உயிர்த்தேன் -கடிதங்கள்

.uyir

உயிர்த்தேன் பற்றி,,,

 

ஜெ

 

 

இலக்கியத்தின் சுவைகள் பிரத்தியேகமானவை உணவுச் சுவைகள் போலவே. புடலங்காய் கூட்டை நான் சுவைத்துச் சாப்பிடுவது பலருக்கும் ஆச்சரியமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று எட்டு மெய்ப்பாடுகளைக் குறிப்பிடுகிறது தொல்காப்பியம். இதில் பெருமிதத்தின் கீழ் வரும் நெகிழ்ச்சி மிக அதிகமாகத் தொழிற்பட்ட நாவல்களில் ஒன்றாக உயிர்த்தேனைப் பார்க்கிறேன். ஒப்புநோக்க அவருடைய முதல் நாவலான “அமிர்தம்”(நேற்றுதான் படித்து முடித்தேன்) சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாக உணர்கிறேன். உணர்வுநிலைகளும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் சிறப்பாக இருப்பதாக உணர்ந்தேன். மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். உயிர் த்தேனில்தான் என்று நினைக்கிறேன். புதுவீட்டில் தளம் போட்டு தண்ணீர் ஊற்றியிருப்பார்கள்.காலால் தண்ணீரை அளைந்து தள்ளுவதை “அவன் திலாவித்திலாவித் தள்ளிக் கொண்டிருந்தான்” என்று எழுதியிருப்பார். அதைவிடச் சரியான வார்த்தை இருக்க முடியாது என்று பட்டது. அந்த வார்த்தையை வேறு எந்த நாவலிலும் இதுவரை படித்ததில்லை. அது போலவே “அமிர்தத்”தில் “உங்கம்மா திட்டினா புழுத்த நாய் குறுக்க வராதும்மா” என்று வேலைக்காரி அமிர்தத்திடம் கூறுவதாக வரும். மறக்கமுடியாது.

 

அன்புள்ள,

 

கிருஷ்ணன்

 

அன்புள்ள கிருஷ்ணன்

 

இலக்கியத்தின் சுவைகள் தனிநபர் சார்ந்தவை என்பதை மறுக்கமுடியாது. ஆனால் ஒரு சமூகம் தனக்கான பொதுச்சுவையை அந்தத் தனிச்சுவைகளில் இருந்து மெல்ல மெல்லத் திரட்டிக்கொள்கிறது. பொதுவான அளவுகோல்களை உருவாக்கிக் கொள்கிறது. அந்தப்பொதுச் சுவையைத்தான் உண்மையில் அதன் பண்பாடு என்கிறோம். அந்த சமூகத்தின் தரமதிப்பீடே அதன் பண்பாட்டை நமக்குக் காட்டுகிறது

 

நம் எளிய நேரடி வாசிப்பில் நாம் நம்முடைய வாழ்க்கை சார்ந்து சிலவற்றை ரசிக்கிறோம். ஆனால் இலக்கியமும் கலைகளும் தொடர்ச்சியாகப் பயின்று மேம்படுத்திக்கொள்ளவேண்டியவை. நீங்கள் குறிப்பிடும் இந்தவகையான சிறுநுட்பங்கள் மட்டும் எனக்குப் போதுமானவை அல்ல. அழகியல் ஒருமை, மையநோக்கு, வாசகனுக்கு அளிக்கும் இடைவெளி என சிலவற்றையே நான் என் மதிப்பீட்டுக்கு அளவுகோலாகக் கொள்வேன். விரிவாக அவற்றை என் விமர்சனங்களில் எழுதி வருகிறேன்

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ,

 

எனக்கும் உயிர்த்தேன் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் நளபாகம் எனக்குப் பிடித்திருந்தது. அதற்கு அந்தக் கதையின் விசித்திரமான சூழல் காரணமாக இருக்கலாம் என படுகிறது

 

ராஜசேகர்

 

அன்புள்ள ராஜசேகர்

 

அந்தக் கதைக்களத்தைக்கொண்டு நம் வாழ்க்கைச் சூழலில் எதை விளக்குகிறார்தி.ஜா என்பதே நம் கேள்வியாக இருக்கவேண்டும்

 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 38
அடுத்த கட்டுரைசோனா