் காட்டுக்குள் சுற்றுலாவை அனுமதிப்பது. மிகக்குறைவான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்கிறார்கள். நல்ல கட்டணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு காட்டைச் சுற்றிக்காட்டுகிறார்கள். எல்லை வகுக்கப்பட்ட இடங்களில். எப்போதுமே கூட ஒரு வழிகாட்டி வருவார். எவரையும் தனியாக அனுப்புவதில்லை. காட்டில் குப்பைபோடவோ ஓசையெழுப்பவோ அனுமதிப்பதில்லை. ஒரு சாக்லேட் உறைகூட காட்டில் விழ விடமாட்டார்கள். விலங்குகளைத் துன்புறுத்தும் வாசனைகள், வெளிச்சங்கள், ஓசைகள் எதையும் அனுமதிப்பதில்லை. அந்தச் சூழுலாவுக்கான விளம்பரம்தான் நீங்கள் கண்டது
தமிழகத்தில் சூழுலா இல்லை. இருந்தால் அது சூழுலாவாக இல்லை. ஆகவே அவர்கள் விளம்பரம் செய்யாமலிருப்பதே நல்லது .என் கருத்தில் கொடைக்கானல் ஊட்டி போன்ற ஊர்களுக்குக் கூட சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை வரையறை செய்யலாம்.
ஜெ